பா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

பா சத்தியமோகன்


1] சொல்பிடிப்பவன்
=============

உரையாடல் மீறி
என்றுமிருக்கும் அமரத்துவ மெளனம் குறித்து
சிக்கும் சில சொற்கணக்களை எழுத முடிந்தால்
மனம் அமைதி பெறும்
நீண்ட காலத்துக்கும் ஒரு நீண்ட காலத்துக்கும்
பிறகுள்ள இடைவெளியில்
ஒரு நிமிடம் கிடைத்தது ஆயினும்
சிந்தித்த மெளனத்தை எழுதுவதற்கு
எந்த வார்த்தையும்,இல்லை என்று புரிந்தேன்
அப்போது வாய்த்த மெளனமல்ல
இப்போது எழுதும் மெளனம்
என்றும் போல
நழுவி ஓடி சோர்கிறது என் சொல்
வா பறவையை கவ்வ முயலும் தெருநாய்போல

******

2]
ஏதோ ஒரு பெயர் கொண்ட பறவை
எத்தனை உயரமிருந்தோ
பிரக்ஞையிலாது செறித்த
எச்சத்தில் இருந்த விதை
மண்பிடித்து
பச்சை கொண்ட செடியாகி
பின்பொருநாள் மரமாகி
அதன் கிளையில்
அதேபறவை
அறியாமல் அமரும்

&&&

3] மூவர்
====

அந்தகாட்சி
என்னமோ செய்வது
தீரவே தீராது
இரவு மணி பதினொன்றுக்கு
சோடியம் வெளிச்சத்தில்
[அவர்கள் அறிவார்களா ?]
ஒருவர் தோள்மேல் ஒருவர் கைபடர
ஒருவர் நட்புமுகம் ஒருவருக்குத் தெரியாதெனினும்
தோழமையை முகத்தில் புன்னகைகொண்டு
சாலையை கடந்துசெல்லும் குருடர்கள் அவர்கள்
தொட்டுணரும் சினேகிதர்களில்
வழிகாட்டுபவன் யாரென புரியாமலேயே இருந்தது

=========================
தட் டச்சு ஜெயமோகன்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்