பாரதி நினைவும் காந்தி மலர்வும்

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

பா. சத்தியமோகன்.


செப்டம்பர் – 11 நள்ளிரவில் மறைந்த மகாகவி பாரதியைப் பல விஷயங்களுக்காக நினைவு கூர்கிறோம். அடிமை இந்தியாவில் இருந்தாலும் விடுதலைக் கனவு கண்ட நம்பிக்கையாளர். பாரதியின் கடைசி காலங்கள் எப்படியிருந்தன என்று சிந்திக்க மனம் வேகும். பாரதிக்கு முடிவுப் பகுதி என ஏதும் இல்லை. ஏனெனில் அவர் அமரர். அது மட்டுமன்று ஒருவரது வாழ்தலின் பல கட்டங்களின் எதிரொலி தான் முடிவிலும் கேட்கிறது. 13.9. 1921 சுதேசமித்திரனில் வெளியான இரங்கல் செய்தி இவ்வாறு குறிக்கிறது : ‘ இந்தியா ‘ என்ற வாரப் பத்திரிகை ஒன்றைத் தாமே நடத்தி வந்தார். அதன் மூலமாக ராஜாங்க்த்தாருடைய கோபத்திற்கு ஆளாகி சுமார் 10 வருஷ காலம் பிரஞ்சு இந்தியாவில் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பரபரப்பாக வேலை செய்யும் ஒருவர் சும்மா இருக்கும்படி நேர்ந்த காரணத்தால் அவர் தேகம் மெலிந்து பழைய பாரதியின் சாயல் போல் 2 வருஷம் முன்பு புதுச்சேரியிலிருந்து மீண்டு வந்தார். சிறிது காலம் கடையத்தில் இருந்து விட்டு மித்திரன் உதவி ஆசிரியர்களில் ஒருவராகி தேச ஊழியம் செய்து வரும் நாளில் திடாரென்று நம்மையெல்லாம் விட்டு மறைந்து போய்விட்டார். ‘வேதம் செறிந்த தமிழ்நாடு, வீரம் செறிந்த தமிழ்நாடு ‘ என்று தமிழ்நாட்டின் பெருமையைப் பாடின பாரதி குடும்பத்தைக் காக்க தமிழ்நாடு முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் ‘

பாரதி இறந்து போக முக்கியமான காரணம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானைதான் என்று சொல்லுகிறார்கள். மக்களது ஆதரவின்மையும் வறுமையும் அவரை முன்னமே கொன்று விட்டன எனலாம்.

இயன்ற வரையில் தினம் ஒரு பாட்டாகவேனும் நமது குழந்தைகளிடம் பாரதி வரிகளை பேசுவோம். பாரதிக்கு அதுவே நாம் செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

பாரதியின் அஞ்சலி நிகழ்தலைத் தொடர்ந்து அண்ணலின் பிறப்பு மாதம் நிகழ்கிறது. பீரங்கிகளும் அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் சதித்திட்டங்களும் மலிந்த தற்கால நடைமுறையில் காந்தியடிகள் வெற்றுடலில் அரை ஆடையுடன் அஹிம்சை சத்தியம் என்ற மிக மெல்லிய சரடையே வைத்திருந்தார். மென்மை எப்போதும் சக்தியுடையது என்பதை அவர் அறிந்திருந்தார். அவரது இராட்டை நூல், பிரிட்டிஷ் ஆதிக்க லங்காஷயரின் நூற்பாலை பல் சக்கரங்களையே இழுத்து நிறுத்தியது.

மிகமிக மென்மையானதாகவும் அதே நேரத்தில் பல கோடி மக்கள் பின்பற்றக் கூடியதாகவுமான போராட்டத்திட்டங்களை அறிவித்து மக்களின் சக்தியை மக்களுக்கே உணர்த்தினார். அண்ணல் மகாத்மா காந்தியடிகளைப் பின்பற்றி பல்வேறு நாடுகள் சுதந்திரம் அடைய முற்பட்டன.

மார்டின் லூதர் கிங் உள்ளிட்ட சான்றோர், நெல்சன் மாண்டேலா உள்ளிட்ட பலர் அஹிம்சைக் கண்ணியின் தொடர்ச்சியே.

சபர்மதி ஜெயிலில் இருந்து காந்தியடிகளின் கடிதத்தில் , மார்ச் 12, 1927 ல் ஹகீம் அஜ்மல்கானுக்கு (மருத்துவர், அரசியல்வாதி, கிலாபத் இயக்கத்தில் பங்கு பெற்றவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ) முக்கிய வரிகள் இவ்வாறு உள்ளன :

அஹிம்சையை உறுதியான கொள்கையாக நாம் ஏற்காவிட்டால் நமக்குள் ஒற்றுமை வாராது. முப்பது கோடி இந்துக்களும் முஸல்மான்களும் ஒரு குறிப்பிட்ட இன்று மட்டுமின்றி என்றென்றும் ஒற்றுமையாக இருந்தால் அவர்களால் உலகின் அனைத்து சக்திகளையும் எதிர்த்து நிற்க முடியும். நமது ஒன்றுபட்ட பலத்தை நாம் உணர்ந்தால் ஆங்கிலேய நிர்வாகத்தின் துப்பாக்கிகளைக் கண்டு அஞ்சுவதை நிறுத்திவிடுவோம். அவர்களைத் தாக்க நினைப்பதைக் கூட ஆண்மையற்றது எனக் கருதுவோம். எனவேதான் நம் நாட்டு மக்கள் நமது பலவீனம் காரணமாக அன்றி பலத்தின் காரணமாக அஹிம்சை உணர்வு கொள்ள வேண்டுமென நான் ஆசைபடுகிறேன் ‘

காந்தியடிகளின் தொலைநோக்கு ஆக்கசக்திப் பார்வை பாரத விடுதலை மட்டுமல்ல ஆன்ம விடுதலையும் ஈன்றது. ‘தாழ்வுற்று வறுமை மிஞ்சி , விடுதலை தவறி கெட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி நீ மகாத்மா வாழ்க வாழ்க ‘ என்ற பாரதி வரிகளே நினைவு வருகின்றன. பாரதியின் கண்ணில் தேசியம் கலந்த காந்தியமும் மகாத்மாவின் கண்களில் பாரதியம் கலந்த சுதந்திர வேட்கையும் கலந்திருந்ததை கண்டு உணர்ந்து நெகிழ்கிறோம்.

வாழ்க அண்ணல் புகழ்.

**

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்