கோகுலன்
இத்துடன் பதினான்கு மாதங்கள் கடந்துவிட்டன. சென்றமுறை விடுப்பில் வந்திருந்த பொழுதே தெங்கமம் சென்று விசாரித்துவர நினைத்தேன். இருந்தும் முடியவில்லை. பிஜு இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தநிலையில் அங்கு சென்று விசாரிப்பது ஆறும் ரணத்தை கீறிப்பார்ப்பது போலாகுமோ என தயங்கினேன். மேலும் நேரில் சென்று விசாரிக்காதது இன்றுவரைக்கும் மனதில் ஒரு குற்ற உணர்வாகவே இருந்து வருகிறது. இந்தமுறை கண்டிப்பாக போய்வர வேண்டும். அபியும் என்னுடன் வருவதாக சொல்லியிருந்தான்.
பிஜு நான் மற்றும் அபி சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தோம். இடையில் எத்தனையோ நண்பர்கள் சேர்ந்தும் பிரிந்தும் போயிருந்தாலும் நாங்கள் மூவரும்தான் பிரியாமலேயே இருந்தோம். எனது கல்லூரி படிப்பிற்காக எங்கள் குடும்பம் அருகிலுள்ள நகரத்திற்கு இடம்பெயர்ந்தது. அதன்பின்னும் அடிக்கடி போன்பேசுவது மூலமாகவும் வாரயிறுதி சந்திப்புகள் மூலமாகவும் தொடர்ந்தது எங்கள் நட்பு.
நான் வேலைக்காய் கத்தார் கிளம்பும்போது வழியனுப்ப சென்னை வந்திருந்தான் பிஜு. அப்பொழுதுதான் அவனை கடைசியாக பார்த்தது. அப்பொழுதும் சரி, அதன் பின் போனில் பேசும்போதும் சரி, தனக்கும் கத்தாரில் ஒரு வேலை பார்க்கசொல்லுவான். ஆனால் அவன் அம்மா அவனை எங்கும் அனுப்ப தயாராயில்லை என நன்றாக தெரிந்தே நான் அதுபற்றி முயற்சி ஏதும் எடுத்திருக்கவில்லை.
பிஜுவுக்கு சிறுவயதிலிருந்தே இதயத்தில் ஏதோ பிரச்சினை. அதற்காக அவன் தொடர்ந்து மருந்தும் உட்கொண்டிருந்தான். எங்களுக்கு விபரம் தெரிந்த வரையில் அதனால் அவனுக்கு எந்தவித தொந்தரவும் இருந்தது இல்லை. இருந்தும் அது அவன் உயிரை பறிக்குமளவு கொடூரமாய் அமையும் என நாங்கள் யாருமே நினைக்கவில்லை.
அந்த மலைச்சாலையில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் நான்கு வீடுகளில் அவன் வீடும் ஒன்று. பாதையின் இருபுறமும் ரப்பர் தோப்புகள் அடர்ந்திருந்தன. சாலையோரங்களில் அன்னாசிப்பழங்கள் அதிகமாக பழுத்திருந்தன. இந்தத்தோப்புகள் எல்லாம் ஒரு காலத்தில் பிஜு வீட்டுக்கு சொந்தமானது தான்.
இடுப்பில் செருகப்பட்ட அரிவாளுடனும் புல்கட்டு சுமந்துசெல்லும் ஒரு பெண் சாதாரணமாக என்னை கடந்து முன்னேறி சென்றாள். அபியும்கூட சாதாரணமாக ஏறி விட்டான். எனக்குத்தான் மூச்சுவாங்கியது.
பிஷுவின் அம்மா வாசலிலிருந்தே எங்களை கவனித்திருக்க வேண்டும். எங்களை வரவேற்கும் பொருட்டு சாலையில் கொஞ்சம் இறங்கிவந்து புன்னகையுடன் நின்றார். நானும் மூச்சுவாங்கியபடியே ஒருவழியாக ஏறினேன்.
‘என்ட ஈஸ்வரா, ஆரா வருந்நது? ஈ புள்ளாருக்கு இந்நெங்கிலும் இவ்விட வரானுள்ள வழி அறிஞ்ஞல்லோ’ என்றபடியே எனது கைகளை இறுகப்பற்றிக்கொண்டார். அந்த ஒருகணத்தில் என்ன பேசுவது எனத்தெரியாமல் புன்னகைத்தபடியே நின்றேன் நான்.
என்னையும் அபியையும் நலம் விசாரித்தபடியே வீட்டுக்குள் அழைத்துசென்றார். நாற்காலி எடுத்துப்போட்டு அமரச்சொன்னார். இருந்த ஒரு நாற்காலியில் அபியை அமரச்சொல்லிவிட்டு அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தேன்.
‘போன தடவயே நான் வராம போனதுக்கு என்மேல கோபம் ஏதும் இல்லியேம்மா?’
‘ஆ… அங்ஙன ஒன்னுமில்லா.. எண்ட மக்களெ எனிக்கு அறியத்தில்லியோ’ என்றார் மலர்ந்த புன்னகையுடன்.
கட்டிலில் என் அருகிலேயே அமர்ந்தார். என்னை கண்டதில் அவரது மகிழ்ச்சி முகத்தில் நன்றாக தெரிந்தது. அதேசமயம் அவர்களின் முகத்தில் இழையோடியிருந்த சோகமும் தெரியாமல் இல்லை.
அவரின் தலைக்கு பின்னால் சிரித்தபடி இருந்தான் பிஜு. படத்தில்தான். அதன் கீழே அவனுக்கு மிகவும் பிடித்த அவன் புல்லாங்குழலும் இருந்தது. அவன் விரல்களின் ஸ்பரிசங்களை அதிகம் கண்டிருந்த அது இப்பொழுது அந்த குடும்பத்தில் பொக்கிசமாய் இருக்க வேண்டும். அருகிலேயே ஒரு விளக்கும் அடிக்கடி மின்னிக்கொண்டேயிருந்தது.
அவன் இறந்தநாளின் முந்தையநாள் மருத்துவனை நிகழ்ச்சிகளெல்லாம் கண்ணீருடனே கூறினார். நானும் பேச வார்த்தைகள் ஏதுமில்லாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன். அபி அங்கு அடிக்கடி செல்பவனாதலால் எழுந்து முற்றத்தில் சென்று நின்றுகொண்டான். என் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக்கொண்டிருந்தன. அதிகமாய் தொண்டை அடைத்தது. அவ்வப்போது மௌனம் நிலவியது.
என்னையும் பேசி அழவைப்பது அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, கண்ணீர் துடைத்துக்கொண்டு வேறுபேச்சு பேச ஆரம்பித்தார். இருந்தும் அவரது கண்கள் கலங்குவதை நிறுத்துவதாயில்லை. அதற்குமேல் உட்காரமுடியாமல் மார்பின்மேல் கிடந்த துண்டால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே எங்களுக்கு சாயா போடுவதாக சொல்லி அடுக்களை சென்றார்.
சாயா குடித்து முடிக்கும்போதுதான் உள்ளிருந்து பாட்டியின் குரல் கேட்டது.
‘ஆராடி அது?.. பிரவிணானோ?’
‘ஆமா பாட்டி, எப்படி இருக்கீங்க? ‘
‘எனிக்கெந்தா? நி எப்போலு வந்நு? கண்டிட்டு ரெண்டு வருசம் ஆயில்லோ மோனே?’ என கேட்டபடி மார்பின் கச்சையை இறுக்கி முடிந்துகொண்டே வந்த பாட்டியை கைபிடித்து கட்டிலில் அமரவைத்தார் அம்மா.
எண்பது வயதை தாண்டியிருக்கும் பாட்டிக்கு. எனக்கு விபரம்தெரிய அவருக்கு கண்கள் தெரிவதில்லை. இருந்தும்கூட இந்தவயதிலும் தோட்டத்திலும் வீட்டிலும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். அம்மாவைவிட பிஜுவின் மீது உயிரையே வைத்திருந்தவர். அவர் செய்யும் மீன்குழம்பு என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
வீட்டின் முன்னால் இருக்கும் தோப்புகள் அனைத்தும் பாட்டியின் பூர்வீக சொத்துதான். அனைத்தும் பிஜுவின் மருத்துவச் செலவுக்காகவே விற்கப்பட்டன. அம்மாவும் வழக்கமாக முந்திரி பண்ணையில் இரண்டு ஷிப்ட் வேலை பார்ப்பார். வார விடுமுறை நாளில் கூட லேகியம், வடகம் செய்வதுமாக கஷ்டப்படுவார். அப்படியிருந்தும், அந்த மருந்தும்கூட அவனை குணப்படுத்தவில்லை என்பது மிக வருத்தமானது.
எனது வேலைகுறித்தும் விடுமுறை நாட்கள் குறித்தும் கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா. கத்தார் செல்ல வேண்டுமென பிஜு மிகவும் விரும்பியதாகவும், என்னுடன் ஒரு ஆறு மாதமாவது அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினார். கொஞ்சம் சிரிப்புடனும் கொஞ்சம் வருத்ததுடனும் கழிந்த அந்த உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்திலும் பிஜூ இல்லாமல் இல்லை.
அம்மாவுடன் பேசிய வண்ணம் இருந்தாலும் நான் பாட்டியை கவனித்துக்கொண்டே இருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டேயிருக்க பாட்டி சுவற்றில் தடவிப்பார்த்து அவனின் புல்லாங்குழலை எடுத்து கையில் வைத்துக்கொண்டார். அவரது விரல்கள் புல்லாங்குழலின் துளைகளை ஒவ்வொன்றாய் தடவிக்கொண்டே வந்தது. கடைசித்துளையை தடவி முடிக்கும் தருணம் பார்வையில்லாத அவர் கண்களிலிருந்து ஓர் துளி கன்னத்தில் வேகமாய் உருண்டோடி மார்க்கச்சையில் விழுந்து காணாமல்போனது.
இன்னும் படத்தில் புன்னகைத்தபடியே இருந்தான் பிஜு.
gokulankannan@gmail.com
- அண்ணாவின் வாழ்க்கையில் 1962
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- இருப்பை வெளிப்படுத்தாத பயிற்சிப்பட்டறை
- நத்தை!
- ஆகஸ்டு 9
- தமிழர்கள் நாங்கள்! கவிதை சித்திரம
- செவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)
- அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்ஸின் – ஒரு கலை அஞ்சலி
- ‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு
- ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது
- ‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்
- தமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா!
- ஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை
- தாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !
- நம்பினோர்…..
- பறவை
- ஜிகாதின் சொற்கள்
- வியாபாரிகளாகும் நடிகர்கள்!
- அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?
- அடுத்த பக்கம் பார்க்க
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)
- வனாந்தரத்தைத் தொலைத்தவள் !
- பிப்ருவரி 14
- குஸ்தி
- பிஜு
- தூவல்..