புதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

வெளி ரங்கராஜன்


புதிய இலக்கிய இதழ் – ‘மணல் புத்தகம்’

(213, முதல் தளம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5)

ஆசிரியர்கள்: சண்முக சுந்தரம், சங்கர ராம சுப்பிரமணியன்

தமிழில் திடீரென்று இலக்கிய சிறுபத்திரிகைகளின் வரவு குறைந்து இடைநிலை இதழ்களின் பெருக்கம் அதிகமாகிக்கொண்டிருப்பது போன்ற தோற்றம் உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில் இலக்கியச் சிறுபத்திரிகைகளின் குணாம்சத்துக்கு வலு சேர்க்கும் விதமாக மணல் புத்தகத்தின் இரண்டாவது இதழ் வெளிவந்திருக்கிறது. நம்முடைய ஆதார படைப்பு சக்திகளுடனும், உத்வேகமளிக்கும் சிந்தனைப் போக்குகளுடனும் நம்முடைய ஆழ்ந்த தொடர்புகளை நாம் மீண்டும் மீண்டும் கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் இலக்கிய இயக்கத்தின் நீரோட்டங்களுடன் நாம் கொள்ளும் உயிரோட்டமான தொடர்பு நிலைகளே அவ்வப்போதைய பின்னடைவுகளைக் கடந்து செல்லும் ஊக்கங்களையும், உற்சாகங்களையும் வழங்கி நம்முடைய உத்வேகங்களை இனம் காண உதவமுடியும்.

ஒலி என்பதை மொழிகளின் இசையாகவும், உடல்களின் விடுதலைக் கீதமகாவும் கண்டு ஒலியின் மொழிகள் குறித்த நுண்ணுணர்வு எவ்வாறு ஒரு நாடக உடலைக் கட்டமைக்கமுடியும் என்பது பற்றிய முருகபூபதியின் கட்டுரை இந்த இதழின் ஒரு சிறப்பான கட்டுரையாக வடிவம் பெற்றுள்ளது. துக்கத்தின் போது எழுப்பப்படும் ஒலிகளின் ஊடாக உருப்பெறும் விடுதலை உணர்வை கிராமப் பெண்களின் குலவை ஒலி, சடங்குகளில் நெளியும் உடல்கள், பீதியில் எழும் அதிர்வுகள், பிரசவ வலிகளின் வேதனை ஒலிகள் என வனத்திலிருந்தும், குகையிலிருந்தும், மரங்களிலிருந்தும், பித்த நிலையிலிருந்தும் நாடக உடலியின் எதிர்வினைகளாக இக்கட்டுரை இனம் காண்கிறது. பிரதிகளில் நாடகத்தைத் தேடும் மத்திய வர்க்க மனநிலையிலிருந்து மாறுபட்டு நம்மைச் சுற்றியுள்ள இயற்கையிலிருந்தும் வாழ்க்கைத் துடிப்பின் ஓசைகளிலிருந்தும் நாடக உடலையும், நிலத்தையும் தேடும் முருகபூபதியின் தொடர்ந்த அவதானிப்பாக இக்கட்டுரை வடிவம் பெற்றுள்ளது.

பறக்கும் ரயில் தடங்களும், அதி யதார்த்தத்தின் வேலைத் தொகுதியாகிவரும் என் நகரமும் என்ற சங்கர ராம சுப்பிரமணியனின் கட்டுரை அமெரிக்காவின் எந்தப் பிரச்சினையும் இன்று உலகப் பிரச்சினையாக உருமாறி படித்த வர்க்கத்தின் குடும்ப உறவுகளிலும் எதிர்பார்ப்புகளிலும் தன் சாயலைப் பரப்புவதையும், சிறு தப்பித்தலுக்கான சாத்தியங்களாக ரயில் பாதைகளின் நுண்ணிய வழித்தடங்களையும் கூர்மையாக இனம் காண்கிறது. இவ்விஷச் சூழலை இன்னும் எதிர்கொள்ள போர்ஹேயின் வட்டப் புதிர்வழிகளும் மஞ்சள் குறியீடுகளும் உதவக்கூடுமோ என்கிற உணர்வை போர்ஹேயின் உரையாடலும், கவிதைகளும் வழங்குவதைப் பார்க்கமுடிகிறது.

இப்போது எஞ்சியுள்ளதெல்லாம்
மங்கலான வெளிச்சம், வெளியேற முடியா நிழல்
மற்றும் என் தொடக்கங்களிலிருந்த பொன்னிறம்
தொன்மங்கள் மற்றும் காவியங்களிலிருந்துமான
அஸ்தமனங்களே, புலிகளே, பிரகாசமே
இன்னுமதிகம் இச்சிக்கப்படும் பொன்னே
என் கைகள் பற்றிக்கொள்ள விரும்பும் உன் ரோமங்கள்

*****

ஆனால் ஏதோவொன்று தெளிவற்ற
பைத்தியக்காரத்தனமான இந்தப் புராதன சாகசத்துக்குள்
என்னைத் தள்ளுகிறது, நானும் தொடர்கிறேன் –

என்று போர்ஹேயின் கவிதை வரிகள் அசதாவின் மொழியாக்கத்தில் அண்மை கொள்கின்றன.

இன்னும் சி. மோகனின் கவிதையுலகின் தன்னிலை மற்றும் முரண் குறித்த இடிபாடுகளும், சிறுதெய்வங்களின் பெருங் கலைஞனாக லக்ஷ்மி மணிவண்ணனை இனம் காணுதல்களும், குடியானவனின் வெற்றி தோல்விகளை ஒத்த கவிஞர் விக்ரமாதித்யனின் ஊடாட்டங்களும் சிறப்பான இலக்கியப் பதிவுகளாக உள்ளன.

பகுத்தறிவின் பகட்டின்றி கவிதைகளும் கட்டுரைகளுமாக எளிய கொண்டாட்டமும், புதிர்த்தன்மையும் சஞ்சரிக்கும் உலகில் பயணிக்கிறது இவ்விதழ்.

– .

Series Navigation

வெளி ரங்கராஜன்

வெளி ரங்கராஜன்