எச்.பீர்முஹம்மது
நடப்பு உலகில் மனித வாழ்க்கை நிலையற்று தப்பியலையும் விலங்காக நகர்ந்து வருகிறது. இரையை தேடும் பறவையும் இந்த புள்ளியில் தான் இணைகிறது. பறவைகள் இப்பிரபஞ்சத்தின் எல்லா வெளிகளையும் தொடுபவை. அவற்றுக்கு நிரந்தர இருப்பிடம் என்பது அபூர்வமே. நாளை பற்றிய கனவுகளற்று உணவு தேட்டமே அவற்றின் பிரதான செயல்பாடு. இந்த இடத்தில் நாளை என்பதில் தான் மனிதன் பறவையிடமிருந்து வித்தியாசப்படுகிறான். இன்று என்பதில் அவன் இருப்பு தொடங்கி காலம் முன்னோக்கி நகர்தல்- பின்னோக்கி நகர்தல் என்ற இருத்தல் செயல்பாட்டில் அவனின் இயக்கம் இருக்கிறது. நடப்பு உலகில் பல்வேறு காரணங்களுக்காக மனிதனின் இடப்பெயர்வு அவசியமான ஒன்றாக மாறி விட்டது. இருப்பிடம் தாண்டிய, பிரதேசம் தாண்டிய, மொழி தாண்டிய, கலாசாரம் தாண்டிய, மனித உறவுகளை தாண்டிய ஒரு கடந்து போதலாக இடப்பெயர்வு இன்று மாறி விட்டது. உலக வரலாற்றில் அதிகமாக இந்த தாண்டலுக்கு உள்ளானவர்கள் மூன்றாம் உலக நாடுகள் அல்லது வளரும் நாடுகளை சார்ந்த நிர்கதியான மனிதர்களே. இருபதாம் நூற்றாண்டை இந்த புலப்பெயர்வின் அதிகாரபூர்வ காலகட்டம் எனலாம். உலக நாகரீகங்களின் காலகட்டத்திலிருந்து இது தொடங்கினாலும் வெகுவான, மிக அவலமான , துயரமான இடப்பெயர்வு (Displacement) என்பதில் இருந்து தான் இருபதாம் நூற்றாண்டு இடப்பெயர்வின் அர்த்தத்தை அடைகிறது.
வரலாற்று அடிப்படையில் புவிக்கூறுபாடு என்பதற்கும், மனித இடப்பெயர்வுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தேசியம், நாகரீகம் (Nation, civilization)போன்ற கருத்தாக்கங்கள் தொன்று தொட்ட மனித இடப்பெயர்வின் விளைவுகளே என்கிறார் இத்தாலிய தத்துவவாதியான விக்கோ. இதில் தேசியம் நடப்பு உலகில் மிகுந்த குவியமடைந்து வருகிறது. கொசாவோ தொடங்கி இலங்கை வரை இதன் பிரக்ஞை விரிந்து பரவுகிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் இசங்களை விட தங்கள் தேசத்திற்கான போராட்டத்திற்காகவே அதிகமும் உயிரிழந்திருக்கிறார்கள். மனித வரலாற்று வளர்ச்சி போக்கை கூர்ந்து அவதானித்தவர்கள் இதை புரிந்து கொள்ள முடியும். இதனை இன்னொரு அர்த்தத்தில் நாம் விவரித்தால் இப்பிரபஞ்சம் புவிஅரசியல்- கலாசார ரீதியாக மேற்கு- கிழக்கு என்ற இரு பெரும் பிரிவினைக்கு உட்பட்டிருக்கிறது. மேற்கு என்பதில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்கள் உள்ளடங்குகின்றன. கிழக்கில் ஆசியா, ஆப்ரிக்கா போன்ற பெரும் கண்டங்கள் வருகின்றன. இதில் மேற்கு என்பதற்கு ஐரோப்பா என்பதாகவே அதிகமும் இன்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. அது புவியியல்,கலாசார,அரசியல்,மத மற்றும் அற ரீதியாக கூறுகளின் தொகுப்பாகும்.
மேற்கின் அரசியல் வரலாற்று கூறு என்பது நீண்ட கால ஆதிக்கம், அதிகாரம், வன்முறை, கலாசார பறிப்பு இவற்றோடு இயைந்திருக்கிறது. இன்றைய கட்டத்தில் மேற்காக பிரிட்டனும், அமெரிக்காவும் தான் உலக அரங்கில் முன்னிலை பெறுகின்றது. இதை குறித்து பிரிட்டன் எழுத்தாளர் ஆஸ்கர் ஒயில்ட் பின்வருமாறு குறிப்பிட்டார்.” இரு தேசங்கள் ஒரு பொதுவான மொழியால் பிரிக்கப்பட்டுள்ளன. கீழை நாடுகளை பொறுத்தவரை மத்திய கிழக்கு, மற்றும் தெற்கு, கிழக்காசிய நாடுகளே குவியம் பெறுகின்றன. ஓரியண்ட் என்ற சொல்லாடல் மேற்கின் அகராதிப்படி கீழை நாடுகளை குறிப்பதாகும். அமெரிக்க மற்றும் பிரிட்டன் வழக்கில் அது இன்றும் நகைப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லத்தீன் மொழியில் ஓரியண்ஸ் என்பதற்கு சூரியன் உதிக்கும் பிரதேசமாகும். மரபார்ந்த முறையில் மேற்கு ஐரோப்பிய வழக்கில் ஓரியண்ட் என்பதற்கு தற்போது மத்தியகிழக்கு என்றழைக்கப்படும் பிராந்தியம் என்பதே அர்த்தமாகும். அதாவது அண்டை கிழக்கு நாடுகளை குறிப்பது. இதன் தொடர்ச்சியில் ஓரியண்ட் என்பது அந்நாடுகளின் மக்கள் மற்றும் கலாசாரங்களை குறிப்பதாகும். பிரெஞ்சு வழக்கில் ஓரியண்ட் என்பது கிழக்கத்திய விவகாரம் சார்ந்த , உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிந்தைய அந்நாடுகளின் அரசியல் மற்றும் இராஜ்ஜிய ரீதியான விவகாரங்களின் தொகுப்பாகும். ஓரியண்ட் சொல்லாடலை பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகட்டத்தில் ஐரோப்பாவில் பரவலாக வழக்கில் இருந்தது. மேலும் இது பிரிட்டனின் காலனியம் மற்றும் யூத எதிர்ப்பு மனோபாவம் ஆகியவற்றின் பின்தொடரலாகவும் இருந்தது. இதனிடையில் ஓரியண்ட் என்பது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய செமிடிக் மதங்களின் கலாசார, பிராந்திய, கருத்தியல் நிலைபாடுகளின் பிரிவினை சார்ந்த கூறாகவும் இருக்கிறது. நாம் இன்று மேற்கு என்று புரிந்து கொள்கிற பிராந்தியமானது வரலாற்று ரீதியாக 600 ஆண்டுகள் பழமையானது. இது அன்று கிறிஸ்தவ பிரதேசமாகவே அறியப்பட்டது. இது கத்தோலிக்க மற்றும் புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஆகியவற்றின் கூட்டிணைவே. இதில் வைதீக மற்றும் பைசாண்டிய கிறிஸ்தவங்கள் உள்ளடங்காது. காரணம் அவை மத்தியகிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் பொதுவான மரபு இருந்தாலும் அவை அடிப்படையில் வித்தியாசப்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவம் என்பது ரோமாபுரியை குவியப்படுத்தும் ஒன்றே. எட்டாம் நூற்றாண்டு பிராங்க் மன்னரான சார்லிமாக்னே அன்றைய போப் மூன்றாம் லியோவால் கி.பி 800 ல் ரோமின் பேரரசனாக முடிசூடப்பட்டார். இதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கு இஸ்லாமிய உலகம் மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவம் இவற்றிற்கிடையேயான அரசியல், மற்றும் கலாசார மோதல் தொடக்கம் பெற்றது. 18 மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் அந்தலூசிய பகுதிகளை ஆண்ட துருக்கிய உதுமானிய பேரரசு அன்றைய ரோம கிறிஸ்தவ அரசுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் தோன்றியது.கிறிஸ்தவத்தை பொறுத்தவரை அதன் அரசியல் பலம் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் படிப்படியாக குறையத்தொடங்கியது. 1648 ல் மேற்கின் ஒவ்வொரு அரசுகளும் அவரவருக்குரிய சொந்த மதங்களை பிரகடனப்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் மேற்கத்திய கிறிஸ்தவத்தின் உயிர் நாடியான ரோம பேரரசு சரிவடைந்து புதிய இறையாண்மை மிக்க அரசுகள் ஏற்பட்டன. இந்த காலகட்டம் தான் ஐரோப்பிய வரலாற்றில் மறுமலர்ச்சி யுகம். இப்போது மதசார்பின்மை கருத்தியல் அதற்குள்ளிருந்து எழுந்து ஐரோப்பா முழுவதும் பரவுகிறது. ஜனநாயகம் பற்றிய கருத்தாக்கம் விரிவடைந்து அதனை உள்வாங்கிய அரசுகள் பிறக்கின்றன. இதன் தொடர்ச்சியில் லௌகீகத்தின் ஒரு பகுதியாக நவீன ஐரோப்பா உருவானது. இது ஐரோப்பாவின் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சி.கீழை நாடுகளின் வரலாற்றில் பயண வரலாற்றாளர்கள் முக்கிய இடத்தை அடைகின்றனர். மார்க்கோபோலொ, மார்சல் பிரஸ்ட், மாக்கியவெல்லி, பாஹியான் போன்றோர் குறிப்பிடதகுந்தவர்கள். பல ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுக்கு கடல்வழி பாதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அது ஒரு வகையில் அவர்களின் திசை அரசியலாகவும் இருந்தது. மார்சல் பிரஸ்ட் உண்மையான கடல் வழி கண்டுபிடிப்பு என்பது நிலத்தை தேடுவதல்ல. மாறாக புதிய கண்கள் வழியாக அவற்றை பார்ப்பதுமாகும்.
ஓரியண்டலிசத்தை பொறுத்தவரை கிழக்கத்திய கலாசாரத்தின் கூறுகள் பற்றிய வரைபடமாகவும், கண்ணோட்டமாகவும் இருக்கிறது. வரலாற்று அடிப்படையில் ஓரியண்டலிசம் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு சிந்தனையாளர்கள் மற்றும் பயணக்குறிப்பாளர்கள் ஆகியோரின் ஆக்கங்களால் நிரம்பியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஓரியண்ட் என்பது மத்தியகிழக்கில் இருந்து நகர்ந்து தூர கிழக்கு நாடுகளை குறிப்பதாக மாறியது. குறிப்பாக ஜப்பான் மற்றும் சீனா போன்றவற்றை குறிப்பதானது. அதாவது கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய புவி அரசியல் பிரதேசங்களை குறித்தது. தற்போதைய ஆங்கில அகராதிப்படி ஓரியண்ட் என்ற சொல்லுக்கு கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சார்ந்த புவி அரசியல், மற்றும் கலாசார வகைப்பாடுகள் என்று அர்த்தம். மேலும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த ஓரியண்ட் என்ற சொல்லாடல் தவிர்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக கீழைநாடுகள் ஆசியா என்றே குறிக்கப்படுகின்றன. கிழக்கின் கலாசாரத்தை, அதன் தொன்ம நுட்பங்களை , வரலாற்று பாரம்பரியத்தை பல ஐரோப்பிய சிந்தனையாளர்கள் அவதானித்திருக்கிறார்கள். மான்டெஸ்க், வில்லியம் பெக்ஃபோர்ட், தாமஸ் மூர், ஜான் வாப்ஃபங், ரால்ப் எமர்சன், தாமஸ் டி குன்ஸி, விக்டர் குகோ, ரிச்சர்ட் பிரான்ஸிஸ் பர்டன் போன்றோர்கள் இந்த வகைப்பாட்டிற்குள் வருகிறார்கள். இவர்களில் மாண்டெஸ்கின் ஓரியண்ட் சமூகம் குறித்த The persian letters முக்கியமான படைப்பாகும். அதில் மாண்டெஸ்க் பாரசீகம் மற்றும் மத்திய ஆசியா குறித்து விரிவாக ஆராய்கிறார். இது அரசுகளுக்கிடையேயான உரையாடலாக கடித வடிவில் இடம்பெறுகிறது. மேலும் மார்க்ஸ் தன் கடைசி கட்டத்தில் கீழை சமூகங்களை குறித்து தான் படிக்க இருப்பதாக குறிப்பிட்டார். அதாவது கீழை மதங்களான இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் குறித்து தான் அதிகம் படிக்க ஆர்வமாக இருப்பதாக கடிதம் ஒன்றில் ஏங்கல்ஸிடம் குறிப்பிட்டார். இதன் மூலம் வரலாற்றில் மேற்கு மற்றும் கிழக்கு அதன் மறு பிரதியாக்கத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றின் மோதலாகவே இருந்திருக்கிறது.
ஓரியண்டலிச சிந்தனையாளர்கள் குறித்த இத்தொகுப்பின் ஆக்கம் என்பது என் பொருளாதார புலப்பெயர் வாழ்க்கையின் ஆறு ஆண்டுகள் உழைப்பின் வெளிப்பாடு. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இஸ்லாமிய சமூகத்தின் இயல்பான சமூக பொருளாதார நிர்பந்தங்களுக்கு ஆளானவனாக வளைகுடா நாடு ஒன்றில் வேலைக்காக சென்றேன். அப்போது வெறுமையும், தவிப்பும், அந்நியத்தன்மையான மனமும் நிரம்பியவனாக மாறினேன். வாசிப்பு அனுபவமும், தேடலும், எழுத்தும் எனக்குள் ஏற்கனவே ஆழமாக பதிந்திருந்தது. வளைகுடா வாழ்க்கை இதை தொடர்ந்து தக்கவைப்பதற்கான தளமாக தொடக்கத்தில் இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் குடிபெயர்ந்து தமிழில் எழுதி கொண்டிருப்பவர்கள் போல் வளைகுடாவில் இருந்து கொண்டு எழுதுபவர்கள் மிகக்குறைவு. காரணம் அந்த வாழ்க்கை ஏற்படுத்தும் வெறுமையும், எழுத்திற்கான உளவியல் சுதந்திரமும், சிந்தனை சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலை தான்.நான் இதனோடு அதிகமும் போராடவேண்டியதிருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களை சார்ந்த வளைகுடா வாழ் மனிதர்கள் எல்லோருக்குமே இதே நிலை தான்.இந்நிலையில் ஏற்கனவே நான் திண்ணை.காமில் தொடர்ந்து எழுதி கொண்டிருந்த கட்டத்தில் யமுனா ராஜேந்திரன் அறிமுகமானார். நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து இணையம் வழியாக உரையாடிக்கொண்டதுண்டு.அதற்கு முன்பே பாவண்ணனின் தொடர்பு இருந்தது. பாவண்ணன் புலம்பெயர்ந்தாலும் இழப்புகளை எதிர்கொண்டு அதனை தாண்ட வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இயந்திரமயமான வாழ்க்கை மற்றும் அதனுடனான என் உறவாடல் இவற்றுக்கிடையேயான தூரத்தை தாண்டுவது மிகவும் கடினமாக இருந்தது. இப்படியான சூழலில் வளைகுடா புலப்பெயர்வுக்கு பின் என் முதற் கட்டுரை பாலைவன மூளைகளும், பேரீத்த மரங்களும் என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதிய காற்று மாத இதழில் வெளிவந்தது. அரபு இனத்தவரை பற்றிய ஐரோப்பிய மதிப்பீடு மற்றும் அரபுகளின் தினசரி வாழ்க்கை முறையியல் ஆகியவற்றை பற்றியதாக அது இருந்தது. அதற்கான எதிர்வினைகளும் அந்த கட்டத்தில் வெளிவந்தன. அப்போதிருந்த தகவல் தொடர்பின் இடைவெளி காரணமாக என்னால் அதை எதிர்கொள்ள முடியாமல் போனது. இதனை தொடர்ந்த காலத்தில் பிரான்சை சேர்ந்த நண்பர் ஒருவர் அறிமுகமானார். தேர்ந்த தத்துவவாசிப்பும், ஆழமான தேடலும் அனுபவமும் கொண்டவர். அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விஷயங்கள் குறித்து விரிவான உரையாடல் நடத்தினேன். அதில் ஒன்று “பாரசீக வளைகுடாவுக்கு அப்பால்” என்ற தலைப்பில் புதிய கோடங்கி இதழில் தொடராக வெளிவந்தது. மத்திய கிழக்கு, மேற்குலகம், பின் நவீனத்துவம் மற்றும் இலக்கிய வெளி குறித்ததாக அது அமைந்தது. இவருடனான உரையாடல்களுக்கு பின் என் புலம்பெயர் எழுத்தின் திசை உறுதியானதாக, துண்டிக்கப்படமுடியாததாக மாறியது. மத்தியகிழக்கு பற்றிய இம்மாதிரியான எழுத்தின் தேவை தமிழ்ச்சூழலில் நிறையவே இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். மலையாளத்தில் ஏற்கனவே இது நடந்து முடிந்திருக்கிறது. அங்கு ஏன் நடந்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். இந்த கவனப்படலோடு தேர்ந்தெடுத்த வாசிப்பும், சிந்தனையும் என்னை இன்னொரு திசைக்கு நகர்த்தியது. என் எழுத்தியல் பயணத்தில் பெரும் திருப்பமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள அரபு பல்கலைகபல்கலைகழக ஆங்கில பேராசிரியரான முனீர் ஹசன் மஹ்மூத் என்பவரின் தொடர்பு கிடைத்தது. முனீர் ஹசன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர். சிரியாவை சேர்ந்தவர். தேர்ந்த படிப்பாளி. நிறைய மொழிபெயர்ப்பு வேலைகளை செய்து வருபவர். சர்வதேச அளவில் அறிவுஜீவிகளுடன் தொடர்பு கொண்டவர். அனங்கக சிந்தனையாளர். மத்திய கிழக்கு குறித்து அவரிடம் விரிவான படிப்பு இருக்கிறது. என் தேவைகளை நிறைவேற்றுவதன் தொடக்க புள்ளியாக இவர் மாறினார். இவர் வழியாக உலகளாவிய மார்க்சிய சிந்தனையாளர்களான தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. என் வாசிப்பிலும், சிந்தனை வெளியிலும், எழுத்திலும் இந்நிகழ்வு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அறிவு ஜீவிகளை புத்தகத்திலிருந்து நேரடியாக ஆகர்சிக்கும் தன்மை உணர்வு பூர்வமான அனுபவ வெளியை ஏற்படுத்தக்கூடியது. வளைகுடா வாழ்க்கை என் ஆங்கில அறிவை வலுவாக்கியதால் இது சாத்தியமானது. இவர்களை நேர்காணல் செய்தேன். விரிவானதொரு உரையாடலாக அது இருந்தது. இவை புதிய காற்று மற்றும் உயிர்மை இதழ்களில் வெளிவந்தன. தமிழ் உலகில் அது புதிய அனுபவமாகவும் உரையாடலை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. இன்னும் பல அறிவுஜீவிகளோடு உரையாடும் சந்தர்ப்பத்தை அது வழங்கியது. சமீபத்தில் அரபு பல்கலையில் வைத்து நோம் சாம்ஸ்கியுடன் உரையாடியது மிகப்பெரும் அறிவார்ந்த அனுபவத்தை கொடுத்தது. முனீர் ஹசன் மஹ்மூதிடமிருந்து மற்றொன்று மார்க்சிய, பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளின் கருத்தியல் பிறழ்வு பற்றியது. ஐரோப்பிய மற்றும் பிற காலனிய செயல்பாடுகளில் மார்க்சிய நிலைபாட்டை எடுத்தவர்கள் இஸ்ரேல் விவகாரத்தில் மாறுபட்டு நின்றார்கள். எரிக்ஹாப்ஸ்வம், ஐஸையா பெர்லின், சிலொவோய் ஸிசக், சார்த்தர் போன்றோர் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். பூக்கோவும் இதில் மாறுபட்டு நின்றார் என்பதை தெரிந்து கொண்ட போது முன்னர் என் ஆதர்சனமாக இருந்த அவர் மீதான என் நம்பிக்கை குறைய தொடங்கியது. இது தொடர்பான நிறைய தரவுகளை தேடி படிக்க ஆரம்பித்தேன். விமர்சன கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்ற முறையில் பாலஸ்தீன் விவகாரம் என்னை வெகுவாக கலைத்துப் போட்டது. அந்த சூழலில் இருந்து நேரடியாக அந்த மக்களை காணவும், அவர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் விடுதலை போராட்டம் அடிப்படைவாத குழுக்களின் கையில் வந்தது மிகவும் துரதிஷ்டமான, ஏமாற்றமான நிகழ்வு. இது குறித்த பதிவுகள் இந்நூலின் கட்டுரைகளில் இருக்கின்றன. எட்வர்ட் செய்த் இதை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் ஒன்றை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதாவது சார்த்தரும் அரபுலகமும் பற்றி எட்வர்ட் செய்த் எழுதியது. சார்த்தருடனான தன் அனுபவங்களை அதில் எட்வர்ட் செய்த் பதிவு செய்திருக்கிறார்.தமிழில் இதை வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை மொழிபெயர்த்து வெளியிட்டேன். மேலும் ஓரியண்டலிச அறிவுஜீவிகளை அறிமுகப்படுத்தும் இத்தொகுப்பில் மொத்தம் பத்து அறிவு ஜீவிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. எட்வர்ட் செய்த், தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர், மாக்சிம் ரோடின்சன், இஹாப் ஹசன், ஹிசாம் சரபி, இக்பால் அஹ்மத், மன்சூர் ஹிக்மத், தாஹா உசேன் ஆகியோரை பற்றிய விரிவான அறிமுகமும், அவர்களின் கோட்பாடுகள் குறித்த பார்வையும், நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. இதில் தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோருடனான நேர்காணல்கள் நான் நேரடியாக நடத்தியவை. இத்தொகுப்பிற்கு அடிக்கோடு வரைபவை. குறிப்பாக தாரிக் அலியுடன் நான் நடத்திய நேர்காணல் இத்தொகுப்பை அதிகமும் குவியப்படுத்துகிறது. நுட்பமான கேள்விகள் , ஆழமும், விரிவும் இயைந்த அதற்கான பதில்கள் ஆகியவற்றை இந்நேர்காணல் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் சில அறிவுஜீவிகளின் முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதில் தாரிக் அலி இஸ்லாத்தின் தோற்றம் குறித்து எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்று இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. இது இத்தொகுப்பிற்கு இன்னும் வலுவூட்டும் முயற்சியாகும். கலாசாரம் குறிப்பிட்ட இடைவெளியில் அரசியல், சமூகத்தோடு இணைந்திருக்கிறது என்பார் எட்வர்ட் செய்த். இதனை உள்வாங்கி முன்னதின் அறிதல் முறையோடு ஓரியண்டலிச அறிவுஜீவிகளின் அறிமுகம் குறித்த இத்தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன்.
என் ஆரம்ப கால இலக்கிய மற்றும் தத்துவ தேடல் இடதுசாரி இலக்கிய அமைப்பு ஒன்றின் மூலமாக தான் இருந்தது. இளமை காலத்திற்குரிய அசட்டுத்தனம் மற்றும் இலட்சிய கனவுகளை பெரும் பாரமாக வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் அதில் கழித்தேன். அந்த காலங்கள் எனக்கு போதாமையும், வெறுமையும் கொண்டதாக அதே நேரத்தில் மின்னலில் இருந்து கிழிக்கப்படும் கோடாகவும் இருந்தன. அதன் தொடக்க கட்டங்களில் தான் நண்பர்கள் ஹாமீம் முஸ்தபா மற்றும் ஹெச்.ஜி. ரசூல் ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழில் மார்க்சிய பின்னணியோடு எழுத வந்தவர்களில் பெரும்பாலானோரின் தொடக்க காலம் என்பது இயக்கங்கள் வழி தான் இருந்தது. அவை அனுபவங்களின் கூட்டிணைவாக இருக்கும். செடியொன்றின் உதிர்ந்த கருகாத இலையாக பின்னர் அதிலிருந்து வெளியேறி சுதந்திரமாக இயங்க ஆரம்பித்தேன். ஒரு வேளை நான் புறப்பட்ட புள்ளியும் அதுவாக இருக்கலாம். இயக்க ரீதியான செயல்பாட்டு கால கட்டத்தில் தமிழவன், பேராசிரியர் முத்துமோகன் ஆகியோர் அறிமுகமாயினர். இவர்களில் தமிழவன் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். அவர் என் கிராமத்துக்காரர் என்பதை பின்னர் தான் அறிந்து கொண்டேன். முத்துமோகனுடன் சில தருணங்களில் தத்துவார்த்த உரையாடல் நடத்தியதுண்டு. என் ஆரம்ப கால கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. அதன் வழியாக அ.முத்துலிங்கம், யமுனா ராஜேந்திரன், பாவண்ணன், சுகுமாரன், ஜமாலன், நாகர்ஜுனன் போன்றோர் அறிமுகமாயினர். இவர்களுடனான என் நட்பு தொடர்ந்த வேளையில் வளைகுடா நகர்வின் சிறிதுகால தொய்வு என்னை மேற்கொண்டு உறவை தொடர முடியாதவனாக மாற்றியது. இணைய எழுத்துகளுக்குள்ள தொடர்ச்சியின்மையும் இதற்கு ஒரு காரணம்.அவர்கள் எல்லோருமே இத்தொகுப்பு வெளிவரும் வேளையில் தவிர்க்க முடியாதவர்கள். குறிப்பாக பாவண்ணன், சுகுமாரன், யமுனா ராஜேந்திரன், ஜமாலன் ஆகியோருக்கு நான் மிக்க நன்றிக்குரியவன். காரணம் என் புலம்பெயர் வாழ்க்கையில் நான் எழுதிய விஷயங்களை அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்டவர்கள். ஆரம்ப காலம் முதல் என்னுடன் உரையாடி வரும் நண்பர் என்.டி ராஜ்குமார் முக்கியமானவர். எழுதிய விஷயங்கள் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்று என்னை வேகப்படுத்தியவர் அவர். மேலும் நண்பர்கள் கியூபர்ட் சதீஷ்(பஹ்ரைன்) இலங்கை கவிஞர் ரிஷான் ஷெரிப் (கத்தார்)என் செயல்பாட்டை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் என் பால்யகால நண்பர்கள் பிரேம் தாஸ், பிரேம்குமார் (நியூயார்க்), கவிஞர் ஸ்டாலின் பெலிக்ஸ் (டி.சி.எஸ் சென்னை)எபனேசர் (சி.டி.எஸ் குழுமம் சென்னை)சுபாஷ் (டெல்லி பல்கலைகழகம்) ஆகியோர் இந்த ஆக்கத்தோடு அதிகமும் தொடர்புடையவர்கள். இவர்களில் எபனேசர் மற்றும் ஸ்டாலின் பெலிக்ஸ் என் புத்தக புரவலர்கள். மிகுந்த நன்றி வெளிப்பாட்டோடு அவர்களை இங்கு குறிப்பிடுகிறேன். இதிலுள்ள அறிவுஜீவிகள் குறித்த சில அறிமுக கட்டுரைகளை தன் உயிரோசை இணையதளம் மற்றும் உயிர்மை இதழில் வெளியிட்ட அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், நேர்காணல் மற்றும் மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட புதியகாற்று ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா, உன்னதம் கௌதமசித்தார்த்தன், கனவு இதழின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன், என் வலைப்பதிவை பின்தொடர்பவர்கள், அதன் உலகளாவிய வாசகர்கள் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள். இணையதளங்களான திண்ணை, கீற்று, இனியொரு, புகலி ஆகியவையும் மிகுந்த நன்றிக்குரியவை. செடியொன்றின் துளிர்விடும் இலையாக, அதன் அசைவூட்டமாக என்னை உற்சாகப்படுத்தி வரும் என் பிரியமான வாழ்க்கை தோழி ஜாஸ்மின் மிக்க நன்றிக்குரியவர். இத்தொகுப்பை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆக்கத்தை தொகுப்பாக கொண்டு வரும் நண்பர் அடையாளம் சாதிக் மிகுந்த நன்றிக்குரியவர். என்னை தொடர்ந்து ஆதரித்து வருபவர். இதிலுள்ள அறிவுஜீவிகளின் கோட்பாடுகள் குறித்த பல கட்டுரைகள் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. ஆறு ஆண்டுகள் என் புலம் பெயர் வாழ்க்கையின் நெருக்கடியான காலகட்டத்தின் நகர்வில் பல நாட்களின், பல மணி நேரங்களின் உழைப்பு இது. இதனை தொடர்வதற்கான ஊக்கமும், நம்பிக்கையும் வாசகன் இடமிருந்து தான் தொடக்கம் பெறும். அதனை எதிர்பார்த்தே நான் இயங்கி வருகிறேன். இந்த இயக்கம் தொடர்ந்து செல்லும் நிலையில் என் விமர்சன கண்ணோட்ட பரப்பளவு இதிலிருந்து விரிவடையும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன்…..
(அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” என்ற என் நூலுக்கு நான் எழுதிய முன்னுரை)
கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்
வெளியீடு: அடையாளம் பதிப்பகம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சிமாவட்டம்
விலை: ரூ 170
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
- “மனிதம் வளர்ப்போம்!“
- என்று தணியும்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- Cloud Computing – Part 4
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- ஒரு கவிதானுபவம்
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- என் அன்பிற்குரிய!
- எதிரும் நானும்…
- மீளல்
- கூழாங்கல்…
- பிடித்த தருணங்கள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- தனித்துப் போன மழை நாள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- ஐந்திணை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- C-5 – லிப்ட்
- இந்தியன் வேல்யூஸ்
- பார்வையும் களவுமாக
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- தொட்டிச் செடிகள்
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- கனவில் வந்த கடவுள்
- என்ன உரு நீ கொள்வாய்?
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- வலி..!
- எது நிஜம், எது நிழல்?
- ப மதியழகன் கவிதைகள்