சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
‘விழுகிறோம் தவறிக் கீழே!
ஆயினும் மீண்டு
எழுகிறோம் தலையைத் தூக்கி!
திணரிப் போரில் மிதிபடினும்,
எழுந்து நின்று,
திடமாய்த் தாக்க மீள்கிறோம்!
உறக்கம் உடலை மயக்கிடினும்,
மறுநாள் மாந்தர் நாம்,
பிறக்கிறோம் மீண்டும் புதிதாய்! ‘
ராபர்ட் பிரெளனிங் [Robert Browning (1812-1889)]
‘மனிதரை ஏற்றிக் கொண்டு அண்டக் கோள்களைத் தேடி உளவச் செல்லும் பயணங்கள் யாவும் மகத்தானவை! எதிர்காலத்தில் பூமியிலிருந்து மாந்தர் தொடர்ந்து விண்வெளி நோக்கிப் பயணம் செய்து மீளும் காலம் வரப் போகிறது! அமெரிக்கராகிய நாம் இப்போது அந்தப் பயணங்களில் குழந்தைப் பருவ நடை பயின்று வருகிறோம். ‘
கென் பொவர்சாக்ஸ் [Ken Bowersox, Director, Flight Crew Operartions & Astronaut (May, 2005)].
முன்னுரை: 2003 பிப்ரவரி முதல் தேதி யன்று ஃபிளாரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய விண்வெளி மீள்கப்பல் கொலம்பியா [Space Shuttle Columbia] 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போவதை நேராகவும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்ட உலக மக்கள், அடைந்த வேதனையை எவ்விதம் விவரிப்பது ? அந்த அதிர்ச்சியான கொலம்பியா சிதைவில் ஏழு விண்வெளித் தீரர்கள் உயிரிழந்த பின், விண்வெளிக் கப்பல்களின் எதிர்காலப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, கப்பல்கள் யாவும் முடக்கப்பட்டன! கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா! அது 27 தடவை விண்வெளியில் ஏவப்பட்டு, விண்ணாய்வுகளை செவ்வனே முடித்து, வெற்றிகரமாகப் பூமியில் இறங்கி யுள்ளது. இருபத்தி எட்டாவது முறை ஏவிய போது, திட்டப்படி அண்டவெளியில் புகுந்து 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்து, பூமிக்கு மீளும் போதுதான் தீவிரப் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக் குள்ளாகி, இறுதி 16 நிமிடங்களில் சிதைய ஆரம்பித்தது! குறைந்தது 100 பயணங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கொலம்பியா 28 ஆவது பயணத்தை முடிப்பதற்கு முன்பாக வானில் சிதறிப் போய் சின்னா பின்னமானது மக்கள் மனதில் அழியாத கோலத்தை வரைந்துள்ளது!
1986 ஜனவரி 28 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space Shuttle, Challenger] ஃபிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் செல்லும் போது, திடாரெனப் பழுது ஏற்பட்டு வானத்தில் வெடித்தது! விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானிகள் [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர்! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது! விண்வெளி மீள்கப்பல்கள் இரண்டும் வானில் வெடித்துச் சிதறி ஏழு உயிர்களையும் 25 மில்லியன் டாலரையும் விழுங்கின! விபத்தின் கோர விளைவுகளின் காரணத்தை ஆழ்ந்து உளவிய போது, சாலஞ்சர் விண்வெளிக் கப்பல் அமைப்பில் நூற்றுக் கணக்கான விதி மீறல்கள் அறியப் பட்டன! மேலும் ஒளிந்து கொண்டிருக்கும் 800 பிரச்சனைகளை நாசா புறக்கணித்தது, தெரியப்பட்டது! கொலம்பியா விபத்துக் காரணம் ஆரம்பத்தில் விழுந்த ஓடு ஒன்று கவசத்தை நீக்கியதால், விண்கப்பல் மீளும்போது உராய்வுத் தீயில் சூடேறி உடையத் துவங்கியது!
