பிரிய மனமில்லை

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

ஆ. மணவழகன்


இளமையிலிருந்தே
எனக்கு உன்னைப் பிடிக்கும்!
என் வீட்டாருக்கும்
உன்னைப் பிடிக்கும் என்பதால்….
நம் உறவிற்கு
இடையூறு எண்ணியதில்லை அவர்கள்!
உன் முகம் காணாத காலை
முழுமையாய்த் தோன்றுவதில்லை எனக்கு!
என் கை படாது
கண் உறங்குவதில்லை உனக்கு!
என் அந்தரங்கம் முழுவதும்
நீ அறிவாய்!
என் மேனியெங்கும் மேகமாய்
தினம் படர்வாய்!
உன்னை நினைத்தாலே
மகிழும் என்மனம்!
உன்னைப் பிரிந்தாலும்
பிரியாது உன் மணம்!
வெளியூர் பயணத்திலும் – உன்னை
வேறாய் எண்ணி
விட்டுச் சென்றதில்லை நான்!
அவசரத்தில்,
அழைத்துச் செல்ல மறந்த
அந்த நாட்களிலோ….
அழகழகாய்
பலரைப் பார்த்து
ஆசை கொள்ளும் மனம்!
‘விலையைக் கொடுத்து
நோயை வாங்குவானேன் ?! ‘
விலக்கி வைக்கும் அறிவு!
வெட்கப்பட வைக்கும் நீ,
என்னிடம்
வெட்கப்பட்டுப் பார்த்ததில்லை நான்!
என்னை
அழகாய்க் காட்ட ஆசைகொண்டு
சில நேரம், அழவும் வைத்திருக்கிறாய்!
என் தேவைக்காக
தினமும் தேய்கிறாய்!
இத்தனை
பிரியமுடன் வாழ்ந்துவிட்டோம்…
உன்னைப் பிரிய மனமில்லை!
நகக்கண் அளவே ஆனபோதும்
நங்கை உன்னைக் கட்டிக் கொண்டேன்!
இன்று வாங்கிய சலவைக் கட்டியோடு
பழைய கட்டி….
உன்னையும் சேர்த்து ஒட்டிக் கொண்டேன்!
—-

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்