புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

தமிழ்மணவாளன்


-1-

எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, ‘அகல்யை ‘, கடந்த 19-3-06 அன்று சென்னையில் நிகழ்த்தப்பட்டது. ‘ நாடகவெளி ‘ வாயிலாக அறியப்படும் ‘ வெளி ‘ ரெங்கராஜன் இயக்கத்தில் அரங்கேறியது.

ஏழுமணிக்கு தொடங்கவிருந்த நாடகத்திற்கு, ஆறரை மணிக்கு அரங்கினுள் நுழைய, சில இருக்கைகளே காலியாக இருந்தன.சிறிது நேரத்திற்கெல்லாம் நிரம்பி, முன் வரிசையில் அமர்ந்த பார்வையாளர்கள் நாடகம் நிகழவிருந்த இடந்தின் பகுதியிலும் பரவினார்கள். மேலும் பலர் நின்று கொண்டிருந்தார்கள்.பார்வையாளர்களின் வருகையும், ஆர்வமும் முதல் வெற்றியாக கொள்ளலாம். கெளதமரின் மனைவி அகல்யை. அவள்மீது இந்திரன் கொண்ட காமம், சூழலின் துணையோடு நிை றவேறி விடுகிறது.அறிந்ததும், கெளதமர் இட்ட சாபத்தின் விளைவாய் அகல்யை கல்லாய்ச் சமைகிறாள். பின்னர், ஸ்ரீராமன் பாதம் பட்டு உயிர்த்தெழுவது,புராணம் சொல்லும் கதையின் எளிய சுருக்கம். இந்தக்கதையை தட்டையான உரையாடல்களால் நிகழ்த்திப் போகாது வேறொரு தளத்துக்கு விரிவடையச் செய்திருப்பதும், அதனை காட்சிகளினூடாக கட்டமைத்திருப்பதும் முக்கியமானது. இதுகாறும் அறிந்து வைத்திருக்கும் கதையை, அறிந்தவாரின்றி , அதன் மைய இழையின் இணைப்பைப் ப்ற்றிக் கொண்டு இருபுறமும் கிளைகளாய் விரியும் கேள்விகளும், கேள்விகளுக்கான பதில்களூமாய், காரியத்தின் அழுத்தத்தில் சோர்ந்து போகாத திடத்தோடும் காரணத்தை வெளிப்படுத்தும் முனைப்போடும் நாடகம் நிகழ்கிறது. பெண்ணியம் குறித்தான பல்வேறு ஆரோக்கியமான கருத்து முன்வைப்புகளூம் , பல விதங்களில் அவற்றிற்கு கிட்டும் ஆதரவும் மிக்க இன்றைய சூழல் போலல்லாத காலத்தின் பிரதி என்று நினைக்கிற போது மிகுந்த வியப்பாகவும், அதற்காக கு.ப.ராவை வெகுவாக பாராட்டவும் தோன்றுகிறது.

-2-

அரங்கில் இருள் சூழ்கிறது. கண்களில் எளிதில் புலப்படாத,இருட்டு வெளிச்சத்தில் அகல்யை ஆடத்தொடங்குகிறாள்.

ஒலி மெல்ல மெல்ல பரவுகிறது. நாடகத்தின் சூழ் உருவாக்கத்திற்கு தொடக்கக் காட்சி பெரிதும் த்ணை புரிகிறது எனலாம். பங்கு பெற்ற நடிக, நடிகையர் பலரும் தத்தம் பங்களிப்பை சரியாக செய்தனர் எனினும் அகல்யையாக நடித்த கவிஞர் தமிழச்சி , கெளதமராக நடித்த ஜெரா, வசந்தன் பாத்திரமேற்ற கார்த்திகேயன் ஆகிய மூவரைப் பற்றி பிரத்யேகமாக குறிப்பிட வேண்டும்.

பூத்த்க் குலுங்கும் இளமனசின் வாசமென வியாபித்து, இயற்கையின் எழில் நுகரும் ஆர்வத்தோடு, மலரிதழ் விரல் வருட அலைபாயும் அபிநயங்களுக்கும், பூர்ணசந்திரன் பால் ஒளி சிந்த, வசந்தன் மேனி தழுவ எழும்கிளர்ச்சியின் கணத்திலதே இயற்கை எழிலை நுகரும் ஆர்வத்தில் இணையும் தகிப்புகளுக்கும் உள்ள மெல்லிய வேறுபாட்டை நுட்பமாக பதிவு செய்ததை, பலவற்றுள் ஓர் உதாரணமாய்க் கொண்டு அகல்யையாக நடித்த தமிழ்ச்சியை பாராட்டுவது பொருத்தமாகும். நடனம் , முகபாவம், உச்சரிப்பு, பயிற்சியில் காட்டியிருக்கும் சிரத்தை, அரங்கில் அவரை முழுமைப் படுத்துகிறது.

கெளதமராய் , தவத்தால் கொள்ளும் செருக்கிலும் , இயல்பான இல்லறத்தில் கண்டடைய வேண்டிய இன்பத்தை தவறவிடும் மேதமையிலும் அல்லது பேதமையிலும் ஜெராவின் உடல் மொழி குறிப்பிடத்தக்கது. (உச்சரிப்பில் நல்ல முன்னேற்றம்) .வசந்தன் பாத்திரத்தில் நடித்த கார்த்திகேயன், ஸ்தூல வடிவமில்லாத தன்மையுடன் பெளதிக உருவமற்ற காற்றின் பெளதிக அடையாளமாய் தொடர் நகர்தலாலும் இடைவெளியில்லாத இயக்கத்தாலும் , அரங்கில் இருந்த போதெல்லாம் தென்றலின் மென்சலனமாய் கை அலைவுகளாலும் , உடல் அசைவுகலாலும் நிகழ்த்திய முறைமைகள் பார்வையாளர்களின் கவனத்தை வசப்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருந்தன.

ஆசையொன்றே செயல் முனைப்பை முதன்மைப் படுத்தக் கூடியது. ஆசை நிறைவேறும் போது இன்பம் பிறக்கிறது.அதே ஆசி அளவு மீறிய நிலையிலோ , அல்லது ந்யாயமற்ற விதத்திலோ ஏற்படுமாயின் இன்னல் நேர்கிறது: நிறைவேறும் பசத்திலும் ஊறு விளைகிறது. இந்திரனின் அகல்யை மீதான காமம் பித்தாகி இயல்பு நிலைக்குக் கீழே பாதாளத்தில் தள்ளி விடக்கூடிய தவிப்பு வெறியின் (சந்திரன், வசந்தன் ஆகியோரின் உதவி நாடும் காட்சியில்) தருணச் சித்தரிப்பு போதுமானதாக இல்லை யென்றே சொல்ல வேண்டும்.

மேலும் சில குறிப்பிடத் தக்க விஷயங்கள்;

*மன நலம் குன்றிய BANYAN அமைப்பைச் சேர்ந்த சிலரை பங்கேற்கச் செய்திருந்தது.

*பார்வையற்ற ஒருவரை குறை தெரியாமல் நடிக்கவைத்தது

* பெண்ணுரிமைக்குப் பெரிதும் குரல் கொடுத்த பாரதியாரின் பாடல்களை தக்க இடங்களில்

பயன்படுத்தியது

* கட்டுப்பாடு சிதறாமல் கட்சிக்குகந்த பின்னிசை

இறுதிக் காட்சியில், கெளதமர் தவறுணர்ந்து அகல்யயைத் தேடி அலைகையில் கண்டுணரவியலாது

தவிக்கிறார். ஆனால் ‘இதோ அகல்யை. உன் கண்களூக்குப் புலப்படவில்லயா ‘ எனக் கேட்கிறார் ஸ்ரீராமர்.

ஆனால் ஸ்ரீராமர் வேடமேற்றவர் பார்வையிழந்தவர் என்பது தற்செயலானது தானெனினும்,

பிரதிக்கு வெளியே நிகழ்வெளியில் ஒரு முரண் அதிர்வை உருவாக்கி மானுடத்தின் தத்துவம் சார்ந்த

விழிகள் X பிம்பம் X பார்வை

என்பதிலிருந்து

மனம் X அரூபம் X அறிதல் என்னும் அகவிழி திறக்கும் இன்னொரு பிரதியை என்னைப் போன்று

பலருள்ளும் எழுதத் தூண்டும்.

முதலிலேயே குறிப்பிட்டது போல, புராணம் , கதையாய் முன்வைத்த நிகழ்வின் காரணமறிதலுக்கான கேள்விகளை எழுப்பிப்திலுக்கான வேறொரு த ளத்தை அடைந்து, அதே நேரம் பிரகடன கோஷ முழக்கத்தின் சப்த அதிர்வுகளேதுமற்று, காட்சிகளுனூடாக நகர்த்தி பார்வையாளரின் மனத்துக்குள் சலனத்தை ஏற்படுத்துயதற்காக பாராட்டத்தான் வேண்டும்

-3-

‘ வெளி ‘ ரெங்கராஜனிடம் தொலைபேசியில் பேசிய போது இது போல வேறு புதிய முயற்சிகள் சில செய்ய இருப்பதாக சொன்னார் . செய்ததற்கு பாராட்டும் செய்யப் போவதற்கு வாழ்த்தும்

—-

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்