விண்வெளிப் பயணங்களை மீண்டும் தொடர வேண்டும்
பூமியைச் சுற்றிவரும் அண்டவெளி நிலையம் பாதி அளவுதான் நிறுவகமாகி யுள்ளது! முழுதும் கட்டி முடிப்பதற்கு இன்னும் 18 விண்கப்பல் பயணங்கள் தேவைப்படும். மேலும் நிலையத்தில் வாழ்ந்து வரும் அண்டவெளி விமானிகளுக்கு நீர், காற்று, உணவுப் பண்டங்கள் அளித்து வர மேற்கொண்டு 10 முறையும் ஆக மொத்தம் 28 பயணங்கள் (18+10=28) திட்டமிடப்பட வேண்டும். அத்துடன் ஹப்பிள் தொலைநோக்கி பல்லாண்டுகள் செப்பணிடப் படாமல், அதன் பணித்திறன் குறைந்து கொண்டே வருகிறது. ஹப்பிள் பராமரிப்புக்காக 291 மில்லியன் டாலர் தொகையை நாசா ஒதுக்கி வைத்துள்ளது. அப்பணி புரிய விண்வெளிக் கப்பல் ஒருமுறைப் பயணம் செய்ய வேண்டிய திருக்கும் என்று நாசா மேலதிகாரி மைக்கேல் கிரிஃப்பின் [Michael Griffin] வாஷிங்டன் D.C. அமெரிக்கன் செனட் துணைக் கமிட்டியிடம் கூறினார்.
விண்வெளி நிலையத்தில் தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க, ரஷ்ய விமானிகளுக்கு உணவுப் பண்டங்கள், உபகரணங்கள் அனுப்ப, ரஷ்யாவின் அண்டவெளி வாகனம் பயன்பட்டு வருகிறது. அண்டவெளிப் பயணத்தில் முற்போக்காக இருக்கும் அமெரிக்கா, ஒவ்வொரு பயணத்துக்கும் ரஷ்யாவுக்கு டாலர் பணம் தர வேண்டி யிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா இரண்டு விமானிகளை விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப, ரஷ்யாவுக்கு (தலைக்கு 20 மில்லியன் டாலர் வீதம்) 40 மில்லியன் டாலர் கொடுத்திருக்கிறது! விண்வெளி மீள்கப்பல் பயணங்கள் அபாய விபத்துக்களை அளிப்பனவா ? ஆம். சாலஞ்சர், கொலம்பியா விபத்துக்கள் இரண்டும் அவற்றுக்குச் சான்று.
விண்வெளிக் கப்பல் பயணம் ஒவ்வொன்றும் பணம் விழுங்கும் திட்டமா ? ஆம். அதிலும் சந்தேகமில்லை. நிதி விழுங்கும் பயணங்கள் அவை! 1971 இல் விண்வெளிக் கப்பல் அமைப்பு, பயிற்சி விருத்திக்கு மதிப்பீடு செய்த தொகை: 5.2 பில்லியன் டாலர். ஆனால் முதல் விண்கப்பல் கொலம்பியா 1982 இல் தயாரான போது, செலவான தொகை அதைப்போல் நான்கு மடங்காக (19.5 பில்லியன்) விரிந்து விட்டது! அத்துடன் ஒவ்வொரு பயணத்தைத் துவக்கி முடிக்க 10.5 மில்லியன் டாலர் செலவாகலாம் என்று நாசா முதலில் மதிப்பீடு செய்திருந்தாலும், மெய்யாகக் கரைந்து போவது 500 மில்லியன் என்று நாசா இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறது! 2005 ஜூன் மாத பாப்புளர் மெக்கானிக்ஸ் இதழில் ஜான்ஸன் விண்வெளி மையத்தின் பயணகுழு இயக்கத்துறை ஆளுநரும், விண்வெளி நிலைய விமானியுமான கென் பொவர்சாக்ஸ் [Ken Bowersox, Director Flight Crew Operations, Johnson Space Center] நாசாவின் பாதுகாப்பான பொறி நுணுக்க டிசைனில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். கென் பொவர்சாக்ஸ் போன்ற பல விண்வெளி விமானிகள், செம்மை செய்யப்பட்ட நாசாவின் விண்வெளி மீள்கப்பலில் பயணம் செய்யப் பயப்படவில்லை!
டிஸ்கவரி விண்வெளி மீள்கப்பல் தயாராகிறது
ஐந்து விண்வெளிக் கப்பல்களில் இரண்டு சிதறிப் போன பிறகு, தற்போது மூன்று மிஞ்சியுள்ளன. அவற்றில் டிஸ்கவரி விண்கப்பல் இப்போது செம்மை யாக்கப்பட்டு 2005 ஜூலை 13 ஆம் தேதிக்குப் பிறகு பயணம் புரிய தயாரிக்கப்பட்டு வருகிறது. கொலம்பியா விண்கப்பலின் வெளிப்புறக் கலனில் உள்ள நுரைக்கவச ஓடு [Bipod Ramp Foam] ஒன்று விழுந்து, எரிவாயுள்ள கலத்தின் வெப்பக் கவசம் ஒரு பகுதியில் இழக்கப்பட்டு, விண்கப்பல் பூமியை நோக்கி இறங்கும் போது உராய்வுக் கனல்பற்றிக் கலனை எரித்து விபத்துக்குள் ஆக்கியது. டிஸ்கவரியில் அனைத்து நுரைக்கவச ஓடுகளும் நீக்கப்பட்டு, புதிய கவச ஓடுகள் பதிக்கப் பட்டன. திரவக் காற்று [Liquid Air] கொண்ட மற்றுமோர் உட்கலன் ஒன்றும் கசியாமல் இருக்க அடைப்புப் பசைகள் [Sealants] பூசப்பட்டன. இறக்கைகளின் மீதுள்ள கரிக்கவச கனல் தட்டுகள் [Carbon-Carbon Heat Panels] மேற்கொண்டும் கவச இழைகளால் மூடப்பட்டு, வெப்பக்கனல் இடையூறுகள் நிகழா வண்ணம் உறுதியாக்கப் பட்டன.
2005 ஏப்ரல் 14 ஆம் தேதி எரிகலனில் உள்ள திரவ ஹைடிரஜன் உயரத்தை அளந்து அறிவிக்கும் நான்கு கருவிகளில் இரண்டு அளவு காட்டத் தவறிவிட்டன! மேலும் ஹைடிரன் அழுத்ததைக் கட்டுப்படுத்தும் ‘விடுவிப்புச் சாதனம் ‘ [Relief Valve] சோதனையின் போது 13 தடவைகள் தவறாக இயங்கின! அந்தப் பழுதுகள் நீக்கப்பட்டு, மீண்டும் சோதிக்கப்பட்டு யாவும் சீராக்கப்பட்டன. ஏப்ரல் 29 ஆம் தேதி நாசா அதிகாரி மைக்கேல் கிரிஃப்பின், குளிர்ந்து போய் பனிப்போர்வை மூடியிருக்கும் வெளிப்புற எரிவாயுக் கலனில் தொத்திக் கொண்டுள்ள பனிக்கட்டி பயண எழுச்சியின் போது கீழிருக்கும் கவசத் தட்டுகளில் விழுந்து அவற்றை உடைத்து விடலாம் என்றஞ்சி, பயணத் தேதியை மே மாதம் 22 லிருந்து ஜூலைக்கு மாற்றி விட்டார்! அந்தப் பிரச்சனையைத் தீர்க்க, எஞ்சினியர்கள் 70 அடி நீளமுள்ள எரிவாயுப் பைப்புகளில், மின்சார சூடாக்கிகளை [Heaters] அமைக்க வேண்டி தாயிற்று. டிஸ்கவரி புதிய பயணத்தின் ஆணை அதிபதி எய்லீன் காலின்ஸ் [Commander Astronaut Eileen Collins] எப்படித் தள்ளிப் போனாலும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்கப்பல் ஏவுகணை சுடப்படும் என்று அறிவித்தார். நாசா அதிகாரிகள் அடுத்த விண்வெளிக் மீள்கப்பல் அட்லாண்டிஸ் [Space Shuttle Atlantis] செப்டம்பர் 9 முதல் 24 தேதிக்குள் பயணம் செய்யத் தயாராகிவிடும் என்று கூறுகிறார்கள்.
விண்வெளி விமானிகளின் அழுத்தமான நம்பிக்கை
கென் பொவர்சாக்ஸ் பாப்புளர் மெக்கானிக்ஸ் இதழில் கூறுகிறார்: ‘1962 பிப்ரவரியில் அண்டவெளி விமானி ஜான் கெலென் [Astronaut John Glenn] முதன்முதல் விண்வெளிச் சிமிழில் [Space Capsule, Mercury] பூமியைச் சுற்றி வந்த போதே, நானும் விண்வெளிப் பயணங்களில் நேரடிப் பங்கு கொள்ள விழைந்தேன் ‘. ஜான் கெலென் உலகை வலம்வந்த முதல் விண்வெளி விமானி மட்டும் அல்லர். 77 வயதான ஜான் கெலென் விண்வெளி மீள்கப்பல் டிஸ்கவரியில் [Space Shuttle Discovery] 1998 ஆம் ஆண்டு வெற்றிகரமாக இரண்டாம் முறையாகப் பூமியைச் சுற்றிய வயது முதிர்ந்த மீள்கப்பல் விமானி என்ற பெயரையும் பெற்றவர்! இப்போது அதே டிஸ்கவரி விண்வெளி மீள்கப்பல் செம்மை ஆக்கப்பட்டு, 2005 ஜூலையில் மீண்டும் புத்துயிர் பெற்று பறக்கப் போகிறது!
‘கொலம்பியா பெருவிபத்து போன்ற ஓர் அபாயம், என்னை விண்வெளிப் பயணத் திட்டங்களிலிருந்து வெளியே தள்ளியிருக்க வேண்டும். நாசா திட்டங்களை நாங்கள் நம்பியிருக்கா விட்டால், அகில விண்வெளி நிலையத்தில் என்னைப் போன்றோர் பணியாற்றி யிருக்க மாட்டார்! கொலம்பியா மீள்கப்பல் பயணத்தில் என் நண்பர்கள் தம் இல்லங்களுக்குத் திரும்பாமல் உயிரிழந்தாலும், விண்வெளித் தேடல்களை நிறுத்திவிடக் கூடாது என்று உறுதியாக கூறுபவர் நாங்கள்! ‘
‘விண்வெளி மீள்கப்பல் பயணத்தில் அபாயம் உள்ளதா ? ஆம், அபாயங்கள் உள்ளன! விண்வெளிக் கப்பல் பயணங்கள் நிதி விழுங்கும் திட்டங்களா ? ஆம், அதில் ஐயமில்லை! நாசா பில்லியன் டாலர் கணக்கில் செலவு செய்து அபாயப் பழுதுகளைக் குறைக்க முயன்றாலும், எதிர்பார்க்கும் விபத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் நாங்கள் விண்வெளி மீள்கப்பலில் ஏறி அமர்ந்து பயணம் செய்ய முடியாது! பயணப் பயிற்சியில் பங்கெடுக்கப் போகும் முன்னே நான் என்னைக் கேட்டுக் கொள்வேன்! இந்த அபாயப் பணியில் நான் ஏன் பங்கெடுக்க வேண்டும் ? என் குழந்தைகளுக்குத் தந்தை யில்லாமல் போக வாய்ப்பிருக்கும் இந்த பயணப் பந்தயத்தில் மாட்டிக் கொள்வது தகுதியானதா என்று என்னைக் கேட்டால், ஆம் என்றுதான் அழுத்தமாகச் சொல்வேன். ‘
1967 ஆம் ஆண்டில் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவின் தளத்தில் தடம்வைத்து பூமிக்கு உயிருடன் மீண்டார்! அடுத்து 2020 ஆண்டுக்குள் செவ்வாய்த் தளத்தில் கால்வைக்க நாசா முயற்சிகளும், பயிற்சிகளும் புரிந்து வருகிறது. ‘மேலும் எங்களை விண்வெளி நிலையங்களில் நீண்ட காலம் சுற்ற வைப்பதும், அண்டவெளிக் கப்பல்களில் அனுப்பிப் பயணப் பயிற்சிகள் புரிவதும், அடுத்து செவ்வாய்க் கோளில் கால்வைத்து மீள்வதற்கு வழி வகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ‘
‘இப்போது செம்மைப் படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்டுத் தயாராகிக் கொண்டிருக்கும் டிஸ்கவரி விண்கப்பல் 2005 ஆம் ஆண்டு ஜூலையில் புரியப் போகும் குறிப்பணிகள் முக்கியமானவை. முதற்பணி விண்வெளி மீள்கப்பல் மனிதப் பணிக்குரிய பாதுகாப்பான வாகனம் என்பதை, இரண்டாண்டுகளுக்குப் பிறகு நிரூபித்துக் காட்டுவது.
அடுத்த பணி அண்டவெளி நிலையத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் விமானிகளுக்கு உணவுப் பண்டங்கள், உபகரணங்கள் அளிப்பது; குழு விமானிகளை மாற்றிக் கொள்வது; மூன்றாவது பணி, வெகு நாட்களாகப் பிரச்சனைகளோடும், பழுதுகளோடும் சரிவர வேலை புரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹப்பிள் தொலைநோக்கியைச் செப்பணிடுவது. நான்காவது பணி, நுண்ணீர்ப்பு [Microgravity] விண்வெளியில் மனிதருக்கு எவ்வித மாறுபாடுகள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிவது. ‘ கென் பொவர்சாக்ஸ் நேரடியாகப் பங்கெடுத்த சோதனைப் பயிற்சிகளில் தசை இயக்கத்துக்கும், எலும்புத் திணிவு இழப்புக்கும் உள்ள சார்புநிலை [Relationship Between Muscle Activity & Bone Density Loss] அறியப்பட்டது. அண்டவெளி நிலையத்தோடு பிணைப்புத் தகுதியுடைய [Rendezvous] வாகனம் அமெரிக்காவின் விண்வெளி மீள்கப்பல் ஒன்றுதான்! ஆகவே இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு செம்மை யாக்கப்பட்ட விண்வெளி மீள்கப்பலின் பயணங்கள் கட்டாயமாகத் தேவைப் படுகின்றன.
புத்துயிர் பெறும் விண்வெளி மீள்கப்பல்கள்
விண்வெளி மீள்கப்பல் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே டிசைன் தவறுகள், நிதிச் செலவு மீறல்கள் [Cost Overruns], தயாரிப்புத் தாமதங்கள், கள்ளத்தனங்கள், நிர்வாகக் கோளாறுகள் போன்ற பல இடையூறுகள் ஏற்பட்டு, முதல் பயிற்சிப் பயணம் தொடங்கவே சுமார் பத்தாண்டுகள் ஓடிவிட்டன! ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 500 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது! ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாசா முதலில் திட்ட மிட்டிருந்தது! ஆனால் சராசரியாக நடந்தவை, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே! சாலஞ்சர், கொலம்பியா இரண்டும் சிதறிப் போன பிறகு எஞ்சிய மூன்று விண்கப்பலில் இனிப் பயணங்கள் தொடருமாகில், அவற்றுக்கு ஒப்பியவாறு குறைந்து ஆண்டுக்கு 2 அல்லது 3 ஆகச் சிறுத்து விடலாம்! இப்போது டிஸ்கவர், அட்லாண்டிஸ் ஆகிய இரண்டு விண்கப்பல்களும் புதுப்பிக்கப்பட்டு சோதிக்கப் படுகின்றன. அடுத்து எண்டவர் விண்கப்பலும் புத்துயிர் பெற்ற பயணம் செய்யும்.
கடந்த 16 ஆண்டுகள் [1986-2002] விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும்! புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கியை விண்வெளியில் ஏவியது, பலமுறை அதனைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும்! அண்ட வெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்துடன் [Space Station] தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும்! ஐந்து விண்வெளிக் கப்பல்களில் சாலஞ்சர் வெடித்த பின் நான்காகி, அடுத்து கொலம்பியா சிதைந்து மூன்று மீள்கப்பல்களாய் குறைந்து விட்டன! இதற்கு முன்பு நான்கு மீள்கப்பல்களைப் பயன்படுத்தி 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாசா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது! விண்கப்பல் குறிப்பணித் திட்டங்களில் பல அரங்குகளில் பணிபுரிந்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் ஊதிய வேலைகளைப் பாதுகாக்கவும், மிஞ்சிய மூன்று விண்வெளிக் கப்பல்கள் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்து பறக்கத்தான் வேண்டும்!
அடுத்த பத்தாண்டுகளில் அண்டவெளிப் பயண முற்பாடுகள்
அமெரிக்காவின் நாசா அண்டவெளிப் பயணக்குழு 2020 ஆண்டுக்குள் மனிதரைச் செவ்வாய்க் கோளில் இறக்கி நடமிட விட்டுப் பூமிக்கு மீட்பதைத் தனது 21 ஆம் நூற்றாண்டுக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தற்போது அதற்குத் தேவையான புதிய விண்வெளி வாகனத்தை 2008 ஆம் ஆண்டுக்குள் தேர்ந்தெடுக்க நாசா தீர்மானித்திருக்கிறது. அதன் பெயர் ‘ விண்வெளித் தேடும் குழு வாகனம் ‘ [Crew Exploration Vehicle (CEV)]. 20 ஆம் நூற்றாண்டின் பழைய விண்வெளி மீள்கப்பல்களின் இடத்தைப் பறித்துக் கொள்ளப் போகும் 21 ஆவது புதிய வாகனத்தை லாக்கீடு மார்டின் கம்பேனியும் [Lockheed Martin], நார்த்ராப் குரும்மன் & போயிங் கம்பெனியும் [Northrop Grumman & Boeing] தயாரித்து வருகின்றன. கட்டுரைப் படத்தில் காட்டியிருப்பது லாக்கீடு மார்டின் மாடல்! 70 அடி நீளமும், 40 மெட்டிரிக் டன் எடைக்கும் குன்றியதாக இருக்கும் இரண்டு வாகனங்களில் ஒன்று 2008 இல் தேர்ந்தெடுக்கப்படும். ஆறு வருடங்கள் பயணக் குழுவினர் அவ்வாகனத்தில் பயிற்சி பெற்ற பின்பு, முதல் மனிதர் பயணம் 2014 இல் செய்ய நாசா திட்ட மிட்டுள்ளது! ராக்கெட் போன்ற வடிவமுள்ள புதிய வாகனத்துக்கு விண்வெளி மீள்கப்பல் போன்று தளத்தில் ஓடி இறங்க இருபுறமும் இறக்கை இல்லை! நீரிலோ அல்லது நிலத்திலோ புவி ஈர்ப்பாற்றலில் இறங்க பாராசூட் குடைகளும், காற்று மெத்தைகளும் வாகனத்துடன் இணைக்கப் பட்டிருக்கும். செவ்வாயிக்குச் சென்று மீளப் போகும் அந்தப் புதிய வாகனம் அண்டவெளியில் நீண்ட காலம் நீந்திடப் பேரளவு எரிசக்தி ஆற்றலும், பிரச்சனையைக் கண்டுபிடித்துத் தீர்க்கும் ‘உளவுக்காப்பு ஏற்பாடுகளைக் ‘ கொண்டதாகவும் [Diagnostic Safety System] இருக்கும்!
****
தகவல்:
1. Is Shuttle Still Worth the Risk ? The Shuttle Debate By: Alex Roland, Popular Mechanics (June 2005)
2. Space Shuttle Discovery Passes Tank Test -American Broadcasting Company News Online (May 21, 2005)
3. Shuttle Discovery Put through Second Fueling Test By: Milliam Harwood, CBS News (May 20, 2005)
4. NASA: Shuttle Could Fly Again by Fall, CNN.com (May 14, 2005)
5. NASA: Shuttle ‘s Retirement May Affect International Space Station, By: Tariq Malik CNN.com (May 21, 2005)
6. Space Shuttle Program – Wikipedia, Free Encyclopedia (www.en.wikipedia.org/wiki/Space_Shuttle)
7. Shuttle Discovery Launch Set for Mid-July, 2005 By: Guy Gugliotta, Washington Post Staff Writer (May 21, 2005)
8. NASA Report: Discovery Set for July Launch Despite Delays By: Todd Halvorson (May 24, 2005)
9. September Shuttle Launch May Delay Next Space Station Crew By: John Kelly (May 24, 2005)
10 Britannica Concise Encyclopedia (2003)
11 Encyclopedia Britannica Almanac 2005.
12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: விண்வெளி மீள்கப்பல் கொலம்பியாவின் சிதைவு. (பிப்ரவரி 9, 2003) [http://www.thinnai.com/science/sc0209035.html]
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 25, 2005)]
- அன்னையின் அணைப்பு
- Workshop/Seminar for Literary Translation. 4th June (Saturday), 2005, 5th June (Sunday)
- IYAL VIRUDHU PROGRAM
- பரிமளத்திற்கு இறுதிப் பதில்
- About low standard of TamilNadu state board science text books.
- வடக்கு வாசல்
- கூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….
- கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்
- அஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்
- ஸ்ட்ராபெர்ரி சாஸ்
- புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் ? (When Will Be the Next Space Shuttle Flight ?)
- நனவு
- கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!
- உடையும் மதிப்பெண்கள்
- சந்தன
- மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்
- ஒன்று பட்டால்…
- ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ
- ஈவேராவின் இதிகாசப் பொய்கள்
- தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி
- ஆண்-பெண் நட்பு
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….
- புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!
- அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்
- திருவண்டம் – 1
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)
- புகைவண்டி
- கணக்கு வாத்தியார்