பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

கோபால் ராஜாராம்


கோல்கொடாவின் மையப் பகுதியில் ஒரு மாடியறை. சற்று விசாலமான அறையில் 20 லிருந்து நாற்பது பேர் உட்காரலாம். நாற்காலிகள் சுற்றி போடப்பட்டிருக்கின்றன. நாடக அரங்கின் உள்ளேயே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிற முறையில் நிகழ்த்துனர்கள் சுற்றிவர நிகழ்த்துநர்கள் செல்ல வழி விட்டு நாற்காலிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. நாடகம் பார்வையாளர்கள் நடுவிலும் சுற்றிலும் நிகழ்கிறது. இது இந்த திருப்பம், இது இந்தத் திருப்பம் என்று நாடக நடிகர் ஒவ்வொரு திருப்பமாக அந்த வட்ட அரங்கில் செல்லும் போது ஊர்வலம் ஆகிறது. இது நான் முன்னே பார்த்த எந்த நாடகம் போன்றதும் அல்ல. திரை இல்லை, மேடை இல்லை. மைக் இல்லை, ஒலி ஒலி அமைப்புகள் எதுவும் இல்லை. நாடக நடிகர்கள் உக்கிரமான நடிப்பு பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில், மிக நெருக்கமாக நிகழ்கிறது. நாடகத்தின் ஆதி ரூபத்தை சென்றடைந்த அதி நவீன நாடகமாக இது அமைகிறது. சொல்லப் போனால் எது இல்லை என்பது பாதல் சர்க்கார் நாடகங்களின் அடையாளம் இல்லை. எது இருக்கிறது என்பது தான் பாதல் சர்க்காரின் நாடகங்களின் அடையாளம். இதன் நிராகரிப்பு ஒரு அங்கீகாரத்தின் குறியீடு. மனித உடல்களின், வெளிப்பாட்டின் சாத்தியங்களைக் குறித்த அங்கீகாரம். இதன் பொருள் நாடக நடிகர்கள் அமேச்சூர்கள் என்பதல்ல. அவர்கள் தொழில் முறை நடிகர்களைக் காட்டிலும் திறமையும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள். அதன் பிறகு பாதல் சர்க்காரிடம் உரையாடி அவர் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டு அவரிடம் சென்ற போது, அந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழ் கலாசார வரலாற்றில் எந்த முக்கிய இடம் வகிக்கப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அதன் பின்பு மொழி பெயர்ப்புக் கையெழுத்துப் பிரதியை அன்னம் மீராவிற்கு அனுப்பி வைத்தேன். அன்னம் பதிப்பக அது வெளிவந்த பிறகு பாதல் சர்க்காரின் நாடகங்களின் கையெழுத்துப் பிரதியாக ஊர்வலம், ஸ்பார்டகஸ் போன்ற நாடகங்கள் ஞானி, மு ராமசாமிக்கு அனுப்பி வைத்தேன். ஊர்வலம் ஞாநியினால் “தேடுங்கள்” என்ற பெயர் மாற்றம் செய்யப் பட்டு தொடர்ந்து நிகழ்த்தப் பட்டு வந்திருக்கிறது. ஸ்பார்டகஸ் நிஜ நாடக இயக்கத்தின் மு ராமசாமியினால் தொடர்ந்து நிகழ்த்தப் பட்டது.

கொல்கொட்டாவின் நாடகம் , சினிமா கலாசாரம் எல்லாவற்றையும் பருகித் தீர்த்துவிட வேண்டும் என்ற வெறியுடன் நான் ஒவ்வொரு அரங்கிலும் சென்று ஒரு தவம் போல உள்வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. ருத்ரப் ரசாத் சென் குப்தா வின் “புட்பால்” , திருப்தி மித்ரா (ஷம்பு மிதராவின் மனைவியார்) நடத்திய ஓர் கதாபாத்திரமே கொண்ட நாடகம், 150 ஆண்டுகளாய் நடந்து வரும் “நடி விநோதினி ” என்று பலவாறான நாடகங்கள் ஆனால் அவற்றின் எல்லாவற்றிலிருந்தும் மாறுபட்ட அனுபவம் பாதல் சர்க்காரின் நாடக அனுபவம். தன அரங்கினை “முற்ற அரங்கு” என்று அவர் அழைத்தார். முன்றாவது தியேட்டர் என்று பெயரிட்டு அது பற்றி தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.

கல்கத்தாவில் எழுபதுகளின் பிற்பகுதியில் வசிக்க நேர்ந்த எனக்கு பாதல் சர்க்காரின் வாடகங்க்களைப பார்த்தது ஊர் அதிர்ச்சி தரும் அனுபவம்.

இந்தியாவில் நாடகக் கலையின் “நவீன” உருவம் பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு தான் தொடங்குகிறது என்று கொண்டால், அதன் பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வடிவில் அமைந்தது. பார்சி நாடகக் குழுக்களின் பாதிப்பில் எழுந்த தமிழ் நாடகங்களும் சரி , மராத்தி நாடகங்களும் சரி, வங்காளி நாடகங்களும் சரி அவற்றின் பாரம்பரிய நாடகக் கலையினை மறு கண்டுபிடிப்புச செய்து அதன் வேர்களுடன் நவீன நிகழ்வுகளை இணைக்க பலகாலம காத்திருக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டின் கூத்து வடிவம் போன்று, கர்நாடகத்தின் யட்ச காண போன்று வங்காளத்தில் ஜாத்ரா இன்றும் கிராமியக் கலை வடிவமாக சிறப்புப் பெற்றிருக்கிறது.

பாதல் சர்க்காரின் நாடக ஆக்க வாழ்க்கை மேடை நாடகத்தில் தான் தொடங்கியது. அவருடைய சிறப்புப் பெற்ற “ஏவம் இந்திரஜித்” மேடை நாடகமாக எழுதப் பட்டது தான். எக்சிச்டேன்ஷியாலிசம் தத்துவப் பின்னணி பரவலாய்க் கொண்டாடப் பட்ட காலகட்டத்தில் எழுந்த அலையின் நாடக வெளிபாடுகள் இவை. ஹிந்தியில் மோகன் ராகேஷ் , மராத்தியில் விஜய் தெண்டுல்கர், கன்னடத்தில் கிரீஷ் கார்னாட் என்ற சிறப்பு வரிசையில் பாதல் சர்க்கார் இடம் பெறுகிறார். மற்ற மொழிகளைக் காட்டிலும் நாடக இயக்கம் மிக வலுவாகவும், பரவலாகவும் உள்ள வங்காளத்தில் பாதல் சர்க்காரின் இடம் தனித்தன்மை பெற்றது. ஜாத்ராவிளிருந்தும், உலகின் நவீன நாடகப் போக்கான “அன்னியோனிய தியேட்டர்” -லிருந்தும் அவர் உருவாக்கிய “ஆங்கண் மஞ்ச” (முற்ற மேடை) முற்றிலும் நாடகம் பற்றிய கண்ணோட்டத்தினை மாற்றியமைக்க கோருகிறது.

தமிழ்நாட்டுடன் பாதல் சர்க்கார் கொண்ட உறவு அபூர்வமானது . அவரைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட “நாடகப் பட்டறை”யில் பங்கு பெற்ற பலரும் இன்றும் நாடகம், இலக்கியம் சினிமா என்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுபதுகளின் இறுதியில நடந்த பட்டறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் பல இடங்களில் அவரைக் கொண்டு பட்டறைகள் நிகழ்த்தப் பட்டன. பாதல் சர்க்கார் சமூகப் பார்வை கொண்ட , ஆனால் கட்சி சார்ந்து இயங்கும் குழுக்களுக்கு மாற்றாக செயல்படும் பல கலாசாரக் குழுக்களுக்கு பெரும் தூண்டுதலாக அவர் விளங்கினார். திருச்சியில் நிகழ்த்தப் பட்ட பாதல் சர்க்கார் நாடக விழா தமிழ் நாடகப் பரப்பில் பாதல் சர்க்காரின் பாதிப்பை மிக வலுவாக முன்வைத்தது. மு ராமசாமியின் “ஸ்பார்டகஸ்” , ஞானி யின் “ஊர்வலம்” , திருச்சி நாடகக் குழுவின் “ஏவம் இந்திரஜித்” என்று பல நாடகங்கள் நிகழ்த்தப் பட்டன. ஆங்கண் மஞ்ச மற்றுமின்றி மேடை நாடகங்களும் நடத்தப் பட்டன.

பாதல் சர்க்கார் தன்னுடைய எண்பத்து ஆறாவது வயதில் மறைந்து விட்டார்.

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்