பக்தி நிலை வரும்போது__-

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

சுதாவேதம்



சிட்டுக் குருவியின் பட்டுச் சிறகினை

..தொட்டுமே பார்த்தததுண்டா?-பூ

மொட்டின் இதழினில் குட்டிப் பனித்துளி

..எட்டி ரசித்ததுண்டா?-முகில்

பெட்டி திறந்திட முட்டி விழும்மழை

..சொட்ட நனைந்ததுண்டா?-குளிர்

வெட்டும் இரவினில் கொட்டும் அருவியில்

..முட்டிக் குளித்ததுண்டா?

..

கொஞ்சும் குழவியின் பிஞ்சு மொழியிலே

..நெஞ்சம் நனைந்ததுண்டா?-அட!

அஞ்சும் அணிலுடல் கொஞ்சம் தடவியே

..கொஞ்சி மகிழ்ந்ததுண்டா?-புது

மஞ்சம் விரித்திடும் பஞ்சுப்புல் தன்னிலே

..துஞ்சிச் சுகித்ததுண்டா?-உங்கள்

நெஞ்ச அடுக்கினில் அஞ்சிப் பதுக்கிய

..பிஞ்சான காதலுண்டா?

..

இத்தனை உண்டென்றால் இத்தரை வாழ்வுமே

…நித்யம் சுகம்தானே?-அட!

பத்தியம் கொண்டது போலவா வாழ்க்கையும்?

..பக்தியும் வேணுமன்றோ?-உள்

சத்தியம் மேற்கொண்டு சக்தியோ டுன்மனம்

.. சுத்தமாய் வைத்திடுவாய்!-நிதம்

கத்திடும் எண்ணங்கள்! கொத்திடும் பார்வைகள்!

..தத்துவ ‘நான்’ அறிவாய்!

..

கோடியில் எங்கோஓர் கோயில் அலைந்தலைந்

..தோடியே தேடாதே!-ஆம்!

பாடி அவனைநீ பாசத்தால் கட்டலாம்!

..வாடி வருந்தாதே!-கண்

மூடியே நெஞ்சுள்ளே நாடிக் கடவுளைச்

.. சூடியே வாழ்ந்திடுநீ!-பின்(பு)

ஆடி அடங்கிடும் ஆசை ஒடுங்கிடும்

..கூடிக் கலக்கலாம்நீ!-ஒளிக்

..கூட்டில் ஒடுங்கலாம்நீ-

&&&&&&&&&&&&&&&&&&&()

Series Navigation

சுதாவேதம்

சுதாவேதம்