பாரதம் தயாரித்து நிறுவும் முதல் 500 MWe பேராற்றல் அணுமின் நிலையங்கள்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


கனடாவின் முதல் முன்னோடி அழுத்தக் கனநீர் அணு உலை 1960-1965 ஆண்டுகளில் உருவாகி வரும் போதே, தீர்க்க தரிசி டாக்டர் ஹோமி பாபா அதன் எதிர்கால மகத்துவத்தை ஊகித்து 1965 இல் பாரதத்தில் நிறுவத் துணிச்சலுடன் உடன்படிக்கை செய்தார்! பத்து 220 MWe சிறிய அணுமின் நிலையங்களைப் படைத்து 25 ஆண்டுகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற இந்திய அணுவியல் துறையகம், அடுத்து பேராற்றல் கொண்ட 500 MWe அணுமின் நிலையத்தை டிசைன் செய்து, தாராப்பூரில் நிறுவகம் செய்து வருகிறது. அந்த அணு உலைகளின் இயக்கங்கள் யாவும் சோதிக்கப் பட்டபின், 2005-2006 ஆண்டுகளில் அவை பூரண நிலை அடைந்து மின்சக்தி பரிமாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தாராப்பூரில் பாரதத்தின் முதல் 500 MWe அணுமின் நிலையம்

பாரத அணுசக்திப் பேரவையின் முதல் அதிபதி, டாக்டர் ஹோமி பாபா 220 MWe ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் அணுமின் நிலையத்தைக் [CANDU, Pressurized Heavy Water Reactor] கனடாவிலிருந்து பெறும் போது அணு உலை, அழுத்தக் குழல்கள், அணு உலைச் சாதனங்கள், யுரேனிய எரிக்கட்டுகள் ஆகியவற்றை இந்தியாவிலே பின்னால் தயாரிக்கும் நோக்கத்துடன் டிசைன் நுணுக்க முறைகளையும், விளக்க வரை படங்களையும் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் புரிந்து கொண்டார். அம் முறையில் யுரேனியம் டையாக்ஸைடு எரிக்கட்டுகள் [UO2 Fuel Bundles] முதலில் வெற்றிகரமாய் ஹைதராபாத் எரிக்கட்டு தயாரிக்கும் கூடத்தில் [Nuclear Fuel Complex, Hydrabad] 220 MWe அணுமின் உலைகளுக்குத் தயாரிக்கப் பட்டன. அடுத்துச் சிக்கலான அணு உலைக் கலன்கள் [Reactor Vessels] பாம்பாய் ‘லார்ஸன் & டியூப்ரோ ‘ தொழிற் கூடத்தில் உருவாக்கப் பட்டன. பிறகு அணு உலைக்கு வேண்டிய நூற்றுக் கணக்கான ஸிர்கோனியம் கலவை அழுத்தக் குழல்கள் மற்றும் சாதாரண குழல்கள் [Zirconium Alloy Pressure Tubes, Calandria Tubes], சிறப்பாக தயாரிக்கப் பட்டன.

1974 ஆம் ஆண்டு பாரதம் அடித்தள அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் தமது அணுவியல் துறைக் கூட்டுறவைத் துண்டித்துக் கொண்டது! தனியே விடப்பட்ட பாரதம், ஏறக் குறைய எல்லாவித அணுவியல் சாதனங்களையும், அன்னிய நாடுகளின் உதவி யின்றி உள்நாட்டிலே உற்பத்தி செய்வதில் மகத்தான வெற்றியைக் கண்டுள்ளது! முன்னேறி வரும் நாடுகளில், பாரதமே முதலாக அணுமின் சக்தி உற்பத்தித் துறையில் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்புக் கட்டுப்பாடு, பயிற்சி ஆகிய அனைத்திலும் திறமை பெற்றுத் தன் கால்களிலே நிற்கிறது! இந்தியப் பொறி நுணுக்கத் தொழிற் சாலைகள் பலவற்றின் பேரளவுப் பங்கெடுப்பால், அடுத்து பத்துக் [ஐந்து இரட்டை] கனநீர் அணுமின் நிலையங்கள், கல்பாக்கம் [சென்னை, 2X220 MWe], நரோரா [உத்திரப் பிரதேசம் 2X220 MWe], கக்ரப்பார் [குஜராத் 2X220 MWe], கைகா [கர்நாடகா 2X220 MWe], ராவட்பாட்டா [ராஜஸ்தான் 2X220 MWe] ஆகியவை நிறுவனமாகி, 1983 ஆண்டு முதல் அவை யாவும் இயங்கி மின்சக்தியைப் பரிமாறிக் கொண்டு வருகின்றன.

பாரதம் 220 MWe கனநீர் அணுமின் நிலையங்களை அமைத்தபின், அடுத்து இந்தியாவின் முதல் 500 MWe இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்களை 523 கோடி ரூபாய் நிதி மதிப்பில் டிசைன் செய்து, தாராப்பூரில் 1998 இல் கட்டத் துவங்கி 2002 டிசம்பர் வரை 60% வேலைப்பாடுகள் முடிந்துள்ளன.

மிக மலிவான மின்சக்தி அளிக்கும் கனநீர் அணு உலைகள்

கனடாவின் முதல் முன்னோடி [First Prototype] அழுத்தக் கனநீர் அணு உலை [1960-1965] ஆண்டுகளில் டக்லஸ் பாயின்ட் [Douglas Point, Ontario] என்னும் இடத்தில் உருவாகி வரும் போதே, தீர்க்க தரிசி டாக்டர் ஹோமி பாபா அதன் எதிர்கால மகத்துவத்தை ஊகித்து பாரதத்தில் நிறுவ ஏற்பாடுகள் செய்தார்! இந்தியாவின் முதல் முன்னோடி இரட்டைக் கனநீர் அணு உலை ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் அமைக்கப் பட்டு 1972 முதல் இயங்கி வருகிறது! இப்போது 12 கனநீர் அணு உலைகளில் 11 நிலயங்கள் இயங்கி வருகின்றன!

இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறம் 2000 ஆண்டு முடிவில் ஆற்றல் 2720 MWe ஆகி யிருந்தது. அடுத்து 2010 ஆண்டுக்குள் 8100 MWe ஆற்றலாகப் பெருக்க புதிய 220 MWe, 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட அணுமின் நிலையங்கள் கட்டப் பட்டு வருகின்றன! அமெரிக்காவின் கொதிநீர் அணு உலைகள் [BWR] மற்றும் ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகளுக்குச் செலவு மிகையான [VVER-1000] செறிவு உரேனியம் [2%-4% U235] எரிபொருள் தேவைப் படுகிறது. ஆனால் கனநீர் அணு உலைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியம் பயன்படுவதால், எரிபொருள் மலிவு. மேலும் யுரேனியம் டையாக்ஸைடு துண்டுகளை [UO2 Pellets] ஸிர்கொலாய் குழல்களில் [Zircaloy Tubes] அடைத்து, எரிக்கோல்களாய் தயாரிப்பதும் எளிதே! சாதாரண நீரில் கிடைக்கும் கனநீரை [Heavy Water] ரசாயன முறையில் பிரித்தெடுப்பது ஒன்றுதான் விலை ஏற்றமானது. கனநீர் மீண்டும் மீண்டும் பயன்படுவதால், முதல் தரம் அணு உலையில் நிரப்பப் பட்டபின், கசிவுகள் மற்றும் சிந்தி ஆவியாகி மறைதல், சிந்தி எடுக்க முடியாமல் இழத்தல் போன்ற விளைவுகளால் குறைந்து போகும் அளவை மட்டும் ஈடு செய்ய வேண்டி வரும்! விலை மதிப்பான கனநீர் ‘திரவப் பொன்னாகக் ‘ [Liquid Gold] கருதப் படுகிறது!

கனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய யுரேனிய எரிக்கட்டுகள் யாவும் ஹைதராபாத்தில் தயாரிக்கப் படுகின்றன. 1960 ஆண்டுகளில் கனடா பம்பாயில் அமைத்த ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையின் [CIRUS Research Reactor] எரிக்கோல்கள் யாவும் பாரதத்தில் முதன் முதல் தயாரிக்கப் பட்டன. அடுத்து ராஜஸ்தானில் கனடா கட்டிய முதல் 220 MWe கனநீர் அணுமின் உலையின் எரிக்கட்டுகள் [Fuel Bundles 3.25 ‘ diameter 19.5 ‘ Long] ஆக்கப் பட்டன. தற்போது அம்முறையப் பின்பற்றிப் புதிய 500 MWe அணுமின் உலைகளுக்கும் அவற்றை விடப் பெரிய எரிக்கட்டுகள் [4 ‘ Diameter, 19.5 ‘ Long] தயாரிக்கப் படுகின்றன. 37 குழல்கள் கொண்ட எரிக்கட்டின் ஒவ்வொரு குழலிலும் சிறு யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் 24 திணிக்கப் பட்டுள்ளன.

