அமர்நாத்
19. இதாகா நீர்வீழ்ச்சி
அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டுமென பரிமளா எட்டரைமணிக்குள் மாடிக்குச் சென்று பல்தேய்த்தாள். மறுநாள் பயணத்திற்கான சட்டை, பான்ட்ஸ், உள்ளாடைகள் தவிர மற்றவை அழுக்கு. ஊருக்குப்போய் பார்த்துக்கொள்ளலாம் என்று எல்லாத் துணிகளையும் பெட்டிகளில் திணித்தாள். தன்னுடைய செல்லில் ஐந்துமணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாள்.
ஆனால், உடனே தூங்கவேண்டிய அவசியம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தெரியவில்லை. உடல் பரபரத்தது. உள்ளத்தில் எண்ண அலைகள் ஓயமறுத்தன. காரணம் தெரியவில்லை. பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துபோகும் ஹீட்டரின் சத்தமா? ஏற்கனவே மூன்று இரவுகள் அந்த அறையில் தூங்கியிருக்கிறாள், இன்றைக்கு ஏன் அது தனித்து காதில்விழ வேண்டும்? சாமியையும் ப்ரியாவையும் பிரிய மனமில்லையா? மூவருக்கும் ஒத்துப்போகிறது, மறுபடி சந்திப்பதில் என்ன கஷ்டம்? ‘கெம்-சேஃபி’ன் செக்கை கணக்கில் சேர்த்தது மனதை வருத்துகிறதா? அப்படியென்றால் அதைத் திருப்பி அனுப்பினால் போகிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் விளக்கம் சொன்னாலும் அதைக்கேட்டு மனம் திருப்தி அடையவில்லை. வேறென்ன காரணம்? மத்தியானம் ஒருமணி தூங்கியது தவறோ? இத்தனை வருஷங்கள் கழித்து, திடீரென்று பத்தூ அழைத்ததால் மனதில் குழப்பம். தூக்கம் வராததால், மனம் ஆழத்தில் எங்கோ தொலைந்ததைத் தேடியெடுத்து அசைபோட்டது. அவனை நினைத்ததால் தூக்கம் இன்னும் தள்ளிப்போனது.
பத்தூ பரிமளாவின் முகத்தைப்பார்த்து சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தான்.
“வெயில் நல்லா சூடா இருக்கு. வெளிலேபோய் சாப்பிடலாமா? பரிமளா!” அதுவரை மிஸ் பரிமளா என்று மரியாதை தந்தவன் அன்று வெறுமனே அவள் பெயரைச்சொல்லி அழைத்தான்.
புல்தரையில் அவர்களைப்போல் ஒரு கும்பல்.
பத்தூ பையிலிருந்து வேர்க்கடலைவிழுதும் திராட்சை ஜெல்லியும் தடவிய சான்ட்விச் எடுத்தான். “ஒண்ணரை வருஷமா தினமும் இதுதான். நீங்க என்ன சாப்பிடப்போறேள்? டப்பாவைத் திறக்கறதுக்கு முன்னாடியே வாசனை தூக்கறதே” என்று கழுத்தைநீட்டிப் பார்த்தான்.
“இந்தூர்க்காரா சொல்றமாதிரி ‘ஸ்க்ராச்’லேர்ந்து பண்ணினது. கடைலே வாங்கின ‘மிக்ஸ்’ இல்லை. கொஞ்சம் எடுத்துக்கறியா?”
“நீங்க இவ்வளவுதூரம் கட்டாயப்படுத்தும்போது வேண்டாம்னு சொல்ல மனசுவரலை.”
பாத்திரத்தின் மூடியில் கால்பங்கு புளியோதரையை வைத்து அவனிடம் நீட்டினாள்.
“கிட்டத்தட்ட மன்னி பண்றமாதிரி இருக்கு.”
“மன்னியோட புளியோதரைதான் ‘கோல்ட் ஸ்டான்டர்ட்’ போலிருக்கு” என்றாள் செயற்கையான ஏமாற்றத்துடன்.
