புலம் பெயர்ந்த காட்சிகள்

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

பாரதி ராமன்


மனதை அடக்குவது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. சும்மா இருக்கும் நேரங்களில் அது எதெதையாவது கற்பனை செய்துகொள்கிறது. பிறகு குரங்குபோல வேறெதற்கோ தாவி விடுகிறது. மூளைதான் பாவம், அந்தக் கற்பனைகளைக் களையெடுத்துப் பயிராக்க முனைகிறது, ஒரு சினிமா எடிட்டரைப்போல.

சினிமா படப்பிடிப்பைப் பாருங்கள், எப்படியெல்லாமோ எடுக்கிறார்கள். சினிமாவை அதன் கதை ஓட்டப்படிதான் படமாக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நடிக நடிகையரின் கால்ஷீட்,ஸ்டூடியோ வசதிகள், வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்கள் இவைகள் கிடைப்பதைப் பொறுத்து, முதலில் க்ளைமாக்ஸ், பிறகு கொஞ்சம் சண்டைக்காட்சிகள், கோர்ட் சீன், சிரிப்பு , உரசல் காட்சிகள்- முதலில் மழையில் பிறகு கணப்பருகில் அல்லது முறை மாற்றி, மீண்டும் சண்டைக் காட்சிகள், சிறிது கிளிசரைன் காட்சிகள், இப்படி எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். டூப் கூடப் போடலாம். இசையில் முதலில் இசைக்கருவிகளின் இரைச்சலைப் பதிவு செய்துவிட்டு பிறகு பாடகரின் குரலைப் பதிவாக்கலாம். பாட்டுக்களை மட்டுமே முதலில் ரிலீஸ் செய்துவிட்டு வினியோகஸ்தர்களிடம் பேரம்பேசிவிட்டுப் படப்பிடிப்பைத் தொடரலாம். கடைசியாக எடிட்டிங்கில் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திச் சரிக்கட்டிவிடலாம். சினிமா எடுக்கத்தான் எவ்வளவு வசதிகள் ?

இதையெல்லாம் சற்றும் தெரிந்திராத என் மனம் திடாரென்று ஒருநாள் தறிகெட்டுப் பல காட்சிகளை என் முன் ஓடவிட்டது.

முதல் காட்சியாக சுமதி அமெரிக்காவில் இருப்பது.

இரண்டாவது காட்சியாக குசலாம்பாள் மாமி படும் கஷ்டங்கள்.

மூன்றாவது ராமசுந்தரம் தன் வீட்டுக்கு உதவிக்கான ஆள் தேட லான கார்யம்.

நான்காவது நஷ்டஈட்டுப் பணத்தில் ஒருவன் பங்களா வாங்கியது.

வெளிநாட்டில் சந்தித்த நம் நாட்டவர் இருவரிடையே மலர்ந்த காதல், ஐந்தாவது காட்சி.

கிராமத்தில் கஷ்டப்படும் தாயை மகன் தன்னிடம் வரவழைத்து ஆதரிப்பது, ஆறாவது காட்சி.

ஏழாவது காட்சி, சுந்துவின் தாய் தன் ஆத்ம திருப்திக்காக ஒரு வீட்டில் சமையல்காரியாவது.

எட்டாவது காட்சி, திடாரென தகப்பனை இழந்து தவிக்கும் பெண்ணுக்கு மாமியாராகி மனம் நெகிழ்வது.

ஒன்பதாவது காட்சியில் மாமியாரின் மூக்கை உடைக்க மருமகளின் முஸ்தீபு. இக்காட்சியின் கடையில் கொஞ்ச நேரம் இடைவெளி விடுகிறது மனம்

பத்தாவது காட்சியில் கோபாலனின் மனைவி பட்ட துயரங்கள் தொடருமா என்ற கேள்வி.

இது என்ன, பித்துப் பிடிக்க வைப்பதுபோல் பத்துக் காட்சிகள் ? என் மூளை தவிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தக் காட்சிகளைச் சம்பந்தப் படுத்தி ஒரு கதையாக்கித் தர ஏதாவது இன்ஸ்டிட்யூட்டின் இரவல் மூளை கிடைக்குமா ? அப்படிப்பட்ட இன்ஸ்டிட்யூட்கள் இருந்தால் இன்னும் சில வருஷங்களுக்கு எல்லாப் பத்திரிகைக் கதைகளிலும் இன்ஸ்டிட்யூட்காரர்களின் ஆதிக்கம் மேலோங்கிவிடும். இன்ஸ்டிட்யூட் எடிட்டர்களுக்குக் கிராக்கி ஏறிவிடும். கொஞ்ச நாட்கள் கழித்து கதைகளை மனம் கோர்வையாகவே சொல்லப் பழகிக்கொள்ளும். இப்படியாக ஒரு சுழற்சி கதை உலகில் ஏற்பட்டு ‘புனரபி எடிட்டிங், புனரபி ரைட்டிங் ‘ என்றாகிவிடும். சரி, இப்போது என் மனதிலோடிய இந்தப் பத்துக் காட்சிகளைச் சுழலவிட்டுப் பார்க்கவேண்டும்.

காட்சி ஒன்று

நியுயார்க்கில் ஒரு பெரிய ஆஸ்பத்திரி. பிரசவப் பிரிவில் மட்டும் ஒரு நாளைக்கு ஐம்பது பிரசவங்கள் பார்க்க வசதி உள்ளது. இன்று அங்கு நியுயார்க் மாநில கவர்னரின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறாள். அவளுக்கு நடு இரவில் வலி கண்டுவிட்டது. ‘ கூப்பிடுங்கள் சீஃபை ‘ நர்சுகள் அலறுகிறார்கள். அமெரிக்க டாக்டர்களோ நேரம் பார்ப்பவர்கள். பணி செய்யுமிடத்தில் கொஞ்சநேரம் கூடுதலாகத் தங்க, அவசரக் கேஸ்களைக் கவனிக்க என்று அழைத்தால் ‘ சாரி, முடியாது எனக்கு வேறு சொந்த வேலை இருக்கிறது, நீங்கள் வேறு டாக்டரைக் கூப்பிட்டுக் கொள்ளுங்கள் ‘ என்பவர்கள். கவர்னரின் மனைவியைக் கவனிக்க இப்போது சீஃப் இல்லை! (அதற்காகத்தான் வெளிநாடுகளில் இந்தியர்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், குறிப்பாக டாக்டர்களை. இந்திய டாக்டர்கள் பொறுமைக் கடல்கள், தியாகச் சுடர்கள். எந்த நேரத்திலும் தம் சொந்தச் சோலிகளைத் தள்ளிவைத்துவிட்டு அவசரப் பணிகளுக்கு ஆஜராகிவிடுவார்கள். இந்தியர்களுக்கு ஓவர்டைம் பணத்தில் ஆசை என்று அமெரிக்கர்கள் கேலிகூடச் செய்வதுண்டு.) ‘ கூப்பிடுங்கள் டாக்டர் சுமதியை ‘ என்று பல திசைகளில் குரல்கள் பறக்கின்றன. கவர்னரின் மனைவி என்றுமட்டுமில்லை, இந்த நேரத்தில் ஒரு கறுப்பரின் மனைவி என்றாலும் கூட டாக்டர் சுமதி வந்துவிடுவாள். சுமதி வந்து உடனே கவனித்ததில் கவர்னரின் மனைவிக்கு மறு பிறப்பு. நல்லவிதமாக குழந்தையும் தாயும் தனித்தனியாயினர். பெண் குழந்தை. குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவிற்கு

டாக்டர் சுமதிக்கு அழைப்பு வருகிறது கவர்னரிடமிருந்து. அங்கே போன டாக்டர் சுமதிக்கு ஓர் ஆச்சரியம் காத்துக் கிடந்தது. அந்தக் குழந்தைக்கு டாக்டரின் நினைவாக ‘சுமி ‘ என்று பெயர் சூட்டியிருப்பதாக கவர்னர் தம்பதி அறிவிக்கிறார்கள். டாக்டர் சுமதிக்கு அந்தக் கணமே தன் மேல் படிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும் அமெரிக்காவுக்கு வந்த தன்னுடையலட்சியம் நிறைவேறிவிட்டதாகவும் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது. (4)

காட்சி இரண்டு

‘ குழந்தே நீ நன்னாப் படிக்கணும்; படிக்கறதுக்கான சக்தி கெடைக்க நன்னா சாப்பிடணும். படிச்சு பெரிய வேலைல சேர்ந்து அம்மாவைக் காப்பாத்தணும் ‘ என்று கூறிக்கொண்டே தன் மகனுக்கு உணவளித்துக்கொண்டிருக்கும் குசலாம்பாளின் கண்களில் முட்டும் நீரினிடையே சுந்தரேசனின் எதிர்காலமே தொக்கி நின்றது போலிருந்தது. ‘அம்மா, எனக்காக நீ ஏம்மா பட்டினி கெடக்கறே ? உடம்பு தேய நாலு வீட்டிலே வேலை செய்து ஏம்மா உன்னையே நீ வருத்திக்கிறே ? நான் கஷ்டப்பட்டு நன்னா படிப்பேம்மா. பாரு, இப்பக்கூட கிளாசிலே நான்தான் ஃபர்ஸ்ட். மணிகூட எனக்கப்பறம்தான். நன்னா படிச்சு ஸ்காலர்ஷிப் வாங்கி காலேஜுலேயும் சேர்ந்து மேலே மேலே படிப்பேம்மா. அதுவரைக்கும் கஷ்டத்தை ரெண்டு பேருமா பங்கிட்டுக்குவோம். நீ மாத்திரம் தனியா கஷ்டப்படறதைப் பார்க்க என் மனசு சங்கடப்படறதம்மா. அந்த சங்கடத்திலே படிப்பு பாதிக்கப்படக்கூடாதுபாரு. நீ இதுவரைக்கும் பட்ட கஷ்டம் வீண் போகக்கூடாதம்மா. ‘- சுந்துவின் குரலில் இருந்த கெஞ்சலும் அதே சமயம் அவனிடமிருந்த தீர்மானமான நோக்கமும் குசலாம்பாளை கொஞ்சம் அமைதிப்படுத்தி அவளுக்கு மனதில் ஒரு தைரியத்தைக் கொடுத்தன. ‘என் கண்ணே, இந்தப் பிஞ்சு வயசிலதான் உனக்கு எவ்வளவு பொறுப்பான பேச்சுடா ராஜா! ‘ என்று மகனை வாழ்த்தினாள் அந்தத் தாய். சில வருஷக் கஷ்டங்களுக்குப் பிறகு தன் மகன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ரசாயனத் துறையில் முதுகலைப் பட்டதாரியாக முதல் மாணவனாகத் தேர்ந்ததைப் பார்த்து அவள் பூரிப்படைந்தாள். பெற்ற வயிறு மணி வயிறுதான், இல்லை,இல்லை சுந்து வயிறு. (1)

