பத்மநாப ஐயருடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்
பத்மநாபனுக்கு வயது அறுபதாகிறது என்று என்னால் சொல்லமுடியாமிலிருக்கிறது-ஏனெனில் நெருங்கி ஐயரோடு நான் தோளேர்டு தோள் போட்டுக் கொள்ளவும் முடியாது. ஐயர் என்னுடைய பால்ய நண்பரும் இல்லை. ஐயருடைய தலைமுறையைச் சேர்ந்த சுந்தர ராமசாமி அவரை பத்மநாபன் என்றுதான் அழைக்கிறார். அவரது நெருங்கிய நண்பர் யேசுராசா கூட அப்படித்தான் அவரை அழைக்கிறார். அவருடன் மிக நெருக்கமாகப் பழகிய மு.நித்யானந்தன் மு.புஷ்பராஜன் போன்றவர்கள் கூட இவரை ஐயரென்றுதான் அழைக்கிறார்கள். இந்த விளித்தலில் ஜாதியக் கீழ்மையை அல்லது ஐயருக்கான மேன்மையை எவரும் வழங்குகிறார்கள் என்றெனக்குத் தெரியவில்லை. எனது அப்பாவை நான் பெயர் சொல்லி அழைப்பதில்லை- ஆனால் அவர் வயதொத்த அவரது நண்பரை வடிவேலண்ணா என்று பெயர் சொல்லி அழைக்க முடிகிறது. இப்படி அறிமுகமான படியில்தான் நாம் மனிதர்களை அறிந்திருக்கிறோம். எனக்கு பத்மநாபனைத் தெரியாது. பத்மநாப ஐயரைத்தான் தெரியும். அவரது பெயர் என்னளவலே¢ என் மனதில் அவரது உருவுக்கான அடையாளம் தானே தவிர அது அவரது சாராம்சத்துக்கான அடையாளம் அல்ல. மற்றபடி பிராமணத்துவ அதிகாரத்தை அவர் தன் எந்த நடவடிக்கையிலும் குறைந்தபட்சம் கூட செலுத்துகிறார் என்பதற்காண ஆதாரத்தை நான் கிஞ்சிற்றும் காணவில்லை.
பத்மநாப ஐயருக்கு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அறுபது வயது நிறைகிறது. எனது அப்பாவுக்கு எழுபத்தியைந்து வயது நிறைவானதைக் கேள்வியுற்றபோது அவரது நீண்ட வாழ்வு பற்றி எனக்கு வேர்முதல் தெரிந்து கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. பொதுவாக துாரம் எமது வேர்கள் பற்றிய தேடலை அதிகப்படுத்தத்தான் செய்கிறது. அப்பா பற்றி விரைவில் எனது அனுபவத்தை நுாலாகக் கொண்டுவர முடிவுசெய்தேன். ஐயரை எனக்கு 16 வருடங்களாக நேரில் தெரியும். மனிதர்கள் பற்றிய மதிப்பீடுகளைப் பொறுத்து பிற மனிதர்களின அபிப்பிராயங்களை நான் சாரந்திருப்பத்ில்லை. என் அனுபவத்திலிருந்துதான் மனிதர்கள் பற்றிய என மதிப்பீடுகள் எழுகிறது. ஏனெனில் மனிதர்கள் தத்தமது அவசியங்கள் கருதித்தான் பிற மனிதர்களோடு வேறு வேறு அணுகுமுறைகளைக் கடைபிடிக்கிறார்கள். நான் பிறிதொரு மனிதனாக இல்லாததினாலேயே பிறரின் அபிப்ராயங்களை குறிப்பிட்ட மனிதர் குறித்த என் மதிப்பீட்டுக்குச் சார்ந்திருப்பதலேலை. இவ்வகையில்தான் எனது சுதந்திரத்தையும் காத்துக் கொள்ள முடியுமென்று தோன்றுகின்றது.
பத்மநாப ஐயர் ஒரு வகையில் நெருங்கமுடியாத உள்நோக்கிய மனிதர் அவரது சொந்த வாழ்வு பற்றி அவர் அதிகம் பேசி நான் கேட்டதில்லை. இளம் வயதில் மனைவியைப் பறிகொடுததவர், மூன்று வளர்ந்த மகள்களுக்குத் தந்தை, இரண்டு பேரக்குழந்தைகள் போன்ற விஷயங்கள் மட்டுமே எனக்குத் தெரியும். அவர் நண்பர்களிடம் கருத்து மாறுபாடுகளுக்காகக் கோபப்படுவதில்லை. ஆனால் அவர் கடுங்கோபக்காரர் என்பது அவரது மகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மனிதர்கள் பலவீனர்களாவது பெரும்பாலுமான நேரங்களில் தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் வேளையில்தான். அவ்வேளையில் அவர்களது பகுத்தறிவு வேலை செய்வதலே¢லை. சீக்கிரமே வன்முறையாளர்களாகிவிடுகிறார்கள். நானறிந்தவரை ஒரு தனிமனிதனாக பத்மநாப ஐயருக்கு சொந்த நலன்கள் என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே அவர்மீதான விமர்சனங்கள் அல்லது அதன் விளைவான கோபமுறல் போன்றன அவருக்கு இல்லை. அவரது புத்தகங்கள் அவரது அர்த்தமுள்ள- ஒரு வகையில் சமூக அளவுகோள்கள் தமது குடும்பத்துக்கான அவரது பொறுப்பு போன்றவைகளைக் கருதும் போது அர்த்தமற்ற- பிடிவாதமான அவரது ஈடுபாடுகள்தான் அவரது குழந்தைகள் மீது அவரைக் கடுங்கோபம் கொள்ள வைக்கக்கூடும். எவ்வாறாயினும் அவரும் அவரது குடும்பத்தவரும் அன்பும் பாராட்டும் மனிதர்கள்.
அவர் எழுத்தாளர் இல்லை. இப்போது கடிதங்கள் கூட எழுதுவத்ில்லை- முன்பு காலச்சுவட்டில் சில கடிதங்கள் பார்த்த ஞாபகம்- எழுத்தும் எழுதுகோலும் தெய்வம் என்றான் பாரதி- ஐயருக்கு புத்தகங்கள் சஞ்சிகைள் எழுத்துகள்தான் தெய்வம் என்று தோன்றுகிறது. சஞ்சிகையை இரண்டாக மடித்தால் கோபப்படுவார். நானறிந்த பதினாறு வருடங்களாக ஐயர் மாறவில்லை. இந்த மாறவில்லை என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று வளர்ச்சியேயில்லாதது. மற்றையது அடிப்படைக் குணங்கள் மாறாமல் இருப்பது. ஐயரின் அடிப்படை குணங்கள் மாறவலே¢லை. இதற்கு அடிப்படையான காரணம் தனது நலன்கள் என்று ஏதும் அவருக்கு இல்லாததுதான் என்று தோன்றுகிறது. நெருக்கடி நேரங்களில்தான் நல்ல மனிதர்களைத் தெரிற்து கொள்ளலாம். அப்படி ஐயரை நான் பலமுறை தெரிந்து கொண்டிருக்கிறேன்.
விமர்சனங்களற்ற அவரது தேசியம் ஒன்றுதான் என்னால் அவருடன் உடன்படமுடியாத ஒரே அம்சம். இவ்வகையில் அவருக்கு முற்சாய்வுகள் இருக்க்ிறது. படைப்பு சம்பந்தமான அரசியல் தெரிவுகளும் அவரிடம் உருவாகியிருப்பதை எனனால் உணரமுடிகிறது. இருப்பினும் அவர் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சி பற்றிப் பேசுவது நிஜம். பொதுவான ஈழ இலக்கிய வளர்ச்சி பற்றிப் பேசுவது நேராக மனசிலிருந்து வருவதுதான். ஆனால் வரலாற்று முரண்கள் மனிதர்களை மீறியும் இயங்கவல்லது என்பதற்கு அவரது சமகால ஈடுபாடுகளே சாட்சி. கீழ் வரும் உரையாடல் அவருடன் 1996 ஆம் ஆண்டு இறுதியில் நான் நிகழ்த்தியது. ஆறு ஆண்டு கால மாற்றத்தில் அவரது கருத்துக்களில் ஈழ இலக்கியப் பரவலாக்கம் தேசியம் புகலிட இலக்கியம் ஒப்பீட்டளவில் தமிழ்க் கவிதை ஈழ நாவல்களின் பின்னடைவு போன்றவற்றில் அவரது அடிப்படை அணுகல்களில் வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆனால் அவரது அடிப்படை ஈடுபாடுகள் தனது கிளைகளை அகல விரித்துக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப ஊடகங்களைப் பயன்படுத்தி ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகள் அனைத்தையும் வலைப்புலத்திற்குக் கெர்ணடுவருவதில் அவர் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறார். ஈழத்தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் லக்ஷ்மி ஆம்ஸ்ட்ராம் அவர்களுடன் இணைந்து நிறையத் திடட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஆவரால் ஆண்டு தோறும் கொண்டுவரப்பட்டுவரும் இலக்கிய தொகுப்புப்பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மனிதர்கள் குறித்துப் போற்றிப் புகழ்வதில்லை என்பதை நான் ஒரு நெறிமறையாக வைத்திருக்கிேறேன். ஏனெனில் என்னையும் பிறரையும் நான் அறிந்திருப்பதால் இந்நிலைப்பாடு தேவையாகிறது. வால்ட்டர் பெஞ்சமின் கார்ல் யூங் போன்றவர்கள் இவ்வகையில் எனது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார்கள்.
இருந்தாலும் ரோஜாவின் பூப்பும் குழந்தையின் குறும்பும் சில மனிதர்களின் உள்ளார்ந்த சிற்சில அழகுகளும் நம்மைப் பரவசப்படுத்தத்தான் செய்கிறன. தன்னலம் அற்ற பத்மநாப ஐயருக்கு அவரது அறுபதாண்டு நிறைவின்போது வாழ்த்துச் சொல்லும்போது அப்படியானதொரு சந்தோஷம் எனக்குள் நிறைகிறது. அவரது இலக்கிய வாழ்வில் அவருடனான நேர்முகம் இது ஒன்றே ஒன்றுதான். இதையும் மிகுந்த வற்புறுத்தல்கள் சாதுரியங்களின் பின்தான் அவரிடமிருந்து பெறமுடிந்தது. இன்றும் பொறுத்தமான இந்த நேர்முகம் பிரான்ஸிலிருந்து வெளிவரும் ‘பாலம் ‘ சஞ்சிகையின் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் இதழில் வெளியானது. இந்த நேர்முகத்துக்கு அன்று ஓலி நாடாவிலிருந்து எழுத்து வடிவம் தந்த ஈழக்கவிஞர் கி.பி.அரவ்ிந்தனுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் : யமுனா ராஜேந்திரன்.
யரா: கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே ஓர இலக்கியப் பாலமாக திகழ்ந்திருப்பதை நான் அறிவேன். இன்றைக்கு தமிழகம் ஈழத்தை அடுத்து புலம்பெயர்வானது மூன்றாவதொரு தளத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த மூன்று பிரதேசங்களுக்குமான கலை இலக்கிய இணைப்பு பரிவர்த்தனை முன்னை விடவும் அதி அவசியமாகப்படுகிறது. ஏற்கனவே இவ்வகை உறவை வளர்ப்பதில் அனுபவம் பெற்ற நீங்கள் அவ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா ? அதாவது இவ்வகைப் பணியை ஏன் எப்போது தொடங்கினீர்கள் ?
பநா: கல்லுாரி நாட்களிலிருந்தே எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது. எனக்கு வாய்த்த நண்பர்களும் பெரும்பாலும் அவ்வாறனவர்களே. மேலும் எனது மாமா ஒருவரும் புத்தகப்பிரியர். அத்தகைய நண்பர்களே எனக்குத் தொடர்ந்தும் அறிமுகமானார்கள். ஆக ஐம்பதுகளின் பிற்பகுதிகளில் இருந்து இலக்கிய ஈடுபாடு வளர்ந்து வந்திருக்கிறது. கல்லுாரி நாட்களில் நண்பர் அ.கந்தசாமி-தற்போது கனடாவில் வாழ்கிறார்-அறுபதுகளில் சோவியத் துாதரகத்தில் பணிபுரிந்த கு.ராஜகுலேந்திரன், கே.கணேஷ், ‘அலை ‘ யேசுராசா, க.பாலேந்திரா, கே.மகாலிங்கம், தெளிவத்தை ஜோசப் என நண்பர்கள் வட்டம் விரிந்தது. அறுபதுகளின் மத்தியில் சென்னையில் வாசகர் வட்டம் தொடங்கிய காலத்தில் அதனது சந்தாதாரர் ஆனதோடு நண்பர்கள் பலரையும் சந்தாதாரர் ஆக்கினேன். ராஜாஜியின் ‘ஆத்மசிந்தனை ‘ நூலுடன் தொடங்கி ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முப்பதுக்கும் மேலான நுாலை வெளியிட்டிருந்தனர். லா.சா.ராவின் ‘புத்ர ‘, தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள் ‘, நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம் ‘ ஆறு குறுநாவல்களின் தொகுப்பான ‘அறுசுவை ‘ என்பன குறிப்பிடத்தக்க நுால்கள். இந்திய மொழிச் சிறகதைகள் சிலவற்றைத் தொகுத்து தமிழாக்கம் செய்து பிறகதைகள் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தனர். அதனை வாசித்தபோது ஏற்பட்ட உந்துதலில் ஈழத்துப் படைப்புகள் சிலவற்றைத் தொகுத்து அவ்வாறானதோர் தொகுப்பினைக் கொண்டுவந்தால் என்ன என்று கேட்டு வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். மலேசிய சிங்கப்பூர் இலங்கை எழுத்துக்களைக் கொண்ட ஒரு தொகுப்பினை வெளியிட ஏலவே திட்டமிட்டிருப்பதாகவும் தொகுப்பில் சேர்க்கக்கூடிய படைப்புகளை அனுப்பி உதவினால் பரிசீலிக்கலாம் என்றும் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பதில் எழுதியிருந்தார். செ.யோகநாதனின் உதவியுடன் கணிசமான படைப்புகளை அனுப்பினேன். 1968 இல் ‘அக்கரை இலக்கியம் ‘ என்ற தலைப்பில் 400க்கும் மேற்பட்ட பகக்ங்களுடன் வாசகர் வட்டம் ஒரு தொகுப்பினை வெளியட்டது. அதில் முற்பாதி இலங்கைத்தமிழர் ஆக்கங்களைக் கொண்டிருந்தது. இது என்து பணியின் ஆரம்பம் எனலாம்
யரா: படைப்பாளியாக இல்லாதபோதும் இலக்கியப் பணியாற்றிவரும் நீங்கள் உங்கள் பணிக்கான இலக்குகளாக எவற்றையேனும் கொண்டிருந்தீர்களா ?
