பர்வதத்துக்கு ஒரு மாப்பிள்ளை…

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

செங்காளி


(என் தாயார் அவர்களின் நினைவாக)

வெள்ளிகிழமை..மாலை ஆறு மணியளவு. ‘பர்வதம்.. பர்வதம்.. ‘ என்று கூப்பிட்டுக்கொண்டே சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தார். வெள்ளை வேட்டி, சட்டை, தோளிலே ஒரு துண்டு இவைகளை அணிந்துகொண்டு, கையிலே ஒரு பையுடன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வாசற்படியில் நின்றுகொண்டிருந்தார்.

அம்மாவைப் பார்த்த அவர், ‘வணக்கம்மா..அய்யா இருக்காங்களா ?.. ‘ என்று கேட்டார். ‘வெளியே பொயிருக்கிறாருங்களே. வாங்க..உள்ளே வாங்க.. ‘ என்று அம்மா சொல்ல அவரும் உள்ளே வந்தார். ஓரு நாற்காலியைக் காட்டி ‘உக்காருங்க இதோ வந்திடறேன் ‘ என்று அம்மா சொல்லித் திரும்ப, ‘கூப்பிட்டாங்களா அம்மா ‘ என்று கேட்டுக்கொண்டே புழக்கடைப் பக்கமிருந்து வந்தாள் பர்வதம். அவளுக்கு வயது பதினேழு முடிந்து பதினெட்டு ஆரம்பம். ஆனால் நல்ல தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் இருந்த அவளைப் பார்த்தால் இருபது வயதுக்குமேல் இருக்கும் என்று எல்லாரும் நினைப்பார்கள். அவளைப் பார்த்த அம்மா, ‘மஞ்சு எங்கே ‘ என்று கேட்க, ‘அக்கா தலை வாரிக்கிட்டிருக்கிறாங்க ‘ என்று சொன்னாள். ‘நீ இன்னும் பொறப்படலயா ‘ என்று அம்மா கேட்டதற்கு, ‘இப்படியேப் போகவேண்டியதுதான் ‘ என்றாள். இதைக்கேட்ட அம்மா, ‘என்ன இப்படியேப் போறது..போ..போயி மொகம் கழுவிப் பொட்டுவச்சுப் பாவாடை தாவணியெல்லாம் மாத்திகிட்டு வா.. ‘ என்று சொல்ல, ‘சரீங்கம்மா.. ‘ என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

அவள் உள்ளே போகவும் மாடியிலிருந்து மஞ்சு இறங்கி வரவும் சரியாக இருந்தது. மஞ்சு அம்மாவைப் போலவே நல்ல சிகப்பு, அழகு, அளவான உடல்வாகு. நெற்றியில் வைத்திருந்த பொட்டும், நீண்ட முடியில் செருகியிருந்த மல்லிகைப்பூவும் அவளுக்கு மேலும் அழகூட்டின. மஞ்சுவுக்கு வயது இருபத்தொன்று. அவள் தன் கையில் ஒரு முழம் மல்லிகைப்பூச் சரத்தை வைத்துகொண்டு, பர்வதம் எங்கே என்று தேடினாள்.

வந்தவரை அதிக நேரம் காக்க வைத்துவிட்டோமே என்று நினைத்த அம்மா அவரைப் பார்த்து, ‘மன்னிச்சுக்கிங்க..இதொ இவங்களை அனுப்பிச்சிட்டு வந்திடறேன்.. ‘ என்றார். வந்தவரும், ‘அதுக்கென்னங்க, மெதுவா வாங்க..ஒண்ணும் அவசரமில்லை ‘ என்றார்.

இதற்குள் பர்வதமும் பளிச்சென்று உடை மாற்றிக்கொண்டு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்த மஞ்சு, ‘எங்கே இப்படித் திரும்பு ‘ என்று சொல்லித் தன் கையில் வைத்திருந்த மல்லிகைச் சரத்தை பர்வதத்தின் தலையில் மயிர்க்காலெடுத்து அழகாக அணிவித்தாள். பிறகு பர்வதம் சமையலறைக்குச் சென்று, ஒரு தூக்குக் கூடையில் தேங்காய், பழம் இவைகளை வைத்துக்கொண்டு வந்தாள். பிறகு மஞ்சும் பர்வதமும் ‘நாங்க போய்ட்டு வர்றங்கம்மா.. ‘ என்று சொல்லிகொண்டு புறப்பட்டனர். ‘சரி..கோயிலுக்கு போனமா வந்தமான்னு வாங்க..மஞ்சு..பர்வதம் அங்கேயும் இங்கேயும் பாராக்குப் பார்த்துக்கிட்டு நின்னுகிட்டிருப்பா..பாத்துக் கூட்டிகிட்டு வா.. ‘ என்று அம்மா சொல்ல, அதைக்கேட்டு பர்வதம் கலகலவென்று சிரிக்க, மஞ்சு ‘சரீங்கம்மா ‘ என்று சொல்ல, இருவரும் வெளியே சென்றனர்.

அவர்கள் தெருகோடியில் திரும்பும்வரை வாசற்படியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அம்மா பின்னர் வந்தவரை நோக்கி, ‘நீங்க வருவீங்கன்னு அய்யாவுக்குத் தெரியுங்களா ? எங்கிட்ட ஒண்ணும் அவரு சொல்லலீங்களே ‘ என்றார். பிறகு ‘குடிக்கிறதுக்கு எதாவது கொண்டுவரட்டுங்களா.. ‘ என்று கேட்க, வந்தவர், ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க..எம்பேரு சாம்பசிவம், நான் ஒரு கல்யாணத் தரகர்..அய்யாதான் இன்னக்கி வரச் சொன்னாங்க, அதான் வந்தேன் ‘ என்றார். பிறகு ஏதொ சந்தேகப்பட்டவராக, ‘இது..துணிக்கடை வைத்திருக்கிற சிதம்பரம் வீடுதாங்களே ‘ என்றார். இதைக்கேட்ட அம்மா சிரித்துக்கொண்டே, ‘இல்லீங்க..இதோ நம்ம வீட்டுக்கு எதிர் வீடுதான் அவிங்க வீடு ‘ என்றார்.

‘அப்படாங்களா.. ‘ என்று சொல்லிவிட்டு எழுந்த சாம்பசிவம் சிறிது தயங்கி நின்றார். பிறகு, ‘போனது ரெண்டுபேரும் நம்ம பொண்ணுங்களா ? ‘ என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டார். ‘ஆமாங்க ‘ என்று அம்மா சொல்ல, ‘பொண்ணுங்களுக்கு இப்ப கல்யாணம் பண்ணறமாதிரி ஏதும் உத்தேசம் இருக்குதுங்களா ‘ என்று கேட்டார். ‘அப்படி ஓண்ணும் இல்லீங்க. மஞ்சுவுக்கு இப்ப வயது இருபத்தொண்ணுதான்..அது இன்னும் மேலெ படிக்கணும்னு சொல்லிகிட்டிருக்குது. ஆனா பர்வதத்துக்குத்தான் சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணிடமுன்னு அதன் அப்பா சொல்லிக்கிட்டிருக்கறாரு.. நாங்கதான் என்ன அவசரம், சின்னப் பொண்ணுதானே..இப்ப வேண்டாம்..அதுவும் இன்னும் படிக்கட்டும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம் ‘ என்றார்.

சாம்பசிவம், அம்மா சொன்னது கொஞ்சம் புரியாததுபோல நின்றார். ‘அடடா பெரியபெண் இருக்கையில் சின்னப்பெண்ணுக்குக் கல்யாணமா ‘ என்று சந்தேகப்படுகின்றாரென நினைத்த அம்மா விளக்கமாக இப்படிச் சொன்னார்.

‘பர்வதம் எங்க பொண்ணு மாதிரிதான்..ஆனா அது எங்க சொந்தப் பொண்ணில்ல. எங்க கிராமத்தில இருக்கிற குடிமகன் (நாவிதர்) பொண்ணு. பத்து வருடமா எங்களோடதான் இருக்குது. நாங்க கிராமத்தில இருக்கிற எங்க தோட்டத்தைப் பார்க்க வாராவாரம் அங்கே போவோம். அப்படி ஒரு தடவை நாங்க போனப்ப, பர்வதத்தோட அப்பா எங்களைத் தேடி வந்தார். கூடவே ஒரு சின்னப் பொண்ணையும் கூட்டிக்கிட்டு வந்தார். அதுக்கு அப்ப வயசு ஏழெட்டு இருக்கும். “பாருங்க அத்தை **, இந்தப் பொண்ணு பண்ணறத..சரியாப் பள்ளிக்கூடம் போறதிலை, அட கூடமாட வேலை செய்யுதன்னா அதுமில்லை..சரியாச் சாப்பிடறதுமில்லாமெ ஊரைச்சுத்திகிட்டு ஒடக்கான்மாதிரி இருக்குது..நீங்க உங்களோட கூட்டிக்கிட்டுப் போயிருங்க..உங்களுக்குக் கைவேலைக்கு ஒத்தாசையா இருக்கும்.. ‘ என்று ரொம்பவும் கேட்டுகிட்டார். அன்னக்கி எங்களோட வந்தவதான். வந்த புதுசில எதோ ஏனோதானோன்னு இருந்தாலும் கொஞ்ச நாள்ல நல்லா பொறுப்பா நடந்துக்க ஆரம்பிச்சிட்டா. நாங்க பர்வதத்தை எங்க பொண்ணைப்போலத்தான் பாத்துக்கிறோம். மஞ்சுவும் அவளை தன் தங்கச்சி மாதிரி ரொம்பவும் பிரியமா நடத்தறா. வந்தப்ப பள்ளிக்கூடம் போகக் மொதல்ல கொஞ்சம் அடம் பண்ணினாலும் இப்போ நல்லாப் படிக்கிறா. ரொம்ப நல்ல பொண்ணு ‘

ஏதோ கதையைக் கேட்பதுபோல் கேட்டுக்கொண்டிருந்தார் பரமசிவம். அம்மா தொடர்ந்து சொன்னார், ‘இந்த வருடத்தோட பர்வதத்துக்கு பள்ளிப்படிப்பு முடியுது. நாங்க அவளை மேலே படிக்கவைக்கறோம்னு சொல்லிக்கிட்டு இருக்கிறோம். ஆனா அவளோட அப்பாவோ அவ இதுக்கு மேல படிச்சா அவளுக்குப் பொறுத்தமா ஒரு மாப்பிள்ளை கெடைக்கிறது கடினம்னு சொல்லிக்கிட்டிருக்கிறாரு.. ‘ அம்மா கொஞ்ச நேரம் பேசாமலிருந்துவிட்டு, ‘நீங்க வேணும்னா ஒண்ணு செய்யுங்க. பர்வதத்துக்கு ஏத்த மாதிரி பையன் இருந்தா வந்து சொல்லுங்க பாக்கலாம்..ஆனா அவசரம் ஒண்ணுமில்ல.. ‘ என்று சொன்னார்.

‘நிச்சயமா வந்து சொல்லறேங்கம்மா ‘ என்று சொல்லிகொண்டே பரமசிவம் புறப்பட்டார். இப்படியும் ஒரு குடும்பத்தில் வேலைக்காரப் பெண்ணைப் பார்த்துக்கொள்வார்களா என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே எதிர் வீட்டை நோக்கி நடந்தார்.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

** எங்கள் கிராமத்தில் எந்தத் தொழில் செய்பவராயிருந்தாலும் எந்தச் சாதியைச் சேர்ந்தவராயிருந்தாலும் ஒருவருக்கொருவர் (சொந்தம் இல்லையென்றாலும்) உறவு முறை வைத்துக்கொண்டு மிகவும் மரியாதையுடனும் அன்புடனும் நடத்துவது வழக்கம்.

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி