பத்துகேள்விகளும் சில பதில்களும்

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

எம் வி குமார்


மு.கருணாநிதி குறித்த விவாதம் ஓரளவாவது முழுமையினை அடைந்த பிற்பாடு என்னுடைய கருத்துக்களினை தொகுத்துக் கூறலாமென்று எண்ணினேன். இவ்விவாதத்திலே பொதுவாக கருதப்படாது போன சில கூறுகள் உண்டு. அவையாவன.

1] இவ்விவாதம் ஜெயமோகனால் தன்னிச்சையாகத் துவங்கப்பட்டதல்ல. இதை துவக்கியவர் கவிஞர் அப்துல் ரகுமான். மு கருணாநிதி அவர்கள் அமர்ந்திருந்த மேடையில் வைத்து தமிழ் சிற்றிதழ் எழுத்தாளர்களை அவமதிக்கும் முகமாக அவர்கள் மு.கருணாநிதியின் காலடியில் விழுந்துவிட்டதாக கூறியவர் அவரே. நவம்பர் மாத அமுதசுரபி இதழில் அளித்த பேட்டியில் அவ்வாறு கூறக்காரணம் அசோகமித்திரன் கருணாநிதி அவர்களை முன்னிலைப்படுத்தி தன் உரையை துவாங்காமையே என்று அவர் சொல்லியுள்ளார். ஜெயமோகன் மறு நாள் அளித்தது அப்துல் ரகுமானுக்கான பதிலேயாகும். அப்பதில் எப்படியானாலும் சிற்றிதழ் சூழலில் இருந்து சொல்லப்படும். சொல்லப்பட்டேயாகவேண்டும். சிற்றிதழ்சார்ந்த இலக்கிய விமரிச்னம் பல்லாண்டுகளாக சொல்லிவரும் ஒரு மதிப்பீட்டை அத்தனை சுலபமாக கைகழுவி விட முடியாது. அப்பதில் ஜெயமோகனால் அளிக்கப்பட்டமையினால், அவர் மீது இப்போது ஊடக கவனம் குவிந்திருப்பதனால் பெரிய விவாதங்களை கிளப்பியது. அதுவும் கூட அக்கூட்டம் குறித்த செய்தி தினமணியில் வர, அச்செய்திக்கு சின்னக்குத்தூசி முரசொலியில் ஒரு கடுமையான பதில் அளித்தமையினால் ஏற்பட்ட கவனமே. ஜெயமோகன் இப்பதிலை சொல்லாவிடில் சுந்தர ராமசாமி சொல்லியிருப்பார். அப்படி தைரியமாக சொல்லக்கூடியவர்கள் மிகச்சிலரே. இதை ஏன் யாரும் கருத்தில் கொள்ளவில்லை ?

2] வண்னதாசன், ஞானக்கூத்தன் முதலியோரின் நடத்தை பற்றிய ஜெயமோகனின் கருத்து அவருக்கும் அவர்களுக்குமான தனிப்பட்ட உறவு சம்பந்தமானது. அது பொதுவிவாதத்துக்குருரியதல்ல. அதை ஜெயமோகன் பேசியிருக்கலாகாது. ஒருவர் பிறரை சமர்சம் செய்வதற்காக குற்றம்சாட்டமுடியாது. சிற்றிதழாளர் அரசாங்கமேடைகளில், அர்சியல்மேடைகளில் தோன்றுவதும் பேசுவதும் புதிய விஷயங்களுமல்ல.

3] மு கருணாநிதி இலக்கியப்படைப்பாளியா என்ற விவாதத்தை எழுப்புவதற்கு முன்பு தெளிவாக்கப்படவேண்டிய விஷயம் அவரை விமரிசித்து கருத்துகூறும் சுதந்திரம் தமிழகத்தில் உண்டா என்பதே. ஜெயமோகன் சொன்ன கருத்து கடுமையான சொற்களில் முன்வைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த நிராகரிப்பும் அல்ல. அக்கருத்துக்கு வந்த பொதுவான எதிர்வினைகள் அனைத்துமே மிகக் கடுமையான வசைகள், அவதூறுகள், மிரட்டல்கள் என்ற அளவிலேயே இருந்தன. தமிழகத்து அறிவுஜீவிகள் உண்மையானவர்களாக இருந்தால் முதலில் கவலைப்படவேண்டியது இந்த நெருக்கடிநிலை இங்கு இருப்பதைப்பற்றித்தான். அப்படி ஒரு கருத்தை சொல்வதே பெரும் பிழை, அபச்சாரம் என்ற அளவிலேயே நமது இடதுசாரிகள் கூட கருத்து சொல்லியுள்ளனர். இது துரதிர்ஷ்டவசமான ஒன்று.

4] ஓர் எளிய இலக்கியக்கருத்துக்கு பதிலாக கபோதி முதலிய சொற்களை பயன்படுத்தி மூத்த எழுத்தாளர் அளித்துள்ள பதில் வருத்தம் தருவது. நாச்சார்மடம் எவரையுமே குறிபிட்டு தாக்காத கதை. அதற்காக அணிதிரண்ட நமது படைப்பாளிகள் இவ்விஷயத்தில் காட்டும் மெளனம் சங்கடம் அளிக்கிறது

5]இந்த கருத்து ‘பரபரப்புக்காக ‘ சொல்லப்படும் ஒன்று என்று சொல்லி பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறார்கள். இதே வாதத்தை திருப்பி அப்துல் ரகுமான் பரபரப்பை கிளப்புவதற்காகவே அப்படி பேசினார் என்று ஏன் சொல்லக் கூடாது ? ஜெயமோகன் போன்ற அறியப்பட்ட எழுத்தாளரை தாக்கி எழுதுவதன் மூலம் எதுவுமே பொருட்படுத்தும்படி எழுதாத எழுத்தாளர்கள்பலர் அங்கீகாரம் காண துடிக்கிறார்கள் என்று ஏன் சொல்லக் கூடாது ? ஜெயமோகன் அளித்தது எதிர்வினை. அது பரபரப்பை கிளப்பினால் என்ன அர்த்தம் ? சின்னக்குத்தூசியே அதை பரபரப்பாக ஆக்கியவர். ஜெயமோகன் சொன்ன கருத்து தமிழில் கடந்த 50 வருடங்களாக இருந்துவருவதுதான் . அது இப்போதுதான் கவனம் பெறுகிறது என்றுதானே பொருள் ? மாற்றுத்தரப்பின் பதற்றம் அதைத்தானே காட்டுகிறது ?

பாரதி ,புதுமைப்பித்தன் ஆகியோரெல்லாம் சாதிவாதிகள் என்று இங்கே கடுமையான விரிவானவிமரிசனம் வந்தது. அப்போது எழாத குரல்கள் இப்போதுமட்டும் ஏன் எழுகின்றன ?

6] தமிழில் என்றுமே தீவிரமான ஒரு கருத்துச்செயல்பாடு அங்கீகாரம் பெறாமல் ஆனால் தன் சுய சக்தியினால் செயல்பட்டுத்தான் வருகிறது. அங்கீகாரம் பெற்ற பிரபலப்போக்குகளை அது தொடர்ந்து விமரிசித்து வருகிறது. அவ்வெதிர்ப்பை அது பதிவும் செய்துவருகிறது. புதுமைப்பித்தன் ராஜாஜியை கடுமையாக விமரிசித்து நிராகரித்து எழுதினார். ‘இவருக்கு இப்படி எழுத யார் அதிகாரம் கொடுத்தது ? ‘ என்று ராஜாஜி கேட்டார். கல்கி எழுத்தாளரே அல்ல என்று க.நா.சுப்ரமணியம் எழுதினார். தான் உட்பட்ட் வேறு எழுத்தாளர்களை முன்வைத்து படித்துப்பாருங்கள் என்று சொன்னர்.அகிலன் ஞானபீட பரிசு பெற்றபோது அகிலனின் இலக்கியம் ‘போலிமுகம் ‘ கொண்டது என்றும் , அவர் பேசும் இலட்சியவாதம் ‘ரிக்கார்டு டான்ஸ்காரி தன் தொடையைக் காட்டும்போது அங்கே சங்கராச்சாரியாரின் படம் ஒட்டப்பட்டிருப்பதுபோலத்தான் ‘ என்றும் சுந்தர ராமசாமி எழுதினார். புதுமைப்பித்தனும் க.நா.சுப்ரமணியமும் தனக்கு யாரெரென்றே தெரியாத ஆசாமிகள், பொறாமையால் அப்படி எழுதுகிறார்கள் என்றே கல்கி சொன்னார். அகிலன் சுந்தர ராமசாமியை பொறாமையாலும் புகழாசையாலும் எழுதிய அநாமதேயம் என்றுதான் சொன்னார்.

