புதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

தாஜ்


“இது கடந்த சுமார் இருபது வருட அறுவடை. அப்படித்தான் ஒரு வட்டத்தை நான் கோடிட்டுக் கொண்டேன். வேறு எந்த இரண்டு பத்துக்களில் இத்தகைய வளம் வந்து சேர்ந்துள்ளதா எனத் தெரியவில்லை” இது பெரியவர் வெ.சா. கடந்த வாரம் திண்ணையில் எழுதிய கட்டுரை ஒன்றின் ஆரம்ப வாசகம். பின்னலிட்ட அந்த வட்டத்திற்குள் நின்று, இலக்கியம் சார்ந்து தனது கருத்துக்கள் பலவற்றை வாசகர்களுடன் அவர் பகிர்ந்துக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இணையத்தில் பெறும் தகவல்களை யெல்லாம் தொகுத்து அவற்றைத் தன்னதாக, தான் அறிந்ததாக, தன் அனுபவமாக சந்தை யில் வைக்கும் இலக்கியவாதிகளை தீர்க்கமாக சாடியிருக்கிறார். இந்தவகை இலக்கியவாதிகள் இண்டர் நெட் அறிமுகமான நாட் தொட்டு பக்கா எழுத்து வியாபாரிகளாக ஆகிவிட்டார்கள் என்பதும் இங்கே இன்னொரு நிஜம். அவர்களின் குதியும் வெ.சா. சொல்வதைப் போல் தாங்கவில்லைதான். உட்கார்ந்த இடத்தில் இருந்தே எழுத்தில் சாதிக்கிற இவர்களது வித்தையை வாசகர்கள் புரிந்துக் கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை. வெ.சா.தொடர்ந்து அ.முத்துலிங்கத்தின் எழுத்தை மெச்சி இருக்கிறார். மெச் சத் தகுந்த எழுத்துதான் அது!! தமிழகத்து வாசகர்களின் தடையற்ற வாசிப்புக்காகவே அவரது தமிழீழத் தமிழை ஓய்வில் அமர விட்டு, தமிழகத் தமிழில் தடங்களின்றி எழுதுவதற்காகவுமாக சேர்த்து திரு.முத்துலிங்கம் அவர்களை தாராளமாக மெச்சலாம் தான்.

‘பெண்ணிய குரல்கள் தமிழ் கவிதையில் வந்து சேர்ந்துள்ளது ஒரு புதிய நிகழ்வு’ என்று சல்மா, உமா மகேஸ்வரி, மாலதி மைத்ரி போன்றவர்களைக் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். சரிதான் அது. முன் எப்பவும் அல்லாத பெண்ணிய குரல்கள்தான் அவை! அவர்களது உரத்தக் குரல் காட்டுகிற ஆண்களது உலகமும் என்பது, பரவலாக முன் எப்பவும் ஆண்கள் உணராத அல்லது உணர மறுத்து வந்த உலகம்!

வெ.சா.வின் அந்தக் கட்டுரையின் ஆரம்பம் பேசும் நிஜம் மாதிரியே, வாழும் சில நிஜங்களை கடைசியிலும் பேசியிருக்கிறார். இங்கே, அந்தக் கட்டுரை பேசும் மையப்பகுதியைத்தான் நான் பிரச்சனையாகப் பார்க்கிறேன்.

அந்தக் கட்டுரை மையமாகப் பேசுவது ஜெயமோகனை பற்றியது. அதில் ஜெயமோகனின் எழுத்தை வெ.சா. வியந்திருக்கிறார். எழுத்தை வியந்திருக்கிறார் என்பதைவிட ஜெயமோகன் அடுத்தடுத்து விதவிதமாய் எழுதிக் குவித்திருப்பதில் மலைத்திருக்கிறார். அது, எதுவொன்றென்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. குறிப்பாக விஷ்ணுபுரம் குறித்த சர்ச்சைகளை மட்டும் இங்கே நான் மறந்து போகவேண்டும்.

இந்தக் கட்டுரையில் பிற இலக்கிய ஆளுமைகளை வெ.சா. பாராட்டியது மாதிரி ஜெயமோகனின் எழுத்தில் அவர் வியந்தது குறித்தோ, மலைத்ததுக் குறித்தோ பாராட்டியிருக்கலாம். ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. இங்கே ஆட்சேபனை என்பது “ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமையை, புதுமைப் பித்தன் ஒருவரிடம்தான் தமிழ் கண்டிருக்கிறது.” என்கிற வெ.சா.வின் கூற்றுதான். கட்டுரையின் ஆரம்பத்தில் வெ.சா. கூறியப்படி இருபது வருஷ கணக்கையும்கூட அவர் மறந்துவிட்டார். நேராகவே விசயத்துக்கு வந்திருக்கிறார். இலக்கிய ஆளுமையில் புதுமைப்பித்தனுக்கு பிறகு ஜெயமோகன் என்கிறார். அதிலும் ஓர் வில்லங்கத்தோடே சொல்லி இருக்கிறார். ஜெயமோகனை முந்தியும், புதுமைப்பித்தனை பிந்தியும் வைத்துக் காட்டியிருகிறார். இந்த வில்லங்கத்தோடு கூடிய வேடிக்கையான அவரது ஒப்புமையை இங்கே விரித்து எழுத ஆரம்பித்தால் அது பக்கங்கள் பல கொண்ட கட்டுரையாகப் போகும். வெ.சா. வின் கருத்தை இங்கே வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். புதுமைப்பித்தனை இப்பொழுது போய் பிராண்டுவதிலும், புதுமைப்பித்தனை முன்வைத்து இலக்கியத்தில் உண்மையாக இயங்கியவர்களை மிதிப்பதிலும் வெ.சா.வுக்கு என்ன அத்தனை மகிழ்ச்சி? என்பதையும் வாசகர்களே சொல்லட்டும்.

**** *** **
satajdeen@gmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்