புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

ஜெயமோகன்


டாக்டர் என் எஸ் நடேசனின் வாழும் சுவடுகள் [மிருகங்களைப்பற்றிய அனுபவக் குறிப்புகள் ]

கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள்

====

புத்தக மதிப்புரை

மித்ர வெளியீடு சென்னை

இருவகையான உலகப்பார்வைகள் உண்டு. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் இதற்கு உதாரணமாக கூறலாம். தல்ஸ்தோய் படைப்புகளில் புற உலகம் அதன் அழகுடனும் முழுமையுடனும் விரிகிறது. அவ்வுலகின் ஒரு பகுதியாக தன் ஆளுமையை பொருத்தி தன்னை அறிய அவர் முயல்கிறார். தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளில் புற உலகமே இல்லை. அவர் கண்களுக்கு தெரியும் புற உலகம் கூட அக உலகின் குறியீடுகளாகவே பொருள்படுகிறது. மனம் மட்டுமே அனைத்துமாக மாறி விரிந்திருக்கும் ஓர் உலகம் அது. முந்தைய உலகமே எனக்கு நெருக்கமானது. மனதை அல்லது தன் சுயத்தை பிரபஞ்சமாக விரித்துக் கொள்ளும் பார்வையுடன் ஒத்துப்போக என்னால் முடிவதில்லை .

புற உலகை சித்தரிக்கும் தல்ஸ்தோயின் பார்வையில் மனிதர்களுக்கு சமானமாகவே மிருகங்களும் இடம்பெறுகின்றன. போரும் அமைதியும் நாவலில் போர்க்களத்தின் சித்தரிப்பை அளிக்கும் தல்ஸ்தோய் அங்கு நெப்போலியனை சித்தரிக்கும் அதே துல்லியத்துடன் ஒரு நாயையும் சித்தரிக்கிறார் .அவரது கலைப்பார்வை இரண்டிலும் வேறுபாடு காணவுமில்லை . மனிதர்களைப்பற்றி எழுதும்போது எப்படி நுட்பங்கள் சாத்தியமாகின்றன ? எழுதப்படும் மனிதர்களுடன் எழுத்தாளன் உணரும் இரண்டறக்கலந்த நிலை மூலமே. கெஜக்கோல் போன்ற கதைகளிலும் அன்னா கரீனினாவின் குதிரைசவாரிபகுதியிலும் குதிரைகளைப்பற்றி தல்ஸ்தோய் சித்தரிக்கும் இடம் அவரது மனம் விலங்குகளுடன் இரண்டறக்கலந்த நிலையை உணர்ந்திருக்கிறது என்பதற்குச் சான்றாகும். அவ்வாறன்றி அவற்றை வேடிக்கை பார்க்கும் நிலையில் எழுதப்படும் எழுத்துக்கு அதற்குரிய பலவீனங்கள் உண்டு. ஆகவேதான் தஸ்தயேவ்ஸ்கி மேதை என்னும் போது தல்ஸ்தோய் யை ஞானி என்கிறேன்.

மிருகங்களுடனான ஈர்ப்பு என்பது இயற்கை மீதான் ஈர்ப்பின் ஒரு பகுதியே.நான் செல்லப்பிராணி வளர்ப்பைபற்றி சொல்லவில்லை. அதில் பல தளங்கள் உள்ளன. பலவகையான குறைகளை ஈடுகட்ட , பல விதமான உளவியல் தேவைகளுக்காக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. கொஞ்ச, தனக்கே தனக்கு என்று வைத்துக் கொள்ள, சுதந்திரமாக அடித்து சித்திரவதை செய்ய…எல்லா மிருகங்களையும் எந்நிலையும் ரசிக்கும் ஆழ்ந்த ஈர்ப்பை ப்பற்றி சொன்னேன். சலிம் அலி, இந்து சூடன் முதலியோர் பறவைகளைப்பற்றி எழுதிய நூல்கள் எனக்கு மிக பிடித்தமானவை. அந்த ஈர்ப்பு உடையவர்களுக்கு பிடித்தமான நூல்களில் ஒன்றாக இருக்கும் இந்த நூல்.

