சூரியா
பாபா வெளிவந்து இஇரண்டு நாட்களே ஆகின்றன, அதன் வெற்றி தோல்விகளை இப்போதே சொல்ல முயல்வது அவசரக்குடுக்கைத்தனம்தான். ஆனால் ஒன்று தெளிவாகிவிட்டது அது ஒரு தோல்விப்படம். படத்தின் முதற்பகுதியில் விசிலடித்து ரகளை செய்யும் அதிதீவிர ரசிகர்கள் கூட பிறகு அமைதியாகி நெளிய ஆரம்பித்துவிடுகிறார்கள். சென்னையின் மூன்று தியேட்டர்களில் போய் கணக்கெடுத்து பார்த்த அனுபவமுள்ள வினியோகஸ்தர்கள் இதன் மொத்த வசூல் எவ்வளவு என்றெல்லாம் கணக்குபோட்டு சொல்லிவிட்டார்கள். இஇண்ட்ஸ்டிரியுடன் தொடர்புள்ள எல்லாருக்கும் இன்று இ இதுதான் பேச்சு .எதிர்பார்த்ததுதானே என்று ஒரு எண்ணம் . அப்போதே சொன்னேனே என்று சிலர் . ஆகா என்று சிலர் ஷாம்பேன் புட்டி உடைத்தார்கள் என்கிறார்கள்.அதெல்லாம் வம்புகள்.நான் இதன் சில அடிப்படைப் பாடங்களை பற்றித்தான் பேசப்போகிறேன். முழுக்கமுழுக்க பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில்
பாபா படத்தின் பெயரை ரஜனிகாந்த் அறிவித்தபோது தினகரன் மாலைமுரசு மாலைமலர் நாளிதழ்களில் அதுதான் தலைப்புசெய்தி. தினமலர் தினத்தந்தி நாளிதழ்களில் இரண்டாவது தலைப்புசெய்தி அது . இந்த ஒரு படத்தைப்பற்றி மட்டும் வந்த மொத்த கட்டுரைகள் 250 க்கும் மேல் என்கிறார்கள் . ஆனந்த விகடன் போன்ற பாரம்பரியம் மிகுந்த பத்திரிகைகள் , குமுதம் போன்ற விற்பனை மிகுந்த பத்திரிகைகள் இந்த படம் பற்றி தொடர்கட்டுரைகளை வெளியிட்டன. பாபா கதை என்ன என்ற மர்மம் பல வாரங்கள் அலசப்பட்டது . அதில் நடிப்பவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் . பிறகு அதன் ஷூட்டிங் தகவல்கள் .மூன்றுமாதம் எல்லா தமிழ் மீடியாக்களும் பாபாவைப்பற்றி மட்டுமே பேசின .குஜராத் கலவரம் கூட இரண்டாம்பட்ச செய்தியகவே இருந்தது .
பாபா படத்தை ஒரு ப்ராடக்ட் என்று கொண்டால் இந்த விளம்பரம் அதற்கு தேவைக்குத்தனா ? பாபா வின் செலவு 20 கோடி என்றார்கள் .இப்போது படத்தைபார்க்கும் போது எவ்வளவு தாராளமாக செலவு செய்தாலும் 10 கோடியை தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது .நேரடியான விளம்பரச்செலவு மிக மிக குறைவு, அதிகபட்சம் ஒருகோடி அவ்வளவுதான். ஆனால் பத்திரிகைகள் அளித்த விளம்பரத்தை பண அடிப்படையில் மதிப்பிட்டால் [அதாவது விகடனுக்கு ஒரு பக்கத்துக்கு இவ்வளவு கட்டணம் என்ற அடிப்படையில் பார்த்தால் ] எத்தனை குறைத்து மதிப்பிட்டாலும் இருபது கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நாடு முழுக்க சின்னஞ்சிறு கிராமங்களில் கூட வண்ண சுவரெழுத்துக்கள் எழுதப்பட்டன. சென்னை குரோம்பேட்டையில் மட்டுமே 700 சுவரெழுத்துக்கள் . இவற்றையும் பணத்தால் மதிப்பிட்டால் எப்படியும் 30 கோடி வரும் . இவை செலவல்ல , முதலீடுதான். அதாவது இவை பணமாக மாறக்கூடியவை .இந்தப்பணம் எங்கு போகிறது ? வேறு எங்கே படத்தில் தயாரிப்பாளரான நடிகருக்குத்தான்.
ஹார்லிக்ஸ் அல்லது பெப்ஸி இவ்விளம்பரத்தை 50 கோடி ரூபாயை அள்ளிவீசித்தான் அடையமுடியும்,அப்போதுக்கூட இந்த கவனத்தை பெற முடியாது .இந்த விளம்பரம் எப்படி கிடைக்கிறது ? நடிகர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் .அவரது ரசிகர்கள் செய்த விளம்பரச்செலவுகள் எதிர்கால அரசியல் லாபத்துக்கான முதலீடுகள்.பல இடங்களில் உள்ளூர் பணமுதலைகள் லட்ச ரூபாய் வரை செலவிட்டதாகச் சொல்கிறார்கள் . அதாவது ரஜனி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு பணமாக மாறி கொண்டே இருக்கிறது .
அதை அவர் எப்படி பணமாக்கினார் ? பாபா 86 கோடிக்கு வியாபாரமாகியிருப்பதாக சொன்னார்கள் . 100 கோடி என்பது ஒரு கிசுகிசு .குறைத்து பார்த்தால்கூட 50 கோடி . இதை வாங்கிய வினியோகஸ்தர்களில் இருவர் தவிர பிறர் உடனே மறுவிற்பனை செய்து கோடிகளை சேர்த்துக் கொண்டார்கள் . அடுத்தகட்ட வினியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு மொத்தமாக பணம் பேசி விற்று லாபம் கண்டிருக்கிறார்கள் . திரையரங்க உரிமையாளர்கள் பெரும்பாலோர் ஒருநாள் காட்சிக்கு ஒரு லட்சம் என்ற கணக்கில் முதல் இருபது நாள்களை சில்லறையாக விற்று போட்ட பணம் பார்த்துவிட்டார்கள் . பல இடங்களில் ரஜனி ரசிகர்கள் சொத்து நகைகளை விற்று லட்சங்களை புரட்டி ஒரூநாள் இரண்டுநாள் ஷோக்களை வாங்கியிருக்கிறார்கள். ஒருநாள் ஆறு ஷோ .ஒரு டிக்கெட்டுக்கு நூறு முதல் 500 வரை . உட்காரும் சீட்டுகளுக்கு மேலாக நின்றுபார்க்கும் அதேயளவுக்கு கும்பல்களையும் ஏற்றினால் ஒரே நாளில் இரண்டு லட்சம் என்பது கணக்கு . ஆனால் முதல்நாளிலேயே தெரிந்துவிட்டது .முதல் ஒரு வாரம் தாண்டினால் ஒரு நாளில் ஐம்பதாயிரம் கிடைத்தாலே அதிகம் .
இதிலே பெரிய லாபம் நடிகருக்கும் மறுவிற்பனை செய்த வினியோகஸ்தர்களுக்குந்தான் . தியேட்டர் உரிமையாளார்களுக்கு நஷ்டமில்லை ,சிறு லாபமும் வரலாம். மிகப்பெரிய நஷ்டம் வருவது காட்சிகளை வாங்கிய சிறிய அடிமட்டஆட்களுக்குத்தான். இதோ ரஜனிகாந்த் அடுத்த படத்தை அறிவித்துவிட்டார் .அது நஷ்டமடைந்தவர்களுக்கு சிறு ஆறுதலாக இருக்கும்.ஆனால் அதெல்லாம் சினிமாவிலேயே உள்ள வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குத்தான் . ஐந்து லட்சம் பத்து லட்சம் என்று பணத்தை இழந்த சிறு வினியோகஸ்தர்கள் இனி சினிமாபக்கமே தலைவைத்து படுக்கமாட்டார்கள்.
