பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

ரோஸாவசந்த்


படிப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப விஷயத்திற்கு விஷயம் தாவிக்கொள்ளும் வகையில் எண்கள் கொடுக்கபட்டுள்ளன. பல இடங்களில் சுயநினைவுடனேயே ரம்பம் போடபட்டுள்ளது. விடுப்பதும், எடுப்பதும், தொடுப்பதும், அவரவர் சாய்ஸ்.

1. திண்ணைக்கு முதலில்:

(i) சென்ற வாரம் நான் அனுப்பிய கட்டுரையை திருத்தம் செய்து இந்த வாரம்தான் வெளியிடுவதாக சொல்லியிருந்தீர்கள். எப்படி வெளியிடுவீர்கள் என்பதை திண்ணை வந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும். இது குறித்து எனக்கு பெரிய குறை எதுவும் இல்லை. ஆனால் சென்ற இதழில் நீங்கள் வாசக/படிப்பாளிகளுக்கு முன் வைத்த வேண்டுகோளை படித்தால், அதற்கு ஒரு குறிப்பிட்ட வாசிப்பை வலிந்து தர முடியும் என்பது உங்களுக்கும் தெரியும். அதில் ‘பலர் ‘ செய்ததாக சொல்லபடும் விஷயங்கள் எல்லாம் நானே செய்ததாக குறிப்பிட படுவதாக ஒருவர் வாசிக்க முடியும். மீண்டும் இப்படி எழுதியது நியாயமா என்று நான் கேட்கவில்லை. இவ்வாறான வாசிபிற்கு மற்ற கடிதங்களின் தொனியும் ஒரு காரணமாக இருக்க கூடும். என் தரப்பு விஷயங்களை, தர்கமாக முன்வைக்காமல், ஒரு தெளிவிற்காக தகவலடிப்படியில் முன்வைக்கிறேன்.

உதாரணமாய் என் கட்டுரையில் அடுத்தவரை ‘அயோக்கியன் ‘ என்று சொல்லும் வார்த்தையை பயன்படுத்திய நினைவு முதலில் இல்லை. (நான் என்ன பயன்படுத்தினேன், எது நீக்கபட்டுள்ளது என்ற விவரம் என் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ளது.) சாருநிவேதிதா ஆபிதீன் கதைகளை திருடிய விவாகாரம் குறித்துதான் அவ்வாறு சொல்லியுள்ளேன். அதுவும் அதை வைத்து சாருவின் மற்ற எழுத்துக்களை எடைபோடமுடியாது, என்று சாருவிற்கான ஒரு நியாயத்தையும், அதே விஷயம் ஸல்மான் ருஷ்டிக்கும் பொருந்தும் என்கிறவிதமாய் சொன்னது மட்டும் நினைவு உள்ளது. இது இருக்க, உதாரணமாய், நான் வீரப்பனை ஆதரிப்பதாக நரேஷ் என் மீதுவைத்த குற்றசாட்டை, அல்லது தவறான தகவலடிப்படையில், நான் பொய்மட்டுமே சொல்லுவேன் என்ற அசாத்திய நம்பிக்கையில், என்னிடம் வக்கிரம் வெளிப்படுவதாக சொன்னதை ‘அடுத்தவர் கருத்தை ஏற்றுகொள்ளாத போது அவர் குறித்து அபாண்டமாக(அல்லது அமங்கலமாக) சொல்வது ‘ என்று நீங்கள் குறிப்பிட்டதாக வாசிக்க முடியாது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். அங்கே நீங்கள் என்னை மட்டுமே குறிப்பிடுவதாகத்தான் கொள்ள முடியும்.

நான் எழுதிய எதிலுமே ஏற்றுகொள்ளாத கருத்தை சொல்பவரை ‘அயோக்கியன் ‘ என்று சொல்லும் ஒரு சந்தர்பத்தையாவது சுட்டமுடியுமா என்பதை வாசிப்பவர்கள் ‘எலெக்ட்ரான்களை ‘ தொட்டு சோதித்து பார்த்து கொள்ளவேண்டும். உதாரணமாய் நான் மிகவும் எதிர்க்கும், நீலகண்டன் குறித்து கூட அது போன்ற தொனியுடன் ஒருமுறையாவது சொன்ன நினைவில்லை. அவர் குஜராத் கட்டுரையில் பொய் சொல்லுவதாக சொல்லும்போது கூட, அதை தனது தரப்பை தர்க்கபடுத்தும் வகையில் எழுதபட்ட கூற்றாகத்தான் பார்கிறேன். ஆனால், ஒரு பெரும்திரளான, எந்த வகை அதிகாரமும் இல்லாத, சொல்லபோனால் அவர்களுக்காக பேச யாரும் இல்லாத (பேசுபவர்கள் கூட தீவிரவாதிகளாய் சித்தரிக்கபடும் நிலையில் உள்ள), விளிம்பு நிலை மக்கள் மீது நிகழ்ந்த ஒரு பெரும் வன்முறையை நியாபடுத்தியதையும், அது குறித்து பேசுபவர்களை ஒரு கொலைகரனை ஆதரிப்பதாய் சித்தரிப்பதை, நேர்மையின்மையின் எல்லையாக கருதி அது குறித்து மட்டுமே அவ்வாறு சொல்ல நேர்ந்தது. மற்றபடி கருத்து மாறுப்பாட்டிற்க்காக நான் ஒரு போதும் சொன்னதில்லை.

(ii) வீரப்பனை ‘ கொலைகாரன், அயோக்கியன் ‘ என்று எது சொன்னாலும், அது பிரச்சனையில்லாமல் திண்ணையேறும் என்பதில் சந்தேகமில்லை. அதே அளவு வன்முறையை சமூகம் மீது பிரயோகித்த ஒரு அரசியல்வாதியை இங்கே மரியாதையுடன் குறிப்பிடவேண்டும், இன்னும் சொல்லபோனால் அதே அளவு வன்முறை ஒரு விளிம்பு நிலை மக்கள் மேல் பிரயொகிக்கபடும்போது அதை ‘நடக்கவில்லை ‘ என்று சொல்பவரையும், அதை நியாயபடுத்துபவரையும் ரொம்ப மரியாதையாய் அழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகிறேன். சில முரண்களை சுட்டிகாட்டுவதாக தவிர, நியாயம் கேட்பதாக இதை எழுதவில்லை.

(iii) எது எப்படியிருப்பினும் அ, ஆ போட்டு லாஜிக் குறித்து பாடம் எடுத்த மதிப்பிற்குரிய நீலகண்டனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விஷயபூர்வமாக நான் முன் வைக்கும் வாதத்திற்கு பதில் சொல்லாமல், ‘திட்டுகிறான், வசைபாடுகிறான் ‘ என்று சும்மா சொல்லிகொண்டிருப்பது, என் வாதங்களை மறுப்பதாக ஆகாது என்று மற்றவர்களுக்கும் அவர் சொல்லியிருப்பதாக எடுத்து கொள்கிறேன்.

தன் தரப்பு வாதங்களுக்கான எல்லாவிதமான தகவல்களையும், ஆதரங்களையும் சாதகமாக பயன்படுத்தி தர்கபடுத்துவது (rationalise செய்வது) என்பது தர்கம் என்று வந்துவிட்டால் தவிர்க்க முடியாதது. நானும் அதை செய்திருக்கிறேன். ஆனால் அதை எப்படி ஆரோக்கியமாகவும், நேர்மையாகவும் செய்வது என்பதை சிவக்குமாருக்கும், நீலகண்டனுக்கும் இந்த கட்டுரையில் கோடிட்டு காட்டுகிறேன். அதற்கு முதல் அடிப்படை எதிராளி சொல்வதை நேரடியாக மேற்கோள் காட்டுவது, திரிக்காமல் இருப்பது, இன்னும் முக்கியமாக எதிராளி சொன்ன அனைத்து வாதங்களையும் கண்டுகொள்வது, அதிலும் மிக முக்கியமாக தனக்கு பிரச்சனை தரும் வாதங்களை கண்டு கொள்வது.

2. பண்பட்ட இந்துத்வவாதி நீலகண்டன் அரவிந்தனுக்கு:

முதலில் சொல்லவேண்டியது, நான் நீலகண்டனிடம் இப்படி ஒரு ‘முயலுக்கு மூணூகால் ‘ வகை பிடிவாததை எதிர்பார்கவில்லை. ஹாரிசன் குறித்து நான் எழுதியதையும், சுட்டிகாட்டியுள்ள அபத்தங்களையும், மறுக்கும் அளவிற்கு அவர் போவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவருடைய தைரியமும், அதில் வெளிபடும் நகைச்சுவையும் எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. ஆரம்பத்தில் படித்தது போல் அவ்வளவு வளமையாக நீலகணடன் எழுதுவதை எல்லாம் அண்மைகாலங்களில் நான் படிக்கவில்லை. இப்போதைய விஞ்ஞான அவதாரத்திற்க்கு முன்னாடி, அவர் எடுத்திருந்த சரித்திர, சமூகவியல், சூழலியல் அவதாரங்களையும், அதன் சில விஸ்வருபத்தையும் பார்த்த போது, அவரிடம் (மற்ற ‘பண்பட்ட ‘ திண்ணை எழுத்தாளர்களிடம் இல்லை என நான் நினைக்கும்) அறிவுஜீவி நேர்மை ஒன்று இருக்குமோ என்று தோன்றியது. அதை ஒருமுறை சொல்லகூட செய்திருக்கிறேன். உதாரணமாக குருமூர்த்தி என்ற RSS சார்பு எழுத்தாளரை எந்த விதத்திலும் ஒரு அறிவுஜீவியாகாவோ, அறிவுஜீவி நேர்மை கொண்டவராகவோ பார்க்கமுடியவில்லை. அவ்வாறு இல்லாமல், இந்துத்வவாதி ஒருவர் கூட, இண்டலக்சுவல் தளத்தில் நேர்மையுடன் செயல்படமுடியும் போல் இருக்கிறதே, என்ற எனது ஐயத்திற்கு நீலகண்டனை உதாரணமாய் நினத்திருந்தேன். அதை அவர் பொய்பித்ததற்க்கு, என் அரசியல் நிலைகள் சார்ந்து மட்டும், நன்றி சொல்வதா என்பது குழப்பமாகவே உள்ளது.

நீலகண்டன் எழுதியதற்கும் நான் எழுதியதற்க்கும், எழுதுவதற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாட்டை குறிப்பிட்டு விட்டு தொடங்குகிறேன். தொடர்ந்து தனது பழைய, புதிய, இப்போதைய கடித/ கட்டுரைகள் எல்லாவற்றையும் குண்ட்ஸாக மட்டும் சொல்கிறாரே தவிர நேரடி ஆதரங்களை தொடர்ந்து நீலகண்டன், ஒரு கொள்கைபிடிப்பின் தீவிரத்துடன், தர மறுக்கிறார். அவர் குறிப்பிடும் விஷயம் இணையத்திலேயே வசகர்கள் க்ளிக்கிட்டு போய் பார்ககூடிய சாத்தியத்தில் இருந்தாலும், அதை தர அவர் மறுக்கிறார். இதற்கான காரணங்கள், ஊகங்களில் இறங்காமல், அதை வாசிப்பவர்களின் புத்திசாலித்தனதிற்கு விட்டு விட்டுவிடுகிறேன். ஹாரிசன் என்று ‘இயற்பியல்வாதி ‘ ‘பலவிதங்களில் ஒத்திருந்ததாக சொல்கிறார் ‘ என்று அனாசியமாய் குறிப்பிட்டுவிட்டு, இணையத்தில் இருக்கும் ஹாரிசனின் இணைய முகவரியை தரவில்லை. ரிக் பிரிக்ஸிற்க்கும் இதேகதி. மொட்டையான மேற்கோள்கள், தடாலடியாய் மொட்டையாய் P. ராமானுஜம் பற்றிய தகவல், ஆய்வுதாள் விவரம் நீலகண்டன் எழுதுவதெல்லாம் இப்படியே போகிறது. இணையத்தில் இருக்கும் விஷயத்திற்கு, முகவரி அளிப்பதில் என்ன பிரச்சனை ? நான் அவர் குறிபிட்ட ஹாரிசனின் முகவரியை, சிரமம் எடுத்து கண்டுபிடித்து குடுத்து, அதை மேற்கோள் காட்டி விவரிக்கிறேன். இணையத்தில் நான் பயன்படுத்திய அனைத்திற்கும் உடனடி முகவரி தந்துள்ளேன். இயாலாத ஒரு நிலை வரும்போது, இங்கே சிலவற்றை மிக விரிவாக எழுதுவது சாத்தியபடாத போது மட்டும் குண்ட்ஸாக பேசுகிறேன்.

நீலகண்டன் எழுதியதை மேற்கோள்குறிகளுக்கிடையில் கொடுத்து என் பதிலை அதற்கு கீழே தருகிறேன். பதில் தராத சில விஷயங்களையும் குறிப்பிடுகிறேன்.

(i)

‘நீசபாஷை என்று எதை கூறுகிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஹிந்துத்வ சூத்திரனுக்கு கட்டாயமாக எனது தாய்மொழியான தமிழை இழிவாக பேசினால் கட்டாயம் கோபம் வரும். உதாரணமாக, தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று கூறினால்/கூறியிருந்தால் பகுத்தறிவற்றவர் என்றே கருதுவேன். எந்த வித ஆதாரமும் இன்றி மூன்றாந்தர நபர்கள் கூறிய வதந்திகளை கொண்டு எவராவது தமிழை நீசபாஷை என்று கூறியதாக வதந்திகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஜென்மங்களை பார்த்தாலும் ‘… பிழைக்கும் இந்த பிழைப்பு ‘ என்று கூற தோன்றும். ‘

ஒரு எதிர்ப்பை, அதன் தர்க அடிப்படைகளை எல்லாம் வெற்றி கொள்வதற்கு, அதற்கு எதிராக தர்க நியாயங்களை அளித்து கொண்டிருப்பதை விட, பலன் தரக்கூடிய உன்னதமான வழி–அதை நீர்த்து போக செய்வது. அதை ஒரு ஸ்டாரியோடைப் விஷயமாக, அலுப்பு தரும் விஷயமாக, நைந்து போன சமாச்சாரமாக மாற்றுவது. இதை பார்பனியம் வெற்றிகரமாய் காலம் காலமாய் செய்துவருகிறது. சமீபத்திய உதாரணமாய் ஈராக் போருக்கு, வறலாறுகாணாத விதமாய் மேற்குலகில் நிகழ்ந்த போரெதிர்ப்பை, அமேரிக்கா சமாளித்துவரும் அணுகுமுறை. நான் இப்போது நீலகணட்னுக்கு பழைய ஸ்டாரியோடைப் பதில்களை தரவேண்டும், ‘இதேல்லாம் பேசி பேசி அலுத்து போன சமாச்சரமாச்சேடா அம்பி! ‘ என்று பெரியண்ணாக்கள் என்னை பார்த்து புன்னகைக்கலாம்.

நீலகண்டனுக்கு வாதம் செய்யவருகிறதோ இல்லையோ, நடிக்க நன்றாய் வருகிறது என்பதற்கு மேலே உள்ள அவரது கூற்றுகள் சாட்சி. நீசபாஷை என்ற வார்த்தையையே இப்போதுதான் கேள்விபடுகிறார் போலும். ‘தாய்மொழியான தமிழை பழித்தால் நிச்சயம் கோபம் வரும். ‘ ஆனால் அவருக்கு இன்றுவரை கோபம் வந்ததாக (பெரியாரின் கூற்றை தவிர) எடுத்துகாட்டாததை பார்த்தால், (பெரியார் தவிர) யாரும் தமிழை பழித்ததில்லை, தமிழ் எந்த பிரச்சனையும் இல்லாமல் வளமாய் வாழ்கிறது என்றுதான் எண்ணவேண்டும். தமிழை ‘நீச பாஷை ‘ என சங்கராச்சாரியர் சொன்னதாய் சொல்வது, அது ‘மூன்றாந்தர நபர்கள் கூறிய வதந்திகளை கொண்டு ‘ கூறியதாக சொல்லி ‘நாய் கூட பிழைக்காத ஒரு பிழைப்பை ‘ நடத்தும் சிலர் பரப்பிய வதந்தியாய் எடுத்துகொள்ள வேண்டும். (என்ன சொல்கிறோம் என்று உலகின் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லி திட்டிவிட்டு, குறிப்பிட்ட வார்த்தைக்கு மட்டும் புள்ளி புள்ளியாய் வைக்கும் நேர்மை அநாகரிகம் மிகுந்த எனக்கு ஒப்புதலில்லை!) ‘நீசபாஷை ‘ வசனத்தை நேரடியாய் முன்வைக்க இயலாத இன்றய காலகட்டத்தில் கூட தமிழ் ஏன் கருவறையில் பயன்படுத்த கூடாது என்று தொடர்ந்து வியாக்யானம் அளித்து வருகிறார். கருவறைக்குள் தமிழ் நுழையலாமா என்ற கேள்வியைவிட, இது போன்ற வியாக்கியாங்களை கேட்டு நீலகணடனுக்கு கோபம் வந்திருக்கும் என்றாலும், அடங்குவது என்ற தனது சாதி கடமையுணர்வு காரணமாக மெளனமாக இருந்திருக்கலாம்.

காலம், காலமாக இங்கே ஒரு மொழியை தேவபாஷை என்று சொல்லி தமிழில் பூஜை செய்வது பாவம் என்று அறிவுறுத்தபடுகிறது. rssஉடன் நெருங்கிய தொடர்புடைய சிலர் கூட தமிழ் ஏன் சில காரியங்களுக்கு ஏற்ற மொழியில்லை என்று விளக்கமாய் மக்கள் கூட்டத்தின் எதிரே சொல்கிறார்கள். துக்ளக் சோ தனது பத்திரிகையில் தமிழில் பூஜை செய்வது எப்படி அபத்தமானது என்று பத்திபத்தியாய் விளக்குகிறார். இதற்கெல்லாம் நீலகணடனுக்கு கோபம் பொத்துகொண்டு வந்தாலும், நான்தான் எனது நேர்மையின்மை காரணமாய் அதை எல்லாம் அறியமுடிவதில்லை.

தமிழில் இருந்த இசைக்கு முழுமையாய் திரைப்போட்டு இங்கே ‘இசைக்கு தமிழ் லாயகில்லை ‘ என்று ஒரு உளவியலே ஏற்பட்டுவிட்டது. வெளிப்படையாய் பத்திரிகைகளில் ( நீலகண்டனுக்கு பிடிக்காத இந்து, பிடித்த நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், இன்டியன் எக்ஸ்பிரஸ் எல்லாவற்றிலும் அடிக்கடி லெட்டர்ஸ் டு த எடிட்டரில் கூட) இந்த கருத்து முன்வைக்கபடுகிறது. டிசம்பர் சீஸனில் ஒரு சதவிகிதம் கூட தமிழுக்கு இல்லை. அதை எல்லாம் விட வானொலி போன்ற ஒரு ஜனரஞ்சக ஊடகத்தில், நாள் முழுக்க என்ன இசை ஒடிகொண்டிருக்கிறது ? காதாகாலட்சேபம் போன்ற ரீங்கார அறுவைகள் எந்த ஜாதிகுரியது ? வங்காளத்தில் ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்திற்கு தெலுங்கு இசையையோ, இன்னும் சொல்லபோனால் ஒரு குறிபிட்ட சாதி ஆக்ரமித்துள்ள இசையை ஒலிபரப்பமுடியுமா ? இன்னும் எத்தனையோ ஸ்டாரியோடைப்பாய் சொல்லிகொண்டிருக்கலாம்! எல்லாவற்றையும் பட்டியல் போட தொடங்கினால் ஒரு புத்தகமே போடலாம், சொல்ல போரடிக்கிறது. இதை எல்லாம் பார்த்து எத்தனைமுறை நீலகண்டனுக்கு கோபம் பொத்துகொண்டு வந்தது என்று, இப்போது இருக்கிற நிலமையில், பட்டியல் போட்டு சொன்னாலும் கூட சொல்லுவார். விராட இந்து சமுதாயத்தில் அதற்கு தீர்வு இருப்பதாக கூட சொல்லுவார்.

ஆனால் மறக்காமல் RSSபுத்தி இந்த ‘காட்டுமிராண்டி பாஷை ‘ விஷயத்தில் வந்து நிற்கும். தமிழ் குறித்து பெரியார் உயர்வாய் சொன்ன விஷயத்தை எல்லாம் விட்டு விட்டு, இந்த விசயம் மட்டும் மறக்காமல் ஞாபகம் வரும். உலகில் எங்கும் இல்லாத அற்புதமாய், சங்ககாலம் என்பது ஒரு பொற்காலமாகவும், உலகில் உள்ள மொழிக்கெல்லாம் தமிழ்தான் தாய் போலவும், தமிழ் உணர்வு என்பது இங்கே தறிகெட்டு போன ஒரு கட்டத்தில், பெரியார் இதை சொன்னார். மொழிக்கு தரப்பட்ட உன்னத குணங்களை மறுத்து, மொழி நவீனமடைவதன் அவசியத்தை உணர்த்தும் விதமாய், ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டிகாலத்து மொழி ‘ (primitive language) என்ற அர்தத்தில் சொன்னார். இது என்ன தமிழ் மீதுள்ள வெறுப்பாலோ, தமிழை அழிக்கும் சதிதிட்டத்தாலோ, வேறு மொழிகொண்டு அதை மேலாதிக்கம் செய்யும் நோக்கிலோ சொல்லபட்டதா ? தமிழ் நவீனபடுத்த படவேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் வண்ணம் சொல்லபட்டது. உன்னதம் என்று ஒன்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருக்கமுடியாது என்ற அறிவின் அடிப்படையில் சொல்லபட்டது. இதை RSSகாரர் நேர்மையாய் அணுகுவார் என்று எதிர்பார்க்கமுடியுமா ? ஆனால் ஆயிரம் வருடங்கள் முன்னால் பேசப்பட்ட ஒரு மொழியில், இன்றய செயற்கை அறிவிற்கான சமாச்சாரங்கள் எல்லாம் இருக்கிறது, இன்றய அறிவியல் சமாச்சாரங்கள் எல்லாம் அன்றே சொல்லபட்டதாய் நினைக்கும் மனத்திற்கு பெரியார் சொன்னது பகுத்தறிவற்ற விஷயமாக தெரியாமல் வேறு எப்படி தெரிய கூடும்!

ஆனாலும் பெரியார் தமிழ் குறித்து சொன்னதும், இன்னும் பொதுவாய் மொழி குறித்தும், ஆங்கிலம் குறித்து சொன்னதும் எனக்கும் கூட முழு ஒப்புதலில்லை என்பது வேறுவிஷயம். எந்த தத்துவத்திற்க்கும், இயக்கத்திற்கும், அதன் கொள்கைகளுக்கும் எனது உடல்-ஆவி-மூளையை நான் அடகு வைக்காத காரணத்தால், பெரியார் சொன்ன எல்லாவற்றிற்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பெரியாரியத்தின் அடிப்படையில்தான் பூமி சுற்றவேண்டும் என்றோ, மூச்சுவிட வேண்டுமென்றொ நான் நினைப்பதில்லை. இது ஏதோ, பதரை அகற்றி வேண்டியதை கொள்ளும், பழையபாணி வேலையும் இல்லை. பெரியார் சொன்னதை சூழலுக்கு ஏற்ப வாசித்து, தேவையானால் அதற்கு ஒரு மீள் உருவாக்கம் கொடுக்க முனையலாம். இன்னும் தேவையானால் அவர் சொன்னவற்றை குழி தோண்டி புதைக்க புறப்படவேண்டியிருக்கலாம். ரவிகுமார் பெரியார் மீது அண்மைகாலத்தில் வைத்த விமர்சனத்தில் கூட(அதிலுள்ள சில தனி நபர் அரசியல் காரணமாய், சில விமர்சனங்கள் இருந்தாலும், அத்தகைய விஷயங்களை வகுத்துவிட்டு) எனக்கு பல விஷயங்கள் ஒப்புதலுள்ளன. இது குறித்து ரவி ஸ்ரீனிவாஸிற்கு எழுத நினைத்த பதில், அரைகுறையாய் என் கணணியிலேயே தங்கிவிட்டது.

‘இதற்கு முந்தைய எதிர்வினையை படித்துப்பாருங்களய்யா. கோபம் எங்கே இருக்கிறது ? ‘

நான் கோபம் என்று சொன்னது தேவையில்லாமல் இளங்கோவனுக்கு வைத்த எதிர்வினை பற்றியும், அதில் இளங்கோவனிடம் ‘சமஸ்கிருத வெறுப்பு ‘ இருப்பதாக சொல்லி பயமுறுத்தும் வொயிட் மெயில் பற்றியும்தான். மிக சின்னதாய் சில புருடாக்களுக்கு அவர் வைத்த எதிர்வினைக்கு, அவரின் வாதத்திற்கு பதில் மட்டும் சொல்லாமல், பொத்துகொண்டு வந்து செயற்க்கை அறிவில் தொடங்கி ஹாரிபோட்டர் வழியே கலாமில் வந்து முடிந்த வியாக்கியானங்களையே குறிபிடுகிறேன். மீண்டும் இது குறித்து பேசபோகிறேன்.

(ii)

‘திரு.நாக இளங்கோவன் கூறியவற்றில் இரு முக்கிய விஷயங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்

1. ஒரு நாசா அறிவியலாளர் சமஸ்கிருதத்தின் செயற்கைதன்மை அதனை செயற்கை அறிவுக்கு உகந்ததாக்குகிறது என்கிறார். இது 1985 இல். அதற்கு பிறகு நாம் அதில் என்ன சாதனையை செய்துள்ளோம் ?

2. ஒரு அறிவியல் விவாதப்பொருள் ஜனரஞ்சகப்படுத்தப்படுகையில் உள்ள பிரச்சனைகள். ‘

நாக. இளங்கோவனின் கட்டுரையை மீண்டும் படித்து பார்த்தும், என் மரமண்டைக்கு சுத்தமாய் புரியவில்லை. நாக. இளங்கோவன் எப்போது மேலே உள்ள விஷயங்களை சொன்னார், (அதுவும் முக்கியமான விஷயங்களாக) ? நாக. இளங்கோவன் நேர்வினையாய் எழுதிய கடிதத்திலும் கூட இப்படி சொல்லபடவில்லை. ‘இரிக் பிரிக்சின் கட்டுரையைப் படித்தேன். சமற்கிருத வாக்கியங்கள் எழுதி அதற்கு, ஆங்கிலத் தெளுவுரையை இட்டுள்ளார். சமற்கிருதச் சொற்களின் சொற்பொருள் ஆழத்தை விளக்குவதாக இருக்கிறது. இந்த சொற்பொருள் ஆழமானது, ஏனைய மொழிகளுக்கு இல்லை என்று சொல்லி விடமுடியாது. ‘ என்று மட்டுமே சொல்லியுள்ளார். இரண்டாவது விஷயம் குறித்து அது கூட சொன்னதாக தெரியவில்லை.

(iii)

‘அதே வேளை ஆதாரமில்லாமல் ஏதோ ஒரு கூட்டம் மற்றவர்களை மந்தைகளாக்க வேண்டும் என்றே இத்தகைய பொய்களை உருவாக்குகிறது என்கிற ‘சதித்திட்ட ‘ அணுகுமுறை தேவையற்றது, உண்மையற்றது என்பதுதான் என் நிலைபாடு. சமஸ்கிருதமே ஒரு கூட்டம் மற்றவர்களை அடக்கியாள உருவாக்கியது என்பது போன்ற எண்ணங்கள்தான், ரோசா வசந்தின் மொழியில் சொன்னால் ‘புருடாக்கள் ‘. ‘

ஒரு ‘ஒரு கூட்டம் மற்றவர்களை மந்தைகளாக்க வேண்டும் என்றே இத்தகைய பொய்களை உருவாக்குகிறது என்கிற ‘சதித்திட்ட ‘ அணுகுமுறை ‘ தேவையற்றது ‘ என்ற கருத்து எனக்கும் ஒரளவு உண்டு — அதாவது இதேபோன்ற அணுகுமுறையை மட்டும் வைத்துகொண்டு எதிர்கொள்ளும் எல்லவற்றையும் நிராகரிப்பது, அல்லது சந்தேகித்து கொண்டே இருப்பது, சில விஷயங்களை இது போல் ஒற்றைபார்வையில் பார்த்து கொண்டே போவது, ஆக்கபூர்வமாய் எதையும் சாதிக்காது என்ற கருத்தளவில். சொல்லபோனால் நாக. இளங்கோவன் கூட அதை ஒரளவு ஒப்புகொள்கிறார்.

என்றாலும் அதற்கு ஆதரமே இல்லை என்று நீலகண்டன் சொலவதை கேட்க, அது ஒரு நகைச்சுவை என்ற அளவில் ஜாலியாக எடுத்துகொள்ள முயற்சிக்கலாம். இதற்கு பதிலாக எனக்கு ஏதாவது நகைச்சுவையாய் சொல்ல வருமா, ஸ்டாரியோவாய்தான் கத்தத்தான் முடியும்! தங்களுக்கே ஒழுங்காய் புரியாத ஒரு மொழியை வைத்து கொண்டு, ‘அதை நீ படிக்கவும் கூடாது, உனக்கு அதை கேட்க கூட உரிமை இல்லை ‘ என்றும், அதை ஒரு தேவ பாஷை என்று கற்பித்து, கடவுளுக்கு இந்த பாஷயில்தான் பூஜை நடத்த வேண்டும் என்று சொன்னதுடன், எல்லா தளங்களிலும் ஒரு ‘சமஸ்கிருதமயமாக்கலையும் ‘ செய்து, அதனால் ஒரு கூட்டம் பயன் பெற்ற சரித்திரம் இருக்க, பல கூட்டங்கள் ‘சரித்திரத்தை ‘ இழந்ததும் இருக்க, இன்னும் மராத்தி, போஜ்பூரி தொடங்கி நாம் பேசிகொண்டிருக்கும் தமிழ் தவிர பல மொழிகளின் வேர்களை மிக தந்திரமாய் அழித்ததும் இருக்க, இதற்கெல்லாம் ‘இந்துத்வ சூத்திரன் ‘ என்று சொல்லிகொள்ளூம் ஒருவர் சான்றிதழாய் தரும் இந்த ‘ஸிக் ஜோக்கிற்க்கு ‘ சிரிக்க மனசு வருமா ? நீலகண்டன் இது எல்லாமே ‘நாய் கூட பிழைக்காத பிழைப்பை ‘ பிழைக்கும் சிலர் செய்யும் வதந்தியாய் சொல்லகூடும். இன்றய காலகட்டத்தில் இதை நம்ப எத்தனை பேர் வருவார்கள்!