காட்சி மூன்று

ராமசுந்தரத்திற்கு தன் ஒரே பெண்ணின் மீது உயிர். தாயை இழந்தவள் என்பதால் ஒரு நிமிடமும் அவளைப் பிரிந்திருக்கச் சம்மதிக்க மாட்டார். அவள் தன் மேற்படிப்புக்காக இரண்டு வருடம் அமெரிக்கா போவேன் என்றபோது தடுத்துப் பார்த்தார். ஒரு பக்கம் மகளைப் பிரியவேண்டுமே என்ற கவலை. மறுபக்கம் அவளது முன்னேற்றம் தடைப் பட்டுவிடுமோ என்ற பயம். முன்னேற்றத்திற்காக அவள அமெரிக்கா போய்த்தான் ஆகவேண்டுமென்று தீர்மானித்தபோது தானும் உடன் செல்ல முடிவெடுத்து இருவருமே கிளம்பிவிட்டனர். மகளுக்கு நியுயார்க்கில் வேலை சார்ந்த படிப்பு. புற நகர் ஒன்றில் வீடு பிடித்தாயிற்று. வேலை செய்யும் இடத்திற்குத் தினமும் காரில் சொந்த டிரைவிங்கில் போய்விட்டு வருவதே மகளுக்குப் பெரும்பாடாகத்

தென்பட்டது.சில சமயங்களில் வேலைப் பொறுப்பில் அவள்திரும்பி வீடு வந்து சேர இரவு வெகு நேரம்கூட ஆகிவிடுவதுண்டு. தனக்கான வயதில் எல்லா வேலைகளையும் தானே செய்ய முடிவதில்லை. மகளாலும் முடியாத நிலைமை. சமையலுக்காவது ஓர் ஆள் இருந்தால் தேவலாம்போல இருந்தது, ராமசுந்தரத்திற்கு. பத்திரிகைகளில் (தமிழிலும் கூட) விளம்பரம் கொடுத்தார். ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாத சமையல்காரிக்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது, உள்ளூரிலிருந்தே. நியுயார்க்கிலிருந்தே ஒரு தமிழ் மாமி கிடைப்பாள் என்று அவர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. பதில் கடிதம் வந்த உடனே அந்த மாமியைப் போய்ப் பார்த்துப் பேசி அமர்த்திவிட்டார். மாமியை தினமும் அவள் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வந்து திரும்பக் கொண்டுபோய் விட்டுவர வேண்டுமென்பதைத்தவிர வேறு சிக்கல் இல்லை. இப்போது ராமசுந்தரத்திற்கு பெரிய நிம்மதி. (3)

காட்சி நான்கு.

அமெரிக்க நீதிபதிகள் நியாயத்தை நிலை நிறுத்துவதில் கண்டிப்பானவர்கள். நியுயார்க்கிலுள்ள ஒரு பெரிய ரசாயனக்கம்பெனியில் ஒரு விபத்து ஏற்பட்டு அதன் பிரதான என்ஜினியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் உயிர் பிழைத்துவிட்டார். அவர் இந்தியர் என்பதால் அந்த அமெரிக்கக் கம்பெனி நஷ்ட ஈடு தருவதில் சற்று சுணக்கம் காட்டியது. விபத்தில் முகம் வெந்துபோன இந்தியர் பிளாஸ்டிக் சர்ஜரி, இதர ஆஸ்பத்திரிச் செலவுகளுக்குமட்டுமே ஈடு செய்யப்படவேண்டியவர் என்று அது கோர்ட்டில் வாதாடியது. அமெரிக்காவில் செய்யப்பட்ட அவசர சர்ஜரி அவரது முகக் கோரத்தை வெகுவாகக் குறைக்கமுடியவில்லை. க.க.க. தெய்வத்தில் வரும் ஜெமினியின் முகத்தைவிட கொஞ்சம் பரவாயில்லை எனலாம். இந்திய என்ஜினியர் மிகத் திறமைசாலி. இளைஞர்.அவர் வாழ்க்கையில் சாதிக்கவேண்டியதும் அனுபவிக்க வேண்டியதும் இன்னும் ஏராளமாக இருக்கும். அவருடைய சின்ன ஆண்குழந்தையின் எதிர் காலமும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். மேலும் அவர் தானாக இந்த வேலைக்கு வரவில்லை. வர்த்தகப் போட்டியில் பேராதிக்கம் பெற்றுவிட வேண்டுமென்ற பேராசையில் அந்தக் கம்பெனியின் இந்தியக் கிளைதான் ஆராய்ச்சிக்காக இங்கு அவரை அனுப்பியிருக்கிறது. சிறிது காலம் முன்புதான் அவரது முக்கிய ஆராய்ச்சி முடிவுற்றது.இந்த இந்திய இன்ஜினியரின் ஆராய்ச்சியின் பயனாய் அந்த அமெரிக்கக் கம்பெனி ஈட்டவிருக்கும் லாபம் பல நூறு மில்லியன்களைத் தாண்டும். எனவே அந்தக் கம்பெனி இந்திய இளைஞருக்கு ஏற்பட்ட விபத்தின் விளைவுகளுக்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் ஒரு மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக அளிக்கவேண்டும் என்று அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்தது. நஷ்ட ஈட்டைப் பெற்றுக்கொண்ட இந்திய இளைஞரின் மனதில் ஒரு போராட்டம். இந்தப் பணத்தை அமெரிக்காவிலேயே வைத்து அனுபவிப்பதா ? இந்தியாவுக்கு எடுத்துச் சென்றால் பல நல்ல காரியங்களைச் செய்யலாமே, எதற்கும் குடும்பத்தாரோடு கலந்து ஆலோசிக்கலாமே என்று நினைத்தார். எப்படி முடிவெடுத்தாலும் அமெரிக்காவில் கொஞ்சநாள் தங்கவேண்டியே இருக்கும். இந்தியாவுக்குத் திரும்புவதானாலும் அங்கு செய்யவேண்டிய பல காரியங்களுக்கான ஏற்பாடுகளும் முதலீடுகளும் செய்ய இங்கு சிறிது காலம் தங்கத்தான் தேவைப்படும். எனவே சொந்தமாக ஒரு வீடு வாங்குவது உசிதமாகும் என எண்ணி நியுயார்க் அருகிலேயே ஒரு விசாலமான பங்களாவை வாங்கிக் குடும்பத்துடன் குடியேறினார் அந்த இந்திய இளைஞர். (8)

காட்சி ஐந்து

வெளிநாட்டுக்கு என்னதான் ஆசைப்பட்டு வந்துவிட்டாலும் இந்தியர்களுக்குத் தாய்நாட்டு நினைவுகள் அகலுவதேயில்லை. தத்தம் பிரதேச கலாச்சாரத்திற்காக ஏங்குகிறார்கள்.தத்தம் மொழிக்காக மிகவும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்த்துவிட்டால் ஏதோ தன் ஊருக்கே வந்துவிட்ட மாதிரியும் தன் உறவினர்களைக் கண்டமாதிரியும் மகிழகிறான். ஆணுக்கு ஆணே இப்படியிருக்க இந்தியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் இளஞனும் இளைஞியும் சந்தித்து, பேசி, அவர்களிடையே பாசம் தோன்றி, காதலாகப் பரிணமித்தது என்றால் அதில் வியப்பென்ன ?அவர்களுடைய முதல் சந்திப்பு ஒரு கார் ப்ரேக்டவுன் போது நிகழ்ந்தது. நியுயார்க் செல்லும் பாதையில் ஓர் ஓரத்தில் அந்தக் கார் மக்கர் செய்து நின்றுவிட்டது. காரின் அருகில் நின்றுகொண்டு ஓர் இந்தியப் பெண் விரைந்து செல்லும் வாகனங்களை நிறுத்தக் கையை ஆட்டி உதவிக்குக் கூப்பிட்டுக்

கொண்டிருந்தாள்.அமெரிக்கக் காரோட்டிகள் ஒருவரும் அவளைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்தப் பக்கமாகச் சற்றுநேரத்தில் வந்த ஒர் இந்திய இளைஞன் தன் காரை நிறுத்தி தான் உதவக்கூடுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டு உதவவும் செய்தான். பரிச்சயம் தொடர்ந்தது. வீட்டுக்கு வெளியே சிடியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்த சந்திப்புகளில் அவள் தன்னை வெளிச்சப்படுத்திக்கொண்டாள். அவளுக்கு ஆஸ்பத்திரியில் வேலை.அவள் தன் வயதான தந்தையுடன் தனியே வசித்துவருகிறாள். சமையலுக்காக சமீபத்தில்தான் ஒரு வயதான மாமி அவளது வீட்டில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். தான் அதிகாலையில் ஆபீஸ் புறப்பட்ட பின்னரே வந்து தான் வீடு திரும்புவதற்கு முன்பாகவே அந்த மாமி போய்விடுவாள். விடுமுறை தினங்களில் அவள் வருவதில்லை. தானே பார்த்துக் கொள்வாளாம். அதனால் அந்த மாமியை இவள் இதுவரை பார்த்ததுகூட இல்லையாம். எல்லாப் பொறுப்பையும் அப்பாவே மேற்பார்த்துக்கொள்கிறார். ‘ அந்த மாமி எனக்கு என் மறைந்த தாய் மாதிரி படுகிறாள். விரைவில் அவளைச் சந்தித்து எங்களுடனேயே வந்து தங்கும்படி கேட்டுக்கொள்ளப்போகிறேன் ‘ என்றும் அவள் கூறினாள். தன் பங்குக்கு அந்த இளைஞனும் தன்னைக் கொஞ்சம் வெளிப்படுத்திக்கொண்டான். தான் ஓர் அமெரிக்கக் கம்பெனியில் வேலை செய்வதாகவும், தன் வயதான தாயுடன் வசித்து வருவதாகவும், வேலைப் பளுவின் காரணமாக பல நாட்கள் வீட்டிற்கே போகமுடியாமல் ஆகிவிடுவதாகவும் கூறினான். இன்னொரு நாள் அவன் அவளிடம் தன் மனதைப் பறிகொடுத்திருப்பதைப் பற்றியும், வேறொரு நாள் தன் காதலைத் தன் தாயிடம் பிரஸ்தாபிக்கப்போவதாகவும், விரைவில் தன் தாயை அவளுக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறி மகிழ்ந்தான். இருவரும் இணையும் காலமும் கனிந்து வந்துகொண்டிருந்தது. (6)

காட்சி ஆறு

‘அம்மா, நீ கஷ்டப்பட்டதெல்லாம் முடிந்துவிட்டதம்மா! எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது. இனிமேல் நீ கிராமத்தில் ஓட்டை வீட்டில் கிடந்து உழல வேண்டாம். உடனே புறப்பட்டு இங்கே வா. இங்கே ஒரு சின்ன போர்ஷன் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நாளைக்காக. உனக்கும் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும். இன்னும் மூன்று மாதங்களில் புதிய ஆராய்ச்சிக்காக என்னை அமெரிக்கா அனுப்பப்போகிறது என் கம்பெனி . வீடுகூடப் பார்த்துக்கொடுக்கிறார்கள். கார், வீடு , ஆபீஸ் எல்லாமே ஏ.சி. இன்னும் எல்லாவித வசதிகளும். நீ இல்லாமல் எனக்கு இவையெல்லாம் வேண்டுமா ? ஆகவே நீயும் என்கூட வருகிறாய். உடனே கிளம்பு. தேவைக்குப் பணமும் அனுப்பியிருக்கிறேன். ‘ தன் மகனிடமிருந்து வந்திருந்த அந்தக் கடிதத்தைப் படித்ததும் அந்தத் தாயின் கண்களிலிருந்து நீர் தாரையாகப் பெருகி வழிந்தது. தான் பெற்ற மகனின் வெற்றித்தீயில் அவள் வடித்தத் தியாகக் கண்ணீர் தீய்ந்து ஆவியானது. ஆவி குளிர்ந்து வந்து மீண்டும் அவள் முகத்தில் இன்பமாய் வீசியது. அவள் உடனே கிளம்பத் தயாராகிவிட்டாள், பழைய துயரங்களைக் கிராமத்திலேயே விட்டுவிட்டு. (2)

காட்சி ஏழு

எத்தனை விஞ்ஞானிகளைத்தான் பார்த்துவிட்டது அந்தக் கம்பெனி ? எத்தனையோ நாட்டவர்கள், என்னென்னவோ பட்டதாரிகள்! அவர்களையெல்லாம் இந்த இந்திய இளைஞன் வென்றுவிடப் போகிறான். இந்தியாவிலிருந்து அவனை இங்கு அனுப்பும்போதே அந்தக் கம்பெனியின் கிளை பலமான சிபாரிசு செய்திருந்தது, அவனது திறமையைப் பற்றி, அவனது தனித்தே இயங்கும் தன்மை பற்றி, அவன் புதிதாக மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சிபற்றி, அந்த ஆராய்ச்சியின் பயனாய் அந்தக் கம்பெனியும் உலகளாவிய அதன் கிளைகளும் ஈட்டப்போகும் அளவிட முடியாத லாபத்தைப்பற்றி. எனவே முன்னதாகவே ஒரு பரிசோதனை நிலையம் அந்த இளைஞனின் திட்டப்படி கட்டி முடிக்கப்பட்டிருந்தது.அமெரிக்காவில் தனி ஆராய்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். கூடவே அவன் தன் தாயையும் அழைத்து வருவதால் புற நகர்ப் பகுதியில் ஒரு வீடுகூட ஏற்பாடாகியிருந்தது. வந்து இறங்கியதுமே அவனுடைய ஆராய்ச்சி மும்முரமாகத் தொடங்கிவிட்டது. போகப்போக அவன் வீட்டிலிருக்கும் நேரம் குறைந்துகொண்டே வந்தது. அப்போதுதான் அவன் தாய் அவனிடம் ஒரு நாள் கேட்டாள் ‘ஏண்டா, குழந்தே! நீயானா ஆபீசே கதின்னு கிடக்கே. எனக்கு போதே போகல. எப்பவும் ஏதாவது செஞ்சிண்டே இருந்த ஒடம்பு. இப்படியே சோம்பலா உட்டா துருப்பிடிச்சுப் போய்டும். இத பாரு, இந்த விளம்பரத்தை. இந்த ஊர்ல வயசான ஒரு தமிழருக்கு வீட்லே ஒத்தாசைக்கு ஒரு மாமி வேண்டுமாம். பகல்லே மட்டும்தான் வேலை. லீவுநாள்ல போகவேணாம். நான் நாளெல்லாம் சும்மாதானே இருக்கேன் ? கடவுள் புண்ணியத்திலே நீ கை நிறைய சம்பாதிக்கிறே. நான் இதைப் பணத்துக்காகப் பண்ணவேணாம். நாலு பேருக்கு நாம்ப உபகாரமா இருக்கிறதிலேதான் திருப்தி. அதான். நீ சம்மதிப்பேன்னு நினைக்கிறேன். தினமும் அவரே வந்து கூப்பிட்டுண்டு போறாராம், கொண்டுவந்தும் விடறாராம் ‘ அம்மாவின் பேச்சில் நியாயம் இருந்தது. மேலும் அவனுடைய வேலைத்தீவிரம் அவனை அதற்கு இணங்க வைத்தது. தன்னுடைய ஆராய்ச்சி முடிந்த பிறகு வேண்டுமானால் இந்த ஏற்பாட்டை நிறுத்திக்கொள்ளலாம் என்று நினைத்து அவன் தன் தாயிடம் சம்மதத்தைக் கூறினான். (5)

