இளைய அப்துல்லாஹ்
கோட்டையில் இருந்து புறப்பட்டது அது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு துன்பம் வரும். எனக்கு அடிக்கடி மனiவியின் கட்டளையின் பேரில் இப்பொழுது கட்டாயமாக மாலையில் புகைவண்டியில் ஏறித்தான் வரவேண்டுமென்பது அவள் வாக்கு. அவனுக்கு புகை வண்டியென்றால் அவ்வளவு பிரியம். அதில் பயணம் செய்தால் தான் அவளுக்கு பரம திருப்தி. வீட்டிலுள்ள ஏனைய அங்கத்தவர்களும் புகைவண்டிப்பயணம் என்றால் கண்களை விரித்து சந்தோஷப்படுவார்கள்.
இந்த அவஸ்த்தையை விலக்கிவிட்டு ஒரு ஏழு மணி நேர பஸ் பிரயாணம் எனக்கு இலகு. ஆனால் குடும்பத்தில் எல்லோரும் பஸ்ஸை வெறுக்கிறார்கள். பஸ் வெறுப்புக்குரிய ஒரு பொருளாகிவிட்டது அவர்களுக்கு.
விட்டேத்தியாக வீட்டில் இருந்து வெளிக்கிட்டு முதன் முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து பழைய “கோழிக்கூடு” சாரத்தோடு அதில் கொழும்புக்கு வந்தது மட்டும் தான் எனது இருபத்தியிரண்டு வயது வாழ்க்கையில் இரண்டாவது பயணம். அதில் விரக்தி மட்டும் தான் மிஞ்சியிருந்தது. முதலாவது ரயில் பயணம் மாங்குளத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு அது பத்தாம் வகுப்பு படிக்கும் போது அது வதனியை காதலிக்கும் காலம். அவளும் அந்த பயணத்தில் இருந்தாள்.
அப்பொழுது அது ஒரு பிடித்தமானதும் சுவாரஸ்யமானதுமான ஒன்றாகத் திகழ்ந்தது. மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து போனது இன்பம். புகைவண்டி என்றால் பாட்டுப்பாடி சந்தோஷிப்பது என்று தான் நினைத்திருந்தோம். அப்படியே எல்லோரும் பாடிக்கொண்டு மட்டக்களப்பில் நடந்த நாடக விழாவுக்குப் போனது நல்லதுதான். ஆனால் கத்தி கத்திப்போனதிலை எங்கடை நாடகம் மூன்றாவது இடம். நாங்கள் பேசவேண்டிய வசனம் ஒன்றும் எனக்கு வரவில்லை. தொண்டை அடைத்துவிட்டது.
கடார்…. ர்…. ர்…. புகைவண்டி ஓட்டுனர் மொத்தப்பிரயாணிகள் மீதும் வஞ்சம் தீர்க்கிறார். ஒரு பெரிய குலுக்கு… நித்திரை கொண்டவர்கள் எல்லோரும் எழும்பிவி;ட்டார்கள். பிறேக்கை இப்பிடி பிடிக்கத் தேவையில்லை. என்ஜின் றைவரில் எரிச்சல் வந்தது. ஒரு கவனமுமில்லாமல் இருக்கிறார். இப்படியான செயல் செய்பவர் வீட்டில் மற்றவர்களோடு புழங்கும் போதும் இப்பிடித்தான் நடந்து கொள்ளுவார்கள்.
ஜேர்மனியில் இருந்து வந்த ஒரு தமிழ்க்குடும்பம் மிகவும் எரிச்சல் பட்டார்கள். எப்படியோ திருகோணமலைக்கு அது காலையில் போய் சேர்ந்து விடும் என்று தந்தை சொன்னார். அப்பா எங்கடை ஊபான் இப்பிடி இல்லையேப்பா மூத்தவள் அந்த தந்தையோடு எரிந்து விழுந்தாள். “அப்பா சைச” என்று திட்டினாள். ஜேர்மனியில் “ஊபான்” சுரங்க ரயில்கள் வலு நேர்த்தியாகவும் செளகரியமாகவும் இருக்கும். அதில் பயணம் செய்தால் களைப்பு வராது இங்கு களைப்படைவதற்காகவே ரயிலில் அவர்கள் கொண்டு போவதாகப்படுகிறது.
உறங்கலிருக்கை என்று அதற்கு பணமும் இருநூற்றைம்பது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் அதில் படுத்தால் தூக்கத்துக்கு பதிலாக எரிச்சல் தான் வரும். ஆனால் மனைவி சொல்வாள். இதுதான் இலகு நல்லாப் படுத்துக்கொண்டு வரலாம். அவளுக்கு நித்திரை வரும். எனக்கு வராது. ஒருநாள் இன்னுமொரு யோசனை சொன்னாள் கொழும்பிலை இருந்து ஏறுங்கோ. உங்களுக்கு உறங்கலிருக்கையில் வர முடியாமல் இருந்தால் சிரமமாக இருந்தால் முதலாம்வகுப்பு கட்டில் படுக்கையில் வாருங்கோ!.
கட்டில் படுக்கைக்கு என்ன விலை என்று கேட்டேன். உறங்கலிருக்கையின் இரண்டாம் வகுப்புக்கு இரண்டு மடங்கு ஐநூறு ரூபா. பரவாயில்லை நல்லாக தூங்கிக் கொண்டு போக முடியுமென்றால் பரவாயில்லை. அந்த யோசனை சரியாகப்பட்டது. ஆனால் ரயில்வே காரருக்கு என்ன ஓர வஞ்சனையோ தெரியாது. பதுளைக்கு உறங்கல் படுக்கை வசதி உண்டு, வவுனியாவுக்கு உண்டு மட்டக்களப்புக்கு உண்டு. ஆனால் திருகோணமலைக்கு அந்த வசதி இல்லை. இது ஓர வஞ்சனை இல்லாமல் வேறையென்ன ? பாதகமில்லை படுத்துப்போவோம் என்றால் படுக்கை வண்டி இல்லை.
இந்தச் சேதி மனைவிக்குத் தெரியவர இன்னுமொரு யோசனை சொன்னாள். பரவாயில்லை ஐநூறு ரூபா கொடுத்து முதலாம் தர படுக்கை டிக்கட் எடுத்து அதில் “கல்லோயா” சந்தி வரைக்கும் நல்லாத் தூங்கிக் கொண்டு வாங்கோ ஏனெனில் முதலாம் வகுப்பு டிக்கட் உங்களிடம் இருக்குத்தானே…. ஆகவே இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கையில் பிறகு திருகோணமலைப்பெட்டியில் வரலாம்.
இந்த உறங்கலிக்கை விவகாரம் எனது மனைவிக்கு வலு அத்துப்படி. ரயில் பயணம் என்பது அவளுக்கு ஒரு செளகரியமான விடயம். அது ஏன் “கல்லோயா சந்தி” வரைக்கும் நித்திரை வகுப்பு அதுக்குப் பிறகு இரண்டாம் வகுப்பு என்றால் அது பெரியதை.
கொழும்பில் இருந்து ரயில் எட்டு முப்பதுக்கு புறப்படும் மாலை நேரம். ~தபால் ரயில்| ஊரில் உள்ள சின்னச் சின்ன ஸ்டேஸன்களுக்கெல்லாம் தபால் பை கொடுத்துக் கொண்டு போவதற்கென்றே இந்த ரயில் போகிறது. சனி, ஞாயிறு தினங்களில் எட்டு மணிக்கு புறப்பட்டு விடும். அதில் ஒரு கைங்கரியம் நடைபெறும் இரண்டு ரயில்கள் ஒன்றாகப் ப+ட்டப்படும். இரண்டு ஊருக்குப் போகும் இரண்டு ரயில்கள் ஒன்றாகப் பின்னிக் கொண்டிருக்கும். முன்னுக்கு என்ஜினோடு பக்கத்தில் படுக்கை வண்டி அதனைத் தொடர்ந்து ஏழு எட்டுப் பெட்டிகள் ஆட்களுக்கு பிரயாணிகளுக்கு ஏற்றமாதிரி மட்டக்களப்புக்கு பெட்டிகள் கொழுவியிருக்கும். பின்பக்கம் திருகோணமலைக்கு.
ஒவ்வொரு நாளும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் பெட்டிகள் நிறைய பிரயாணிகள் இருப்பார்கள் மக்கள் உறங்கலிருக்கை ஆறு மணிக்கு முதலே “புக்” ஆகிவிடும் மாலை ஆறுமணிக்கு பிறகு வருவோருக்கு சாதாரண மூன்றாம் வகுப்பு நெருக்கடியான இருக்கைக்கு மட்டும் தான் டிக்கட் கிடைக்கும்.
இதில் ஒரு முக்கியமான அவதானம் தேவை. இரண்டு கொழுவல்களும் விடுபடும் இடம் “கல்லோயாச் சந்தி” முன் துண்டு அப்படியே மட்டக்களப்புக்கு போகும். பின் பெட்டிகள் திருகோணமலைக்கு. சில வயசாளிகள் தனிய வந்தால் திருகோணமலைக்காரர் மட்டக்களப்புக்கு போகிற புதினமும் நடப்பதுண்டு. மட்டக்களப்பு படுக்கையில் படுத்து வரச்சொல்லி விட்டாள் மனைவி.
அது தான் பெரிய தர்ம சங்கடமாய் போய்விட்டது. படுக்கை வண்டியின் படுக்கையில் படுத்தால் நித்திரை வரவேமாட்டன் என்கிறது. கல்லோயா சந்தியில் மாறாமல் விட்டால் அது பிறகு நித்திரை வந்து மட்டக்களப்பில் தான் விழிப்பு வரும். எனக்கு தூங்குவது என்றால் நல்ல நித்திரை கொள்ள வேண்டும். இடைநடுத்தூக்கம் எல்லாம் திருப்திப்பட்டு வராது. இந்தப் பரிசோதனை முயற்சியில் நான் இறங்கிவிடுவோம் என்று நினைத்தேன் துணிந்துவிட்ட பின்பு பிறகென்ன.
படுக்கை வண்டி மட்டக்களப்பு பெட்டியோடு இணைத்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பயம் வந்தது தான். ஆனால் ஏறியாச்சு பெட்டி தேடி படுத்தாச்சு. 2 படுக்கைகள், ஒரு ஏணி, ஒரு வுழடைநவ சகிதம் அந்த படுக்கைப்பெட்டி இருக்கும் இப்படி தனித்தனி ரூம்களாக எட்டு ரூம்கள் சில ரயில்களில் பத்து ரூம்கள் இருக்கும், ரூம் என்றால் வசதிதான். குடும்பம் கணவன் மனைவி போவதற்கு வசதி நீண்டதூரம் போகும் காதலர்களுக்கு நல்ல வசதி கதவை மூடிக்கொண்டு லைற்றை அணைத்து விட்டுத் தூங்க முடியும். யாரும் தொந்தரவு படுத்த மாட்டார்கள் ஒரு முறை டிக்கட் பரிசோதகர் வந்து சரிபார்ப்பார் அவ்வளவு தான் படுக்க வேண்டியது தான்.
ஆனால் எனக்கு டிக்கட் வாங்கும் பொழுது இருந்த உற்சாகம் படுக்கையில் இருக்கும் போது அல்லது படுக்கும் போது வருகுதில்லை. எனது ரூமில் இன்னொருவர் வந்தார். படித்த மனிதர் போலத் தென்பட்டார். சிரித்தார் என்னைப் பார்த்து “எங்கை போறியள்” என்று கேட்டார். “திருகோணமலைக்கு…” என்றேன் தோளைக்குலுக்கி சிரித்து விட்டு “கல்லோயாச் சந்தியில் மாறவேண்டும்” என்றார் “நான் மட்டக்களப்பு போகிறேன்” சொல்லிவிட்டு ஏணியைச் சாத்தி மேல் படுக்கையில் ஏறினார். ஆடை மாற்றிவிட்டு படுத்தார். கொஞ்ச நேரத்தில் குறட்டை வந்தது. நிம்மதியாக நித்திரை கொள்கிறார். ஏனெனில் அவர் மட்டக்களப்பு போகிறார்.
கல்லோயாச் சந்தி எப்பொழுது வரும். புகைவண்டி அப்படியே நீளமாக என்னை மட்டக்களப்புக்கு கொண்டு போய்விடுமோ என்ற நினைப்பில் கொட்டக்கொட்ட முழித்திருக்கிறேன். நித்திரை வரவில்லை.
வெளியில் போய் டிக்கட் பரிசோதகரிடம் கேட்டேன் “எத்தினை மணி மட்டிலை கல்லோயாச் சந்திக்கு புகைவண்டி போகும்”.
தனது கை மணிக்கூட்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு சொன்னார் “ஒரு மூன்று மணிபோல…” அவர் விறு விறென்று போய் விட்;டார். படுக்க முதல் சலம் பண்ணுவோமென்று சலகூடக் கதவைத் திறந்தால் “குப்” பெனறு அசுத்த மெல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்த மணம். சலம் வரவில்லை. கொஞ்சம் படுத்தால் நல்லது என நினைத்து படுத்தேன்.
தூக்கத்துக்குப் போக முதல் இத்தனை மணிக்கு எழும்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தூங்கினால் அந்த நேரம் தானாக விழிப்பு வரும். இதனை அனுபவப+ர்வமாக பலர் உணர்ந்திருப்பர். எனக்கும் அப்படி நடந்ததுண்டு. இன்றும் அதே உத்தி. அத்தோடு “மொபைல்” போனில் எலாம் செற் பண்ணி வைத்தேன். மூன்றுமணிக்கு போகும் என்றார் டிக்கட் பரிசோதகர். நான் இரண்டரை மணிக்கு “எலாம்” வைத்தேன். படுக்க வேண்டும் அத்தோடு எழும்பவும் வேண்டும் சிக்கல்தான் பயம் வேறு. படுத்தேன் என்ன நினைத்தாரோ என்ஜின் ட்றைவர் “கடார்….” எல்லாப் பெட்டிகளும் அடிபட சடார் சடார் ஒரு பிறேக் போட்டார் தூக்கம் போச்சு.
எனது வாழ்நாளில் இலங்கையில் புகைவண்டியில் படுத்துப்போன முதல் பயணம் இது தான் எந்த ஒரு நிலமையையும் சமாளிக்கும் திறன் வேண்டும் என நினைப்பவன் நான். இதற்கு புகைவண்டிப் பயணத்துக்கு மேலதிக திறமை ஒன்றாவது வேண்டும்.
அனேகமாக ஐரோப்பாவில் பல சுரங்க ரயில்களில் போயிருக்கிறேன். அத்தோடு அதிவேக ரயில்கள் வேகரயில்கள் என்று ஆனால் இங்கு மாதிரி எங்கும் இல்லை. இந்தியாவில் கூட மின்சார ரயில்கள் நன்றாக இருக்கும்.
ஜேர்மனியில் ஊபான், பிரஞ்சுக்காரர்கள் தங்களது எல்லாப்பயணங்களையும் மெட்றோவை வைத்தே திட்டமிடுவார்கள். அவ்வளவு நேர்த்தி, நேரம், ஒரு நிமிடமும் தவறாமல் இருக்கும். லண்டனில் அண்டர் கிறவுன்ட் ெ ?ாலன்டில் ட்றாம்ப் ரயில் என்று மக்களின் போக்குவரத்து மக்களுக்கு செளகரியப்படுத்தப்பட்டிருக்கிறது. லண்டனில் தூர ரயில் பயணங்கள் செளகரியமாக இருக்கும். கையடக்க கொம்பிய+ட்டரை பாவிக்கக்கூடிய மின்சார வசதி, ஆசுவாசமாய் இருந்து தூங்கி பயணக்களைப்பே விளங்காமல் இருக்கும் அங்கு யாரையும் யாரும் தொந்தரவு படுத்த மாட்டார்கள். கள்ளர் பயமில்லை. பயணத்துக்கு உத்தரவாதமும் செளகரியமும் இருக்கும்.
கொட்டக் கொட்ட விழித்திருந்து பிறேக் மற்றும் புகைவண்டியின் பெட்டிச் சத்தம் கட.. கட எல்லாம் தாண்டி கல்லோயாச் சந்திக்கு அதிகாலை மூன்று முப்பதுக்கு வந்து நின்றது. இடையில் திடாரென்று என்ன நினைப்பாரோ என்ஜின் டைவர் நடுக்காட்டிற்கு மத்தியில் புகை வண்டியை நிற்பாட்டி வைத்திருப்பார். மக்களுக்கு ஏன் நிப்பாட்டி வைத்திருக்கிறார் என்று தெரியாது. ஒரு அறிவிப்பும் இல்லை ஐரோப்பிய நாடுகள், லண்டனில் என்றால் ரயில் நிப்பாட்டி வைத்திருந்தால் றைவர் விலா வாரியாக எனவுன்ஸ் பண்ணுவார். ஏன் நிற்கிறது. எப்போது போகும். காரணம் என்ன ? மன்னிப்பு எல்லாம்.
இங்கு மக்களைப் பற்றி மதிப்பவர் யார் கூட்டு மொத்த ஒன்பது பத்து மணித்தியாலம் ஏன் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை திருகோணமலைக்கு. பிரயாணிகளின் எந்த தேவையும் ப+ர்த்தி செய்யப்படுவதில்லை. மல கூடம் நாற்றம். சமயத்துக்கு தண்ணீர் வரமாட்டாது. இன்னும் ஆயிரத்து எண்ணூறுகளில் போட்ட புகை வண்டிப்பாதைகள் சமிக்ஞை மரங்கள் என்று அப்படியே இருக்கிறது. இலங்கையில் உள்ள புகையிரத நிலையங்களின் அமைப்பைப்போல லண்டன் வெளிப்புற ரயில் நிலையங்களின் அமைப்பும் இருக்கும். அவர்கள் தானே இங்கு முன்பு கட்டியது.
கல்லோயாச் சந்தியில் நிற்பாட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இனி எப்போ எடுப்பார்கள் என்பது தான் ஒவ்வொரு பயணிகளின் எண்ணத்தில் இருக்கும். மட்டக்களப்பிற்கு பெட்டிகளை பிரித்தெடுத்து வேறொரு என்ஜினில் மூட்ட வேண்டும். இந்த கைங்கரியத்துக்கு சில நேரம் அரை மணித்தியாலம் சில நேரம் ஒரு மணித்தியாலம் சில நேரம் அதற்கும் மேலும் எடுப்பார்கள். வேகப்பயணம் என்ற வார்த்தையே கிடையாது. ஏதோ ஓடுவார்கள் அவ்வளவு தான்.
முதலாம் தர படுக்கைப் பெட்டியில் இருந்து இறங்கி எது திருகோணமலை போகிறது என்று சரியாக விசாரித்து அதில் ஏறி இரண்டாம் தர உறங்கலிருக்கையில் வந்து அமர்ந்தேன். இனிமேல் உந்த விவகாரமே வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன். இனிமேல் போவதென்றால் பேசாமல் ஓரேயடியாக திருகோணமலைப் பெட்டியில் ஏறுவது என்று முடிவெடுத்தேன். தனியப்போகும் போது பஸ் பயணம் போதும் என்றும் நினைத்தேன். மனைவியோடு போகும் போது அவள் கட்டாயமாக புகைவண்டியில் தான் போவாள் என்பது மாற்ற முடியாத விதி.
பிரயாணிகள் சிலர் அயர்ந்து தூங்குகிறார்கள். சிலர் தூக்கம் வராமல் விழித்திருக்கிறார்கள். சிலர் சாமான்களில் கவனமாக இருக்கிறார்கள். சில சத்தங்கள் பழக்கப்பட்டால் தூக்கத்துக்கு இடைஞ்சல் இருக்காது.
லண்டனில் ?ீத்ரோ விமான நிலையத்திற்கு பக்கத்தில் வீடு இருந்தது எனக்கு முதலில் சத்தம் கர்ணகடூரமாக இருக்கும். விமானம் கீழிறங்குவது எங்களது வீடுகளுக்கு மேலால் ஒரு பயமும் இருந்தது. விமானம் தற்செயலாக விழுந்து விட்டால்… ஆனால் அதெல்லாம் போகப்போக பழகிவிட்டது. எத்தனை விமானங்கள் இறங்கினாலும் நித்திரைவரும். ரயில் சத்தம், பிறேக் எல்லாம் பழக்கப்பட்டவர்கள் ஆழ்ந்து தூங்குகிறார்கள்.
இடையில் வந்த புகைவண்டி பாதுகாவலர் ஜன்னல்களை மூடச் சொன்னார். கள்ளர் பயம். கள்ளர் புகை வண்டியினுள் ஏறி பெண்களின் காது கழுத்தில உள்ள ஆபரணங்களை கழற்றச் சொல்லி கொள்ளையடிப்பதும் சில இரவு புகைவண்டிகளில் நடப்பதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் யாழ்தேவியில் அப்படி நடப்பதுண்டாம். காட்டுப்பகுதியில் சிக்னல் கிடைக்காமல் புகைவண்டி நிற்கும் நேரம் பார்த்து கள்ளர் தங்களுடைய வேலையைக் காட்டி விடுவார்களாம். ஆகவே பெண்கள் முன்பு போல பெரீசாக நகை நட்டுகள் அணிந்து வருவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
புகை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. குலுக்கல் ஆட்டத்துடன் ஓடுகிறது. நித்திரை வரமாட்டேன் என்கிறது மூன்றாம் வகுப்பு உறங்கலிருக்கைக்கு எனது பின் ஆசனத்துக்குப் பக்கத்தில் மல சல கூடம் இருக்கிறது. ஒருவர் போய்விட்டு வந்தார். சள சள வென்று தண்ணீர் எனது காலுக்கடியில் வந்து அப்படியே முன்னாலும் ஓடுகிறது. பயணிகள் காலைத் தூக்க முதல் தண்ணீர் பெட்டி முழுக்க ஓடிவிட்டது. பைப் ஒன்று உடைந்த சேதி பின்னர் தான் உள்ளே இருந்து வந்தவர் சொன்னார். தண்ணீர் எங்கும் தண்ணீர்.
மனைவி வீட்டில் சுகமாக கட்டிலில் தூங்கிக் கொண்டிருப்பாள். கல்லோயாச் சந்தி கடந்தால் ஒருவகை நிம்மதி புகைவண்டி திருகோணமலை பயணிகளுக்கு வரும். எனக்கும் வந்தது. இன்னும் இரண்டரை மணித்தியாலங்களுக்குள்ளால் போய் விடலாம் எனும் சந்தோஷம் தான்.
சிலர் தூக்கத்தில் இருந்து எழும்பி போத்தல் தண்ணீரால் வாய் கொப்பளிக்கிறார்கள். சிலர் முகம் கழுவுகிறார்கள். மல சல கூடத் தண்ணீர் நின்று விட்டது ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை. தண்ணி தாங்கியில் முடிந்திருக்கும். பெட்டி முழுக்க தண்ணி. காலைத்தூக்கி கம்பியில் வைத்த படி பிரயாணிகள் ஒருவர் சீற்றக்கடியில் பேப்பர் போட்டுப்படுத்தவர் மல கூடத் தண்ணீரால் நனைந்துவிட்டார்.
அனேகமாக எல்லோருக்கும் யன்னலோர இருக்கை தான் பிடிக்கும் பெரியவர் சிறியவர் என்றில்லாமல் எல்லோருக்கும் அது ஏனென்று தெரியாது அப்படித்தான். எனது மனைவிக்கும் அது தான் விருப்பம்.
கடார்…. சடார் பிறேக் பிடிக்கிறார் றைவர். சீனன்குடா வந்து விட்டது. ஆமிக்காரர் நேவிக்காரர் இறங்குகிறார்கள் கூடவே கொஞ்ச பொதுமக்களும்.
இப்பொழுது தான் ஏதோ வைச்சது எடுக்கப்போறவர் மாதிரி என்ஜின் றைவர் வேகம் கூட்டுகிறார். எப்படியாவது திருகோணமலை பிரயாணிகளை அந்த ஸ்டேஸனில் இறக்கி விட வேண்டும் என்ற ஆவல் போல… “ராசா இப்படி ஏற்கனவே ஓடியிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்….” மனம் சொன்னது.
கடார்…. சடார்…. நேரம் காலை 6.30 திருகோணமலை ஸ்டேஸனில் பிறேக்போட்டார் என்ஜின் றைவர்.
**
nasnawas@yahoo.com
- அன்னையின் அணைப்பு
- Workshop/Seminar for Literary Translation. 4th June (Saturday), 2005, 5th June (Sunday)
- IYAL VIRUDHU PROGRAM
- பரிமளத்திற்கு இறுதிப் பதில்
- About low standard of TamilNadu state board science text books.
- வடக்கு வாசல்
- கூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….
- கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்
- அஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்
- ஸ்ட்ராபெர்ரி சாஸ்
- புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் ? (When Will Be the Next Space Shuttle Flight ?)
- நனவு
- கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!
- உடையும் மதிப்பெண்கள்
- சந்தன
- மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்
- ஒன்று பட்டால்…
- ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ
- ஈவேராவின் இதிகாசப் பொய்கள்
- தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி
- ஆண்-பெண் நட்பு
- புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….
- புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!
- அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்
- திருவண்டம் – 1
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)
- புகைவண்டி
- கணக்கு வாத்தியார்