ஏன் இந்த சினிமாவுக்குப் புதிய வினியோகஸ்தர்கள் இப்படி பெரும்பணத்தை கொண்டுபோய் கொட்டினார்கள் ? மொத்தமாக பார்த்தால் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் இவர்களால் கொட்டபட்டிருக்கிறது . என்னதான் மெகா படம் என்றாலும் ஒருஎல்லை இருக்கிறது .தமிழக சனங்கள்தானே பார்க்கவேண்டும். ? எந்த வியாபாரத்திலும் அதன் முந்தைய அனுபவங்களை வைத்து ஒரு ரியலிஸ்டிக்கான கணக்கு போட்டு பார்ப்பார்கள்தானே ? கண்ணைமூடிக்கொண்டு இப்படி போய் விழ வைத்த சக்தி என்ன ? அதிபயங்கரமான விளம்பரம்தான் . அதுமட்டுமல்லாது தமிழக அரசு தியேட்டர் உரிமையாளார்களே டிக்கெட் தொகையை தீர்மானிக்கலாம் என்று கொடுத்த சலுகை . ஆனால் எப்படி என்ன செய்தாலும் ஒரு சினிமா 400 கோடி சம்பாதிப்பது அடி முட்டாள் கூட கற்பனைசெய்ய முடியாத அபத்தம்.
இதற்கு சமானமான வேறு ஒரு அபத்தமும் இங்கே உள்ளது . மிக அதிகபட்ச லாபம் தரும் கம்பெனி ஷேர்களை விட மூன்றுமடங்கு வட்டி தருவதாக சொன்ன ஃபைனான்ஸ் கம்பெனிகள்தான் அது . அதிபயங்கரமான விளம்பரம் மூலம் அதை ஜனங்களை நம்பவைத்தார்கள் . ஜனங்கள் பணத்தை கொண்டுபோய் கொட்டினார்கள் . யார் சாப்பிட்டார்கள் .ஆமாம் பாபாவும் ஒரு ஃபைனான்ஸ் ஏற்பாடுதான்.
இதிலே நாம் கவனிக்கவேண்டிய விசயம் பத்திரிகைகளின் பங்கு . ஒரு பத்து வருஷம் ஃபைனான்ஸ் கம்பெனி விளம்பரப் பணமே எல்லா பத்திரிகைக்கும் தீனி போட்டது . பிறகு ஃபைனான்ஸ் கம்பெனிகள் மூடியதைப்பற்றிய பரபரப்பு செய்தி ,பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்கதை என்றெல்லாம் போட்டு காசுபார்த்தன இவை . விளம்பரம் மூலம் அந்த மோசடிக்கு உடந்தையாக இவை இருந்தன. மோசடிப்பணத்தில் மூன்றில் ஒன்று இவற்றுக்குத்தான் வந்தது !பாபா மீது ஒரு ஆர்வம் ஜனங்களுக்கு இருந்தது உண்மை. கருணாநிதி ஓய்ந்து போய் இருக்கும்போது ஜெயலலிதா வுக்கு எதிரான ஒரு சக்தியாக சிலர் ரஜனியாக கண்டார்கள் .இதை அறிந்த பத்திரிக்கைகள் வேண்டுமென்றே பரபரப்பை கிளப்பின . ஒரு செய்தியை தொடர்ந்து போட்டாலே அது பெரிய செய்தி ஆகிவிடுகிறது .ஆகவே இதிலும் பத்திரிகைகளுக்கு லாபம்தான்.
ரஜனியிடம் பாபா கணக்கில் ஒரு 100 கோடி வள்ளிசாக போய்சேர்ந்துவிட்டது . ஓம்! பாபாய நமஹ! [மிருகி முத்திரை காட்டிக் கொள்ளவும்]
(ஒரு வாக்கியம் நீக்கப் பட்டுள்ளது – திண்ணை)
suurayaa@rediffmail.com
- மின்மினிப் பூச்சிகள்
- சித்தார்த் வெங்கடேசன் கவிதைகள்
- பல வகையான அமீபா
- அன்பும் ஆசையும் (எனக்குப் பிடித்த கதைகள் -23 -முல்க்ராஜ் ஆனந்த்தின் ‘குழந்தை மனம் ‘)
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- சுந்தர ராமசாமிக்கு அன்புடன்
- மு.தவின் மரணம்
- வயதானவர்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள்
- பூமகளே! மன்னித்துவிடு!
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- கோபம் எதற்கு ?
- சில முற்றுப் புள்ளிகள்
- ஆர்வம் அபூர்வம்
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )
- கனவும் வாழ்வும்
- தாகம்
- மின்னுயர்த்தி
- பாபா :முந்நூறுகோடி மோசடி
- இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா
- பங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)
- ஏதோ எனக்குத் தெரிந்தது …..
- கலைகளும் கோடம்பாக்கமும்
- பிறந்த நாள் கொண்டாட்டம்
- சஞ்சிவினி மலைகள்