தனித்தனி அனுபவங்கள் வழியாக இிந்நூல் காட்டும் மிருகங்களின் பொதுப் பண்பு அவை எந்த அளவுக்கு கண்ணியமானவையாக களங்கமற்றவையாக உள்ளன என்பதே. அவற்றில் நாய்கள் அதிகம் என்பது இயல்பே. நாம் நாயின் பொருட்டு கடவுளுக்கு மிக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நாயும் காகமும் இல்லாவிட்டால் நமது இளமைப்பருவம் மிக வரண்டதாக இருந்திருக்கும். மிருகங்களின் சித்தரிப்புகளை நுட்பமாகவும் இயல்பாகவும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் . பெரும்பாலான அனுபவங்கள் அழகிய சிறுகதை அனுபவத்தை கற்பனையில் விரிய வைத்தன. குறிப்பாக ‘அலர்ஜி புதிய விளக்கம் ‘ , ‘பிரசவ வேளையில் அந்தநாள் ஞாபகம் ‘ ஆகிய இரண்டும் என்னை மிகவும் பாதித்தன. சிறந்த கதைகள் போல அவற்றிலும் வாசக ஊகத்துக்கான மெளன இடைவெளிகள் உள்ளன. பல கதைகளை மீண்டும் சிறுகதைகளாக விரித்தெழுதலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ‘அலர்ஜி புதிய விளக்கம் ‘ அனுபவத்தில் அந்த நாய் அப்பெண்ணின் அகத்தின் அல்லது மிக நுட்பமான ஒரு புலனின் குறியீடாக கொள்ளமுடியும் என்று பட்டது. காரணம் இல்லாமலே ஒரு மனிதன் நம் ஆத்மாவுக்குகொருவிதமான கூச்சத்தை அளித்துக் கொண்டே இருத்தைப்போல.

இம்மாதிரி நூல்கள் தமிழில் மிக அபூர்வம். முக்கியமான காரணம் தமிழ்நாட்டில் இம்மாதிரி துறைகளில் தேர்ச்சி கொண்டவர்கள் தமிழ் தெரியாதவர்களாக இருப்பதே வழக்கம். தமிழில் தொடர்ந்து பேசக்கூட அவர்களால் முடிவதில்லை என தொலைக்காட்சி பேட்டிகளைக் காணும் போது தெரிகிறது. ஒரு மொழியில் பலவிதமான எழுத்துப்பதிவுகள் ஏராளமாக உருவாகும்போது அவற்றுக்கிடையேயான ஊடாட்டமாகவே மேலான இலக்கியங்களும் உருவாகும். அவ்வகையில் இந்த நூல் முக்கியமான ஒன்று.

8888

மீள்வது பற்றிய கனவு

====

எல்லா பக்கமும் வாசல் [நாடகம்]

பா அ ஜெயகரன் தமிழர் வகை துறை வள நிறுவனம்

www.geocities.com/thedaham

பா. அ. ஜெயகரனின் இநாடகம் கனடாவுக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் இக்கட்டை தொட்டுக்காட்ட முயல்வதாகும். மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் வார்ப்பில் கவனம் தெரிகிறது. கனடா அளிக்கும் வாய்ப்புகளைபயன்படுத்தி எதிர்காலத்தை நோக்கி பாய்ந்தெழ தவிக்கும் சாந்தன், விட்டுவிட்டு வந்த இறந்த காலத்தை முற்றிலும் விட்டுவிட முடியாது குடும்பம் உறவுகள் ஏக்கம் என வாழும் குமார், நிகழ்க்லாமே பிரச்சினையாகி உடைபட்ட சுயத்துடன் வாழும் பதி. இவர்களொரு கோப்பிக்கடையில் சந்திப்பதன் மூலம் உருவாகும் மோதல் மூலம் இச்சூழலின் ஒரு தளத்தை திறந்து காட்டுகிறது இந்நாடகம். சாந்தன் கொள்ளும் அந்த இறுதி நிமிிட குற்றவுணர்வின் அபத்தத்தை மனிதில் தைக்கும்படி காட்டியிருக்கிறார் ஆசிரியர் .

இந்நாடகத்தில் அதன்ழெளளவியல் தளங்களுக்கு அப்பால் சகஜமான யதார்த்த சூழல் இருப்பதும் உரையாடல் எளிதாக நம்பும்படியாக இருப்பதும் முக்கியமான விஷயங்கள்.நாடக பாத்திரங்களை வெறும் குறியீடுகளாக சுருக்க்கி விடாமல் உயிருள்ள பாத்திரங்களாக ஆக்கி நம்மை அவர்களுடன் தொடர்பு படுத்துகிறது இது.

ஆனால் இந்நாடகத்தின் அமைப்பினாலோ என்னவோ எளிய கதாபாத்திர உரசலாகவே இந்நாடகம் நின்றுவிட்டது .மேலான நாடகங்கள் மேலும் அழுத்தமான தர்மசங்கடங்களை நோக்கிச் எல்ல யத்தனிப்பவை. அந்நிலையில் அவை எல்லாருக்கும் எக்காலத்தும் உரிய சிக்கல்களை நோக்கி நகர்வு கொள்கின்றன.