(அப்பறம் என் மொழி கொஞ்சம் கச்சடாதான். உங்களுக்கும் அதை பயன்படுத்தும் அவசியம் வந்தது குறித்து வருந்துகிறேன்.)

(iv) ரிக் ப்ரிக்ஸின் கட்டுரை

‘நிச்சயமாக இணையத்தில் pdf ஆக உள்ளது. என்னிடமும் உள்ளது. எனவே நீங்கள் Google இல் தேடி எடுத்துக் கொள்ளுங்கள். ‘

நீலகண்டனின் இந்த செயல்பாடு எனக்கு தொடர்ந்து புரியவில்லை. ஒரு கட்டுரை இணையத்தில் இருக்கும் பட்சத்தில் அதன் முகவரி, இருக்குமிடத்தை தெரிவிப்பதில் என்ன பிரச்சனை ? ஒரு ரோஸாவசந்திற்கு இதை செய்யவேண்டியதில்லை. படிக்கும் வாசகர்களின் வசதிக்காக இதை செய்யலாமே. நியாயமாய் இளங்கோவனுக்கு எதிர்வினை வைத்தபோதே அதை செய்திருக்கவேண்டும். மொட்டையாய் அறிக்கைகள், முடிவுகள் அளிப்பதும், இருக்கும் ஆதாரங்களையும் மற்றவர்களுக்கு அளிக்காமல் கண்ணாமூச்சி ஆடுவதுதான் இந்துத்வ அறிவிஜீவி நேர்மையோ என்னவோ!

‘ என்ற போதிலும் எனக்கு விளங்கியவரை விஷயத்தை சுருக்கமாகவும், முடிந்தவரை தெளுவாகவும் கூறிவிடுகிறேன். ரிச்சர்ட் ப்ரிக்ஸ் சமஸ்கிருத இலக்கண அடிப்படையில் வாக்கியங்களுக்கு semantic net பகுப்பாய்வு சித்திரங்களை உருவாக்குகிறார். அவை செயற்கை அறிவு இயக்கத்திற்கு தேவையான மென்பொருள் வாக்கியங்களில் வார்த்தைகளின் தொடர்பு அறிவினை பகுப்பாய்வு செய்ய உருவாக்கும் semantic net டினை ஒத்திருப்பதை காட்டுகிறார். எந்த அளவுக்கு ஒரு வாக்கியத்தின் இலக்கண விதிகளிலிருந்து உருவாக்கப்படும் semantic net இடியாப்ப குழப்பமாக உள்ளதோ அந்த அளவுக்கு அது செயற்கை தன்மையிலிருந்து விலகுவதாக இருக்கும். சமஸ்கிருத வாக்கியங்களுக்கான பாணினி இலக்கண அமைப்பிலிருந்து ப்ரிக்ஸ் semantic net ஐ உருவாக்குகிறார். அது செயற்கை மொழிக்கான தன்மையுடன் இருப்பதாக நிறுவுகிறார். ஒரு வேளை இந்த ரிச்சர்ட் ப்ரிக்ஸ், AI இதழ், இந்த நிறுவுதல் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பாத மற்ற கணினி அறிஞர்கள் ஆகிய அனைவருமே ஹிந்துத்வ சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கலாம். இது குறித்த திடுக்கிடும் தகவல்களை ரோசா வசந்த் ‘கொஞ்சம் குண்ட்ஸாக ‘வேனும் விரைவில் தருவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ரிச்சர்ட் ப்ரிக்ஸை காக்கிநிக்கர், வெளிளை சட்டை கருப்பு தொப்பியுடன் நிற்கும் ஒருவராக பாவித்து அதன் அடிப்படையில் அதற்காகவே அவரது ஆய்வுத்தாளை ரோசா ‘கிழிப்பார் ‘ என்பதிலும் எனக்கு ஐயமில்லை. ‘

ரிக் ப்ரிக்ஸின் கட்டுரையை படித்துவிட்டேன். இது குறித்து தனிகட்டுரைதான் எழுத வேண்டும் — நீலகண்டனுக்கு மரியாதை செய்ய அல்ல, எனக்கு, நான் சொல்லும் விஷயங்களுக்கு மரியாதை செய்ய. இந்த இதழில் அது குறித்து விரிவாக எழுத நினைத்ததை எழுதமுடியவில்லை. நிச்சயம் ஒரிரு வாரங்களில் செய்வேன்.

ஆனால் ஒன்று நீலகண்டனின் வாக்கியங்கள் தெரிவிப்பது போல் ரிக் பிரிக்ஸ் எதையும் நிறுவவில்லை–அதாவது ஒரு கறரான கணித முறையில், ஒரு mathematical rigourஉடன் ரிக் எதையும் செய்யவில்லை. அவர் குண்ட்ஸாக (ஆமாம், குண்ட்ஸாக மட்டும் ) பயன் படுத்தும் semantic net எந்த விதத்திலும் ஒரு கணித தன்மையுடைய ஒரு கருத்தாக்கம் அல்ல. நிறுவுதல் என்பது கணிதத்தில், கணிதவகையிலான அணுகுமுறையில் மட்டுமே சாத்தியமுள்ள விஷயம். (இதையும் விளக்குகிறேன்.) இந்த கட்டுரை, மற்றும் கணிதம், அதன் மொழி, நிறுவதல் இது எல்லாம் குறித்தே வரும் வாரங்களில் எழுத இருக்கிறேன். அதில் ரிக் எதையும் நிறுவவில்லை என்று என்னால் தெளிவுபடுத்தமுடியும். நிறுவுதல் (proving) என்பதற்கும், நிகழ்துவதற்கும் (demonstrating) அடிப்படையிலேயே பெரிய வித்தியாசம் உண்டு. ரிக் கட்டுரை கொண்டிருக்கும் அணுகுமுறை இரண்டாவது. அதிலும் அவர் என்ன செய்திருக்கிறார் என்று குண்ட்ஸாக அல்லாமல் குறிப்பாக சொல்லவும் முயற்சிக்கிறேன்.

ஆனால் நீலகண்டன் கேட்கும் கேள்விகள் அவர் சாமர்தியத்தை மட்டுமே காட்டுகிறது. ‘இந்த நிறுவுதல் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பாத மற்ற கணினி அறிஞர்கள் ‘ என்று பேசும் நீலகண்டன், ரிக்கின் ‘ஆய்வுதாளை ‘ இன்றுவரை யாரும் ஸீரியஸாக ஏன் எடுத்து கொள்ளவில்லை என்பது குறித்து யோசிக்கவில்லை. உலகில் எத்தனையோ குப்பைகள் ஆய்வுதாள் என்ற பெயரில் வருகிறது. எல்லாவற்றையும் பொருட்படுத்தி கேள்விகேட்டு கொண்டிருக்கமுடியாது. ரிக் சுட்டிகாட்டுவது போல் சமஸ்கிருதம் உண்மையிலேயே செயற்க்கை அறிவுக்கு பொருத்தமானது என்றால், அது குறித்து கடந்த 18 வருடங்களில் பெருமளவு ஆய்வுகள் நடந்திருக்கும். மேலும் இது குவாண்டம் மெகானிக்ஸோ, pure mathematics போன்றதோ அல்ல. நயம் கமெர்ஷியல் சமாச்சாரம். முதாலாளித்துவத்திற்கு இந்துத்வமா, சமஸ்கிருதமா, தொல்காப்பியமா என்று எந்த பிரச்சனையும் இருக்காது. ரிக்கின் பேப்பர் முக்கியமானது என்றால் இன்றைக்குள் சில நூறு ஆய்வுதாள்களாவது, ரிக்கின் ஆய்வுதாளை அடிப்படையாய் வைத்து (citing that) வந்து தொலைத்திருக்கும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமென்ன வென்றால், RSS கருத்துருவ பாதிப்புள்ள எத்தனையோ தேசி(desi) (சமஸ்கிருத பரிச்சயமுள்ள) பிள்ளையாண்டன்கள் இந்த துறையில் இருக்ககூடும். அவர்கள் கூட இதை ஸிரியஸாக எடுத்துகொள்ளவில்லை என்பதைத்தான், 18வருட மெளனம் காட்டுகிறது. இந்துத்வ இணையதளங்கள் மட்டும் இதன் தலைப்பை மாறி மாறி மனனம் செய்துகொண்டிருப்பதை தவிர யாரும் ஸீரியஸாய் இதை எடுத்து கொண்டதாய் தெரியவில்லை. எப்படி இருப்பினும், ரிக் ப்ரிக்ஸ் எழுதியதை நான் தீவிரமாய் எடுத்துகொண்டு அது குறித்து விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

(v) ஒரு தெளிவிற்காக நான் எழுதியது, நீலகண்டனின் பதில் இரண்டையும் முன் வைக்கிறேன்.

‘ திரு.ரோசா வசந்த்: அப்பறம் ரொம்பதான் ஸயண்டிஃபிக்காத்தான் பேசறீர், ஆனா அதை இங்கே மட்டும்தான் செய்யறீர், கொஞ்சம் சமஸ்கிருதம் தேவ பாஷைன்னு சொலறவங்ககிட்டயும் இன்னும் என்னேன்னவோ அதைபத்தி புருடா விடும் இந்துதவ இணையதளத்தில் போய் பேசப்டாதோ! எத்தனையோ இணையதளங்கள்ளே என்னேன்னவோ பிதற்றறாளே! இந்துத்வத்தில் ‘சூத்திரனுக்கு ‘ அவ்வளவுதான் உரிமையோ! மத்தவா கூட சண்டை போடமட்டுத்தானா ?

பதில்: ஹிந்துத்வ மின்-அஞ்சல் விவாத குழுக்களில் பல சந்தர்ப்பங்களில் வாமதேவ சாஸ்திரியின்(டேவிட் ப்ராலி) ‘new age ‘ நிலைப்பாட்டினை வெளுப்படையாக எதிர்த்துள்ளேன். ‘ராமர் கட்டிய பாலத்தை நாஸா ‘ கண்டுபிடித்ததாக கூறப்பட்ட புரளிக்கு எதிராக நான் எழுதிய கட்டுரையை தாங்கள் மறந்துவிட்ட தங்கள் நேர்மையான ஞாபக மறதி அபரிமிதமானது ரோசா வசந்த். எனவே அந்த கட்டுரையிலிருந்து சில வாக்கியங்கள் – ஹிந்துத்வ சூத்திரனுக்கு இருக்கும் உரிமையை காட்டத்தான். ‘துரதிஷ்ட வசமாக இச் ‘செய்தி ‘யை இந்திய ஊடகங்கள் கேள்வியேதுமின்றி ஏற்றதும் மற்றும் சில மின் அஞ்சல் விவாத மற்றும் உரையாடல் குழுக்களில் இராமயணமே நாசாவால் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்துகள் பரவியதும் நாம் எந்த அளவு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறோம் என்பதனை காட்டுகிறது…..இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவு தொடர்களை ‘பாலமா ‘க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்….இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் ‘சீதாயாம் சரிதம் மகத் ‘ என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்கு-மானுட இன தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது. ‘முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் ‘. ‘ இது மட்டுமல்ல, அண்மையில் சில ஹிந்துத்வவாதிகள் ஏசுசபையினரின் இரகசிய பிரமாணம் என்கிற ஒன்றின் அடிப்படையில் அவர்களை பழித்தபோது அந்த பிரமாணம் உண்மையில் ஒரு மோசடியான போலி ஆவணம் என்பதை ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன். அதுவும் திண்ணையில் வெளுயாகியுள்ளது. கட்டாயமாக தாங்கள் அதை படித்திருக்க மாட்டார்கள் ஏனெனில் ‘இந்துத்வத்தில் ‘சூத்திரனுக்கு ‘ அவ்வளவுதான் உரிமையோ! மத்தவா கூட சண்டை போடமட்டுத்தானா ? ‘ என்கிற தங்கள் rhetoric-க்கு அது உபயோகப்படாது அல்லவா ? ‘

ஆக, ‘சமஸ்கிருதம் தேவ பாஷைன்னு சொலறவங்ககிட்டயும் இன்னும் என்னேன்னவோ அதைபத்தி புருடா விடும் இந்துதவ இணையதளத்தி ‘லும், ‘என்னென்னவோ பிதற்றும் எத்தனையோ இணையதளங்களில் ‘ போய் நீல்கண்டன் எதுவும் பேசவில்லை. தெளிவாகவே இது குறித்து சொல்ல அவருக்கு எதுவும் இல்லை. அவர் சொல்லியுள்ளதெல்லாம், ‘வாமதேவ சாஸ்திரி ‘யுடன் ‘முரண்படுவதும், ‘ராமர் பாலம் ‘ குறித்தும் இன்னும் ‘ஏசுசபையினரின் இரகசிய பிரமாணம் ‘ (திண்ணையில் வெளிவந்துள்ளதாக சொல்லும் இந்த கட்டுரையை நான் எப்படியுமே படிக்கவில்லை.) நான் நீலக்ண்டனை மூட நம்பிக்கையில் திளைப்பவராகவோ, ‘வாதம் செய்ய ‘ தெரியாதவராகவோ சொல்லவில்லை. நாக. இளங்கோவனிடம் காட்டிய விவேகத்தை, இணையத்தில் எண்ணற்ற, சம்ஸ்கிருதம் குறித்து மிகையான புருடாக்கள் விடும் தளங்களில் காட்டினாரா, என்றுதான் கேட்டேன். சமஸ்கிருதம் பற்றி கண்டதையும் சொல்பவரை அருகில் RSS ஷாகாவில் பார்க்கமுடியுமே! அங்கே அவர்களிடம் போய் இதே போல் ஸயண்டிஃபிக்கா பேசுவாரா என்பதுதான் நான் கேட்டது. அதற்கு இப்படி சாமர்தியமாய் தரும் பதிலால் யாருக்கு என்ன பயன் ? இதெல்லாம் என்ன புதிதா என்ன!

குஜராத் என்ற ஒரு நிகழ்வு நடந்த பின்னும் இங்கே இந்துத்வம் குறித்து பல சாத்வீக பீலாக்களை வைக்கமுடிகிறது. அந்த பீலாக்கள் அவ்யப்போது உடையும் போது முகத்தை காப்பாற்றிகொள்ள ‘ஒரு தலித்தின் உயிரைவிட பசுவின் உயிர் முக்கியமில்லை ‘ (ஆனாலும் பசுவதை தடுப்பு சட்டத்திற்கு இவர் ஆதரவுதான்) என்று திண்ணை விவாதகளத்தில், நீலகண்டன் சொல்ல நேர்ந்தது. அதற்காக ‘தலித்தின் உயிரை விட கோமாதாவின் உயிரே சிறந்தது ‘ என்று சொன்ன VHP குண்டர்களிடம் போய் இவர் என்ன சண்டையா போட்டார். அவர்களை எதிர்த்தா தன் எழுத்தின் ஆற்றலை செலவழிக்கிறார் ? RSSற்கும் VHPக்கும் உறவுதான் முறிந்துவிட்டதா ? ஆனால் அப்படி சண்டை போட்டாலும் கூட போடுவார்கள். டாவியில் VHPகாரன் பசுவின் முக்கியத்துவம் குறித்து பேசுவான். RSSகாரனோ அதை ஏற்றுகொண்டாலும், தலித்துக்கள் தான் இன்று ஹிந்துத்வத்தை வழிநடத்த போவதாக சொல்லுவான். (குஜராத்தில் நடத்தியது போலவோ என்னவோ!) டாவீயில் மட்டும் நடக்கும் இப்படி ஒரு விவாதத்தை பார்த்து கேட்பவரெல்லாம் குழம்பிபோகாமல் வேறென்ன செய்வர்!

வெளிப்படையான RSS ஆதரவாளரான நம்ம சோ ரமஸ்வாமியை எடுத்துகொள்வோம். இந்த பாலபிரச்சனை குறித்து என்ன சொன்னார் என்று தெரியாவிட்டாலும், மனிதர் ஒருமுறை அல்ல, பலமுறை, ‘ராமாயணமும், மகாபாரமும் சுமார் 10கோடி வருஷங்கள் முன்னால் நடந்த விஷயம் ‘ (எனக்கு வருஷம் சரியாக நினைவு இல்லை என்றாலும் கணக்கு கோடி அளவில்தான்.) என்று சொல்லியிருக்கிறார். மனிதர் சமஸ்கிருதம் குறித்து விடும் புருடாக்கள் ஆகட்டும், ஒரு திமிருடன் தமிழ் குறித்து பேசுவதாகட்டும், அதைவிட, நீலகண்டன் கேட்பாரே, ‘who is taking Manu Smiruti seriously these days, except some lunatics ? ‘, சோ வெளிப்படையாகவே, ‘எங்கே பிராமணன் ? ‘ இலும், ‘வெறுக்க தக்கதா பார்பனியம் ‘ இலும் மனுதர்மத்தை நியாயபடுத்தியுள்ளார். சோ வின் கருத்து எத்தனை rss கரர்களுக்கு இருக்கும் என்பது அதிக ஊகம் தேவைப்படாத விஷயம். நீலகண்டன் என்ன எதிர்வினை வைத்தாரோ ? சரி, நம்ம ஜோஷி உதிர்த்த முத்துக்களுக்குதான் நீலகண்டன் என்ன சொல்லியிருக்கிறார் ?

நான் நீலகண்டன் குறித்து சொன்னதே, ‘சமஸ்கிருதம் குறித்து மிகையான கூற்றுகளை நிராகரிப்பவராக ‘ காட்டிகொண்டு மற்ற புருடாக்களை வைப்பவராகத்தான் சொல்லியுள்ளேன். அவருடைய மேல் குறிப்பிட்டுஇரண்டு கட்டுரைகளும் ‘மத்தவாளிடம் ‘ செய்யும் வாதத்தின் போது, காட்டி கொள்ளும் வசதிக்காக உருவாக்கபட்டதாக தெரிகிறதே ஒழிய, இந்துத்வவாதிகளிடம் சண்டைபோட்ட விஷயமாக எடுத்துகொள்ள முடியவில்லை.

(vi)

‘அடுத்ததாக திரு.ரோசா வசந்த் ‘அரை லூசாக ‘ சித்தரிக்கும் டேவிட்ஹாரிஸனுக்கு வருவோம். வசந்த்தின் புரட்டல் வேலைகள் இன்னமும் ஒருபடி கீழே போகின்றன. ஏதோ ஹிந்து மதத்திற்கும் க்வாண்டம் இயற்பியலுக்கும் முடிச்சு போட வேண்டுமென்றே மேற்கோளுக்காக அலைந்து திரிந்து கடைசியில் இந்த ஹாரிஸன் என்கிற ‘அரை லூஸை ‘ கண்டுபிடித்திருப்பதாக சித்தரிக்கிறார் வசந்த். ‘

நீலகண்டன் எப்படி ஹாரிசனை கண்டிபிடித்தார், எதற்காக கண்டுபிடித்தார் என்பது குறித்து நான் எந்த கருத்தும் வைக்கவில்லை. குவாண்டம் இயற்பியல் குறித்து நீலகண்டன் எழுதுவதை ‘உருப்படியான வேலை ‘ என்றுதான் சொல்லியிருக்கிறேன். அவர் தனது கட்டுரையை ஐன்ஸ்டானின் ஆன்மீகத்தில் தொடக்கி, என்ன தொடர்பு என்று சொல்லாமல் ‘பகடையாடும் ‘ பாட்டும், தலைப்பும் கொடுத்தும், ஒரு குறிப்பிட்ட தொனியில் எழுதியும் கூட, அவர் குவாண்டம் இயற்பியலையும் ஆன்மீகத்தையும் முடிச்சுபோட, திட்டமிட்டு அவர் எழுதுவதாக கூட நான் சொல்லவில்லை. இன்னும் சொல்லபோனால் நீலகண்டன் எங்கே பிழைவிடுவார், எப்போது சொதப்புவார் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுகொண்டு நான் கவனித்து வரவில்லை. இந்த விஷயத்தில் அவர் எழுதியுள்ள எல்லாவற்றையும் (சில தனிபட்ட காரணங்களினால்) முழுவதும் படிக்க கூட இல்லை.

டேவிட் ஹாரிசன் என்ற பெயரை மொட்டையாக சொல்லி சந்தடி சாக்கில் முடிச்சு போட்டதை மட்டுமே எடுத்து கொண்டேன். சந்தடி சாக்கில் சொல்லபடும் ஒரு விஷயம் பல நேரங்களில் அதிக பரிசீலனை இல்லாமல் வாசிக்கும் மனதால் ஒப்புகொள்ளபடும். இன்னும் சொல்லபோனால் ஹாரிசன் இணையதளத்தில் சொன்னதுகூட சந்தடிசாக்கில் சொல்லும் ஒரு விஷயமாக இருப்பதை காணலாம். சந்தடிசாக்கில் ஹாரிசன் சொன்னதை, சந்தடிசாக்கில் ந,ீலகண்டன் சொல்வது, நாளை சந்தடிசாக்கில் யாராவது மேற்கோள்காட்டலாம்.

நாக. இளங்கோவனின் கட்டுரைக்கு ஆசாரகீனனும், நீலகண்டனும் வைத்த எதிர்வினைகள் சற்றும் நியாயமில்லாதது என்பது எனது கருத்து. சமஸ்கிருதம் கணணி மொழிக்கு ஏற்றது என்பதில் உள்ள அபத்தத்தை தனது பார்வையில், அந்த விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி எழுதியிருந்தார். இதை எப்படி ஆசாரகீனனும், நீலகண்டனும் எதிர்கொண்டார்கள் ? எந்த தொடர்புல் இல்லாமல் ‘மொழிவெறி, தனித்தமிழ் ‘ என்று சில வொயிட் மெயில்களை ஆசாரகீனன் வைத்திருந்தார். நீலகண்டன், இளங்கோவன் சொன்னதை வாதங்களால் மறுக்காமல், சமஸ்கிருத வெறுப்பின் காரணமாக இளங்கோவன் உணமைகளை மறைத்துள்ளதாக தொடங்குகிறார். ஆய்வுதாள்களின் பெயர்கள், ஷ்ரோடிங்கர், மெண்டலீஃப், வெர்னாட்ஸ்கி என்று இஷ்டத்திற்கு பயமுறுத்தியிருந்தார். இளங்கோவன் முன் வைத்த ( ‘0-1 களால் ஆன கணனி மொழிக்கு சமஸ்கிருதம் என்ன புதிய சாத்தியத்தை தரமுடியும் ‘ என்ற) எளிதான கேள்விக்கு பதிலில்லை. (இப்படி செய்துவிட்டு ரவி ஸ்ரீனிவாஸ் peer reviewed journals குறித்து பேசியதற்காக ஆத்திரத்தை கொட்டியது நியாயமா ? ) இதை இளங்கோவனும் சுட்டிகாட்டியுள்ளார்.

ஹாரிசனையும், அவரின் ஓளரல்களையும் இணையத்தில் தேடி, முன்பே அறிந்திருந்தும், முதலில் நான் எதிர்வினை செய்யவில்லை. இளங்கோவனுக்கு எதிர்வினை வந்து பிறகுதான், தேவையென நினைத்து எதிர்வினை வைத்தேன். நீலகண்டன் சந்தடிசாக்கில் ‘மேற்கோள் ‘ காட்டி, இணையமுகவரி, என்ன சொன்னார் என்று எந்த தகவலும் தராத நிலையில், அதை தேடி கண்டுபிடித்து, அதை நேரடியாய் மேற்கோள்கட்டி அதில் உள்ள அபத்தத்தை ஆதாரபூர்வமாய் முன்வைத்ததில், என்ன கீழ்தரமான புரட்டு உள்ளது என்று நீலகண்டன் ‘விளக்கிய ‘ விஷயத்திற்கு அடுத்து போவோம்.

(vii)

‘ ‘ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சிந்திக்க தெரியாதவர்கள்- அடியாட்களாக இருக்கத்தான் இலாயக்கு ‘ எனும் பொருள்படும் கருத்தை விவாத தளத்தில் முன்வைத்தவர் வசந்த் என்பதை வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம். எனவேதான் அவருக்கு ‘ஹிந்துத்வ சூத்திரன் ‘ எனும் பதம் மிகவும் தைத்திருக்கும் என நினைக்கிறேன். ‘

திண்ணையின் ஆஸ்தான எழுத்தாளர்கள் சொன்னதாக நான் பல விஷயங்களை அடுக்கியிருந்தபோது, எல்லாவற்றையும் மேற்கோள் காட்டி விளக்கும்படி என்னை திண்ணை குழு கேட்டிருந்தது. கார்திக்கையும் இப்படி கேட்டதாக தெரிகிறது. ஆனால் நீலகண்டனிடம் அப்படி கேட்காததற்கு, திண்ணை குழுவின் பாரபட்சம் காரணமாய் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நீலகண்டனை ஒரு பண்பட்ட எழுத்தாளராகவும், நான் ஒரு கச்சடா எழுத்தாளனாக இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன். அப்படி இருப்ப்பினும் நான் சொன்னதை கொஞ்சம் நேரடியாகவே பார்ப்போம்.

http://thinnai.com/vivadh/topic.asp ?TOPIC_ID=98&whichpage=2

மணிமாறன் என்று ஒருவர், திருமாவளவனின் ரீடிஃப் பேட்டியை முன்வைத்து, அவரை ‘ தி.க.வினராலும், மார்க்சியவாதியினராலும் ப்ரையின் வாஷ் பண்ணபட்டுவிட்டார் ‘ என்று சொன்னார். திருமாவளவன் தி.க.வினரையும் (இன்னும் சொல்லபோனால் பெரியார் குறித்து கூட காட்டமான விமர்சனம் ‘தாய்மண் ‘ பத்திரிகையில் உண்டு.), நிச்சயமாக மார்க்சிஸ்ட்டுகளையும் காட்டமாக விமர்சிப்பவர். இவ்வாறு அவரால் விமர்சிக்கபடுபவர்களால் அவர் ப்ரெயின் வாஷ் பண்ணபட்டதாக அபத்தமாக சொல்வது ஒரு ‘ஆதிக்க ஜாதி உளவியல் ‘ என்று சொன்னேன். இதில் நடந்த ‘விவாதத்தில் ‘ அவர் சொன்னது

‘தலித்துகளுக்கு ஆன்மீக பலம் வேண்டும். நாராயண குரு ஈழவர்களை முன்னுக்குக் கொண்டுவந்தது போல, நாடார்கள் சுயச்சார்புடன் முன்னுக்கு வந்தது போல, தலித்துகளுக்கு ஒரு ஆன்மீக அமைப்பு வேண்டும். ‘

இதற்கு பதில் சொன்னபோது நான் சொன்னது, ‘நாடார்கள் சுய சார்புடன் முன்னேறியது ஒரு சாதனை என்றாலும், அதுதான் ஒரு பெரும் ஜாதி வெறியாகவும், போய் கர்நாடகாவிலும் மற்ற மாநிலங்களிலும் கூட்டு வைக்கும் தன்மையாகவும் , இன்னும் இந்து ரவுடியிசத்திற்க்கு தேவையான அடியாளாகவும், தலித்கள் மீதான வன்முறையாகவும் வெளுபடுகிறது. ‘ நான் பயன்படுத்திய ‘அடியாள் ‘ என்ற வார்த்தையை மட்டும் நீலகண்டன் விமர்சித்திருந்தார். ( நாகர்கோவில் பக்கத்திலிருந்து வரும் (தெளிவாகவே நாடார்களால் நடத்தபடும்) ‘கேப்பியார் ‘ என்ற பத்திரிகையிலேயே இப்படிபட்ட கருத்துக்கள் வந்திருக்கிறது.) நான் அளித்த பதில்.

‘மிக சரியான பாயிண்டை எழுப்பிய அறிஞருக்கு நன்றி. `அடியாள் ‘ என்று நான் எழுதியது தவறுதான். எழுதி உள்ளிட்ட உடனேயே அதனை உணர்ந்தேன். ஆனாலும் எடிட் செய்யவில்லை. அது குறித்து மணிமாரன் எதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். ஆத்திரத்தில் அவருக்கு அந்த அளவு கூட மூளை வேலை செய்யவில்லை. இது போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்படாத அறிஞர் சரியாக பாயிண்டை பிடித்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. தவறை ஒப்பு கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கும் வழக்கம் இல்லாத, இன்னும் மூளைசலவை செய்யபடாத நான் எனது மனபூர்வமான மன்னிப்பை இங்கு பதிவு செய்கிறேன்.

ஆனாலும் நான் நாடர்களுக்கு சொந்தமாய் சிந்திக்க தெரியது என்ற அர்த்ததில் எழுதவில்லை. நடந்துவரும் தலித் எழுச்சிக்கு எதிர்வினையாக (குறிப்பாக தேவர்கள், நாடார்கள்) என்று இந்துத்வத்தின் பக்கம் சென்று கொண்டிருப்பதை பற்றிய குறிப்புதான் அது. சாதிய கட்டமைப்பில் பார்பனர்களொ , இதர ஆதிக்க சாதியினரோ நேரடியான அடிதடிகளில் என்றும் ஈடுபட்டு வந்ததில்லை. தலித்களை சாதிய ஒழுங்கில் தக்க வைப்பதற்கு தேவையான வன்முறையை பிற்படுத்தபட்ட சாதியினரே அளித்து வந்துள்ளனர். அதன் காரணமாய் தலித்- பிற்படுத்தபட்ட ஜாதிகள் மோதலில் வெளுப்படும் வன்முறையை முன்வைத்து `ஜாதி வெறி பிற்படுத்தபட்ட மக்களிடம் மட்டுமே இருப்பதாக ஒரு பிரச்சாரம் திண்னையிலேயே பஜனை கோஷ்டியினால் நிகழ்த்தபட்டு வருகிறது. இதே போலத்தான் இந்துத்வ சக்திகளும் டன்களால் பயன் படுதபட்டு வரும் அடித்தட்டு மக்களின் மேல் வன்முறைக்கான பழியை போட்டு வருகிறது (பார்க்கவும் , நீலகண்டனின் குஜராத் பற்றிய கட்டுரை).

இது குறித்து இன்னும் விரிவாக பிறகு எழுதலாம். இப்போதைக்கு சில பாயிண்ட்டுகள், திராவிட இயக்கம் பற்றி `தார்மிக கேள்வி ‘ கேட்ட அறிஞருக்கு. இன்று நடக்கும் சாதி மோதல்களில் யார் பக்கம் இந்ஹு முண்ணணி இருக்கிறது., கிருஷ்ணசாமி நேரடியாக தலையிட வேண்டுகோல் விடுத்தும் கண்ட தேவியில் நடந்ததென்ன, பாப்பாரபட்டி, கீரிபட்டியில் ஆதிக்க கள்லர் ஜாதீனரை சந்திது சென்ற ராம கோபாலன் தலித்களை சந்திக்காதது ஏன். யதார்தமான மோதலில் ஒரு தலித் நிலைபாடு எடுப்பதாக பாவனை செய்திருந்தாலாவது நீலகண்டடன் உருவாக்கும் பிம்பத்திற்க்கு குறைந்த பட்ச நம்பிக்கை தன்மை கிடைக்கும். ‘

இது இப்படி இருக்க மணிமாறன் சொன்னதில் நியாயம் இருப்பதாக நீலக்ணடன் சர்டிஃபிகேட் கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். அதற்கு கொடுத்த வியாக்யானம், ‘திருமாவளவன் என்ற ஒரு தலித்தை brainwashed என்றால், எல்லா தலித்தும் brainwashed என்று சொலவதாய் அர்த்தம் செய்துகொள்ளமுடியாது ‘ என்பதுதான். அடடா, அதாவது ஒரே ஒரு தலித்தை என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, இப்படி ஒரு சால்ஜாப்பும் சொல்லலாமா, பேஷ், பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!