காட்சி எட்டு

அன்று ஞாயிற்றுக்கிழமை. பெரியவர் நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழிக்கப்போவதை எதிர் பார்த்துக்கொண்டிருந்தார். வெளியேயிருந்து யாரும் வரப்போவதில்லை.மகளுடைய உதவியுடன் சீக்கிரமாகவே வேலைகளை முடித்துவிட்டால் அப்புறம் ‘ஹாய் ‘ தான். மகளுடன் சேர்ந்து அரட்டை, கும்மாளம், சிரிப்பு, சந்தோஷம் இப்படியாக. மகாராஜபுரத்தின் மணிரங்கு அறை முழுவதும் வியாபிக்க ஆரம்பிக்கும் சூழ்நிலையில் இன்று மகளின் கல்யாணத்தைப் பற்றி அவளிடம் பேச்சுத் தொடங்கவேண்டும் ‘மாமவ பட்டாபிராம….. கல்யாண….. ‘ திடாரென்று பெரியவரின் தலை தொய்கிறது. ‘ அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு ? இந்தாருங்கள் தண்ணி, வாயைத் திறங்கள்! ‘ நிசப்தமே மிஞ்சுகிறது. டாக்டர் பெண்ணின் மசாஜ் முயற்சிகள் வீண். ‘ அப்பா போய்விட்டார். அடக் கடவுளே, தனிமையாக நான் என்ன செய்வேன் ? ஆம், கூப்பிடு என் நண்பனை, காதலனை ‘ போன் செய்கிறாள். ‘ சீக்கிரம் வாருங்கள். உங்கள் அம்மாவையும் அழைத்து வாருங்கள். எனக்கு ஒன்றும் ஓடவில்லை. கை, கால் உடம்பு பதறுகிறது. பிளீஸ் , உடனே வாருங்கள். என் அப்பா..என் அப்பா…. ‘. ‘தைரியமாக இரம்மா, இதோ கிளம்பிவிட்டேன் ‘ போனின் மறுமுனையில் பதில். போனை வைத்த மகன் தன் தாயிடம் கூறுகிறான். ‘அம்மா, என் சினேகிதின்னு சொல்வேனே,அவளுடைய அப்பா திடார்னு….. நாம்பதாம்மா உதவி செய்யணும் ‘ ‘ இதோ கிளம்பிட்டேன்பா. நீ காரை எடு. ‘ என்கிறாள் தாய். கார் சினேகிதியின் வீடு வந்ததும் நிறுத்தப்படுகிறது. ‘ஐயோ, இவர் வீடா, இங்கதாண்டா நான் வேலைன்னு ஒத்தாசையாயிருக்கேன். நேற்று சனிக்கிழமைக்காக வெள்ளிக்கிழமையே உசிலி செஞ்சு ஃபிரிட்ஜ்லேவச்சிட்டு வந்தேனே ? என்ன பாவம்டா இது ? தன் பொண்ணு கல்யாணத்தைப் பத்திக் கூட எங்கிட்டப் பேசினாரே, இன்னிக்கு அவளிடமேகூட கேக்கப்போறதாகச் சொன்னாரே. அவரோட பெண்ணா உன் சினேகிதி. நீ பழகற பெண் ? எங்கெங்கே எப்படியெல்லாம் முடிஞ்சி வைச்சிருக்கான் இந்த ஆண்டவன் ? ‘ பொருமிக்கொண்டே உள்ளே நுழைந்த அந்தத் தாய் அந்தப் பெண்ணைப் பார்த்து விம்மியபடி, ‘வாம்மா, மருமகளே, கவலைப் படாதே, தைரியமா இரு. தாய்க்குத் தாயாகவும்,அப்பாவுக்கு அப்பாவாகவும் நான் பாத்துக்கறேன் உன்னை. கவலைப்படாதேம்மா. ‘ என்று ஆசுவாசப் படுத்தத் தொடங்கினாள். (7)

காட்சி ஒன்பது

‘ அவருக்கு ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு எனக்கு எல்லாமே வெறுத்துப்போச்சு. நஷ்டஈட்டில் வந்த பணத்திலே வாங்கிய பங்களாவை விற்றுவிட்டு இந்தியா திரும்பிவிடலாம் என்று அவர் சொன்னதும் எனக்காகவும் என் மகனுக்காகவும் உடனே ஒத்துக்கொண்டேன். இந்தியா வந்ததும் அவர் மீண்டும் பல ஆராய்ச்சிகளில் இறங்கிவிட்டார். பிள்ளையை மாமியார் பார்த்துக்கொள்வார் என்று எண்ணி என் படிப்பும் வீணாகப் போகாமலிருக்க ஒரு கிளினிக் ஆரம்பித்துவிட்டேன். நாளாக நாளாக கிளினிக்கில் நேரம் போதவில்லை. என் மாமியாரோ நான் கணவரையும் மகனையும் கவனிப்பதில்லையென்று ஆதங்கப்பட ஆரம்பித்துவிட்டார். என் கணவருக்குத் தன் ஆராய்ச்சிகள்தான் லட்சியம். வாழ்க்கையே அதுதான். என்னைப் பற்றி அவர் தவறாக நினைப்பதில்லை. என் மாமியார்தான் தன் பிள்ளைமேலுள்ள பாசத்தால் ஏதேதோ தவறாகக் கற்பனை செய்து கொள்ளுகிறார். நான் இதையெல்லாம் அவர் முன்னாடியே போட்டு உடைக்கப்போகிறேன் இன்று. இந்த வீட்டில் ஒன்று மாமியார், இல்லை மருமகள்! ஐயோ இதோ ஒரு அவசரக்கேஸ் ! வீட்டிற்குக் கிளம்பவே ரொம்ப லேட்டாகும்போல இருக்கிறதே! மாமியார் கதையை இன்னிக்கு முடிக்க முடியாது போலிருக்கே! ‘ இப்படி சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது ஆஸ்பத்திரியில் பரபரப்புடன் காணப்பட்ட அந்தப் பெண் டாக்டருக்கு. (10A)

காட்சி பத்து

என் அப்பா உயிரோடு இருக்கும்போது அவருக்கு நேரிலும் எனக்கு மறைமுகமாகவும் ஆதரவா இருந்தீங்க. என் அப்பா போனதுக்கப்புறம் உங்க மகனையே கொடுத்து ஆதரவா இருக்கீங்க. உங்களுக்கு நான் எப்படி நன்றி செய்வேன் மாமி!– இப்படியெல்லாம் கண்ணீர் தளும்ப சொல்லி விம்முவையே– இப்ப எங்களைக்கண்டாலே ஏன் பிடிக்கல்லே ஒனக்கு ? நான் உங்க வீட்டில் சமையல்காரியா இருந்தவதான். இப்ப மாமியாரா வந்துட்டேன். நானாக வரிச்சிண்டதில்ல அது! என் மகன் செய்தது. அவன் எது செஞ்சாலும் எனக்கு அது சம்மதம். அவன் சந்தோஷம்தான் என் சந்தோஷம். மூஞ்சியெல்லாம் வெந்துபோய் மூலையிலேயே குழம்பிண்டு ஏதோ குழம்பைக் காய்ச்சிண்டு இருக்கானே அவனுக்கு நீ கிளினிக்கு வெச்சு சம்பாதிக்கிற பணமா வேணும் ? பணம் கொட்டிக்கிடக்கிறதடி, இன்னும் பத்து ‘லேப் ‘ கட்டல ‘ம். பணமா வேணும் அவனுக்கு ? ஆறுதலா கட்டின பெண்டாட்டி பக்கத்திலேயே இருந்துண்டு, கண்குளிரப் பாத்துண்டு, பேசிண்டு, வேளாவேளைக்கு அவன் பசியாத்திண்டு இருக்க வேணாமோ ? ஆனா அவன் மொகத்தையே பாக்கக் கூசிண்டு ஒன் ஆஸ்பத்திரியிலேயே வாழ ஆரம்பிச்சுட்டே நீ! அங்க மட்டும் நீ பாக்கற மூஞ்சிகளெல்லாம் அழகு வடியறதோ ? எல்லாமே வலியில் முனகும், பினாத்தும் கோரங்கள்! இப்பல்லாம் ஒன் பிள்ளையைக்கூடக் கவனிக்கத் தோன்றதில்ல ஒனக்கு. நீயெல்லாம் என்ன டாக்டர், என்ன அம்மா ? இதோ நீ கிளம்பிட்டே, ஒங்கொழந்தை கிடந்து தவிக்கப் போறது. ஏ, குட்டிக் குழந்தே! சாப்பிடப் படுத்தாதேடா, அம்மா இல்லாவிட்டால் பரவாயில்லே. பாட்டி நான் பாத்துக்கிறேன் வா. நீ நன்னா படிக்கணும். படிக்கிறதுக்கான சக்தி கெடைக்க நன்னா சாப்பிடணும்! படிச்சு பெரிய வேலைல சேர்ந்து…….. பேரன் பெரிய வேலையில் சேர்ந்து யாரைக் காப்பாற்ற வேண்டும் என்று பாட்டிக்குத் தெரியவில்லை. காலம் சென்ற கோபாலனின் மனைவி குசலாம்பாளுக்குத் தெரியவில்லைதான். தன் பிள்ளை சுந்துவைக் காக்கக் கஷ்டப்பட்டதுபோல் இப்போது பேரனுக்கும் படவேண்டுமோ ? அப்போது ஒரு மாதிரி, இப்போது வேறு மாதிரியோ என்று நினைத்தாள் அந்தப் பாட்டி.

(9)

அப்பாடா! காட்சிகளின் சுழற்சி ஒரு வழியாக முடிந்து ஓய்ந்தது. இனி இவற்றை எப்படிக் கோர்வைப் படுத்துவது என்று எண்ணியபடி பக்கத்துத் தெரு இன்ஸ்டிட்யூட் எடிட்டரிடம் சென்று காட்சிகளை விவரித்தேன். அந்தக் காட்சிகளைத் தொகுத்து ஒரு கதையாக்க முடியுமா என்றும் பார்க்கச் சொன்னேன். அவரும் கவனமாக எல்லாவற்றையும் கேட்டார். தன் மனதிலேயே திரும்பத் திரும்பக் காட்சிகளை ஓடவிட்டுக்

கொண்டார்போலும்! முதலில் நான் கூறிய காட்சிகளின் வரிசைக் கிரமத்தை மாற்றி அமைத்தார். (அவர் புதிதாக மாற்றி அமைத்த காட்சிகளின் வரிசைக்கிரம எண்கள் நான் கூறிய காட்சிகளின் இறுதியில் அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ளன.)

அவன், இளைஞன், இந்திய இளம் விஞ்ஞானி, மகன் என்று பொதுவாக வரும் இடங்களில் சுந்து அல்லது சுந்தரேசன் என்றும், அவள், இளைஞி, டாக்டர், பெண், மகள், மருமகள் என்று பொதுவில் வரும் இடங்களில் சுமதி என்றும் பின்னணியில் பெயர் பதித்தார். நான் கூறிய ஒன்பதாவது காட்சியை 10A என்று பிரிவினை செய்தார். அதே ஒன்பதாவது காட்சியின் கடைசியில் என் மனம் விட்டிருந்த இடைவெளியை நிரப்பச் சொன்னார். அந்தக் காட்சியை 10B என்று எண்ணிட்டுப் பின்வருமாறு ஓட்டினார்.

காட்சி பத்து B

‘ அந்த அவசரக்கேசை வெற்றிகரமாகக் கவனித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது மிகவும் நேரமாகி விட்டிருந்தது. என் கணவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி இருந்த முகம் ? ஏதாவது நாக ஜோதி கிடைக்குமா அதைப் பழைய உருவுக்கு மாற்ற ? நினைத்துப் பார்க்க எவ்வளவு இன்பமாக இருக்கிறது! தூக்கத்தில் என் கணவர் முகத்தில் புன்னகை அரும்புகிறது. அவருக்கு மேலும் ஓர் ஆராய்ச்சி வெற்றிபோலும்! இந்த ஞாயிறன்று நாங்கள் எல்லோருமே கூனூரில்! பொழுது புலர கோழி கூவுகிறது! குளிர்ந்த காட்சிகள் கனவுகளாகக் கண்களை நிறைக்கின்றன! ‘— சுமதியின் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அவள் உள் மனம் கூற அவளது முகம் மலருகிறது.

இன்ஸ்டிட்யூட் எடிட்டரின் முகமும் கூடவே மலருகிறது. ‘ இப்போது உங்களுடைய காட்சிகள் தொடர்பு பெற்று முழுமையான சித்திரமாகி விட்டன பாருங்கள் சார்! ‘ என்று கூறுகிறார் எடிட்டர். ஆம், காட்சிகளைத் திருத்தி அமைத்ததில் ஒரு கதை வந்திருந்தது.

‘ எனக்கு ஒரு சந்தேகம் சார்! நான் கூறிய ஒன்பதாவது காட்சியை 10A என்று மாற்றி 10B என்று புதிதாக ஒரு காட்சியை இணைத்து முடித்திருக்கிறீர்களே அது ஏன் சார் ? ‘ என்று நான் இன்ஸ்டிட்யூட் எடிட்டரைக் கேட்டேன்.

‘அது அப்படித்தான் சார்! A சென்டர் ரசிகர்களும் B சென்டர் ரசிகர்களும் வெவ்வேறு ரசனை உள்ளவர்கள். அதனால் இரண்டு விதமான முடிவுகள் இருக்க வேண்டும். உங்களுடைய பத்தாவது காட்சியில் குசலாம்பாளுக்குத் திரும்பவும் கஷ்டங்கள் தொடருமா என்ற சஸ்பென்ஸ் முடிவு A சென்டரில் எடுபடலாம். ஆனால் B சென்டருக்கு சுபமான முடிவுகள்தான் வேண்டும். அதே மாதிரி புதிய காட்சி எண் 10Aல் வரும் மாமியாரை எதிர்க்கப் புகும் மருமகளின் தீரமும் அது கைகூடுமா என்ற சஸ்பென்ஸும் B சென்டர்களில் எடுபடும். ஆனால் A சென்டர்களில் எடுபடாது. அதனால்தான் இந்த மாற்றங்கள் ‘ என்றார் இன்ஸ்டிட்யூட் எடிட்டர்.

அவருடைய வியாபார சாமர்த்தியம் என்னை வியக்கவைத்தது. எப்படியோ தொடர்பின்றிக் கிடந்த காட்சிகளைத் தொகுத்து ஒரு கதையாக்கிக் கொடுத்துவிட்டாரே என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு நன்றி கூறிவிட்டு மனத் திரையில் புதுத் தொகுப்பாய்க் காட்சிகளை ஓட விட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.

இப்போதுகூட மனதை அடக்குவது மிகவும் கடினமான காரியமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இன்ஸ்டிட்யூட்காரர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் அதை அடக்க முடியாததைப் பற்றி நான் இப்போது கவலைப்படுவதில்லை.

_______________________________கணையாழி,ஜூன் -1996.

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.