நாகரத்தினம் கிருஷ்ணா
சீனுவாசனுக்கு நித்திரை வரவில்லை. வரவும் செய்யாது.
கறுப்புப் பூனையொன்று, நேர் மேலே- உத்திரத்தின் மீது நடைபழகிக் கொண்டிருக்கிறது என்பதை, இருட்டில் மின்னும் இரண்டு கண்கள் உறுதி செய்தன.
சீனுவாசன் கடந்த இரண்டு மணி நேரமாய் இப்படித்தான் புரண்டு புரண்டு படுக்கிறான். வெள்ளி கூட முளைத்து விட்டது. இப்படி ஒரு முறை புரண்டு படுக்கும்போது, இவனது காலருகில் படுத்திருந்த அவனது அம்மா கமலத்தின்மீது பட்டுவிட ‘எழவெடுத்தப் பய இப்படி உதைக்கிறானே ‘ எனக் கத்திவிட்டு, அவள் தள்ளிப் படுத்ததுதான் மிச்சம்.
புரண்டு படுப்பதில், பொத்தான் இல்லாத அவனது கால்சராய் அடிக்கடி அவிழ்ந்து கொள்ள, இவனது கைகளும் சிரமம் பாராமல் அவிழும் போதெல்லாம் முடிச்சுப் போட்டன. மேலே அரை நிர்வாணம். சட்டை எதுவும் போட்டிருக்கவில்லை.
எந்தப் புழுக்கத்திலும் சட்டை போடாமல் இருந்ததில்லை. இன்றைக்கு வேண்டாம்னு கொடியில போட்டுட்டான். கழுத்துப் பட்டையிலும் அல்குளிலும் அந்த சட்டை கிழிந்திருந்தது மட்டும் காரணமல்ல, வேறு காரணமும் இருந்தது.
மூன்று வருடமாக மயிலத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தபோது வாங்கியிருந்த அந்த சட்டையைப் போட்டுபோட்டு அலுத்துவிட்டது. ‘தன்வயசுப் பசங்கள் பிச்சேரியிலோ, திண்டிவனத்திலோ சட்டை எடுக்கும்போது இவனுடைய தகப்பன் மட்டும் மயிலத்தில் எடுத்திட்டாரே ? ‘ என்று நிறையவே நம்ம சீனுவாசனுக்கு வருத்தம்.
‘எனக்கு ஒண்ணும் இந்தச் சட்டை வேணாம் ‘ அப்படான்னு, தகப்பன் சாம்பசிவம் கிட்ட சொல்றதுக்குப் பயம்.
கழுப்பெரும்பாக்கத்தில் நடக்கும் திரெளபதை அம்மன் திருவிழாவில், படுகளத்திற்கு மறுநாள் நடக்கும் கூத்தில் சாம்பசிவம் துரியோதனனாக ஆடுகளத்தில் பெரிய மீசையோடு கிரீடத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு குதிக்கும்போது ஓடும் பபூனுக்கு மட்டுமல்ல, முன்னால் பெருசுகளுக்கு இடையே கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பையன்களுக்குக்கூட அவனிடம் பயம் வந்துவிடும்.
இந்தப் பயம் கூத்துக்கு மறுநாளும் தொடர்ந்து, பிறகு எல்லா நாளுமே ‘பயம் ‘ என்றாகிவிட்டது.
எனவே ‘பிச்சேரிச் சட்டையைப் ‘ பற்றி பேசணும்னா பயம் பயம் அப்படி ஒரு பயம். அது சரி, மூன்று வருடத்துக்கு முன்னே வாங்கிய அந்த மயிலத்து சட்டையும் எத்தனை நாளுக்கு வரும் ?.
பக்கத்து ஊரு பள்ளிகூடம் போவணும்னாலும் சரி, நொண்டி வாத்தியார் திண்ணைப் பள்ளிக்கு ‘மல்லாட்டையோட ‘ போகும்போதும் சரி, களத்துமேட்டிலிருக்கும் நெல்லுக்கட்டுக்குக் காவலிருப்பதானாலுஞ் சரி, கிராமத்துல வயசுக்குவந்த அக்காள்களோட ‘உஸ்கோபாரி ‘ விளையாட்டுன்னாலும் சரி எல்லாத்துக்கும் இந்த மயிலத்துச் சட்டைதான்.
கடந்த ஒரு மாசமாகவே சீனுவாசன் தகப்பனை தொளைக்கிறான். சாம்பசிவமும் என்ன பண்ணுவான். பையனுக்கு நல்லதா ஒரு சட்டை எடுக்கணும்னுதான் அவனுக்கும் ஆசை. என்ன செய்யறது ? இருக்குற கால்காணியும், வாரம் குத்தகைன்னு வம்புல இருக்குது. இவனுக்கும் கூத்தாடிப் பொழப்பு. ஆடி மாசத்துலயும், அறுவடை நாள்லயும் நாலு காசு பார்க்கணும்னு, பிரம்மன் சாம்பசிவம் தலையில எழுதி வச்சிருக்கான்.
கமலத்துக்கோ அய்யாவு முதலியார் வீட்ல வேலை. விடியலுக்கா போனாள்னா, திரும்பறதுக்கு சூரியன் மேக்காலே விழணும். இல்ல, குமரன் பஸ் பின்னேரம் திண்டிவனம் திசைக்குப் போகணும். ‘முதலியார் வீட்டுல, ஏதோ நாளு கிழமைக்கு வாய்க்கு ருசியா சோறு போடறாங்க ‘. ‘மீந்ததை கொண்டு போன்னு ‘ சொல்றாங்க. ‘கிழிஞ்ச பொடவைக் கொடுக்கிறங்க ‘. ‘இதுக்கு மேல என்ன வேணும் ? ‘, ‘எம் பையனுக்கு சட்டை துணின்னு அவங்ககிட்ட நிக்கறதுல ஞாயமில்ல ‘ என்பது கமலத்தின் வைராக்கியம்.
சீனுவாசன் அன்று காலையிலிருந்தே சந்தோஷத்தில் இருந்தான்.
தகப்பன் சாம்பசிவத்துக்கு புதுச்சேரிப் பக்கத்துல சின்ன கோட்டகுப்பத்துல கூத்து. சாம்பசிவம் ஆனத்தூர் சீனுவாசன் ஜமாவில இருக்கான். வாத்தியார் சீனுவாசன் ஒரு மாசத்துக்கு முன்னாடியே சாம்பசிவத்துக்குக் கடிதாசி போட்டிருந்தார்.
சித்திரை பிறந்து முதல் கூத்து. நாய்க்கர் கிணத்துல குளிச்சுட்டு வளர்ந்திருந்த சிகையை ஈர இழைத் துண்டால் நன்கு துவட்டிக் கொண்டு, உச்சிவேளையில் அங்காளம்மனுக்கும் பாவாடைராயனுக்கும் பொங்க வச்சி ‘ இந்த வருடம் நிறையத் தாம்பூலம் வரணும் ‘ னு சாம்பசிவம் வேண்டிக்கொள்ள பக்கத்திலிருந்து பார்த்த சீனுவாசனுக்குச் சந்தோஷம்.
பையன் மீது உச்சிகுளிர்ந்து சாம்பசிவமும், ‘இந்த முறை கூத்துக்கு போயிட்டு பிச்சேரிக்கும் அப்படியே போயி ஞாயிற்றுக் கிழமை கடைகள்ல நல்ல சட்டையா எடுத்து வரேன். நம்ம ஊரு ‘ஊராகாலி ‘ கிட்ட சொல்லியிருக்கன். செனையாயிருக்கும் செவலைப் பசு கண்ணு போடற நெலைமையில இருக்குது. சாந்திரம் மந்தைவெளியில் இருந்து ஒழுங்கா திரும்பலைன்னா, தேடிப்பாரு. அனேகமா தோட்டக்கால் பக்கந்தான் இருக்கும். யாராச்சும் வயித்துப் பசுவ அடிச்சிடப் போறாங்க. கண்ணுபோட்டா, மொத சீயும் பாலு உனக்குத்தான் ‘ என்று சாம்பசிவம் சொல்லிக் கொண்டு போக, ‘அப்போவ்.. சட்டயை மறந்துடப் போற! ‘ ன்னு சொல்லி சீனுவாசன் தனது தேவையை மறுபடியும் ஞாபகப் படுத்தினான்.
சாம்பசிவம் அஞ்சரை குமரன் பஸ்ல கிளம்பிட்டான். சீனுவாசனுக்குத் தன் தகப்பனிடம் தன் சட்டையைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சொல்லவில்லையே என்ற வருத்தம்.
சமீபத்தில் காலாப்பட்டில் பார்த்த படமொன்றில் அவனொத்த பையன் ரஜனி ஸ்டைலில் நடித்திருந்தான். அந்தச் சட்டை கூட நல்லா இருந்தது: பச்சை நிறத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடு போட்டுப்பள பளவென்றிருந்தது. இரண்டு பக்கமும் ஜோபி வேறு. ஜோபிகளுக்கு மேல இரண்டு பச்சை பட்டன்கள். காலர் கூட பெரிதாக. அரைக்கைச் சட்டைதான் என்றாலும் எடுப்பாக இருந்தது. அய்யாவு முதலியார் வீட்டு கணேஷ் சட்டை கூடப் பரவாயில்லை. ‘நல்லா செழுப்பா, நெறீய வெள்ளை புள்ளிகளோட ஜோரா இருந்தது. அந்தமாதிரி கூட வாங்கியாரச் சொல்லியிருக்கலாம் ‘.
இந்த வருத்தத்தில், இப்போது பள்ளிக்கூடம் விடுமுறை என்ற வருத்தமும் கூட்டுச் சேர்ந்துகொண்டது. கமலம் புதுச் சட்டையை உடனே போடச் சம்மதிக்கமாட்டாள். மயிலத்தில் வாங்கிய சட்டையை மேலும் கிழித்து, பழங்கலத்தில் போட்டு வைத்திருந்த கந்தல் துணிகளோடு சேர்த்துவிட்டான். கமலம் இனிப் பழைய சட்டையைத் தேடி எடுக்கமாட்டாள். கிடைத்தாலும் அதனைப் போடச்சொல்லி வற்புறுத்த மாட்டாள். பையன் சீனுவாசன் தன் கெட்டிகாரதனத்தை மெச்சிக் கொண்டான். எப்படியாவது அம்மாவின் மனதையும் தன்பக்கம் திருப்பவேண்டும் என்று தீர்மானித்தான்.
முதலியார் வீட்டிலிருந்து திரும்பிய கமலம் குளிப்பதற்காகத் தண்ணிர் சுடவைக்க, சவுக்குச்செத்தை பிராய்ந்து வந்து கொடுத்தான். முதலியார் வீட்டிலிருந்து வந்திருந்த சோற்றைப் பிசைந்து சாப்பிட்டுவிட்டு, தட்டைக் கழுவி வைத்தான். இதற்கிடையில் தகப்பன் சாம்பசிவம் சொல்லியது போன்று தோட்டக்கால் சென்று செவலைப்பசுவைக் கொண்டுவந்து தொழுவத்தில் கட்டினான். வீடு தேடிவந்து சோறு கேட்ட ஊர்த் தொழிலாளர்க்கு இவனே சோறு போட்டுவிட்டு வந்தான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கமலம், பையனை உட்காரச் செய்து துடைப்பத்தில் ஒரு பிடி எடுத்து, கொளுத்தி மூன்றுமுறை அவன் தலையைச் சுற்றி அதில் ‘தூ ‘ வென்று எச்சில் துப்பித் தூர எறிந்து திருஷ்டி கழித்தாள்.
முதலியார் வீட்டு வேலைப் பளு, கமலத்திற்கு தூக்கம் சுலபத்தில் வந்தது. சீனுவாசனுக்கு மட்டும் வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. தூரத்தில் தொழுவத்தில் கட்டியிருந்த, செவலைப் பசுவுக்கும் தூக்கம் வரவில்லையோ என்னவோ தூங்காமல் அசைபோட்டுக் கொண்டிருந்தது. சட்டை வந்தவுடன் யார் யாருக்குக் காட்ட வேண்டும் என்று சீனுவாசன் பட்டியல் போட்டான். சப்பாணி வடிவேலு, ஊளமூக்கு ராமசாமி, கனகம்.. அலமேலு பிறகு அந்த தடிக் கணேசு. எப்படியெல்லாம் அவனை வம்புக்கிழுத்தார்கள். அதிலும் அந்த சப்பாணி ‘கந்தசட்டைச் சீனுவாசன் ‘ னு இவனுக்குப் பேர் வச்சிருந்தான். எத்தனை மணிக்கு
சீனுவாசன் தூங்கினானோ ?
‘சீனுவாசா! ஏய்.. சீனுவாசா ! எழுந்திரு. ‘ கமலம்தான் எழுப்பினாள்.
‘மணி என்ன ஆவுது ? அப்பா வந்துட்டாரா ? ‘
‘ஒங்கப்பன் பதினொண்ரரை குமரனுக்குதான் வருவாரு. சட்டைக்குக் காத்திருக்கியா ?, மொதல்ல வாங்கன காசோட கள்ளுகடைக்குப் போகாம வரட்டும் ‘
‘இல்லம்மா! இந்தமுறை அப்படி எதுவும் நடக்காது பாரேன் ‘
‘ ஆமாம்..நீதான் ஒங்கப்பனை மெச்சிக்கணும்! முதலியார் வீட்டுக்குப் போறன். நீ பல்லத் துலக்கிட்டு,கொஞ்சம் பழயதப் போட்டு சாப்பிடு. எங்கேயும் போயிடாதே. செவலைப் பசுவைப் பாத்துக்கோ. நான் மேய்ச்சலுக்கு அனுப்பல ‘ கட்டளையைக் கோர்வையாக ஒப்பித்துவிட்டு கமலம் புறப்பட்டுவிட்டாள். ‘
சீனுவாசனுக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒரு வேளை அம்மா சொன்னதுபோல ‘அப்பா இந்த முறையும் ஏமாற்றி விடுவாரா ? ‘ ‘சீச்சீ அப்படி எதுவும் நடக்காது. அம்மாவுக்கு அப்பாவைப் பிடிக்காது, அதுதான் இப்படி. ‘ சமாதானப் படுத்திக்கொண்டான்
அரைமணிக்கொருமுறை கணக்கப்பிள்ளை வீட்டில் போய் மணி பார்த்துவந்தான். மணி நகராமலேயே இருந்தது. கடைசியாக கேட்டபோது பதினொண்ரரை என்றார்கள். பஸ் நிற்கும் ஆலமரத்தடிக்கே போய்விட்டான்.
குமரனும் வந்தது. எல்லோரும் இறங்கினார்கள். சாம்பசிவம் வரவில்லை. மனசுக்கு ஏமாற்றம்.
கிழக்குத்தெருக் கவுண்டர் வீட்டு பொன்னுசாமியைக் கேட்டான்.
‘அண்ணே! பொன்னுசாமி அண்ணே! எங்கப்பாவைப் பார்த்தீங்களா ? ‘
‘யாரு ? நம்ம சாம்பசிவம் பையனா ? பார்க்கலியே! இந்த பஸ்ல வரலியே. ஒருவேளை நாலரை பெரியார்ல வரலாம் ‘ சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். சீனுவாசனுக்கு வீட்டுக்குத் திரும்ப மனசு வரல்ல. செவலைப் பசுவைப்பற்றிய ஞாபகமும் போய்விட்டது. காத்திருந்தான் சிறிது நேரத்தில் கூத்துக்குப் புறப்படும் முன் அப்பா சொன்னதும், அம்மாவின் கோபமும் ஞாபகத்திற்கு வர வீட்டிற்குத் திரும்பினான். வீட்டிற்குத் திரும்பி செவலைப்பசுவை வந்து பார்த்தான். பன்னீர் குடம் உடைந்திருந்தது. சீனுவாசனுக்கு மறுபடியும் தன் தகப்பன் ஞாபகம். அம்மா சொன்னதுபோல கள்ளுக்கடையில விழுந்து கிடப்பாரோ ?
‘சீனு.. டேய் சீனு.. ‘
சப்பாணி குரல் போல இருந்தது. ‘ஒரு வேளை சட்டையைப் பற்றிக் கேட்க வந்திருப்பானோ ? ‘
சீனுவாசன் வெளியில் வந்தான்.
சப்பாணி வடிவேலு, ஊளமூக்கு ராமசாமி, வைத்தி, கனகம் என நின்று கொண்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிளில் கோவிந்து.
‘ உங்கப்பன் லாரியில அடிபட்டுச் செத்து கிடக்காண்டா. உங்க அம்மாவுக்கு சேதி போயிட்டுது. நீ என்ன செய்யற.. ‘, கோவிந்து.
அடுத்த நிமிடம் தெருவெல்லாம் வேடிக்கை பார்க்க, ‘ எனக்கு வாச்ச ராசா! போயிட்டியா! என்று அலறி அடித்துக் கொண்டு வருகின்ற கமலத்தை சீனிவாசன் பார்க்கிறான். வந்தப் பையன்கள் பிரமித்து பரிதாபமமாகப் பார்க்கிறார்கள். சப்பாணி அருகில் வந்து வாஞ்சயாக இவன் கைகளைப் பற்றுகிறான். அவனை உதறிவிட்டு இவன் வீட்டுகுள்ளே ஓடினான். அழுதுகொண்டே பழங்கலத்தில் போட்ட அந்த பழைய சட்டையைத் தேட ஆரம்பித்தான்.
கல்கி 1-06-2003
***
Na.Krishna@wanadoo.fr
- எங்கேயோ கேட்ட கடி
- பரிச்சியம்
- இரண்டு கவிதைகள்
- என்னவளுக்கு
- பழைய கோப்பை, புதிய கள்
- வெள்ளி மலையும் குமரிக் கடலும்!
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி நிலையத்தில் ஸோடியத் தீ வெடி விபத்து! [Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Power Reactor]
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)
- எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து
- அரசியல் பாடும் குடும்ப விளக்கு !(ஹே ராம் – கவிஞர் புதியமாதவியின் கவிதைகள் தொகுப்பு- முன்னுரை)
- எது சரி ?
- தினகப்ஸா வழங்கும் செய்திகள் : வாசிப்பது பரிமளா சிறியசாமி
- வடக்குமுகம் ( நாடகம் )
- தண்ணீர்க் கொலை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- தியாகம்
- படைப்பு
- நான்கு கவிதைகள்
- பேதங்களின் பேதமை
- பத்துக் கட்டளைகள்
- பிச்சேரிச் சட்டை
- முக்காலி
- பிறை நிலவுகள்.
- அல்லி-மல்லி அலசல் (2)
- புதிய வானம்
- புகையில் எரியும் இராமன்கள்..
- விடியும்! (நாவல் – 2)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு
- தமிழ்
- கடிதங்கள்
- அதிர்ச்சி (குறுநாவல்)
- சிங்கராஜன்
- குறிப்புகள் சில 26ஜுன் 2003 (மார்க் போஸ்ட்ர், இணையம்-ஹாரி பாட்டரும் அறிவியலும்)
- வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்
- சொல்லடி…என் தோழி!!
- இரண்டு கவிதைகள்
- உன்னை நினைத்து………