பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

புதுவை எழில்


பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்
கம்பன் அடிப்பொடி கணேசனார் நினைவேந்தலும்
முற்றோதல் பற்றிய விளக்கம் :

பிரான்சு கம்பன் கழகம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகக் கம்பராமாயண முற்றோதலைத் தொடர்ந்து நடத்தி வந்தது. கம்பராமாயணத்தின் முதல் பாடல் தொடங்கிக் கடைசிப் பாடல் வரை ஒரு வரியும் விடாமல் ஒதுவதையே முற்றோதல் என்பர். மாதந்தோறும் இறுதி ஞாயிறு மதியம் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் இல்லத்தில் கூடி அன்பர்கள் இராமாயணப் பாடல்களை ஓதுவோம். ஓத இருக்கும் படலத்தின் கதைச் சுருக்கத்தை யாரேனும் ஒருவர் முதலில் உரைப்பர். அப்படலப் பாடல்கள் ஓதல் நிறைவு பெற்றதும் அதில் காணப்படும் இலக்கிய நலன்களை முதுபெரும் கவிஞர் கவிச் சித்தர் கண. கபிலனர்ர் அவர்களும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களும் எடுத்துக் கூறுவார்கள் . யாப்பிலக்கண நயங்களைக் கவிஞர் கி பாரதிதாசன் விளக்குவார் . பின்னர் அன்பர்கள் எழுப்பும் வினாக்களுக்கு இம்மூவரும் தக்க பதில் தருவார்கள். சில சமயம் அன்பர்களும் நல்ல பல நயங்களைக் கூறுவதும் உண்டு. சிறிது காலத்துக்குப் பின்பு, முற்றோதல் அன்பர்கள் ஒவ்வொருவர் இல்லத்தில் நடைபெறத் தொடங்கியது. அப்போது, பானம், சிற்றுண்டி, பேருண்டி..அவப்போது வழங்கப்பெறும் . இதனால் கம்பனைச் சுவைக்கும் பேறு மட்டும் அல்லாமல் அன்பர்களுக்குள் நல்ல நட்புறவும் வளரத் தொடங்கியது. கடிமணப் படல ஓதலின் போது வடை பாயாசத்தோடு அருமையான விருந்து கிடைத்தது. திருமுடி சூட்டுப் படலத்தின் நிறைவிலும் அப்படியே! . இப்படி அருமையான விருந்து அருளியவர் வேறு யாருமில்லை – கவிஞரின் வாழ்க்கைத் துணைவியான திருமதி குணசுந்தரி பாரதிதாசன்தான் . அவருக்கு உதவியவர்கள் கம்பன் கழக மகளிரணி உறுப்பினர்கள்.

முற்றோதல் நிறைவு விழா :

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இடையறாது நடைபெற்ற முற்றோதல் மே திங்கள் 22 ஆம் நாள் சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது . கவிஞர் கி. பாரதிதாசன் இல்லத்தில் அன்பர்கள் திரளாகக் கூடி இருந்தனர். சிறப்பு விருந்தினர்கள் : நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரெ. சண்முக வடிவேல் அவர்கள் ; சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் இலக்கியசுடர் த. இராமலிங்கம் அவர்கள். இறுதிப் படலங்களின் சிறப்புகளை இருவரும் விளக்க அன்பர்கள் செவிக்கு நல்ல விருந்து.

அன்று மாலை பரி நகரில் இருக்கும் அண்ணாமலை விரிவாக்க வளாகத்தில் அதன் நிர்வாகி பேராசிரியர் ச சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் முற்றோதல் நிறைவு விழா நடைபெற்றது.. திரு திருமதி எண். செல்வம் இணையர் அவர்கள் மங்கல விளக்கு ஏற்றினார்கள்.. செல்வி சக்தி பார்த்தசாரதி இறை வணக்கம், தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார். அனைவரையும் வரவேற்ற கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் விழா நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்தியத் தூதரக அதிகாரி திரு வே நாராயணன் முற்றோதல் சான்றிதழ்களை முற்றோதலில் பங்குகொண்ட அன்பர்களுக்கு வழங்கினார். பின்பு இலக்கியசுடர் த. இராமலிங்கம் அவர்கள். ஆற்றிய உரையை அனைவரும் ரசித்தனர்.அடுத்து கவிதாயினி பூங்குழலி பெருமாள் எழுதிய ‘கவிதைக் கனிகள்’ என்ற நூலைத் திரு நாராயணன் வெளியிட அதனைத் தமக்கே உரிய பாணியில் அறிமுகம் செய்து வைத்தார் பேராசிரியர் பெஞ்சமின். பேராசிரியர் ச சச்சிதானந்தம் தம் தலைமை உரையை நிகழ்த்த விழாவின் மணிமகுடமாக அமைந்தது நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரெ. சண்முக வடிவேல் அவர்களின் பேச்சு. அடுத்த முற்றோதலுக்குத் திருக்குறளைத் தேர்வு செய்திருப்பதைப் பெரிதும் பாராட்டிய அவர் இதுவரை எவரும் செய்யாத செயல் எனக் குறிப்பிட்டபோது அவை கை தட்டி ஆரவாரித்தது. வழங்கப்பட்ட சிற்றுண்டியை அனைவரும் உண்டு களித்தனர். இவ்வண்ணம் முற்றோதல் நிறைவு விழா இனிதே நடந்தேறியது.

கம்பன் அடிப்பொடி கணேசனார் நினைவேந்தல் :

மறு நாள் 23 05 .2010 ஞாயிற்றுக் கிழமை, அதே இடத்தில்கம்பன் அடிப்பொடி கணேசனார் நினைவேந்தல் நடைபெற்றது. கம்பன் மகளிரணித் தலைவி திருமதி இராசேசுவரி சிமோன் தலைமை ஏற்றார். திருமதி லூசியா லெபோ, பேராசிரியர் பெஞ்சமியன் லெபோ மங்கல விளக்குக்கு ஓளி ஊட்டினர். திருமதிகள் சரோசா தேவராசு, பூங்குழலி பெருமாள் இன்றை வணக்கம், தமிழ் தாய் வாழ்த்து பாடினர். கம்பன் கழகத்தின் பொதுச் செயலர் செவாலியே யூபர்ட் சிமோன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். சிவன் கோயில் அர்ச்சகர் அருட்டிரு சர்மா குருக்கள் வாழ்த்துரை வழங்கினார் . திருமதி அருணா செல்வம் தம் இணய கவிதையைப் படித்தார். கம்பனடிப்பொடி சா கணேசனார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவர் நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரெ. சண்முக வடிவேல். பின், ‘வையகத் தலைமை கொள் ‘ என்ற பாரதியின் ஆணையைச் சிறப்பாக விளக்கிப் பேசினார் இலக்கியசுடர் த. இராமலிங்கம் அவர்கள். இறுதியாக, கம்பன் கழகப் பொருளாளர் திரு சமரசம் தணிகா அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. சுவையான் சிற்றுண்டி அருந்தி மகிழ்ந்து மக்கள் விடை பெற்றனர்.

நேரடி வருணனை : புதுவை எழில்
படங்கள் : பெஞ்சமின் லெபோ




















Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

புதுவை எழில்

புதுவை எழில்