பித்தன்
‘பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் ‘ என்ற ரவி.K.ஸ்ரீநிவாசின் கட்டுரை ஒரு குறைபாடுள்ள
கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறுகிய கண்ணோட்டத்தில் பெரியாரையும்,
அவர் கொள்கைகளையும், பகுத்தறிவையும் பார்ப்பதுபோல இருப்பதால், அதைப்பற்றிய என்
எண்ண ஓட்டத்தை இங்கே எழுதியிருக்கிறேன்.
பகுத்தறிவு குறித்தும் மூடநம்பிக்கைகள் இருக்கலாம் எனின் அது பகுத்தறிவின் குற்றமல்ல.
மூடநம்பிக்கைகளிலேயே ஊறிவிட்ட நம் சமூகத்தின் குற்றம். எல்லாவற்றையும் பகுத்து,
ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்று சொன்ன பிறகும் அதில் மூடநம்பிக்கையிருந்தால்
அது எப்படி பகுத்தறிவின் குற்றமாகும் ? பகுத்தறிவை பின்பற்றுபவர்கள் சரியாக பகுத்தறியவில்லை
என்பதாகத்தானே அர்த்தம். எனின் அது அவர்கள் குற்றமே.
‘அறிவியல்-தொழில் நுட்பம் குறித்த பெரியாரின் புரிதல் என்ன ? உலகமயமாக்கல் குறித்து பெரியாரியம்
என்ன சொல்கிறது ? ஊடகங்கள் குறித்து பெரியாரியப் புரிதல் எத்தகையது ? தி.மு.க ஆட்சி மீது எம்.ஜி.ஆர்
முன்வைத்த ஊழுல் புகார் பற்றி பெரியார் என்ன சொல்கிறார் ? ‘ என்பதுபோன்ற கேள்விகள் சிறுபிள்ளைத்
தனமானது. நியூட்டனின் அறிவியல் விதிகளைப் படித்துவிட்டு, ‘அணுகுண்டுகள் தயாரிப்பது பற்றி நியூட்டன்
என்ன சொல்கிறார் ? எய்ட்ஸிற்கு மருந்து தயாரிப்பது பற்றிய நியூட்டனின் புரிதல் என்ன ? ‘ என்று
கேட்பது போன்றது! பெரியாரின் பகுத்தறிவு குறைபாடுடையது என நீங்கள் கூறுவது ஏற்புடையதல்ல.
எடுத்துகொண்ட தளத்தில் நியூட்டனின் விதிகள் முழுமையானது. அது போலத்தான் பெரியாரின்
பகுத்தறிவு கொள்கைகளும். அவர் தளத்தில் அது முழுமையானது. உலகிலுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும்
பெரியார் கருத்து சொல்லியிருப்பர் என்றோ, பெரியாரியம் தீர்வு (solution) சொல்லிவிடும் என்றோ
எதிர்பார்ப்பது பகுத்தறிவற்ற எதிர்பார்ப்பு. என்றாலும் எல்லாவற்றிற்குமான ஒரு பொதுவான, தீர்வை எட்டக்
கூடிய ஒரு கருத்துமயமாக்கலை ஏற்படுத்தியிருக்கிறார். அதுதான் பகுத்தறிவு. பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி.
சமூக வழிகாட்டி. பகுத்தறிவு என்ற வழியை காட்டி சென்றிருக்கிறார். வழியைக்காட்டிய பின்பு அதில்
செல்லவேண்டியது நம் பொறுப்பு. எதையும் கண்ணைமூடிக்கொண்டுசெய்யாமல், அறிவைக்கொண்டு பகுத்து
ஆராய்ந்து பின் ஏற்றுக்கொள்ள சொல்லியிருக்கிறார். அவர் காட்டிய வழியில் நடக்கவேண்டியது தான் நாம் செய்யவேண்டியது. அதைவிடுத்து, பெரியாரே வந்து எல்லாவற்றையும் பகுத்தறிந்து நமக்கு சொல்லவேண்டும்
என்று நினைப்பது முறையல்ல.
பெரியாரின் தளம் சமூகமும் அதன் ஏற்ற தாழ்வுகளும் தான். அறிவியல்-தொழில் நுட்பம், உலகமயமாக்கல்
போன்றவற்றைப்பற்றி சிந்திக்ககூட பெரியாருக்கு நேரமில்லாத அளவுக்கு நம் சமூகத்தை ஏற்ற தாழ்வுகள் ஆட்டிபடைத்துக்கொண்டிருந்தன (இருக்கின்றன). எது மிக முக்கியமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த
தான் அவருக்கு நேரம் இருந்தது. சாதிப்பூசல்களும், சாதிப்பெயரால் பெரும்பான்மையான மக்கள் அடிமைப்பட்டு
கிடந்ததையும், பெண் அடிமைத்தனங்களையும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகக் காட்சிதந்த சனாதன சமய
மூடநம்பிக்கைகளையும், இவற்றைப்பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்த சமய,அரசியல்வாதிகளின்
முகத்திரையை கிழிக்கவுமே பெரியாருக்கு நேரம் போதவில்லை! பெரியார் இப்போதிருந்திருந்தால்
ஒரு வேளை நீங்கள் கேட்டதற்கெல்லாம் தன் கருத்தை நீங்கள் கேட்காமலேயே கூறியிருக்கக்கூடும்.
அல்லது ‘உலகமயமாக்கலா ? வெங்காயம்! ‘ என்று கூறிவிட்டு அதைவிட அதிகமாக சமூகக்கவனம் செலுத்த
வேண்டிய சாதி, மத பூசல்களை எதிர்த்தே கருத்து சொல்லியிருக்கக் கூடும்.
இன்னமும் சாதிப்பெயரை சொல்லிக்கொண்டு பல இனங்கள் அடிமைப்பட்டு கிடக்கின்றன. சகமனிதனின்
முகத்தில் மலத்தையடிக்கும் கேவலங்கள் வாழ்கின்றன. இந்தியாவிற்கே மிகமுக்கியமானது ராமர் கோவில்
என்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு பல கட்சிகளும், ஜந்துக்களும் சமய பெயரில் அரசியல் பண்ணிக்
கொண்டிருக்கின்றன. சனாதன கொள்கைகளை இன்னமும் உண்மையென்று சொல்லிக்கொண்டு
மக்களை ஏமாற்றி சாதி-சமய அரசியல் பண்ணிக்கொண்டிருக்கும் சங்கராச்சாரிகளும் போலி சாமியார்களும்
இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பெரியார் இருந்திருந்தாலும் அறிவியல்-தொழில் நுட்பத்தையோ,
உலகமயமாக்கல் பற்றியோ சிந்தித்துக்கொண்டு கருத்து சொல்லிக்கொண்டிருந்திருப்பார் என்று
நான் கருதவில்லை. பெரியார் கவனம் செலுத்திய விசயங்களில், அவர் கூறிய பகுத்தறிவுக்கொள்கைகள்
ஓரளவு முழுமையானதே. மற்றவற்றில் அவர் கவனம் செலுத்த நேரமில்லை. அவ்வளவே. மற்றவற்றைப்
பற்றி பகுத்தறிவில் ஏதுமில்லை என்றோ, பெரியாருக்கு தெரியாதென்றோ நினைக்கமுடியாது. கூடாது.
ஊழல் செய்பவர்கள் அயோக்கியர்கள் என்றபோதே, பெரியாரின் கருத்து தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.
இதில், தி.மு.க பற்றிய எம்.ஜி.ஆரின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின் ஊழல்
குறித்த கலைஞரின் குற்றச்சாட்டு பற்றி அல்லது இந்தியாவில் நடந்த அத்தனை ஊழல்களைப்பற்றியும்
பெரியார் வந்து தனித்தனியாகக் கருத்துக் கூறவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம். ‘பெரியார் முன்வைத்த
பகுத்தறிவுவாதமும், அவரது கருத்துக்களும் எல்லா காலத்திற்கும் ஏற்றதல்ல ‘ என்ற உங்கள் கருத்தும்
ஏற்புடையதல்ல. அவர் தளத்தில் – சமுதாய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரையில், ஊழல் அரசியல்வாதிகள் இருக்கும் வரையில், மக்களை மூடநம்பிக்கையிலேயே வைத்திருக்கும் போலிச்சாமியார்கள் இருக்கும் வரையில் –
எல்லா காலத்திற்கும் பெரியாரிய பகுத்தறிவும், கருத்துக்களும் ஏற்றதே.
பெரியாருக்குப்பின் அவர் கொள்கைகள் தேங்கிவிட்டன என்பதும், அவர் கொள்கைகள் வளம் சேர்த்து
முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதும், பெரியாரை தொடருவதாகக்கூறிகொள்ளும் அரசியல்
தலைவர்களின், சிந்தனையாளர்களின் சிந்தனை வறட்சியும் கசப்பான உண்மைகளே. பகுத்தறிவை
இன்னும் விளாசப்படுத்தி, விவாதித்து அடுத்த தளங்களுக்கும் எடுத்து செல்ல யாருமில்லாமல்
போய்விட்டார்கள். அது பெரியாரின் குற்றமல்ல. பகுத்தறிவும் குறைபாடுடையதல்ல.
அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாகவும், சிந்தனையாளர்கள் குறுகிய வட்டங்களுக்குள் அடைப்பட்டுப்
போய்விட்டர்கள். அவ்வளவே.
பெரியாரை ‘டார்ச் ‘ என்று ஞாநி கூறிய உவமை தவறுதான். அவர் அறியாமல் சொல்லியிருக்கிறார். ஏனெனில்
தமிழகத்தில் அவரை ‘பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ‘ என்றுதான் கூறுவர். பெரியார் ‘டார்ச் ‘ அல்ல.
சூரியன். பகலவன் ஒளிக்கற்றைகளை வழங்குவது போல பெரியார் பகுத்தறிவுக்கொள்கைகளை
வழங்குகிறார். மனிதர்கள் இருக்கும் வரை அவரின் அறிவுக்கற்றைகள் இருக்கும்/இருக்க வேண்டும்.
ஒரு நேரத்தில் பூமியின் ஒரு பக்கத்திலேதான் சூரிய ஒளி படுகிறது என்பதற்காக, அடுத்தப் பக்கத்தில்
சூரிய ஒளியே படாது என்று கூறுவது சரியல்ல. உரிய காலத்தில், அங்கும் சூரியஒளி படும். அப்படிப்பட்ட
காலம் வருவதற்குள் – மற்றவைகளைப் பற்றி பகுத்தறிந்து கூறுமுன்பே – அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் விட்டுசென்ற கொள்கைகளையாவது முறையான நோக்கில் பயன்படுத்தி சமூக ஏற்றத்தாழ்வுகளை
நீக்க பாடுபடுவோமாக.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
piththaa@yahoo.com
- மீராவின் கனவுகள்
- எட்டு நூல்கள்.
- கவிதைகள்
- இசை அசுரன்
- தீபாவழி
- ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்!
- கவிதையின் புதிய உலகங்கள்
- தாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்
- உயிர்மை வெளியீடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘
- தி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.
- பகுதி விகுதியானதேன் ?
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)
- திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது
- ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…
- பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
- அன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)
- மீண்டும் மீளும் அந்தத் தெரு.
- வணக்கம் தமிழ்த்தாயே !
- கவிதைகள்
- அலைகளின் காதல்
- கல்லூரிக் காலம் – 4 -Frustration
- விடியும்!- (19)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது
- ே ப ய்
- அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை
- தீபாவளிப் பரிசு
- குட்டியாப்பா
- இது தாண்டா ஆஃபீஸ்!
- கடிதங்கள் – அக்டோபர் 23,2003
- குருட்டுச் சட்டம்
- வாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்
- நேரம்
- உதயமூர்த்தி சுவாமிகள்
- பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2
- காரேட் ஹார்டின்(1915-2003)
- பொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்
- கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்
- தாண்டவன்
- மறுபடியும்
- பரிணாமம்