இப்போது ஜெயமோகன் சொன்ன இதேகருத்து இதைவிட நேரடியாக , கடுமையாக மு.கருணாநிதியும் இருக்கும் மேடைகளில் ஜெயகாந்தனால் சொல்லப்பட்டதுதான். சி.என்.அண்ணாதுரைக்கான அஞ்சலிக்கூட்டத்திலேயே ‘அவரை மூடர் அறிஞர் என்று சொல்கிறார்கள், பெருமூடர் பேரறிஞர் என்கிறார்கள் .நான் அவரை நேர்மையான அரசியல் வாதியாக மட்டுமே பார்க்கிறேன். ‘என்று மு கருணாநிதி அவர்கள் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது வரலாறு. ஜெயகாந்தன் எப்போதுமே மு.கருணாநிதியை எழுத்தாளர் என்று ஏற்றுக் கொண்டவரல்ல. நூறுகூட்டங்களிலாவது அதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இப்போது ஜெயகாந்தனை முரசொலி இலக்கிய இமயம் என்கிறது.

சமீபத்தில்தான் சுந்தர ராமசாமி சிவாஜி கணேசனை ஒரு நல்ல நடிகரல்ல என்று தினமணியில் எழுதி அது விவாதமாக மாறியது. சிவாஜி கணேசன் நாடறிந்த நடிகர். சிலரால் ஒரு சகாப்தம் என்று கருதப்படுபவர். அவர் இறந்தஉடனே அஞ்சலிகள் நடக்கும்போ தே இக்கருத்து சொல்லப்பட்டது. அக்கட்டுரையில் சுந்தர ராமசாமி மிகத்தெளிவாகவே இவ்விஷயம் மீதான எதிர்வினைகளின் பதற்றம் குறித்து சொல்கிறார் ‘ வாழ்க்கை மீது அக்கறை இல்லாத அறிவுஜீவி மக்களின் ஆசைகளையும் பலவீனங்களையும் தட்டிக் கொடுத்து ஊக்குவித்து அதிகாரம் சார்ந்தோ பணம் சார்ந்தோ ஆதாயங்களை அடைகிறான் ஆனால் சமூக அக்கறை கொண்ட அறிவுஜீவி மக்கள் ஈடுபடும் காரியங்ளை தன் மதிப்பீடு சார்ந்து ஆராய்ந்து வரவெற்கவோ விமரசிக்கவோ கண்டிக்கவோ முற்படுகிறான் ‘ [ அறிவுஜீவிகள் மீதான கற்பனை பயம் ]என்று சொல்லி சுந்தர ராமசாமி கேட்கும் கேள்வி முக்கியமான ஒன்று ‘ ‘சிவாஜி கணேசனின் நடிப்பைப்பற்றி மாறுபட்ட அபிப்பிராயம் இருப்பது குற்றமா ? இதுபோன்ற சிறுபான்மையினரின் கருத்துக்களினால் ஏன் எரிச்சல் அடையவேண்டும் ? எல்லாரும் ஒரே மாதிரி சிந்திக்கவேண்டும் என்று வற்புறுத்துவது எந்த ஆட்சிதத்துவத்தின் குணம் ? ‘ ‘

புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான எழுத்தாளர்கள் புகழ்பெறும் நோக்குடன் அதிரடியாக இக்கருத்துக்களை சொன்னார்கள் என்று எடுத்துக் கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் ?. துரதிர்ஷ்டவசமாக காலச்சுவடு இதழில் அய்யனார் என்பவர் எழுதியுள்ள கட்டுரையை படிக்கையில் காலச்சுவடிலேயே பலருக்கு சுந்தர ராமசாமியின் கருத்துக்கள் கவன ஈர்ப்பு உத்திகள் மட்டுமே என்ற கருத்து இருப்பது தெரிகிறது.

7. மு கருணாநிதி அவர்களை சிற்றிதழாளர் எப்படி மறுக்கலாம் என்று கேட்பவர்கள் இது மாறுபட்ட தரப்புகளுக்கு இடையேயான ஒரு சர்ச்சை என்பதை மறந்துவிடுகிறார்கள். கடந்த 50 வருடங்களில் மு கருணாநிதி அவர்கள் ஒரு முறையாவது புதுமைப்பித்தன் பெயரை சொன்னது உண்டா ? ஒரு முறையாவது நவீன இலக்கியத்தை அங்கீகரித்தது உண்டா ? சாதி மத அரசியல் தலைவர்களுக்கு மூலை முடுக்கெல்லாம் நினைவுசின்னம் அமைத்த நம் அரசுகள் புதுமைப்பித்தனுக்கு ஏன் ஓர் எளிய அடையாளம் கூட அமைக்கவில்லை ? தேவநேயப்பாவாணருக்கும் கி ஆ பெ விஸ்வநாதத்துக்கும் கூட இங்கே நினைவ்வுப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன, ஒரு நவீன இலக்கிய முன்னோடியாவது கெளரவிக்கப்பட்ட்து உண்டா ? இப்போது கண்ணீர் மல்கும் ஆசாமிகள் அதை ஏன் இதுவரை எடுத்து சொல்லவில்லை ?

8] ‘இலக்கியம் பற்றி இவர் யார் சொல்ல ? ‘ என்கிறார்கள் சிலர். இலக்கியம் பற்றி இலக்கிய விமரிசகன் சொல்லாமல் யார் சொல்வார்கள் ? இப்படி கேட்பவர்களே ஜெயமோகனின் எழுத்து பற்றி படிக்காமலேயே கருத்தும் அவதூறும் சொல்கிறார்கள். கேட்க வேண்டியது இவர்களிடம்தான், இலக்கியம் பற்றி பேச இவர்கள் யார், இதற்கு முன் என்ன எழுதியுள்ளார்கள் ?

இலக்கியம் பற்றி முடிவாக சொல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது. காலம் தீர்மானிக்கவேண்டுமா ? ஆமாம் காலம்தான் தீர்மானிக்கும். புதுமைப்பித்தன் இருக்கிறார். ராஜாஜியும் சத்திய மூர்த்தியும்வெறும் வரலாற்று பெயர்கள். ஆனால் இதே கேள்விகளை பாராட்டும்போது ஏன் நீங்கள் கேட்பது இல்லை. நவீன இலக்கியத்தில் தலைமகன் என்று ஒருவரை சொல்லும்போது அது முடிவாக சொல்வது அல்லவா ? அதையும் காலத்துக்கு விட்டுவிடக்கூடாதா ?அப்படி பாராட்டும்போதுதானே பதில் விமரிசனங்களும் எழுகின்றன ?

9]கடந்த ஐம்பதாண்டுகளில் இதைவிட தீவிரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டும் எழாத பரபரப்பு இப்போது எழுவதற்கு காரணம் இதுதான். இப்போது நவீன இலக்கியம் படிக்க ஆளிருக்கிறது. அவர்கள் குரல்கள் கவனம் பெறுகின்றன. இது நல்ல விஷயம் தான். இந்த விவாதம் கூட இன்னும் ஆயிரம்பேருக்கு இலக்கியச்செயல்பாடுகளை, மாற்றுத்தரப்பை அறிமுகம் செய்திருக்கும். இதை சிற்றிதழாளார் கொண்டாடத்தானே வேண்டும் ?

10 ]இத்தனைக்கும் பிறகுதான் மு.கருணாநிதி இலக்கிய வாதியா இல்லையா என்ற சர்ச்சை எழுகிறது. நேற்ருவரை கடுமையான விமரிசங்களை முன்வைத்த முன்னோடிகள் புதுமிப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை விரிவாக தங்கள் ஆய்வை முன்வைத்தவர்கள் அல்ல. ஜெயமோகன் இலக்கியவிமரிசனமாக மட்டும் ஆயிரம் பக்கம் எழுதியிருக்கிறார். அவற்றில் தன் அளவுகோல்களை முன்வைத்துள்ளார். அவற்றை முன்வைத்து அவரது தரப்பை புரிந்துகொள்ள ஏற்க மறுக்க எல்லாருக்குமே உரிமை உண்டு.

முகருணாநிதியின் எழுத்து பிரச்சார எழுத்து, பிரச்சாரம் செய்வது இலக்கியமல்ல என்று ஜெயமோகன் நினைக்கிறார். அப்படியல்ல என்பது இன்னொருவரின் நினைப்பாக இருக்கலாம். அதை முன்வைத்து விவாதிக்கலாம். புதுமைப்பித்தன் இந்துமதவெறியன் என்று அ.,மார்க்ஸ் சொல்கிறார். அது முற்ராக மறுக்கப்படவேண்டிய கருத்து என்று நான் நினைக்கிறேன். அவர் எழுதட்டும், நான் பதில் சொல்வேன். இதுதானே இலக்கியம் ? உலகமெங்கும் இதுதானெ நடந்துவருகிறது ?

இனி சில பதில்கள்

=============

இளையபாரதி விடுதலை என்பவர்கள் இந்த தருணத்தைபயன்படுத்தி அவதூறுகளை பரப்ப முயல்கிறார்கள். மு கருணாநிதி ஏன் நல்ல இலக்கியவாதி என்பதற்கு ஒரு காரணம் கூட இவர்களால் சொல்வதற்கு இல்லை. அவரைப்பற்றி ஜெயமோகன் சொன்னதையே இவர்கள்வேறு கோணத்தில் சொல்கிறார்கள். ஆனால் அவதூறுகள் பல. இவற்றைக்கூற இவர்களுக்கு உள்ள தகுதி என்ன, இலக்கிய விமரிசனமாக இவர்கள் இதற்கு முன் என்ன சொல்லியுள்ளார்கள். இவர்கள் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது ? சரி, பின்னணியில் இருப்பவர்களை கணக்கில் கொள்ளலாம்

அ] இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூல் கி லட்சுமணன் எழுதி இப்போது கிடைக்கும்இந்திய தத்துவ ஞானம் தத்துவ ஞானம் என்ற நூலின் ‘வரிக்கு வரி ‘ காப்பி என்பது பொ வேல்சாமி என்பவர் சொன்ன கருத்து. இதை அவர் கவிதாசரண் என்ற அவதூறுப்பத்திரிகையில் எழுதினார். அவரையும் அப்பத்திரிகையும் அறிந்த எவருமே அதை பொருட்படுத்தவும் இல்லை . இரு நூல்களுமே வாங்க கிடைக்கின்றன. எவருமே ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்படி எவருமே ஒப்பிடமாட்டார்கள் என்ற றை¢றியத்தில் எழுதப்பட்ட கட்டுரை அது. விஷ்ணுபுரம் நாவல் வந்தபோது அதில் காலவரிசை BAC என்ற வரிசையில் இருக்கும் எளிய விஷயத்தைக் கூட அறிந்துகொள்ளாமல் ABC என்ற வரிசையில் படித்து அதில் காலக்குளறுபடி இிருப்பதாக நிறப்பிரிகை இதழில் நீணட வசைக்கட்டுரை எழுதியவர் பொ வேல்சாமி . அதை எளிய வாசற்ற்கள் சுட்டிக்காட்டியபோது அவர்களை மேடையிலேயே வசைபாடியவர். அவரது வாசிப்பும் புரிதல் திறனும் மிக ஐயத்துக்குரியவை. அதன் பிறகு அவர் பல கட்டுரைகள் எழுதியிருப்பினும் மேற்கொண்டு அவரைப்பொருட்படுத்தலாகாது என்ற முடிவை ஜெயமோகன் எடுத்ததாக சொல்லியிருக்கிறார்.

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூல் ஓர் அறிமுக நூல், சாங்கியம் யோகம் முதலியவை ஜெயமோகனால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவற்றை யார் அறிமுகம் செய்தாலும் ஒன்றுபோலவே அறிமுகம் செய்ய இயலும். மாற்றி அறிமுகம் செய்தால் அதுதான் தவறு. கி லட்சுமணன் எழுதிய இந்திய தத்துவ ஞானம் சைவசித்தாந்த சார்புள்ள நூல். ஜெயமோகனின் நூல் நாராயண குருவின் மரபை ஒட்டியது .இதன் மூலம் உருவாகும் தெளிவான வேறுபாடும், எளியநடையுமே ஜெயமோகனின் பங்களிப்புகள். இதை வேலுச்சாமிக்கு புரியவைப்பது எளியவிஷயமல்ல.

ஆ] இரு ரப்பர் முதலாளிக் குடும்பங்களுக்கு நடுவேயுள்ள பகை பற்றிய திரைப்படம் ‘ இரைகள் ‘ இதனால் மனநிலை பாதிக்கப்படும் ஓர் இளஞனை வைத்து சொல்லப்பட்ட கதை. ரப்பர் குடும்பங்கள் கேரள சினிமாவில் சாதாரணமாக வருபவை. இதற்கும் ரப்பர் நாவலுக்கும் உள்ள உறவு ரப்பர் மட்டுமே. அதைப்போல ஒரு மூத்த தோழர் தலைமறைவாகி 30 வருடம் கழித்து திரும்புகையில் போராட்ட இயக்கமாக இருந்த கட்சி தன் ஆதர்சங்களை இழந்து வெறும் அமைப்பாக மாறியிருப்பதைப்பற்றிய படம் ‘ முகாமுகம் ‘ . தற்கொலை செய்துகொண்ட நக்சலைட் ஒருவரை பற்றிய செய்தியை அவன் அம்மாவிடம் சொல்ல விசாரித்து செல்லும் அவனது நண்பன் அவன் அம்மாவைக் கண்டு சொல்லும்போது அது தற்கொலையாகவே இருக்கும் என்று அம்மாவுக்கு முன்னரேதெரியும் என்று காட்டும் கதை ‘அம்ம அறியான் ‘ . இதற்கும் பிந்தொடரும் நிழலின் குரலுக்கும் உள்ள ஒரே தொடர்பு கம்யூனிசம் மட்டுமே. எவருமே இந்த படங்களை இங்கே பார்க்கப்போவது இல்லை என்ற முடிவின் அடிப்படையில் சொல்லப்பட்ட அவதூறு இது.

மூன்று மொழிகள் அறிந்த ஜெயமோகன் தமிழில் நான்கு பல்கலைகளில் பாடமாக இருக்கும் ஒரு நூலை வரிக்குவரி காப்பியடித்து

தன் நூலை எழுதுவாரா என்று கூட சிந்திக்கதெரியாத ஆசாமிகளால் இந்த அவதூறுகள் கிளப்பபடுகின்றன. விஷ்ணுபுரம் ஹாரி பாட்டரின் காப்பி என்றுகூட நாளை சொல்வார்கள். இவ்வகை கருத்துக்களெல்லாம் கூட இணையத்தில் அச்சேறுவது துரதிருஷ்டவசமான காரியம். இந்த விவாதங்களை பயன்படுத்தி இக்கருத்துக்களை பரவலாக பிரபல இதழ்களில் அச்சேற்றிவிட சிற்றிதழ்சூழலில் ஜெயமோகன் மீது துவேஷம் கொண்ட சிறு கும்பல் முயல்கிறது. கணிசமானவர்கள் கூர்ந்துபடிக்காமல் கருத்துக்களை உருவாக்கி சொல்லிவருபவர்கள் ஆதலால் இக்கருத்துக்கள் செல்லுபடியாகும் என எண்ணுகிறார்கள்.

ஜெயமோகன் அளித்த மறுப்புகள் இவ்விதழ்களில் அச்சேறவில்லை. காஞ்சனாதாமோதரனின் மறுப்பு மட்டும் விகடன் போட்டது. அவதூறுகளால் ஜெயமோகன் மனம் சோர்ந்திருப்பதாக தெரிகிறது. அவதூறுகளை நன்கு தெரிந்திருந்தும் பலர் மெளனம் சாதிப்பதும் பெருவாரியான வாசகர்கள் அவற்றை ரசிக்கிறார்கள் என்ற எண்ணமும்தான் இதற்குக் காரனம்.

இலக்கியவாதிகள் நமக்கென்ன என்று இருக்காமல் யோசிக்கவேண்டிய விஷயம் இது. இப்படி அவதூறுகள் மூலம் எழுத்தாளரை கொச்சைப்படுத்தி தோற்கடிக்கமுடியும் என்றால் பிறகு எதற்குமே பொருள் இல்லை. நாள இது எவருக்குமே நிகழலாம். ஒரு எழுத்தாளனுக்கு கருத்துகூறும் உரிமையாவது இங்கே உண்டா என்பதே கேள்வி. வேறு எதுவுமே அல்ல. இதைப்பற்றி பேசாமல் வேறு எதைப்பற்றி யார் பேசினாலும் அது ஃபாசிசத்துக்கு துணைபோகும் முயற்சிதான்.

—————

emveethaa@rediffmail.com

(ஒரு தகவல் பிழை சரிசெய்யப் பட்டுள்ளது.)

Series Navigation

எம் .வி . குமார்

எம் .வி . குமார்