****

அந்தரங்க டைரியின் சில வரிகள் : செழியனின் ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு ஈரமற்ற மழை ‘ [ கவிதைகள் ]

====

மூன்றாவது மனிதன் வெளியீடு

3man@sltnet.Ik

புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் செழியனின் இக் கவிதைகளின் பொதுவான இயல்பு இவை மிக அந்தரங்கமான மனநகர்வுகளை மொழியில் பதிவு செய்ய முயல்கின்றன என்பதே. அந்தரங்கமே கவிதை .ஆனால் அது வெளிப்பாடு கொள்கையில் எந்த அளவுக்கு பொது அனுபவமாக ஆகியுள்ளது என்பதே அதை அளக்கும் அளவுகோல் ஆகும். அதற்கு இரு வகையான முறைகளை காலம் தோறும் கவிதை கைகொள்கிறது . வெளியே உள்ள புறவுலகிலிருந்து சிலவற்றை எடுத்து அவற்றின் மீது தன் அந்தரங்கத்தை ஏற்றி கூறுகிறது .அல்லது நேரடியாக உக்கிரமான சொல்லாட்சி மூலம் வெளிப்படுத்தி விடுகிறது.

முதல் வழியை படிமம் எனலாம் . படிமத்தின் முதல் இயல்பு அது தன் காட்சித்தன்மையின் புதுமை மூலம் நம் கவனத்தை கவர்ந்து நம் போதத்தில் ஒரு அதிர்ச்சியை உருவாக்கிவிடவேண்டும். அதை ஒட்டி நம் மனம் கற்பனை கொண்டு அம்மன உணர்வை வந்தடைய வேண்டும். இதைவிட அபூர்வமானதாகவே நேரடி வெளிப்பாடு இருக்கமுடியும். அவ்வெளிப்பாட்டின் அச்சொற்களுக்கு அவை அனைவருடையவும் அந்தரங்கமான சொற்களாக ஆகும் வலிமை இருக்கவேண்டும்.படிப்பவன் ஒவ்வொருவரும் அதேபோன்ற வரிகளை மனதில் அடைந்திருந்த உணர்வு வரவேண்டும் .

முதல் வகைக்கு தமிழில் சிறந்த பல படிம வரிகளை உதாரணமாக சொல்லலாம். உதாரணம் ‘கொக்கு பூத்த வயல் ‘ [தேவதேவன்] இரண்டாவதற்கு ‘சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக! ‘[சேரன்]

செழியனின் இக்கவிதைகள் அவ்விரு தளங்களிலும் போதிய வெற்றியை அடைய முடியாதுபோன கவிதைகள் என்றே சொல்லவேண்டும். கடலை விட்டுப்போன மீன்குஞ்சுகள் என்ற கவிதை முதல் வகைக்கு உதாரணம் . இங்கு ஒரு கருத்துக்கு உதாரணமாக இயற்கையில் இருந்து ஒரு நிகழ்வு எடுத்தாளப்படுகிறது . அந்நிகழ்வுக்கு தன்னளவில் பொருள் ஏதுமில்லை . அந்த கருத்து தான் அப்பொருளை அளிக்கிறது. அப்பொருளை நாம் அறிந்து கொண்டதுமே அந்நிகழ்வு காலாவதியாகிவிடுகிறது . ஆனால் படிமக்கவிதையில் [ உதாரணம் பிரமிளின் காவியம்] இயற்கை நிலழ்வில் உள்ள முடிவடையாத அர்த்தம் அக்கவிதையின் மையப்பொருளைமேலும் மேலும் துலக்கியபடியே இருக்கும்.

மலையாளக் கவிதை ஒன்றுஇதனுடன் ஒப்பிடத்தக்கது

குரல்

====

மீனவன்

காயல் நடுவே தோணியை நிறுத்தி

சீனவலை விரித்து

சட்டென்று பெரும்குரல் தருகிறான்

வெள்ளி மின்னல்கள்போல

மீன்கூட்டங்கள் துள்ளிதுள்ளி

வலையில் விழுகின்றன

துள்ளி துள்ளி இறக்கின்றன.

அதட்டி அழைக்கும்

அக்குரலை

முட்டையிலேயே

அவற்றுக்கு கற்பித்தது யார் ?[ ஜோசப்]

இக்கவிதையில் இய்ற்கை அனுபவத்தில் உள்ள மர்மம் மரணத்தின் அழைப்பு என்ற கருத்தை மேலும் ஆழப்படுத்தியபடியே செல்வதைக் காணலாம். அது செழியன் கவிதைகளீல் நிகழவில்லை.

ஆனால் அடர்த்தியான சொல்லாட்சியும் சுருக்கமான விவரணைகளும் கொண்ட இக்கவிதைகள் நம் கற்பனையை தூண்டுவனவாகவும் ஆழமான மன நகர்வை அவ்வப்போது உருவாக்குவனவாகவுமே உள்ளன.தனிமை , செயலின்மை ஆகியவை எல்லா கவிதைகளிலும் இலைகள் மீது பனிச்சுமை போல கனத்து ஒட்டியிருக்கின்றன.

====

jeyamoohannn@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்