பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

கரு.திருவரசு



அலைகடல் என்பதையும் அலைக்கடல் என்பதையும் ஒன்றுபோலக் கருதி எழுதுகிறார்கள். அது சரியா?

அலை + கடல் = அலைகடல்.

கடல் என்பதன் பொருள் தெரிந்ததுதான். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்து முந்நீர் என்று பெயர்பெற்றது கடல்.

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள” என இராமாயணத்திலும், “வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டு” எனத் திருவாசகத்திலும் வரும் “ஆழி”தான் கடல்.

அலை என்பதற்கும் பல பொருள் உண்டுதான். நாம் இங்கே அலைவதை – அசைவதை – அசைப்பதை மட்டும் பொருளாகக் கொள்வோம்.

வெறும் கடலை மட்டும் குறிப்பிடும்போது அலைகடல் என்றாலும் அலைக்கடல் என்றாலும் குற்றமில்லை. ஒரு நிகழ்ச்சியோடு கடலை இணைத்து எழுதும்போது அலையும் கடலுக்கும் அலையை உடைய கடலுக்கும் உள்ள கருத்து வேறுபடும்.

ஓயாமல் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவனை அலைகடலுக்கு ஒப்பிடலாம். கடல் அசைந்துகொண்டே – அலைந்துகொண்டே இருப்பதால், சுறுசுறுப்பாகத் தன் பணிகளைச் செய்துகொண்டிருப்பவனை அலைகடலுக்கு உவமையாக்கலாம்.

அவனை அலைக்கடல் போன்றவன் என்று சொல்லக்கூடாது. அது அவனுக்குப் பொருத்தமான உவமை ஆகாது.

அலைகடல் = அலையும் கடல், அசையும் கடல்.
அலைக்கடல் = அலையையுடைய கடல்


thiruv36@yahoo.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு