பதஞ்சலி சூத்திரங்கள்….(2)

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

ருத்ரா


(24) க்லேச கர்மவிபாகா
சயைர்புராம்ருஷ்ட:
புருஷ விசேஷ ஈஸ்வர.

மனம் ஒரு குரங்கு அல்ல.
ஆயிரம் குரங்குகள்.
ஆயிரம் கிளைகள்.
மண்ணில் பிறந்த
உயிர்ப்பாண்டத்துள்
மண்ணின் சுவையும் சூடும்
அதன் ஆசை-கவலைகளின்
நிழல் கூத்துகளும்
ஆயிரம் ஆயிரம்.
பாண்டமாய் இருந்தும்
நிறைந்தும் தளும்பியும்
தொடப்படாமல்
நனைந்துபோகாமல்
சிறப்பானதோர்
ஒர் உட்பாண்டம்
ஒரு அம்மணவெளியாய்
உயிர்க்குள்
“நேனோ” துளியாய்
உயிரின் உட்துளியாய்
அந்த பிஞ்சு பிரபஞ்சமே
“விசேஷ புருஷம்” என்னும்
இறைவம்.

(25) தத்ர நிரதிசயம் சர்வஞ்
பீஜம்.

அது இது
அது இது
என்பது “அஸ்தி”
அது இது இல்லை
அது இது இல்லை
என்பது “நாஸ்தி”
இதில் ஏதாவது ஒன்றை
எடுத்துக்கொள்வது அல்ல
ஞானமும் விஞ்ஞானமும்.
ஆம்.
அது
ஆச்சரியங்களுக்கெல்லாம்
ஆச்சரியம்.
அதிசயங்களுக்கெல்லாம்
அதிசயம்.
இந்த பிரபஞ்சம்
முழுமையும்
உயிராகி அறிவாகி
சாறு பிழிந்த இயற்பின்
விதையாகி
விஞ்ஞானம் ஆகிறது.
அறிந்ததை
வெறுமே பிண்டம் பிடித்து
“குண்டம்” அளப்பவன் ஞானி.
அறிவை வைத்து அண்டம்
அளந்து
“குவாண்டம்” சொன்னவன்
விஞ்ஞானி.
ஒரு கமண்டலத்துள்
கிடப்பதல்ல
இறை ஞானம்.
பிரபஞ்சமாய் இறைந்து
கிடப்பதே
இறை விஞ்ஞானம்.

(26) ஸ ஏஷ பூர்வேஷாமபி குரு:
காலேனானவச் சேதாத்;

குருவுக்கெல்லாம் குரு
யார்?
அதாவது
வெளிச்சத்துக்கெல்லாம்
வெளிச்சமாய்
இருப்பது எது?
இருள் கக்கியது
வெளிச்சத்தை.
வெளிச்சம் உறிஞ்சியது
இருள்குழம்பை.
காலம் கழன்று போனபின்
உள்ள
பாம்புச்சட்டை போன்ற
காலம்
அல்லது
காலம் கருவுயிர்க்கும்
முன்
கால் வைத்த காலம்
எது?
காலமும் வெளியும்
நெசவு செய்த இந்த
பிரபஞ்ச வார்ப்பு
ஐன்ஸ்டீன் சொன்ன
ஸ்பேஸ்-டைம் warp…
இதெல்லாம்
பதஞ்சலியின்
சூத்திரத்தினுள்
அன்றே சுருண்டு
படுத்திருக்கிறது.
ஒளியின் வேகத்தை மீறும்
“ட்ராக்கியான்கள்”
எனும் நுண்ணொளி
வேகத்தின் மூலமாய்
அந்த கருந்துளை வழியே
செல்லும்

புழுக்கூட்டுச்சுரங்கத்துள் (worm-hole)
சென்று பார்க்கலாம்
என்பது விஞ்ஞானிகள்
கற்பனை.
காலம் வெறும் நூலாம்படை
தான்.
அதன் ஜியாமெட்ரியில்
பெருவெடிப்பு எனும் “பிக்
பேங்கும்”
பெரு விழுங்கல் எனும்
“பிக் க்ரஞ்சும்”
இரண்டு எதிர்-எதிர்
தொப்பூள் கொடிகளாய்

சுற்றிப்பிணைந்திருக்கிறது.
ஈர்ப்பே பிறப்பாய்
ஈர்ப்பே இறப்பாய்
ஒரு “கிராவிடேஷனில்”
சுற்றப்பட்ட
இந்த பஞ்சுமிட்டாய்
பிரபஞ்சம்
ஒன்றிப்போய் படுத்துறங்க
பதஞ்சலியின்
“பத்தமடைப்”பாய்.

(27) தஸ்ய வாசக ப்ரணவ:

பரம்பொருளின்
ஒலிக்குறிப்பு
எப்படி வேண்டுமானாலும்
அடையாளம் காட்டலாம்.
அகரம் உகரம் மகரம்
இம்மூன்றின்
மூத்தாய்ப்புக்குள் ஒரு
மத்தாப்பூ
ஒளிமழை பெய்வதாய்
ஞானிகள்
“ஓங்காரம்” செய்கின்றனர்.
சமஸ்கிருதம் தெரியாத
இந்த மரம் மட்டைகள்
அந்த பல்லி ஓணான்கள்
இன்னும் இன்னும்
நுண்ணுயிரிகளான
வைரஸ்கள்…
உயிரற்ற
எலக்ட்ரான்கள்
ப்ரோட்டான்கள்
மீசான்கள் போஸான்கள்
குவார்க்குகள்
போட்டான்கள் குளுவான்கள்
எனும்
ஒலியற்ற ஊமைப்பிழம்புகள்
வெறும்
இயற்பியல் அடையாளங்கள்
அல்ல.
அணு ஆற்றலாய்
தெரியும்போது
ஆயிரம் கிருஷ்ணன்களின்
விஸ்வரூபங்கள்.
அஞ்ஞானத்தைக்கொண்டு
விஞ்ஞானத்தை மூடும்
இந்த உச்சரிப்புகள்
வெறும்
வாந்தியெடுப்புகள் தான்.
பிரபஞ்ச அறிவு
செரிக்காத பரிமாண
வடிவங்களுக்கு
மந்திரச்சொற்களில்
பரிவட்டங்கள் கட்டி
பயனில்லை.
மூளையின் நரம்பு
மின்னல்களில்
குண்டலினியிலிருந்து
குவாஸர்கள் வரை
அறிவுக் கதிர்பாய்ச்சும்
நியூரான் துடிப்புகள்
வரை
பரம்பொருளின்
பாதச்சுவடுகளுக்கு
மொழி தேவையில்லை.
வேத உபநிடதங்கள்
தேவையில்லை.
நியாய வைசேஷிகம்
மீமாம்ஸங்கள்
சாக்கியங்கள்
மற்றும் பாஷ்ய
சூத்திரங்கள்
பதம் பிரித்து
பதம் விரித்து
தர்க்கங்கள்
அடுக்க வேண்டியதில்லை.
இறைவன் இல்லை
ஆம் ஆம் ஆம்..
இறைவன் இருக்கிறான்.
ஆம் ஆம் ஆம்
இது தொண்டைக்குழிகளின்
பூகம்பம்.
ஓம் ஓம் ஓம்
என்றாலும்
அவை
சப்தங்களின்
சதைப்பிண்டங்கள் தான்.
கணித சமன்பாடுகளில்
அவை
வெறும் அதிர்வுஎண்கள்
தான்.
கல்லைத்துருவி
தோலுரித்து
அந்த அதிர்வுஎண்களை
எழுப்பினால்
அது
கோவிந்தனுக்கு
விஷ்ணு சஹஸ்ர நாமமும்
சொல்லும்.
கோயம்பேட்டின்
கருவாட்டுக்கடை
இரைச்சல்களையும்
ஓங்காரம் செய்யும்.

(28) தஜ்ஜப ஸ்ததர்த்த பாவனம்.

ஓம் மந்திரத்தை
அரைத்து பொடிசெய்து
தியானம் எனும் தேனில்
குழைத்து
அதில் “நான்” அவிந்து
ஆவியாகி விடவேண்டும்.
திருப்பி திருப்பி
அந்த சொல்
“புல்லரிக்க” வேண்டும்.
அந்த சொல்லின்
பொருளுக்குள்
கோடி கோடி
கிம்பர்லி சுரங்கங்கள்
தோண்டவேண்டும்.
அந்த சொல்லுக்குள்
வைரங்கள்
கதிர்வீசவேண்டும்.
அந்தப் பொருளின்
கருப்பொருளுக்குள்ளும்
உரிப்பொருளுக்குள்ளும்
கடந்து உள் சென்று
கடவுள் ஆகிடவேண்டும்.

(29) தத: ப்ரத்யக் சேதனாதிகமோ
அப்யந்தராயா பாவஸ் ச:

ஓம் என்ற சொல்
வெறுமே உதிரும்
இலையுதிர்கால
சருகுகள் அல்ல.
மௌனம்
சொட்டு சொட்டுகளாய்
உயிர் விடும்
வெறும் சத்தத்தின்
சடலங்கள் அல்ல அது.
உச்சாடனம் என்ற பெயரில்
செதில் செதிலாய்
செதுக்கப்படும் சொல்
அல்ல அது.
எல்லாவற்றுக்கும்
மேலாய்
உயர்ந்து ஒளிர்வது அது.
உடல் எனும் பாறாங்கல்
அதை நசுக்குவதில்லை.
அதன் புலன்களால்
அது
வேட்டையாடப்படுவதில்லை.
கண்ணுக்கு தெரிந்த
கண்ணுக்கு தெரியாத
வலிகளால்
அது வலுவிழப்பதில்லை.
மனம் எனும்
மாயக்கண்ணாடியின்
கோணல் மாணல்களும்
கோரங்களும்
காட்டும்
பூச்சாண்டிகளில்
அது
புறமுதுகிட்டு
ஓடுவதில்லை.
கனத்த புத்தகங்களையும்
அதனுள்
கனத்துக்கிடக்கும்
அதைவிட கனமான
பாஷ்யங்களும் ஸ்லோக
சூத்திரங்களையும்
“பூ” வென ஊதிவிட்டு
பறந்து மிதக்கும்
அன்னத்தூவி அது.
நிழல் படாதது அது.
நிழல் விழ விடாதது அது.
மனிதத்துள் மக்கிவிட்ட
மனிதத்தை
மணிச்சுடர் ஆக்கும்
புத்தொளி அது.
இறைவம் தன் கையெழுத்தை
போட
ஒலிக்கற்றை வடிவத்தில்
ஒளிந்து கிடக்கும்
காகிதம்
அது.
ஆம் அது ஓம்
ஆம் அது என்று
ஓது வோம்.
பெரிசுகளுக்கு
இது ஓம்.
சிறிசுகளுக்கு
இது காதல்.
பதஞ்சலி போட்ட
பிழை திருத்தம் எனும்
“எர்ராட்டா” இது.
இன்பத்தில்
சின்ன இன்பம் பெரிய
இன்பம்
என்றெல்லாம் ஏது?
“அக்கினியில்
குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ?”
தத்ரிகிட தத்ரிகிட
தத்ரிகிட திமி தா…

=========================================ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா