ரோஸாவசந்த்.
(இங்கே எதிர்வினைகளுக்கான என் எதிர்வினைகளையே ‘நேர்வினைகள் ‘ என்று சும்மானாச்சுக்கும் அழைத்து கொள்கிறேன். நியாயமாய் ‘கடிதங்கள் ‘ பகுதியில் வெளியாகியிருக்க வேண்டிய விஷயம், கொஞ்சம் பெரிதாக வந்துள்ளதால் இப்படி தலைப்பு கொடுக்க வேண்டியதாகவிட்டது. ஒன்று, இரண்டு என போட்டு எழுதுவது படிப்பவர்களின் வசதிக்காகவே அன்றி, இதற்கும் பைபிளுக்கும், அகதிவிண்ணப்பத்திற்கும், சொல்லபோனால் ஷோபாசக்தியின் ‘கொரில்லா ‘ நாவலுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லையென, குறிப்பாக யமுனா ராஜேந்திரனுக்கு, சொல்லிகொண்டு தொடங்குகிறேன்.)
1. (i) முதலில் திண்ணை ஆசிரியர் குழுவிற்கு. சென்ற இதழில் என் கடித்தை தலைப்பு குடுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தீர்கள். அதற்கு முதலில் என் நன்றி. அதற்கு சரஸ்வதியை பற்றிய ஸ்லோகத்தை படமாக தந்திருந்தது கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருப்பதாக எனக்கு பட்டது. நீலகண்டனின் ‘அறிவியல் கட்டுரை ‘க்கு வந்திருக்கவேண்டிய படத்தை என் கட்டுரைக்கு வைத்துவிட்டதாக தோன்றியது. ஆனாலும் சிரமம் எடுத்து அதை செய்ததற்கு மிகவும் நன்றி. திண்ணை வெளிவந்த சமயத்தில் என் கட்டுரையில் டேவிட் ஹாரிசனின் வலைபக்க முகவரி இடம் பெறாமல், நான் எழுதியது மொட்டையான ஒளராக இருந்தது. அப்போது படித்தவர்கள் இப்போது சேர்க்கபட்டுள்ள முகவரியை குறித்து கொள்ளலாம். அதை பிறகு சேர்த்த திண்ணை குழுவினருக்கு மீண்டும் நன்றி.
(ii) நீங்கள் அறிவுறுத்தியபடி என்னுடைய இந்த கட்டுரையில் மாமி, அம்பி போன்ற வார்த்தைகளை கிட்டதட்ட நீக்கிவிட்டேன். தலைப்பில் உள்ள அம்பிச்சு என்ற வார்த்தை யாரையும் குறிப்பிடவில்லை. அது நான் திண்ணையில், பெருமையுடன் அறிமுகம் செய்யும் புதிய வார்த்தையான ‘வொயிட் மெயில் ‘ என்பதுடன் தொடர்புடையது. அது முழுக்க ஒரு கருத்தாக்க்கத்தின் பெயர். இத்தனை நாட்களாய் கறுப்பின மக்களை கேவலபடுத்தும் விதமாய் ‘ப்ளாக் மெயில் ‘ என்ற வார்த்தையை திண்ணை உட்பட்ட, பல தளங்களில் குற்ற உணர்வே இல்லாமல் பயன்படுத்தியுள்ளோம். நான் திண்ணையில் அறிமுகம் செய்யும் இந்த புதிய வார்த்தையால் எந்த கெடுதலும் நிகழபோவதில்லை, என்பதால் அதை நீக்கவில்லை. பிறகு உங்கள் இஷ்டம்!
இதை செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லையெனினும், பிறறின் வார்த்தைகள் (நீலகண்டன் ரவி ஸ்ரீனிவாஸை ‘அவாள் ‘ என்றது, இந்து பத்திரிகையின் சாதி, குறித்து மஞ்சுளா, நீலகண்டன் பேசியது என்று பல உதாரணங்கள் உண்டு. சென்ற இதழில் கூட ‘வெக்கங்கெட்ட பிறவிகள் ‘ (விஸ்வாமித்ராவின் கடிதம்) என்றும், பாகிஸ்தனியர்களை ‘தே. மவன் ‘ என்று குறிபிடுவதாக குறிப்பிடும் வார்த்தையும் (நரேந்திரனின் கட்டுரை) உள்ளது. நரேஷ்கூட தனது கடிதத்தில், என்னை ‘வக்ரபுத்திகாரன் ‘ (அதுவும் தவறான தவலடிப்படையில்) என்று சொல்லியுள்ளார். இன்னும் உதரணங்கள் உண்டு, அவைகள் தவிர இன்னும் எவ்வளவோ அவதூறுகள்) நீக்கபடாமல் என்னை மட்டும் நிர்பந்திப்பது நியாயமாக எனக்குபடாவிட்டாலும், அந்த வார்த்தைகளைவிட என் கருத்துக்கள் முக்கியம் என்று நினைப்பதால் எந்த வீம்பும் காட்டாமல் மாற்றியுள்ளேன். மற்றவர்களின் கட்டுரைகளை பற்றி விமர்சித்து பேசும்போது, அதில் உள்ளதை மேற்கோள் காட்டி எழுதும்படி (திண்ணையில் பல குற்றசாட்டுகள் மொட்டையாய் இருக்கும்போது) கேட்டது எனக்கு வியப்பளித்தாலும், அதையும் முடிந்தவரை செய்துள்ளேன். எதிர்வினை வந்தால் மிச்சத்தையும் செய்வேன்.
(iii) நரேஷ் சென்ற இதழில் என்னை குறித்து பொய்யான, அபாண்டமான பல தகவல்களை முன்வைத்துள்ளதால் சில விஷயங்கள் குறித்து எழுதும் கட்டாயத்தில் நான் உள்ளேன். நான் ‘வீரப்பனின் ஆதரவாளன் ‘ என்று ஒரு அபாண்டமான குற்றசாட்டை வைத்துள்ளார். அதை பிரசுரித்துள்ளீர்கள். (என்னை கேட்டதுபோல், அவரை ஆதரங்களை, மேற்கோள்களை முன்வைக்கும்படி ஏனோ நீங்கள் கேட்கவில்லை. பரவாயில்லை.) இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் பரவலாய் நான் எழுத தொடங்கும்போது, என் முழு அடையாளமும் தெரியத்தான் போகிறது. ‘பொடா ‘ போன்ற சட்டங்கள் விளையாடும் தமிழகத்தில் நான் வாழ நேரிடும்போது, இது எனக்கு ஆபத்தளிப்பதாய், என் மீதான ஒரு வன்முறையாய் இருக்ககூட வாய்புண்டு, என்று நீங்கள் கருதாதது எனக்கு வியப்பளிக்கிறது. எது எப்படியிருப்பினும் அதற்கு முழுமையாய் நான் பதில் சொல்லவேண்டியிருக்கிறது. நரேஷிற்கு எழுதிய பதிலிலும் பல மற்றங்கள் செய்துள்ளேன். இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாதவனாய் இருப்பதை, மிகுந்த தாழ்மையுடனும், பணிவுடனும் சொல்லிகொள்கிறேன்.
திண்ணையில் கட்டுரை எழுதும் சின்ன உத்தேசம் கூட, எனக்கிருக்கும் வேலை பளுவின் இடையில், எனக்கில்லை. சிலவற்றுக்கு எதிர்வினைகளாகவே இந்த கட்டுரை எழுதபடுகிறது. என் busy வேலை நேரத்தின் நடுவில், நீங்கள் கேட்டுகொண்டபடி மாற்றங்களையும் செய்துள்ளேன். இதை எப்படி வெளியிடுவதாயினும் அது நீங்கள் வைத்துகொண்டுள்ள நியாயங்கள், தர்மங்களை சார்ந்ததாக இருக்கும். நன்றி!
2. (i) காலச்சுவடு கண்ணனும், மற்ற அறிஞர்கள் போலவே, சாமர்தியமாக என்னுடைய பதிவுகள் விவாதகள உள்ளிடுகையை கண்டுகொள்ளாமல் எழுதியுள்ளார். ரவி என்னுடைய உள்ளிடுகை குறித்து (கண்ணனின் எழுதியுள்ளதின் எவ்வளவு அபத்தம் என்று நான் சுட்டி காட்டியுள்ளதாக ) எழுதியும் கண்ணன் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பரவாயில்லை. பதிவுகளில் முன்வைத்த எனது சில கருத்துக்களை சிறிது திருத்தத்துடன் இங்கே மீண்டும் வைக்கிறேன் -குறைந்தபட்சம் கண்ணனின் பார்வைக்கு போகவேண்டும் என்பதற்காக.
(ii) கருப்பின் தொகுபாளர்களான சோபாசக்தியும், சுகனும் ரெஸ்டோரண்டில் பாத்திரம் கழுவும் வேலையை செய்கிறார்கள். இனப்பிரச்ச்னை, போர் காரணமாக மட்டுமின்றி, தமிழகம் ஈழதமிழருக்கு இழைத்த துரோகங்களில் ஒன்றான கல்வி மறுப்பு காரணமாய், நமக்கெல்லாம் கிடைத்த நிறுவனமய படுத்தபட்ட ஒரு கல்வி அவர்களுக்கு கிடைக்கவில்லை. இருவருக்கும் தந்தையின் அணுக்கமோ, குடும்பரீதியாய் கிடைக்கும் இலக்கிய அறிவோ, அல்லது வாரிசு ரீதியான பத்திரிகை ஆசிரியர் என்ற பதவியோ வாய்க்க பெறவில்லை. அவர்களுடைய வருவாயில் உபரி -suplus- என்று எதுவும் இருப்பதாகவும், அதன்மூலம் ஒரு பத்திரிக்கை நடத்தமுடியும் என்றும் தோன்றவில்லை. அவர்களுடைய வாழ்க்கை, எல்லா ஈழதமிழர்கள் போலவே பல துன்பங்கள் நிறைந்ததாயினும், ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில் தஞ்சம் கிடைத்தபின்பும், மிகவும் அடிமட்ட தளத்தில் புரியும் கடின உழைப்பில் கிடைக்கும் வருவாயை கூட கொண்டு தங்களின் வாழ்நிலையை உயர்த்திகொள்ளாமல், தங்களது சேமிப்பை தமிழகத்திற்க்கு கொண்டு போய், வளமையாய் தொகுப்பும் கொண்டு வருகிறார்கள். இதில் எல்லாம் நேர் எதிர் தளத்தில் இருக்கும், சகல வசதிகளும், அரசு அளிக்கும் கல்வியும் (எலெட்ரிகல் இஞ்சினீயர் என்று கேள்விபடுகிறேன் )இன்ன பிற வசதி வாய்ப்புகளும் வாய்க்கபெற்ற கண்ணன், ஒரு கல்விதுறை அறிவுஜீவிகளின் தளத்தில், வேறு மொழியில், வேறு நாட்டில், நடைபெற்ற ஒரு ஸோகல் விவகாரத்தை தெரியவில்லை (அதை தானும் கூட சரியாய் அறிந்திராதபோது ) என்று சொல்லி, அ. மார்க்ஸை மட்டுமில்லாமல் (அது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை ), ஷோபசக்தி, சுகன் குறித்தும் வைக்கும் நக்கல் மிக மிக அசிங்கமானது. இதை ஜீவன் கந்தைய்யாவும், டா. ஜே. தமிழனும் பதிவுகள் விவாதகளத்தில் கண்டித்து இருக்கிறார்கள். இது குறித்து ஜீவன் கந்தைய்யா எழுதுயுள்ள ஒரு வரி, அதற்கு சாத்தியமாகும் பல (அர்த்தமுள்ள) வாசிப்புகள் காரணமாய் என்னை கவர்ந்தது. ‘அ.மார்க்சுக்கு எதிராக காலச்சுவடு கண்ணன் ‘சிஃபி டாட் கொம் ‘மில் தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகைக்கு ஒரு தத்துவப் பிரக்ஞை உண்டு! ஈராக்கிற்கு எதிராக ஜார்ஜ்புஷ் செய்துவரும் பிரச்சாரத்திற்கு நிகர். ‘
(iii) ஒரு அதிமேதாவி பாணியில் கண்ணன் காலச்சுவட்டில் வைக்கும் நக்கலும் அபத்தமானது. இது குறித்த எனது உள்ளிடுகையிலிருந்து வெட்டி ஒட்டல் கீழே.
கண்ணன் சொல்கிறார் ‘இதிலிருக்கும் நக்கல் அபாரமானது. முதலில் Quantum gravity என்பது ஒரு கோட்பாட்டு சாத்தியம் மட்டுமே. அதன் அளவு ஒரு சென்டிமீட்டரின் கோடானுகோடியில் ஒரு பகுதி என்ற ரீதியில் இருப்பதாகும் ‘. ( http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu50-1/fullstory.php ?id=13309193 ) கண்ணன் சொன்னதை படித்தால் அவர் quantum gravity பற்றி ஓரளவு அறிந்து, அந்த புரிதலின் அடிப்படையில் சொலவது போல தோன்றும். ஸொக்கல் சொன்னதை `மொழி பெயர்த்து ‘ இவர் தன் சொந்த கருத்து போல சொல்லி கொள்கிறார். அது பிரச்சனையில்லை. ஆனால் சொக்கல் என்ன சொல்கிறார் என்றால் ‘ quantum gravity — the still-speculative theory of space and time on scales of a millionth of a billionth of a billionth of a billionth of a centimeter — ‘. ( http://www.physics.nyu.edu/faculty/sokal/lingua_franca_v4/lingua_franca_v4.html ). கண்ணன் `அதன் அளவு ‘ என்று குறிப்பிடுவது எதன் அளவு என்று யாருக்காவது புரிகிறதோ! கோட்பாட்டு *சாத்தியத்தின்* அளவை குறிப்பிடுவதாகத்தான் எடுத்துகொள்ளமுடியும். சாத்தியத்தின் அளவு சென்டிமீட்டரின் இத்தனையில், இத்தனை பகுதியில் இருப்பது என்று சொலவது போன்று ஒரு அபத்தமான வாக்கியம் இருக்கமுடியாது. அதற்க்கு எந்த பொருளும் கிடையாது. ஸொக்கல் சொலவது, காலம்+ வெளி போன்ற பரிமாணங்களின் scale குறித்து. (கண்னன் மொட்டையாய் அதன் அளவு என்று சொலவதால்தான் பிரச்சனை வருகிறது கண்ணன் quantum gravityயின் அளவு என்று சொலவதாக கொண்டாலும் கூட அவர் சொலவது மகாஅபத்தமே). இப்படி நேரடியான ஒரு வாக்கியத்தை தவறாய் புரிந்துகொண்டது மட்டுமில்லாமல், அதை பத்திரிகையிலும் போட்டுகொண்டு இருக்க, அவர் என்ன ‘அபாரமான நக்கலை ‘ கண்டறிந்தார் என்று தலைகால் புரியவில்லை.
கண்ணன் இப்போதாவது ‘அதன் அளவு … ‘ என்று தொடங்கும் தனது வாக்கியத்திற்கு என்ன பொருள் என்பதை விளக்குவாரா அல்லது அது அபத்தமான ஒளரல் என்றால் அதை ஒப்புகொண்டு வருத்தம் தெரிவிப்பாரா ? கருப்பு தொகுபாளர்கள் செய்யவேண்டியது குறித்து அவர் எழுதியதின் படி பார்த்தால் இரண்டில் ஒன்றை அவர் செய்தாக வேண்டும். இதை விடுத்து ‘மயான மெளனம் ‘ காப்பாறெனில், உருபடியாய் ஒரு வரியை கூட புரிந்து கொள்ளாமல், அதை பொதுகளத்தில் முன்வைத்து அடிக்கும், அவரது எலீட் நக்கலை வன்மையாக கண்டிக்காமல் வேறு என்ன செய்வது ?
(iv) பொதுவாக இந்த விவகாரம் குறித்த எனது மற்ற கருத்துகள் சில. ஸோக்கல் தர்கத்திலும், லாஜிக்கிலும் ( நியாயம் என்று சொல்லவேண்டுமா சூர்யா ?), காரண காரியங்களிலும் (facts) நம்பிக்கை உள்ளவராக சொல்லி கொள்கிறார். ஆனால் ஏனோ பின் நவீனத்துவம், பெண்ணியம் போன்றவை முன் வைக்கும் அறிவியல் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள மட்டும் லாஜிக்கையும், காரண காரியங்களயும், தர்கத்தையும் நம்பாமல், பின் நவீனத்துவ முறையில் ஒரு நக்கல் மூலம், ஒரு மோசடி கட்டுரை மூலம் எதிர்கொள்கிறார். எந்த லாஜிக்கை வைத்து பார்த்தலும் சோக்கலின் மோசடி கட்டுரையை Social text பிரசுரித்தது எந்த வகையில் ஒரு கோட்பாட்டு நெருக்கடியை ஏற்படுத்தமுடியும் என்று புரியவில்லை.
ஒரு குறிப்பிட்ட துறைக்கென இருக்கும் ஒரு இதழ் தவறாக ஒரு `ஆய்வுத்தாளை ‘ பிரசுரிப்பது எந்த விதத்தில் அந்த துறைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தவோ, அல்லது அது குறித்த மாயையை வெளிகொணரவோ முடியும் என்பது புரியவில்லை. ஸோக்கல் கொண்டாடும் இயற்பியலிலேயே பல முறை தவறுகள் நடந்துள்ளது. பிழையான கருத்தாக்கங்களுடன் ஆய்வு முடிவுகள் பிரசுரமாகியுள்ளன. மேலும் பலர் முன்வைப்பதுபோல் இயற்பியல் இயற்க்கையின் உண்மை பற்றியது அல்ல. உண்மை பற்றி பேசுவதாக கணிதம் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். கணிதத்திலேயே பல முறை தவறான (அதாவது சரி, தவறு என்று எல்லாதருணங்களிலும் பகுக்கும் சாத்தியமுள்ள கணிதத்தில்) முடிவுகள் மிக பிரபல இதழ்களில் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒரு கணித மேதை (Antony Wassermann) நீண்ட ஒரு கட்டுரை எழுதினானார். அதற்க்கு பின் நடந்த ஒரு நகைச்சுவை என்ன வென்றால் அவர் எழுதிய ஒரு ஆய்வுதாளே மிக தீவிரமான ஒரு பிழையுடன் ஒருமுறை பிரசுரமாகியிருந்தது.
இந்நிலையில் ஒரு சமூக விஞ்ஞானத்திற்கான ஒரு இதழ் செய்யும் ஒரு சொதப்பல் எந்த புது நெருக்கடியையும் ஏற்படுத்த வாய்பில்லை. பல பார்வைகளில் ஒன்றாக அதிக பரிசீலனை இல்லாமல் ஸோக்கலின் கட்டுரை social text இதழில் இடம் பெற்றிருக்கலாம். இது பின் நவீனத்துவத்தை அடையாளம் காட்டியதாக சொல்வது (உதாரணமாக Frontline ஜயராமன் http://www.imsc.res.in/~jayaram/Sokal/sok1/sok1.html ) உதவாக்கரை வாதங்களையே கொண்டிருக்கிறது. (ஆனால் ஜெயராமனின் கட்டுரை நேர்மையாக அவர் நிலைபாட்டை சொல்லும் ஒரு கட்டுரை.)
(v) ரவி ஸ்ரீனிவாஸ் கட்டுரையின் மீது கண்ணன் வைத்த எதிர்வினைக்கு, ரவிதான் முழுபதில் சொல்லவேண்டும் என்றாலும், கண்ணனின் எதிர்வினை குறித்து, சில ஸைடு வினைகள். சோகலை பாராட்டிவிட்டு, அவர் முன்வைத்ததை ‘அபாரமான நக்கல் ‘ என்றும் சொல்லி கொண்டாடிவிட்டு, ஸோகலின் பகடி முயற்சியை நான் ஆதரிக்கவில்லை என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தம் உண்டா ? SOCIAL TEXT என்ற அறிவுஜீவிகளை ஆசிரியர்களாய் கொண்ட இதழ் ‘பிழைவிட்டதற்க்கு கொக்கரிக்கவில்லை ‘ என்று சொல்லி கொள்பவர் ரெஸ்டோரண்டில் கோப்பை கழுவியபடி தமிழின் காத்திரமான ஒரு தொகுப்பை கொணர்ந்த கருப்பு தொகுப்பாளர்களை போய் நக்கல் அடிப்பது முறையா ? ஸோகலின் கட்டுரையை அதன் பிண்ணணி தெரியாமல் பிரவீண் என்ற ஒரு மாணவர் (அதன் பிண்ணனி தெரியாமல்) மொழிபெயர்திருப்பது, ரவியும், நானும் சொல்வது போல் ‘ஆர்வகோளாறு ‘ அல்லாமல், நேர்மையின்மை அல்லது அயோக்கியத்தனம் என்று நினைத்தால் அதற்கான வாதங்களை கண்ணன் முன்வைக்கமுடியுமா ? அதற்கு முன், எங்கேயோ கல்விதுறையில் நடந்த, கண்ணனே இப்பொதுதான் மற்றவர் மூலமாக அறிந்திருக்க வாய்பிருக்ககூடிய விஷயத்தை, பிரவீண் அறிந்திராமல் இருப்பது எந்த வகையில் மகாபாதகம் என்று கண்ணன் விளக்க வேண்டும்.
‘அ. மார்க்ஸ் தலைமையில் இயங்கிவரும் கும்பல் ‘ என்று ஜெயாகாந்தன், ஜெயமோகன் பாசிச பாணிமுத்திரையுடன் குறிப்பிட்டு, அவர்களை பற்றி அவர்கள் இயங்காத தளங்களில் வந்து கண்ணன் விமர்சனம் வைக்கிறார். (ஜெய மோக/காந்த னாவது திமுக தொண்டர்களை பற்றிதான் அப்படி சொன்னார்கள். கண்ணன் அறிவுதளத்தில் செயல்படுபவர்களை, தமிழின் முக்கியமான நாவலை எழுதியிருப்பவரை பார்த்து, பல காத்திரமான விஷயங்களுடன் தமிழில் பேசபட்ட மூன்று தொகுப்புகளை கொண்டு வந்தவர்களை பற்றி இப்படி குறிப்பிடுகிறார். ) அவர்கள் மீது எல்லாவித விமர்சனத்தையும், அவர்களை பற்றிய பல ஆத்திரமான விமர்சனங்கள் இருக்கும் (உதாரணமாய் யமுனாவின் ‘கொரில்லா ‘ விமர்சனம், ஜெயமோகன் முன் வைத்த சில நேர்மையற்ற குறிப்புகள்), அவர்கள் பதில் சொல்லாத, இயங்காத இடத்தில் முன்வைத்தபடி, ‘தங்கள் முறமைகளால் தங்கள் மீதான விமர்சனங்களை தடை செய்வதில் வெற்றி பெற்றுள்ளார்கள் ‘ என்று சொல்வதில் பொருள் உண்டா ? இது ‘அல் ஜzீரா ‘ குறித்து அமேரிக்கா சொலவது போல் இல்லை!
அந்த ‘கும்பல் ‘ தம்மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளும் என்று சொல்லும் கண்ணன், இப்போது அவர் ஸோகல் விவகாரத்தை முன்வைத்து எழுதியுள்ள பத்தியை அவர்கள் எதிர்கொண்ட விதம் குறித்து அவ்யபோது திண்ணையில் வந்தமர்ந்து கமெண்டரி கொடுக்க வேண்டும். திண்ணையிலேயே அ. மார்க்ஸ் மீது ஆத்திரமான மஞ்சுளாவின் தொடர்கட்டுரை விமர்சனம் உள்ளது. ஜெயமோகன் மிகவும் நேர்மையற்ற முறையில் அ. மார்க்ஸின் ‘சிற்றலை ‘ குறித்து குறிப்பு எழுதியுள்ளார் (இவர் திண்ணைக்கு பஜனை மடத்தை மாற்றிய உடன், ‘சிற்றலை ‘ ஒய்ந்துவிட்டதாக நினைத்தால் யதார்தம் இவருக்காக தன்னை மாற்றிகொள்ளுமோ! http://www.thinnai.com/pl04190311.html ) அ. மார்க்ஸ் கிருஸ்துவத்தின் மீது வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரை கிருஸ்தவர்களல் நியமிக்க பட்ட ஏஜெண்ட் என்று இங்கே எழுதிவருகிறார்க – உதாரணமாய் திண்ணையில் எனக்களித்த பதிலில் சின்ன கருப்பன், மருதத்தில் தலித் இயக்கம் குறித்த கட்டுரை. (அவரை இஸ்லாமிய ஏஜெண்ட் என்று சொன்னாலாவது கொஞ்சம் அர்த்தம் இருக்கும்). இதை எல்லாம் இந்த ‘கும்பல் ‘ எப்படி எதிர்கொண்டு தடை செய்தது என்று கண்ணன் விளக்கமுடியுமா ?
காலச்சுவடின் ஜனநாயகம் குறித்து நான் எழுத தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும், பழைய காலசுவடினரே சொல்லுவார்கள். ஆனால் தமிழ் அறிவுலகில் முதன் முறையாக யார்வேண்டுமானாலும் மேடையேறி என்னவகையான கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நடைமுறை நிறப்பிரிகை கருத்தரங்குகளில்தான் தோன்றியது. பல குரல்களுடன் தொகுப்புகளும், புத்தகங்களும் வெளியிடுவதையும் நிறப்பிரிகைதான் துவங்கி வைத்தது. (ரவிக்குமார் காரச்சுவடு பக்கம் போன பின்பும் இது நடைமுறையில் இருந்தது.) நிறப்பிரிகைக்கு எதிர்தளத்தில் செயல்பட்ட, அ. மார்க்ஸ் மீது கடுமையான விமர்சனம் உள்ள தமிழவன் குழுவினர் கூட, அ. மார்க்ஸின் கருத்துகளுக்கான ஜனநாயகம் குறித்து கண்ணன் போல் புளுகமாட்டார்கள்.
(vi) கண்ணன் எழுதியுள்ள பத்தியை படித்தால் ஏதோ அ. மார்க்ஸ்தான் அந்த கட்டுரையை மொழிபெயர்தது போலவோ (டா. சே. தமிழனுக்கு அப்படி ஒரு மயக்கம் வந்தது பார்க்க: பதிவுகள் விவாதகளத்தில் ‘பலதும் பத்தும் ‘), அவர் ஆலோசனையின் பேரில்தான் தொகுப்பு வெளிவந்தது போல் படிப்பவர்களுக்கு தோன்றும். கண்ணன் அளவிற்கு, அ. மார்க்ஸிற்கு கருப்பு இதழ் உருவாக்கத்தில் என்ன பங்கு என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால்அவருக்கு பங்கு உண்டு என்ற பட்சத்தில், இந்த சொதப்பல் குறித்து, பொதுவாக பரந்த வாசிப்பு உடைய , பல விஷயங்களை தமிழில் அறிமுகம் செய்த அவர் விளக்கம் தருவது முறையாக இருக்கும். ஆனால் இந்த சொதப்பலை முன்வைத்து படுபாதகம் நிகழ்ந்துவிட்டதாக யாராவது குறிப்பிட்டால் அது நகைப்பிற்குரியது. அதில் உள்ளது வெறும் தனி நபர் அரசியல்.
அ. மார்க்ஸின் இயற்பியல் ஞானம் குறித்து எனக்கு எதுவும் தெரியாவிட்டாலும், ஒரு இயற்பியல் பேராசிரியர் என்ற முறையில் (கண்ணன் அவர் ‘இயற்பியல் பேராசிரியர் என்பது கவனிக்கதக்கது ‘ என்று தன் நக்கலில் குறிப்பிடுவதால்) அவர் இந்த விஷயத்தை அறிந்திருக்கவேண்டும் என்பதோ, ஸோகலின் கட்டுரையில் உள்ள இயற்பியல் அபத்தங்களை வைத்து கட்டுரை ஒரு பகடி என்ற அறிவை வந்தடைந்திருக்க வேண்டும் என்பதோ நியாயமாக படவில்லை. ஸோகல் முன்வைக்கும் இயற்பியல் விஷயங்கள், கல்லூரியில் சொல்லிதரப்படும் இயற்பியல் சமாச்சாரங்களில் இருந்து 50 வருடங்களாவது முன்னே இருக்கிறது. சமகால இயற்பியல் அறிவுடன், அதன் முன்னேற்றங்களுடன் பரிச்சயம் இல்லாத ஒருவர் (அப்படி பட்டஒருவர் கூட கட்டுரையில் பேசப்படும் சமாச்சாரங்கள் குறித்து அறியாதபோது) அதில் உள்ள அபத்தங்களை கண்டறியாமல் இருக்க — சில விஷயங்கள் போகிறபோக்கில் தவறவிடவும் வாய்புண்டு. காலேஜில் பேராசிரியராக இருக்க (எனக்கு வாய்திருந்த கல்லூரி பேராசிரியர்களை நினைத்தால் இன்னும் கஷ்டம்) இதில் எந்த அறிவும் தேவைப்படாது. அரசியல்ரீதிய்யாக மட்டும் தன்னை முன்னிருத்தும் ஒருவர் இயற்பியல் சரியாய் அறியாமல் இருந்தாலும் அதில் என்ன பாதகம் என்று புரியவில்லை.
(vii) நான் இங்கே எழுதியதற்கு ஒரு வேளை எதிர்வினை வைக்க நினைத்தால் கண்ணனுக்கு ஒரு வேண்டுகோள். மற்றபடி இந்த பாராவை யாரும் படிக்கவேண்டியதில்லை. நான் எந்த விதத்திலும் பின் நவீனத்துவவாதி கிடையாது. அது எனக்கு புரிந்ததாக நினைப்போ, அல்லது மற்றவர் அதுகுறித்து சொல்வதெற்கெல்லாம் பொறுபேற்கும் அளவிற்க்கு அதன்மீது பற்றோ, குறைந்தபடசம் அத்தகைய கருத்தாக்கங்கள் அதற்குரிய வார்த்தைகள் இதை உபயோகப்படுத்தியதோ, எதுவும் கிடையாது. அதன் மீது பல விமர்சனங்கள் (அ.மார்க்சிய பின் நவீனத்துவம் குறித்தும்) கூட உண்டு. அவைகளை எனக்கு சரிபடும் தருணத்தில் சொல்லவும் செய்வேன். ‘பின் நவீனத்துவம் ‘ என்று குண்ட்ஸாகவோ, தத்துபித்தென்றோ பேசும் நபர்களிடம் கூட எனக்கு தொடர்பு எதுவும் கிடையாது. உலகின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு நாட்டில், என்னுடன் வாழும் பெண் தவிர நெருக்கமான நண்பர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில், இணையம் என்ற அற்புதம் மூலம், எதையும் எழுதலாம் என்று திண்ணை தரும் இடத்தையும் சுதந்திரத்தையும் வைத்துகொண்டு, முதுகில் அரிப்பெடுக்கும்போது சொரிந்து கொள்வது போல, இங்கு சில கருத்துக்களை அவ்யப்போது முன்வைக்கிறேன். இப்படிபட்ட என்னுடைய கருத்துகளுக்கு யாரும், வேறு யாரோ எங்கேயோ சொன்ன கருத்துகளுக்கு நானும் பொறுப்பேற்க முடியாது. ஆகையால் நான் இது குறித்து எழுதியது பற்றி மட்டும் பேசினால் அது நேர்மையுள்ளதாக இருக்கும். மற்றபடி நான் யாரால் ஆகர்ஷிக்கபட்டேன், யாருக்காக பேசுகிறேன், என்றெல்லாம் நான் முன்வைத்த கருத்துக்களை விட்டுவிட்டு, இந்த யமுனா ரஜேந்திரன் என்ற கிசுகிசு எழுத்தாளர் பாணியில் பேசினால் எது குறித்தும் பேசுவது கஷ்டம். நீங்கள் அப்படி எதுவும் இன்னும் செய்யாவிட்டாலும், யமுனா ராஜேந்திரன் காரணமாய் இப்படி உங்களிடம் முன்னமே சொல்ல நேர்ந்ததற்க்கு மிகவும் மன்னிக்கவும். ( http://www.thinnai.com/pl10230312.html )
3. (i) முந்தய வாரம் வெளியாகியிருந்த, நாகூர் ரூமியின், மைலாஞ்சி குறித்த விமர்சனம் கடைசியாய்தான் படிக்க நேர்ந்தது. என்னுடைய எதிர்வினையை போன வாரம் சேர்த்து முன்வைக்க நேரமில்லை. அதற்கு ஆசாரகீனன் வைத்திருந்த எதிர்வினை, எனக்கு மிகுந்த ஒப்புதலுக்குரியதாய் இருந்தது. நான் சொல்ல நினைத்த பல விஷயங்களை அவர் சொல்லியிருந்தார். ஆசாரகீனனின் முந்தய எழுத்துக்களை திண்ணையில் பார்த்தவரை அவருடன் உடன்பட கூடிய, பாராட்டகூடிய கருத்துக்கள் எதுவும் எனக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நாக. இளங்கோவன் கட்டுரையை தனிதமிழ், மொழிவெறி இது எல்லாவற்றுடன் தொடர்பில்லாமல் முடிச்சு போட்டு அவர் முன்வைத்த வொயிட் மெயில் மிகுந்த வக்கிரமானது என்பதுதான் என் கருத்து. இப்போது அவர் எழுதியிருப்பதன் முக்கிய பரிமாணம் அது ஒரு இந்துத்வவாதி சந்தடிசாக்கில், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சாதகமாய் பயன்படுத்திகொள்வது போன்ற தன்மை இல்லாததுதான். மிகவும் நிதானமாகவும், அதே நேரம் உணர்ச்சிவசப்படாமலும், பொறுப்புடன் எழுதியிருந்த அவரின் கட்டுரைக்கு என் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன் (அவருக்கு என் பாராட்டெல்லாம் ஒரு பொருட்டு இல்லையெனினும் ).
(ii) நாகூர் ரூமி குறித்து ஆபிதீனின் இணையதளத்தில்தான் முதலில் கேள்விபட்டேன். அதற்கு பிறகு இணையத்தில் பல முறை படித்ததால் ஏற்பட்ட மனபிம்பத்திற்கு ஊறு விளைவிப்பதாய், அவருடய மைலாஞ்சி குறித்த விமர்சனம் அமைந்திருந்தது. ஹெச். ஜி. ரசூலின் கவிதைகள் பலதை படித்திருந்தாலும், இந்த தொகுப்பை நான் இன்னும் படிக்கவில்லை. ‘வெளிப்படையான கருத்து எதுவும் கவிதை ஆகாது ‘ என்று நாகூர் ரூமி வைத்திருக்கும் இலக்கியமுடிவையும், சககவிஞன் என்ற என்ற முறையிலுமான தனது விமர்சனத்தையும் தவிர்த்து, அவர் எழுதியுள்ள மற்ற விஷயங்களே பிரச்சனைகுரியனவாகின்றன.
ரூமியின் பார்வையிலேயே ‘முஸ்லீமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனாகவும், கவிஞனாகவும், துணிச்சலான சிந்தனையாளனாகவும் ‘ இருக்கும் ஒருவருக்கு எதிரான கொதிப்புகளுக்கும், ஃபத்வாகளுக்கும் என்ன வகை எதிர்ப்பை, கண்டனத்தை நாகூர் ரூமி முன்வைக்கிறார் என்பது எந்தவிதத்திலும் தெளிவில்லை. சில விஷயங்களை அணுகும் போது நாம் பாரபட்சமற்றது என்று நினைத்து செய்வதே, அநீதியாய் போகும் வாய்புள்ளது. உதாரணமாய் தீபா மேத்தா மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்துதவ வெறியர்களால் அவருக்கு இழைக்கபட்ட அநீதி குறித்து பேசும்போது, அதை எல்லாம் விவரித்து கொண்டிருப்பது அவருக்கு நியாயம் செய்வதாய் இருக்காது. அதிலும் இங்கே ரூமியின் சார்பு தெளிவாகவே முதலிலேயே தெரிந்துவிடுகிறது. சலமான் ருஷ்டாயை முன்வைத்து அவரே சொல்லிவிடுகிறார். கடைசியிலும் ரசூலை அடக்கி வாசிக்குமாறும் அறிவுறுத்துகிறார். ரசூல்மீதான எதிர்புக்கும், ஃபத்வாக்களுக்கும் மெல்லிய வருத்தத்தை மட்டும் துவக்கத்தில் காட்டிவிட்டு மெளனமாகிவிடுகிறார்.
நாவல் என்ற வடிவத்திற்கு புதிய சாத்தியங்களை கொணர்ந்த, இலக்கியத்தில் சாதனை புரிந்த ஒருவரை ஒருமையில் அழைத்து, ‘ஆங்கிலமறிந்த அயோக்கியன் ‘ என்று சான்றிதழும் வழங்குகிறார். ‘சாத்தானின் கவிதைகள் ‘ சல்மான் ருஷ்டியின் தலை சிறந்த நாவல் இல்லை. ஆனால் அதை படித்து வருடங்கள் ஆகி இன்னும், எனக்கு, அதற்கு பல தளங்களில் வெளீப்பட்ட எதிர்புகளின் காரணங்களை புரிந்து கொள்ளமுடியவில்லை. அதை எதிர்பவர்களும் அதை உருப்படியாய் விளக்கி நான் கண்டதில்லை. கோமினி கொடுத்த ஃபத்வா மட்டுமில்லாமல், இடது சாரி அறிவுஜீவி தளத்திலிருந்து எழுதும் ஆஸ்கர் அலி இஞ்சினியர் கூட அதற்கு (கோமினி போல் அல்லாமல் ஜனநாயகரீதியில்) அளிக்கும் எதிர்ப்பு எனக்கு புரிந்ததில்லை. அதிலிருக்கும் ‘அயோக்கியதனத்தையும், அசிங்கமான உள் நோக்கத்தையும் ‘ பொத்தாம் பொதுவாக சொல்லாமல், (அவர் எளிதில் விளக்கிவிடகூடியாதாய் சொல்லும்) சில பத்திகள் கொண்டு ரூமி விளக்கினால் முஸ்லீம் அல்லாத என் புரிதலுக்கு உதவியாய் இருக்கும். சல்மான் ருஷ்டா மீதும் பல விமர்சனங்கள் இருக்கலாம்–குறிப்பாக ஆஃப்கான் மீதான அமேரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ‘, மற்றும் ஈராக் போர் குறித்த அவரது கருத்துக்கள். (இங்கேயும் கூட தலை மேல் தொங்கும் ஃபத்வாவுடன் தலைமறைவு வாழக்கை வாழ நேர்ந்த ஒருவர் நடுநிலைமையுடன்தான் செயல்படவேண்டும் என்று நினைப்பது சரியா என்று தெரியவில்லை.) அது ‘சாத்தானின் கவிதைகள் ‘ மீதான விமர்சனம் ஆகமுடியாது. சாருநிவேதிதா அபிதீனின் கதைகளை திருடியது அயோக்கியத்தனம்தான். (அதைவிட அயோக்கியத்தனம் அது குறித்து மெளனம் சாதிப்பது.) அதை வைத்துகொண்டு ‘zீரோ டிகிரி ‘ நாவலையோ, இன்னும் ‘ஜே ஜே சில குறிப்புகளுக்கு ‘ அவர் முன்வைத்த எதிர்வினைகளையோ நாம் அளக்கமுடியாது.
ஆசாரகீனன் சொல்வதுபோல் இஸ்லாம் குறித்த தனது அறிவையும், நம்பிக்கையையும் மட்டும் முன்வைத்தில்லாமல், ஒரு மன நலநிபுணராய், சமூகவியலாளராய் அவதாரம் எடுத்து தூமை பிரச்சனை, இதர விஷயங்கள் குறித்தும் ரூமி வைத்துள்ள தீர்ப்புகளே எதிர்வினைக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரசூலை மட்டுமில்லாது, மொத்தமாகவே பெண்ணியம் என்று பேசப்படும் பலவிஷயங்களையே போலித்தனமானது என்று விலக்குகிறார். (ரூமி மட்டுமல்ல, திண்ணை பக்கங்களில் லிபரல் வேஷம் போடும் மஞ்சுளாகூட மனுஷ்யபுத்திரனுக்கு ‘கிண்டல் ‘ குறித்து பாடம் எடுத்த கட்டுரையிலும், அ.மார்க்ஸின் புத்தகவிமர்சனமாய் வந்த தொடர்கட்டுரையிலும் பெண்ணியத்தை போலித்தனமானது என்பது போன்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.) ‘பெண் நபி ஏன் இல்லை ? ‘ என்ற கேள்வி ரூமிக்கு தனிபட்ட முறையில் அபத்தமாக பட்டால் பிரச்சனையில்லை. ஆனால் அவர் கருத்து சொல்லியுள்ளதோ ரசூல் அதை கவிதையாக்கும் உரிமை குறித்து, அதற்கு எதிர்வினையாய் வந்த ஃபத்வாமீதான நியாயம் குறித்தும். குறைந்த படசம் ரூமி அடக்கியாவது வாசித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. கையில் சுத்தியல் வைத்துகொண்டிருக்கும் ஒரு நீதிபதியாய் மாறியிருக்கவேண்டாம்.
(iii) நாம் மறந்துவிடக்கூடிய ஒரு ஆபத்தான சாத்தியத்துடன், இந்துத்வ வன்முறையின் — இன்னும் சொல்லபோனால் பொதுவாக வன்முறையின் — புதிய பரிமாணங்களை காட்டகூடியதாய் குஜராத் இன அழிப்பு நிகழ்வுகள் உள்ளன. அதற்கு சால்ஜாப்பு சொலவதாய், அதை நியாயபடுத்துவதாய் திண்ணையில் கட்டுரைகள் பல உள்ளன. குஜராத் வன்முறையை கண்டிப்பதாய், அது நிகழ்ந்து கொண்டிருந்தபோது அது குறித்து சிறிய அளவில் கூட கவலை தெரிவிக்கும் ஒரு கட்டுரை கூட திண்ணையில் இல்லை.
ஜெயமோகனால் தமிழில் எழுத தூண்டபட்ட நீலகண்டன் அரவிந்தன் அதை பற்றிய மிக வெளிப்படையான நியாயபடுத்தும் தர்கங்களுடன் தனது திண்ணைபிரவேசத்தை தொடங்கினார். வன்முறைக்கான பழியை தலித்துகள் மீது போடும் கைங்கரயத்தையும், குஜராத் இன அழிப்பையே ஒரு ‘வர்க்கபோராட்டமாய் ‘ சித்தரிக்கும் வாதங்களையும் முனவைத்தார் (இந்துத்வவாதிகளை தவிர வேறு எந்த அடிப்படைவாதிகள் இத்தனை புத்திசாதூர்யத்துடன் செயலபடமுடியும்! ) சந்தடிசாக்கில் பொய் சொல்லவும் தயங்கவில்லை. உதாரணமாய், கோயம்புத்தூரில் தலித்துகள்தான் முஸ்லீகள் மீது தாக்குதல் நடத்தியதாய் பொய்பழிபோட்டுள்ளார். முஸ்லீம்கள் மீதான கோயம்புத்தூர் தாக்குதல் போலீஸ் துணையுடன் இந்துமக்கள் கட்சியினரால் நடத்தபட்டது. அதற்கு அடிப்படையாய் இந்து வணிக ஜாதிநலனும் உள்ளது. அருந்ததி இனத்தவரின் வறுமையை பயன்படுத்தி, போலீஸ் கொள்ளையடிக்க தூண்டி, அதற்கு லைசன்ஸும் அளித்த நிலையில், அவர்கள் கொள்ளையடிப்பில் மட்டும் ஈடுபட்டனர். (இது ஏதோ நான் ஆராய்ந்து கண்டுபிடித்து சொல்லும் ஒரு உண்மை அல்ல, பொதுவாய் வெளிவந்து அறிந்த ஒரு செய்தி.) நீலகண்டன் சந்தடிசாக்கில் கோயம்புத்தூர் தாக்குதலே அவர்களால் நடத்தபட்டதாக கூசாமல் பொய் சொல்கிறார். ( http://www.thinnai.com/pl0728021.html ‘:கோவையிலும் தலித்துக்களே இஸ்லாமியருக்கு எதிரான கலவரங்களில் அதிகமாக ஈடுபட்டனர் . இவர்கள் மத்தியில் ஆர் .எஸ். எஸின் சித்தாந்தப் பாதிப்பு மிகவும் குறைவுதான். ‘ 6வது பத்தியின் இறுதி.)
சின்னகருப்பனோ காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவில் இதுவரை நடந்த கலவரங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு, குஜராத் இனஅழிப்பை, அது நடந்து கொண்டிருக்கும் போது நியாயபடுத்தினார். ( http://www.thinnai.com/pl0512024.html ) அது மட்டுமிலாமல் குஜராத் குறித்து ஒரு வார்த்தை எதிர்ப்பு குரலாய் உச்சரிக்காத, RSSஆல் (கவனிக்கணும் சொன்னது ஞாநி அல்ல) இந்து என்று சான்றிதழ் தரபட்ட அப்துல் கலாமை, குஜராத் இனஅழிப்பினால் உலகபார்வையில் ஏற்பட்ட பிம்பத்தை சரிசெய்யும் விதமாய் (குஜராத் மோடி அரசுமீது எந்த நடவடிக்கையும் எடுக்காத, அதற்கு பாதுகாப்பும் சான்றிதழும் அளித்த ) BJP தலைமையிலான அரசாங்கம் ஜனதிபதியாக்கிய நிகழ்வை, முஸ்லீம்கள் மீதான உலகத்தின் வெறுப்பை தணிக்க செய்ய எடுத்த ஒரு நடவடிக்கை, என்று எந்தவித நேர்மையும் இன்றி எழுதினார். ( http://www.thinnai.com/pl0623027.html கட்டுரையின் கடைசியில் வரும் பத்திகளை படிக்கவும்.) முஸ்லீம்கள் மீதான இனஅழிப்பை நியாயபடுத்தியவருக்கு, அவர்கள் மீது உலகிற்கு இருக்கும் வெறுப்பு குறித்து ரொம்பவும்தான் அக்கரை. மஞ்சுளாவின் ஆத்திரம் குறித்து கேட்கவே வேண்டாம். குஜராத்தில் மனித உயிர்கள் நெருப்பில் வெந்து கருகி கொண்டிருக்கும் போது, இந்து பத்திரிக்கை அமேரிக்க பாதிரிமாரின் ஹோமோசெக்ஸ் விவகாரம் குறித்த செய்தியை ‘வெளியிடாத அநியாயம் ‘ குறித்தும், ‘போலிமதசார்பின்மை ‘ குறித்தும் ஆத்திரமாய் கட்டுரை எழுதிகொண்டிருந்தார். ( http://www.thinnai.com/pl0428023.html இந்த கட்டுரை எழுதபட்டபோது, திண்ணையில் ஒரு தலையங்க எழுத்தாளர்போல் அத்தனை நாட்டு நடப்புகள் குறித்தும் இவர் கருத்துக்கள் சொல்லிகொண்டிருந்தார். குஜராத்தின் வன்முறை அதன் உச்சகட்டத்தில் இருந்ததும் நினைவுகூறதக்கது. ) ஜெயமோகனோ மெளனமான, பூடகமான ஒரு அரசியலை முன்வைத்துகொண்டிருந்தார். (இவைகள் இந்த விஷயத்தில் என் முழு எதிர்வினை அல்ல, நினைவுபடுத்த சில விஷயங்கள், அவ்வளவுதான்.) இது இப்படியிருக்க தொடர்ந்து ‘எல்லா கலவரங்களுக்கும் அடிப்படை காரணம் இஸ்லாமின் சகிப்பின்மை ‘ என்ற ரீதியில் ஒரு தர்கமும் தொடர்ந்து முன்வைக்கபடுகிறது. இதில் எதற்காவது எதிர்வினை வைக்கவேண்டும் என்று ரூமிக்கு தோன்றவில்லை. குறைந்த பட்சம் அவர்களின் தர்கத்திர்க்கு நியாயம் (லாஜிக்) சேர்கிற வகையிலாவது ரூமி செயல்படாமல் இருக்கவேண்டும்.
(iv) இந்துத்வ எழுச்சிக்கு பின், அதனால் ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலைகாரணமாக அரசியல் ரீதியாய் இயக்கமாவது முஸ்லீகளுக்கு ஒரு கட்டாயமான தேவையாக உள்ளது. பல இஸ்லாமிய இயக்கங்களின் தோன்றுதலுக்கு இது நியாயமேற்படுத்துகிறது. ஆனால் இதன் இன்னொரு பரிமாணம், இஸ்லாமிய அடிப்படைவாதமாய், பெண்கள் மீதான வன்முறையாய் வெளிபடுகிறது. உதாரணமாய் தமிழகத்து (தமிழ் பேசும்) முஸ்லீம்கள் பர்தா அணிந்து இதற்கு முன் நான் கண்டதில்லை. சமீபகாலமாக பர்தா பழக்கம் தமிழ் முஸ்லீம்களிடத்தில் வந்துள்ளதையும், இது பல இடங்களில் கட்டாயபடுத்தபடுவதாகவும் கேள்விபடுவது மிகவும் வருத்தமாய் இருக்கிறது. (இது குறித்து பரிந்துகொண்டு சின்ன கருப்பன் திண்ணையில் எழுதும் நோக்கம் வேறு. அதன் அடிப்படை அப்படி இப்படி சுற்றி வந்து, இந்து சமுதாயத்திற்கு அவர் அளிக்க விரும்பும் நற்சான்றிதழ்தான். ) இது, இன்னொரு விளைவாய், உலகின் எல்லா மதத்தை போலவே பல போக்குகள் உடைய இஸ்லாமின் பண்மையையும் அழித்துவருகிறது. இந்துத்வ எதிர்ப்பு என்ற அரசியலில் இஸ்லாமிய இயக்கங்கள் மீதான நியாயமான விமர்சனங்கள் கூட முன்வைக்கபடவில்லை. (உதாரணமாய் அ. மார்க்ஸ் போன்றவர்கள், மெல்லியதாய் ‘இஸ்லாத்தின் தந்தை வழி சமூக மதிப்பீடுகளை ஏற்று கொள்ள முடியாது ‘ என்று சொன்னாலும், ஒரு நிபந்தனை அற்ற ஆதரவை இஸ்லாத்திற்க்கு அளிப்பதை காணலாம். )
(v) இஸ்லாம் குறித்த ஒரு வெளிப்படையான விவாதம் இன்று தேவைப்படுகிறது. இது இஸ்லாத்தினுள் இஸ்லாமியர்களல் நடத்த படுவது பொருத்தமாக இருக்கும். அதற்கு முன் விவாதிக்கும் உரிமை சகஜமானதாக ஆக்கபட வேண்டும். நாகூர் ரூமியின் கட்டுரை இது குறித்து மிகுந்த அவநம்பிக்கை அளிப்பதாய் இருக்கிறது. செப்டம்பர் 11ற்க்கு பிறகு பல கற்பிதங்களால் உருவாக்கபட்டுள்ள ஒரு இஸ்லாமிய வெறுப்பு, இத்தகைய விவாதம் நடப்பதற்க்கு தடைக்கல்லாக இருக்ககூடும். மேலும் அத்தகைய விவாதத்தை இந்துத்வ லிபரல்கள் பயன்படுத்த முயலகூடும். ஆனாலும் இன்று இஸ்லாம் குறித்த விவாதமும், பரிசீலனையும் என்றுமில்லாத அளவு தேவைப்படுகிறது.
(vi) காலச்சுவடு கண்ணன் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த ஒரு உருப்படியான கட்டுரை திண்ணையில் எழுதினார் என்று நினைக்கிறேன். இதை எழுதும் முன் அதை படிக்கவில்லை. விரும்புபவர்கள் தேடி எடுத்து படிக்கலாம்!
4. (i) நரேஷுடம் பேசவோ, விவாதிக்கவோ, அவர் எழுதியதெற்கெல்லாம் (அதில் தப்பி தவறி அறிவுபூர்வமாகவோ, நேர்மையாகவோ ஏதாவது இருந்தால் ஒழிய) எதிர்வினை வைக்கவோ எனக்கு இப்போது இருக்கும் வேலைபளுவோ, மனமுதிர்ச்சியோ இடம் தராது. நரேஷ் என்னை பற்றி எதுவுமே அறியாமல், ‘நேரமில்லை என்று ஒரு பாட்டு ‘ என்று எல்லாவித திமிருடன் மற்றவர் உணர்வு குறித்த எந்த மதிப்பும் இல்லாது, கிண்டலடித்திருப்பினும், உண்மையிலேயே எனக்கு நேரம் இல்லை. என்னை தனியாக மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால் எனக்கிருக்கும் வேலைகளை, அதன் முக்கியத்துவத்தை (எனக்கு மட்டுமல்ல, என் துறைக்கு, அதன் உலகிற்கு) விளக்கமுடியும். விளக்கினால் கொஞ்சம் மற்றவர் உணர்வை மதிக்கும், பொறுப்புள்ள எவருமே ‘ஒழுங்கா வேலையை பார், திண்ணையில் போய் இப்போதைக்கு டைம் வேஸ்ட் பண்ணாதே ‘ என்றுதான் சொல்லுவார். (நான் சென்ற இதழில் விமர்சித்துள்ள அறிஞர் நீலகண்டனோ, பலமுறை விமர்சித்துள்ள சின்னகருப்பனோ கூட அப்படித்தான் சொல்வார். ) அடுத்து இந்த நரேஷ் இதுவரை எழுதிய எதையும் ஒழுங்காக படித்து புரிந்து கொண்ட சரித்திரம் கிடையாது, அவரிடம் பேசுவதால் எந்த பயனும் இருக்காது என்பதை பழைய விவாதகளத்தில் இருந்த, நடுநிலையுடன் சிந்திக்கும் திறன் கொண்ட எவரும் ஒப்புகொள்வர். அவர் மீண்டும் இப்போதும் அதற்கு ஒரு புதிய உதாரணமாகவும் திகழ்துள்ளார். அதற்கு முதலில் எனது மனமார்ந்த நன்றி. அப்படி இருக்கும்போது இப்போது (அம்பி என்ற பதத்தை நான் மட்டும் பயன் படுத்தவில்லை, மதிப்பிற்குரிய பிரிதர்சனால் பிரபலபடுத்தபட்டு, ஜெயமோகன், சூர்யா உள்ளிட்ட பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள். நீலகண்டன், மஞ்சுளாகூட இந்துபத்திரிகையின், ரவியின் ஜாதிகுறித்து பேசியிருக்கிறார்கள், இங்கே வேண்டுமென்றேதான், குறிப்பிட்ட அர்தத்தில்தான் பயன்படுத்தினேன் – இப்போது நீக்கிவிட்டேன்.) நரேஷ் எழுதிய கடிதத்தை முன்வைத்து இங்கே எழுத ஒரே காரணம், அவர் பல விஷயங்களுக்கு ஒரு சரியான உதாரணமாய் இருப்பதுதான், அவரை முன்வைத்து வேறு சில விஷயங்களை விளக்குவதுதான் என் நோக்கம். (அது தவிர என்னை குறித்து சொன்னதற்க்கு ஒரு முறையாவது பதில் சொல்லவேண்டுமே.) பழைய விஷய்ங்களை விட்டு விட்டு, அவரின் இந்த கடிதத்தை மட்டும் எடுத்துகொள்கிறேன்.
(ii) பொதுகருத்து தன்பக்கம் இருக்கும் பட்சத்தில் எந்தவகை முட்டாள்தனமான உளரலையும், தவறான தகவல்களையும், கொஞ்சம்கூட பரிசீலனை இல்லாமல் முன்வைக்கமுடியும், எனபதற்கு நரேஷின் இந்த கடிதம் நல்லதொரு உதாரணம். நான் எழுதியது அவதூறு என்றும், அதை திண்ணை பிரசுரித்ததை குற்றம் சொல்லியும் அவர் கடிதம் தொடங்குகிறது. என்ன அவதூறு என்பதை குறிப்பிட்டு அவர் சொல்லவில்லை. எனினும் ‘பண்டிட் ‘ என்பது நேருவின் ஜாதிபெயர் என்று நான் சொன்னது பொய், ஆகையால் அது அவதூறு என்ற கருத்துப்பட அவர் எழுதியுள்ளதாக கொள்ளலாம். என்ன ஒரு அறியாமையுடன் கூடிய தைரியம் பாருங்கள்! கூகுளில் ஒரு தட்டு தட்டினால் கிடைக்கபோகும் பக்கங்களில் ஒரு முறை பலிசீலித்துவிட்டு எழுதவேண்டும் என்று கூட தோன்றவில்லை, என்ன ஒரு தன்னகம்பாவம்! (விஸ்வாமித்ரா அதை செய்திருப்பதுபோல தெரிகிறது. பாவம், அவருக்கு சரியான வகையில் நான் இந்தமுறை மாட்டவில்லை).
நேருவின் பண்டிட் பட்டம் ஜாதிபெயர்தான் என்று எனக்கு முன்னமே தெரிந்தாலும், திண்ணைக்கு அதை எழுதி அனுப்பும் முன் நான்கு மணி நேரம் இணையத்தில் செலவழித்து, நேரு குறித்த ஒரு இருபது கட்டுரையிலாவது மேய்ந்து சரிபார்த்துவிட்டு எழுதி அனுப்பினேன். (தவறாய் ஊகத்தின் அடிப்படையில் எழுதினால் என்னை உண்டு, இல்லை என்று பண்ணிவிடுவார்கள் என்று தெரியும் என்பதால்.) ஏதோ இந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய நிபுணர் போல நரேஷ் ‘பண்டிட் ‘ என்ற வார்தைக்கு இரண்டு பாராவிற்க்கு பாடம் எடுக்கிறார். அதில் இருக்கும் அதிமேதாவித்தனம் போல் காட்டிகொள்ளும் அறியாமை ஒருபக்கம் இருக்கட்டும். மற்றவர்களை பற்றிய எத்தைகய முன் அனுமானத்துடன் கூடிய திமிர் வெளிபடுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
நேருவின் பண்டிட் பட்டம் ஜாதி பெயர்தான் என்று உறுதிபடுத்தும் மூன்று கட்டுரைகளாவது இணையத்தில் உள்ளது. நேருவின் அப்பாவும் பண்டிட், சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட், இணையத்தில் இருக்கும் காஷ்மீர் பண்டிட்களுக்கான இணைய தளங்களில் வரிசையாய் பாதி உறுப்பினரகள் பண்டிட் என்று தங்கள் பெயருடன் ஒட்டிகொண்டு இருக்கிறார்கள். ஒரு பாயிண்ட் விடாமல், சங்கரபாண்டியும் மற்றவர்களும் சொன்னதை எல்லாம், நேரடியாகவும், திரித்தும் பயன்படுத்தி ஒரு புத்திசாலி தர்கத்தை முன்வைத்த சிவக்குமார், நான் சுட்டிகாட்டிய பின் வாயடைத்து, நேருவின் பண்டிட் தகுதி குறித்து சின்ன சலசலப்பை கூட முன்வைக்கவில்லை. (மனிதரும் இணையத்தில் தேடி உறுதிபடுத்திகொண்டிருக்கவேண்டும்.) இத்தனைக்கும் பிறகு திண்ணையில் வந்து மற்றவனை முட்டாளாக நினைத்து பாடம் எடுக்கவேண்டும் என்றால் அதில் எத்தனை திமிர் இருக்கவேண்டும்.
அதிலும் ‘நேரமில்லை ‘ என்று சால்ஜாப்பு பாட்டுபாடி விளக்கம் தரமாட்டேன் என்று என்னை பற்றி ஆரூடம் சொல்லும் நரேஷ், சிவக்குமார் என் விமர்சனத்தை மெளனத்தால், புறக்கணிப்பால் எதிர்கொண்டதற்க்கு பாராட்டு தெரிவிக்கிறார். இதிலுள்ள ஹிபாக்ரஸி ஒரு பக்கம் இருக்க, இப்படி அதை வெட்கமே இல்லாமல் ஒரு யோக்கியமான வாதம் போல், வெளிப்படையாய் சொல்வதின் உளவியல் பிண்ணணி விரிவான ஆராய்சிக்குரியது.
நரேஷுக்கு தெரியாது. உத்தரபிரதேசத்தில் ஒன்றரை வருடம் நான் வாழ்திருக்கிறேன். காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமல்ல, பொதுவாக எல்லா பார்பனர்களையும் உத்தர்பிரதேசத்தில்கூட (எங்கெங்கெல்லாம் இந்த வழக்கம் உண்டு என்று தெரியவில்லை, குறைந்தபட்சம் அலகாபாதில்) ‘பண்டிட் ‘ என்று அழைக்கும் வழக்கும் உண்டு (அதன் காரணமாகவே நேருவின் பண்டிட் தகுதி குறித்து எனக்கு பொறிதட்டியது.) அலகாபாதில் நான் வேலை செய்த இடத்தில் ஸேகூரிடி கார்டாக வேலை பார்க்கும் ஒருவர் (எனக்கு ஹிந்தி தெரியும் என்பது நரேஷ் போன்ற இனவெறியர்களுக்கு ஆச்சரியத்தை தரலாம்) என்னிடம் ஒருமுறை ‘ ஆப் பண்டிட் ஹை க்யா ? ‘ ( ‘நீங்கள் ஒரு பண்டிட்டா ? ‘ ) என்று வினவினார். ஹிந்தியில் ஐந்து பரிட்சை பாஸ் பண்ணி பெறக்கூடிய பண்டிட் பட்டத்தை மட்டுமே அறிந்த நான், குழப்பத்துடன், ஆராய்ச்சிசெய்து நான் பெற்ற டாக்டர் பட்டத்தைத்தான் ‘பண்டிட் ‘ என்று கேட்கிறாரோ என்று நினைத்து ‘ஆமாம் ‘ என்றேன். ஆனால் அவர் அடுத்து ‘ஜெயலலிதா பி பண்டிட் ஹை க்யா ? ‘ என்று கேட்டதும் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. (ஆனால் ஜெயலலிதாவும் ஒரு டாக்டர்!) என் மெளனத்தை ஆமோதிப்பதாய் எடுத்து கொண்டு, அவர் தன்னையும் பண்டிட் என்று சொல்லிகொண்டு, தன் குடும்பத்தில் தான் மட்டும் ஒரு ஸெகுரிடி கார்டு வேலைபார்க்க நேர்ந்த அவலம் குறித்து சொன்னபோதுதான் எனக்குள் பொறிதட்டியது. மறுநாள் நண்பனிடம் கேட்டு தெளிவாக்கி கொண்டது, இப்போது இப்படி பயன்படும் என்று அப்போது நினைக்கவில்லை.
நான் சிவக்குமார் — சங்கரபாண்டி விவாதத்தில் நுழைவதாகவே எல்லை. வெட்டியாக செலவழிக்க நேரம் இல்லை என்பதை தவிர இதற்கு வேறுகாரணம் கிடையது. (ஜெயமோகன் ஒரு முறை சொன்னது போல தலைபோகிற வேலைகளில் இருக்கிறேன்.) மீண்டும், மீண்டும் சிவக்குமார் நேரு பண்டிட்க்கு தகுதியாவதை நிறுவமுடியும் என்று சொன்ன பின்பு, யாரும் அதில் உள்ள அபத்தத்தை எடுத்து சொல்லாததால், இணையத்தில் நேரம் செலவழித்து சரி பார்த்தபின், என் கடிதத்தை எழுதி அனுப்பினேன். நரேஷ் என்னிடம் வக்கிரபுத்தி வெளிப்படுவதாக சொல்கிறார். அதற்கு அவர் தரும் விளக்கம் ‘நேருவின் சாதியை மனதில் வைத்துதான் சிவக்குமார் நேரு பண்டிட் பட்டத்திற்க்கு தகுதிபெறுவதாக சொல்கிறார் ‘ என்று நான் சொன்னதாக சொல்கிறார். ஆனால் நரேஷ் சொன்னது போல் என் கடிதத்தில் இல்லை. சிவக்குமார் முன்வைக்கும் சாமர்தியமான வாதத்தை நானும் கையாண்டால் அப்படி சொல்லமுடியும், ஆனால் ‘நான் அப்படி நினைக்கவில்லை, சிவக்குமார் அறியாமையின் காரணமாகவே அப்படி சொல்வதாக நினைக்கிறேன் ‘ என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் நேருவின் பண்டிட் ஒரு ஜாதிபெயர் என்றுகூட தெரியாமல், மீண்டும் மீண்டும் அதை நிறுவமுடியும் என்று அவர் தைரியமாய் சொன்னதின் உளவியலே ஒரு ஜாதிய உளவியல் என்பதுதான் நான் சொன்னது. இதை நரேஷ் போன்றவர்களுக்கு எப்படி புரிய வைக்கமுடியும்!
(இப்போது கூட நரேஷ் ‘பண்டிட் ‘ குறித்து திட்டம் போட்டு பொய் சொல்லி திரிக்கிறர் என்று நான் சொல்லவில்லை, அவ்வளவு நம்பிக்கையாய் சொல்வதில் வெளிப்படும் முட்டாள்தனம், மற்றவனை முட்டாளாய் நினைக்கும் ஆதிக்கமனப்பான்மை, தனக்கு ஒரு வாதம் மற்றவருக்கு ஒரு வாதம் என்ற ஹிபாக்ரஸி வெளிப்படுவதாகத்தான் சொல்கிறேன். இதை எல்லாம் ஒரு திமிருடம் தைரியமாய் முன்வைப்பது, ஒரு குறிப்பிட்ட ஆதிக்கஜாதி கருத்துருவத்தின் உளவியல் என்பதே நான் சொலவது. )
(iii) நாயனார், நம்பூதிரிபாட் எம். டா. வாசுதேவன் நாயர் தொடங்கி ராமாராவ், சந்திரப்பாபு நாயுடு வழியாக ஜோதிபாசு, சத்யஜித் ரே வரை எவருடைய ஜாதிபெயரும் எனக்கு ஒப்புதல் கிடையாது. அது குறித்து சமயம் வரும்போது பேசவும் செய்யலாம். என் கடிதத்திலும் நேருவையும் கூட பண்டிட் பட்டத்தை கூச்சமில்லாமல் கொண்டிருந்ததற்காக நான் குறை சொல்லவில்லை. சிவக்குமார் எழுதியதற்கு மட்டுமே என் எதிர்வினை. நரேஷ் தன் சிறகற்ற கற்பனையை விரிக்க முயற்சித்து என்னை பற்றி கற்பிப்பதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியுமா ?
(iv) கிட்டதட்ட ஒரு வருடம் முன்பு ஒரு கருப்பின பெண்மணி ஒருவருடன் பேசிகொண்டிருந்தபோது, நான் பயன்படுத்திய ‘ப்ளாக் மெயில் ‘ என்ற வார்த்தைக்கு, அதை வெள்ளை இனவாத வார்த்தை என கூறி, மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சுட்டிகாட்டிய பின்பு தான் ‘ப்ளாக் ஷீப், Black Humour ‘ (மாலன் ஜெயமோகன் குறித்து திசைகளில் எழுதிய கட்டுரையில் பயன்படுத்திய வார்த்தை ) என்று நாம் பேசும் வழக்கில் சகஜமாய் கலந்துவிட்ட பல வெள்ளை இனவாத வார்தைகள் குறித்த சுய பிரஞ்ஞை வந்தது. இவ்வளவு எளிதான விஷயம் கூட ஒருவர் சுட்டிகாட்டிய பின்னரே புலபட்டது குறித்து வெட்கபட்டேன். இத்தகைய கரணங்களினால் ‘வொயிட் மெயில் ‘ என்ற வார்த்தையை வெள்ளோட்டம் விட உதாரணங்களை எதிர்பார்திருந்தேன்.
நீங்கள் உங்களுக்கே குற்றம் எனப்படுவதை, அவ்வாறு நீங்கள் நம்புவதை நீங்கள் செய்ய நேர்கிறீர்கள். அது வெளியே தெரிந்தால் நீங்கள் வெட்கமடையகூடும் என்பதை வைத்து, வெளியே தெரியகூடாது என்று நீங்கள் அச்சமுறுவதை வைத்து, வெளியே தெரியபடுத்திவிடுவதாக ஒருவர் மிரட்டுவதை ‘ப்ளாக் மெயில் ‘ என்று நாம் பொதுவாக குறிப்பிடுகிறோம். ஆனால் இந்த வொயிட் மெயில் என்பது யாதெனின் அது கீழவருமாறு உள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை நியாயம் எனவும், அதில் குற்ற உணர்வு ஏதும் இல்லாமலும் இயல்பாய் கொண்டிருப்பீர்கள். சிந்தித்தும் அதை வந்தடைந்திருக்கலாம். நிலவும் பொது மதீப்பீடுகள், எளிதில் வெகுமனத்திற்க்கு கவர்ச்சியான கருத்தாக்கங்கள் இதை எல்லாவற்றையும் காட்டி மிரட்டி, நீங்கள் நேர்மையானது என்று நினைக்கும் ஒன்று குறித்துகூட, வெளிப்படையாய் சொல்ல உங்களை பயப்பட வைப்பதை வொயிட் மெயில் என்று சொல்லலாம். இதற்க்கு சிறந்த உதாரணங்களாக சிவக்குமாரின் தர்கத்தில் வெளிப்படும் ஒரு வகை மதிப்பீடு சார்ந்த ஒரு மிரட்டலும், இந்த நரேஷ் (முன்னால் விவாதகளத்தில், இப்போது தன் கடிதத்தில்) முன் வைக்கும் இந்த ‘வீரப்பன் ஆதரவாளர் ‘ என்ற மிரட்டலும் திகழ்கின்றன. (கடந்த இதழில் ஆசாரகீனனும், நீலகண்டனும் ‘மொழிவெறியர் ‘ பட்டம் தருவேன் என்பதாக நாக. இளங்கோவனை மிரட்டியதும் இன்னோரு வொயிட் மெயில்தான். சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு வொயிட் மெயிலிற்கு உதாரணமாக, தலித்களுக்கான ‘இரட்டை வாக்குரிமை ‘ விஷயத்தில், காந்தி அம்பேத்காரை நோக்கி வைத்ததை எடுத்துகொள்ளலாம்.)
நரேஷ் மீண்டும் பழைய வொயிட் மெயில்களையே பிரயோகிப்பது சுவாரசியமாய் இருக்கிறது. பத்து மாதத்தில் அம்பிகளின் அறிவு வளர்ச்சி மறுபரிசீலனை இன்றி அப்படியே இருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது. (மீண்டும் வொயிட் மெயில் என்ற வார்தைக்கு உதாரணமாக இருந்து பொருள் தந்த நரேஷிற்கும் எனது மனமார்ந்த நன்றி.)
நரேஷ் எழுதியது போல், மொட்டையாக சொல்லாமல் படிப்பவர்களது வசதிக்காக விவாதகள முகவரியையும் தருகிறேன். அப்போது தமிழில் எனக்கு சரியாய் தட்டச்சு செய்யவராமல், எழுத்துகளை தேடி அடிக்கும் காலம். பொதுவாக பெரிய பரிசீலனை இல்லாமல், எழுதியதை எடிட் கூட செய்யாமல், எனது வேலை தொடர்பான நெருக்கடியான நேரத்தில் அவசரகதியில், விவாதகளத்தில் கருத்துகளை முன்வைத்திருந்தேன். அப்படி இருந்தும் ஒரு இடத்திலாவது வீரப்பனை ஆதரிக்கும், வீரப்பனது கொலைகளை (வீரப்பன் என்ற சமூக நிகழ்விற்கான, சமுதாயகாரணிகள் குறித்த புரிந்துகொள்ளல் என்ற பெயரில் கூட, எங்காவது) நியாயபடுத்தும் ஒரு வார்த்தையாவது என்னிடமிருந்து வெளிபட்டிருக்கிறதா என்று படிப்பவர்கள் கவனிக்க வேண்டும்.
http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=118&whichpage=1
http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=118&whichpage=2
ஏதோ தெரியாமல் இந்த நரேஷிற்க்கு பயங்கரவாதம் என்பது அரசிடமிருந்தும் தோன்றகூடும் என்று விளக்கமுற்பட்டேன். கொஞ்சம் கவனித்தால் இந்த நரேஷுடன் உரையாடலை வைத்துகொள்ளும் நோக்கதிற்காக, அவரிடம் தேவையே இன்றி (வீம்பு எதுவும் காட்டாமல்) மன்னிப்புகூட கேட்டிருக்கிறேன். அவர் என்னை பற்றி மிக அராஜகமான, அடுத்தவர் உணர்வுக்கான எந்த மரியாதையும் இல்லாமல் எழுதியபோது கூட, உதாரணமாய் என் பெற்றோர்கள் ஒரு தீவிரவாதி தாக்குதலில் தாக்கப்பட்டு இறந்தால் அதை கூட நான் ‘அரசு பயங்கரவாதத்தின் எதிர்வினை என்று சொல்லலாம் ‘ என்று அவர் மிக அநியாயமாய் கருத்து சொன்னபோது கூட எனக்கு கோபம் வரவில்லை. (http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=118&whichpage=1 ) மிகவும் பொறுமையாக நான் பதில் சொல்லியிருக்க காணலாம். இவ்வாறு நான் பொறுமையுடன் கையாண்டு ஒரு உரையாடல் வைத்துகொள்ள முயற்சித்ததற்கு ஒரே காரணம், நரேஷிடம் வெளிபட்ட பார்பனிய கருத்துக்கள் கூட அவரது சூழல் காரணமாக இருக்கலாமே தவிர, அடிப்படையில் அவரிடம் நேர்மையின்மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைத்ததனாலேயே.
இடையில் இணைய இணைப்பு எனக்கு தடைபட்டது. அப்போது விவாதகளத்தில் அவ்யப்போது கருத்துக்களை வைக்கும் பாண்டியன் என்பவர், வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பாதிக்கபட்ட மக்களை, கற்பழிக்கபட்ட பெண்களை அரசு வன்முறைக்கு ஒரு உதாரணமாய் சொன்னார். வேறு எதுவும் சொல்லவில்லை. இவ்வளவுதான் சொன்னார். நரேஷ் அவரை வீரப்பன் ஆதரவாளராகவும் இன்னும் பலவாறு முத்திரையிட்டு முன்வைத்த வொயிட் மெயில்களை அப்படியே கீழே தருகிறேன்.
‘அதுதானே பார்த்தேன்.. என்ன வீரப்பர் தொண்டர் படை இன்னும் காணோமே என்று ? திருடன் கொலைகாரன் கொள்ளைக்காரன் எல்லோரும் புரட்சி வீரர்கள். பிடிக்க போகும் போலீஸ் அரச பயங்கரவாதம். கோவிலில் கும்பிட வந்த இந்துக்களை கொல்பவன் புரட்சி வீரன். அவனை கொல்லச் செல்லும் போலீஸ் அரச பயங்கரவாதம். புர்கா போட்ட பெண்களைக் கொல்பவன் புரட்சி வீரன். அதனைத் தடுக்கசெ செல்லும் போலீஸ் அரச பயங்கரவாதம்.. 1984 தோற்றது… ‘
( http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=118&whichpage=1 )
ஒரு வரியாவது பாண்டியன் சொன்னதற்கு நியாயம் செய்வதாக இருகிறதா ? நான் எழுதிய எதனுடனும், பண்டியனின் உள்ளிடுகையுடனும் எந்த தொடர்பாவது இருக்கிறதா ? எத்தகைய வொயிட் அம்பிச்சு மெயில் இது! ஆனால் பாண்டியன் கொஞ்சம் வொயிட்மெயிலுக்கு பயந்தவர் போலிருக்கிறது. தான் ‘வன்முறை கண்டு மகிழ்பவனல்ல ‘ என்று இந்த நரேஷிடம் போய் மன்றாடுகிறார். நரேஷின் வெறி தலைக்கேறி போகிறது. இதற்குள் எனக்கு இணைய இணைப்பு வந்துவிட நான் அப்போது முன்வைத்த கோபவிமர்சனத்தைதான் நரேஷ் இப்போது திரித்து சொல்கிறார்.
படிப்பவர்கள் கவனிக்கணும். வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அரசிடமிருந்து எந்த வன்முறையும் வரவில்லை என்று நரேஷ் மீண்டும், மீண்டும் சொல்கிறார். ‘இல்லாத வன்முறை ‘ பற்றி பேசுவதாக சொல்கிறார். நான் பின்னால் சதசிவ கமிஷன், மற்ற செய்திகளை முன்வைத்த உடன் ப்ளேட்டை திருப்பி போட்டு வேறு ஏதோ சொல்கிறார். ஒரு பெரும் திரளான விளிம்பு நிலை மக்களின் மீது நடந்த ஒரு மாபெரும் வன்முறையை ‘நடக்கவே இல்லை ‘ என்று சொன்னதற்கு ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அந்த கணத்தில் எழுதிய என் கோபவிமர்சனம் அப்படியே இந்த பக்கத்தில் உள்ளது.
http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=118&whichpage=2
காலம், காலமாக பிறரின் உழைப்பை, ரத்தத்தை, சுரண்டி வாழ்ந்த ஒரு சமூகத்தின் பலன்களை, இன்றும்அனுபவித்துகொண்டு, அந்த சமூகத்தின்மீதான சின்ன விமர்சனத்தை கூட ஆத்திரத்துடன் எதிர்கொள்ளும் அதன் ஒரு பிரதிநிதி, ஆதரவற்ற, எந்த அதிகாரமும் இல்லாத, காலம் காலமாக தங்கள் மீது பிரயோகிக்கபடும் வன்முறையை மட்டும் எதிர்கொள்ளும் ஒரு விளிம்பு நிலை மக்களின் மீது நிகழ்ந்த ஒரு போலீஸ் வன்முறையை, ‘நடக்கவே இல்லை ‘ என்று சொன்னதற்கும், அது குறித்து பேசும் நபரை ‘வீரப்பன் தொண்டர் ‘ என்று சொன்ன அயோக்கியத்தனம் குறித்தும், ஒரே ஒரு வார்த்தை விமர்சனம்தான் குறைந்தபட்சம் என்னால் கொடுக்க முடிந்தது. நான் அளித்த ஒற்றை வார்த்தை விமர்சனம் கீழே மேற்கோள்குறிகளுக்கிடையில்.
‘ராஸ்கல்! ‘
இது முழுக்க ஒருவரின் கருத்தை அடிப்படையாய் வைத்து செய்யபடும் விமர்சனம். ஒருவர் சொல்லும் கருத்து அயோக்கியதனமானது (நேர்மையின்மை என்பதன் எக்ஸ்ட்ரீம் எல்லையை அயோக்கியத்தனம் என்று குறிப்பிடுகிறேன்) என்பதற்கும், சொன்ன நபர் அயோக்கியர் என்று சொலவதற்க்கும் என்ன வித்தியாசம். இந்த சமுதாயத்தின் மீதான வன்முறையில் விளைந்த, தனது சொகுசு வாழ்க்கையின் மீது வரும் சின்ன விமர்சனத்தை கூட ஆத்திரத்துடன் அணுகும் ஒருவன், எந்த அதிகாரமும் இல்லாத மக்கள் மீது நிகழ்த்தபடும் நிறுவனமாக்கப்பட்ட வன்முறையை, நியாயபடுத்துவதை இப்போதும் இப்படித்தான் குறைந்தபட்சமாய் விமர்சிக்கமுடியும். (அதை நீக்காத திண்ணை ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.) அதைதான் நரேஷ் இப்போதும் ரவுடித்தனம் அது இதென்று புலம்புகிறார்.
(v) என்னை பற்றி தனிபட்ட முறையில் சொல்லப்படும் எதுவும் எனக்கு ஒரு பொருட்டு கிடையாது. உதாரணமாய் ஒரு அம்பி, திண்ணை விவாதகளத்தில், என்னை நேரடியாகவே ‘பாஸ்டர்ட் ‘ என்றும், இன்னும் என் அம்மா, அப்பா விவரம் குறித்தும் (அதையும் நான் எழுதியதை தவறாக வாசித்து) விமர்சனம் வைத்துவிட்டு போனது. ( http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=61&whichpage=2 , http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=51&whichpage=2 Rajan என்பவரின் உள்ளிடுகை) எனக்கு கோபம் வரவில்லை. ‘பாஸ்டர்ட் ‘டாக இருப்பதில் எந்த கேவலமும் இல்லை என்று அந்த அம்பிக்கு சொன்னேன். ஆனால் இங்கு நரேஷ் ‘தார்மீக கோபம் ‘ என்று என்னை அடிக்கும் கிண்டல், என்னை பற்றியது மட்டுமல்ல. அது விளிம்பு நிலை மக்கள் மீது பாயும் நிருவனபடுத்தபட்ட பயங்கரவாதம் குறித்து பேசும், எல்லாரையும் பற்றிய கிண்டல். தன் சுய அடையாளங்கள் தாண்டி, மற்றதை பற்றி சிந்திக்க முனையும் அனைவரையும் பற்றிய கிண்டல். அவர்களை நோக்கி வைக்கப்பட்ட வொயிட் மெயில்.
நான் சார்ந்துள்ள கருத்துக்களுக்காக மட்டும் இதுவரை அளித்த வந்துள்ள விலைகள் (பெற்றோர்களிடத்தில், குடும்பத்தில், படிப்பில், வேலையில், நட்பில்…) என் நெருங்கிய பல நண்பர்களுக்கு தெரியும். எத்தனையோ அருமையான நட்புகள் வெறும் கருத்து மோதலில் உடைந்து போயிருக்கிறது. முழுக்க முழுக்க என் சுய ஜாதியை, மற்ற சுய அடையளங்களை எதிர்த்து, நடைமுறை வாழக்கை உட்பட எல்லா தளங்களிலும் செயல்பட்டு வருகிறேன். இதற்கேல்லாம் ஒரு பதிவோ, விளம்பரமோ கூட கிடையாது. நானெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இன்னும் எத்தனையோ விலை கொடுத்தவர்கள், நம்பிய விஷயத்திற்க்காக வாழ்கையை தொலைத்தவர்கள் திண்ணையிலும், பதிவுகளிலும் எழுத வரலாம். அதற்கு மாறாக யாராலும் அறியப்படாமல் சரித்திரத்தின் புதையுண்ட பக்கங்களில் மறையலாம். அதை எல்லாம் இன்னும் தன் கொள்ளுபாட்டியும், கொள்ளுதாத்தாவும் கொண்டிருந்த கருத்தாக்கங்களில் இருந்து கூட வெளிவராத, தன் சுய அடையாளங்கள் சார்ந்து, அதற்கு சோப்பு போடும் கருத்துகளில் புல்லரித்து போய், அதன் மீது வரும் சிறு விமர்சனங்களை கூட மிகுந்த ஆத்திரத்துடன் எதிர் கொள்ளும் ஒருவன் கிண்டலடித்தால் அது எத்தகைய அவல நிலை!
(vi) அதைவிட இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான இன்னோரு விஷயம் உண்டு. நமது இலக்கிய சன்னிதானங்கள் ஒரு பக்கம் இதை எல்லாம் எதிர்கொள்ளும் அணுகுமுறை. என்னுடைய/நரேஷுடைய நேர்மை அரசியல் சார்புகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நேரடியான ஒரு உரைநடை தமிழில், எளிமையான வார்தைகளால் சொல்லபட்ட விஷயத்தை இந்த நரேஷ் புரிந்தகொண்ட விதம் பல தடவை விவாதகளத்தில் பதிவாகியிருக்கிறது. இவர் சிக்கலான வாசிப்பையும், மனஉழைப்பையும் கோரும் இலக்கியபிரதிகளை எப்படி வாசிப்பார் என்று ஊகித்து கொள்ளலாம். எனக்கு தமிழின் வாசிப்பதற்கு கடினமாயுள்ள பிரமீளின் கவிதைகளுக்கும், ரமேஷ்-பிரேமின் சில கதைகளுக்கும் வாசிப்பு உண்டு. உலகின் முக்கியமான இலக்கிய படைப்புகளை படித்திருக்கிறேன். காஃப்கா உள்ளிட்ட சிலரின் அத்தனை படைப்புகளையும் படித்ததோடு நில்லாமல், அதற்கெல்லாம் எனக்கென ஒரு வாசிப்பு உண்டு. அதை முன்வைக்கவும் முடியும்.
என்னயும், நரேஷையும் திண்ணையின் உத்சவர் ஜெயமோகன் எப்படி எதிர்கொள்வார் ? கொஞ்சம் விவாதகளபக்கங்களை க்ளிக்கிட்டு பார்த்தால் நரேஷ் கேட்ட மகா அசட்டுததனமான கேள்விகளுக்கெல்லாம் ஜெயமோகன் பதில் சொல்லியிருக்க காணலாம். அது சரி, அமெரிக்காவில் இருந்தால், தன் ஒரு புத்தகத்தை கூட படிக்காதவருக்கு பக்கம் பக்கமாக பதில் எழுதகூடியவர்தானே! இதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவரின் சிக்கலான கதைகளுக்கு வாசிப்புள்ள என்னை எப்படி எதிர்கொள்கிறார். ஆன்மீகம் குறித்து கார்திக்கிற்கு எழுதிய கடிதத்தில் சொல்கிறார் ‘இப்போது சின்னகருப்பனுக்கு மறுப்பு தெரிவிக்கும் ஆசாமியிடம் வெளிப்படும் மூர்கத்தை பாருங்கள். இதை விடவா மூர்கமூம், புரிந்துகொள்ளாமையும் மதவாதிகளிடம் வெளிபடுகிறது ? ‘
ஜெயமொகன் வெளிப்படையாய் முன்வைக்கும், அவர் புனைவு எழுத்தில் உள்ள, மெளனமாக பூடகமாக அவர் முன்வைக்கும் எல்லாவித அரசியலுக்கும் நான் எதிரானவன். ஆனால் பல முறை வாய்ப்புகிடைத்த போதெல்லாம் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறேன். அது இலக்கியரீதியாய் ஜெயமோகன் எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை. அவர் உருவாக்கும் இலக்கியபிரதி எனக்கு அளிக்க கூடிய அறிவையும், வாசிப்பின்பத்தையும் நான் நிராகரிக்கவில்லை. இப்படி தன்னுடைய பிரதியை முதிர்சியாய் அணுகும் ஒரு வாசகனிடம்தான் மூர்கம் வெளிப்படுவாதாக போகிறபோக்கில், தன் ஒரு புத்தகத்தை படித்திராத ஒருவருக்கு எழுதிய பல பக்க கடித்ததில் சொல்லி செல்கிறார். அதையும் மதாவாதிகளை நியாபடுத்து ஒரு வாதத்திற்க்கு ஆதரவாய் சொல்கிறார். தமிழின் ஆற்றலும், திறமையும் உடைய ஒரு புனைவு எழுத்தாளனின் முதிர்சியும், புத்தியும் இந்த வகையில் இருக்கும்போது, தமிழில் ஏன் இலக்கியம் ‘அகலமாய் ‘ பரவவில்லை என்று புலம்புவதற்கு பொருள் ஏதேனும் உண்டா ?
(vi ) இப்போதாவது பண்டிட் பற்றி தவறான தகவலை முன்வைத்து, என்னை வக்ரபுத்திகாரன் என்றெல்லாம் திட்டியதற்கு நரேஷ் மன்னிப்பு கேட்பார், என்று யாராவது நினைக்கிறீர்கள் ? நான் மட்டும் பண்டிட் பற்றிய தவறான தகவலுடன் கடிதத்தை எழுதியிருந்தால் இங்கே என்ன நடந்திருக்கும் ? எத்தகைய கண்டன கணைகள், வக்ரபுத்தியை கோடிட்டு சுட்டி காட்டும் தார்மீக கோபம் என்று திண்ணையில் எனக்கு வூடுகட்டி அடித்திருப்பார்கள். இதையெல்லாம் யோசித்து பார்க்கும்போது பண்டிட் மோதிலால் நேருவிற்கு நன்றி.
(vii) ஓகே நரேஷ், நீங்கள் ரொம்ப விரும்பி கேட்டதனால் எனது முக்கியமான வேலை நேரத்தை செலவழித்து இவ்வளவு நீட்டமாய் எழுதியுள்ளேன். இனி இப்படி எதிர்பாக்க கூடாது, சரியா ? (வண்ணதாசனை போல ) எல்லாருக்கும் அன்புள்ள ரோஸாவசந்த்.
———————————————-
(சில நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)
- வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘
- தேவகுமாரன் வருகை
- கலைக்கண் பார்வை
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)
- அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.
- வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்
- அன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘
- யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்
- உத்தரவிடு பணிகிறேன்
- அந்தரங்கம் கடினமானது
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- கடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- ஆரியம் இருக்குமிடம்… ? ? ? ?
- மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி
- பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.
- திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்
- அர்த்தமுள்ள நத்தார்
- படிகளின் சுபாவம்
- நவீன மதவாதத்தின் முகங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)
- பலகை
- அம்மாயி
- ‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- மறுபக்கம்
- கடிதங்கள் – டிசம்பர் 25 -2003
- பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- விடியும்!-நாவல் – (28)
- ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி
- சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்
- நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி
- பின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.
- போன்சாய் குழந்தைகள்
- கவிதைகள்
- தாம்பத்யம்
- முற்றுப் பெறாத ஒரு கவிதை
- கோபம்