பாவம்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ப்ரியன்


****

வீடெங்கும் உறவினர்கள்
வீதியெங்கும் நண்பர்கள்
பெண்கள் தொடர்களைத் தொடர முடியாமல்
போனக் கவலையில் அழுதுவைக்க!
ஆண்கள் ஆவேசமாய் அரசியல் பேச!

சிரித்துக்கொண்டே கையசைத்து
மேல் நோக்கி புறப்படுகிறேன்!

அதிசயம் தேவதூதன்
சொர்க்க வாசல்
திறக்கிறான் எனக்கு!

‘அவ்வளவு நல்லவனா நான் ? ‘
கேட்ட கேள்விக்கு

‘இல்லையில்லை!
சொர்க்கத்தில் நுழைபவர்கள்
எண்ணிக்கைக் குறைந்துப் போனதில்
வரையறைகள் குறைக்கப்பட்டுவிட்டன! ‘
சத்தமாய் சிரித்துவிட்டேன் நான்!

உள்ளே நுழைந்தால்
வள்ளுவனும் ஒளவையும்
சத்தமாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்
சத்தியமாய் புரியவில்லை;
சுத்தத் தமிழாயிருக்கும்!

சொர்க்கம்
வெறிச்சோடிக் கிடக்க!
பக்கத்திலிருந்த தூதனிடம்
‘ஏனப்பா,எங்கே சிவனும்
மற்றையோரும் ? ‘

‘இப்போதே காண வேண்டுமா ?
இரவுவரைக் காத்திருப்பாயா ? ‘

ஐயோ!மேலோகத்தில் இரவும் பகலும்
சில கோடி ஆண்டுகளல்லவா ?

‘இப்போதே! ‘

‘கொஞ்சநேரம் நரகத்திலிருக்க
ஆசைப் போலும்! ‘

‘அய்யோ!என்ன சிவனும் திருமாலும்
நரகத்திலா ? ஏன் ? ? ‘

‘அவர்களையேக் கேட்டுக்கொள் ‘ சொல்லித்
தள்ளிவிட்டான் அதல பாதாளத்தில்!

சுற்றிலும் தீயெரிய
பேய்கள் சுற்றித் தின்ன துறத்த
ஓடியோடி ஒரு அடியும் இனி நகரமுடியாது
என்ற கணத்தில் நின்றால்,

அங்கே,
சவுக்கடி வாங்குவது
சிவனா ?
எண்ணெய் சட்டியில்
சாய்ந்து வெந்துக் கிடப்பது
திருமாலா ?
அய்யோ அங்கே
சுற்றிச் சுற்றிச் செக்கிழுப்பது
ஏசுவல்லவா ?
நபிகளா ?அது
நரமாமிசம் சமைப்பது ?

என்னப்பா இதெல்லாம் ?
சிவனிடம் கேட்டதிற்கு
ஏசுவும் நபியும் திருமாலும் சிவனும்
கூட்டாய் சொன்னது
‘மனிதனின் பாவமேற்று
பாவமேற்று பகுதிநேரம்
நரகத்தில் வெந்துதணிகிறோம்!
விரைவில் முழுநேர வேலையாகும் போல! ‘
பொலப் பொலவென
கண்ணீர் விட்டார்கள்
கடவுள்கள்!!

கொஞ்சமாய் பாவம் செய்வதைக்
குறைத்துக் கொண்டாலென்ன ?

‘கண்ணீர் விடும் கடவுள்களுக்காக!! ‘

– ப்ரியன்.

mailtoviki@gmail.com

Series Navigation

ப்ரியன்.

ப்ரியன்.