புதைகுழி

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

ஸ்ரீனி.


காற்றிலாடும் காலண்டர் காகிதங்களில் கையசைத்தும்
ரயில் நிலைய கடிகாரமாய் எதிர்கொண்டும்
அந்தி மஞ்சள் அஸ்தமனங்களில் உதயமாகியும்
பொன் காலை பொழுதுகளாய் ஜொலித்தும்
வார இறுதிகளில் ஒடிப்பிடித்து விளையாடியும்
சிரித்து நிற்கும் தாத்தாவின் மின்னும் வெள்ளி நரையாகியும்
குட்டித் தமக்கையின் முத்துப்பல் வரிசையில் மின்னியும்
சிரித்து நிற்கும் சுப்பிரமணியின் போட்டோவில் அழவைக்கும் நினைவுகளாகியும்
ஏகாந்த நினைவுகள், ஏமாற்றங்கள்,
வீணில் கழிந்த கிழமைப் பொழுதுகள்,
சுற்றத்துடன் ரசித்த சுற்றுலாப் பயணங்கள்,
அரும்பு மீசை பருவத்து இனக்கவர்ச்சிகளென,
எல்லாவற்றிலும் எப்பொழுதும்,
இருக்கும் நிலையில் இழக்கும் நிமிடங்களை
ஏதோ ஒர் மூலையில் எப்போழுதும் நின்று
உள்வாங்கும் புதைகுழியாய் உருவமற்று எதிர்கொண்டு,
கைகட்டி வேடிக்கை பார்த்து,
கல்லறையில் முடியும்போது கைகொட்டி சிரிக்கும் – காலம்.
இறந்து போகும் நிமிடங்களில் இறந்து கொண்டிருக்கும் மானுடமே
இருக்கப் போகும் நிமிடங்களில்,
இனிக்கும் நினைவுகளுக்காய் இருப்பதை அனுபவி.
நாளைய நினைவுகளின் நிம்மதி விளைச்சலுக்காய்
இன்றைய நிஜங்களை உழுதல் அவசியம்.

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி