இரா முருகன்
——–
கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக வேண்டும்.
மாதவனுக்கு இதுதவிர உலகில் வேலையேதும் இல்லை. என்றாலும், உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. தூசி தட்டிய பூகோள உருண்டையை அவ்வப்போது கையால் சுழற்றிக்கொண்டு, மேலே எச்சில் தெறிக்க அய்யங்கார் பாடம் நடத்தியபோது சொன்னபடிக்கு. இட வலமாகவோ, வல இடமாகவோ.
இந்த இயக்கம் சற்று நேரத்தில் நின்று விடலாம். அதற்குள் செய்ய வேண்டியதெல்லாம் பணிக்கரையும் பிளாஸ்க்கையும் குறித்துத்தான்.
சாயங்காலம் மெல்ல இருட்டிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்க் உள்ளே ஒன்றும் இல்லாமல் லொட லொட என்று ஆடியது. கிளம்பி வெகுதூரம் நடந்து வந்த பிறகுதான் பிளாஸ்க் தோளில் மாட்டியிருந்ததை உணர முடிந்தது. ஒரு கணம் அதிர்ந்து நின்றுபோய் அப்புறம் தொடர்ந்த போது கண் நிறைந்து போனது. மடித்துக் கட்டிய வேட்டியும், கன்னத்தில் வழியும் கண்ணீருமாக அந்தப் புறநகர்த் தெருவில் நடந்தபோது, பொது இடங்களில் நடமாட்டம் குறித்த எந்த நாகரீக விதிமுறைகளுக்கும் மனதில் இடம் இல்லை.
எல்லோருக்கும் எல்லாம் தெரியும். இந்தச் சோகமும் துக்கமும் பற்றி அவர்களாகவே அறிந்திருப்பார்கள். கல்யாணியை ஆஸ்பத்திரியில் வந்து பார்த்துவிட்டுப் போனவர்கள் எத்தனை பேர்.
கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களோடு வந்து, குரலில் கரிசனம் காட்டி, விண்ணென்று சுற்றிச்சுற்றி வரும் மலையாளி நர்ஸ்களை மிக அருகாக உன்னிப்பாகப் பார்த்து, ‘டாக்டர் சொன்னபடி நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் ‘ என்று சமாதானமும், ‘என்ன உதவி வேணுமானாலும் கேளுங்க ‘ என்று உபசாரமும் சொல்லிவிட்டு, உடனடியாக வறுத்து அரைத்த காப்பிக் கொட்டையோ, முட்டைக்கோசோ வாங்கிக் கொண்டுவந்த பையோடு, பஜார்ப் பக்கம் நடந்து போனவர்கள் ஏராளம்.
கல்யாணியை ஓர் உடலாக மாத்திரம் கொண்டுவந்தபோது, வாசலில் கூடிக் கலைந்து போனவர்கள் நிறைய. ஹிந்து ஸ்போர்ட்ஸ் பேஜில், ‘கல்யாணி, ஒய்ஃப் ஓஃப் மாதவன் எக்ஸ்பயர்ட் ஆன் ‘ விளம்பரம் பார்த்து வந்துவிட்டுப் போனவர்களாகவும் இருக்கலாம். எல்லோருக்கும் தெரியும். தெருவில் தினசரி போத்தி ஓட்டல் காப்பியும், பூவரச இலையில் பொதிந்த இட்லியுமாக ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தபோது சுட்டிக்காட்டி, தெரிந்தவர்கள் தெரியாதவர்களிடம் கிசுகிசுத்திருக்கலாம்.
மூன்று மாதமாக பிளாஸ்க் ஒரு அத்தியாவசியப் பொருளாக மாறி இருந்தது. வென்னீர், காப்பி, பால் இதில் ஏதாவது கொண்டு போக வேண்டிய அவசியம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு இறங்கும்போதும் நேரிட்டது. பழக்க வசத்தால் செருப்புக்குள் நுழைக்கிற கால்களோடு, கூடத்துச் சுவரில் மாட்டி இருந்த பிளாஸ்க்குக்காகக் கைகள் நீளுவதும், அனிச்சையாகிப் போனது.
நேற்றைக்குச் செருப்பில்லை. வெறுங் கால்கள் தகித்தாலும், உணர்ச்சி மரத்துப் போக, கையில் தீச்சட்டியுடன் மாதவன் முன்னே நடந்துபோக, அந்தச் சிறிய ஊர்வலம் கடைவீதி நெரிசல்களையும், பஸ்ஸுக்காகக் காத்திருப்பவர்களையும், நிறுத்தாமல் ஒலி எழுப்பிக் கொண்டு விரைந்து போன கார்களையும் கடந்து போனது. கடைசியில் கல்யாணி நாலுபேர் தோளில் சிவப்புப் புடவையும், அவசரமாக முகத்தில் அப்பிய குங்குமமும், ரோஜாப்பூ மாலையுமாக ஆடிஆடி வந்து கொண்டிருந்தாள்.
– ‘மாப்பிள்ளை ஜானவாசத்துக்கு ரெடியா ? ‘
‘நான் வேண்டாம்னு முன்னாலேயே சொல்லியிருந்தேனே. ‘
‘ஒரே ஒரு நாள் தான். எங்க மனுஷா எல்லாம் ஆசை ஆசையா இருக்கா. ‘
‘அப்ப அவங்களை வேணா இந்தக் காரிலே போகச் சொல்றதுதானே. ‘
பஸ்ஸில், காரில் போகிறவர்கள் எல்லாம் கேலியாகப் பார்த்துக்கொண்டுபோக, பக்கத்தில் மூக்கை உறிஞ்சிக்கொண்டு குழந்தைகள் ரகளை செய்ய, நடுத் தெருவில் காரில் ஊர்ந்து கொண்டு அந்த ஊர்வலம் நடக்கவில்லை. –
கூடச் சேர்ந்து புத்தகம் போட்ட போஸ்ட் ஆப்பீஸ் நண்பர்கள் இது புரட்சிதான் என்று திட்டவட்டமாக அறிவித்துப் பாராட்டிவிட்டுப் போனார்கள். நேற்றைக்கு வந்து மவுனமாகக் கையை அழுத்திப் போனார்கள். ‘நண்பனின் மனைவி இறந்தபோது ‘ என்றா புதுக்கவிதை அடுத்த மாதம் எந்தப் பத்திரிகையிலாவது வரலாம்.
‘வடக்குப் பார்த்து நமஸ்காரம் பண்ணிட்டு இதைக் கையில் பிடிச்சு திரும்பிப் பார்க்காம நடங்கோ ‘.
தீச்சட்டி கனன்று எரிய யாரோ விசிறியபடி வந்தார்கள். கை நாளங்கள் முறுக்கேற, சட்டி நழுவிவிடாமல் கவனமாக நடந்தபோது கல்யாணி சொல்கிற மாதிரி இருந்தது – ‘சித்த மெதுவாகத்தான் போங்களேன். உங்க ஓட்டத்துக்குச் சரியா என்னாலே வரமுடியலை. ‘
‘ரொம்ப வீக்காக இருக்காங்க. இப்ப கர்ப்பம் தாங்கறதே கஷ்டம்தான். ஜாக்கிரதையா இருக்கணும். நெறைய ரெஸ்ட் வேணும். டானிக் எல்லாம் எழுதித் தரேன். ‘
‘டெலிவரி சமயத்துலே கஷ்டம் எதுவும் இருக்குமா ? ‘
‘இருக்கக் கூடாதுங்கறதுக்குத்தான் இந்த முன் ஜாக்கிரதை எல்லாம். நீங்க எங்கே வேலையா இருக்கீங்க ? ‘
‘பேங்க்லே ‘
‘எனக்கு லேபரட்டரி வைக்க லோன் அப்ளை பண்ணினா சாங்ஷன் ஆகுமா ? ‘
‘தெரியலை. முன்னே மாதிரி இல்லை இப்போ எல்லாம். அடுத்தாப்பலே எப்ப வரணும் ? ‘
அடுத்தாற்போல் வரவேண்டியதில்லை என்கிறதுபோல் எல்லாம் முடிந்துவிட்டது.
‘நேரமாயிடுத்து. இன்னிக்கு பாடியை வாங்கிண்டு போய் வீட்டுலேதான் வச்சுக்கணும். சம்ஸ்காரம் காலம்பறத்தான் முடியும். இதிலே ஒரு கையெழுத்துப் போடுங்க. ‘ – இயந்திரமாகக் கையெழுத்துப் போட்டான்.
கல்யாணி சுத்தமாக உடை உடுத்தி இருந்தாள். அழக்கூட சக்தியில்லாது மாமியார் விம்மினாள். ‘மாப்பிள்ளை, எங்க பொண்ணை இதுக்கா உங்க கிட்டே ஒப்படைச்சேன் ‘. மாமனார் அவள் வாயைப் பொத்திவிட்டுத் தானும் அழுதார். மாதவன் மனம் முழுவதும் வெறிச்சோடிப் போக, தன்னையே ஒரு பார்வையாளனாக உணர்ந்து கல்யாணியையே பார்த்துக்கொண்டு நின்றபோது, ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள் அழுதவர்களை மெதுவாகப் பிடித்து அழைத்துப் போனார்கள். மார்ச்சுவரி வண்டிக்கு உடலை எடுத்துப்போக ஸ்ட்ரச்சரைத் தள்ளிக்கொண்டு வந்தவர்கள் அவன் காலை மிதித்துக்கொண்டு போய், கல்யாணியைத் தூக்கிக் கொண்டார்கள்.
வியர்வை நாற்றம். ஊதுபத்தி நாற்றம். ஆஸ்பத்திரியிலிருந்து அள்ளி அடைத்துக் கொண்டு வந்ததில் டெட்டால் பாட்டில் கொட்டிய மேல்துண்டு குறுக்கே கிடந்த வெற்று மேலுடம்பிலிருந்து ஆஸ்பத்திரி நாற்றம். கைப்பையில் நானூற்றுச் சில்லறையும், மெடிக்கல் ஷாப் பில்களும், சின்னச் சின்னப் பொட்டலங்களாகய் ஏதேதோ கோயில் வீபுதிகளும். ஒரு டிபன் காரியர் பிசுக்குப் பிடித்து.
– நாக்கு உலர்ந்து, தலைமயிர் வறண்டு தலையணை முழுக்கப் பரந்து கிடக்கக் கல்யாணி ஈனஸ்வரத்தில் கேட்பாள் – ‘சாப்பிட்டேளா ? ‘ –
அவளுக்கு நேரமும் நாளும் கூடத் தெரியாத அந்தக் கடைசி நிமிஷங்கள். எல்லாக் கோயில் வீபுதிகளும் அந்த நெற்றியில் இட்டு அப்பி, திரும்பத் திரும்பத் துடைத்து நெற்றியே வெளிர் சாம்பல் நிறமாக.
– ‘பக்கத்து வீட்டு மாமி பால் வாங்கப் போறபோது கேக்கிறா, அது எப்படி உனக்கு மட்டும் குங்குமப் பொட்டு விடிகாலையிலே கூடத் தீத்தாமக் கச்சிதமா நிக்கறது ? சேர்ந்துதானே படுத்துக்கறேள் ? ‘ –
முந்தாநாள் ராத்திரி கல்யாணி மட்டும் வீட்டுக் கூடத்தில் விளக்கெல்லாம் எரியப் படுத்திருந்தாள்.
கொடுத்த பணத்தை பட்டை பெல்டில் முடித்துக் கொண்டு நேற்றுக் காலையில் மூங்கில், தென்னை ஓலையோடும், அதைப் பின்ன ஆட்களோடும் புரோக்கர் வந்தபோது – கல்யாண புரோக்கர் போல, இவன் சாவு புரோக்கர் – கல்யாணியைக் குளிப்பாட்டி நெற்றியில் குங்குமத்தை அப்பினார்கள்.
‘சார், எங்கே இந்தப் பக்கம் ? ‘
குரல் கேட்டு மாதவன் திரும்ப, சாவு புரோக்கர்தான். இவனுக்கு நூறு வயசு.
‘நாளைக்கு இளநீருக்கும், தென்னங் குருத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். சாஸ்திரிகளைக் கூட்டிண்டு காலம்பற வந்துடறேன். ஆறு மணிக்குக் குளிச்சிட்டு ரெடியாயிடுங்கோ. வரட்டுமா ? ‘
இவனுக்குச் சாவு என்பது தொழில் ரீதியான பத்துநாள் அல்லது மூன்றுநாள் காரியம். காலையில் அஸ்தி கரைக்கப் போனபோது சாஸ்திரிகள் வந்து சேரவில்லை. வியர்த்து விறுவிறுத்து, சைக்கிள் காரியரில், ஒரு கால் ஊனமான சாஸ்திரிப் பையனுடன் வந்து இறங்கிய புரோக்கர் அவனை, ‘அங்கே உக்காருடா ‘ என்றான். ‘பிரம்மஹத்தி, மந்திரம் சொல்லித் தொலையேண்டா. கிருஷ்ணா, நீ பொம்மை பண்ணு. ‘ – புரோக்கர் பரபரவென்று அலைய, மணலில் ஒரு பொம்மை உருவானது. அதுதான் கல்யாணியாம். பொம்மைக்கு ஈர்க்குச்சியால் வாய் வரைந்தபடி சொன்னான் – ‘வாயிலே சாதம் போடுங்கோ ‘.
– ‘பீச்சிலே பேல்பூரி சாப்பிட்டாகணும்னு எங்கேயாவது எழுதி வச்சிருக்கா என்ன ? தட்டிலே எல்லாம் மண்ணு வந்து விழறது. காசும் கொடுத்து மண்ணும் திங்கணுமா ? ‘ –
கல்யாணி, கல்யாணி .. இந்தப் புழுதியில் ஓட்டைச் சிரட்டையில், வேக விடுகிறேன் என்று பெயர் பண்ணி இவன் எடுத்துக் கொடுத்த மண்ணும் தண்ணீரும் அரிசியும்தான் உனக்கு விதிக்கப்பட்டதா ? இந்த அஸ்திக்கு மேல் யாரோ ஒருத்தன் சிரங்குக் கையோடு மண்ணைக் கட்டி நிறுத்திய பொம்மைதான் நீயா ?