500 MWe அணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள்

இரட்டை அணுமின் உலையாக [2X500 MWe] அமைக்கப் பட்ட இந்த நிலையங்களின் அரண், ஆட்சி அறை, கட்டுப்பாட்டுக் கருவி ஏற்பாடுகள், டர்பைன் கட்டடம் யாவும், தனித்தனியாக அமைக்கப் பட்டவை. வெப்ப சக்தியை இழந்த தளர் நீராவியின் மிஞ்சிய வெப்பத்தைக் குளிர்விக்கக் கடல் நீர் தணிப்புக் கலனில் [Condenser] பயன்படுகிறது.

165 அடி உள் விட்டமுள்ள கான்கிரீட் அரணுக்குள் ‘காலான்டிரியா ‘ என்று அழைக்கப்படும் அணு உலை [ Calandria Reactor Vessel] மையத்தில் மற்றுமோர் சிறிய கான்கிரீட் கோட்டைக்குள் மட்ட நிலையில் [Horizontal Reactor] அமைக்கப் பட்டுள்ளது. அணு உலையின் இருபுற முகப்பிலும் உள்ள 392 துளைகளில் ஸிர்கோலாய் காலன்டிரியா குழல்கள் [Zicaloy Calandria Tubes] அழுத்த விசையில் உருட்டி இணைக்கப் பட்டுள்ளன. அவற்றின் ஊடே நடுவில் ஸிர்கோலாய், இருபுறமும் ஸ்டெயின்லஸ் ஸ்டால் முனைப்பு கொண்ட, 392 அழுத்தக் குழல்கள் [Zircaloy (Zr-2.5%Nb) Pressure Tubes with Stainless Steel End Fitting either side] நுழைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு அழுத்தக் குழல் மையத்தில் 12 ‘எரிக்கட்டுகள் ‘ [12 Fuel Bundles in each Pressure Tube], அடுத்து ஒவ்வொரு நுனியிலும் ஒரு ‘கவசத் தடுப்பி ‘ [Shield Plug], ஒரு ‘துளை அடைப்பி ‘ [Closure Plug] அமைக்கப் பட்டுள்ளன.

அணு உலை இயங்கும் போதே எரு ஊட்டும் யந்திரம் [On-power Fuelling Machine], அழுத்தக் குழலில் எரிக்கட்டுகள், கவசத் தடுப்பி, துளை அடைப்பி ஆகியவற்றை நுழைவிக்கவோ அல்லது எடுக்கவோ பயன்படுகிறது. முதல் முறையாக அணு உலைக் குழல்களில் ஏற்றப்படும் எரிக்கட்டுகளின் எண்ணிக்கை: 4704, [392X12=4704]. அணு உலை 500 MWe ஆற்றலில் இயங்கும் போது, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று குழல்களில் இடத்துக்கு ஏற்ப 4 அல்லது 8 எரிக்கட்டுகள் மாற்றினால் போது மானது!

தனிப்பட்டுச் சுயமாய் இயங்கும் இரட்டைத் தடுப்பு முறைகள் [Two Independent Shutdown Systems] அணு உலையை நிறுத்த ஏற்படுத்தப் பட்டுள்ளன. முதலாவது ஏற்பாடில் 28 கூடான காட்மியம் தடைக் கோல்கள் [Hollow Cadmium Shutdown Rods] தாமாக ஈர்ப்பியல்பால் [Falling under Gravity] உலைக்குள்ளே விழுந்து, நியூட்ரான்களை விழுங்கி அணுக்கரு இயக்கத்தை நிறுத்தும். அணு உலை இயக்கத்தின் போது, தடைக் கோல்கள் மேல் நோக்கி தூக்கப் படும். இரண்டாவது அணு உலை நிறுத்தும் தடை ஏற்பாடு: நியூட்ரான் விழுங்கும் நஞ்சுத் திரவத்தை மிதவாக்கிக் கனநீரில் உட்செலுத்தும் ஆறு மட்டக் குழல்கள் [Horizontal Tubes, Injecting (Gadolinium Nitrate) Poison into the Moderator Heavy Water] நுழைக்கப் பட்டுள்ளன.

அணு உலை மித நியூட்ரான்களைக் கூட்டிக் குறைக்க [அதாவது அணு உலையில் வெப்ப சக்தி வெளியீட்டை ஏற்றி இறக்க] நீர் நிரம்பிய 14 அரங்குக் கட்டுப்பாடு மூலம் [14 Zonal Control System], அணு உலை ஆட்சியைச் சுயமாகவோ அல்லது கையாட்சியாலோ செய்யலாம்.

டர்பைன், தணிகலன், மின்சார ஜனனி, மற்றும் கொதி உலைக்கு நீர் அனுப்பும் பொதுத்துறைச் சாதனங்கள் [Conventional System Equipment] யாவும் டைபைன் கட்டடத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

அணுவியல் துறைக்கு வேண்டிய நுணுக்க முறைபாடுகள்

அணுமின் சக்தி வளர்ச்சிப் பணியில் டாக்டர் ஹோமி பாபா முன்னோக்குடன் 1960-1965 ஆண்டுகளில் ஆரம்பித்த துறைகளும், அவரது மரணத்துக்குப் பின் உண்டாக்கப் பட்ட நுணுக்க முறைகளும் பாரதத்தில் நிலைநாட்டப் பட்டதால் 500 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை தாமே முதலில் உருவாக்க அணுவியல் துறை நிபுணர்களுக்கு ஊக்கம், உறுதி, உற்சாகமும் உண்டாயின!

1. சுரங்கத்திலிருந்து இயற்கை யுரேனியத்தை எடுத்துச் சுத்திகரித்து, யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் [UO2 Fuel Pellets] ஆக்கி, எரிக்கட்டுகள் தயாரிப்பு [Fuel Bundles].

2. ஸிர்கோலாய் அழுத்தக் குழல்கள், காலன்டிரியா குழல்கள் [Zircaloy Pressure Tubes & Calandria Tubes] அணு உலைக்கும், சிறு குழல் உறைகள் [Zircaloy Fuel Sheaths] எரிக்கட்டுகளுக்கும் ஆக்குதல்.

3. அணு உலைகளில் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் கனநீர் திரவம் ஏராளமான அளவில் ரசாயனத் தொழிற்சாலைகளில் உற்பத்தி.

4. அணுமின் உலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கதிரியக்க மானிகள் [Radiation Monitors], அணு உலை ஆட்சி ஏற்பாடுகள் [Nuclear Power Reactor Instrumentation & Controls] தயாரிப்பு.

5. ஆராய்ச்சி அணு உலைகளில் யுரேனியம், புளுடோனியம் எரிபொருளைப் பயன்படுத்தி, அணு உலை பெளதிகத்தில் நியதி, ஆய்வுப் பணிகள் [Theoretical & Experimental Work in Reactor Physics] ஆகியவற்றை புரிதல்.

6. கதிரியக்க உடல் நலத்துறைப் பொறி நுணுக்க விருத்தியில் [Development Technology in Health Physics] புதிய வழி முறைகளை வகுத்தல்.

7. கழிவு எரிபொருள் மீள் சுத்திகரிப்பு முறைகளில் [Spent Fuel Reprocessing Techniques] முன்னேறி ரசாயனத் தொழிற் சாலைகள் அமைப்பு.

8. அணு உலை உலோகங்களின் உலோகவியல் ஆய்வுத் துறைகளில் வளர்ச்சி [Progress in Nuclear Reactor Materials Metallurgy].

9. சாதனங்கள், உபரிகளைச் சோதிக்கும் தனிப்பட்ட ஆய்வு அமைப்பாடுகள் [Special Test Facilities to test Equipment & Components].

10. கதிர்வீசும் கழிவுகளைக் கையாண்டு, பாதுகாப்பாக வாகனங்களில் போக்கு வரத்து செய்து புதைக்கும் முறைகளை [Waste Management Techniques] தீர்மானித்தல்.

11. அணு உலைப் பாதுகாப்பு ஆய்வுகள், அரண், கட்டமைப்பு உலோகச் சாதன ஆய்வுகள் [Reactor Safety, Containment Model & Structural Analyses] ஆகியவற்றைச் செய்தல்.

அணுவியல் நுணுக்கச் சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள்

220 MWe, 500 MWe ஆற்றல் அணுமின் நிலையங்களின் பெரும் பான்மையான சாதனங்களையும், கருவிகளையும் பாரதத்தில் உற்பத்தி செய்யும் அணுவியல் ஆராய்ச்சிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் கீழே காணப்படுகின்றன. அவை போக சில நுணுக்க சாதனங்கள், சிறப்புக் கருவிகள், கருவிகளின் உளவிகள் [Sensors] வெளிநாடுகளிலிருந்து வாங்கப் படுகின்றன.

1. பம்பாயில் உள்ள பாபா அணுவியல் ஆய்வு மையம். [Bhabha Atomic Research Centre, Bombay]

2. கல்பாக்கத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் [Indira Gandhi Atomic Reseach Centre, Kalpakkam, Chennai]

3. யுரேனியம் கார்பொரேசன் ஆஃப் இந்தியா [Uranium Corporation of India Ltd]

4. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் தாதுக்களின் ஆணையகம் [Atomic Minerals Division, Hydrabad]

5. இந்திய அரிய தாதுக்கள் தொழிற்சாலை [Indian Rare Earths Ltd]

6. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் எரிக்கோல் தயாரிப்பு சாலை [Nuclear Fuel Complex, Hydrabad]

7. ஹைதராபாத்தில் உள்ள எலெக்டிரானிக்ஸ் கார்பொரேசன் ஆஃப் இந்தியா [Electronics Corporation of India Ltd. Hydrabad]

8. பம்பாயில் உள்ள கனநீர் உற்பத்தி ஆணையகம் [Heavy Water Board]

9. கதிர்வீச்சு, கதிர் ஏகமூலகப் பொறித்துறை ஆணையகம் [Board of Radiation & Isotope Technology]

10. பம்பாயில் உள்ள லார்ஸன் & டியூப்ரோ யந்திரத் தொழிற்சாலை [Larson & Tubro, Bombay]

11. போபாலில் அமைந்துள்ள கனமின் யந்திரத் தொழிற்சாலை [Heavy Electricals, Bhopal Ltd]

200 MWe, 500 MWe கனநீர் அணு உலைகளின் சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகளின் சில பொது அமைப்புகள்:

1. இரட்டைக் கான்கிரீட் அரண்கள். உட்புற அரண் முறுக்கப் பட்ட உறுதியான கான்கிரீட் கோட்டை [Prestressed Reinforced Concrete].

2. தனித்தனியான அழுத்தக் குழல்கள் எரிபொருளுடன் நுழைக்கப் பட்ட, மட்ட நிலையில் தொங்கும் அணு உலை [Horizontal Reactor having several independent Pressure Tubes with Fuel Bundles].

2. அணு உலையின் இருபுறமும் நீர் நிரப்பப் பட்ட 304L ஸ்டெயின்லெஸ் ஸ்டால் முன்புறக் கவசங்கள் [Water Filled 304L Stainless Steel End Shields].

3. அணு உலை இயங்கும் போது எரிக்கோல் ஊட்டும் முற்போக்கான யந்திரங்கள் [Improved On-power Fuelling Machines]

4. தானாக இயங்கும், தனிப்பட்ட இரட்டை அணு உலை நிறுத்த ஏற்பாடுகள்.

5. விபத்துக் காலத்தில் அணு உலையைக் கட்டுப் படுத்தவும், கண்காணிக்கவும் தனியாக அமைக்கப் பட்ட அபாய கால அணு உலை ஆட்சி அறை [Emergency Control Room].

6. விபத்து சமயத்தில் அரணில் அடைபட்ட வெப்ப நீராவியின் சக்தியை குளிர்விக்கத் ‘தணிப்புக் குளம் ‘ [Suppression Pool] ஒன்று கீழ்த் தளத்தில் அமைப்பாடு.

7. கதிரிக்கத் திரவ வெளியேற்றத்தைத் தடுக்க, சுற்றி வரும் மீள்சுற்றி வெப்பக் கடத்தி நீர் ஏற்பாடு [Closed Loop Recirculating Cooling Water System].

8. தனித்தனியான ‘மும்முறைக் கூட்டுக் கட்டுப்பாடு ‘ [Triplicated Control Instrumentation] ஏற்பாடு. ஏதாவது இரண்டு முறை ஏற்பாடுகளில் பழுதுகள் ஏற்பட்டால், அணு உலை நிறுத்தப் படும். அது போன்று அணு உலைக் கட்டுப்பாடு, வெப்பசக்தி ஏற்ற, இறக்கம், நிறுத்தம், பாதுகாப்பு ஆகிய எல்லாப் பணிகளுக்கும், மூன்றில் இரண்டு கருவிச் சாதன ஏற்பாடுகள் ஒருங்கே கூடி அறிவிக்க வேண்டும்! அணு உலைக் கட்டுப்பாடு, அணு உலைத் துவக்கம், வெப்பசக்தி ஏற்றம், இறக்கம் யாவும் இரட்டை மின்கணணி ஆட்சியில் [Twin Computer Controls] நிகழ்கின்றன. இவ்வழியில் மூன்றில் ஒரு முறைப்பாட்டில் பழுதை ஆய்வு செய்யவோ, அல்லது செப்பணிடவோ முடிகிறது! மேலும் இரண்டில் ஒரு மின் கணணியின் பழுதை உளவு செய்யவோ, அன்றிச் செப்பணிடவோ முடிகிறது!

செர்நோபில் விபத்து போல் கனநீர் அணுமின் உலைகளில் அபாயம் நிகழுமா ?

சீர்குலைந்த செர்நோபிள் RMBK-1000 அணு உலை PHWR-200/500 அணு உலைகளைப் போலின்றி முற்றிலும் வேறுபட்டது! செர்நோபிள் அணு உலையில் நியூட்ரான் மிதவாக்கியாகப் பயன்பட்டது திரள்கரி [Graphite Moderator]. நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் ஒன்று சூடான திரள்கரியால் தூண்டப் பட்டது! திரள்கரிக்குச் சீர் கேடான ஓர் பண்பு உள்ளது. அணு உலைத் தொடர்ந்து இயங்கும் போது நியூட்ரான்கள் திரள்கரியைத் தாக்கி, ‘விக்னர் சக்தி ‘ விளைவால் [Wigner Energy Effect] அதன் உள் உஷ்ணம் ஏறிக் கொண்டே போகிறது. அணு உலை நிறுத்தப் பட்டாலும், திரள்கரியின் உஷ்ணம் குன்றுவதில்லை! ஆகவே அணு உலை விபத்தின் போது நீரிலிருந்து பிரிவு படும் ஹைடிரஜன் வாயு தீவிரத் தீப்பற்றி வெடிக்க ஏதுவாகிறது! ஆனால் PHWR-200/500 அணு உலைகளில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுவதால், அத்தகைய அபாயம் நேரப் போவதில்லை!

அடுத்துச் செர்நோபிள் அணு உலைக்கு கான்கிரீட் அரண் [Concrete Containment] இல்லாததால், வெடி விபத்தின் போது கதிரியக்கப் பொழிவுகள் எளிதாக வெளியேறி சூழ்மண்டலத்தில் பரவ வழி திறக்கப் பட்டது! PHWR-200/500 அணு உலைகளில் இரட்டை அரண் உள்ளதால், கதிரியக்க விளைவுகள் வெளிக் காற்றில் கலப்பது அறவே தடுக்கப் படுகிறது! மேலும் கனநீர் அணு உலைகளில் விபத்தின் போது வெளியேறும் நீராவியின் வெப்பத்தைக் குளிர்விக்கத் ‘தணிப்புக் குளம் ‘ [Suppression Pool] அரணுக்குக் கீழே இருப்பதால், அதன் வீரியமும் குறைக்கப் படுகிறது!

செர்நோபிள் வெடி விபத்தின் கோர விளைவுகள் மனிதர் செய்த பல தவறுகளால் ஆரம்பமாகிப் பெருகின! RMBK-1000 அணு உலை மாடல் முதலிலே அறியப் பட்ட பல டிசைன் பழுதுகளோடு கட்டப் பட்டது! சோதனை செய்யும் போது, சுய இயக்கப் பாதுகாப்பு முறைப்பாடுகள் நீக்கப் பட்டு, விரைவாக மீறும் அணு உலையைக் கட்டுப்படுத்த மாந்தர் தாமாகக் கையாள முயன்றதால் நிகழ்ந்தது! அபாயத் தடுப்பு வெப்ப நீக்க ஏற்பாடுகளும் சோதனைக்காக ஒதுக்கப் பட்டதால் விபத்து நேர்ந்தது! நிச்சயமாக அந்தக் கோர விபத்து, பாரதத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பழைய கனநீர் அணு உலைகளிலும், உருவாகும் புதிய கனநீர் அணுமின் உலைகளிலும் ஒருபோதும் நிகழவே நிகழாது!

500 MWe கனநீர் அணு உலைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்

2001-2002 நிதி ஆண்டுக்கு அணுசக்திப் பொதுத் துறையகம் [Nuclear Power Corporation, Ltd (NPCL)] 154.9 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ள தாகத் தனது ஆண்டு நிதிக் கணக்கு அறிக்கையில் வெளியிட்டுள்ளது! அப்பெரும் லாபத் தொகை அளித்த 13 அணுமின் உலைகளில் (170-200) MWe ஆற்றலில் சிறப்பாக இயங்கியவை 11 அழுத்தக் கனநீர் அணுசக்தி நிலையங்கள்! ஐயம் எதுவு மின்றி 200 MWe கனநீர் அணுமின் உலைகள் பாதுகாப்புடன் உறுதியாக மின்சாரம் அனுப்பும் நிலையங்களாக பாரதத்தில் நிரூபணமாகி நிலை பெற்று விட்டன! அந்த ஊக்கமும், உறுதியுமே அடுத்துத் தாராப்பூரில் 500 MWe கனநீர் அணுமின் உலைகளை அமைத்து, மாபெரும் மின்சக்தி பரிமாறும் நிலையங்களாக உருவாக்கப் போகின்றன!

2002 ஆண்டில் தயாராகும் 2720 MWe ஆற்றல் திறமையிலிருந்து, 2020 ஆண்டுக்குள் 20,000 MWe ஆற்றலை மிகைப் படுத்தப் பல 500 MWe அணுமின் நிலையங்களை நிறுவனம் செய்தால் திட்டங்கள் நிறைவேறும் என்பது உறுதியான கருத்து. அதே சமயம், தற்போது சென்னைக் கல்பாக்கத்தில் உருவாகப் போகும் 500 MWe முன்னோடி வேகப் பெருக்கி அணுமின் உலை [Prototype Fast Breeder Reactor] அடுத்த பத்து ஆண்டுக்குள் வெற்றிகர மாக இயங்கி, முழு ஆற்றலில் மின்சாரம் பரிமாறப் போகிறதா என்பது ஐயப்பாட்டில் உள்ள ஒரு மெய்ப்பாடு! அவ்வாறு தொடர்ந்து மின்சக்தி தரவில்லை யென்றால் அடுத்து 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட பூத வேகப் பெருக்கி அணுமின் உலைகள், இந்தியாவில் அமைக்கப் படப் போவதில்லை! அவை விட்டுச் செல்லும் இடத்தை, இந்தியாவில் 500 MWe அழுத்தக் கனநீர் அணுமின் உலைகள் ஈடு செய்துவிடும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்!

தாராப்பூரில் பெறும் அனுவத்தைப் பயன்படுத்தி 2003 ஆம் ஆண்டில் 500 MWe பேராற்றல் கொண்ட நான்கு கனநீர் அணுமின் உலைகளை ராஜஸ்தானில் அமைக்க எதிர்கால முன்னோக்குத் திட்டங்கள் உருவாகி உள்ளன. அவை யாவும் 2009-2011 ஆண்டுகளில் சீரும் சிறப்புடன் இயங்கி மின்சக்தியைப் பேரளவில் உற்பத்தி செய்யும் என்பதை உறுதியாக நாம் எதிர்நோக்கலாம்.

தகவல்கள்

1. India ‘s 500 MWe Pressurized Heavy Water Reactors By: A SanathKumar Director [Engg], NPCIL.

2. Role of Indigenous Research & Development in Setting up Pressurized Heavy Water Reactors in our Country By: Dr. Y.S.R. Prasad Chairman & Managing Director, NPCIL.

3. Utility Industry Interaction in the Indian Nuclear Power Program By Dr. Y.S.R. Prasad. CMD.

4. Engineering Safety in Nuclear Power Plants By: S.S. Bajaj.

5. Economics of Nuclear Power in India By: Professor Yoginder Alagh, Union Minister of State.

**************************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா