பார்க்கிறார்கள்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

மாதங்கி


வாசலில் துண்டுப் பிரசுரம்
உடனே செய்துவிட்டேன் கத்திக்கப்பல்
அம்மா பார் உரக்கக் கத்தினேன்
தலையை மட்டும் ஆட்டினாள்
என்னைப் பார்க்கவில்லை

ஓடிப்போனேன் சமையலறைக்கு
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி
கப்பலை மிதக்க விட்டேன்
காட்டுவோமா அப்பாவிடம் ?

அப்பா பார் உரக்கத்தானே கூப்பிட்டேன்
அவர் தலையைத் திருப்பவில்லை
பிரமாதம் என்று மட்டும் சொன்னார்
பிறகு பார்ப்பார் போலும்

கப்பல் மூழ்கிற்று
காப்பாற்ற எண்ணி தண்ணீரைத் தள்ளினேன்
இன்னும் தண்ணீர் உள்ளே செல்ல
பின்னோடு அழலானேன்

முறுக்கை எடுத்து தின்னப்பா என்றார்
முத்துலச்சுமி பாட்டி
தன் தலையைத் திருப்பவுமில்லை
என்னைப் பார்க்கவுமில்லை

தண்ணீரை வெளியே கொட்டி
தரையில் கப்பலை வைத்தேன்
வேறொரு தாள் எடுத்தேன்
விமானம் செய்தேன்

தண்ணீரில் மூழ்காது
தப்பித்தது அடடா
விர்ரென்று வாசலில் பறந்தது
வியந்துபோய் பார்ப்பதற்குள்

எதிர் ப்ளாட்டில் விழுந்துவிட்டது
எடுத்துத் தருவார்களா ?
உரக்கத்தான் கூப்பிட்டேன்
அவர்களுக்கும் கேட்கவில்லை

வீட்டினுள் நுழைந்து ஓவென்று அழுதேன்
வீட்டினர் அழாதே கப்பல் செய்து
விளையாடு என்றனர் என் கப்பலின் கதி
விளங்கவில்லையா

எல்லோரையும் உற்றுப் பார்த்தேன்
எதற்காக இந்தப் பதட்டம்
அடடா, ஐயோ பாவம் என்கிறார்களே
அடிக்கடி உச் உச் என்கிறார்கள்

ஓகோ இவர்கள் குடும்பம் பார்க்கிறார்கள்

madhunaga@yahoo.com.sg

Series Navigation

மாதங்கி

மாதங்கி