எனது அக்கறைகள் இருவகையில் அமைந்தன. முதலாவது நல்ல நுால்கள் சஞ்சிகைகளை தீவிர வாசகர்ளக்குக் கிடைக்கச் செய்யவேண்டும் என்பது முதல் அக்கறை. இரண்டாவது ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளின் நுால்கள் வெளிவரவேண்டும்- அதன் மூலம் அவர்கள் பரவலாக அறியப்படவேண்டும என்பது2. குறிப்பாக தமிழகத்தல் அவர்கள் அறியப்படவேண்டும் என்பதுதான் எனது இரண்டாவது அக்கறையாக இருந்தது.
மேற்கூறிய அக்கறைக்கு செயல்வடிவம் தரும்முகமாக எவ்வாறு செயல்பட்டார்கள் ?
முதலாவது அக்கறை எனது ஈடுபாட்டின் காரணமாக நான் பெற்று வாசிக்கக்கூடிய நுால்கள் சஞ்சிகைகள் பிற நண்பர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பத்ில் எழுந்தது. அதனால் எப்போதுமே ஒரு பிரதி என்றில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை வாங்கும் அல்லது தேடிப்பெறும் வழக்கம் எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. 1969-70 இல் கணையாழி அறிமுகமானபோது கொழும்பு விஜயலக்ஷ்மி புத்தக சாலையிலும் மாத்தளையில் ஒரு கடையிலும் யாழ் பூபாலசிங்கம் புத்தக சாலையிலும் விற்பனைக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். பின்னர் கணையாழியை நேரடியாகத் தருவித்து நான்கு ஆண்டுகள் வரையிலும் நண்பர்களுக்குத் தபாலில் அனுப்பிவந்தேன். மாதம் தோறும் இவ்வகையில் கணையாழியை 100 பிரதிகள் விநியோகித்திருக்கிறேன். இதுபோலவே தாமரை கசடதபற வைகை யாத்ரா படிகள் பரிமாணம் இனி காலச்சுவடு போன்ற தமிழக சிற்றேடுகள் பலவற்றையும் அறிமுகம் செய்தும் விநியோகித்தும் வந்திருக்கிறேன். நுால்களைப்பொறுத்த அளவில் ஆரம்பத்தில் என்.சி.பி.ஹெச்.உடன் தொடர்பு கொண்டு நுால்களைத் தருவித்துள்ளேன். பணம்அனுப்பாமலே கூட என்.சி.பி.எச். அப்போது புத்தகங்களை அனுப்பிவைத்தது. பின்னர் மததிய வங்கியின் அனுமதிபெற்று காசுக்கட்டளையின் மூலம் பணம் அனுப்பினேன்.
1965 இல் வாசகர் வட்டம் தொடர்பு ஏற்பட்டது. புத்தகத் தயாரிப்பில் புத்தகம் அழகுற வெளியிடவேண்டும் என்பதும் அவசியமானது என்பதை வலியறுத்திச் செயல்பட்டது வாசகர் வட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 1974 இல் க்ரியாவின் முதல் மூன்று நுால்களான சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள் ‘- சி.மணியின் ‘வரும் போகும் ‘- நா.முத்துச்சாமியின் ‘நாற்காலிக்காரர் ‘ வெளியானபோது ‘க்ரியா ‘ ராமகிருஷ்ணனுடன் தொடர்புகொண்டு நுால்களைப் பெற்று விநியோகித்தேன். அழகாக அச்சிடுவதில் க்ரியா மேலும் கவனத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 1980 இல் முதன் முதலாகத் தமிழகம் சென்று திரும்பினேன். மூன்று வாரப்பயணத்தின் போது மதுரை, திருச்சி, சென்னை மட்டுமே செல்ல முடிந்தது. தமிழகம் போகும்போது ஈழத்து நால்கள் சஞ்சிகைகள் பலவற்றில் பல பிரதிகள் எடுத்தச்சென்றிருந்தேன். திரும்புப்போது தமிழக நுால்கள் சஞ்சிகைகள் பெற்று வந்தேன்.
யரா: சரி. இவ்வகையில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை நூலாக்குவது தொடர்பான உங்கள் முயற்சிகள் எப்படித் தொடர்ந்தது ?
ஈழத்து எழுத்தாளர்களது நூல்களைப்பதிப்பித்தல் என்பது இரு தளங்களில் நிகழ்ந்தது எனலாம். ஓன்று தமிழக எழுத்தாளர்களை நாம் அறிந்த அளவிற்கு ஈழத்து எழுத்தாளர்களைத் தமிழகத்ததார் அறிந்திருக்கவில்லையே என்ற ஆதங்கம் ஒருபுறம். மறுபுறம் ஈழத்தில் தமிழ் நுால்களைப் பதிப்பிப்பதில் அரசின் ஆதரவும் இல்லை. வணிக ரீதியலான பதிப்பகங்களும் உருவாகவில்லை. பாடசாலை நூல்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா புததகசாலை, சுப்பிரமணிய புத்தகசாலை, ஆனந்தா புத்தகசாலை, கலைவாணி புத்தகசாலை, சுன்னாகம் வடஇலங்கை தமிழ் நூற்பதிப்பகம் எனப் பல பதிப்பாளர்கள் இருந்தமை கவனிக்கத்ததக்கது.
இந்த வகையில் 1980 இல் தமிழ்நாடு சென்றுவந்ததின் பயனாய் அங்குள்ள பதிப்பாளர்கள் தொடர்பினால் ஈழத்துப்படைப்புகள் சிலவற்றைக் கொண்டவரமுடிந்தது. 1981 இறுதியில் எஸ்விஆர். பொறுப்பாகவிருந்த பொதுமை வெளியீடு மூலம் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும் மலையகத்தின் மூத்த எழுத்தாளருமான கே.கணேஷ் மொழிபெயர்த்த லுாசுனின் ‘போர்க்குரல் ‘ சிறுகதைத்தொகுதி வெளிவந்தது. அதே சமயம் சென்னை நர்மதா பதிப்பகம் தி கந்தையா நரேந்திரன் எழதிய ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய நுாலான ‘விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் ‘ என்ற நுாலின் இரண்டாவது பதிப்பினை வெளியிட்டது. தொடர்ந்து எம்.ஏ.நுஃமானின் ‘அழியா நிழல்கள் ‘ கவிதைத் தொகுதி, குப்பிழான் சண்முகநாதனின் ‘சாதாரணங்களும் அசாதாரணங்களும் ‘ சிறுகதைத்தொகுதி, பேராசிரியர் கைலாசநாத குருக்களின் ‘வடமொழி இலக்கிய வரலாறு ‘-இரண்டாவது பதிப்பு ஆகிய நுால்களை நர்மதா பதிப்பகம் வெளியிட்டு உதவியது. ‘பதினோரு ஈழத்துக் கவிஞர்கள் ‘ தொகுதி, யேசுராசாவின் ‘அறியப்படாதவர்களின் நினைவாக ‘ கவிதைத் தொகுப்பு, மு.தளையசிங்கத்தின் ‘முற்போக்கு இலக்கியம் ‘, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘ போன்ற தொகுப்புகளை க்ரியா வெளியிட்டது. சி.சிவசேகரத்தின் கவிதை நுாலான ‘நதிக்கரை மூங்கில் ‘ தொகுதியை பெங்களுர் காவ்யா பதிப்பகமும், ‘மஹாகவி கவிதைகள் ‘, எம்.ஏ.நுஃமானின் ‘மழைவரும் நாட்கள் ‘ கவிதைத் தொகுதி போன்றவற்றை அன்னமும் வெளியிட்டது. இடதுசாரி எழுத்தாளரும் அறிஞருமான எஸ்.ராமகிருஷ்ணனின் உதவியினால் சி.வி.வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன் ‘ இரண்டாவது பதிப்பினை என்.சி.பி.எச்.வெளியிட்டது.
மு.தளையசிங்கத்தை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை க்ரியாவுக்கும் கோவை திரு.சி.கோவிந்தனுக்கும் உரியது. கோவை ‘சமுதாயம் ‘ பிரசுராலயம் மூலம் திரு.சி.கோவிந்தன், தளையசிங்கத்தின் ‘புதுயுகம் பிறக்கிறது ‘ சிறுகதைகள், ‘ஒருதனி வீடு ‘ நாவல், ‘போர்ப்பறை ‘, ‘மெய்யுள் ‘, ‘கலைஞனின் தாகம் ‘ போன்ற நூல்களைப் பிரசுரித்தார். எஸ்.வி.ஆரின் பொதுமை வெளியீடு சேரனின் இரண்டாவது சூரிய உதயம் கவிதைத் தொகுதியின் இரண்டாவது பதிப்பினை வெளியிட்ட சமயம் 1983 ஜூலை இனப்படுகொலை நிகழ்ந்துவிட்டமையினால் அந்நூல் வெளியீட்டுவிழா இனப்படுகொலையைக் கண்டிக்கும் நிகழச்சியாக மாறியது. அதன் காரணமாகச் சேரனின் கவிதைகள் அந்த நாட்களில் தமிழகத்தில் பரவலாக அறிய வந்தது. ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து சஞ்சிகைகளுமே சேரனின் ஏதாவதொரு கவிதையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோலவே உதயன் என்ற பெயரில் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும் ‘ என்ற நூலின் இரண்டாவது பதிப்பினை 1988 இல் ரோஸா லக்ஸம்பர்க் படிப்பு வட்டம் வெளியிட்டது.
யரா: தமிழகத்தில் பதிப்பிக்கப்பட்ட நுால்கள் பற்றிக் கூறிக்கொண்டு வந்தீர்கள். ஈழத்தில் பிரசுரிக்கப்பட்ட நுால்கள் பற்றி எதுவும் கூறவில்லையே ?
ஈழத்துப் பதிப்பகத்துறை பற்றிக் கூறுமிடத்து கொழும்பு ரெயின்போ பிரின்டர்ஸிலிருந்த எம.ஏ.ரஹ்மான் பற்றிக் குறிப்பிடாதிருக்கமுடியாது. தமிழகத்தில் வாசகர்வட்டம் தொடங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே பதிப்புக் கலைக்கு அழகும் சேர வேண்டும் என்பதை உணர்ந்து பல நூல்களை அழகுறப்பதிப்பித்த பெருமை எம.ஏ.ரஹ்மானுக்கு உரியது. ஏ.ஜே.கனகரட்னாவின் ‘மத்து ‘ கட்டுரைகள், வ.அ.ராசரத்தினத்தின் ‘தோணி ‘ சிறுகதைகள், மஹாகவியின் ‘குறும்பா ‘, எஸ்.பொன்னுத்துரையின் ‘வீடு ‘ சிறுகதைகள், மு.தளையசிங்கத்தின் ‘புதுயகம் பிறக்கிறது ‘ சிறுகதைகள் ஆகிய நூல்களை உதாரணமாகக் கூறலாம். இந்த வகையில் திரு. சொக்கன், மயிலங்கூடலுார் திரு. பி.நடராசன் ஆகியோர் சார்ந்த முத்தமிழ்க்கழக வெளியீடுகள் பற்றிக்குறிப்பிடவேண்டும். ந.சுப்பிரமணியத்தின் ‘ஈழத்துத் தமிழ் நாவல்இலக்கியம் ‘, சொக்கனின் ‘ஈழத் தமிழ் நாடக இலக்கியம் ‘, மற்றும் கலாநிதி சண்முகதாசின் ‘இலக்கண நூல் ‘ போன்றவை இங்கு சுட்டப்படவேண்டும்.
எழுபதுகளின் இறுதியில் மு.நித்தியானந்தன் ‘வைகறை ‘ வெளியீடு மூலம் மலையக இலக்கிய நுால்களைக் கொண்டவர முனைந்து மூன்று நூல்களை வெளியிட்டார். தெளிவத்தை ஜோசப்பின் ‘நாமிருக்கும் நாடே ‘ சிறுகதைகள், என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து ‘ சிறுகதைகள், சி.வி.வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன் ‘ போன்றன அந்த நூல்களாகும். இந்த ரீதியில் அலை சஞ்சிகையுடன் ‘அலை ‘ வெளியீடுகளையும் கொண்டவர முனைந்தோம். ஏ.ஜே.கனகரட்னாவின் ‘மார்க்சீயமும் இலக்கியமும் ‘ கட்டுரைகள், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘ஒரு கோடை விடுமுறை ‘ நாவல், வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லீம் மக்களும் ‘, நாவல் சு.வில்வரத்தினத்தின் ‘அகங்களும் முகங்களும் ‘ கவிதைகள் ஆகியன வெளியாகின.
தமிழ் தமிழர் சார்ந்த நுால்களை வெளியிட உருவானது தமிழியல் அமைப்பு. தமிழியல் மூலம் பத்து நூல்கள் வெளியானது. இவற்றுள் ஏழு நுால்கள் தமிழகத்திலும் மூன்று நூல்கள் யாழ்ப்பாணத்திலும் வெளியாகின. அவற்றுள் ஈழநாடு தலையங்கங்களைக் கொண்ட ‘ஊரடங்கு வாழ்வு ‘ நூல், ‘மரணத்துள் வாழ்வோம் ‘ கவிதைத் தொகுதி, சண்முகம் சிவலிங்கத்தின் ‘நீர்வளையங்கள் ‘ கவிதைத்தொகுதி, மு.பொன்னம்பலத்தின் ‘ஆத்மார்த்தமும் யதார்த்தமும் ‘ கட்டுரைகள், ஓவியர் மாற்கு அவர்களைக் கெளரவிக்கும் முகமாக வெளியிடப்பட்ட தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட முடிந்தமை மிகுந்த மனநிறைவைத்தரும் விஷயமாகும்.
யரா: இவற்றினைச் செயல்படுத்தியதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த இலக்கினை அல்லது தாக்கத்தை எய்த முடிந்ததா ?
நுால்கள் சஞ்சிகைகளை படிக்கும் வாய்ப்பினை கணிசமாகப் பெறமுடிந்தமை காலப் போக்கில் பலநுாறு பேர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று கூறலாம். அதன் பலன் நீண்ட காலத்திற்குரியது என்பதே என் எண்ண்ம். அடுத்து ஈழத்து எழுத்துக்களை பரவலாக்குவது தொடர்பாக தமிழக எழுத்தாளர்கள் பதிப்பாளர்களின் தொடர்புகளின் பலனாய் 1987 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்ததைவிடவும் 1987 ஆம் ஆண்டிற்குப்பின் எமது எழுத்துக்கள் எழுத்தாளர்கள் தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். ஓரு உதாரணத்தைக் கூறி விளக்க முயல்கிறேன்.
தமிழகச் சிற்றேடுகள் இணைந்து நடத்திய எழுபதுகளில் கலை இலக்கியம் எனகிற இலக்கு மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு பிற்பாடு காவ்யாவினால் வெளியிடப்பட்டது. அத்தொகுப்பில் ஓரிரு கடடுரைகள் நீங்கலாக ஏனைய அனைத்திலும் ஈழத்து எழுத்துக்கள பற்றிப் பேசப்படுவதைப் பார்க்கலாம். தமிழவன் குழவினர் நடத்திய படிகள் சஞ்சிகையில் சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதைகள் வெளியாகியுள்ளன. தவிரவும் ஈழத்துக் கவிதைகள் தொடர்பாக உயர்வான கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சண்முகம் சிவலிங்கம், மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம், சிவசேகரம், ஓவியர் மாற்கு, சு.வில்வரத்தினம் போன்றோரை தமிழகத்தில் அறிமுகப்படுத்த முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே இருக்கிறது.
தமிழ்நாட்டு எழுத்தாளர்களோடு கூடுதலாகத் தொடர்பு கொண்டது 80 இற்குப்பிறகுதான். அதற்கு முன்பு பத்திரிகைகளோடும் பதிப்பகங்களோடும்தான் தொடர்பு. 80களில் தமிழ்நாடு போய் ‘க்ரியா ‘ ராமகிருஷ்ணனோடு தங்கினேன். அதிலிருந்து எழுத்தாளர்களோடு தொடர்பு கொண்டேன். குறிப்பாக அசோகமித்திரன், சா.கந்தசாமி, மற்றும் மதுரையில் கொஞ்சம் பேரை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 81 இல் நானும் யேசுராசாவும் குலசிங்கமும் மதுரை, கோயமுத்துார், பெங்களுர், நாகர்கோயில் என எல்லா இடங்களும் போயிருந்தோம். சுந்தரராமசாமி, ஞ.மாதவன், ‘படிகள் ‘ சிவராமன், ‘காவ்யா ‘ சண்முகசுந்தரம், கோவை ஞானி போன்றோரைச் சந்தித்தோம். சந்தித்த எழுத்தாளர்கள் அனைவருமே எங்களைக் கவர்ந்தவர்கள். அவர்களை நேரில் சந்தித்தது என்பது ஒன்று. மற்றது ஈழத்து இலக்கியம் பற்றி நிறைய அவர்களோடு பேசக்கூடியதாக இருந்தது ஈழத்து இலக்கியத்தின் பால் ஒரு கவனத்தை அவர்களிடம் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இந்தத் தொடர்புகளுக்கூடாக படிப்படியாக எமது புத்தகங்கள் சஞ்சிகைகள் போன்றவற்றை தமிழகத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம்.
இடையில் இன்னொன்று ஞாபகம் வருகிறது. 1980 இல் நடைபெற்ற இலக்கு மாநாட்டிற்கு யேசுராசாவை நான் அனுப்பிவைத்தேன். அந்த மாநாட்டில் இலங்கைப் படைப்புகள் பற்றி நிறையப் பேசப்பட்டது. எங்களது தொடர்புகள் இருந்தபடியால் தான் ஈழத்து இலக்கியம் இந்த அளவு தமிழகத்தில் அறிமுகமாயிருக்கிறது.
யரா: 1986 வரைக்கும் தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையிலான உறவு நல்ல முறையில் பேணப்பட்டது. தற்போது அந்த உறவு தேங்கிவிட்டது போல் எனக்குப் படுகிறது. எமக்கிடையிலான தொடர்பில் ஓரு இடைவெளி விழுந்துவிட்டது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நாங்கள் தொடர்புகள் பேணிய காலத்தில் இலக்கு மாநாட்டில் எழுபதுகளில் கலை இலக்கியம் என்ற வடேயம் பற்றிய ஆய்வில் பெரிய அளவில் இலங்கை எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இடம் பெற்றன. ஆனால் அன்மைக் காலங்களில் நடைபெறும் மகா நாடுகளிலோ ஒன்று கூடல்களிலோ இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஏன் என்று விளங்கவில்லை. கூடுதலாக அரசியல்தான் காரணமாக இருந்திருக்கலாம். மாநாடுகளை நடத்துபவர்கள் இதில் அக்கறை இல்லாதவர்களாகவும் இருந்திரக்கலாம். இதைப் பற்றி அதிகம் சொல்ல நான் ஒரு படைப்பாளி அல்ல. இன்னொரு விடயத்தையும் நான் சொல்லலாம். இந்த இலக்கிய ஈடுபாடுகொண்ட பலர் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறியிருப்பதும் இத்தகைய இடைவெளிக்குக் காரணமாக இருக்கலாம். புதிய தலைமுறையினர் இதை எப்படி முன்னெடுத்துச் செல்வார்களோ தெரியாது.
யரா : ஐரோப்பாவில் நாங்கள் என்ன செய்யலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் ?
நாங் கள் நினைத்தால் நல்ல காரியங்கள் நிறையச் செய்யலாம். லண்டனில் 40-50 பேராவது இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் இருக்கிறார்கள். மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்தால் 200 பேராவது தேறுவர். ஆனால் அவர்களுக்கிடையில் பல்வேறு விதமான அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும். நல்ல நெருங்கிய ஒன்றாகப் பழகிய நண்பர்கள்கூட அரசியல் வேறுபாடுகளினால் ஒற்றுமைப்பட முடியாமல் இருக்கிறது. இலக்கியம் என்று வரும்போது அரசியல் வேறுபாட்டை மறந்து ஒற்றுமையாகச் செயல்படவேண்டும். அப்போதுதான் நிறையச் சாதிக்கலாம்.
நான் தற்போது பணிபுரியும் நிறுவனமான நியூஹாம் தமிழர் நலன்புரிச்சங்கம் வெளியிட்ட மலர் இந்த அடிப்படையில் வெளியிட்டபடியால்தான் காத்திரமாக இருக்கிறது. இந்த 200 பேராவது ஆளுக்கு மாதம் அலவலது வருடம் குறிப்பிட்ட பணத்தைச் சேர்க்கத் தொடங்கினால் வெளியீடுகளை நல்லமுறையில் செய்யலாம். நடைமுறையில் எது சாத்தியம் என்று பார்த்து அப்படிச் செய்யவேண்டும். பலர் சேர்ந்து உழைக்க வேண்டும். இதை நோக்கிச் செயல்பட்டால் நுால்கள் வெளியிடுவதில் விநியோகிப்பதில் சிக்கல் கள் தோன்றாது.
யரா: பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு மொழி தெரிந்த தமிழர்கள் இப்போது வாழ்கிறார்கள். தமிழ் சார்ந்த விஷயங்களை பிற மொழிகளிலும்- பிற மொழி சார்ந்த விஷயங்களைத் தமிழுக்கம் கொண்ட வந்திருக்கலாம். ஆனால் கணிசமான அனவுக்கு எதுவும் தோன்றியதாகத் தெரியவில்லையே-இதற்கு என்ன செய்யலாம் ?
திட்டமிட வேண்டும். ஆர்வம் இருக்கும் எல்லோராலும் இதைச் செய்யமுடியாது. பின்னால் உந்துதல் அழுத்தம் இருக்கவேண்டும். தனிநபர் செய்யமுடியுமா ? ஓருவித சோர்வு வந்துவிடும். ஒரு செயல்திட்டம் வேண்டும். ஒரு அமைப்பு வேண்டும். இதற்கான வாய்ப்பு இருந்தால் எல்லாவற்றையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம்.
யரா: ஈழத்தின் இலக்கியச் சஞ்சிகைகளில் குறிப்பிடத்தக்கதான அலையின் வாழ்வுடன் எவ்வகையிலான உறவைக் கொண்டிருந்தீர்கள் ? அதனுடன் நீங்கள் பணியாற்றுவதற்கு ஏதேனும் இலக்கியக் கொள்கை காரணமாக இருந்ததா ? அவை எவ்வகை இலக்கியக் கொள்கைகள் எனக் கூறமுடியுமா ?
எழுபதுகளின் ஆரம்பத்தில் நான் மாத்தளையில் இருந்த வேளை யேசுராசா என்னை வந்து சந்தித்தார். அது முதல் 1989 இல் இலங்கையைவிட்டு நீங்கும் வரை அவருடன் இறுக்கமான நட்பு இருந்தது. 1990 இல் இலண்டன் வந்த பின்பு கடிதம் எழுதும் வழக்கம் கைவிட்டுப் போனதில் தொடர்பு குறைந்து இப்போது யாழ்ப்பாணம் அரசபடைகளின் வசம் ஆன பின் யேசராசா எங்கிருக்கிறார் என்பதே சரியாகத் தெரியவில்லை. இடையில் சில காலம் பூநகரியில் இருந்ததாகத் தெரிகிறது. யேசுராசாவின் நட்பினால் ஏ.ஜே.கனகரட்னா, மு.நித்தியானந்தன், நிர்மலா, அலை குழுவினரான மு.புஷ்பராஜன், சட்டநாதன், குப்பிழான் சண்முகன், நுஃமான் ஆகியோர் நண்பர்களாயினர்.
அலை 1975 இல் வெளிவரத்தொடங்கி 1990 இல் நின்றுபோனது என நினைக்கிறேன். 1975 இல் அலை தோன்றுவதற்கு ஈழத்தில் அன்று நிலவிய இலக்கியப் போக்கே காரணமாக அமைந்தது. அப்போதைய இலக்கியத் தலைமை இலக்கியத் திறனாய்வாளர்களான கைலாசபதி சிவத்தம்பி போன்றோரிடமிருந்தது. மார்க்சிய சித்தாந்த அடிப்படையில் எந்தவொரு இலக்கியமும் தீர்வுக்கு வழிகோலுவதாக இருக்கவேண்டும் என்ற போக்கில் இருந்தது அன்றைய நிலை. கைலாசபதி சிவத்தம்பி போன்றோரின் அங்கீகாரத்தை அனைவரும் எதிர்பார்ககும் நிலை. அவர்களும் தம்மைச் சார்ந்து நின்றவர்களை உயர்த்தியும் அல்லாதவர்களைப் புறக்கணித்தும் வந்த நிலை. இதனால் போலியும் பொய்ம்மையும் கொண்ட இலககியம் மேலோங்கும் நிலை. அதற்கு ஓர் எதிர்க்குரலாக வாழ்வு சார்நத அனுபவங்களை கலை உணர்வுடன் வெளிப்படுத்தும் இலக்கியத்தினை முன்நிறுத்தும் ஒரு களமாகவே அலை தோன்றியது. முப்பதுக்கும் அதிகமாக வந்த அனைத்து இதழ்களிலும் இந்த அடிநாதத்தினைக் காணலாம். ஆக்கபூர்வமான கட்டுரைகள் விவாதங்கள் பலவும் சிறப்பான கவிதைகள் சிறுகதைகள் பலவும் அலையில் வெளியானது. ஏம்.எல்.எம்.மன்சூர், உமா வரதராஜன், ஸ்ரீதரன், ரஞ்சகுமார், குந்தவை, ராஜேஸ்வரி, நந்தினி சேவியர், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரின் சிறுகதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.
மேலும்இனப்பிரச்சனை கூர்மை அடைந்து வந்த காலம் அது. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ் தேசியவாதத்தினை முன்வைத்துச் செயற்பட்டது அலை. இந்த இரு வி ‘யங்களிலும் எனக்கிருந்த உடன்பாடு காரணமாகவே அலையுடன் சேர்ந்து இயங்கினேன்.
யரா: ஈழத்துள்ளான இலக்கியப் பணயின் போது நீங்கள் ஏதேனும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்ததா ? அந்நெருக்கடிகள் எப்படி எங்கிருந்து தோன்றின ?
ஈழத்து இலக்கியவாதிகளில் தம்மளவில் முரண்பாடுகளைக் கொண்ட பலரும் கூட அலையின் காத்திரமான கருத்தக்கள் விவாதங்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் ஒன்றுபட்டு அலைக்கெதிரான கருத்துக்களைப் பரப்புவதில் அக்கறை கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அலையின் கருத்து வலுப்பெற்றுவரும் ஒவ்வொரு சந்தரப்பத்திலும் அதற்கெதிரான குரலும் ஓங்கியிருந்ததை உணரக்கூடியதாக இருந்தது.
அடுத்து அலை போன்ற சிற்றேடுகளை வெளியிடுவதில் உள்ள சிரமங்கள் இரு வகையானவை. அலையில் பிரசுரிக்கத்தக்க விஷயங்களைப் பெறுவதில் உள்ள சிரமம் ஒரவகை. அச்சிடவாகும் செலவினை ஈடுகட்டவது மற்றுமொன்று. இதில் அச்சுச் செலவினை ஈடு செய்தல் வகையில் விளம்பரங்கள் பெறவதில் நான் ஓரளவு உதவ முடிந்தமை குறிப்பிடத்தக்கது. அலை தொடர்பாக மேலும் இரு விவரங்களைக் கூற விரும்புகிறேன். அலையின் ஓர் இதழை ( இதழ் 20- தை பங்குனி 1992) க்ரியா ராமகிருஷ்ணன் கவிஞர் சு.மணியன் துணையுடன் சேலத்தில் அச்சிட்டுப் பெற்றோம். இதுபொலவே தமிழகம் சென்று திரும்பிய வாய்ப்பைப்பயன்படுத்தி 29வது இதழின் அட்டையை ( மார்கழி 1986) அட்டையை சென்னையில் அச்சிட்டுப் பெற்றோம். நா.முத்துசாமியின் மகனான நடேஷ் ஓவியத்துடன் அவரே வீட்டில் வைத்து அச்சிட்டுத் தந்தமை குறிப்பிடத்தக்கது. தவிரவும் அலையின் முக்கியத்துவம் கருதியும் பழைய இதழ்கள் கோரி பலர் வந்தமை கருதியும் அலையின் முதல் 12 இதழ்களையும் கொண்ட ஒரு மறுபதிப்பினைக் கொண்டுவந்தோம். ஓரு சஞ்சிகை மறுபிரசுரம் செய்யப்படுவது என்பது முன்பு நிகழ்ந்திருக்கிறதா என்பது உறுதியாகத் தெரியாது. எவ்வாறாயினும் அது ஒரு அரிதான நிகழ்வே.
யரா: ஈழத்தினதும் தமிழகத்தினதும் படைப்பாளிகள்-படைப்புக்களுடன் பரிச்சயம் கொண்ட நீங்கள் அவற்றினிடையே காணப்படும் ஒன்றுக் கொன்று வேறுபட்ட சிறப்புத் தன்மைகளை அடையாளம் காணமுடிகின்றதா ? அவை குறித்துக் கூறுங்கள்.
ஈழ தமிழகப்படைப்புகளைப் பாரக்குமிடத்து தமிழகத்துக் கவிதைகளைவிடவும் சிறப்பான தன்மைகளை ஈழக்கவிதைகள் கொண்டிருப்பதை 15 ஆண்டகளுக்கும் மேலாகவே நுஃமான் யேசுராசா போன்றோர் நிறையக் கூறியுள்ளனர். சமகாலத்தன்மை எளிமை நேரடியாகக் கூறல் ஒவவொரு கவிஞனுக்கும் என தனியான பாணி என்று சிறப்பான இயல்புகள் மற்றும் ஈழக்கவிதைகளில் உண்மை குறித்து பதினோரு ஈழத்துக்கவிஞர்கள் தொகுப்பாளர்களான நுஃமானும் யேசுராசாவும் தமது முன்னுரையில் கூறியிருக்கின்றனர். தமிழகத்திலும் படிகள் குழுவினர் குறிப்பாக தமிழவன் ஈழக்கவிதைகளின் சிறப்புபற்றிக் கூறியுள்ளார்.
தமிழகக் கவிஞர்களின் கவிதைகள் எல்லாம் ஒரே விதமானவையாகவும் சுலோகத்தன்மை கொண்டதாகவும் அதே வேளை வேறு பலரது கவிதைகள் விளங்காத்தன்மை கொண்டனவாகவும் இருப்பதை அவதானிக்கலாம். மஹாகவி முருகையன் எம்.ஏ.நுஃமான், மு.பொ., தா.இராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், சு.வில்வரத்தினம், சமீப ஆண்டுகளில் கி.பி.அரவிந்தன், சோலைக்கிளி ஆகியோரது கவிதைகள் தமிழகத்திலும் நன்கு அறிமுகமானவையே. கடந்த சில ஆண்டுகளில் மேலும் பலர் புதிதாக எழுதி வருவதையும் காணலாம்.
சிறுகதை நாவல் துறைகளில் தமிழகப் படைப்புகள் சிறப்பான இடத்தை எட்டியிருக்கின்றன என்பதே உண்மை. தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், சமீப காலங்களில் ஜெயமோகன், தோப்பில் முகமது மீரான் என நாவல் உலகில் பலரைக் குறிப்பிடலாம். அவர்களது படைப்புத் தரத்தில் நாவல் படைப்பவர்கள் ஈழத்தில் எவரும் இருக்கிறர்கள் எனக் கூறமுடியாது. தமிழ்ப்படைப்புகளுக்கு நோபல் பரிசு கிடைத்தால் அது ஈழத்தவனாகத்தான் இருக்கமுடியும் என்று ‘மல்லிகை ‘ ஜீவா எப்போதோ கூறியுள்ளார். அதற்கான சாத்தியம் இன்றளவும் தென்படவே இல்லை என்பதே உண்மை.
ஜானகிராமனின் மோகமுள், சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், நீல பத்மநாபனின் தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம், கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம், அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், தண்ணீர் என சிறப்பான நாவல்களின் பட்டியல் நீளும். இவற்றுள் மோகமுள், ஜே.ஜே.சில குறிப்புகள், பள்ளிகொண்டபுரம், கோபல்ல கிராமம் போன்ற நாவல்களில் உள்ள விரிந்த தள அனுபவத்தை எட்ட நமக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.
சிறுகதைகளைப் பொறுத்த அளவில் மேற்கூறியவர்களுடன் ஆதவன், பூமணி, சார்வாகன், சா.கந்தசாமி, அம்பை, சூடாமணி என்று மற்றுமொரு பட்டியல் போடலாம். ஆயினும் இந்தத் தரத்தில் வைக்கப்படக்கூடிய ஒரு சில ஈழப்படைப்பாளிகள் இல்லாமலும் இல்லை. எம்.எல்.எம்.மன்சூர், ஸ்ரீதரன், உமா வரதராஜன், ரஞ்சகுமார், க.சட்டநாதன், சண்முகம் சிவலிங்கம், 1960 களில் ‘அக்கா ‘ என்ற தொகுதி மூலம் அறியப்பட்டு ஏறத்தாழ 30 ஆண்டுகளின் பின் மீண்டும் எழுதிவரும் அ. முத்துலிங்கம் போன்றோர் ஈழத்துக்குப் பெருமை தேடித்தரக்கூடியவர்கள். திறனாய்வுத் துறையிலும் கைலாசபதி சிவத்தம்பியின் பின்னர், எம்.ஏ.நுஃமான், ந.சுப்பிரமணிய ஐயர், சண்முகலிங்கம் போன்றோர் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள். அதிகமாக எமுதாததினால் ஏ.ஜே.கனகரட்னா, சண்முகம் சிவலிங்கம் பரவலாக அறியப்படாதவர்களாக உள்ளனர். அவர்கள் அப்படி எழுதாமலிருப்பது எமக்குப் பேரிழப்பாகும்.
யரா: உங்கள் அனுபவத்தினுாடே புலம்பெயர் இலக்கியச் செயல்பாடுகளை எவ்வாறு காண்கிறீர்கள் ? ஆரோக்கியமாக உள்ளதாகப் படுகிறதா ?
புலம்பெயர் வாழ்வின் அவலங்கள் நெருக்கடிகள் மத்தியிலும் கலை இலக்கிய முயற்சிகளில் ஒரு சிலர் ஈடுபட்டு வரவே செய்கிறார்கள். எழுதியும் வருகிறார்கள். ஆயினும் அவற்றுள் ஈழத்திலிருந்தது போன்ற ஒரு துடிப்போ தீவிரமோ இருப்பதாகத் தெரியவில்லை. அதிலும் ஐரோப்பாவிலும் கனடாவிலும் உள்ள அளவிற்குக் கூட லண்டனில் இல்லை. ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு சில ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறபோதும் அதன் தாக்கம் முன்னெடுத்துச் செல்லும் தன்மை காத்திரமாக இல்லை என்றே தோன்றுகிறது. மேலும் அதன் செயல்பாடு ஒரு குறுகிய வட்டத்திற்குள் அமைந்துவிட்டது போலும் தோன்றுகின்றது. அரசியல் வேறுபாடுகளை மறந்த கலை இலக்கிய மேம்பாடு ஒன்றுதான் குறிக்கோள் என இயங்க முடிந்தால் இந்நிலையில் மாற்றம் ஏற்படலாமோ தெரியவில்லை.
புலம் பெயர் வாழ்வில் கலை இலக்கியச் சிற்றேடுகள் பல தோன்றி மறைந்துள்ளன. ‘சுவடுகள் ‘ ஒன்றுதான் நீண்ட காலமாகத் தொடரந்து வந்தது. எனினும் சஞ்சிகைகளின் வெளிப்பாடானது சிறப்பான சிற்றேடுகளைக் கொண்டுவரத்தக்கதான ஆற்றல் உள்ள சிலர் எம்மிடையே உள்ளதையே உணர்த்துகிறது. சஞ்சிகைகளில் வெளிவரும் விஷயங்களின் தேர்வு வெளிப்படுத்தும் முறை சொல்லாட்சி வாழும் நாட்டின் சூழல் பற்றிய அவதானம் வாசிக்கத்தூண்டும் எழுத்து போன்றவற்றால் நான் சமயங்களில் கவரப்பட்டதுண்டு. இங்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக சஞ்சிகைகளின் வளர்ச்சி தடைப்பட்டு தேக்க நிலையை அடைந்துள்ளது. மற்றுமொரு விஷயம் ஈழத்தமிழரின் புலப்பெயர்வானது தமிழுக்கு – குறிப்பாக தமிழக சஞ்சிகைகள் நுால்கள் திரைப்படம் இசைத்துறைகளில்-உலகளாவிய சந்தையை அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் நடைமுறையில் வணிக ரீதியான வெற்றிகளை அளிக்க மட்டுமே இவ்வாய்ப்பு பயன்படுகிறது.
புலம்பெயர் இலக்கியம் எனும் பிரிவு அடையாளப்படுத்தும் வகையில் படைப்பாற்றலும் வீச்சும் கொண்டதாய் இருக்கிறது என்று கூறுவீர்களா ?
புலம்பெயர் இலக்கியம் இன்னமும் பெரியளவில் புலம்பெயர்ந்தோர் இலக்கியமாகவே உள்ளது. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகளின் அவலங்களின் தரிசனங்களை மிகவும் குறைவான படைப்புக்களிலேயே காணமுடிகிறது. எனினும் இலக்கியத்தளத்தில் பத்து ஆண்டுகள் என்பது ஒரு வகையில் குறுகிய காலமே. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு திரிசங்கு சொர்க்கநிலையில் புலம்பெயர் இலக்கியம் என்ற எல்லை வகுப்பதில் சிரமமிருக்கலாம்.
புலம் பெயர் சூழலில் இங்கு நாம் கற்றுணர ஏராளமான விஷயங்கள் உள்ளது. வேற்று மொழிகள் பல்வகை கலை இலக்கியங்கள் அறிஞர்கள் படைப்பாளிகள் என்று பட்டியல் இடலாம். இதனால் எல்லாம் புலம்பெயர் வாழ்வின் பயனால் தமிழுக்குப் புதிய பல சிந்தனைகளும் படைப்புகளும் வந்து சேரும் என்ற எதிர்பார்பபு நிறையவே உள்ளது. அது வெறும் எதிர்பார்ப்பாக நின்றுவிடக்கூடாது என்பது பலரதும் விருப்பாக இருக்கிறது.
- புரியவில்லை
- ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- இரண்டு கரிகாலன் கவிதைகள்
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்
- காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- குறள்- கவிதையும் நீதியும்
- உசிலி உப்புமா.
- ரவா பொங்கல்
- ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது
- உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி
- ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்
- வேகவேகமாக வாழ்வு
- ஆறு சேவியர் கவிதைகள்
- விசாரணை
- எதிாியிடம் ஒரு வேண்டுகோள்
- அன்புத்தங்கைக்கு………
- டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்
- சிதைந்த இரவிலொன்று
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)
- ஒரு பேறு
- திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)
- வெற்றியும் அதிர்ஷ்டமும்
- முதல் மனிதனும் கடைசி மனிதனும்
- கேட்டால் காதல் என்பீர்கள்…