மிக தெளிவாக விளக்கமும், சொன்னதை தர்க்கபடுத்திகொண்டு வீம்பு காட்டாமல், நான் மன்னிப்பையும் பொது களத்தில் முன்வைத்த பின்னும், கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து, அதை முன்வைத்து ஒரு இந்துதவ மெயில் செய்யும் அளவிற்க்கு யாருக்கு சாமர்தியம் உண்டு! நமக்கு அப்படி எல்லாம் சாமர்தியம் கிடையாதப்பா! வறலாறு காணாத வகையில் குஜராத்தில் பரிணமித்த, வன்முறைக்கான பழியை தலித்கள்மீதும், ஆதிவாசிகள் மீதும் போடும் புத்திசாலித்தனம் யாருக்கு வரும்! பழி மட்டுமா, இஸ்லாமியர்களின் எதிர் தாக்குதலும் கூட தலித்கள்மீது, ஆதிவாசிகள் மீதல்லவா இருக்கும். இதை எல்லாம் ‘ஒரு கூட்டம் செய்யும் திட்டமிட்ட சதி ‘ என்ற நினைக்கும் அணுகுமுறை நீலகண்டன் சொல்வதுபோல் ‘புருடாக்கள் ‘ அல்லவா!

கடைசியாக ‘இந்துதவ சூத்திரன் ‘ என்ற பதம் என்னை எங்கேயும் தைக்கவில்லை. இந்துத்வத்தில் தான் ஒரு ‘சூத்திரனாகத்தான் ‘ இருக்கமுடியும் என்ற பொருள்வரும்படி, அவர் தன்னை குறித்து எழுதுவது, என்னை எதற்காக தைக்க வேண்டும் ?

(viii)

‘இதன் நீட்சியாகவே க்வாண்டம் ஸ்டோசாஸ்டிக் கால்குலஸை நீலகண்டன் தெரிந்திருக்க முடியாது என்கிற அவரது ‘comment ‘. ஏனெனில் எனது கட்டுரைத்தொடரில் இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயத்தை நான் கூறியிருக்கிறேன். ‘

நீலகண்டனின் வரையரைகள் படிகூட நான் ‘ஸ்டாலினிஸ்ட் ‘ ஆகமுடியாது. இணையகாலத்தில் அவரால் குவாண்டம் ஸ்டோக்காஸ்டிக் கால்குலஸ் குறித்து எதுவும் தெரிந்து கொள்ளமுடியாது என்று நான் சொல்லவில்லை. இந்த சிவன், பிரம்மா, விஷ்ணு விவகாரத்தை மட்டுமே ‘கேள்விபட்டிருக்க வாய்பிருக்காது என்று நினைக்கிறேன் ‘ என்று சர்வ ஜாக்கிரதையாகத்தான் எழுதினேன். இதற்கு இத்தனை குற்றச்சாட்டுகளா ? இப்போதும் அப்படித்தான் நினைகிறேன், ஏனெனில் அவர் சொலவது போல் ‘ஹட்ஸன்- பார்த்தசாரதி சமன்பாடுகளில் ‘ வரும் OPERATORகளுக்கு அப்படி ஒரு பெயர் இன்னும் ‘இடப்பட ‘வில்லை. அடுத்த திண்ணை வர 7 நாட்கள் உள்ளன. அதற்குள் நீலகண்டன் எங்கே இந்த ‘சிவன், பிரம்மா, விஷ்ணு ‘ விவகாரம் வருகிறது என்று ஆதரபூர்வமாக குறிப்பிட்டால் நான் மண்ணை கவ்வியதாகவும், என்னைபற்றிய நீலகண்டனின் வாசிப்பு சரி என்றும் ஒப்புகொள்கிறேன்.

ஆனாலும் இப்போதும் ஒரு விஷயம், நீலகண்டன் QSC குறித்து, hudson-parthasarathy flow வரை புரிந்து கொண்டிருக்க முடியுமெனில் (தெரிந்து கொள்ளவோ, பெயர்களை உதிர்கவோ அல்ல, உண்மையான புரிதல்) எனக்கு அது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாகத்தான் இருக்கும். இதற்கு நீலகண்டன் இஷ்டத்திற்கு காரணங்களை உருவாக்க வாய்ப்பு உண்டு எனினும், ஒருவர் எத்தனை விஷயத்தில்தான் ‘கில்லாடி ‘யாக இருக்க முடியும் என்ற வியப்புதான். ஏற்கனவே எத்தனை துறைகளில் நீலகண்டன் ‘கில்லாடி ‘ என்பது இருக்கட்டும். quantum mechanicஸை தனது துறையாக ஆய்வு செய்யும் ஒருவர் கூட, இந்த ஹட்சன்-பார்த்தசாரதி விஷயம் வரை முழுமையான புரிதல் வைத்திருப்பது வழக்கமாக காணும் ஒன்றல்ல. நாகர்கோவிலில் உட்கார்ந்து கொண்டு இந்த அளவிற்கு அறிந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மாபெரும் விஷயம்தான். அந்த வகையில் மிகுந்த வியப்பே மேலிடும். என்ன புரிந்தது (தெரிந்ததை அல்ல) என்பதை நேர்மையாய் விளக்க வேண்டியது அவர் வேலை.

‘க்வாண்டம் ஸ்டோசாஸ்டிக் கால்குலஸை எடுத்துக்கொள்ளலாம். ஹட்ஸன்- பார்த்தசாரதி சமன்பாடுகள் குறித்து அவரது பெயர் குறிப்பிடாமல் கூறும் வசந்த் அதில் வரும் ‘operators ‘ களுக்கு சிவன்-பிரம்மா-விஷ்ணு என பெயரிடப்பட்டதை கூறி இதனால் என்ன பெரிய விஷயம் என்கிறார். செவ்வாய்கிரக மலைமேட்டிற்கு கிரேக்க புராண பெயர் ஒன்றினை ஒரு வானவியலாளர் வைப்பதால் எப்படி கிரேக்க புராணம் எந்த முக்கியத்துவமும் அடைவதில்லையோ அதைப்போலத்தான் இதுவும். ‘

என்ன இது! என் சரக்கை என்மீதே எறிந்தால் என்ன அர்தம் ? தெளிவாகவே பல விஞ்ஞானிகள் ‘கிருஸ்தவ, யூத அடிப்படிவாதிகளாக ‘ இருப்பதையும், அவர்கள் ஒரு விஷயத்தில் மேதைகளாய் இருப்பதால், இன்னோரு விஷயத்தில் அவர்கள் சொல்வதை ஸீரியஸாக எடுத்துகொள்ள தேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறேன். இதற்கு பிறகு கிரேக்க புராண உதாரணமளித்து, என் லாஜிக்கை உல்டா செய்வது எதற்காக ? இந்த அடிப்படையில் சில வெள்ளைக்கார விஞ்ஞானிகள் தங்கள் கேள்விஞானத்தை மட்டும்வைத்து, கொஞ்சம் ஓவராய் ‘பாரத ஞான மரபு ‘ குறித்து பூரித்து போய் சொன்னால் அதையும் ஸிரியாஸாக எடுத்துகொள்ளமுடியாது என்பதுதான் நான் சொன்னது. நீலகண்டன் என்னுடன் தர்கம் புரிகிறார் என்பதற்காக, நான் கிருஸ்துவத்திற்கு ‘வால் பிடிப்பதாய் ‘ பாவனையாவது செய்ய முடியுமா ?

(ix)

‘ஆனால் மேற்கத்திய தத்துவபடுகையில் வேரூன்றி நின்றிருந்த இயற்பியலின் அஸ்திவாரம் எவ்வாறு அதிலிருந்து நகர்ந்தது என்பதனை காட்டுகின்றது டேவிட் ஹாரிஸனின் பாடம். டேவிட் ஹாரிஸனின் பெயர் உலகின் பெரும் க்வாண்டம் இயற்பியலுக்கான ஆர்க்கைவில் இல்லை எனவே அவர் எந்த சாதனையும் நடத்தவில்லை என்கிறார் வசந்த். ஆனால் சாமர்த்தியமாக ஹாரிஸனின் இணைய தளத்தை குறித்து பேசுவதை தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் அந்த இணையதளம் கொடுக்கும் தகவலின் படி இந்த ‘அரைலூஸு ‘க்கு மூன்று முறை புகழ்பெற்ற கற்பித்தலில் உள்ள திறமைக்காக ‘டான் விருது ‘ வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 வருடங்களுக்காக அவரது ஆய்வு இயற்பியலை மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆசிரியர்கள் நோக்கும் சவால்கள் என்பது குறித்ததாக உள்ளது. வசந்த் அவரது பாடத்தினை ‘கிழிப்பதில் ‘ வேண்டுமென்றே ஒரு தகவலை மறைக்கிறார். இந்த பாடம் ‘கணித அறிவற்ற கலை இலக்கிய துறை மாணவர்களுக்கு ‘ க்வாண்டம் அறிவியல் குறித்த அறிமுகமாக விளங்குகிறது. ‘

எப்படி இருக்கிறது கதை பாருங்கள் ? ஹாரிசன் என்பவர் யார், எங்கே இருக்கிறார், குறைந்த பட்சம் குவாண்டம் இயற்பியல் மற்றும் சாங்கியம், பெளத்தம் இது குறித்தெல்லாம் என்ன சொன்னார், என்று எந்த தகவலும் இல்லாமல், சந்தடிசாக்கில் ‘பலவிதங்களில் பிரபஞ்ச தரிசனத்தில் சாங்கியமும் பெளத்தமும் கொண்டிருந்த வேறுபாட்டினையும் இது குறித்து ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தில் நடந்த வாதங்களையும், ஸ்க்ராட்டிஞ்சரின் க்வாண்டம் இயற்பியல் மறுப்பும், ஹெய்ஸன்பர்க்கின் க்வாண்டம் வாதங்களும் மிகவும் ஒத்திருந்ததாக கூறுகிறார் இயற்பியலாளர் டேவிட் ஹாரிஸன் ‘ என்று சொல்லிவிட்டு நான் புரட்டல்கள் செய்துள்ளதாகவும், விஷயங்களை மறைத்ததாகவும் சொல்கிறார். இப்படி ஒரு நகைச்சுவை உணர்வு யாருக்கு இருக்கமுடியும் ?

ஹாரிசன் என்பவரை கண்டுபிடித்து, அவர் சொன்னதை நேரடியாய் மேற்கோள்காட்டி, அவரது இணைய முகவரியை (திண்ணை தவறவிட்ட பின்பும் கேட்டு) நேரடியாய் அளித்து, அதில் உள்ள மகா அபத்தத்தை சுட்டிகாட்டியிருக்கிறேன். தனக்கு ஒத்துவராத கருத்துகள் சொல்பவரை புரட்டலகள் செய்வதாய் யார் இங்கே ‘அமங்கலமாய் ‘ பேசுகிறார்கள் ?

இப்போது ‘மேற்கத்திய தத்துவபடுகையில் வேரூன்றி நின்றிருந்த இயற்பியலின் அஸ்திவாரம் எவ்வாறு அதிலிருந்து நகர்ந்தது என்பதனை காட்டுகின்றது டேவிட் ஹாரிஸனின் பாடம் ‘ என்று மீண்டும் சந்தடி சாக்கில் ஒரு போடு போடுகிறார். இல்லை! எங்கே காட்டுகிறது ? நீலகண்டன் எனக்கு ‘மரியாதை ‘ செய்வதாய் சொல்லி எழுதியுள்ள கட்டுரை ‘காட்டியுள்ள ‘ அளவுகூட ஹாரிசனின் இணைய பக்கம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் இதுபோல மொட்டையாக சொல்வதை நிறுத்தி என்ன காட்டுகிறது, எப்படி காட்டுகிறது என்று விவரமேடிகாக எழுத நீலகண்டன் பழகினால் ஒழிய எது குறித்தும் பேச வாய்பில்லை.

நான் ஏதோ ஹாரிசன் டான் விருது பெற்றதை மறைத்துவிட்டேனாம்! நான் என்ன ஹாரிசனின் அருமை பெருமைகளை, வறலாற்றை எழுதும் எண்ணத்திலா அவரை பற்றி எழுதிகொண்டிருந்தேன் ? அவர் டான் விருது பெறுவதோ, இன்னும் கனடாவின் அதிபரானால் கூட எனக்கு என்ன கவலை! அதெல்லாம் உள்ளே இருக்கும் விஷயத்தை பார்க்காமல் அல்லது அது புரியாமல், வெளிபகட்டை மட்டும் பார்த்து, அல்லது கலரை பார்த்து முடிவுக்கு வருபவர்கள் செய்ய வேண்டிய விஷயம். நான் அதை கவனிக்க கூட இல்லை. நான் தேடியது அன்னாரின் ஆய்வுதாள்களை, அன்னார் இயற்பியல் குறித்து சொன்ன விஷயங்களை மட்டுமே. எனக்கு அது புரியும் என்ற காரணத்தால், அதில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். அதில் வைத்திருக்கும் எண்ணிக்கை முட்டையாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நோபல் பரிசு கிடைத்தால் கூட எனக்கு பொருட்டல்ல. ( நீலகண்டன் இஷடத்திற்கு நான் சொன்னதை வாசிக்க கூடாது, ஆய்வு தாளிலும் அண்ணா என்ன சொல்லியிருக்கார்னு பாத்துதான் முடிவுக்கு வரமுடியும்.) மேலும் நான் குறிப்பிட்டிருந்த ஆர்கைவில் peer review கூட கிடையாது, நீலகண்டன் கூட எதையாவது எழுதி ஆர்கைவேற்றலாம். அங்கேயே இல்லாதபோது அண்ணா என்ன ஆராய்சி செய்கிறார் எனபதுதான் கேள்வி. ஆராய்சியே செய்யாமல் எப்படி இயற்பியல்வாதியானார் என்பதுதான் அடுத்த கேள்வி. ( ‘இயற்பியலை மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆசிரியர்கள் நோக்கும் சவால்கள் ‘ குறித்து ஆய்வு செயவது எந்த விதத்திலும் இயற்பியலில் செய்யபடும் ஆய்வாக எடுத்துகொள்ளமுடியாது.)

ஆனால் நீலகண்டன் திருவாய்மலந்தருளியிருப்பது முக்கியமான விஷயம். அதாவது, ஒருவர் இயறபியலில் என்ன சாதனை செய்திருக்கிறார் என்பது குறித்து அவரின் ஆய்வுதாளகளின் அடிப்படையில் முடிவுக்கு வரகூடாது, அவர் டானாக விருது பெற்றதை முன்வைத்துதான் முடிவுக்கு வர வேண்டும். ஆகா, எங்கே இருக்கிறது, பார்பனியம்! ரவி ஸ்ரீனிவாஸ் peer reviewed journal குறித்து பேசியது பார்பனியமென்றால் இதற்கு பெயர் என்ன ? ஒருவர் டானாக இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். தமிழக பல்கலைகழகம் ஒன்றில் ‘தகுதி ‘ இல்லாத ஒருவர் டானாக இருப்பதை சொன்னால் யாருக்கும் வியப்புமேலிடாது. ஆனால், டோரண்டோவில் டானாக இருக்கும் வெள்ளைக்காரர் எப்படி ஒளரமுடியும் ?, என்ற நீலகண்டனது, நிறம் சார்ந்த அசாத்திய நம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஹாரிசனின் இந்த பக்கம் எதை பற்றியது என்று சொல்வதோ, அது குறித்த தகவல்களை எல்லாம் பிட்டு, பிட்டு வைப்பதோ என் நோக்கமில்லை. என் நோக்கம் நீலகண்டன் எதை மேற்கோள் காட்டி, ‘பல விதங்களில் ‘ என்று தொடங்கி சொல்லவந்தாரோ அது குறித்து பேசுவது, மற்றும் ‘இயற்பியலாளர் ‘ என்று சொல்லி அந்த வார்த்தையிலுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மட்டும் நிறுவமுயலுவதால், ஹாரிசனின் இயற்பியல், கணித அறிவு குறித்து பேசுவது மட்டுமே. ஒன்று தெளிவாகிறது. நீலகணட்ன் ‘ஹாரிசன் கூறுகிறார் ‘ என்று சொல்லி சாங்கிய vs பெளத்த — ஷ்ரோடிங்கர் vs ஹெய்ஸன்பர்க் விஷயத்திற்க்கு முடிச்சு போடும் விதமாய் கூறியது இந்த பக்கத்தை மனதில் வைத்து மட்டும்தான். ஹாரிசனும் இது குறித்து வேறு எங்கும் பேசவில்லை. ஆக ‘ ‘கணித அறிவற்ற கலை இலக்கிய துறை மாணவர்களுக்கு ‘ க்வாண்டம் அறிவியல் குறித்த அறிமுகமாக ‘ ஹாரிசன் சொன்னதை மட்டும் வைத்து எப்படி, ஏதோ ஒரு தீஸிஸ் முடிவாக சொன்னது போல் ‘பல விதங்களில் ‘ என்று தொடங்கும் ஒரு வாக்கியத்தை நீலகண்டன் சந்தடிசாக்கில் முன்வைக்கிறார் ?

ஆனால் நான் இணைய முகவரி தந்த பின்னும், வாசகர்கள் நான் சொன்னதை மட்டும் நம்புவார்கள், நீலகண்டன் நான் மறைத்ததாக சொல்லும், சின்ன சின்ன விவரங்களை தாங்களாகவே கண்டு கொள்ளமாட்டார்கள், என்று நினைப்பது குறித்து என்ன சொல்லலாம், அவரே ரவிக்கு எழுதியதை தருகிறேன், ‘இன்றைய இணைய உலகில் இணைய பத்திரிகையில் வாசகர்களுக்கு தகவல்கள் கிடைக்காது என்கிற நினைப்பு கடைந்தெடுத்த ஸ்டாலினிஸ்ட்டுக்கு தான் இருக்க கூடும். ‘ ( http://www.thinnai.com/PL0802032.html )

‘இங்கு ஹாரிஸன் முன்வைக்கும் சாங்கிய-பெளத்த தத்துவங்கள் இறைக்கோட்பாட்டினை குறித்தவை அல்ல. அவர் எந்த ஒரு சமய நம்பிக்கையையும் க்வாண்டம் இயற்பியல் மூலம் ‘நிறுவ ‘ முன்வரவில்லை. தன் நம்பிக்கையை (அப்படி அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) எதையும் அவர் முன்வைக்கவில்லை. க்வாண்டம் இயற்பியல் குறித்து அறிய விரும்பும் கலைத்துறை மாணவர்களுக்கு அவர் கூறியிருப்பது மிக முக்கியமானவையே. ‘

ததாஸ்து! இதற்கும் நான் எழுதியதற்கும் என்ன தொடர்போ ? மீண்டும் கடைசியில் இதற்கு வருவோம்.

(x) இனிதான் க்ளைமாக்ஸ் காட்சி,

‘அடுத்ததாக வசந்த் கோடு கிழித்து ஆடுவதைப் போல கணிதத்திற்கும் இயற்கை மொழிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விவரம் தெரிந்தவர்கள் யாரும் கூறமாட்டார்கள். இயற்கை மொழியை ‘அறியும் ‘ மென்பொருளை உருவாக்க நாம் சந்திக்கும் பல சிக்கல்களை கணிதத்தை ‘அறியும் ‘ மென்பொருளை உருவாக்குவதிலும் நாம் சந்திக்கிறோம் என்பதே பல AI ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது. இதன் எளிமைப்படுத்தப்பட்ட உதாரணமே ஹாரிஸன் கொடுத்திருந்தது. கல்வி உளவியலில் ‘spiral educating ‘ உக்தி அறிந்த எவரும் இவ்வுதாரணத்தின் தளத்தை அறிந்து கொள்ளலாம். இது கணித அறிவு இல்லாத (இன்னமும் சொன்னால் கணிதத்தை கண்டு அச்சப்படுகிற) மாணவர்களுக்காக கொடுக்கப்பட்ட உதாரணம். ‘

நீலகண்டனின் ‘எல்லாம் எமக்கு தெரியும் ‘ என்ற ஆணவமும், ‘எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டில் பிழை இருக்காது ‘ என்ற திருவிளையாட்டுதனமான தைரியமும், எனக்கு புன்னகையை வரவழைக்கிறது. எனக்கு விவரம் தெரியாது என்ற அவரது அசாத்திய நம்பிக்கையை முன்வைத்து அவர் பாணியியிலேயே (அதுவும் நான் விவரமேடிகாக இருக்கும்போது) சாத்தியப்படும் வாசிப்புகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விவரமான யாரவது ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருக்கலாமே! இப்படி மொட்டையாக சொல்லி ஹாரிசனின் தவறான (எளிமைபடுத்தபட்ட அல்ல!) முட்டாள்தனமான உதாரணத்திற்கு சான்றிதழ் வேறா ? பேஷ், பேஷ்! (திண்ணை குழுவினர் முட்டாள்தனம் என்று சொல்வதை கருத்து வேறுபாட்டால் மட்டும் சொலவதாக நினைக்க கூடாது. இது கருத்து வேறுபாடு அல்ல. ‘பூமி தட்டையானது ‘ என்பது போன்ற, கணிதரீதியில் தவறான, தவறு என நிறுவகூடய ஒரு விஷயத்தை குறிக்கிறது. அமேரிக்கவிலேயே அருகில் அகப்படகூடிய கணிதம் தெரிந்த யாரிடமாவது நான் சொல்வதை சரி பார்த்துகொள்ளலாம்.) ஒவ்வொன்றாக வருகிறேன்.

நீலகண்டன் திரும்ப, திரும்ப (இதுவும் ஒரு உத்தியோ!) சொல்லும் விஷயம் என்னவெனில்,

1. சமஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி. ரிக் ப்ரிக்ஸின் கட்டுரையை முன்வைத்து அவர் சொன்னது, ‘ சம்ஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி எனும் அடிப்படையில் வேறெந்த மானுட மொழியைக்காட்டிலும் முரண்மை அற்ற முறையில் பொருள்படுத்த அம்மொழி ஏதுவாக இருப்பதால் ‘செயற்கை அறிவு ‘ ஆய்வில் மொழி அமைப்பியல் அறிதலுக்கு அம்மொழி பயன்படும் என்பதாக அமைந்திருந்தது அவரது நிலைபாடு ‘.

2. இப்போது அவர், ஹாரிசனுடன் சேர்ந்து, கணிதத்தை இயற்கை மொழி போன்றது என்கிறார்.

இதெல்லாம் மகா அபத்தமான விஷயங்கள் என்றலும், நீலகண்டன், ஏற்கனவே கனகாலமாய் பல விஷயங்கள் குறித்து எழுதியுள்ளதனால் உருவான, அதிகாரத்தை வைத்துகொண்டு இதை சொல்வதனால் இது நம்பபடகூடும் அபாயமுள்ளது. அதனால் வேறு வழியின்றி இது குறித்து எழுதுகிறேன்.

நீலகண்டன் ‘செயற்க்கை மொழி ‘ என்ற பதத்தை என்ன பொருளில் பயன்படுத்துகிறார் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. ஏனெனில், ‘செயற்கை மொழி எனும் அடிப்படையில் ‘ ரிக் ப்ரிக்ஸ் எழுதியிருந்தாக அவர் சொன்னாலும், ரிக் சமஸ்கிருதத்தை ‘இயற்கை மொழி ‘ என்றே கட்டுரை முழுவதும் தொடர்ந்து அழைத்து வருகிறார்.

http://www.aaai.org/Library/Magazine/Vol06/06-01/vol06-01.html

ரிக் சொன்னது இருக்கட்டும். அது குறித்து விரிவாய் பிறகு பார்போம். எனக்கு இந்த செயற்கை vs இயற்கை பிஸினஸ் பிடிக்காவிட்டாலும், நானும், இன்னும் ஹாரிசனும் கூட இதை எந்த பொருளில் பயன்படுத்தியுள்ளோம் ?

ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் முரண்படாத வகையில், ஒற்றைவாசிப்பை மட்டுமே எல்லா சந்தர்பங்களிலும், எல்லோருக்கும் தரகூடிய மொழியை செயற்கை மொழி எனவும், முரண்மையுடன் (ambiguity) கூடியதாக, பல வாசிப்புகள் தரகூடியதை இயற்கை மொழி என்பதாகவும் நான் பயன் படுத்தியுள்ளேன். ஹாரிசன்ஜியும் இதே பொருளில்தான் பயன்படுத்தியுள்ளார். ‘The plant is complete. What is it that is complete ? It could be a vegetable. It could be the act of fixing something in place. Or it could be a factory. In the usual case the meaning of a simple phrase like this is given by its context. ‘ என்று சொல்லும்போது (ஒளரும்போது என்றுதான் நியாயமாய் சொல்லவேண்டும், என்றாலும் கொள்கையை தளர்த்தி கொள்கிறேன்) இது தெளிவாகிறது.

http://www.upscale.utoronto.ca/GeneralInterest/Harrison/DevelQM/DevelQM.html

சமஸ்கிருதம் இந்த பொருளின்படி செயற்கை மொழியாகமுடியுமா ? நிச்சயமாக இல்லை. நான் என் எதிர்வினையில் ‘ஒரே வார்த்தைக்கு பல அர்தங்களும், ஒரே பொருளை சுட்ட பல வார்தைகளும், என்று எல்ல மொழிகளையும் போலத்தான் சம்ஸ்கிருதமும் இருக்கிறது (சொல்லபோனால் இன்னும் குழப்பமாக) ‘ என்று சொன்னதை நீலகண்டன் துளிகூட கண்டுகொள்ளவில்லை. இதை நம் மொழியில் உள்ள சமஸ்கிருத வார்த்தைளை கொண்டே சரிபார்த்துகொள்ளலாம். அதைவிட ஒரு நகைச்சுவை, ‘சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்சனை செய்யலாம் ‘ என்பதற்கு ஆதரவாய் தரப்பட்ட ஒரு வாதம் என்னவெனில், சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தைக்கு பல பொருள்கள் உண்டு, தமிழில் அது போல கிடையாது, உதாரணமாக ‘நம: ‘ என்ற வார்த்தைக்கு மட்டும் 60க்கு மேல் அர்தங்கள் உள்ளதாகவும், ‘போற்றி ‘ என்ற தமிழ் வார்த்தைக்கு ஒரே ஒரு அர்தம்தான் உண்டு என்று உதாரணமும் தரபட்டது. நல்லவேளை பகவானுக்கு செயற்கை மொழிமட்டுமே புரியும் என்று சொல்லவில்லை.

இது ஒருபுறமிருக்க, ஸசூரை முன்வைத்து, சமஸ்கிருதத்தை மட்டுமில்லாமல் எந்த மொழியையும், செயற்கை மொழி என்று சொல்வது அபத்தம் என்று எழுதியிருந்தேன். எந்த ஒரு மொழிக்கும் இருக்கும் இடுகுறிதன்மை காரணமாகவே செயற்கை மொழி என்று சொலவதே அபத்தம் என்பதாகவே எனது நிலைபாடு இருந்தது. (நம்ம தொல்காப்பியர் கூட இடுகுறிதன்மை குறித்து பேசியுள்ளதாக தமிழ் சிறுபத்திரிகை அறிவுலகில் பிரபலம்.) இப்போதைக்கு புத்தகங்கள் இல்லை, இண்டெர்நெட்டில் பீராய்ந்து, கொஞ்சாநாளில் ஸஸூர் சொன்னதை முன்வைத்தும், ரிக் கட்டுரை குறித்து பேசும்போது எழுதுகிறேன்.

ஆக மொழி அதன் வார்தைகளை வைத்து சொல்லபோனால் சமஸ்கிருதம் எந்த வகையிலும் செயற்கை மொழியாக முடியாது. ஆனால் சமஸ்கிருத இலக்கணப்படி இப்படி ஒரு ‘செயற்க்கைதன்மை ‘ இருப்பதாக சொல்லமுடியும் என்பதாக நீலகண்டன் சொலவதாக, ரிக் செல்வதாக இப்போது எடுத்துகொள்கிறேன். அந்த சமாச்சாரத்திற்கு பிறகு வருவோம்.

இப்போது கணிதத்திற்கு வருவோம். கணிதமொழி என்பதை, சில அடிப்படை axioms மற்றும் சில அடிப்படை சட்டதிட்டங்கள் கொண்டு உருவாக்கபடும் அதன் இயங்குதல் மொழியை குறிப்பிடுகிறேன் (என்று போனதடவையே சொல்லிவிட்டேன்.) அதை எந்த மொழியில் சொன்னாலும் ஒன்றுதான். சொல்லபோனால் எந்த மொழியையும் பயன்படுத்தாமலே வெறும் குறிகளை கொண்டு மட்டும், கணிதத்தை எழுதவும் முடியும். அந்த வகையில் கணிதத்தில் எழுதபடும் ஒரு வாக்கியத்திற்கு இரண்டு வாசிப்புகள், எந்த கட்டத்திலும் சாத்தியமில்லை. கணிதத்தில் ஒரு, ஒரே ஒரு வாசிப்புதான் எல்லா கட்டத்திலும் (அதை புரிந்து கொள்ளகூடிய) எல்லோருக்கும் சாத்தியம். இது ஒரு hypothetical statement. அதாவது கணிதம் குறித்து புரியாத மனிதர் நான் இதை இப்படி (தவறாய்) வாசிக்கிறேனே என்று சொல்வது குறித்து இங்கே சொல்லபடவில்லை. (ஹாரிசன் வாசிப்பாக அதைத்தான் சொல்கிறார்.)

நான் தெளிவாக சொல்லியும் நீலகண்டன் கண்டுகொள்லவில்லை. வாசிப்பு என்பதில் தவறாக வாசிப்ப்தையோ, புரியாததையோ கணக்கில்கொண்டு சொல்லவில்லை. சென்ற முறையே ‘எனக்கு அரபு மொழி அரைகுறையாய் தெரியும், அதனால் ஏதேனும் ஒரு அரபுமொழிவாக்கியத்திற்க்கு என்னால் அறநூறு வாசிப்புகளை தப்புதப்பாய் வைக்கமுடியும் என்று சொலவது போன்றது அல்ல இது. ‘ என்று சொல்லியிருக்கிறேன்.

ஹாரிசன் செய்வது என்ன ? ஒரு கணித ஆய்வுதாளோ, இன்னும் சொல்லபோனால் எளிமையான கணிதம் தொடர்பான கட்டுரை எழுதினால் கூட சில குறியீடுகளின் அர்த்தங்கள் முதலிலேயே தெளிவாக வரையரை செய்யபட்டு விடும். A மேல் புள்ளி வைப்பதற்கு என்ன பொருள் என்பது தொடக்கத்திலேயே தெளிவு படுத்தபட்டுவிடும். பாடத்தை முதலிலிருந்து ஒழுங்காக படிக்கமல், திடாரென நடுவில் எதையாவது படிக்க முயலும் ஒரு ஹாரிசனுக்கு அது இஷ்டத்திற்கு தோன்றினால் அதற்கு பல வாசிப்புகள் இருப்பதாக அர்த்தமில்லை. இன்னும் சொல்லபோனால் ஒரே விஷயத்தை வேறு மாதிரி சுட்டினாலும் அர்த்தம் மாறிவிட போவதில்லை. நான் B.Sc. படித்து கொண்டிருந்தபோது, கணித தேர்வில் ஒருமுறை, வாத்தியார் வகுப்பில் பயன்படுத்தியிருந்த குறியீட்டை விட்டு , ( (x,y) எனபதற்க்கு பதிலாக (m,n) என்று ) வேறு ஒன்றை நான் பயன்படுதியதால், (மற்றபடி நான் எழுதியது சரியாக இருந்தும்), எனக்கு முட்டை போட்டிருந்தார். அந்த ஆசிரியரின் அறிவு தளத்தில்தான் ஹாரிசனும் இருக்கிறார்.

Similarly, in mathematics one often puts a dot over a character: A The meaning of the dot is ambiguous. It could mean we are referring to a unit of length called the Angstrom. It could mean that we are referring to the derivative of the variable A with respect to time. It could mean other things as well. என்று சொல்லியிருப்பது எந்த விதத்திலும் நீலகண்டன் சொல்லியிருப்பது போல் எளிமையான உதாரணம் இல்லை. தவறான, முட்டாள்தனமான உதாரணம். கணிதத்தை பார்த்து பயப்படும் மாணவர்களுக்கு இப்படி, ஒரு தப்பான, அதுவும் முட்டாள்தனமான உதாரணத்தை தருவது எந்த விதத்திலும் நியாயபடுத்த கூடியது மட்டுமல்ல, கணிதத்தின் மேல் அளப்பரியா காதல் வைத்திருப்பவர்களால் மன்னிக்கமுடியாததும் ஆகும். இந்த blunderஐ, ‘கல்வி உளவியலில் ‘spiral educating ‘ உக்தி ‘, என்று சொல்லி நீலகண்டன் நியாயபடுத்த வருவது ஐயம்திரிபட பம்மாத்து. அதை உள் உணர்ந்தே உள்நோக்கதுடன், பல வாசகர்கள் முன்னிலையில் வைத்திருந்தால் அது அறிவு மோசடி. இதை உணர்சி வசபடாமலும் நிதானமாக சொல்கிறேன். பாவம், அவருடைய அறிவுஜீவி உறை இப்படி கழன்றிருக்க வேண்டாம்.

இது இப்படியிருக்க, கணிதம் எந்த வகையில் மேற்சொன்ன வகையில் செயற்கை மொழி, அதன் அடிப்படை பிரச்சனைகள் என்ன, அது எவ்வாறு தீர்க்கபட்டது, நிறுவுவது என்பது அதில் மட்டும் எப்படி சாத்தியம், நீலகண்டன் குறிப்பிடும் அல்காரிதம் என்றால் உண்மையில் என்ன, எனபதெல்லாம் குறித்து விரிவாய் எழுத முயற்சிக்கிறேன்.

‘இயற்கை மொழியை ‘அறியும் ‘ மென்பொருளை உருவாக்க நாம் சந்திக்கும் பல சிக்கல்களை கணிதத்தை ‘அறியும் ‘ மென்பொருளை உருவாக்குவதிலும் நாம் சந்திக்கிறோம் ‘ என்று மொட்டையாக நீலகண்டன் குறிப்பிட்டிருந்தாலும், இது தெளிவாக சொன்னால் என்ன பிரச்சனை என்பது குறித்து பேசமுடியும். இப்படி ‘இயற்க்கை மொழியுடன் ‘ ஒப்பிட்டு ‘விவரமறிந்த ‘ யாரும் ஒளரியிருக்க வாய்பில்லை என்றாலும், கணிதத்தை அறிவதில் சில பிரச்சனைகள் நிச்சயமாய் இருக்க் கூடும். நீலகணடன் இது குறித்து ஏதாவது எழுதினால் மேலே பார்கலாம். அப்படி இல்லாவிட்டாலும், நான் சென்ற பத்தியில் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற முயற்சிக்கிறேன்.

(x)

‘ஆனால் தர்க்கத்தை மிகவும் சிலாகிக்கிற அல்லது ரோசாவசந்தின் ‘ஸ்டையிலில் ‘ சொல்வதென்றால் சிலாகிப்பதாக காட்டிக்கொள்கிற ஒருவரை பொறுத்தவரையில் ஒருவர் கூறும் ‘அ ‘ எனும் விஷயத்தை மறுதலிக்க (க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீடு மற்றும் பாரத ஞான மரபிற்கான இணைத்தன்மை) அவர் கூறும் ‘ஆ ‘ என்கிற விஷயத்தை ‘கிழித்துவிட்டு ‘ (கணிதம் – இயற்கைமொழி ஒப்பீடு) -என்னைப் பொறுத்தவரையில் அதில் கிழிந்திருப்பது ஹாரிசன் அல்ல- அதனால் ‘அ ‘ வும் ‘ஆ ‘ போல தவறு என்கிற தர்க்கம் இருக்கிறதே, ரஸ்ஸல் தோற்றார் போங்கள்! ‘

இன்னும் ஹாரிசன் கிழியவில்லை என்று சாதிப்பது குறித்து புன்னகைத்துவிட்டு மற்ற விஷயத்திற்கு வருகிறேன். முதலில் ‘ஆ ‘ வை காட்டி ‘அ ‘வும் தவறு என்று சொலவது அபத்தம் என சொல்ல ரஸ்ஸல் தேவையில்லை. அதற்கு பெயர் காமன் ஸென்ஸ். ரஸ்ஸல் எதற்கு தேவை என்பது குறித்து பிறகு எழுதுகிறேன். ஆனாலும் நான் ‘ஆ ‘வை காட்டி ‘அ ‘வும் தவறு என்று நான் சொல்லவில்லை. இயற்பியலாளர் என்று சொல்லி அந்த அதிகாரத்தின் அடிப்படையில் நீலகண்டன் நிறுவ முனைந்ததால், ஹாரிசனின் அறிவு எந்த தளத்தில் இருக்கிறது என்பதைத்தான் சுட்டிகாட்டினேன். ஆனால் ஹாரிசனை கிழித்தால் நீலகண்டன் நிச்சயம் கிழியமாட்டார். ஆனால் ஹாரிசன் சொன்னது சரிதான் என்று பிடிவாதம் பிடிக்கும் செயல்பாட்டில் நான் எதிர்பார்க்காமலேயே நீலகண்டனும் கிழிந்துவிட்டார்.

‘க்வாண்டம் இயற்பியலின் தத்துவ உள்ளீடு மற்றும் பாரத ஞான மரபிற்கான இணைத்தன்மை ‘ என்பது குறித்து ஹாரிசன் சொன்னதில் மறுதலிக்க என்ன இருக்கிறது ? அது குறித்து சொல்லத்தானே செய்திருக்கிறேன்.

‘இப்படி மொட்டையாய் சொல்ல எதற்கு ஒரு வெள்ளைக்கார ஹாரிசன், ரஜினிகாந்த் பாபா பட வசனத்தில் சொன்னால்கூட போதுமே! ‘ என்றும், ‘நீலகண்டன் ‘பகடையாடும் சடையோன்… ‘ என்று எழுதிய பாட்டுக்கும், குவாண்டம் இயற்பியலுக்கும் என்ன தொடர்பு உண்டோ, அந்த அளவிற்க்குதான் ஹாரிஸன் முனவைக்கும் ‘பெளத்த, ஸங்கிய ‘ விவாதத்திற்க்கும், எய்ன்ஸ்டான்-ஷ்ரோடிஞ்ஞர் விஷயத்திற்க்கும் இருக்கிறது. இப்படி பொத்தாம் பொதுவாக எதை வேண்டுமானலும் தொடர்பு படுத்தி பேசலாம். (அது தவிர ஹாரிசன் அல்லது ஷெர்பாட்ஸ்கி அளிக்கும் சில வாக்கியங்கள் குறித்து எனக்கு மிகுந்த சந்தேகங்கள் உள்ளன, இதற்கான காரணம் சில கலை சொற்கள் அந்த காலத்தில் இருந்திருக்க வாய்பில்லை என்பதுதான்.) ‘

‘ஆ ‘வை வைத்து ‘அ ‘வை கிழித்ததாக எங்கே சொல்லியிருக்கிறேன் ? உளரலின் உச்சமாக ‘இப்படி ஒரு ஒளரல் வாதத்தை முன்வைத்து, அதன் மூலம் எய்ன்ஸ்டான், ஷ்ரோடிஞ்சர் நிலைபாடுகள், T. S. எலியட்டின் கவிதைக்கு இருக்கும் இரண்டுவகை இலக்கிய விமர்சனம் போன்றது ‘ என்று சொலவது போலத்தான் ‘இந்திய தத்துவத்திற்க்கும், குவாண்டத்திற்க்கும் ஒரு முடிச்சு ‘ என்று சொல்லியிருக்கிறேன்.

அது சரி, ஹாரிசன் சொன்னதில் ஏதாவது அர்தம் இருந்தால் அதை விளக்க நீலகணடனை எது தடை செய்ததோ!

The more I ponder the physical part of Schrட்dinger ‘s theory, the more disgusting it appears to me. ‘

If one has to stick to this damned quantum jumping, then I regret ever having been involved in this thing. ‘

The phenomena consist of an infinity of discrete moments following one another almost without intervals…. There is no matter at all, flashes of energy follow one another and produce the illusion of stabilized phenomena. The universe is a staccato movement

The phenomena are nothing but waves or fluctuations standing out upon the background of an eternal, all-pervading undifferentiated Matter with which they are identical. The universe represents a legato movement.

இப்படி மொட்டையாய் நாலுவரி எழுதியதில் நான் என்ன எழவை மறுக்க இருக்கிறது. உருப்படியாய் எதாவது இணைதன்மை என்று குறிப்பிட்டு விளக்கினால் பேச வாய்ப்பிருக்கிறது.

ஆனாலும் லாஜிக் குறித்து நீலகண்டன் பேசுவது கொஞ்சம் ஓவர்தான். அவர் கட்டுரைகளில்தான், குறிப்பாக ஒன்றை மறுக்கும்போது எத்தகைய அற்புதமான லாஜிக் தெரிக்கிறது. உதாரணமாய், அந்த குஜராத் குறித்த கட்டுரை http://www.thinnai.com/pl0728021.html . அதிலும் அருந்ததி ராய் ஜாஃப்ரியின் மகள் தொடர்பான செய்தியில் மன்னிப்பு கேட்டதாய் ( நான் இந்த விவரம் குறித்து செய்தி படிக்கவில்லை) சொல்லும் விஷயத்தை நீங்கள் மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் லாஜிக் இருக்கிறதே, அதற்கு மரியாதை செய்யும் வகையில் என்னால் ஒரு நாளும் எழுதமுடியாது.

கடைசியாக, நான் தர்க்கத்தை மிகவும் சிலாகிப்பதாகவும், அல்லது சிலாகிப்பதாக காட்டிக்கொள்வதாக கூறுவது குறித்து, நீலகண்டன் சொன்ன இரண்டுமே தவறு. நான் தர்கத்தை ஒரு போதும் சிலாகிக்கவில்லை. தர்கம் எல்லாவித நியாயத்துடன் செயல்படும் ஒரே இடமாக கணித்த்தை மட்டுமே குறிப்பிடுவதன் மூலம், பொதுவாக நாம் முன்வைக்கும், கொண்டாடும், தர்கம் ஏமாற்றகூடியது, வன்முறை நிறைந்தது என்ற கருத்தைதான் நான் முன்வைக்கிறேன்.

உதாரணமாய் ஜீவா ‘சமணர்கள் தர்கத்தில் தோற்றதினாலேயே கழுவிலேற்றபட்டனர் ‘ என்று சொல்லி சமணர்கள் கழுவில் ஏற்றபட்டதை நியாயபடுத்த முனைந்த போது அதை கீழ்கண்ட வாதங்களினால் மறுத்திருந்தேன். இதையும் விரிவாய் எழுத முயற்சிக்கிறேன்.

a) தர்கத்தில் தோற்றவர்களை கழுவிலேற்றினால் பரவாயில்லை என்கிற தொனியில் பேசுவது அயோக்கியதனமானது என்ற மனிதாபிமானத்தை மட்டும் அடிப்படையாய் கொண்ட வாதம். (இப்போதைக்கு இப்படி எழுதுகிறேன், திண்ணை ‘நேர்மையற்றது ‘ என்றோ வேறு வார்த்தையாலோ மாற்றி கொள்ளட்டும்).

b) சமணர்களுக்கும், சைவர்களுக்கும் பொதுவான நியாயம் என்று ஒன்று இருக்கமுடியாது.

c) தர்கத்தில் வெற்றி பெருவது, தோற்பது என்பதற்கு முழுமையாய் எந்த பொருளும் கிடையாது. அது சாத்தியமில்லாதது. அதை தீர்மானிக்க கூடிய தளமாக இருப்பது கணிதம் மட்டுமே. அங்கேயே பல அடிப்படை பிரச்சனைகள் உள்ளது. இதை கோடல் தேற்றம் மூலமாகவும் விளக்க முயன்றிருந்தேன். Hilbert ‘s 10th problemஇன் இன்றய நிலமை வரை பேசியதாகவும் நினைவு.

d) பொதுவான நியாயம் (LOGIC) என்பதே பிரச்சனைகுரியதாக இருக்க மொழி இதை இன்னும் மகா குழப்பமான விஷயமாக மாற்றுகிறது. (ஆனால் நீலகண்டன் தர்கம் சமஸ்கிருதம் என்ற செயற்கை மொழியில் நிகழ்ந்ததால் இந்த பிரச்சனை சமாளிக்கபட்டதாக சொல்லலாம்.)

e) இப்படி பல பிரச்சனைகளிக்கிடையில் இன்று தர்கத்தில் தோற்றதாக கருத படுபவர்கள் நாளை வெற்றிபெறகூடும். அதற்கு கூட வாய்பில்லாமல் கழுவிலேற்றுவது மகா அநியாயம்.

ஆக நான் தர்கத்தை வன்முறை நிறைந்ததாகவே பார்கிறேன். (யமுனா ராஜேந்திரன் கவனிக்கணும், நான் இதை பின் நவீனத்துவம் கொண்டு அணுகவில்லை. கணிதத்தை அடிப்படியாய் வைத்தே சொல்கிறேன்.) ஆனாலும் தர்க்த்தின் மூலமே பேசுகிறோம். தர்கத்தை நம்மால் தவிர்க்க முடியாது. நாள் முழுவதும் ‘மொழி விளையாட்டுகளை ‘ மட்டும் முன்வைத்து கொண்டிருக்கமுடியாது. தர்கத்தின் மூலமே பல சமயம் முடிவுக்கு வருகிறோம். ஆகையால் தர்கத்தை எப்படி ‘ஆரோக்கியமாக ‘ செய்வது என்பதும், அதன் வன்மூறையை எப்படி மினிமைஸ் செய்வது என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.

(xi)

‘க்வாண்டம் இயற்பியல் மற்றும் பாரத தத்துவ மரபு குறித்த தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு தனி கட்டுரை எழுதிதான் நான் ‘மரியாதை ‘ செய்ய வேண்டும். செய்திருக்கிறேன். ‘

மன்னிக்கவேண்டும், இது மரியாதை அல்ல, அவமரியாதை. நீங்களே ரவிக்கு சொன்னது போல், இன்றய இணைய உலகில் இதை எல்லாம் கேள்விபட்டிருக்கமாட்டேன் என்று நினைத்து சில விவரங்களை, மட்டும் உதிர்பதை மரியாதையாக கொள்ளமுடியாது. என்ன அடிப்படை தகர்ந்தது, என்ன ஒளிக்கீற்று தெரிந்தது, என்று விலாவாரியாய் விளக்காமல், போர் சொன்னதையும், ஒபன்ஹெய்மர் சொன்னதையும் கொண்டுவந்து கொட்டினால் பேச எதுவுமில்லை. இப்போது நேரமில்லை. இந்த விஷயம் குறித்தும் மீண்டும் பிறகு பேச முயற்சிக்கிறேன்.

(xii) கடைசியாய்,

‘பி.கு, திரு.ரோசாவசந்த் தங்கள் பதிவுகள் கருத்து கண்டேன். ஒரு சாதாரண மரியாதையை ‘குழைவு ‘ (எஜமானனிடம் நாய் வாலாட்டுவது போல ?) என்று கூறும் தங்கள் ‘திமிர் ‘ அபாரமானது. ‘

முதலில் எந்த விளக்கமும் இன்றி ‘குழைவு ‘ என்ற வார்த்தைக்கும், அதற்கு நீங்கள் சொன்னது போன்ற வாசிப்பு வருவதற்கும் எனது மன்னிப்பை கேட்டுகொள்கிறேன். ஒரு விஷயம் கவனீத்தீர்களெனில், நான் பயன்படுத்தியதாய் சொல்லபடும் ‘அமங்கல ‘ வார்த்தைகள் எது குறித்தும் எனக்கு வருத்தம் இருந்ததில்லை. அதை தவறாக, நியாயமில்லாமல் பயன்படுத்திவிட்டதாக ஒரு முறை நினைத்தது கிடையாது. அதனால் நான் உண்மையிலேயே தவறு என்று வருத்தபடும் காரணத்தினாலேயே இங்கே மன்னிப்பு கேட்கிறேன்

வாசிப்பு எப்படி சாத்தியபடினும், என் உள் நோக்கம அதுவல்ல என்று தெளிவுபடுத்த மட்டும் விரும்புகிறேன். அநாதை ஆனந்தன், என் எதிர்வினையை படித்து உங்களுக்கு ரத்த அழுத்தம் ஏறும் என்று குறிப்பிட்டிருந்தார். நான் அதை மறுத்து ‘நீங்கள் நினைப்பது போல், நீலகண்டனுக்கு ரத்தம் அழுத்தம் ஏறும் என்று தோன்றவில்லை. எனக்கு கொஞ்சம் குழைந்து அன்பாகவும், ரவி ஸ்ரீனிவாஸிற்க்கு(சாம்ஸ்க்கி குறித்த நீலகண்டனின் அவதூறு குறித்து அவர் பேசியதற்கு) காட்டமாகவும் எதிர்வினை வைப்பர் என்று நினைக்கிறேன். இதை படித்தால் கொஞ்சம் மாற்றியும் செய்யலாம். ‘ என்றுதான் சொன்னேன். அதாவது எனக்கு நிதானமாகவும், ரவிக்கு கோபமாகவும் பதில் தருவீர்கள் என்றுதான் நினைத்தேன்.

அதற்கு காரணமும் உண்டு. ‘சாம்ஸ்கியின் போல்பாட் ஆதரவு குறித்து ‘ சாதூர்யமாய் (இணையத்தில் கிடைக்கும் பல தகவல்களைபோல) –சாம்ஸ்கி இது குறித்து அளித்த விளக்கங்களை ஒதுக்கி– வழக்கமான த்ர்கத்தின் மூலம், (ஸ்டாலினிஸ்ட் etc) ரவிக்கு கோபமாக பதில் தருவீர்கள் என்று நினைத்தேன். ஹாரிசன் விஷயத்தில் நான் சொன்னத்தை மறுக்கும் அளவிற்கு நீங்கள் போவீர்கள் என்று நினைக்காததால், கொஞ்சம் அன்பாய் எனக்கு பதில் தருவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் ‘இதை படித்தால் கொஞ்சம் மாற்றியும் செய்யலாம். ‘ என்பதை மட்டும் நிருபித்துவிட்டார்கள்.

என்னிடம் குழைய உங்களுக்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. ‘அன்பாக ‘ என்று நான் சொன்னதை விடுத்தும், ரவிக்கு நீங்கள் செய்யகூடியதற்கு மாறாக சொன்ன இடத்திலிருந்தும் கழட்டி இப்படி ஒரு அர்தம் வரும் என்று எதிர்பார்கவிலை. விவாதகளத்தில் அந்த அளவு பரிசீலனை செய்து உள்ளிடுவதில்லை. தவறாக வந்த அந்த வார்த்தைக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

(xiii) ஏனோ அந்த P. ராமனுஜம் குறித்து நீலகண்டன் பேசவே இல்லை. சமஸ்கிருத இலக்கண அடிப்படையில், அல்காரிதம் இவர் உருவாக்கினார் என்று சொல்வதை, அவரின் ஆய்வுதாளை படிக்காமலே நான் மறுத்து பேச காரணங்கள் உண்டு. இது சரித்திரத்தின் துணையில்லாமலேயே ஜீவா சொன்னதை மறுத்தது போன்றது. நீலகண்டன் விவரம் தந்தால் (ராமனுஜத்தின் மின் அஞ்சல் முகவரி, அல்லது அவரது ஆய்வுதாள்) மேலே பேசலாம்.

3. மதிப்பிற்குரிய நரேந்திரனுக்கு:

அன்புள்ள நண்பர் நரேந்திரன்,

உங்கள் கொள்கையை தளர்த்தி எனக்கு கடிதம்/கவிதை எழுதியதற்கு நன்றி. அன்பு வளர்ந்திட பல வழிகள் உள்ளதாக சொன்னதால், அதில் ஒரு வழியாய் இந்த பதில் கடிதம். நமக்கு கவிதை எழுதவெல்லாம் வராது. நேரடி உரையாடல் மட்டுமே! ஒரே ஒரு முறை முயற்சி செய்ய போய், ‘அதென்ன கவிதையா, ஐயோ! ‘ என்று ஒரு பண்பட்ட விமர்சகர் நவின்றிருந்தார். அதிலிருந்து கவிதை படிக்க கூட தகுதி உண்டா என்று தெரியாததால், தெரிந்து கொள்ளமுடியாததால் அந்த பக்கமே போவதில்லை. அது இருக்கட்டும்.

உங்கள் கட்டுரையை ‘அசட்டு கட்டுரை ‘ என்று சொன்னதால், வம்பு வளர்பதாய் சொல்கிறீர். இல்லை, நிச்சயம் இல்லை! நான் அசட்டு எழுத்து என்பதை ஒரு குறிப்பிட்ட எழுத்து வகையாகத்தான் (genre) பார்கிறேன். மற்ற எல்லா எழுத்துக்களை போல அதற்கும் உரிய இடம் உண்டு என்பதுதான் அடியேனின் தாழ்மையான கருத்து. உதாரணமாய் இந்த அசட்டு நகைச்சுவை என்பதை பார்போம். அதற்கு ஒரு சரியான உதாரணமாய் நம்ம நடிகர் Y. G. மகேந்திரனை சொல்லலாம். சோ கூட பெரும்பாலும் அசட்டு நகைச்சுவைதான் செய்வார் என்றாலும், ‘தேன்மழை ‘, ‘கலாட்டா கல்யாணம் ‘ என்று அவ்யப்போது அதிலிருந்து சற்று மீறியும் இருப்பார். ஆனால் பொதுவாக சோவின் நகைச்சுவையை (அவரின் அரசியல் நையாண்டிகளையும் சேர்த்து) இந்த அசட்டு நகைச்சுவைக்கு உதாரணமாய் சொல்லலாம். கிரேஸி மோகனின் நாடகங்களை பார்த்தால் அது ஏதோ மாம்பலம், மைலாப்பூரில் வாழ்பவர்களுக்காகவே எழுதபட்டது போல் தோன்றும். (சொன்னது நானில்லை, எனக்கு பிடிக்காத VHPயில் இருந்தாலும் நான் சில நேரம் ரசிக்கும், அசட்டு நகைச்சுவையிலிருந்து மீறீ இருக்கும் S. V. ஷேகர் சொன்னது). கிரேஸி மோகனின் நாடகங்கள் அசட்டு நகைச்சுவையையே கொண்டிருந்தாலும் அவரும் ‘மைக்கேல் மதன காமராஜன் ‘, ‘தெனாலி ‘ வசனங்களில் குத்தல் நக்கல் வசனங்களை கையாண்டு கொஞ்சம் அதிலிருந்து வெளிவந்திருப்பார். அசட்டு எழுத்து என்பதில் ஒரு சாதனை படைத்த இலக்கிய மேதையாக தேவனை சொல்லலாம்.

இதற்கு நேர்மாறான நகைச்சுவையும் உண்டு. எனக்கு எல்லா வகை எழுத்தும், எல்லா வகை நகைச்சுவையும் வேண்டும் என்றாலும், இந்த வகை நகைச்சுவை கொஞ்சம் டாஸன்ஸி கம்மியாக ஒரு எண்ணம் நமக்குள் வந்துவிட்அது. அதாவது நம்ம கவுண்டமணி, செந்தில். இவர்கள் செய்யும் நக்கலும் குத்தலும் பார்த்தீர்களானால், இந்த அசட்டுதனம் இருக்காது. நக்கல், நையாண்டி போன்றதை அடிப்படையாய் கொண்டிருக்கும். தமிழில் இது கொஞ்சம் ஃபேமஸ். இதை தொடங்கி வைத்த்து நம்ம மதிப்பிர்குரிய நடிகவேள் ( என்ன விவாதித்தாலும் இந்த பட்டமெல்லாம் மறக்கமாட்டேனென்கிறது.) M. R. ராதாதான். ஒரு மொனொடானஸா நடித்து கொண்டிருந்த சமயத்தில் இவர்தான் எல்லாவற்றையும் நையாண்டி செய்யும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்தாதாக என் சிற்றறிவின் முடிவு. (கலைவாணர் அவர் வேறு வகை). இதான் பிரச்னை, பேச்சு ட்ராக் மாறி என்கேயோ போய்விட்டது.

எங்க திருநெல்வேலி மதுரை பக்கம் வந்தால் ( ஸாரும் அந்த பக்கம்தானோ ?) குசும்பு, குதர்க்கம் இல்லாம பொதுவா எவனுக்கும் பேச வராது. வடிவேல் கிட்ட இந்த குசும்புதான் அலாதியாய் வெளிபடுகிறது. என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்த அசட்டு நகைச்சுவைக்கு எதிரான இது போன்ற (லாஜிக்கை கலைத்து போடும்) நகைச்சுவைக்கு மவுசு உண்டுன்னாலும், அது குறித்து மரியாதை குறைவா பலருக்கும் எண்ணம். எனக்கு தூத்துகுடி இஞ்சி மீதுள்ள பற்று போல் இந்த வகை நக்கல் கலந்த நகைச்சுவை மீதுதான் பற்று அதிகம்.

உங்க எழுத்தில் இந்த அசட்டுதனம் வெளிபடுவதாக எனக்கு தோன்றினாலும், எனக்கு அது குறித்து மரியாதை குறைவு எல்லாம் இல்லை. உங்க கவிதை கூட கொஞ்சம் அசட்டுதனமாகத்தான் தெரிகிறது. ஆனாலும் அதில் இருக்கும் உங்கள் அன்பை மறுக்க முடியுமா ?

ஆனால் நான் சிவக்குமாரின் கட்டுரையையும் அப்படி சொன்னதாக நீங்கள் சொல்வது உண்மையல்ல. அவர் ரொம்ப ‘தர்கபூர்வமாக ‘ போவதால், அவருடைய எழுத்தை அசட்டு எழுத்தாக என்னால் பார்க்கமுடியவில்லை. ஒரு சாமர்தியமான தர்க பூர்வமான எழுத்தாகத்தான் பார்க்கமுடிகிறது. உங்களிடம் வெளிபடும் நேர்மை அவரிடம் வெளிபடுவதாக என்க்கு தோன்றவில்லை. அதனாலேயே இதை எழுதிகொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதுவது எனக்கு உவப்பானதாய் இல்லைதான். ஆனால் உங்களுக்கு தோன்றியதை நேர்மையாக நீங்கள் செய்வதாக என்க்கு தோன்றுகிறது. இருக்கும் தகவல்களையும், தரவுகளையும், உதாரணமாய் மதிப்பிற்குரிய மஞ்சுளா நவனீதன் போல் நீங்கள் சாதூர்ய்மாய், வளைத்து, நெளித்து சாதகமாய் பயன்படுத்தி கொள்வதாய் என்க்கு தோன்றவில்லை. ஆனால் உங்கள் எழுத்து வகையை மட்டுமே அசட்டு எழுத்து என்று சொன்னேன். இப்படி நேர்மையாய் எனக்கு தோன்றிய கருத்தை தயங்காமல் முன்வைத்ததை ‘பண்பில்லாமல் பரிகசிப்பதாய் ‘ சொல்லலாமா ?

உங்கள் அத்தனை கட்டுரைகளையும் நான் படிக்கவில்லை, என்றாலும் இந்த அண்ணா குறித்த கட்டுரையை பாருங்கள். பஞ்சகல்யாணி என்று கழுதையில் ஆரம்பிக்கிறீர்கள், ‘ஒரு மரத்திற்கு கூட அண்ணவின் பெயரை வைக்ககூடாது ‘ என்று முடிக்கிறீர்கள். இதை நீங்கள் பண்புடன் எழுதியதாக நினைக்காத போது, ஒரு சாதாரண கருத்திற்காக என்னை பண்பில்லாதவனென சொல்லலாமா ? எனக்கு கூட அண்ணா மேல் கொஞ்சம் கோபம்தான். பெரியாரின் அர்சியல் இயக்கத்தில், மிக முக்கியமான கட்டங்களில் இவர் மன்னிக்கமுடியாத துரோகம் செய்துள்ளதாகத்தான் நினைக்கிறேன். ஆனாலும், காங்கிரஸ் என்பதை இடமில்லாமல் சுத்தமாக காலி செய்த ஒரே காரணத்திற்காக அவர் மீது மதிப்பு. அவ்வளவுதான்.

சரி, நரேந்திரன், திண்னைக்கு கட்டுரையை அனுப்பும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் சந்தர்பம் நேரும் போது உரையாடலை தொடர்வோம். இப்போது இதை தொடர முடியவில்லை. அன்புள்ள வசந்த்.

—————————————-

rksvasanth@yahoo.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

ரோஸா வசந்த்

ரோஸா வசந்த்