முனைவர் சி.சேதுராமன்
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பெண்கள் உரிமையுடன் வாழ்ந்த பொற்காலம் என்று போற்றப்படும் சங்க காலத்தில் பல்வேறு பெண்ணுரிமை மீறல்கள் குறித்த அவலக் குரல்களும் எழுந்துள்ளன. கணவனை இழந்த பெண்கள் சமுதாயத்தில் இழிவாக நடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மற்ற பெண்களைப் போன்று உண்டு, உடுத்தி, விரும்பியபடி உறங்கி வாழ இயலவில்லை. அவர்களுக்கென்று தனி உணவு, தனியான வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை சமுதாயம் உருவாக்கி கணவனை இழந்த பெண்களின் உரிமைகளைப் பறித்தது. இதனைப் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறப் பதிவு செய்துள்ளன. இலக்கியம் என்பது காலக் கண்ணாடி என்பதற்கேற்ப சங்க காலத்தில் நிலவி வந்த சமுதாயத்தின் உயர்வுகளை மட்டுமன்றி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் புறநானூறு பிரதிபலிக்கின்றது.
அணிகலன்களைக் களைதல்
சங்க இலக்கியங்கள் கணவனை இழந்த பெண்களைக் ‘கழிகல மகளிர்’ என்று கூறுகிறது. கணவனை இழந்த மகளிர; அணிகலன்களை அணிதல் கூடாது. கணவன் இறந்த பின்னர் அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாது. அழகுதரும் அணிகலன்களை கழித்து (அகற்றி) விடுதல் வேண்டும். கைகளில் உள்ள வளையல்களை கழித்து விடுதல் வேண்டும். அவ்வாறு பெண்கள் அணிகளைக் கழித்து விடுவதால் அவர்களை ‘கழிகல மகளிர்’ ‘தொடி (வளை)கழி மகளிர்’ என்று அழைத்தனர். மேலும் கணவனை இழந்து ஆளின்றி வேறு துணையின்றி இருப்பதால் கைம்பெண்களை, ‘ஆளில் பெண்டிர்’ என்றும் வழங்கினர்.
ஆனால் ஆண்கள் தங்களது மனைவியை இழந்தபோது அவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படவில்லை. மேலும் அவர்களை ‘ஆளில் பெண்டிர் என்பதைப் போன்று ஆளில் ஆண்’ என்றெல்லாம் குறிப்பிடவில்லை. அனைத்து நிலைகளிலும் பெண்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. அரசியாக இருப்பினும், சராசரிப் பெண்ணாக இருப்பினும் அனைத்து நிலையிலும் இருந்த பெண்களுக்கு இந்த அவல நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. மனைவியை இழந்தபோது பெண்களுக்கு நிகழ்ந்ததைப் போன்ற சடங்குகள் ஆண்களுக்கு இல்லை என்பது நோக்கத்தக்கது.
கணவனை இழந்த பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள்
கணவனை இழந்த பெண்கள் நீண்ட தலைமுடியுடன் இருத்தல் கூடாது. அவர;கள் தங்களது தலையினை மழித்துக் கொள்ளவேண்டும். பாயோ, பிறவோ விரித்துத் தூங்கக் கூடாது. வெற்றுத் தரையில் துயில வேண்டும். அவர்கள் உப்பில்லாத வெறும்கீரை உணவை உண்டு வாழ வேண்டும் என்பனபோன்ற நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் இத்தகைய சமுதாயக் கட்டளைகளுக்குஅடங்கித்தான் வாழவேண்டும். அரசியாக இருந்தாலும், சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் இத்தகைய நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். இவ்வாற அந்நியதிகளுக்குக் கட்டுப்படவில்லை எனில் இறத்தல் வேண்டும்.
பூதப்பாண்டியன் இறந்தான். அவனது மனைவி பெருங்கோப்பெண்டு இறக்கத் துணிந்தாள். காரணம் என்ன? அவள் கணவன் இறந்தபின் அரசியாக அந்நாட்டு அரியணையில் இருந்து ஆட்சி செலுத்தியிருக்கலாம் அன்றோ? ஆனால் அவள் நான் எரியில் விழுந்து இறக்க வேண்டும். அதனால் தீயினை மூட்டுங்கள் என்று சான்றோர்களைப் பார்த்துக் கேட்கிறாள். சான்றோர்கள் தடுக்கின்றனர். அவள் அதனை ஏற்றக் கொள்ளாது இறக்கத் துணிகிறாள். அதற்கு அவள் கூறிய காரணம் என்ன? அதுதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. பூதப்பாண்டியன் மனைவி,
‘‘அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல்விளர்; நறுநெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கைபிழி பண்டம்
வெள்எட் சாந்தொடு புளி பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆக
பரற்பெய் பள்ளிப், பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ!’’ (புறம்., 246)
என்று தீப்பாய்வதற்காகப் பாடுகிறாள்.
அரிசியினைச் சமைத்து நெய்யிடாமல் அடுப்பங்கரையில் கிழடந்த பழைய சோற்றைப் பிழிந்து, வெள்ளை எள் துவையலோடு, புளிஇட்டுச் சமைத்த வேளைக் கீரை கலந்து கணவனை இழந்த பெண்கள் உண்பர். அவர்கள் படுப்பதற்குப் பாயின்றி பரல்கற்கள் மீதுதான் தூங்க வேண்டும். இந்தக் கொடுமை வேண்டாம் எனக் கூறி இறப்பதற்குத் துணிகிறாள். மேற்கூறியவையே பூதப்பாண்டியன் மனைவி இறப்பதற்குரிய காரணங்களாக அமைகின்றன.
தலையை மொட்டையடித்தல், உணவு மறுத்தல்
பெண்களுக்கு அழகு தருவது நீண்ட கூந்தல். இளம் பெண்கள் அழகுடன் வாழ்வதையே விரும்புவர். மேலும் நன்கு சுவையான உணவை உண்ணவும் விரும்புவர். வாழ்க்கையில் இதனை விரும்பாதார் யாருமிலர். ஆனால் கணவனை இழந்த பெண்களுக்கு நல்ல உணவு உண்பதற்கோ, தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கோ உரிய உரிமைகள் மறுக்கப்பட்டது. தலைவன் ஒருவன் போரில் விழுப்புண்பட்டு இறக்கும் நிலையில் உள்ளான். இதனைப் பார்த்த தலைவி கணவனை இழந்த பெண்களின் நிலையை நினைத்துப் பார்க்கிறாள். அவளது உள்ளத்தில்,
‘‘யானும்
மண்ணுறு மழித்தலைத் தெண்நீர்வார
தொன்று தாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே’’ (புறம்., 280)
என்ற கழிகல மகளிரின் துன்பமான, தலையை மொட்டையடித்துக் கொள்ளல், ஆம்பல் மலர்களிலிருந்து கிடைக்கும் அரிசியை சமைத்து உண்ணல் ஆகிய காட்சிகள் எழுகின்றது. தனது வாழ்வாதர உரிமையை இழந்து வாழ்வதற்கு அவளது மனம் இடம் தரவில்லை. அதனால் அவள் இறக்கத் துணிகிறாள்.
இல்லத் தலைவியின் நிலை
வீட்டின் தலைவன் இறந்துவிட்டான். அவனின் மனைவி பொலிவிழக்கப் போகிறாள். அந்த வீடும் பொலிவிழக்கப் போகின்றது. இதனை,
‘‘கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
அல்லிஉணவின் மனைவியோடு இனியே
புல்லென்றனையால் வளம்கெழு திருநகர்’’ (புறம்., 250)
என்ற பாடல் புலப்படுத்தப் போகினற்னது. கூந்தல் களையப்பட்ட, வளையல்கள் நீக்கப்பட்ட அல்லியரிசி உணவை உண்ணப் போகும் இல்லத்தரசியைக் கொண்டு அவ்வில்லம் அழகிழக்கப் போகிறது என்பதை இப்பாடல் தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.
அழகினை இழத்தல்
கணவனை இழந்த மகளிர் நிலையை அழகற்ற வீட்டிற்கு ஒப்பிட்டுப்பாடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட உரிமை மீறலைத் தெளிவுறுத்துகிறார; ஒரு புலவர். இத்தகைய உரிமை மீறல்,
‘‘அந்தோ எந்தை அடையாப் பேர்இல்
……….. ……………. ……………
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய
வென்வேல் விடலை இமன்மையின் புலம்பி
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போலப்
புல்லென்றனையால் பல்லணி இழந்தே! ’’ (புறம்., 261)
எனப் புறநானூறில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இல்லத் தலைவனை இழந்தால் இல்லத் தலைவிதான் அழகிழப்பாள். ஆனால் அவனது வீடே பொலிவிழக்கப் போகிறது என்று வீட்டின் மீது இரக்கப்பட்டுப் பாடுவது போல் தலைவன் இல்லாமையால் புலம்பி வாடும் கழிகல மகளிரைப் போல் ஆகிவிட்டாயே என்று கணவனை இழந்த மகளிரின் பரிதாப நிலையைப் பாடுகிறார் புலவர்.
தங்களை ஆதரித்த வெளிமான் மறைந்தான். அவன் மறைவால் ஆதரிப்பார் யாருமின்றி வருந்திய பெருஞ்சித்திரனார்,
‘‘தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி
பாடுநர் கடும்பும் பையென்றனவே’’ (புறம்., 238)
என புலவர்கள், அவர்களது சுற்றத்தினரின் அவல நிலையை கைவளை நீக்கி அழகிழந்த மகளிருக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.
சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்ந்தவிட்டு அவ்வுரிமைகள் அவளிடமிருந்து பறிக்கப்படும்போது அல்லது உரிமைகள் மறுக்கப்படும்போது பெண்ணானவள் கையற்ற நிலையில் (ஏதும் செய்ய இயலாத நிலையில்) இறக்கத் துணிகிறாள். இதற்குப் புறநானூற்றின் 246, 280 ஆகிய பாடல்கள் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன.
சங்க காலத்தில் பெண்களுக்கு, வாழ்வுரிமை, மறுமண உரிமை, சுதந்திரமாகச் செயல்படும் உரிமை ஆகிய உரிமைகள் பறிக்கப்பட்டதையும், அக்காலத்தில் நடந்த பெண்ணுரிமை மீறலையும் பிரதிபலிப்பனவாக மேற்குறித்த பாடல்கள் அமைந்துள்ளன எனலாம்.
திருமண உரிமை மீறல்
ஒத்த வயதுடைய ஆண், பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்பது காலங்காலமாக இருந்துவரும் நியதியாகும். திருமணம் செய்துகொள்கின்ற உரிமை ஆண், பெண் இருவருக்கும் உரியது. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஆண், பெண் இருவரும் மணந்து கொள்ளச் சம்மதித்த பின்னரே திருமணம் நிகழ வேண்டும். சங்க காலத்தில் காதல் வாழ்வு சிறந்திருந்தது; காதல் மணம் மிகுந்திருந்தது. ஆனாலும் பெண்ணின் சம்மதத்தைப் பெறாது கடிமணம் புரியும் நிகழ்வும் சங்க காலத்தில் நிகழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.
புறநானூற்றில் மகட்பாற்காஞ்சியில் மகள் மறுத்தல் துறை இடம்பெற்றுள்ளது. பெண்கேட்டு அரசன் தூதுவிடுகிறான். ஆழகான அப்பெண்ணின் தந்தையோ மகளை அரசனுக்குக் கொடுக்க மறுக்கிறார். இதனால் அரசனுக்கும் பெண்ணின் தந்தைகும் போர் முற்றுகிறது. இதுவே மகள் மறுத்தல் துறையாகும்.
இதில் பெண்ணின் தந்தையோ, பெண்ணை விரும்பும் அரசனோ பெண்ணின் சம்மதத்தைக் கேட்டறியவில்லை. அவளின் சம்மதத்தைக் கேளாமலேயே அவளின் பொருட்டுப் போருக்குத் தயாராகின்றனர். மகட்பாற்காஞ்சித் துறையில் பெரும்பான்மையும் பெண்ணிற்காக எழுந்த போர்களைப் பற்றிய செய்தியே காணப்படுகிறது.
வேந்தன் முதுகுடியினரிடம் பெண் கேட்கின்றான், தர மறுக்கின்றனர். எனவே, வேந்தன் பெரும்படையோடு வந்துள்ளான். அதனால் இருவருக்கும் போர் நிகழ இருப்பதைக் கண்ட பரணர்,
‘‘முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையொடு
பகைவளர்த் திருந்த ளிப்பண்பில் தாயே’’
அப்பெண்ணின் தாயைச் சீண்டிக் கூறுகின்றார்.
இதன்மூலம் ஆசிரியர், தாயாவது இப்போர் வாராது தடுத்திருக்கலாமே? அதுவல்லாமல் போரிட்டு அழிதலை விரும்பினளாகிய இவள் ஒரு பண்பில்லாதவளே என்கிறார். மேலும், இவளை இவள்தாய் பெறாதிருக்கக்கூடாதா? பகைவர் புகுந்து பாழ் படுத்தும் நிலை இவளாலன்றோ இவ்வூருக்கு ஏற்பட்டது என அவலத்தின் நிலைநின்று கூறுகின்றார் (புறம் – 336). இவள் அழகு இவ்வூர் ஆடவர் பலரையும் அழித்தலால், நாட்டைக் காப்பவரே எவரும் இல்லாது போகப், பேணுவாரற்று வெறும் பாழிடமாகவே இதனை ஆக்கிவிடும் போலும்! என ‘இவள் நலன் பெரும் பாழ்’ செய்வதாகக் கூறுகின்றார் அண்டர் மகன் குறுவழுதி (புறம்- 346) இவள் தந்தை நெடிய அல்ல பணிந்த மொழியாலனாக இருக்க, இவள் ‘மரம்படு சிறுதீப்போல’ அணங்காயினள் தான்பிறந்த ஊருக்கே என்கிறார் மதுரை மருதனிளநாகனார் (புறம் – 349).
ஓரெயின் மன்னனது ஒரு மடமகளை மணம் பேசி வந்த பலரும் இசைவு பெறாது வறிதே திரும்பியது கண்டு அவளை மணப்பவர் யாவர்தானோ என இளமையது அருமை எண்ணி வருந்துவார் போலும்! (புறம் – 338) மகள் மறுத்துப் போர் ஒன்றையே செய்யும் இவள் தமையன்மார் இவளுக்கு ஏற்றவன்,
‘‘யாராகுவர்கொல் தாமே – நேரிழை
உருத்த பல்சுணங்குஅணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்குவோரே?’’
என்கிறார் கபிலர். (புறம் – 337) இப்படிப் போரே செய்து கொண்டிருத்தலால் ‘கதிர்த்து ஒளிதிகழும் நுண்பல் சுணங்கின், மாக்கண் மலர்ந்த முலையாளாகிய இவளை மணப்பவர் யாவர் தானோ? என இரங்கிக் கூறுகின்றார் பரணர் (புறம் – 352)
இவ்வாறு பெண்ணின் அழகையும், அவளது தாயையும் குறைகூறும் பாடல்களும் புறநானூற்றில் பெண்ணுரிமையை மீறும் பாடல்களாக அமைந்துள்ளன. மேலும் பெண்கள் சுதந்திரமாக வாழும் உரிமையும் அக்காலத்தில் மீறப்பட்டுள்ளமையை இத்தகைய கூற்றுக்கள் புலப்படுத்துகின்றன.
ஒரு பெண்ணின் மன விருப்பமின்றி அவளை மணந்து கொள்ளக் கருதும் மன்னன் அல்லது தலைவனுடைய செயல் இழிவானது. அத்தகைய செயலை யாரும் குறை கூறவில்லை. மாறாக பெண் ஏன் அழகாகப் பிறந்தாள். அவள் இவ்வூரில் பிறந்ததால் அல்லவோ இவ்வூருக்குப் போரால் அழிவு நேரிடுகிறது என்று பெண்னைக் குறைகூறும் ஆணாதிக்க மேலாண்மையும், பெண்ணை அடிமைப்படுத்தக் கருதும் ஆணாதிக்க மனநிலையும் அங்கு எழுகிறது.
காதல் மணம் மலிந்திருந்த அக்காலத்தில் பெண்கள் சுதந்திரமாக இருந்தனர்; அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பெற்றன என்றெல்லாம் கூறப்படுவது சற்றேனும் பொருந்தாத செயலையே புறநானூற்று மகட்பாற்காஞ்சிப் பாடல்களை நோக்கும்போது நாம் காண முடிகிறது.
பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டது என்பது உண்மையான ஒன்றல்ல. அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதனையே மேற்குறித்த பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன எனலாம். புறநானூறு அக்காலத்தில் சமுதாயத்தில் நிலவிய பெண்ணுரிமை மீறல்களை பதிவு செய்துள்ள வரலாற்றுக் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது என்பது புதுமையான ஒன்றாகும்.
- மரணக்குறிப்பு
- நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 7)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15
- தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்
- இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- அம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்
- தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை
- அகழி
- கவிதை வரையறுக்கிற மனம்
- கவியும் நிழல்
- மிகவும் அழகானவள் ….!
- தீபாவளி 2010
- பாடம்
- நிழல்
- மடங்கி நீளும் சொற்ப நிழல்..
- பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…
- நண்பேன் . . . ?!?
- மீராவாணி கவிதைகள்
- போந்தாக்குழி
- பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’
- இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:
- சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…
- புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்
- நினைவுகளின் சுவட்டில் – 56
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.
- சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்
- சத்யானந்தன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்
- திண்ணைகள் வைத்த வீடு..
- இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!
- அன்பானது குடும்பம்
- நிழல் வேண்டும் காலம்
- முள்பாதை 53
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2