புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

முனைவர் மு.இளங்கோவன்



தமிழ்ப் பாட்டுத்துறைக்குப் புதுச்சேரி மிகப் பெரிய பங்காற்றியுள்ளது. பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம்,தமிழ்ஒளி,தங்கப்பா,இரா.திருமுருகனார்,அரிமதிதென்னகன், தமிழியக்கன் என நீளும் பாட்டுப் படைப்பாளிகள் வாழ்ந்த-வாழும் பகுதி புதுச்சேரி.மரபில் படைப்புகளை இயற்றியுதவிய இப்பெருமக்கள் மரபில் பல்வேறு புதுமைப் படைப்புகளை வழங்கியதுபோல் உலகில் தோன்றிய புதுவடிவம்,வெளியீட்டு உத்திகளைப் பயன்படுத்தத் தயங்கியதில்லை.

‘துளிப்பா’ என இன்று அழைக்கப்படும் கைகூ வடிவைப் பாரதியார் காலத்தில் தமிழ் இலக்கியம் தம் வடிவங்களில் ஒன்றாக உள்வாங்கிகொண்டது.இவ் வடிவைப் பாரதியார் 16.10.1916 சுதேசமித்திரன் இதழில் ‘ஜப்பானிய கவிதை’ என்னும் பெயரில் அறிமுகம் செய்தார். இவரைத் தொடர்ந்து பாரதிதாசன் 01.10.1967 குயில் இதழில் ‘ஹாக்கு’ பற்றி எழுதியுள்ளார்.இவ்வாறு பாரதியார்,பாரதிதாசனால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பெற்ற இவ்வடிவம் தமிழகத்தில் அறிவுமதி,அமுதபாரதி,மித்ரா,ஈரோடு தமிழன்பன்,வையவன், தமிழியலன்,செஞ்சி தமிழினியன் உள்ளிட்ட பல பாவலர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. அதுபோல் புதுவைப் பாவலர்களாலும் மிகச்சிறப்பாக இவ்வடிவம் வளர்க்கப்பட்டுள்ளது. இவ்வளர்ச்சி தனிப்பாக்களாகவும், நூல்களாகவும், பாவரங்காகவும், இதழ்களாகவும், ஆய்வரங்காகவும், மேடைப்பேச்சாகவும், தொகுப்பு நூல்களாகவும் வளர்ந்து நிற்கின்றது.

நூல் முயற்சி
துளிப்பாக்களைப் புதுச்சேரிப் பாவலர்கள் பல்வேறு இதழ்களில் எழுதி வெளிப்படுத்தியதுடன் தனி நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.புதுச்சேரிப் பேராசிரியர் எ.மு.இராசன் அவர்கள் 1985 சூலை மாதத்தில் வெளியிட்ட ‘பாரதப்போர்’ நூல் புதுச்சேரியிலிருந்து வெளிவந்த முதல் துளிப்பா நூலாகும்.இந்நூலில் சமூக நடப்புகளைப் பேராசிரியர் நெஞ்சில் தைக்கும்படி பதிவு செய்துள்ளார்.அரசியல்,அலுவலகம்,வேலை வாய்ப்பு,திருமணம்,பெண்ணடிமை எனச் சமூகத்தின் பல நிகழ்வுகளையும் பதிவுசெய்துள்ளார்.கூட்டு என்னும் தலைப்பில் அரசியல்வாதிகளின் சுயநலத்தை,மழைநீரும் சாக்கடையும் / ஒன்று சேருகிறதே / இது தேர்தல் காலம். என்னும் வரிகளில் நகைச்சுவையாகக் கிண்டல் செய்துள்ளார். அலுவலகர்கள் என்னும் தலைப்பில் காலம் தவறாத / மாலைநேரப் / பறக்கும்படை என்று இன்றைய அரசு அலுவலக நிலையை அழகிய பதிவில் காட்டியுள்ளார்.

சீனு.தமிழ்மணி, சீனு.தமிழ்நெஞ்சன் இருவரும் இணைந்து வெளியிட்ட தீவின்தாகம்(1991(மு.ப.)-1998(இ.ப.)) நூல் புதுச்சேரித் துளிப்பா வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளது.மேலும் இவர்கள் வெளியிட்ட கரந்தடி இதழ் துளிப்பாவை அனைவரும் எழுதத் தூண்டியது.பலருக்கும் உரிய வடிவாகத் துளிப்பாவை எளிமைப்படுத்தி வழங்கியது.நடப்பியல் செய்திகளை எளிய தொடர்களில் வழங்கியதால் அனைவரும் அனைத்துப் பொருண்மைகளிலும் துளிப்பாவை எழுதலாம் என்னும் உந்துதலைத் தந்தது. இவ்விதழும் இவர்களின் துளிப்பா நூலும் தனித்தமிழ் நடையில் வெளிவந்தமை கூடுதல் சிறப்பாகும்.

தீவின்தாகம் நூலில் வெளிவந்த பாக்கள் நாட்டு நடப்பினைக் கனல் கக்கும் சொற்களால் வரைந்து காட்டுகிறது. ‘கண்ட இடங்களில் காறித்துப்பாதீர்கள்’ / இங்கே… இங்கே…துப்புங்கள் / ஒருமைப்பாடு பேசுவோர்முகம் என்று தமிழ்மணி எழுதியுள்ளமை போலி ஒருமைப்பாடு பேசிக் கூச்சலிடுபவர்களை நமக்குக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பாடப் புத்தகங்களில் இந்திய ஆறுகள் / பேசுவது தேசியநீரோட்டம் / காவிரிச் சிக்கல் என எளிமையான வடிவில் இவரின் பாக்கள் ஆழமான செய்திகளைத் தருகின்றது. தமிழநெஞ்சன் கடலைப் பார்த்து எழுப்பும் வினா இதுவரை எந்தப் பாவலருக்கும் தோன்றாதக் கற்பனையாக உள்ளது. நீலமாய்மாறியதேன் உடல் / நஞ்சுண்டாயோ கடலே? / கரைவாயில் நுரை என்று பாடும் தமிழ்நெஞ்சன் தொடர்ந்து துளிப்பா உலகில் செயல்படுபவர். பல நூல்களை வெளியிட்டுள்ளார்.பாலில் குளித்தான் பகவான் / பாலின்றிச் செத்தது குழந்தை / எல்லாம் அவன்செயல் என்று உலக நடப்பு உண்மையைப் புனைவுகள் இல்லாமல் உடைத்துக்காட்டும் திறனைப் பல பாக்களில் காணமுடியும்.

1994 இல் வெளியான செந்தமிழினியனின் ‘பரிதிப்புன்னகை’ நூல் துளிப்பா நூல்களில் குறிக்கத் தக்கதாகும். புகைப்படக்கலையில் வல்லுநரான செந்தமிழினியன் இயற்கையை மிக நயம்பட எடுத்துரைப்பதில் வல்லவர். இடம்மாறும் / நாடோடிகள் / தொட்டிச்செடிகள் / எனவும், வாயில் முழுக்க / ஓவியக்கோலம் / பறவைகளின் எச்சங்கள் எனவும் நம் கண்ணில் கண்ட காட்சிகளுக்கு நிலைத்த வாழ்வுகொடுத்துள்ள பாங்கு போற்றற்குரிய ஒன்றாகும்.

அரிமதிதென்னகனின் ‘புள்ளிகள்'(1994) நூல் பல வகையான செய்திகளைத் தாங்கிய படைப்பாக உள்ளது.நாட்டு நடப்புகள்,இயற்கை இவர் பாடல்களில் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. காலைநேரப்பள்ளி / பாடம் நடத்தும் பறவைகள் / மொழி கற்போமா! என வினவும் பாவலர் இயற்கை நிகழ்வுகளைக் கவிதையாக நயம்பட ஆண்டுள்ளமை புலப்படும்.

புதுவை இளவேனிலின் ‘இந்த’ என்னும் தொகுப்பு 1995 இல் வெளிவந்தது.புகைப்படக்கலையில் வல்லுநரான இளவேனில் தன் நுண்ணோக்குப் பார்வையில் இயற்கை அழகையும் சமூக நடப்பையும் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். வயல்காத்தானுக்குப் / பொங்கல்வைத்தோம் / அத்தனைபேரும் பட்டினியாய் என்று பாடும்பொழுது நம் சிற்றூர்ப்புற நினைவுகளை மெதுவாக உள்ளத்தில் நுழையவிடுகிறார்.இறைவன் பெயரில் உள்ள சிற்றூர்ப்புற மக்களின் நம்பிக்கையை எளிமைப்படுத்திப் பாடும் படைப்பாக இவரின் படைப்பில் பல பாடல்கள் உள்ளன. ஈன்றவளுக்குக் கைமாறு / வெயிலுக்குக் குடைபிடிக்கும் / மரம் என்னும் படைப்பு இயற்கையைத் துளிப்பாவில் அடக்கும் முயற்சியின் வெளிப்பாடு. வள்ளி படிப்பாள் / இந்தியாவின் வளமையை / கிழிந்த தாவணி போர்த்தி என்று வறுமை வாழ்க்கையை முரண் அழகில் இளவேனில் காட்டியுள்ளார்.

புதுவைத் தமிழ்நெஞ்சனின் கட்டைவிரல்(1995) நூல் நாட்டு நடப்பு,இயற்கை,நம்பிக்கைகள் உள்ளிட்ட பொருண்மைகள் தாங்கி வெளிவந்தது. அனைவராலும் போற்றப்பட்டது. பூந்தொட்டியை உடைத்தேன் / மண்ணில்பதியும் வேர்கள் / தன்காலில் நிற்போம் என்று அனைவருக்கும் இயற்கை வழியாக நன்னம்பிக்கை ஊட்டியுள்ளார் தமிழ்நெஞ்சன்.

அரிமதி இளம்பரிதி அவர்களின் ஈட்டி(1995) படைப்புகள் ஈட்டியாகப் பாய்ந்து உள்ளத்தைத் தைக்கிறது.இயற்கையைப் பாடும்பொழுது, வானப் பெண்ணிற்குத் / திடீரென்று / வகிடு எடுத்தது யார்? என்று வினவி மின்னல் காட்சியை நம் மனக்கண்ணில் நிறுத்துகிறார்.

துளிப்பாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி எழுதிவரும் தமிழ்நெஞ்சனின் தீயின்முகவரி 1997 இல் வெளிவந்து பலரின் கவனத்திற்கு ஆளானது.சமூக அவலங்கள்,சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பான கவிதைகள் இத்தொகுப்பில் சிறப்பாக உள்ளன.

பாவலர் ஆலாவின் உயிர்வேலி நூல்(2001) சிற்றூர்ப்புற வாழ்க்கை,உழைக்கும் மக்களின் துன்பவாழ்வு இவற்றை ஆழமாகப் பதிவு செய்துள்ளது.ஊமத்தைச்செடியும் /மாட்டு மூத்திரமும் / இயற்கைப் பூச்சிக்கொல்லி என்று சிற்றூர் உழவராக மாறும் ஆலா, ஆசிரியர்கள் / குப்பை கொட்டுகிறார்கள் / ஆங்கிலப்பள்ளி என்று தமிழ்வழிக் கல்வி வழங்காதவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து புதுச்சேரியில் பல பாவலர்கள் துளிப்பா எழுதியவண்ணம் உள்ளனர்.அப்பாக்கள் நூல்களாக வெளிவந்துள்ளன.அவை :

செந்தமிழினியன், தூறல்விண்ணப்பம் (2004).
தமிழ்நெஞ்சன், பதுங்குகுழி (2004)
பாரதிவசந்தன், யாதெனில் (2004)
ஆலா, திமுரு,(2004)
புதுவை யுகபாரதி, ஒற்றைப்பனை,(2004)
பள்ளி மாணவப்பருவத்தில் படைப்புகளை வழங்கிப் புகழ்பெற்ற
கு.அ.தமிழ்மொழி, சிறகின் கீழ்வானம், (2005)
புதுவை யுகபாரதி, அரசமரம் (2005),
வெ.கலிவரதன், வாக்குமூலம் (2005),
புதுவைத் தமிழ்நெஞ்சன், குடைவள்ளல் (2006),
வெ.கலிவரதன், ஒத்திகை, (2006), இமயக்கல் (2006),
க.காயத்திரி, நாற்று (2006),
அரிமதிதென்னகன், நிலவுக்குள் நிலா (2006),பூக்குள் பூ…பூவாய் (2007),
த.பிரியாபுளோரி, குறுமணல் (2007),
புதுவை இளங்குயில்,மலர்ச்சோலை (2007),
மாநி, சுருக்குப்பை (2007),
ம.ஞானசேகரன், விற்பனைக்குப் புத்தன் (2007), ஆதிக்குடி (2007),
சீனு.தமிழ்மணி,கரந்தடி (2007)

முதலான நூல்கள் புதுச்சேரித் தமிழ்த் துளிப்பா வரலாற்றில் தொடர்ந்து வெளிவந்துள்ள நூல்களாகும்.
விரைவில் துளிப்பா எழுதும் பாவலர்கள் பல நூல்களை வெளியிட உள்ளனர் என்பது தமிழ்ப்படைப்புலகிற்கு ஆக்கச் செயலாக அமையும்.

புதுச்சேரியிலிருந்து துளிப்பாக்களின் வளர்ச்சிக்குக் ‘கரந்தடி’ என்னும் பெயரில்1988 முதல் இதழ் வெளிவருகின்றது.அதுபோல் துளிப்பாவின் வளர்ச்சிக்கு ‘மூவடி’ என்னும் இதழும் 14.12.2007 முதல் வெளிவருகின்றது. நூல்கள்,இதழ்கள் என்று மட்டும் அமையாமல் பாவரங்கம்,ஆய்வரங்கம்,துளிப்பா நூலகம் எனத் துளிப்பா வளர்ச்சிக்குப் புதுச்சேரிப் பாவலர்கள் பல வகையில் பங்களிப்பு நல்குகின்றனர்.ஆண்பாற் பாவலர்களுக்கு ஈடுகொடுத்துப் பெண்பாற் பாவலர்களும் புதுச்சேரியில் துளிப்பா எழுதிவருகின்றமை பராட்டத்தக்க முயற்சியாகும்.

நன்றி:

பாவலர் சீனு.தமிழ்மணி
பாவலர் சீனு.தமிழ்நெஞ்சன்
பாவலர் செந்தமிழினியன்
புதுச்சேரித்துளிப்பாக்கள்(2003),காவ்யா,சென்னை.
மூவடி துளிப்பாத் திங்களிதழ்,புதுச்சேரி

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா


மின்னஞ்சல் : muelangovan@gmail.com

இணையம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்