சாப்பிட்டு முடித்ததும் வெயிலின் வெம்மையில் எழுந்திருக்க மனமில்லை. “நீங்க சுஜாதா படிச்சிருக்கேளா?”
“கேள்விப்பட்டிருக்கேன். படிச்சதில்லை.”
“என்னது?” என்று உலக அதிசயம்போல் அவளைப் பார்த்தான். “நீங்க எந்த லோகத்திலே இருக்கேள்? லேடஸ்ட் ‘என் இனிய இயந்திரா’ வச்சிருக்கேன். கையிலே எடுத்தேள்னா, முடிக்கிற வரைக்கும் கீழே வைக்கமாட்டேள்.”
“அப்படின்னா, வெள்ளிக்கிழமை சாயந்தரம் குடு, படிக்கறேன்.” பக்கத்தில் உரசிக்கொண்ட இளஞ்சோடிகளைப் பார்த்ததும் பரிமளாவுக்கு சொல்லவேண்டும் போலிருந்தது. “பதிமூணு பதிநாலு வயசிலே எல்லாக்கதைகளும் படிப்பேன். அதுவும் கல்கி, நா.பார்த்தசாரதி சரித்திர கதைலே வர்ற ரொமான்டிக் காட்சிகளை பலதடவை படிச்சு ரசிப்பேன். ஆனா, என் வாழ்க்கை ஜெகசிற்பியனின் சோகமான சமூகக்கதை மாதிரி ஆனதும் கதை படிக்கறதிலே ஆர்வம் போயிடுத்து.”
“சாரி பரிமளா!”
“கஷ்டம், பொறுப்பு, கசப்பு வந்ததும் வேகமா வளர்ந்துட்டேன்.”
“பாத்திண்டே இருங்கோ! நான் வளரவே போறதில்லை. பணத்தைப் பத்தின கவலையில்லாம… சுஜாதா கதைகளை படிச்சிண்டு…”
“நான் பண்ணின புளியோதரையை சாப்பிட்டிண்டு… பீடர் பான் மாதிரி…”
“சின்னப்பையனாவே இருக்கப்போறேன்.”
ஆறுமாதங்கள் கழித்து ஒரு திங்கள்கிழமை. வீட்டிலிருந்து வந்த பத்தூ தன்னிடத்திற்குச் செல்லாமல் பரிமளாவைத்தேடி வந்தான். எப்போதும் பளிச்சென்று சுத்தமான பான்ட்-சட்டையில் தோற்றம்தரும் அவன்உடையில் ஒரேகசங்கல். தலைமயிர் படிந்திராமல் கொத்துகொத்தாக நின்றது. நாளெல்லாம் அழுது வீங்கிய முகம். உட்காராமல் நின்றான். ‘ஹாய்!’ ‘எப்படி?’ என்று எதுவும் சொல்லாமல் திடுதிப்பென்று, “நான் பிஎச்.டி.யை விட்டுட்டு ஊருக்குத் திரும்பிப் போயிடலாமான்னு பாக்கறேன்” என்றான்.
“என்னது?” என்று பரிமளா திடுக்கிட்டாள். “பாதிகிணறு தாண்டியாச்சு. க்வாலிiஃபயிங் முடிச்சாச்சு. டிகிரி வாங்க இன்னும் ரெண்டு வருஷம்கூட இல்லியே.”
பத்தூ ஒரு நீலக்கடிதத்தை அவளிடம் நீட்டினான்.
“உனக்கு வந்ததை நான் படிக்கலாமா?”
“உங்களுக்குத் தெரியறதிலே தப்பில்லை” என்று கடிதத்தைப் பிரித்து முதல்பகுதி மட்டும் தெரியும்படி மடித்துக் கொடுத்தான். இரண்டு வருஷங்களுக்குமுன் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எழுதப்பட்டது.
சிரஞ்சீவி பத்மநாபனுக்கு தமையன் வரதராஜன் எழுதியது.
அநேக ஆசீர்வாதம்.
நீ சௌக்யமாகப் போய்ச்சேர்ந்த விபரம் கேட்கிறவரைக்கும் ஆத்தில் எல்லோருக்குமே விசாரமாக இருந்தது. நீ கிளம்பிச்சென்று நேற்றோடு ஒருவாரமாகிவிட்டது. ஏழுநாள்தான் ஆகியிருக்கிறதா? அதற்குள் எங்கள் வாழ்க்கையில் ஒருபங்கு குறைந்தமாதிரி தோன்றுகிறது. உன் புத்திசாலித்தனத்திலும், எங்கள் ஆசீர்வாதத்திலும் பிஎச்.டி.யை நான்கு வருஷத்திற்கு முன்பே முடித்துவிடுவாய் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சம்சயம் இல்லை. நீ திரும்பிவரும் நாளை இப்போதே எண்ண ஆரம்பித்துவிட்டோம். மன்னி நேற்று அக்கரவடிசல் பண்ணியிருந்தாள். மிக நன்றாக அமைந்திருந்தது. நீ இல்லையே என்று அவளுக்கு ரொம்பவும் மனக்குறை. இனி நீ திரும்பிவரும்வரை எனக்கு அக்காரவடிசல் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இங்கே…
படித்ததும் பரிமளா அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.
“வரதண்ணா என்னைவிட எட்டுவயசு பெரியவர். அப்பா போனப்புறம் எனக்கு அவர்தான் அப்பா. குடும்பம் நடக்கணும்னு ‘பியுசி’யோட படிப்பை நிறுத்திட்டு ஒரு கார்ஃபாக்டரிலே வேலை தேடிண்டார். நான் என்ன ப்ரைஸ் வாங்கினாலும் அதை ஊர்முழுக்க எல்லார்கிட்டேயும் காட்டி பெருமையடிச்சுப்பார். எம்.எஸ்ஸி. படிக்கும்போது நான் ஆத்துக்கு வரும்போது பஸ் ஸ்டான்டுக்கே வந்து காத்திண்டிருப்பார். கல்யாணமான அன்னிக்கு மன்னிகிட்டே என்னைப்பத்தின பெருமைதான். மத்த பெண்களா இருந்தா என்மேலே அசுயை வந்திருக்கும். ஆனா பத்மா மன்னிக்கு தங்கமான மனசு. அண்ணாவுக்கு ஒருபடி மேலேயே என்கிட்டே ப்ரியமா நடந்துண்டா. ஏர்போர்ட்லே அம்மா வெறுமனே, ‘போயிட்டு நல்லபடியா வா’ன்னு சொன்னா. பிரியணுமேன்னு மன்னிக்கு அழுகையே வந்துடுத்து” என்றபோது அவனுக்கே அழுகை பீறிட்டது.
அவன் ஓயும்வரை பரிமளா காத்திருந்தாள். நல்லவேளை, ஸ்ரீஹரிராவைத் தவிர காதுகேட்கும் தூரத்தில் யாருமில்லை.
“நான் அங்கே யிருந்தபோதே மன்னிக்கு நாலுமாசத்திலே ஒருகுழந்தை தவறிப்போயிடுத்து. ரெண்டுவாரம் முன்னாடி ஸ்ரீமந்தம் நடந்தப்போ வயறு பெருசா தெரிஞ்சதினாலே ரெட்டைக்குழந்தையா இருக்கலாம்னு அண்ணா எழுதியிருந்தார். எட்டு மாசத்திலே…” என்று முடிக்குமுன் தொண்டை அடைத்தது. “ரெண்டுலே ஒண்ணுகூட தங்கலை” என்ற வார்த்தைகள் அழுகையோடு கலந்துவந்தன.
“அவாளுக்கு ஆறுதலா பக்கத்திலே இல்லாம நான் படிச்சு என்ன லாபம்?” என்று முடித்தான்.
“பத்தூ! முதல்லே உட்கார்!” என்று உயர்நாற்காலியைக் காட்டினாள்.
மனமின்றி அவன் அதில் அமர்ந்தான்.
“உன்னோட மன்னிக்கு என்னாலே ஆறுதல் சொல்லமுடியாது. ஆனா உனக்குச் சொல்லமுடியும். எனக்கு நடந்ததை யோசிச்சுப்பார்! எனக்கும் சம்பத்துக்கும் ரெண்டரை வருஷம் வித்தியாசம். ஆனா, கிட்டத்தட்ட ரெட்டைக்குழந்தைகள்மாதிரி வளர்ந்தோம். ‘கவர்மென்ட் வேலை போரும். மோட்டர்சைகிள் ரேஸ்லே கலந்துக்காதே’ன்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தோம். அவன் கேக்கலை. ‘அது ஒரு ‘த்ரில்’டி, ஒரு தடவை ஜெயிச்சதும் விட்டுடறேன்’னு சொன்னான். நாங்க எந்த ரேஸ{க்கும் போய்ப்பாத்ததில்லை. எப்பவும் பின்னாடிதான் வந்தான்னு பேப்பர்லே போட்டிருக்கும். ஒருதடவை முதல்லே இருந்திருக்கான். அதுபொறுக்காம யாரோ வேணும்னே அவனை இடிச்சு…” அழுவது இப்போது பரிமளாவின் முறை.
“அழுதுண்டில்லாம சம்பாதிச்சு அவன் குடும்பத்தைக் காப்பாத்த முடிவுசெஞ்சேன். அதுபோல நீயும் படிப்பை முடிக்கறதுதான் முக்கியம். உன் அண்ணாமன்னிக்கும் அதுதான் விருப்பமா இருக்கும்.”
பத்தூ பரிமளாவிடமிருந்து பார்வையை எடுத்து ஜன்னல் வழியாக வெளியே வைத்தான். பிறகு உச்சி குழல்விளக்குளை எண்ணினான். கடைசியில், பரிமளாவின் பக்கம் திரும்பி, “நீங்க சொல்றது ரொம்ப சரி, பரிமளா! உங்க கஷ்டத்தைப் பாக்கும்போது இது பெரிசாத் தோணலை. மன்னிக்கு என்வயசுதான். பெருமாள் மனசுவச்சு அடுத்த வருஷம் நல்லபடியா குழந்தை பிறக்கட்டும்.”
பத்தூ மனம்தேறிய பிறகு இன்னொரு ஆறுமாதங்கள் இதாகாவின் கடுங்குளிரில் கரைந்தன. சூரியனின் வெம்மை உடலைத்தொட்டபோது,
“நான் டிரைவிங் கத்துக்கறேன், பரிமளா! உங்களுக்குத் தெரியுமா?”
“என் அண்ணா மோட்டார்சைகிள் ரேஸ்லே போனதிலேர்ந்து பயம். ஸ்கூட்டர் பின்சீட்லேகூட ஏறமாட்டேன்.”
“அதுவேறே, காரோட்டறது வேறே. நான்கூட பயந்துண்டிருந்தேன். இன்ஸ்ட்ரக்டர் நன்னா சொல்லித்தரான்.”
இரண்டுவாரங்கள் கழித்து, “எல்லாரும் ரெண்டுமூணு தடவை வரச்சொல்லுவான்னு பயமுறுத்தினா. நான் முதல் தடவையிலேயே லைசன்ஸ் வாங்கிட்டேன்” என்றான் பெருமையாக.
“கன்கிராஜுலேஷன்.”
“நீங்களும் காரோட்ட கத்துக்க வேண்டியதுதான்.”
“நீ சின்னவன், முடிஞ்சிது.”
“நீங்க என்ன பாட்டியா? உங்களுக்கு முப்பது இருக்குமா?”
“அதுக்கும் மேலே.”
“முப்பத்தொண்ணு?”
“அதுக்கும் ரொம்ப மேலே.”
“நாப்பது?”
“ரெண்டுக்கும் சராசரி எடுத்து ரெண்டைக்கழிச்சு நாலைக்கூட்டி…”
“எதுக்கு இந்தக் கணக்கெல்லாம். வயசு உடம்புக்குத்தான், மனசுக்கில்லை. தாராளமா கத்துக்கலாம்” என்று அனுமதி கொடுத்தான்.
“எதுக்கு? கார்வாங்க பைசா கிடையாது. ஊருக்கு பணம் அனுப்பியாகணும்.”
“கத்துண்டா உடனே கார்வாங்கணும்னு அர்த்தமா?”
அப்படிச்சொன்ன அவனே அடுத்த ஞாயிறுகாலை ஒரு நிஸான் சென்ட்ராவை அவள்வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, “பரிமளா! வந்து பாருங்கோ!” என்றான்.
வறுக்காத காப்பிக்கொட்டை நிறத்தில் துளிக்கூட அழுக்கு தென்படவில்லை.
“நன்னா இருக்கு.”
“83 மாடல், முப்பதாயிரம் மைல்தான் போயிருக்கு.”
“பரவாயில்லையே, எவ்வளவு குடுத்தே?”
“ஜப்பானீஸ் போஸ்ட்-டாக், ஊருக்குத் திரும்பிப்போறான். அதனாலே, ரெண்டாயிரத்துக்கே தந்தான்.”
“இங்கே வந்து அவ்வளவு பணம் சேத்துட்டியா? சிக்கன சுந்தரம்தான். இனிமே கடைலே அரிசி, சோப்புன்னு கனமான சாமான் வாங்கினா தூக்கிண்டு நடக்க வேண்டாம்.”
பேசிக்கொண்டே காரின் வலதுபக்கம் சென்றாள்.
“அந்தப்பக்கம் உக்காருங்கோ!”
“அது டிரைவர் இடம்.”
“அங்கேதான். நீங்க ஓட்டப்போறேள்.”
“நானா? என்கிட்டே ‘லேர்னர்ஸ் பெர்மிட்’கூட இல்லியே.”
“இன்னிக்கி போலிஸ்காரங்க சர்ச் முன்னாடி நின்னுண்டு கார்களை எண்ணிண்டிருக்காங்க. சும்மா ஒரு ரவுன்ட் அடிப்போம்.”
“பயமா இருக்கு.”
“நான்தான் பக்கத்திலே இருக்கேனே” என்று சாவியை அவள்கையில் திணித்தான்.
பரிமளா மிக ஜாக்கிரதையாக முன்இருக்கையில் அமர்ந்து ‘பெல்ட்’டை இறுக்கினாள். பயந்துகொண்டே சாவியைத் திருப்பினாள். கார் சத்தம் எழுப்பியதும் இதயம் வேகமாகத் துடித்தது. அவளுக்குப் பணிந்து அது பின்னால் சென்றது. திரும்பி பாதைக்கு வந்தது. பிறகு நேராகச் சென்றது. ஸ்டியரிங் அவள் சொன்னபேச்சைக் கேட்டது.
“இவ்வளவு ‘நீட்’டா ஓட்டறேளே! நிஜமாவே உங்களுக்கு முப்பத்தேழு வயசாயிடுத்தா?” என்று ஆச்சரியப்பட்டான்.
“நீ எவ்வளவு நினைக்கிறியோ அதையே வச்சுப்போம்.”
தெருவில் சிறிதுதூரம் சென்று ஒரு ‘காஸ் ஸ்டேஷனி’ல் நுழைந்து நிறுத்தினாள். “இன்னிக்கி இது போரும்.”
இடங்களை மாற்றிக்கொண்டார்கள்.
“கார் இருக்கு, ஒரு சவாரி போலாமா?”
“இதாகா ஃபால்ஸ் வரைக்கும் போவோம்.”
“அதுதான் அடிக்கடி நடந்து போறோமே. நயாகரா போய்ப் பாக்கலாம்.”
“ம்ம்.”
“என்ன யோசனை?” அவன் அவளை ஒருமையில் அழைத்ததில்லை, ஆனால் பன்மையை முடிந்தபோது தவிர்ப்பான்.
“ராத்ரி அங்கே தங்கணுமா?”
“வேண்டாம். பிம்மாலம் கிளம்பினா, அன்னிக்கே திரும்பி வந்துடலாம்.”
“அப்ப, அடுத்த சனிக்கிழமை.”
அருவியில் நீர் அதிகமில்லை. தலைநிமிர்ந்து அதைப்பார்த்த பரிமளாவுக்கு, ‘வெள்ளைத்துகில் உடுத்து இயற்கையன்னை நிற்பதுபோல’ என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. நீர்த்திவலைகளில் ஒரு வானவில். அருவிகொட்டும் சத்தத்தில் பத்தூ வந்து பக்கத்தில் நின்றதை கவனிக்கவில்லை.
“நீங்க இங்கேதான் இருப்பேள்னு தெரியும்.”
திரும்பிப்பார்த்தாள். விமான நிலையத்திலிருந்து அவன் நேராக அவளைத்தேடி வந்திருக்கிறான் என்று தெரிந்து புன்னகைத்தாள்.
“எல்லாம் எப்படிப்போச்சு?”
“இன்டர்வியுலே பயமே இல்லை. தூள் பரப்பிட்டேன். உங்களுக்குத்தான் நன்றிசொல்லணும். மூணாவது மனுஷாளைப் பாத்து ஓடிஓளிஞ்சிண்டிருந்த என்னை தைரியசாலி ஆக்கினேள்.”
“நமக்குள்ள நன்றி சொல்லற வழக்கமெல்லாம் கிடையாதே.”
“ஆரம்பிச்சா போறது” என்று முதுகுபின்னால் மறைத்துவைத்திருந்த கையை முன்னால் நீட்டினான். அதில் ஒரு பச்சை பிளாஸ்டிக் பை. “உங்களுக்காக வாங்கிண்டு வந்தேன்.”
பரிமளா பையை வாங்கி அதிலிருந்து ஒரு டீ-சட்டையை எடுத்துப் பிரித்தாள். லாரி பேர்டில் ஆரம்பித்து ‘பாஸ்டன் செல்டிக்ஸ்’ குழுவினர் ஒவ்வொருவரும் கைப்பட கையெழுத்திட்ட சாம்ப்பியன்ஷிப் சட்டை. காப்பாற்றிவைத்தால் எதிர்காலத்தில் அதன் மதிப்பு அதிகமாகலாம். பரஸ்பரம் பரிசு மாற்றிக்கொள்ளாத வழக்கமும் முடிந்துவிட்டது.
“உங்களோட Nஃபவரிட் டீம்.”
“தாங்க்ஸ், பத்தூ!” என்று பரிமளாவும் நன்றிசொல்லாத வழக்கத்தைக் கைவிட்டாள். “ரொம்ப விலை இருந்திருக்குமே” என்று அவளுக்கு மனஉறுத்தல்.
“ப்ரசன்ட் கொடுக்கும்போது என்ன விலைன்னு கேக்கப்படாது.”
சட்டையை மடித்து பையிலேயே வைத்தாள்.
பிறகு அவனே, “ஆரம்பத்திலே 40கே. க்ரீன் கார்டுக்கு அவாளே ஏற்பாடு பண்ணுவான்னு தோணறது” என்று சொன்னான்.
“ரொம்ப சந்தோஷம்.”
மௌனமாகத் திரும்பி நடந்தார்கள். அருவியின் சத்தம் குறைந்துகொண்டே வந்தது. பரிமளா பத்தூவைக் கூர்ந்து கவனித்தாள். மூன்றுவருஷங்களுக்கு முன் அவனைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. மனம் மட்டுமல்ல, உடலிலும் எவ்வளவு மாற்றங்கள்! பள்ளிப்பையன் மாதிரி ஒல்லியாக இருந்தவன் உருண்டு திரண்டு சதைவைத்து முழு ஆளாக வளர்ந்திருந்தான். ஊருக்குள் இரண்டு டாலருக்கு ஒரு சைனாக்காரனிடம் ஒட்டவெட்டிய தலைமயிரோடு சிறுபையன்போல் தோன்றியவன் இப்போது எட்டு டாலருக்கு அலங்காரமாகத் திருத்திய முடியோடு ஆணழகனாக மாறியிருந்தான். நேர்காணலுக்கு அணிந்த விலையுயர்ந்த சம்பிரதாய உடையில் மாணவத்தோற்றம் முற்றிலும் அழிந்துவிட்டது.
பார்வையை நேரே வைத்தாள். தெருவில் கார்கள் செல்வது தெரிந்தது.
“ம்ம். படிப்பு முடிஞ்சுடுத்து” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.
“எங்கே முடிஞ்சுது? தீசிஸ் எழுதணும், மத்தவா ஏத்துக்கணும், அதை ‘டிnஃபன்ட்’ பண்ணணும்” என்று கவலையோடு சொன்னான்.
“அதெல்லாம் சும்மா பேருக்கு. அடுத்தபடியா வேலையும் கிடைச்சாச்சு.”
“இன்னும் கிடைக்கலியே.”
“கிடைச்ச மாதிரிதான். உன்னைவிட புத்திசாலியா யார் அவாளுக்கு கிடைக்கப்போறா?” ஒரு நீண்ட இடைவெளிவிட்டுத் தொடர்ந்தாள். “ஒண்ணுதான் இன்னும் பாக்கி…”
“என்ன?”
“அதையும் நானே சொல்லணுமா? சரி, சொல்றேன். ஒருபெண்ணோட ஆயுள் தண்டனை.”
அவளைப் பார்த்து சிரித்தான்.
“நீங்கமட்டும் தண்டனைலேர்ந்து தப்பிச்சினுட்டு என்னை மாட்டிவிடலாமா?”
அவள் பார்வையை அவன்பக்கம் திருப்பவில்லை. “என்ன பண்ணறது? என்னோட ஜெயில்லே அடைஞ்சுகிடக்க யாரும் ஆசைப்படலை.” குரலில் ஆதங்கம் வெளிப்படாதிருக்க முயற்சித்தாள், முடியவில்லை.
எனக்கு இருக்கிறது என்று அவன் சொல்லவில்லை, உனக்கு ஆசை இருக்கிறதா என்று அவளும் கேட்கவில்லை. அதற்குள் பாதை முடிந்துவிட்டது. தெருவின் ஓரத்தில் நின்றார்கள்.
“போறவழிலே கடைக்குப் போகணும்…” என்று இழுத்தான்.
“நீ போ! எனக்குக் கடையிலே எதுவும் வாங்க வேண்டாம்.”
“ஆர் யூ ஷ{ர்?”
“யெஸ். ஐ’ம் ஷ{ர்.”
வீட்டிற்குத் தனியே நடந்தாள். அடுத்துவந்த நாட்களில் அவள் மட்டும் தனியே அருவியைப் பார்க்க வந்தாள். முதலில் என்னவோபோலிருந்தது. விரைவில் பழக்கப்பட்டு விட்டது. தனிமை அவளுக்குப் புதிதல்லை.
பரிமளா கடிகாரத்தில் மணிபார்த்தாள். நள்ளிரவையும் தாண்டியிருந்தது. பேசாமல் காலைவரை தூங்காமல் இருந்துவிடலாமா? விமானத்தில் நாலுமணியாவது அமைதி கிடைக்கும். அப்போது கொஞ்சம் கண்மூடலாம். ஆனால், திடீரென்று உடலில் நடுக்கம் தோன்றியது. குளிரினால் போட்டுக்கொள்ள சரவணப்ரியா முன்பு தந்த ‘ஸ்வெட் ஷர்ட்’ நாற்காலியின்மேல் கிடந்தது. எழுந்து அதை அணிந்தாள். படுத்ததும் கண்ணிறுக்கமாய் இருந்தது, தூக்கம் மெல்ல இமைகள் மீது கவிய ஆரம்பித்தது.
