மாலதி
—-
ஈமெயில் மணாளனை பாஸ்வேர்டில் கிடந்தானை
முன்னை ‘பாக்ஸ் ‘களை முன்கேட்டு அறிந்தானை
இவளையும் ‘ஹிஸ்டரி ‘ பார்த்து துப்பறிந்தானை
மறக்கச் சிறுக்கிக்குக் குழல் வாராய்
அக்காக்காய்!
அழிந்து போகிறாள் அநியாயமாய்.
அக்காக்காய்!
இரண்டாவது பிரசவம்
முதல் செத்து மறுவாரம்
ஏஸிஜி அறுபத்தேழு படிவத்தில்
அச்சு கொட்ட கொக்கி போட்டு
சம்பளம் வாங்கிவர
அருமைக்கருமையை
என்செயப் புருஷனைப் போக்கினேன் !
எல்லே!பாவமே!
மூன்று மாதம் காத்திருந்தேன்
எல்லே!பாவமே!
முழுசாய் வெள்ளைத் தாளில்
முடிச்சாய் ஓரம் கையெழுத்து
யாரும் கேட்டால் தரவென்று
கொடுத்து விட்டேன்
நகர முடியாத நிலையில்.
என்செயப் புருஷனைப் போக்கினேன்
எல்லே!பாவமே!
மோசடி கோர்ட் ஆர்டர் வந்ததே
மூன்றோடு பத்து வருட முதல்
கொடுத்தேன்
எல்லே!பாவமே!
முடியின்றி மூவுலகாண்டு என்னை
மிதிகண்டு பாட்டில்கள் நாடி
படியில் குழந்தை வரம் தந்து
கோதுண்ட நாயகனைப் பாடிப்பற!
கோடம்பாக்கத்தானைப் பாடிப்பற!
ஆராவமுதனைப் பாடிப் பற-அவன்
எச் ஐ வி பாஸிட்டிவ் தான் பாடிப் பற!
மானமுடைத்து உங்களாண்குலம்
எனினும்
மனைவியின் பெற்றோர் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாயென்று
இரப்பள் உரப்பகில்லாள்
கடிதில் ஒன்றும்
தானுமுரைத்திலள் தந்தை பணித்திலன்
நங்கைகாள்!அவள்தான்
என் செய்வாள்!
மாமியாரானாலும் அடங்குவாள்
ஆடவராதிக்கத்தில்.
செய்திருத்தம் ஒன்றை தலைவிசுட்டி
விட்டால் முன்
செய்கின்ற நிதியெல்லாம்
யானே யென்னும்
செய்வாநின்றனகளும்
யானே யென்னும்
செய்து முன் இறந்தனவும்
யானே யென்னும்
செய்கைப் பயன் உண்பேனும்
யானே யென்னும்
செய்வார்களைச் செய்வேனும்
யானேயென்னும்
செவ்வியோ புலவியோ
செயலோன் அவனே
செய்சீர் பலனெல்லாம்
ஏற்பானவன்.
தன்னிரக்கம் வேண்டாம்
புலம்பாதே
முறையீடு செய்யாதே
என்று நிறைய சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே.
ஆனாலும்
ரணம் தேடித் தடவுகிற
களிம்புக் கை போல
மனசு
வலி தேடிப் போய்
சுகம் கொண்டாடுகிறது.
எனக்கேயான துயரப்
பாடல்களையாவது
பாடிக் கொள்கிறேனே!
பட்டு கழட்டி வெச்சேன்
பாதம் வரை வெள்ளையிட்டேன்
சிகப்பு கழட்டி வெச்சேன்
தேகம் எல்லாம் வெள்ளையிட்டேன்
பூதமாய்ப் பெருக்கெடுத்தேன்
போற இடம் தெரியல
நேரமாய் எடுத்துச் சொல்ல
நியதிகளும் ஏலவில்லை
பச்ச பளிங்கு இல்லா
பால் அடைச்ச தேகம் இல்லா
பால் அடைச்ச ஸீசாவை
பாதையில் போட்டுடைச்சேன்
நீலப் பளிங்கு இல்லா
நெய் அடைச்ச தேகம் இல்லா
நெய் அடைச்ச ஸீசாவை
நின்ன இடத்தே போட்டுடைத்தேன்.
இருங்க
சிலுசிலுன்னு எதாச்சும்
சொல்றேன்.
ஆலமரங்களை ஒட்டடைக் குச்சு போல்
வளரவிட்டு
ஆகாசம் விட்டுத் தாழும் விழுதுகளில்
தொங்கி
பட்டப் பகலில் வட்ட நிலவு
கண்ணில் வர
ஊரெல்லாம் பச்சையிட்டு
உலகத்து ஆண் பெண்
அடங்கலும்
நல்லவராய்த் தெரிந்த
ஒரு காலம் உண்டு
எல்லார் வாழ்க்கையிலும்.
அடிஅடிக்குப்
புது பூமி
மன அதிர்வில்
சதா மாணிக்கம் வைடூர்யம்
வெயில் கங்குகளும்
கூம்புப்பனியினிப்பான
உதட்டில் நகைபோட்ட
காலம் அது.
கல்லூரிக்காலம்.
கல்லூரிப் பருவத்தில்
தமக்கு மட்டும் இல்லாத
வேலைத்திண்டாட்டத்தை
அறிந்திருந்தனர்
தமது தவிர மற்றவை
மானிடக்காதல் என்றும்
திருமணங்களில் ஒரு நாளும்
வரதட்சணையே இருப்பதற்கில்லை
என்றும்
கணவன் மனைவி பரஸ்பரம்
வெறுக்கவே இடமில்லை
என்றும்
திடமாய் நம்பினர்
அவர்களுக்குத் தெரியாத
பல வார்த்தைகளுக்கு
அகராதி போட்டே
விற்கலாம்.
அவற்றில் முதல் வார்த்தை
லஞ்சம்
பின்னால் வரிசையாய்
குடும்பகெளரவம் மானம்,
ஜாதி,சொத்து,கடன்,
வட்டி, பொறுப்பு எல்லாம்
தாண்டினபின்
திருமணம் பற்றிய மறுசிந்தனை
அதாவது திருமணத்தின்
முதல் நோக்கத்தை
ஓரம்கட்டி
சுமார் முன்னூறு காரணங்களை
முன்னெடுத்து
அவற்றுக்காகவே
அனைவரும்
காலம் காலமாக
மணம் புரிவது.
ஆக மொத்தம்
திருமணம் ஆன கையோடு
இழந்த அறியாமை
சுவர்க்கத்தின்
இனிய தாக்கங்கள்
கூட வாழும்
நபர் மேல்
பதிவாகும் நல்லதாகவோ
கெட்டதாகவோ
தொடர்ந்து வருகிற
பிழைப்புக்கேற்றாற்போல.
நல்லதாய் வாய்த்துவிட்டால்
தலையில் வைத்துக் கூத்தாடு
நாய்ப் பாலாகி விட்டால்
நாராகக்கிழித்துவிடு.
இது தான் பலர்
வாழ்விலும் நிகழ்வது.
காலைக் கீழே வைத்து
அவர்களை நடக்கவிடாமல்
தம் காலால்
நடைதந்து
அவர்கள் தலையை
இறுதியில்
குப்புறத்தள்ளி
குழி மூடி விடுகிறார்கள்.
துணைகள் கிழிபட்டு
தனிமனிதப்பிரச்னைகள்
பாதி இனத்தின்
சொந்தப் பிரச்னையாக
வடித்து
அரிக்கப் படுகின்றன.
நமக்கு நடக்காதவரை
இல்லவேயில்லை என்று
கண்மூடிப் போகிறவர்கள்
நடுவில் உண்டு எனினும்
ஏதோ இதுவும்
பிரச்னை தான்
என்பவரும் பலர்.
எல்லோருக்குமாக நான்
இறந்து போனேன்.
தூது முதல் பிரபந்த நூறுவகை
கலம்பகம் பரணி உலா மடல்
எழுதி இளைக்காமல்
பேய் பிதற்றல் சொல்லத்
துணிந்தேன் ஆனதால்
இங்கு ஏக்கம் தாபம்
மறந்ததும் மறைந்ததும்.
ஈகையங்கிலை நேயமங்கில்லை
ஈண்டவை உண்டு
சேரவே உண்டு விட்ட
விடுதலையும்.
இடமிலி உணர்விலி கனவிலி
நினைவினில் நெருப்பு விழிப்பு
உடனெப்போதும் இப்போது.
பயமில்லை துயரில்லை
மலசல சுவாச சஞ்சார
சலனங்கள் ஐம்புல
சங்கடங்கள் இல்லை எனக்கு.
எதையும் எழுதுவேன்.
துலாக்கோல் பிடித்து.
இங்கு நான் இழந்தது
ஒன்றே ஒன்று
அது தூக்கம்.
என் மூலைகளில் நான்
புசிக்கும் என் தூக்கம்.
கவிதைகளை மென்றபடி
அடர்பவள இதழ்கள்,
கன இமையில் கனவு
கதகதத்து மிதக்க
என் இனிய தூக்கம்.
எப்போதாவது
அன்பிருந்தால்
கூவிக் கொடுங்கள்.
நான் பிறந்து
வருகிறேன்
மீண்டும் தூங்கவென்று.
பெண் நிலைப் பாடு விட்டு
மறுபடியும் பெண்ணாகி.
மாலதி
பிசாசின் தன் வரலாறு இப்போதைக்கு முடிந்திருக்கிறது.
கவிஞர் அப்துல் ரஹ்மான் ஒரு முறை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
லிலித் என்கிற கொடிய அழிவு சக்தி பெண்ணியவாதிகளிடம் குடி
கொண்டுள்ளது என்று. அதாவது ஹீப்ரு மொழியின் ஒரு புராணக்கதையின் படி
லிலித் என்கிற பிசாசை ஆழ் கடலில் அடக்கினர். ஆனால் அது அவ்வப்போது
பெண்ணிய வாதிகளிடம் தென்படுகிறது என்றார் கவிக்கோ. அதற்கு மிக
காட்டமான பதிலை நான் கொடுத்தேன். இறுதியில் எங்கள் நோவு உங்களை
என்ன செய்தது ? ஏன் எங்களைப் பிசாசு என்று தூற்றுகிறீர்கள் என்றும்
கேட்டிருந்தேன். என் கடிதம் ‘கவிக்கோ ‘ இதழில் வெளியிடப்பட்டதாகச்
சொல்லப்பட்டது.
பின்னும் அந்த சொல்லாடல் என் மனசை விட்டு நீங்கவில்லை. பெண் ஏன்
பெண்ணியவாதி ஆகிறாள் என்பதை விளக்க முற்பட்ட நெடுங்கவிதை
இது.இரண்டாம் பகுதி பின்னும் எழுதப்படலாம்.
[இந்தக்கவிதை ‘மரமல்லிகைகள் ‘2003 தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது]
—-
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- கரடி ரூம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- சூன்யம்
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- ஆறுவது சினம்
- தவிப்பு
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- கவிதை உருவான கதை – 4
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- கடிதம் – 29 ஏப்ரல்,2004
- எழுத்தாளர் கந்தர்வன் மறைவு
- கலாசாதனாலயா – சென்னை நடனக் குழு
- இணையத்தில் தமிழ் நூல்கள்
- கேள்வியின் நாயகனே!
- வரவுயில்லாத செலவு
- கடல் தினவுகள்
- கவிதை
- முகத்தைத் தேடி
- இரண்டு கவிதைகள்
- இன்னும் விடியாமல்
- உடலால் கட்டிய வாழ்வு
- உள்ள இணையாளே
- தமிழவன் கவிதை-3
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- விடியல்
- கடைசியாய்….
- கதவுகளும் சுவர்களும்
- நட்பாராய்தல்
- கவிதை
- பிசாசின் தன் வரலாறு – 3
- விழிமீறல்
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- உடல் தீர்ந்து போன உலகு
- போய்வருகிறேன்.
- தாலாட்டு
- இயக்கம்
- ஏமாற்றுக்காரி
- ஞாபக மழை
- அன்புடன் இதயம்- 15
- கவிதைகள்
- இன்னொரு தினம்:
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17