சின்னதும் பெரிசுமாய்ப் பளீரென்று வெள்ளையாய், அஸ்திச்சூடு அடங்காது கையில் சுடுகிற எலும்புதானா நீ ? குடமும், குடத்தில் பாலும், பாலில் கரைகிற சாம்பலுமாக சமுத்திரக் கரையில், உள்ளே உள்ளே உள்ளே இறங்கி நடந்தபோது மேல் துண்டால் அணைத்த குடத்தை வந்த அலையில் மூழ்கவிட, கல்யாணி ஒரு கணத்தில் கரைந்து, காலில் சின்ன எலும்பாக மட்டும் முட்டி, அடுத்த கணம் சிதறிப் போனாள்.
‘சார், இங்கே கல்யாணின்னு ஒரு கிண்டர்கார்டன் ஸ்கூல் டாச்சர் வீடு தெரியுமா ? ‘
ஒரு ஸ்கூட்டர்காரன் நிறுத்தி விசாரித்தான். மாதவன் ஒரு வினாடி ஸ்தம்பித்துப்போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கல்யாணி. இந்தப் பெயரில் இந்த க்ஷணத்தில் லட்சம் பேர் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். சமைத்துக் கொண்டோ, டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, ஆப்பீஸிலிருந்து வந்த களைப்புத் தீரக் குளித்துக் கொண்டோ, குழந்தைக்கு எட்டாம் வாய்ப்பாடு சொல்லிக் கொடுத்துக் கொண்டோ. இருக்கட்டும், எல்லோரும் நலமாக இருக்கட்டும்.
இதோ, இந்த வீடுதான். ராஜரத்னத்தோடு இரண்டு வருஷத்துக்கு முன்னே ஒரு தடவை வந்திருக்கிறான். அவன் தான் கேசவப் பணிக்கரைப் பற்றிச் சொன்னான். இதே மாதிரி முன்ராத்திரி நேரந்தான். தெருவிளக்குக் கம்பத்துக்குப் பக்கத்தில் ஈசிசேர் போட்டு ஒரு கிழவர் தலையைத் திருப்பாமலேயே பின்னால் சுட்டி வழிகாட்டினார். பணிக்கர் எரணாகுளம் போயிருப்பதாக அப்போது வீட்டில் சொன்னார்கள்.
தெருவிளக்குக் கம்பத்தின் கீழே குழந்தைகள் ஏக இரைச்சலோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஈசிசேர் கிழவர் இன்னும் இருக்கிறார். வயதானவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். அவர்கள் ஈசிசேரும்.
வாசல் நடையில் ஒரு பெண் தூளியை ஆட்டியபடி ஒரு முக்கல் முனகல் சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் குழந்தையைத் தூங்க வைக்க முயற்சி பண்ணிக் கொண்டிருந்தாள். மாதவனைப் பார்த்ததும் பாட்டு நின்றது. இந்தப் பாட்டை அவன் கேட்டிருப்பான் என்று பட்டதாலோ என்னமோ கொஞ்சம் சிடுசிடுத்த குரலில் ‘யார் வேணும் ? ‘ என்றாள்.
‘கேசவப் பணிக்கர். ‘
‘உள்ளே இரண்டாம் கட்டில் முதல் வாசல்படி. ‘
அவள் துணியை ஒதுக்கி இவன் போக வழி ஒழித்துக் கொடுத்தாள். துணிக்குக் கீழே இருந்த மாதாந்திர நாவலை மிதித்துக் கொண்டு உள்ளே போகும்போது தூளிக் குழந்தை வீரிட்டது.
‘செருப்பைக் கதவோரம் விட்டுடுங்க ‘ – அந்தப் பெண்தான்.
கதவுப் பக்கத்தில் பெரிய செருப்புக் குவியல். முற்றத்தில் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருந்த பாத்திரங்களைத் தாண்டி இரண்டாம் கட்டில் கால் வைத்தபோது சடாரென்று மின்சாரம் நின்று போனது.
‘ஊறுகாய் ஜாடியை மூடுடி. மோர்க் கச்சட்டியை ஓரமா நகர்த்தி வை. சே, தினம் இதே தொந்தரவாப் போச்சு. சாப்பிடற நேரம் பாத்து அணச்சுடறான். லைட்டு வந்தப்புறம்தான் தோசைக்கல்லை அடுப்பில் போடுவேன். அழாம இருடி, சனியனே. ‘
எல்லார் வீட்டிலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரிச்சயமில்லாத, பசியோடு இருக்கிற ஜனக் கூட்டத்துக்கு நடுவே இருட்டில் சாப்பாட்டு வாடையை நுகர்ந்து கொண்டு அந்நியனாக நிற்கிற அபத்தம்.
மெதுவாக நகர்ந்து, முதல் கதவு இருக்கும் இடம் என்று வரும்போது பார்வையில் பட்டிருந்த இடத்தில் நின்று, ‘சார், சார் ‘ என்றபோது மாதவனுக்குத் தன் குரலே வித்யாசமாகப் பட்டது.
‘ஆராணு அது ? ராதே, டோர்ச் கொண்டு வரூ மோளே ‘
‘நான் .. நான் மாதவன். கேசவப் பணிக்கரைப் பாக்கணும். ‘
‘ஞானா அது. ஆரு அயச்சது நிங்ஙளெ ? ‘
‘ராஜரத்னம். அவசியம் பாக்கணும். ‘
பளிச்சென்று விளக்குகள் மீண்டும் எரிய, கேசவப் பணிக்கர் எப்போதோ பார்த்த சப் கோர்ட் சிரஸ்ததார் போல் கெச்சலாக, பாதி நரைத்த கிராப்பும், மூக்குக் கண்ணாடியுமாக நின்றார்.
‘எனக்குப் பேசணும் ‘.
இது போதாது என்றுபட, ‘உங்கள் மூலமாக ‘ என்றான் ஆங்கிலத்தில்.
‘சியான்ஸ் இன்னிக்கு முடியாது. ‘
எடுத்த எடுப்பிலேயே பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார்.
‘ராஜரத்னம் அனுப்பினார். ரொம்ப அவசரம் சார். ‘
‘ஏதானாலும் நாளைக்கு வாங்கோ. ‘
அவர் திரும்பவும் உள்ளே போக எத்தனிக்க, இதுவரை உள்ளே அடைந்து கிடந்த துக்கமெல்லாம் பீறிட்டு வெடித்துக் கொண்டு வர, மாதவன் அழ ஆரம்பித்தான்.
ஒரு பெரிய சுவரும், மதிலுமான கட்டிடத்துக்கு வெளியெ அவன். உள்ளே கம்பியில் தலை பதித்துக் கல்யாணி, ‘உங்களைத்தானே .. உங்களைத்தானே.. என்னோடு பேசுங்கோ ‘ என்கிறாள். ஒரு யாசகனாகத் தான் மன்றாட வேண்டிய நிலையில், வெட்கத்தை விடுத்து அவர் காலில் விழுந்தாவது மனதை மாற்ற வேண்டும் என்பதுபோல ஒரு அநாதைத்தனம் மனதில் அழுத்த அவன் அழுகை ஒரு விசும்பலாக ஆரம்பித்து மெல்ல உயர்ந்தது. பணிக்கர் இதைச் சற்றும் எதிர்பார்க்காதவராய் வேகமாய்த் திரும்பிவந்து அவன் தோளைத் தொட்டார்.
‘சார் .. என் ஒய்ஃப் .. முந்தா நாள் வென்ஸ்டேயன்னிக்கு இறந்து போய்ட்டா சார். இந்துவிலே பார்த்திருப்பீங்களே ஸ்போர்ட்ஸ் பேஜ் கீழே ரெண்டாவதா … நான் அவளோடு பேசணும் சார். ப்ளீஸ் சார் ப்ளீஸ் .. ‘
‘சார், சார் மிஸ்டர் நாராயணன் .. ‘
பணிக்கர் அவசரத்தில் பெயரைச் சரியாகக் காதில் வாங்கவில்லை. மங்கின பல்பும் லாம்ப்ஷேடும் ஒட்டடையுமாக இருந்த அந்த இரண்டாங்கட்டில் நின்று முன்பின் பரிச்சயமில்லாத ஓராள் அழுவதை அவர் வித்தியாசமாக உணர்ந்திருக்க வேண்டும்.
‘காலு கழுவி உள்ளே வாங்கோ. பீ கோம். என்னால் முடிஞ்சதைச் செய்யறேன். உங்க ஃபீலிங்க்ஸ் எனக்கு மனசிலாறது. கரைய வேண்டாம். மோளே, முரியில் விளக்குக் கத்திக்கு. பிளாஸ்டிக் மக் வெளிப்புறமா இருக்கு. காலு கழுவிட்டு வாங்க. ‘
யந்திரம் போல் மாதவன் அவர் காட்டிய இடத்தில் போய் நின்றான். ஒரு வாளியில் கொஞ்சம் போல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த குவளையில் நீர் சேந்திப் புறங்கால் நனைய ஊற்றிக் கொண்டான். யாரோ சொல்வதைச் செய்ய வேண்டும். எதையும் பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இத்தனை நாள் பழக்கத்தில் இது சுலபமாகப் பட்டது. மனதை வெறுமையாக, ஓர் ஆழ்ந்த தூக்கத்துக்கு முந்திய, நினைவு தப்புவதற்குமுன் அனுபவப்படும் கணங்களில் சித்தியாகும் அபூர்வ நிலையில் யாரோ சொல்லச் சொல்ல ..
‘ப்ள்ட் டெஸ்ட்டும் சீரம் டெஸ்ட்டும் பக்கத்து லாபிலே கொடுத்திட்டு வாங்க. ‘
‘இந்த பெட்ஷீட்டை உதறி விரிங்க. ‘
‘மெதுவாப் பிடிச்சுக் குப்புறப் படுக்க வைச்சு, பெட்பானை நகர்த்திட்டு வெளியே போய் நில்லுங்க. ‘
‘ஆப்பரேஷனுக்கு ஹஸ்பெண்ட் பெர்மிஷன் வேணும். இங்கே கையெழுத்துப் போடுங்க. ‘
‘இங்கே யாரும் அழக்கூடாது. ப்ளீஸ், எல்லோரையும் வெளியே கூட்டிட்டுப் போங்க. ‘
‘தொடையிலே தட்டிட்டு அப்ரதிக்ஷணமாச் சுத்தி வாங்கோ. அக்னியைக் கையில் எடுத்துக்குங்கோ. ‘
மாதவன் கை நடுங்க, நெஞ்சுக்கு உள்ளே இருந்து அடக்கி வத்த சோகமெல்லாம் மேலெழும்பி வெடித்துச் சிதறிக் கேவலாக உருவெடுக்க அக்னியை வாங்கி, ‘கல்யாணி .. கல்யாணி.. ‘
கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் மக் நழுவிக் கீழே விழுந்து தண்ணீர் சுற்றிலும் தெறித்துச் சிதறியது. பணிக்கர் உள்ளே இருந்து எட்டிப் பார்த்து, ‘பரவாயில்லே. அங்கேயே வச்சுட்டு வாங்க. மெதுவா வாங்க ‘ என்றார்.
நடையிலே ஈரக் கால்கள் மண்ணில் தரதரவென்று ஒற்ற மாதவன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
ஒரு பழைய மேஜை. மேலே மெழுகுவர்த்தி ஏற்றியிருந்தது. பணிக்கர் எழுந்து போய் ஜன்னலை அடைத்துவிட்டு, அப்புறம் கதவையும் சாத்தினார். கசகசவென்று புழுக்கமாக இருந்தது. ஓரத்தில் ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு, அலமாரியிலிருந்து ஒரு பலகையை எடுத்துக் கொண்டு வந்து மேஜையில் வைத்தார். ஆங்கில எழுத்துக்கள் பலகையின் நான்கு ஓரத்தையும் ஒட்டி வரிசையாக எழுதியிருந்தது. மாதவன் கையில் ஒரு பென்சிலையும் காகிதத்தையும் திணித்தார். அவர் வலது கை ஒரு குமிழை உருட்டியபடி இருந்தது. குரல் கிசுகிசுவென்று அவர் பேச ஆரம்பிக்க, அறையில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்று மாதவன் திரும்பிப் பார்த்தான்.
‘இந்தக் குமிழி நகர ஆரம்பிச்சதும், ஒவ்வொரு எழுத்தாக் கவனிச்சு எழுதிக்குங்க. அப்புறம் படிச்சுப் பார்க்கலாம். ‘
‘இது நகருமா ? ‘
‘ஆமா ‘.
‘நகராட்ட ? ‘
‘மடக்கி வச்சுடுவோம். ‘
‘நான் பேசணுமே. ‘
‘அப்ப நகரும்னு நம்பணும். ‘
பணிக்கர் மொணமொணவென்று ஏதோ மந்திரம் முனகினார். ஒரு நிமிடம் பலகையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். வலதுகை ஆள்காட்டி விரல் பலகையின் நடுவில் குமிழை அழுத்தியபடி இருந்தது.
‘அசையுமா ? கல்யாணியைக் கூப்பிடணும். நான் மாதவன். மாதவன் சம்சாரம் கல்யாணி. அசையுமா ? ‘
பணிக்கர் இன்னும் துரித கதியில் மந்திரம் சொன்னார். உதடுகள் வேகமாக அசைய, ஒரு பெரிய முனகலாக, வார்த்தை புரியாத தாலாட்டு போல் அவர் குரல் அறையெங்கும் வியாபித்துப் பரந்தது. சுவரில் தெறித்த நிழல் பிம்பங்கள் மெழுகுவர்த்தி அசைவில் அதிர்ந்து அசைந்தன. மாதவனின் நீட்டிய விரலில் ஒரு துளி மெழுகு உருகி விழுந்து, ஒரு கணம் மின்னி உறைந்தது. நகருமா ? பணிக்கரின் கண்கள் இன்னும் அதிகத் தீவிரத்தோடு பலகையை வெறித்தன. அதன் பரப்பிலிருந்து பார்வையாலேயே ஏதோ பெளதீகம் கடந்த பொருளை எழுப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றியது. கணங்கள் நீண்டு நழுவ, பணிக்கரின் குரல் அலைகள் அறையின் மூலை முடுக்குகளை வருடித் தொட்டு, இனம் புரியாத ஏதோ ஒரு சக்திக்கு விடுக்கிற அழைப்பாகச் சுற்றிச் சுழன்று மேலே எழும்பி, மெழுகு திரியை அசைத்துத் தோல்வியுற்று, பலகை நடுவில் ஊன்றிய விரலின் அழுத்தத்தில் குடி கொண்டன. பின்னால் வளைந்த அந்த விரல் ஒடியும்போல, ரத்தம் ஏறிச் சிவக்க, கண்கள் இன்னும், இன்னும் பலகையை வெறித்தன. அசையுமா ?
மந்திர உச்சாடனம் திடாரென்று நின்றது. வெளியே திரும்பவும் கரண்ட் போயிருக்க வேண்டும். யாரோ லாந்தர் விளக்கோடு நீள நடந்து போக, சாத்திய ஜன்னல் இடைவெளிகள் வழியாகத் தத்தித் தத்தி வெளிச்சம் சதுரமிட்டுப் போனது. குரல்கள் சோர்வாகவும், சலிப்போடும் ஒலித்தன. பணிக்கர் மேல் துண்டால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு விசிற, மெழுகுவர்த்தி அணைந்து போனது.
விளக்கு வந்தபோது பணிக்கர் எழுந்துபோய் மின்விசிறியைச் சுற்ற வைத்துவிட்டு அங்கேயே நின்றபடிக்கு, ‘இன்னிக்குக் கூடி வரலை. அப்புறம் ஒருநாள் சாவகாசமா வாங்க ‘ என்றார்.
அவர் அறைக் கதவைத் திறந்ததும் நாலு வயதில் ஒரு பெண்குழந்தை ஓடி வந்து, ‘அச்சா, செருப்பைக் காணலை ‘ என்று அறிவித்துவிட்டு அறையின் உள்ளே தேட ஆரம்பித்தது.
‘மோளே இவிடெ அதொண்ணும் இல்லல்லோ ‘ என்றபடிக்குப் பணிக்கரும் மேஜைக்குக் கீழே குனிந்து தேடினார். இனி நின்று பயனில்லை.
‘அப்ப நான் போய்ட்டு வரேன். ‘
‘செய்யுங்க ‘ என்றார் தலையை நிமிர்த்தாமல்.
– ‘வெற்றிலையில் ரெண்டு ரூபா வச்சு, கொஞ்சம் அட்சதையும் எள்ளுமா இவா தலையிலே எறச்சிட்டு, கையை மறுக்கற மாதிரி வச்சிண்டு கொடுங்கோ. பூணூலை மாத்திப் போட்டுண்டு வடக்கே பாருங்கோ. ‘ –
பணிக்கர் வெற்றிலை வைத்திருப்பாரோ ?
‘சார், நான் உங்களுக்கு எவ்வளவு தரணும் ? ‘
‘நான் நாளைக்கு வரலாமா ? ‘
பதில் கிடைக்கவில்லை.
நடையில் செருப்பைத் தேடியணிந்து கொண்டு மாதவன் நடக்க, பின்னாலே ஒரு குரல் – ‘மாமா, பிளாஸ்க். ‘
‘நாளைக்கு வரும்போது, இதற்கு ஏதாவது வாங்கி வரணும். ‘
இலக்கு இல்லாமல், நேரந் தெரியாமல் அலைந்துவிட்டு மெயின் பஜாருக்கு வந்தபோது, மூடிய கடைகளுக்கு முன்னால் வண்டியில் இட்லி விற்றுக் கொண்டிருந்தார்கள். நின்றபடிக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கும்போது, காலையிலும் சாப்பிடவில்லை என்று நினைவுக்கு வந்தது.
பணிக்கரிடம் இருக்கிறதுபோல் ஒரு பலகை செய்து முயற்சி பண்ணினால் என்ன ? இருபத்தாறு எழுத்து. எழுத்துக்கு ஒரு சதுரம். ஒரு குமிழ், இல்லை சோடா பாட்டில் மூடி. நம்பிக்கை. இன்னும் நிறைய நம்பிக்கை – குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும்; ஸ்விட்ச் போட்டால் லைட் எரியும் என்பது போல.
எழுத்து எழுத்தாக நகர்த்திக் கல்யாணி பேசுகிறாள் – ‘வித் ரெப்ரன்ஸ் டு யுவர் லீவ் அப்ளிகேஷன் டேடட்.. ‘
தங்கராஜ் தியேட்டரில் இரண்டாம் ஆட்டத்துக்கு டிக்கட் விற்றுக் கொண்டிருந்தார்கள். பணிக்கர் போல், முகத்தில் இரண்டு நாள் தாடியும், அதே உயரமுமாக ஒருவர் கவுண்டரில் நுழைய, பின்னாலேயே மாதவனும் விடுவிடுவென்று நுழைந்தான். அவர் எங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று தேடினான். அவர் பக்கத்தில் – அவர் பணிக்கராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை – உட்கார்ந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. அதற்குள் விளக்கை அணைத்து நியூஸ் ரீலில் பீகாரில் வெள்ளம்.
‘படத்தைப் போடு ‘. ஏழெட்டுப் பேர் சுற்றி விசிலடிக்க, இவன் ‘இஸட் ‘லிருந்து, ‘ஏ ‘ வரை தலைகீழாக ஆங்கில எழுத்துகளை நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருந்தான்.
பாட்டு ஆரம்பமானபோது திமுதிமுவென்று ஒரு கூட்டம் சிறுநீர் கழிக்க எழுந்துபோனது. மாதவனும் கூடவே வெளியே வந்தான்.
‘வெளியே போகணுமா ? ‘
‘ஆமா. ‘
‘அப்புறம் திரும்ப உள்ளே வர முடியாது. ‘
‘சரி, வரலை. ‘
தேரடி மடத்து வாசலில் பரதேசிகளும், பிச்சைக்காரர்களுமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அநேகமாக எல்லோரும் காலில் கந்தல் சுருணை சுற்றியிருந்தார்கள்.
மாதவன் படிக்கட்டில் உட்கார்ந்தான். பிளாஸ்க்கை எடுத்துப் பக்கத்தில் வைத்தான்.
காலையில் வாழை மட்டையும், செம்பில் சுற்றிய நூலுமாக யாரோ சொல்லச் சொல்ல, நாலு திசையும் பார்த்துத் தேவதைகளை அழைத்துக் கல்யாணியைக் கடைத்தேற்றச் சொல்லிக் காரியங்கள் நடத்த வேண்டும். அப்புறம் சாயந்திரம் பணிக்கரைப் பார்க்கப் போக வேண்டும்.
இப்போது ? இப்போது காரியம் ஒன்றுமில்லை. நட்சத்திரங்களைப் பார்த்தவாறு அவன் கண்ணயர்ந்தபோது, கல்யாணி சிரித்துக் கொண்டே வந்து எழுப்பிவிட்டுப் போனாள்.
விடிய இன்னும் நேரம் இருந்தது. வீட்டு வாசல் வரைக்கும் அந்தச் சிரிப்பு கூட வந்தது.
வந்திருந்த உறவுக்காரர்கள் உள்ளே கூடம் முழுக்கக் கால்மாடு தலைமாடாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
வாசலில் வண்டி வந்து நிற்கப் புதிதாக அழுகைச் சத்தம்.
(இரா.முருகன் – ‘தேர் ‘ சிறுகதைத் தொகுப்பு – ஞானச்சேரி வெளியீடு – 1989)
—————————-
eramurukan@yahoo.com
திண்ணை பக்கங்களில் இரா முருகன்
- வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது ‘
- தேவகுமாரன் வருகை
- கலைக்கண் பார்வை
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)
- அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.
- வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்
- அன்பும் மரணமும் – வானப்பிரஸ்தம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து ‘
- யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்
- உத்தரவிடு பணிகிறேன்
- அந்தரங்கம் கடினமானது
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- கடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- ஆரியம் இருக்குமிடம்… ? ? ? ?
- மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி
- பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.
- திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்
- அர்த்தமுள்ள நத்தார்
- படிகளின் சுபாவம்
- நவீன மதவாதத்தின் முகங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)
- பலகை
- அம்மாயி
- ‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- மறுபக்கம்
- கடிதங்கள் – டிசம்பர் 25 -2003
- பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்
- வாரபலன் – பயணத் தடங்கல் – ‘கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ‘ – முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
- விடியும்!-நாவல் – (28)
- ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி
- சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்
- நேர்காணல் – இர்ஷத் மஞ்ஜி
- பின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.
- போன்சாய் குழந்தைகள்
- கவிதைகள்
- தாம்பத்யம்
- முற்றுப் பெறாத ஒரு கவிதை
- கோபம்