இரவு என்ன மணியென்று சாமி கஷ்டப்பட்டு கண்ணைப்பிரித்துப் பார்த்தான். இரண்டு:பத்துதான், எழுந்திருக்கும் நேரமில்லை. ஏன் இந்தநேரத்தில் விழிப்பு வந்ததென்று உடனே தெரிந்தது. பரிமளாவின் அறையிலிருந்து வந்த இருமல் சத்தம். நிறுத்தமுயன்று முடியாமல் இழுத்துக்கொண்டே சென்றது. எழுந்துசென்று அறையின் கதவை முழுவதுமாகத் திறந்தான். விடிவிளக்கின் ஒளியில் அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப்பார்த்தான். அவன் கைபட்டதும் கண்ணைத்திறந்து உடனே மூடிக்கொண்டாள். வெப்பமானிக்கு அவசியமில்லை. மூச்சு சத்தமாக வெளிப்பட்டது.
அறையிலிருந்து வெளியேவந்து நடைவழியில் நின்று யோசித்தான். என்ன செய்யலாம்? ஏழரைக்கு விமானம். ஐந்தே முக்காலுக்காவது வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். இன்னும் நான்குமணிகூட இல்லை. அதற்குள் ஜுரம் தணிந்துவிடுமா? உடல்சரியில்லாத அவளுக்கு விமானப் பயணம் ஒத்துக்கொள்ளுமா?
மனைவியைத் தொட்டு எழுப்பினான். சிறுஅசைவுக்குப் பிறகு அவள் விழித்துக்கொண்டாள்.
“எழுந்துக்க நேரமாயிரிச்சா?”
“அதுக்காக எழுப்பலை. பரிக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன். ஜுரம், இருமல். என்ன பண்ணலாம்?”
அவள் உட்கார்ந்து யோசித்தாள். பிறகு எழுந்துசென்று பரிமளாவை சோதித்துவிட்டுத் திரும்பிவந்தாள்.
“அவளாலே நாளைக்கு ப்ளேன்லே போகமுடியும்னு தோணலை. நான் அவளை எழுப்பி மருந்து கொடுக்கறேன். நீ கீழேபோய் அவ டிக்கெட்டை மாத்திடு!”
“எப்போன்னு மாத்தறது?”
“இப்போதைக்கு கான்சல் செய்! அபராதம் இருந்தாலும் பரவாயில்லை. அவ சரியானவுடனே அனுப்புவோம். ரெண்டுநாளாவது ஆவும்னு தோணுது. இன்னைக்கு மதியத்திலேர்ந்தே ஒருமாதிரி இருந்தா. வியாழக்கிழமை, குளிர்லே உக்காந்திருந்தது ஒத்துக்கலை போலிருக்கு.”
அவளைக் காக்கவைத்த குற்றஉணர்வைப் போக்க, “அதனாலே வந்ததுன்னு எப்படிச் சொல்லமுடியும்? வேற எங்கேயாவது பிடிச்சிருக்கலாம்” என்றான்.
“எப்படியிருந்தா என்ன, நாம அவளைப் பாத்துக்கணும். அவ நம்ம பொறுப்பு இல்லையா?”
அந்த வார்த்தைகளின் பொருளை நினைத்தபடி சாமி கீழே இறங்கினான்.
- கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்
- உள்ளொன்று வைத்து…
- வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை
- இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்
- தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்
- பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா
- மரித்தோரின் திருநாளில்
- பத்திரமும் தைரியமும்
- ஐந்தறிவு பார்வை!
- மாடவீதி
- சுவர் சாய்ந்த நிழல்கள் …!
- திரவநீர் கனவுகள்
- எதிர்பார்ப்புகள்
- பிரியாத பிரிவுகள்
- மழை நாள்
- மீட்சியற்ற வனத்தின் கானல்
- ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:
- பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி
- தாய்மை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3
- வெளிச்சம்..
- முகம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்
- புண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து?
- தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி
- முள்பாதை 54
- காற்றோடு காற்றாய்…
- கானலென்றறியாமல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3
- நம்பிக்கை
- நினைவிழத்தல்
- தண்டனை