பிறந்த நாள் கொண்டாட்டம்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

பாரி பூபாலன்


‘அப்பா! இந்த முறை என் பிறந்த நாளை நீ, நான் மற்றும் அம்மா மட்டும் கூடிக் கொண்டாடலாம் ‘ என்று தன் குழந்தை கூறியபோது அவனுக்கு அளவிட முடியாத சந்தோஷம்.

எப்படி இந்த முறை என் மகளது பிறந்த நாளை மிகவும் சிக்கனமாகக் கொண்டாடலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் போது இவ்வாறு அவள் கூறியவுடன் அவனுக்கு ஒரு சிக்கலான விடுகதைக்கு விடை கண்டுபிடித்தது போல் பெரும் சந்தோஷம்.

சென்ற முறை நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை எண்ணிப் பார்த்தான். ஏகப்பட்ட நண்பர்கள் ஏகப்பட்ட பொம்மைகளை எடுத்துக் கொண்டு, தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவனது குழந்தைக்கு எல்லையில்லா ஆர்வமும் மகிழ்ச்சியும். ஆர்வத்துடன் மிக அவசரமாய் ஒரே சமயத்தில் கிடைத்த இருபதுக்கும் மேலான பரிசுப் பொருட்களின் உறையினை கிழித்து ஒவ்வொன்றாய் திறந்து பார்த்ததுடன் சரி. அவ்வளவுதான். மூலையில் கிடக்கும் பொம்மைகளோடு பொம்மையாஇய் இவைகளும் சேர்ந்து கொண்டன. இரண்டாவது தடவை எடுத்து விளையாடியது அவற்றுள் ஒன்று அல்லது இரண்டுதான். பணம் போட்டு வாங்கிய ஒவ்வொன்றும் உபயோகமில்லாமல் மூலையில் உறங்கி வீணாயிற்று.

அவர்கள் வாங்கிவரும் பொம்மைகள் மட்டுமல்லாமல், அதற்கு ஈடாக அவனும் அவர்களது குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி வைத்திருந்தான். இங்கு நடக்கும் பிறந்த நாள் கொண்டாட்டத்தினால் வாங்கப்ப்டும் பொம்மைகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போதும், அதனால் ஏற்படும் செலவினங்களை கூட்டிக் கழித்துப் பார்க்கும் போதும் அவனுக்குள் எரிச்சலும் வெறுப்பும். ஒரு பொம்மைக் கடை வைத்தால் நன்றாகப் பிழைப்பு நடத்தாலாம் போலிருந்தது. பிறந்த நாள் பரிசின் மதிப்பே இல்லை என்றாகிவிடும் அளவுக்கு அங்கே ஏராளமான பரிசுகள் குவிந்து விடும். இது தனது பொம்மைதானா என்றே தெரியாத அளவுக்கு எண்ணிலடங்காப் பொம்மைகள் இங்குள்ள குழந்தைகளுக்கு. தன் குழந்தையின் அறையில் குவிந்து கிடக்கும் பொம்மைகளையும் விளையாட்டுப் பொருட்களையும் பார்க்கும் போது, ‘போதும் இந்த விளையாட்டுப் புருட்கள், இனி ஒன்றும் வேண்டாம் ‘ என வெறுப்புடம் முடிவெடுக்க வைக்கும்.

குழந்தை இந்த முறை இப்படிக் கூறினாலும், அடுத்த முறை எல்லோரையும் கூப்பிட வேண்டுமென்றால், அது ஒரு ‘பரிசுகள் இல்லாத ஒரு பிறந்தநாள் ‘ விழாவாகக் கொண்டாட வேண்டுமென்று அவன் திட்டமிட்டான். பரிசுப்பொருளின் உறையைக் கிழித்து அதனுள் என்ன இருக்கிறது என் ஆவலுடன் திறந்து பார்ப்பதில் உள்ள சந்தோஷத்தையும், பரிசு கொடுப்பதால் கிடைக்கக்கூடிய (நண்பர்களது) மகிழ்ச்சியையும் தான் தடுப்பதாக இருந்தாலும். இந்த செயல்பாட்டினால் ஏற்படும் விரயத்தினை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தேவைக்கு அதிகமான பொம்மைகளாலும், பரிசுப் பொருட்களாலும் தன் குழந்தையின் போக்கு கெட்டுப் போகாமல் இருக்கவும், அதே சமயத்தில் ‘பிறந்த நாள் பரிசுகளுக்குத் தடை ‘ எனக் கூறுவதால் வருந்தும் வரும் நண்பர்களது மனம் நோகாமலிருக்கவும் என்ன செய்யலாம் என யோசிக்கையில் அவனுக்கு சில வழிகள் தென்பட்டன. நண்பர்களை கொண்டுவர விரும்பும் பரிசுப் பொருட்களை சில பொது நிறுவனங்களுக்கு நன்கொடையாக கொடுக்க வைக்கலாம். அவற்றில் சில:

1. Boys & Girls Clubs of America www.bgca.org – தற்போதுள்ள திட்டத்தின் மூலமாக இங்குள்ள சிறுவர்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள சிறுவர்களுக்கு உதவி செய்யலாம்.

2. Humane Society www.hsus.org – ஏராளமான திட்டங்கள், அதுவும் குழந்தைகள் விரும்பக்கூடிய திட்டங்கள்.

3. Goodwill www.goodwill.org – தனி மனிதர் முதல் ஒரு சமூகம் வரை சென்றடையக்கூடிய உதவித்திட்டங்கள்.

4. Ronald Mcdonald House www.rmhc.com – குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் உதவக்கூடியத் திட்டங்கள்.

5. Salvation Army www.salvationarmyusa.org – கிறிஸ்துவ மதத்தோடு இணைந்த உதவி நிறுவனம்.

இனி வரும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பரிசுப் பொருள் இல்லாக் கொண்டாட்டமாகத்தான் இருக்கப் போகிறது அவனது வீட்டில். சிலருக்கு இது வேடிக்கையாகவும், விநோதமாகவும், கஞ்சத்தனமாகத் தோன்றினாலும், அவனுக்கு இது ஒரு வீண் விரயமில்லாததாகவும், தன் குழந்தைக்கு அதனது பொருட்களின் மதிப்பை அறிய வைப்பதாகவும், குழந்தையின் அறை சிறிது ஒழுங்குடன் இருக்க உதவி செய்வதாகவும்தான் தோன்றியது.

***

pariboopalan@hotmail.com

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்