பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

அமர்நாத்



15. ஜெனிவா, இல்லினாய்

வியாழன் பிற்பகலில் வானிலை அறிக்கை எச்சரித்துபோல் ஒரு குளிர்ப்படலம் ஷிகாகோவை முற்றுகையிட்டது. சோமசுந்தரம் வேலையிலிருந்து திரும்பியபோது பகலின் ஒளி முழுவதும் மறைந்துவிட்டது. இருண்ட வீட்டின்முன் காரைநிறுத்தி தபால்பெட்டியில் இருந்தது அனைத்தையும் அள்ளிக்கொண்டார். கராஜின் கதவைத் திறந்ததும் உச்சிவிளக்கு வெளிச்சம் காட்டியது. காரை நிறுத்தி அலுவலகப்பையுடன் இறங்கினார். வீட்டின் பல இடங்களில் விளக்குகளைத் தட்டிவிட்டு, தகனஅடுப்பின் சூட்டையும் அதிகப்படுத்தி வீட்டிற்கு உயிரூட்டினார்.
சமையலறை மேஜையில் தபால்களை எறிந்தபோது உருப்படாத கடிதங்களுக்கு நடுவில் வீட்டு அசோசியேஷனிலிருந்து வந்த காகித உறை. அவசரமாக அதைப் பிரித்துப் பார்த்தார். மாதக்கட்டணம் ஐம்பது டாலர் பதினெட்டாம் தேதிக்குள் வராததால் இருபத்தைந்து டாலர் அபராதம். அதையும் சேர்த்து எழுபத்தைந்து டாலரை உடனே செலுத்துமாறு எச்சரித்த கடிதம். எல்லா பில்களையும் அவர் மின்வழியே செலுத்துவது வழக்கம். இதற்குமட்டும் செக் எழுதி தபால்தலை ஒட்டி அனுப்ப வேண்டும். எப்போதும் பத்தாம்தேதி வாக்கில் செய்துவிடுவார். இந்தமுறை தள்ளிப்போய்விட்டது. சென்ற ஞாயிறு ஞாபகம்வந்தபோது, நாஷ்வில் கிளம்பும் அவசரத்தில், திரும்பிவந்து பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தார். திரும்பிவந்தபிறகு அவருக்கு எல்லாம் மறந்துவிட்டது. முதல்நாள் எந்த உடை அணிந்தார், மதியம் எங்கே சாப்பிட்டார் போன்ற எந்த விவரமும் நினைவில் நிற்பதில்லை. வான்டர்பில்ட்டின் மானிய விண்ணப்பத்திற்கு இறுதி விமர்சனம், அவர் நடத்தும் வகுப்பின் மாதாந்திரத் தேர்வு, வியாழன் மதியம் நடக்கும் ஆராய்ச்சிக்கூட்டம் போன்ற அவசியமான வேலைகளில் அவர் உடலும் மூளையும் இயந்திரம்போல் செயல்பட்டன. மனம் தனியாகப்பிரிந்து வேறெங்கோ திரிந்தது.
சென்றவாரம் வரையில் குளிரும் உடலைப் பாதித்தில்லை, இருண்ட வீடும் மனதை வருத்தியதில்லை. இப்போது எல்லாம் மாறிவிட்டது. கலிNஃபார்னியாவிலும், ஃப்ளாரிடாவிலும் வாழும் அவருடைய நண்பர்கள், “இருபது வருஷமா ஷிகாகோவை விட்டு நகராம இருக்கீங்களே. உடம்புக்கு குளிர் பழகிடிச்சு போலிருக்கு” என்று கேலிசெய்வதுண்டு.
“அந்த அளவுக்குப் போகமாட்டேன். பொறுத்துக்க முடியுது, அவ்வளவுதான்.”
இப்போது பொறுக்க முடியவில்லை.
ஷிகாகோ வந்ததிலிருந்து சோமசுந்தரத்துக்குப் பழக்கப்பட்ட வீடு அது. கண்ணைக்கட்டி விட்டாலும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் செல்லமுடியும். இரண்டு பையன்களுடன் அவரை ஓஹேர் விமான நிலையத்திலிருந்து அழைத்துவந்து தன்வீட்டில் தங்கவைத்த நண்பர் மணிவாசகம், “வீடு வாங்கேன், சோமு! எதுக்கு அபார்ட்மென்ட் தேடணும்னு சொல்றே?” என்று அறிவுரை தந்தார்.
“நேத்துதான் இங்கே காலை வச்சிருக்கேன், மணி! ‘மனி’ வேண்டாமா?”
“நான் உனக்குத் தரவேண்டிய நாலாயிரம் டாலர் வட்டியோட நிக்குதே.” சில ஆண்டுகளுக்குமுன் மணிவாசகம் குடும்பத்துடன் யூ.எஸ். வருவதற்கு ரூபாயில் கொடுத்த கடன். ‘இப்போ எனக்கு வேணாம். உன்கிட்டேயே இருக்கட்டும், எப்பவாவது உதவும்’ என்று விட்டுவைத்த தொகை.
