பாத்திரம்…

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

சேவியர்.


கைகளில் புழுதிப் பிரவாகம்,
அழுக்குகளால் நனைக்கப்பட்ட
கசங்கிய ஆடை,
தடதடக்கும் ரயில் நிலையத்தில்
உட்கார்ந்திருக்கிறான் அவன்.

தலை முடி அலங்கோலமாய்
அசைந்து கொண்டிருக்கிறது…
கைகளில்
வறுமையின் அடையாள அட்டையாய்
தகரப் பாத்திரம்.

நெரிசல் நெரிசலாய்
வரிசை கலைந்த பரபரப்புப் பயணிகள்.

சுடச்சுட செய்திகளோடு
குளிர் காலையில்
வெற்றுக்கால் சிறுவர்கள்.

சத்தமாய் நகரும்
இரு சக்கர வண்டிகள்…
குப்பை விரித்து காத்திருக்கும்
இரயில் நிலைய நடைபாதை.

ஒவியமாய் புருவம் விரித்து
ஒய்யார தேவதையாய்
நீல வான உடையில் ஓர் வானவில்
மெல்ல மெல்ல நெருங்கி…

அவன் முகம்
ஆச்சரியத்தின் எதிர்பார்ப்புக்களில்
விழித்தெழுந்த கணத்தில்…

கைகளின் தங்க வளையல் கழற்றி
தகரத் தட்டில் போட்டுச் சிரிக்க,
டைரக்டரின் உதடுகள் விடுத்தது
‘கட் ‘ எனும் சத்தம்.

காட்சி முடிந்து
கூட்டம் கலைய..
அனாதையாய் கிடந்தது
அந்த தகரப்பாத்திரம்..

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்