தமிழ்செல்வன்
உலகத்தை உலுக்கிய சம்பவம்
செப்டம்பர் 9, 2001. உலகத்தையே உலுக்கிய சம்பவம் நடந்த தினம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த “இரட்டை கோபுரங்கள்” என்று சொல்லப்பட்ட “உலக வர்த்தக மையம்” (இரண்டு மிக உயர்ந்த கட்டிடங்கள்), ஒஸாமா பின் லாடனின் பயங்கரவாத அமைப்பான அல் கைதாவின் தற்கொலைப்படை பயங்கரவாதிகளால் கட்த்தப்பட்ட விமானங்கள் செலுத்தப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்ட தினம் அது. அந்தத் தாக்குதல் பயங்கரவாதத்தின் கொடூரத்தை உலகமே உணர வைத்த நிகழ்ச்சியாக அமைந்தது.
கிரவுண்ட் ஜீரோ
கிட்டத்தட்ட 3000 உயிர்களைக் கண நேரத்தில் பலி வாங்கிய அந்த இடம் புண்பட்ட பூமியாகக் (Ground Zero) கருதப்படுகிறது. இந்தப் பூமியிலிருந்து 600 அடி தள்ளி இருந்த ஒரு இத்தாலிய பாணி கட்டிடமும் அந்தத் தாக்குதலில் சேதம் அடைந்தது. ஜுலை 2009-ல் ‘சோஹோ பிராபர்டீஸ்’ என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் ஷெரிஃப் எல் கமால் என்பவர் அந்தக் கட்டிடத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் 4.85 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். ‘அராப் லீக்’ என்கிற அமைப்பின் செக்ரடரி ஜெனெரல் அமிர் மூஸா என்பவரின் மருமகனான நூர் மூஸா என்பவரும் ஷெரிஃப் எல் கமாலின் பங்குதாரர் ஆவார்.
கொர்டோபா திட்டம்
‘கொர்டோபா திட்டம்’ என்ற அமைப்பின் செக்ரடரி ஜெனெரல் இமாம் ஃபெய்ஸல் அப்துல் ராஃப் அந்த இடத்தில் மசூதி அடங்கிய ஒரு இஸ்லாமிய சமூக மையத்தைக் கட்டலாம் என்று யோசனை வழங்கியதை ஷெரிஃப் எல் கமாலும் ஒத்துக்கொண்டார். கட்டப்போகின்ற இஸ்லாமிய சமூக மையக் கட்டிடத்திற்கு “கொர்டோபா இல்லம்” (Cordoba House) என்று பெயர் வைத்துள்ளார்கள்.
கொர்டோபா என்பது ஸ்பெயின் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்ட இடம். இங்கே தான் இஸ்லாமியர்கள் காலிஃபேட் ஸ்தாபித்து, எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதினோறாம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தினார்கள். தங்கள் வெற்றி, ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிபத்தியத்தின் சின்னமாக ஒரு மிகப்பெரிய மசூதியை கட்டி அதற்கு கொர்டோபா மசூதி (Cordoba Mosque) என்று பெயர் வைத்தார்கள். எனவே ’கொர்டோபா’ என்றாலே இஸ்லாமியர்களின் வெற்றியையும் அதிகாரத்தையும் குறிக்கும் சொல்லாகக் கருதப்படுகிறது. முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கான அமெரிக்கச் சங்கம் (American Society of Muslim Advancement) என்கிற அமைப்பின் தலைவராகவும் இமாம் ஃபெய்ஸல் அப்துல் ராஃப் உள்ளார். அந்த அமைப்பும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.
எதிர்ப்பு
கொர்டோபா திட்டத்திற்கும் மசூதி அடங்கிய இஸ்லாமியச் சமூக மையம் எழுப்புவதற்கும் அமெரிக்க அரசும் அதன் அங்கமான நியூயார்க் நகர மன்றமும் அனுமதி அளித்துள்ளன. பயங்கரவாதிகளால் 3000 பேர்களுக்கும் மேல் கொல்லப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் இஸ்லாமிய மையமும் மசூதியும் கட்டுவதற்கும், அதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்ததற்கும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இக்கட்டிடத்தைச் சகிப்புத் தன்மைக்கான சின்னமாகவும், மத நல்லிணக்கத்துக்கான ஒரு பாலமாகவும், அமெரிக்காவில் நிலவும் மதச் சுதந்திரத்திற்கான சாட்சியாகவும் கருதுவதாக கொர்டோபா திட்ட நிறுவனரும் அமெரிக்க அரசும் கூறினாலும், பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிறுத்துவர்கள், யூதர்கள், ஹிந்துக்கள் என்று அமெரிக்கக் குடிமக்களாக இருக்கும் அனைத்து சமூகத்தவர்களும் ஒன்றிணைந்து “அமெரிக்காவை இஸ்லாமிய மயமாக்குவதை நிறுத்தவும்” (Stop Islmaisation of America) என்கிற அமைப்பை ஏற்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “இஸ்லாமிய தீவிரவதத்திற்கு எதிரான மனித உரிமை கூட்டமைப்பு”, (Human Rights Coalition Against Radical Islam) “ஜிகாத் வாட்ச்” (Jihad Watch) போன்ற அமைப்புகளும் போராட்டங்களில் கலந்துகொண்டன. “ஜனநாயகத்திற்கான அமெரிக்க இஸ்லாமிய மன்றம்” (American Islamic Forum for Democracy) என்கிற முஸ்லிம்களின் அமைப்புகூட இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டது. மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு இதை விட வேறு வழிகள் இருக்கின்றன என்றும், இந்தத் திட்டத்திற்கான நிதியுதவி இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் இந்த முஸ்லிம் அமைப்பே கூறுகிறது.
சந்தேகத்திற்குறிய நோக்கம்
போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, இந்தத் திட்டத்தின் நோக்கம் அமெரிக்க மக்களிடையே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அராப் லீக் அமைப்பின் சம்பந்தம் இருப்பதாலும் (உலக வர்த்தக மையத்தை தரைமட்டமாக்கிய பயங்கரவாதிகளுள் ஏழு பேர் சௌதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்), கொர்டோபா என்ற குறிப்பீடு இஸ்லாமிய ஆக்கிரமிப்பைக் குறிப்பதாலும், இக்கட்டிடம் அமெரிக்க மக்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும், ஆத்திரத்தையும் கூட்டுவதற்காகவே கட்டப்படுகிறது என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். மேலும், பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தைத் தரைமட்டமாக்கிய இடத்தில் கொர்டோபா இல்லம் என்கிற பெயரில் மசூதி கட்டுவதன் மூலம் அமெரிக்காவைத் தாங்கள் வென்று விட்டதாக்க் காட்டிக்கொள்ளும் நோக்கமும் இத்திட்டத்தினால் உறுதி செய்யப்படுவதாக மக்கள் நினைக்கின்றார்கள்.
நிதியுதவி எங்கிருந்து?
மேலும் இந்த திட்டத்திற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெளிவு படுத்தவில்லை. சௌதி அரேபியாவுடனான சம்பந்தம் இருப்பதால் அந்த நாட்டிலிருந்தும் மற்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளிடமிருந்தும் நிதியுதவி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க மக்கள் நம்புகிறார்கள். “ஜனநாயகங்களைக் காப்பதற்கான அமைப்பு” (Foundation for Defense of Democracies) என்கிற அமைப்பைச் சேர்ந்த கிளாடியா ரோஸெட் என்கிற பத்திரிகையாளரும், கனெக்டிகட் மாநிலத்தின் அரசாங்க அங்கத்தினர் ஜோ லிபர்மேன் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஸாரா பாலின் (ஜனாதிபதி பதவிக்கான நியமனத் தேர்தலில் போட்டியிட்டவர்), நியூட் கிங்ரிச் (முன்னாள் சபாநாயகர்), பீட்டர் கிங், ரிக் லேஸியோ ஆகியோர்களும், “நிதியுதவி வெளிநாடுகளிலிருந்து வருகிறதா, தீவிரவாத அமைப்புகளிடமிருந்து வருகிறதா அல்லது வேறு எங்கிருந்து வருகிறது என்பது மக்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும்” என்று கூறுவதோடு அல்லாமல் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறார்கள். ஜனநாயகத்திற்கான அமெரிக்க இஸ்லாமிய மன்றத்தின் தலைவர் டாக்டர் ஜுஹ்தி ஜாஸ்ஸர் “மூலதனம் போடுபவர்கள் யார், பணம் எங்கிருந்து வருகிறது என்பவை வெளிப்படையாக இருக்கவேண்டும். அயல் நாடுகளிலிருந்து நிதியுதவி வருவது இத்திட்டத்திற்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதையே காட்டும்” என்று தெளிவு படக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்ப்பு
2001 செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்துபோனவர்களின் குடும்பத்தினர், “எங்கள் உயிருக்குயிரானவர்கள் மறைந்து போன இவ்விடத்தின் புனித்த் தன்மையை மாசுபடுத்துவதே இத்திட்டம். இத்திட்டம் எங்களையும் இறந்துபோன எங்களின் பிரியமனவர்களையும் அவமானப் படுத்துவது போல இருக்கிறது” என்று மனம் வெதும்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “எந்த மத்த்தின் பெயரால் கொடூரத் தாக்குதலை நட்த்தினார்களோ, அதே மத்த்தின் சின்னத்தை இந்த இடத்தில் கட்டுவது அருவருக்கத் தக்கதாக இருக்கிறது” என்று கோபம் மேலிடச் சொல்கிறார்கள்.
முஸ்லிம்களின் எதிர்ப்பு
முஸ்லிம் சமுதாயத்திலேயே சில பிரிவினர் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர். “இது சுஃபி தத்துவத்திற்கு எதிரானது” என்றும், ”நாங்களும் அமெரிக்கர்கள் தான், எங்களுக்கு எதிராக போர் நடந்த இடம் இது. இங்கு மசூதி கட்டுவது தவறு. மசூதி தொழுகை நடத்தும் இடம். இந்த இடம் அதற்கு ஏற்றதல்ல” என்றும் “தங்களுடைய சக அமெரிக்கர்களைப் புரிந்து கொள்ளாத எங்களின் சக முஸ்லிம்களின் செயல் எங்களுக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றும் சில முஸ்லிம்களே வெளிப்படையாக கூறுகின்றனர். கனடா நாட்டைச் சேர்ந்த ரஹீல் ரஸா, தரெக் ஃபதாஹ் ஆகிய முஸ்லிம் பிரபலங்கள் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
ஆதரவு
நியூயார்க் நகர மக்களில் பெரும்பான்மையான (கிட்டத்தட்ட 65%) மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், நியூயார்க் நகர மன்றமும் அமெரிக்க அரசும் அனுமதியளித்துள்ளன. நியூயார்க் மேயர் மைகேல் ப்ளூம்பெர்க் திட்டத்திற்குப் பெரும் ஆதரவாளராக இருக்கிறார். மன்ஹாட்டன் பர்ரோ தலைவர் ஸ்காட் ஸ்டிரிஞ்ஜர், அமெரிக்க பிரதிநிதிகள் ஜெர்ரால்ட் நாட்லர் மற்றும் கெய்த் எல்லிஸன், நியூயார்க் ஸெனேடர் டேனியல் ஸ்குவாட்ரான், நியூயார்க் நகரமன்ற சபாநாயகர் கிரிஸ்டின் குயின், நகர மன்ற வழக்கறிஞர் பில் டி பிலாஸ்ஸியோ மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
பசுத்தோல் போர்த்திய புலியா?
கொர்டோபா திட்டத்தின் முதலாளி இமாம் ஃபெய்ஸல் அப்துல் ராஃப் அமெரிக்காவில் ஒரு முகமும் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்லாமிய நாடுகளில் ஒரு முகமும் காட்டிக்கொண்டிருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். இவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் மத நல்லிணக்கத் தூதுவராக அவரை இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்புகிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக அவர் இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்று மத நல்லிணக்கத்தைப் பிரசாரம் செய்கிறார். அமெரிக்காவில் பேசும்போதும், அமெரிக்காவின் ஆங்கிலப் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும்போதும், “கட்டடம் மசூதி அல்ல. அது ஒரு இஸ்லாமிய மையம். அனைத்து மதங்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இஸ்லாமிய அணுகுமுறையே இத்திட்டம். அமெரிக்க அரசியல் சாஸனம் பெருமளவில் இஸ்லாமிய ஷரியா சட்டத்துடன் ஒத்துப் போகிறது. அமெரிக்காவில் சிறுபான்மையின மக்கள் பரிபூரண சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அமெரிக்கச் சுதந்திர தின உறுதி மொழியைக் கவனித்தால் அது இஸ்லாத்துடன் ஒத்துப் போகக்கூடிய கொள்கைகள் உடையதாக இருப்பது தெரியும். சொல்லப்போனால், இஸ்லாமிய நாடுகளின் அரசியல் சாஸனத்தைவிட அமெரிக்க அரசியல் சாஸனம் மேன்மையானது” என்று கூறுகிறார்.
ஆனால், 2005-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தென்-ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பேசும்போது, இமாம் ராஃப், “அல் கைதா இயக்கத்தின் கைகளில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் ரத்தத்தைவிட அமெரிக்காவின் கைகளில் உள்ள முஸ்லிம்களின் ரத்தம் மிக அதிகம்” என்றும் பேசியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட அவருடைய சொற்பொழிவுகளின் ஒலிநாடாக்கள் சமீபத்தில் கிடைத்துள்ளதாக ”பயங்கரவாதத்தைத் துப்பறியும் திட்டம்” (Investigative Project on Terrorism) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதில் அவர் சௌதி அரேபியாவின் வஹாபிய கலாசாரத்தை ஆதரித்தும், இஸ்ரேல் என்கிற யூத நாட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அல் கைதா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் ஒஸாமா பின் லாடனை ஆதரித்தும், ஹெஸ்பொல்லாஹ், ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களை ஆதரித்தும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஒபாமாவின் கருத்து
ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அலுவலகம் இப்பிரச்சனையில் தலையிடாமல் இருந்தது. ஆனால் ஆகஸ்டு 13 வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் நடந்த ரம்ஜான் நோன்பின் இப்ஃதார் நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி ஒபாமா, “ஒரு அமெரிக்கக் குடிமகன் என்ற முறையிலும், இந்நாட்டின் ஜனாதிபதி என்ற முறையிலும், இந்நாட்டில் உள்ள மற்றவர்களுக்கு அவர்களுடைய மதக் கோட்பாடுகளை அனுசரிக்க எந்த அளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு முஸ்லிம்களுக்கும் உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன். ஒரு தனியார் இடத்தில் குறிப்பிட்ட நகர மன்றத்தின் சட்டதிட்டங்களின்படி ஒரு வழிபாட்டுத் தலம் அமைத்துக்கொள்ளும் உரிமையும் இதில் அடங்கும். இது அமெரிக்கா! மதச் சுதந்திரத்தின் மீதான நம் பிடிப்பும் பொறுப்பும் அசையாமல் இருக்க வேண்டும். இது நம்முடைய சகிப்புத்தன்மையை மட்டுமல்லாமல் பயங்கரவாதிகளுக்கு நேர் எதிராக இருக்கும் மற்றவர்களுக்கான நம்முடைய மரியாதையையும் காட்டுவதாக அமையும்” என்று பேசியுள்ளார்.
இப்பிரச்சனையில் தலையிடாமல் இருந்த ஜனாதிபதி ஒபாமாவின் மேற்கண்ட பேச்சு, பொதுவாக அமெரிக்காவிலும் குறிப்பாக நியூயார்க்கிலும் கடும் விமரிசனத்திற்கு உள்ளானது. தன்னுடைய பேச்சு கடும் விமரிசனத்திற்கு உள்ளானதைத் தெரிந்துகொண்ட ஜனாதிபதி ஒபாமா, “நான், அமெரிக்கா மதச் சுதந்திரத்தை அளிக்கிறது என்றும், நிறம், மதம், இனம் வித்தியாசமின்றி இந்நாடு அனைவரையும் சம்மாக பாவிக்கிறது என்றும் சொன்னது புண்பட்ட பூமியில் மசூதி எழுப்புவதை நான் ஆதரிப்பதாக அர்த்தமாகாது. நான் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை, இனியும் சொல்ல விரும்பவில்லை. நம் நாட்டில் உள்ள மக்களின் உரிமை பற்றித்தான் நான் பேசினேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இமாம் ராஃபின் வினோத திட்டம்
இமாம் ராஃப், எகிப்தில் ஹனி-அல்-வாஜிரி என்பவருக்கு ஃபிப்ரவரி 7, 2010 அன்று அளித்த பேட்டியில், “அமெரிக்க முறை இஸ்லாம் ஒன்றை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அமெரிக்கக் கலாசாரத்துடன் ஒத்துப்போகும் இஸ்லாமிய முறையை ஸ்தாபிக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்தின் இயற்கைத் தன்மைக்கும் ஒத்துப் போகுமாறு உலகளாவிய இஸ்லாத்தை நிறுவ வேண்டும். நியூயார்க்கில் கட்டப்படும் மசூதியானது உலக அளவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பெருமை கொள்ளும் விதமாக இருக்கும். ஒரு அழகிய பெண்ணை வசப்படுத்தும் போது எப்படி நடந்து கொள்வோமோ அப்படித்தான் யூதர்களுடனும் கிறுத்துவர்களுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிமுக்குறிய குணத்துடன் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். அப்போது தான் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். அதே முறையில் தான் கவர்னர்களையும், மேயர்களையும், மற்ற அரசியல் நிறுவனங்களையும் நம் மதக் கொள்கைகளுக்கு ஏதுவாகச் செயல்படுமாறு செய்யமுடியும்” என்று விரிவாகத் தன் திட்டங்களைக் கூறுகிறார்.
பொதுவான கருத்து
புண்பட்ட பூமியில் மசூதி எழும்புவதை எதிர்க்கும் 60% சதவிகித அமெரிக்க மக்கள், “இஸ்லாமியர்கள் எந்த பூமியின் மீது படையெடுத்து வெற்றி கொண்டாலும், அப்பூமியில் மசூதிகள் கட்டித் தங்களின் வெற்றியையும் ஆக்கிரமிப்பையும் பிரகடனப் படுத்துவது வழக்கம். மசூதிகள் இஸ்லாமியர்களின் வெற்றிச் சின்னங்கள். மெக்காவில் பாகனியர்களை வெற்றி கொண்டு மசூதி கட்டியதும், ஸ்பெயின் நாட்டில் கொர்டோபாவை வெற்றி கொண்டு மசூதி கட்டியதும், ஜெருசேலத்தில் உள்ள அல் அக்ஸா மசூதியும், டமாஸ்கஸில் உள்ள உம்மயாத் மசூதியும், இந்தியாவில் அயோத்தி, காசி, மதுரா போன்ற கோவில்களை அழித்துக் கட்டிய ஆயிரக்கணக்கான மசூதிகளும், இதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. எனவே புண்பட்ட பூமியில் மசூதி எழுப்புவதும் அதற்கு கொர்டோபா எனப் பெயர் சூட்டுவதும் அமெரிக்கா மீதான வெற்றியைப் பிரகடனப் படுத்தவே” என்று அமெரிக்கர்கள் பலர் கருதுவதாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் இந்திய முஸ்லிம்கள் கருத்து
மசூதிக்கு எதிராகப் பல அமெரிக்க முஸ்லீம்கள் கருத்து தெரிவித்துள்ளதைப் போலவே அமெரிக்காவில் உள்ள இந்திய முஸ்லிம்களும் தங்களின் கருத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். வாஷிங்டனில் உள்ள “அமெரிக்கவின் இந்திய முஸ்லிம்கள் கழகம்” (Association of Indian Muslims of America) என்ற அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான கலீம் கவாஜா, “இந்த மசூதி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தேவையில்லாத இந்தப் பிரச்சனைக்கு முடிவு ஏற்படுத்துவது அமெரிக்க முஸ்லிம்கள் கையில் தான் இருக்கிறது. பெரும்பான்மையான அமெரிக்கர்களின் மனவுணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு மதிப்பளித்து, நியூயார்க்கில் உள்ள முஸ்லிம்கள் அந்த மசூதியையும் இஸ்லாமிய மையத்தையும் கிரவுண்ட் ஜீரோவிலிருந்து மிகவும் தள்ளியுள்ள கீழ் மன்ஹாட்டன் பகுதியில் கட்டவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்க முஸ்லிம்களுக்கும் மற்ற அமெரிக்கர்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்பிரச்சனையும் முடிவுக்கு வரும். இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு லட்ச அமெரிக்க முஸ்லிம்களாகிய நாங்கள் மற்ற அமெரிக்க முஸ்லிம்களிடம் இந்த வேண்டுகோளை வைக்கிறோம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரச்சனைக்கான முடிவு?
இதனிடையே கொர்டோபா திட்டத்து முதலாளிகள் கொர்டோபா இல்லம் என்ற பெயரை மாற்றி அவ்விடத்திற்கு “பார்க் 51” என்று பெயர் சூட்டியுள்ளனர். திட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்தப் பெயர் மாற்றத்தை வரவேற்கவில்லை. மொத்தத்தில், அமெரிக்கர்கள் 60:40 என்கிற விகிதத்தில், எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களுமாகப் பிரிந்து இருக்கிறார்கள். எதிர்ப்புகள் வலுப்பெற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பார்க் 51 திட்டமும் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்திய காங்கிரஸ் (செனட் மற்றும் பிரதிநிதி சபை) தேர்தல்களில் மிகவும் பின்னடைவு அடைந்துள்ள ஒபாமா அரசும் கிரவுண்ட் ஜீரோவில் நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கிறது.
மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை என்கிற பெயரில் ஒபாமா அரசு பெரும்பான்மை மக்களின் மனவுணர்வுகளை மதிக்காமல் நடந்துகொள்ளுமா? அந்த்த் திட்டம் அதை அரங்கேற்றுபவர்களின் மத ஆதிபத்தியத்தை பறைசாற்றுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்
- உள்ளொன்று வைத்து…
- வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை
- இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்
- தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்
- பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா
- மரித்தோரின் திருநாளில்
- பத்திரமும் தைரியமும்
- ஐந்தறிவு பார்வை!
- மாடவீதி
- சுவர் சாய்ந்த நிழல்கள் …!
- திரவநீர் கனவுகள்
- எதிர்பார்ப்புகள்
- பிரியாத பிரிவுகள்
- மழை நாள்
- மீட்சியற்ற வனத்தின் கானல்
- ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:
- பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி
- தாய்மை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3
- வெளிச்சம்..
- முகம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்
- புண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து?
- தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி
- முள்பாதை 54
- காற்றோடு காற்றாய்…
- கானலென்றறியாமல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3
- நம்பிக்கை
- நினைவிழத்தல்
- தண்டனை