“அது போதுமா?”
“தாராளமா போதும். நம்ம ஊர்லேதான் ஃப்ளாட் கட்டறதுக்கு முன்னாலேயே கால்பணம் வாங்கிடுவாங்க. இங்கே, நிலையான வேலை இருந்தா போதும், கடன்தர காத்திட்டிருக்காங்க” என்று நம்பிக்கை அளித்தார்.
ஆரம்பகாலத்தில் பையன்கள் அவரோடு வாழ்ந்தார்கள். பள்ளிப்படிப்பை முடித்தபிறகு அவர்கள் வீட்டிற்கு வந்தாலும், எப்போதாவது வருகைதரும் விருந்தினர்போல் ஒருசில நாட்களுக்கு மேல் தங்கவில்லை. அதனால், வேலையிலிருந்து திரும்புகையில் யாருமில்லாத வீட்டிற்குள் நுழைவது அவருக்குப் புதிதல்ல.

கதவைத்திறந்தார் சோமசுந்தரம். காலையிலேயே பொன்மணி வெளியே செல்லப்போவதாகச் சொல்லியிருந்தாள். இன்னும் திரும்பவில்லை போலிருக்கிறது. ஒரு முக்கியமான கடிதத்தை எதிர்பார்த்து அவர் மூன்றுமணிக்கே வீட்டிற்கு வரப்போவது அவளுக்கு எப்படித்தெரியும்? கோடை விடுமுறை தொடங்கியதால், பையன்கள் இருவரும் தாத்தாபாட்டி வீட்டில், அதாவது பொன்மணியின் பெற்றோர்களிடம். அவருடைய அம்மாவும் சிவனடி சேர்ந்து சில ஆண்டுகளாகியிருந்தன.
நுழைந்ததும், தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச் சென்ற கடிதங்களைத் தரையிலிருந்து பொறுக்கினார். ஜெனிவா காலேஜிலிருந்து வந்த கடிதஉறையைக் கண்டதும் நிம்மதி. அது சொல்லும் செய்தி என்னவென்று அவருக்குத் தெரியும். சிலநாட்களுக்குமுன் நண்பர் தொலைபேசியில் ஒருநிமிடத்திற்குள் அதை வேகமாகச் சொல்லியிருந்தார். சோமசுந்தரம் தாங்க்ஸ் என்ற ஒருவார்த்தை சொன்னதும் பேச்சு முடிந்தது.
பொன்மணியிடம் தான் வாயால் சொல்வதைவிட கடிதத்தை அவளே பிரித்துப் பார்க்கட்டுமே என்று தொலைக்காட்சிக்குமுன் வைத்தார். அவர் எதாவது கருத்து தெரிவித்தால், சுருக்கென்று எதாவதுசொல்லி, அதற்கு நேரெதிரான கொள்கையைப் பிடித்துக்கொள்வது அவள் சுபாவம். வைரமுத்து கவிதையின் வளம், பாலகுமாரன் கதைகளின் புதுமை போன்ற அபிப்பிராயங்களை ஏற்காவிட்டால் தொலைகிறது, என விட்டுவிடலாம். ஆனால், எதிர்காலத்திற்கு அவர்செய்த இந்தமுடிவில் அவளுடைய முழு ஒத்துழைப்பும் அவசியம்.
திருமணமான புதிதில் இருவரின் உடல்தேவை இருவரையும் சேர்த்து கட்டிப்போட்டது. ஆண்டுகள் செல்லச்செல்ல அந்தக் கயிற்றின் பல இழைகள் பிரிந்து, நைந்து, அறுந்தும்போய்விட்டன. பொன்மணிக்கு எந்த நேரத்திலும் தூக்கம் வரும். அதுபோல்தான் ஆசையும். ஆனால், சோமசுந்தரத்தின் மனம் கிளர்ச்சியடைய பிள்ளைகள் தூங்கி, பக்கத்துவீடுகளில் தொலைக்காட்சிகளை நிறுத்தி நிசப்தமாக இருக்க வேண்டும். வீட்டில் அந்த நாலுபேருக்குமேல் யாராவது இருந்து சத்தம் எழுப்பினால் ஆபத்து. அவருக்கு ஆசை போய்விடும், மனம் லயிக்காது, உறவுக்கு உடல் ஒத்துழைக்காது.
“சின்னவன் பத்தாவது, பெரியவன் ப்ளஸ் ஒன். இன்னும் ரெண்டு வருஷத்திலே சின்னவனும் காலேஜுக்குப் போயிருவான். அப்புறம் நமக்கு ரெண்டாவது தேன்நிலவுதான்.”
“ஆமாமா. இப்படித்தான் ரொம்ப நாளா ஆசை காட்டியாறது.”
ஆறுமாதங்களாக அவளுடைய உறவுக்காரன் ஒருவன் சினிமா எடுப்பதாகச்சொல்லி அவர்கள் வீட்டில் தங்கியிருந்தான். அவனை முதலில் பார்த்தபோது சினிமாவில் நடிக்க வந்திருக்கிறானாக்கும் என்று நினைத்தார். கட்டுமஸ்தாக உடல், களையான முகம், நெளிந்த தலைமயிர்.
“அத்தான்! கதை வசனம் எழுதியிருக்கேன். படிச்சுசொல்லுங்க!” என்றான் பார்த்திபன்.
“பெரிய புராணத்தையும், புறநானூறையும் கட்டிண்டு அழறவருக்கு சினிமாக்கதையைப் பத்தி என்ன தெரியும்? என்கிட்டே கொடு! நான் பாக்கறேன்” என்று பொன்மணி இடைமறித்தாள்.
வீட்டிற்குத் தெரியுமுன் ஊருக்கு விஷயம் தெரிந்துவிடும் என்று சொல்வார்கள். அவருக்கே சந்தேகமாகத்தான் இருந்தது. சிலமாதங்களாக, ‘இன்னைக்கு வேண்டாம்’ என்று அவர் சொல்வதற்கு பதில் ‘தூங்குங்க! நாளைக்கு நீங்க வேலைக்குப் போகணும்’ என்று அவள் மறுத்தாள். குடும்பமாக அமெரிக்காவில் குடியேறிவிட்டால் விஷயம் அடங்கிவிடும் என்று நினைத்தார். அங்கே கல்லூரியில் சேர்ந்து படித்தால் பொன்மணியின் மனம் விசாலப்படும். இருவருக்கும் நடுவில் பேசவும், பகிர்ந்துகொள்ளவும் உடலுறவைத்தவிர வேறு பொதுவான விஷயங்கள் வளரக்கூடும். ஏற்கனவே எதாவது தவறு நடந்திருந்தாலும் பாதகமில்லை. கண்ணகி செய்யவில்லையா? ஒரு ஆணும் மனைவியை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம்.
“ஜெனிவா காலேஜ்லே ப்ரொஃபசர் வேலை காலி இருக்குதாம். மணிவாசகம் கூப்பிட்டு அப்ளை செய்யச்சொன்னாரு. எனக்கும் ரிசர்ச் செய்ய ஆசை. அங்கே வாய்ப்பு கிடைக்கும்னு தோணுது.”
“சுவிஸ் நாட்டுக்கெல்லாம் நான் வர்றதா இல்லை.”
“நான் சொல்ற ஜெனிவா அது இல்லை. இது ஷிகாகோ பக்கத்திலே இருக்குது.” அந்த பூகோள விவரம் அவள் மனதை மாற்றியதாகத் தெரியவில்லை. ஆனால், மறுத்து எதுவும் சொல்லாதது அவருடைய நம்பிக்கையை வளர்த்தது. எப்படியும் பேசி அவள் மனதைத் திருப்பமுடியும் என்று நினைத்தார். அவளுக்காக சோஃபாவில் அமர்ந்து காத்திருந்தார். வீட்டில் நுழைந்ததும் கடிதம் அவள் கண்ணில்படும். அதை அவள் பிரித்துப்படித்ததும் அவளை ஒருவார்த்தை மேலே பேசவிடாமல் சோஃபாவிலேயே மகிழ்ச்சியில் திளைக்கவைத்து எதிர்காலத்திற்குக் கோடிகாட்டினால் சம்மதம் கிடைத்த மாதிரிதான்.
மூன்று, நான்கு என்று காலம் நகர்ந்தது. ஏழுமணிக்கு பசிபொறுக்கமுடியவில்லை. சமையலறையில் கையில் கிடைத்ததை வாயில் திணித்துவிட்டு எதாவது குறிப்பு எழுதிவைத்திருப்பாளோ என்று வீடெங்கும் தேடினார். அன்று பொன்மணி வீடுதிரும்பவில்லை. பார்த்திபனையும் காணோம்.
இரண்டுமாதம் கழித்து மூன்றுபேராகச் சுருங்கிய அவர் குடும்பம் ஷிகாகோ செல்ல விமானத்தில் ஏறியது. பையன்கள் அமெரிக்க வாழ்வின் பரபரப்பில் அம்மாவை விரைவில் மறந்துபோனார்கள். பார்த்திபராஜா என்றொருவன் கதை, உரையாடல் எழுதுவதோடு படங்களிலும் நடித்து பிரபலமடைந்ததாக ஷிகாகோ தமிழ்க்கூட்டத்தில் அவரிடம் யாரோ சொன்னார்கள். பொன்மணியைப் பற்றி அவர் வாய்திறக்கவில்லை.

வேலைக்கணிந்த கோட், டை, பான்ட்ஸ{க்குப் பதிலாக தடியான தளர்ந்த வீட்டுஉடைக்கு மாற்றிக்கொண்டு சோமசுந்தரம் சமையலறையை ஒட்டிய மேஜையில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கினார். வாரநாட்களில் இதுபோல் அவர் அமரும்போது அதில் செய்திகள் நகரும். மாலை உணவைக் கொண்டுதரும் பையன் வாசல்மணியை அடிப்பான். அன்று, தினப்படிக்கு ஒருமணி முன்னதாக வீடுதிரும்பியதால் தொலைக்காட்சியில் அவருக்குப் புரிபடாத நிகழ்ச்சிகள். அதை நிறுத்திவிட்டு உணவிற்குக் காத்திருந்தார்.
இத்தனை ஆண்டுகளில் அலுவல் சம்பந்தமாக எத்தனையோ பெண்களுடன் அவர் பழகியது உண்டு. சிலருடன் சாப்பிட வெளியே செல்லும்போது கைகள் இடிக்கும் நெருக்கத்தில் அமர்ந்திருக்கிறார். ஆனால் குழந்தையின் கவனம்போல், அவர்கள்மேல் அவர்பார்வை சிலநொடிகளுக்குமேல் நீடித்தது இல்லை. பொன்மணியின் இளமைப்பூரிப்பும், பெண்மைக்கவர்ச்சியும் எப்போதோ மறந்துவிட்டன. வெகுகாலமாக பெண்குரல் கேட்காத அந்தவீடு இரண்டுநாட்களாக வறண்ட பாலைநிலத்தைப்போல் தோன்றியது.
வீட்டைப்போலத்தான் ஜெனிவா பல்கலைக்கழகமும் அவருடைய வாழ்க்கையோடு பிணைந்துவிட்ட ஒன்று. அவர் வெளிய+ர் சென்றாரென்றால் விஞ்ஞான மாநாடுகளில் கலந்துகொள்ளவோ, சிறப்புரை வழங்கவோ, மானிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கவோதான். சொந்தப்பயணம் மேற்கொண்டதில்லை. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியபோதும் மாணவர்களின் கட்டுரைகளைத் திருத்துவது, வகுப்புப் பாடங்களுக்குத் தயார்செய்வது, விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவது போன்ற கடமைகளில்தான் நேரத்தை செலவிட்டார்.
பொதுமக்கள்நல துறையின் சேர்மன் என்ற பட்டத்துக்கு ஆசைப்பட்டு சோமசுந்தரம் சென்னையிலிருந்து வந்து அந்தப் பதவியை ஏற்றார். அவருக்குமுன் வேறுயாரும் அந்த நாற்காலியில் அதிகநாள் நீடித்தது இல்லை. காரணம் விரைவிலேயே தெரியவந்தது. நகர்த்தமுடியாத மூன்று பெருச்சாளிகள். ஆர்வமில்லாத நான்கு கற்றுக்குட்டிகள். யாரும் யாருடனும் ஒத்துப்போகவில்லை. அவர்களுக்குள் ஒற்றுமை தலைவருக்கு எதிர்ப்புக்காட்டுவதில் மட்டுமே. எந்தப்போரிலும் நிலைத்து நிற்பவருக்குத்தான் வெற்றி. அவருக்கு வாழ்வில் வேறெதுவும் இல்லை. மனைவியைத் திருப்திப்படுத்த வேண்டாம். வளர்ந்துவிட்ட மகன்களுக்கு பணஉதவி செய்வதைத் தவிர வேறு பொறுப்பு இல்லை. இரண்டாண்டுகளுக்குள் ஒத்துழைக்காதவர்களை வெளியேற வைத்தார். ஆர்வமுள்ள புது இரத்தத்தை சேர்த்தார். கல்லூரி பல்கலைக்கழகமாக விரிவடைந்தபோது பொதுமக்கள்நல துறையும் வளர்ந்தது.
பையன்களில் ஒருவன் மருத்துவ டாக்டர். இன்னொருவன் வாஷிங்டனில் நல்லபதவி வகித்தான். இங்கேயே வளர்ந்த இந்தியப்பெண்களை அவர்களே தேடிக்கொண்டார்கள். அவர் உதவி அவர்களுக்கு அவசியமில்லை. பேரன் பேத்திகளுக்கு பாட்டி இல்லாத தாத்தா சுவாரசியமாய் இல்லை. வீட்டின் தனிமை பழகிவிட்டது. ஜெனிவா பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள்நல துறைதான் அவருடைய குடும்பம். அதன் அங்கத்தினர்களான பேராசிரியர்முதல் மாணவர்கள்வரை அவரிடம் மதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய கண்காணிப்பில் அது நாட்டின் பத்து சிறந்த மையங்களில் ஒன்று என்ற பெயர் (யு.எஸ். நியுஸ் ரிபோர்ட்டில்) பெற்றது.
சென்றவாரம் வரையில் வீடும், வேலையும் நிரந்தரம் என நினைத்திருந்தார். இரண்டையும் துறந்துவிட்டு முதியோர் இல்லத்தில் சீட்டு விளையாடுவதற்கும், எங்கோ ஃப்ளாரிடாவின் பச்சைப்புல்வெளிகளில் எலுமிச்சை அளவிலான வெள்ளைப்பந்தை அடித்துவிட்டு அதைத் தேடிப்போவதற்கும் அவருக்கு விருப்பமில்லை. முதுமையில் மாடிப்படி ஏறமுடியவில்லையா, வீட்டின் தரைத்தளத்திலேயே வசித்தால் போகிறது. கை நடுங்குகிறதா, வீட்டை வாரமொருமுறை சுத்தம்செய்யவும், கோடையில் புல்வெட்டவும், குளிர்காலத்தில் பனியை அகற்றவும் ஏற்கனவே ஆட்கள் இருப்பதுபோல், காரோட்டவும் ஒரு ஆளை அமர்த்திக்கொள்ளலாம். அதேபோல, வேலையின் பொறுப்புகளை உடல் சுமக்க முடியவில்லையா, முதலில் சேர்மன் பதவியைத் துறக்கலாம். இப்போது அவரிடம் ஒரேஒரு பிஎச்.டி. மாணவன். அவனும் கிட்டத்தட்ட முடிக்கப்போகிறான். அவனுக்குப் பிறகு சொந்த ஆராய்ச்சியில் மட்டும் கவனம் வைக்கலாம். அதுவும் இயலாவிட்டால், பாடம் மட்டும் நடத்தலாம். எது முடிகிறதோ அது. ஆனால், அந்த வீட்டிற்கும், ஜெனிவா பல்கலைக்கழகத்திற்கும் அப்பாற்பட்டு வாழ்க்கையில் ஏதும் மிச்சம் இருப்பதாக அவர் நினைத்தும் பார்த்ததில்லை.
அவருக்கு ஒரு அவா. ஒருநாள் வேலையிலிருந்து வீடுதிரும்புகிறார். செட்டிநாடு உணவை அனுபவித்துச் சாப்பிட்டுவிட்டு படுக்கிறார். என்றும் இல்லாத களைப்பு. காரணம் தெரியவில்லை. ஆழ்ந்த துயில். எவ்வளவு ஆழம் என்றால் அதில் மூழ்கியவர் மேலே வரவில்லை. மறுநாள், அவரைக் காணாமல் ஜெனிவா மாணவர்கள் வீட்டிற்குவந்து பார்க்கிறார்கள். இரங்கல் கூட்டம் நடக்கிறது. செய்தி தெரிந்து இரண்டு மகன்களும், மருமகள்களும், பேரன் பேத்திகளும் வருகிறார்கள். எல்லாம் ஓய்ந்து போகிறது. யாருக்கும் நஷ்டமில்லை. விரைவில் அவர்கள் அவரை மறந்துவிடுகிறார்கள். அவரை நினைவுபடுத்த அவர்பெயரில் ஒரு பேராசிரியர் பதவி நிறுவப்படுகிறது, அவ்வளவுதான்.
நினைவுகளின் ஓட்டத்தை வாசல்மணி நிறுத்தியது. எழுந்துசென்று கதவைத்திறந்தார். சூடான உணவுத்தட்டை வாங்கிக்கொண்டு நுழைவிடத்து மேஜைமேலிருந்த அட்டைப்பெட்டியைத் திறந்து மூன்று ஒற்றை டாலர் நோட்டுகளை எடுத்துக்கொடுத்தார்.
“தாங்க்யு, சார்! அனுபவித்து சாப்பிடுங்கள்!” தினம் சொல்வதுதான்.
தட்டை சாப்பாட்டுமேஜைமேல் வைத்து மேலுறையைப் பிரித்தார். அறுநூறு கலோரிக்குள் அடங்க வேண்டும், சைவ உணவு என்பவை அவருடைய வேண்டுகோள். மற்றபடி சாப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அன்று வெஜிடப்ல் பிரியாணி-குருமா, சப்பாத்தி-தால், தயிர்ப்பச்சடி-எலுமிச்சை ஊறுகாய். கடைசியில் அரைக்கோப்பை பாயசம்.
வந்தபுதிதில் ஒரு சமையல்காரி. இந்தக்காலத்தில் இந்திய மாமி கிடைக்கலாம். ஆனால், அப்போது வந்தவள் ஹிஸ்பானியப் பெண். அவளுக்கு நம் சாப்பாடும் தெரியாது. நம் மொழியும் புரியாது. ஒருவாரத்தில் பையன்கள் அவள் சமையலுக்குப் பழகிவிட்டார்கள். அவரால் முடியவில்லை. அவர்கள் கல்லூரிக்குச் சென்றவுடன் மாற்றியமைத்த வழக்கம் இப்போதும் தொடர்கிறது. காலையில் ப்ரெட் டோஸ்ட். மதியம் ஜெனிவா பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் காய்பழங்களின் அடுக்கு, சூப், சான்ட்விச் என்று ஏதோவொன்று. மாலையில் செட்டிநாடு உணவகத்திலிருந்து தமிழகத்து சாப்பாடு.
சாப்பிட்டு முடித்ததும் தட்டுகளையும், கோப்பைகளையும் குப்பையில் போட்டுவிட்டு நூலக அறைக்குச் சென்றார். பெயருக்கேற்ற மாதிரி புத்தகங்கள் சுவரை மறைத்த அலமாரிகளில் கூரைவரை நிரம்பி தரையிலும் மூலைகளிலும் சிதறிக் கிடந்தன. மேஜைமேலிருந்த கணினி அருகிலும் புத்தகங்கள். நாற்காலிகளில் ஒன்றைத்தவிர மற்றவைமேலும் புத்தகங்கள். காலியான அந்த ஒன்றில் அமர்ந்தார்.
பள்ளியில் அவரை மிகவும் கவர்ந்த ஆசிரியர் கண்ணப்பனார். சென்ற திங்கள், அவரின் மகள் சரவணப்ரியாதான் டாக்டர் சாரா நாதன் என்று தெரிந்ததும் பெரியபுராணத்தின் பாடல்களுக்கு அவர் கொடுத்த விளக்கம் நினைவிருக்கிறது, என்று வாயில் வந்துவிட்டது. அதைப் படித்ததெல்லாம் சென்னையில். ஷிகாகோவில் அதற்கெல்லாம் நேரம் வைத்துக்கொள்ளவில்லை. சரவணப்ரியாவிடம் சொன்னது பொய்யாக வேண்டாம் என பெரிய புராணத்தைப் பிரித்தார். பாடல்களின் கடினமான பதங்களுக்கு மட்டும் பொருள் தரப்பட்டிருந்தது. கண்ணில்பட்ட வார்த்தைகள் பரிச்சயமாக சிறிது நேரமெடுத்தது. அவருக்குப் பிடித்தது ஏனாதிநாத நாயனார் கதை. அதைத் தேடிப்பிடித்து படித்தபோது பல ஆண்டுகளுக்குமுன் சென்றதுபோலிருந்தது.

பள்ளிக்கூட இறுதித்தேர்வுகளின் மதிப்பெண் புத்தகத்தை வாங்கிச் செல்லும் மாணவர்களுக்கு ஆங்கில, கணக்கு வாத்தியார்களை நினைவிருக்கும். நன்றிசொல்லி மேலே எங்கே படிக்கப்போகிறார்கள் என்ற விவரமும் தெரிவித்து விடைபெறுவார்கள். மிஞ்சிப்போனால் விஞ்ஞான ஆசிரியரைச் சந்தித்துப் பேசுவார்கள். சரித்திரம், ஓவியம் கற்றுத்தரும் வாத்தியார்களை மறந்துவிடுவார்கள். அதிலும், தமிழாசிரியரின் பெயர்கூட ஞாபகம் இராது. மாணவர்கள் தன்னிடம் விடைபெற வராதது கண்ணப்பனாருக்கு பழகிவிட்டது. ஆனால் பள்ளியைவிட்டுச் செல்லுமுன் சோமசுந்தரம் தன்னைத் தேடிவருவான் என்று எதிர்பார்த்தார், அப்படியொரு நெருக்கம் அவனுடன். அவனும் மறக்காமல் மதிப்பெண் புத்தகத்தை அவரிடம் காட்ட எடுத்துவந்தான்.
“தமிழிலே எவ்வளவு? சோமு!”
“நூத்திஅறுபத்திரண்டு, ஐயா!”
“அவ்வளவா?”
“இருநூறுக்குன்னு ரெண்டாலே பெருக்கியிருக்காங்க. அப்படிப் போட்டதாலதான் மொத்தம் முன்னூத்தி அறுபதுக்கு வந்திருக்கு.”
“பரவாயில்லை, அப்பா சந்தோஷப்படுவார். அப்போ, மேலே படிக்க வேண்டியதுதான்.”
“கிறிஸ்டியன் காலேஜ்லே இடம் கிடைக்கலீங்க. பச்சையப்பாவுக்குத்தான் போகணும். தாம்பரத்திலே வண்டி மாறணுமேன்னு இருக்கு.”
“அதாவது கிடைச்சுதே. என்ன படிக்கிறதா இருக்கே?”
“கணக்கு கேட்டேன், நாசுரல் சயன்ஸ்தான் குடுத்தாங்க. பியுசிக்கு அப்புறம் பி.ஏ. தமிழ் படிக்கலாம்னு இருக்கேன்.”
“தமிழிலே நிறைய படி! ஆனா பிழைப்புக்கு பி.எஸ்ஸி. கிடைக்குமா பாரு!”
மதிப்புக்குரிய தமிழாசிரியரா அப்படிச் சொல்கிறார் என்று அவரை வியப்புடன் பார்த்தான்.
அவர் பேச்சு எங்கெல்லாமோ சுற்றிவளைத்துச் சென்றது. “தமிழை மறக்கச்சொல்லலை, படிச்சிட்டே இரு! தமிழ் கத்துகிட்ட போதும் உன்னைமாதிரி பையன்களுக்கு சொல்லித்தரும் போதும் மகிழ்ச்சியா இருக்கு. வாழ்க்கை அனுபவத்தை கவிதையா எழுதும் போதும் மேடையிலே பேசும் போதும் ஆனந்தமா இருக்கு. ஆனா பணத்துக்கு திண்டாட்டம்தான். பெரிய பெண்ணை சொந்தத்திலே கொடுத்தேன். அதுக்கே கையில் இருந்த பணமெல்லாம் செலவாயிட்டுது. சின்னவளைத்தான் நீ பாத்திருக்கியே, நல்ல புத்திசாலி, அழகும்கூட. அவளுக்கு நிறைய தமிழ் சொல்லித் தந்திருக்கேன். கல்யாணத்துக்கு அதெல்லாம் போதுமா? மருமகப்பிள்ளைக்கு இலக்கிய வாசனையே கிடையாது. பெரிய புராணத்தை இயற்றியது பெரியாழ்வாரான்னு கேப்பார். சினிமா பாட்டிலியும் அர்த்தமுள்ள பாடலை ரசிக்கத் தெரியாது. பஸ்லே போகும்போதெல்லாம் அவர் படிக்கிறது ஓரத்திலே சாயம்தடவின புத்தகங்கள்தான். ரெண்டாவது பெண்ணுக்காவது தமிழை நல்லா ரசிக்கத்தெரிஞ்சவன் கிடைக்கணும்னு ஆசை. என்ன செய்யப்போறேன்னு தெரியலை.” பேசி முடித்ததும் அவனை அர்த்தத்துடன் பார்த்தார்.
பேச்சின் பொருள் புரிந்ததுபோல் இருந்தது. அவர்வீட்டிற்குச் சென்றபோது அவர்களுக்கு காப்பி எடுத்துவந்துவைத்த உருவம் மனதை நிறைத்தது. முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை. ஆனால் காலக்கணக்குப்படி உடலில் ஹார்மோன்களை உமிழும் உறுப்புகளுக்கு அது தெரியவில்லை. வாளிப்பான உயரம். செழிப்பான உடல். நீண்ட பின்னல். அவளை மணந்துகொள்ள பணம் எதற்கு? உலாகாயதம் அறியாத காளைப்பருவத்து சோமசுந்தரம் அப்படித்தான் நினைத்தான். ஆனால், இருபத்திமூன்று வயதில் உலகவிவரம் தெரிந்த பிறகு, பதினாறைக்கூட தாண்டாமல் பொன்னாலும் மணியாலும் இழைத்த பொன்மணி தேடிவந்தபோது, தன்னைவிட இரண்டுவயது மட்டுமே குறைந்த, தகப்பனில்லாத ஒரு ஏழைப்பெண்ணின் நினைவு ஏனோ அவனுக்கு வரவில்லை. வலியவரும் சீதேவியை யாராவது தள்ளுவார்களோ?

அவர் தள்ளிவிட்டார். சாதாரண சீதேவிகூட இல்லை, ஒருமனிதனை எல்லா விதங்களிலும் மகிழவைக்கும் ஒரு பொக்கிஷம். பார்ப்பதற்கு மட்டுமல்ல, பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிய ஒப்பற்ற ஓருயிர். வாழ்க்கைத்துணைவி என்கிற பதத்திற்கு இலக்கணம். எப்படிப்பட்ட பேரிழப்பு! கேவலம் பொன்னுக்கும் மணிக்கும் ஆசைப்பட்டு வைரத்தைத் தொலைத்த முட்டாள்தனம். அதை நினைந்து நினைந்து படுக்கையில் புரண்டார்.
மறுநாள் அலாரம் அடித்து அரைமணி கடந்த பிறகுதான் விழிப்பு வந்தது. போர்வையின் வெம்மையிலிருந்து வெளியேவரப் பிடிக்கவில்லை. வீடு, பல்கலைக்கழகம் இரண்டுமே கசந்தன. பொருளற்ற பொருட்களென்ற சலிப்பு.
மானியத்திற்காக சரவணப்ரியாவும் மற்றவர்களும் அனுப்பிய விண்ணப்பம் அவருக்குப் பிடித்திருந்தது. அதிலும் சரவணப்ரியாவின் தொடக்க ஆராய்ச்சி மிகச்சிறப்பு. அவளை அழைத்து மானியம் கிடைக்க நல்ல வாய்ப்பு என்று நம்பிக்கை தந்துவிட்டு, ஒருவாரத்திற்குள் இல்லை என்று மறுத்தது அவர்மனதை வாட்டியது. அது அவருடைய தவறு இல்லை. பத்துநாட்களுக்குமுன் எழுத்தில் சொன்னதை அவள் நேரில் விவரிக்காமல் தடுக்க ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. அது ஃபாஸ்ட்டாக்கிற்கும் தெரியும். அவர் என்னசெய்ய முடியும்?
இரண்டுநாட்களாக சரவணப்ரியாவை நினைத்ததும் அவளுடைய சிறுவயதுத் தோற்றம்தான் அவர்மனதை வியாபித்தது. அதைத் தள்ளிவிட்டு திங்கள் அவர்பார்த்த அவள் உருவத்தை மனதுக்குக் கொண்டுவரப் பார்த்தார். நன்கு மடிக்கப்பட்ட சிவப்பு பான்ட்ஸ், இளஞ்சிவப்புச் சட்டைக்குமேல் இரட்டைச்சர முத்துமாலை, பாதி திறந்த வெண்ணிற அங்கி. திரைக்கு அருகில் நின்று அதில் விழுந்த படங்களை விவரிப்பதில் அவள் கவனம்வைத்திருந்தாள். ஆனால் அவர் கண்கள் அவள்மேல். சென்னையில் சேகரித்த விவரங்களை நீக்கிவிட்டு மீதி ஆராய்ச்சியை அவள் தன்னம்பிக்கையுடன் பேசியது அவருக்குப் பிடித்திருந்தது. பிறகு, மற்றவர்கள்பேச்சில் பாதிகவனம் செலுத்தி அவள் கவனிக்காதபோது அவள்முகத்தில் பார்வையை வைத்திருந்தார். அப்போதே கவலையும் சந்தேகமும் அதில் தென்பட்டன. அவளுடைய அறைக்குச் சென்று அவள் அருகில்நின்று பேசியது நினைவுக்கு வந்தது. அவள்பேசும் தமிழைக் கேட்டாலே கண்ணப்பனாரின் மகள் என்று சொல்லிவிடலாம். என்ன கம்பீரமான தோற்றம். கச்சிதமான ஆனால் இறுக்கமில்லாத உடையில் சீரான உடல். சாயமேற்றியிருந்தாலும் பின்னலிட்ட கூந்தல். இந்த வயதிலும் எந்தவிதமான செயற்கைப்பூச்சும் இல்லாமல் முகத்தில் என்ன வசீகரம். என்றெல்லாம் அவர் ரசிப்பதற்குள் பதின்மூன்று வயதுப்பெண்ணின் கறுப்புச்சாந்திட்ட கள்ளம்கபடமற்ற முகமும், கையகல வெள்ளைத்துணியால் நீட்டிய பாவாடையும், சாயம்போன தாவணியும் மறுபடி ஆக்கிரமித்தன.
அவளை மறுபடி பார்க்கமுடியுமா? அவளை அழைத்துப்பேச கூச்சமாக இருந்தது. என்ன காரணத்திற்கு சரவணப்ரியாவை அழைப்பது? ‘க்ரான்ட் கிடைக்கப்போகிறது எனச் சொல்லி கடைசிலே கையை விரிச்சிட்டீங்களே?’ என்று பட்டென்று சொன்னால். ‘உங்க பேச்சை நம்பிட்டு ஸ்டாட்டுக்குன்னு ஒருத்தியைவேற வரவழைச்சேன். அவளையும் ஏமாத்தியாச்சு.’
தந்தையின் படத்தைக் கொடுத்ததற்காக அவள் சிறிது நன்றி காட்டலாம். மற்றபடி அவளுக்கும் அவருக்கும் இனி தொடர்பு எப்படி உண்டாகும்? இது வெறும் ரயில்சினேகம் போலத்தான் என்று விவேகம் சொன்னாலும் மனம் அதை ஏற்கமறுத்தது. நினைவுகள் அவளையே சுற்றின. கடைசியில், அவளை சந்திப்பதற்கு மட்டுமல்ல, அவர் வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தைத் தருவதற்கும் வழி ஒன்று புலப்பட்டது.
குளிரில் வீட்டைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என்று தீர்மானித்து போர்வையை உதறிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தார். பல்கலைக்கழகத்தை அழைத்து வேலைக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்தார். காலை உணவிற்குப் பிறகு தமிழ்ப் புத்தகங்களின் குவியலில் அவர் தேடிய நாவல் கிடைத்ததும் அதன் முதல்பக்கத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு கணினிக்குமுன் அமர்ந்தார்.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்