பாவேந்தர் இன்றிருந்தால்.

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

தமிழநம்பி


(29-04-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் “பாவேந்தர் இன்றிருந்தால்” என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்)

பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே!
பீடு சான்ற
அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!
அனைவ ருக்கும்
பரிவார்ந்த வணக்கங்கள்! பாவேந்தர் விழாவினிலும்
பதைப்பு நெஞ்சில்!

நோவேற்றித் தாய்த்தமிழை நொய்வித்தார் நொட்டுரையை
நொறுக்கி வீழ்த்தி
தாவாற்றி தலைநிமிர்த்தி தமிழ்த்தாயின் தளையறுத்துத்
தழைக்கச் செய்ய
பாவாற்ற லாற்றமிழின் பகைஒடுக்கிப் படர்நீக்கப்
பாடு பட்ட
பாவேந்தை அறியாரைப் பலகற்றும் தமிழரெனப்
பகர லாமோ?

ஆர்த்தெழுந்த இளைஞர்களை அறிவார்ந்த காளைகளை
அணையச் சேர்த்தே
நேர்த்தியுறு போர்த்திறத்தில் நேரொழுங்கில் பயிற்றியவர்
நெடுமீ கத்தால்
கூர்த்தவினை முடித்தீழக் கொடியேற்றி ஆண்டாரைக்
குலைத்த ழித்துத்
தீர்த்தவழி தன்குடும்பம் திளைக்கவளம் தீக்கரவில்
தேர்ந்தார் அந்தோ!

அமுதூட்டல் போல்நஞ்சை அகமகிழ ஊட்டுந்தாய்
ஆனார் என்னே!
உமிழ்வாரே பாவேந்தர் உறுபழியர் முகத்திழித்தே
உலறிச் சீறி!
இமிழுலகில் தமிழர்க்கே இன்துணையாய் இருவென்றே
இருத்தி வைத்தால்
தமிழீழ இனமழிக்கத் தகவிலர்க்குத் துணைபோனாய்!
தாழ்ந்தாய் என்பார்!

பொங்குதமி ழர்க்ககின்னல் புரிவார்க்கே அழிவுறுதி
புரியு மாறே
சங்குமுழக் கோடுலகில் சாற்றியதை மறப்போமா?
சற்றுக் கூட
தங்குதயக் கின்றியந்தத் தகையறியாக் கொலைவெறியர்
தருக்குஞ் சொல்லார்
சிங்களவர் வீழ்ச்சிக்கே சீறிஅறம் பாடிடுவார்
சினத்தால் தீய்ப்பார்!

வேகுந்தீக் கிரையாகி வீணிலுயிர் இழப்பாரை
விளித்த ழைத்துச்
சாகின்ற தமிழாநீ சாகச்செய் வார்சாகச்
செய்வாய் என்பார்!
மாகுன்ற தோளனுயர் மறத்திற்குப் பொருளானான்
மண்ணிற் காணா
வாகறிவுப் பெருவீரன் வரிப்புலிக்குத் துணையிருப்பாய்
வாழந்தே என்பார்!

உரஞ்செறிந்த எழுச்சியுடன் உலகிலுள்ள தமிழரெலாம்
ஒன்றாய் நிற்பீர்!
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி யந்தக்
கரம்புமன இனக்கொலையர் கடுமொடுக்கு முறையெதிர்த்தே
கனல்க என்பார்!
வரம்பறியாக் கொடுமையற வாழதமிழ் மண்மீட்க
வாழ்த்துச் சொல்வார்!

இரண்டகரை இனங்காண்பீர்! இழித்தொதுக்கி வைத்திடுவீர்!
ஈழம் சாய்த்த
வரண்டமனத் தில்லியரை வலிமையுடன் எதிர்த்தினத்தை
வாழ வைப்பீர்!
இரண்டுநிலை இந்தியனுந் தமிழனுமாய் இருக்காதீர்!
இனிஎ ழுந்தே
திரண்டிடுவீர் தமிழரென! தேர்ந்திடுவீர் அடையாளம்
தெளிவாய் என்பார்!

வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்.


Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி