ஜடாயு
தனக்கு முன்னும், பின்னும் வாழ்ந்த தமிழ்க்கவிஞர்கள் பலரிடம் காணக்கிடைக்காத அறிவியல் ஆர்வம் பாரதிக்கு இருந்தது என்று சொல்லலாம்.
ஜகதீச சந்திர போசின் தாவர ஆராய்ச்சிகள் பற்றி எழுதியிருக்கிறார். அவர் வாழ்நாளின் போது வந்த ஹாலியின் வால் நட்சத்திரம் பற்றி “சாதாரண வருஷத்துத் தூமகேது” என்று ஒரு கவிதை புனைந்தார்.
“எண்ணில் பல்கோடி யோசனை எல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னொடு வால் போவதென்கின்றார்”
என்று அந்த வால் பற்றிய அறிவியல் உண்மையைக் கூறுகிறார். அதே பாடலில்
“பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்து பன்னூறாண்டாயின
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முள் தெளிந்தவர் ஈங்கிலை”
என்று அறிவியல் அறிவை பாரத நாடு மறந்துவிட்டதைப் பற்றியும் வருந்துகிறார்.
“பாரத நாட்டுக்குத் தேவையான கல்வி” என்ற விஷயத்தைப் பற்றி எழுதுகையில் இயற்பியல், ரசாயனம், வான சாஸ்திரம், கணிதம் போன்ற துறைகளில் எந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு இவற்றையெல்லாம் நம் மாணக்கர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார். அணு, மூலக்கூறு இவற்றின் அமைப்பு பற்றிய சித்தாந்தங்கள் புரியத் தொடங்கியது 1910களில் தான். ரூதர்போர்ட் அணுவின் மையமாக நியூக்ளியஸ் என்னும் பருப் பொருளை (mass) கண்டறிந்தார், தொடர்ந்து புரோட்டான், எலக்ரான், நியூட்ரான் துகள்களும் அறியப் பட்டன. சூரியனைக் கோள்கள் சுற்றுவது போல், அழகான வட்டப் பாதையில் எலக்ரான்கள் மையத்தில் உள்ள நியூக்ளியசைச் சுற்றுவது போன்ற ஒரு கற்பனை பிம்பத்தையும் அன்றைய அறிவியல் உலகம் உருவாக்கிற்று. (உண்மையில், நியூக்ளியசின் வெளிப்பகுதி முழுவதிலும் இம்மி இடமில்லாமல் துகள்களே நிரம்பியிள்ளன. அவை சுற்ற ஆரம்பித்தால் பெரும் மோதல் தான் ஏற்படும்! ஆனால், இன்று வரை இந்தப் பிம்பம் பாடப் புத்தகங்களிலும், வெகுஜன அறிவியல் எழுத்துக்களிலும் நீடிக்கிறது) மேற்குறிப்பிட்ட கட்டுரையில், அணுக்கூறுகள் சுற்றி வருவது பற்றிய அவர் காலத்து “சமீபத்திய” அறிவியல் முடிவுகளை கவித்துவத்தோடு பாரதி எழுதியிருக்கிறார். பல உலக அளவினான ஆங்கிலப் பத்திரிகைகளையும் படித்து வந்தததனால் தனது சமகால அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பதற்கு இது சான்று.
பாஞ்சாலி சபதத்தில் வரும் அழகான கடவுள் வாழ்த்துப் பாடல் இது :
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வான் நூலார் இயம்புகின்றார்
இடையின்றிச் சுழலுதல் இவ்வுலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கையாயின்
இடையின்றிக் கலைமகளே ! நினதருளில்
எனது மனம் இயங்கொணாதோ?
பல நயங்களை இதில் அனுபவிக்கலாம். எல்லா அறிவுத் துறைகளின் உருவகமான சரஸ்வதியை வணங்கும் முன்னர் Perpetual molecular motion மற்றும் planetary motion என்னும் இயற்பியல், வானியல் உண்மைகளைப் பிரமாணமாக முன்வைக்கிறார். க்வாண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் அறியப்படாத அந்தக் காலகட்டத்தில் இயற்பியலின் பொது விதிகளே (general laws of physics) அணுவின் சுழற்சி முதல் அண்ட வெளியில் சுழலும் கோள்கள் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்ற கருத்து இருந்தது. அந்தக் கருத்தையும் இந்தப் பாடல் உள்ளடக்கியிருக்கிறது. “இந்த எல்லாவற்றையும் போலவே என் மனமும் ஒரு இயற்கைப் பொருள் (physical object) தானே? அதுவும் இடைவிடாமல் இயங்காதா?” என்று கேட்கையில் “உன் அருளில்” என்ற சொல்லை வைத்ததால், மேலே சொன்ன எல்லா பிரபஞ்ச இயக்கமும் நடப்பதும் பரம்பொருளான உன் அருளே அல்லவா என்ற ஆன்மீக பாவனையும் வெளிப்படுகிறது.
மகாசக்தி வாழ்த்து என்ற கவிதையின் முதற்பாடல்:
விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
கோலமே நினைக் காளியென்றேத்துவேன்
அண்டம் பற்றிய அளவீடுகளும், பரிமாணங்களும் மனித மனமும், அறிவும் செய்யும் எந்தக் கற்பனையையும் விட பிரம்மாண்டமானவை. பில் ப்ரைஸன் (Bill Bryson) எழுதிய “எல்லாவற்றையும் பற்றிய சுருக்கமான சரித்திரம்” (A brief History of nearly Everything) அல்லது Stephen Hawkingன் “காலத்தின் சுருக்கமான சரித்திரம்” (A brief History of Time) போன்ற வெகுஜன அறிவியல் நூல்களைப் படித்தவர்கள் இந்தப் பிரம்மாண்டத்தைக் கொஞ்சம் உணரலாம். ஒரு சிறிய சர்க்கரைக் கட்டிக்குள் எத்தனை அணுக்கள் இருக்கின்றன? நாம் இருப்பது பால்வீதி எனப்படும் வெளி (galaxy). இது போன்ற எத்தனை கோடி வெளிகள் பிரபஞ்சத்தில்? இவற்றுக்கு உடையே உள்ள தூரம் என்ன? தூரமும் காலமுமே மயங்கும் கணக்கு இது. “ஒளியின் வேகம்” என்ற நாம் அறிந்த அதிக பட்ச வேகக் கணக்கை வைத்து நடைமுறையில் இன்றைய அறிவியல் பெரும் வளர்ச்சி கண்டு விட்டது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் எப்போதோ ஒரு நட்சத்திரம் சிதறிய போது அதில் வெளிப்பட்ட ஒளி இன்னும் நம்மை வந்து சேரவில்லை என்றால் நாம் அங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்? இதையெல்லாம் கற்பனை செய்து பாருங்கள்!
இந்தப் பிரமாண்டத்தை கவித்துவ மொழியில் சொல்ல விழைவதே மேற்சொன்ன பாடல். இவ்வளவும் சொல்லிவிட்டுக் கடைசியில் “கோலமே” என்று பாடுகிறார். எண்ணிப் பார்த்தால் இது கூட அண்டம் பற்றிய நம் மனத்தில் உள்ள கோலம் தான், உண்மையல்ல!
அண்டம் பற்றிய ஆச்சரியங்களின் வெளிப்பாடு இந்து ஆன்மீக, பக்தி மரபில் புதிதல்ல. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலேயே உள்ளது. அதற்கும் முந்தைய வேத, உபநிஷத இலக்கியத்திலேயே உள்ளது. அவை எல்லாம் உள்ளுணர்வின் அடைப்படையிலானவை. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி நடைபோடத் தொடங்கியிருந்த காலத்தில், அதைப் பற்றி ஓரளவு நன்கு அறிந்திருந்த கவிஞனின் பக்தி வெளிப்பாட்டில் கூட அறிவியல் சிந்தனை தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தப் பாடல்கள் உணர்த்துகின்றன. இது அவனது ஆன்மீகத் தேடலைக் குழப்பவில்லை, மாறாக தெளிவித்திருக்கிறது, பரிணமிக்க வைத்திருக்கிறது.
பிற்காலத்தில், தமிழகத்தில் அறிவு சுத்தமாக மழுங்கியிருந்த ஒரு இருண்ட காலகட்டத்தில் “அமெரிக்காக் காரன் நிலாவில் கால் வைத்து விட்டான், மண் எடுத்து வந்து விட்டான், நீ அதை சிவன் தலையில் இருப்பதாகக் கருதி வணங்குகிறாயே” என்றெல்லாம் எள்ளி நகையாடி திராவிட இயக்கப் பாவேந்தர்கள் பாடல்கள் எழுதினார்கள். பாரதிக்கு இருந்ததில் பத்தில் ஒரு பங்கு அறிவியல் சிந்தனை கூட அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. அவர்களின் மற்ற படைப்புகளைப் படித்தால் இது புரியும். அமெரிக்க நிலாப் பயணத்தைப் பற்றி செய்தித் தாளில் படித்தவுடன் அரைகுறைப் பகுத்தறிவு பீறிட்டெழுந்து இத்தகைய அட்சரலட்சம் பெறுமான கவிதைகளை எழுதித் தள்ளினார்கள். மேற்சொன்ன பாரதி பாடல்களைப் படிக்கும்போது ஏனோ இது நினனவுக்கு வந்து தொலைக்கிறது.
“நிலவுலாவிய நீர்மலி வேணியன்” என்ற பழம்பாடலையும், பாரதியின் மேற்சொன்ன பாடல்களையும் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கழித்தும் நாம் படித்து அனுபவிக்கலாம். ஆனால் வெறுப்பில் விளைந்த அந்தக் காழ்ப்புணர்ச்சிப் பாடல்களைக் காலம் ஏற்கனவே விழுங்கி ஜீரணித்து விட்டது.
“காலமே, நினைக் காளியென்றேத்துவேன்”.
டீ.என்.ஏ உள் நிற்கும் தெய்வமே போற்றி
விண்கலன் செலுத்தும் விரைவே போற்றி
கணினி நிரலின் காரணா போற்றி
‘சிலிக்கன் சிப்’ மேவிய சிவனே போற்றி
http://jataayu.blogspot.com
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி
- கடித இலக்கியம் – 36
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- தொலைநோக்கிகள்!
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- காம சக்தி
- சரி
- சின்னண்ணே! பெரியண்ணே!
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பாரதி உன்னைப் பாரினில்
- கறுப்பு இஸ்லாம்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- நீ ர் வ லை (2)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.