பட்டினிப் படுக்கைகள்…

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

சேவியர்


( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் )

நம்ப முடியவில்லை
இந்தியாவில் இன்னும்
பட்டினிச் சாவுகளின் பட்டியலா ?

ரதத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள்
பாரதத்துக்காய்
கொஞ்சம் கண்ணீர் சிந்தியிருக்கலாம்.

இன்னும் சுயநலக் கிணறுகளில் தான்
அரசியல் குழுக்கள்
குடும்பம் நடத்துகிறதா ?
வியாபார இடங்களில் மட்டும் தான்
விளக்குகளை எரிக்கிறதா ?

வறுமையில் தேசங்கள் எரிந்த கதை
வரிந்துகட்டிய வல்லூறுகளின் வரலாறுகளின் .
இப்போது இதோ
வலது கண்ணிலேயே எரிகிறதே.

மலைவாழ் மக்களுக்கு
மண்செரிக்கும் வயிறுகளை
ஆண்டவன் வைக்கவில்லை.
ஆள்பவரோ,
நிலவுக்கு செல்லும் வேகத்தில்
நிலத்துக்குச் செல்ல நினைக்கவுமில்லை.

செயற்கை மழை செய்யும்
சிந்தனை வாதிகளே…
மழைக்காய் ஆட
உங்களால் ஓர்
செயற்கை மயிலை செய்ய இயலுமா ?

இருட்டும் இருட்டும்
குருடாகிக் கிடக்கும் காட்டுப் பாதையில்,
சிறுவர்கள் கிழவர்களாய்
உருமாறிக் கிடக்கும் கிராமங்களில்,
இனியேனும் ஏதேனும் ஏற்றுமதியாகுமா ?

இல்லை,
வாக்குப் பெட்டிகள் மட்டுமே
மனசாட்சியின்றி முகம் காட்டுமா ?

இந்த வேட்டிக் கரைகளுக்காய்
வேதனைப்படும் அரை வேக்காடு அரசியலில்
வறுமைக் கறைகள்
கழுவப்படாமலேயே உலர்த்தப்படுமா ?

பாரத்துக்குத் தேவை
இன்னொரு பிச்சைப்பாத்திரமல்ல.
சில அட்சய இதயங்கள்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்