நெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

பாவண்ணன்


( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா, பதுமைப்பித்தன் வெளியீடு, 77 (பழைய எண் 57) 53 வது தரு, அசோக் நகர், சென்னை – 83 விலை3ரு 30)

முப்பதாண்டுகளுக்கும் மேலாகக் கவிதைத்துறையில் இயங்கிவரும் கலாப்ரியா தமிழில் எழுதிவரும் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். சின்னஞ்சிறிய சித்திரங்கள் வழியாக மனத்தை உலுக்கக்கூடிய எண்ணங்களை உருவாக்கி அவற்றை வாழ்க்கையைப்பற்றிய பரிசீலனைகளுக்கான களனாக மாற்றுவதில் அபூர்வமான திறமை வாய்க்கப்பெற்றவர். சமீப காலத்தில் அவர் எழுதிய 29 கவிதைகளுடன் வனம்புகுதல் என்னும் புதிய கவிதைத்தொகுதி வெளியாகியிருக்கிறது.

கசப்புகளும் வேதனைகளும் மிகுந்த வாழ்வின் பல கணங்கள் இத்தொகுதியில் சித்திரமாகியிருக்கின்றன. வாசிக்கும் பலருடைய வாழ்விலும் இத்தகு கணங்களே நிறைந்திருப்பதால் இக்கவிதைகளை வாசிக்கும்போது உடனடியாக ஒருவித நெருக்கம் பிறந்துவிடுகிறது. இக்கணங்களைப்பற்றி ஏற்கனவே நம் மனத்தில் பதிந்திருக்கும் எதிர்வினைகளைத்தாண்டிக் கவிஞர் நிகழ்த்தியிருக்கும் எதிர்வினைகளை அறிந்துகொள்வதிலும் ஆர்வம் பிறக்கிறது. இத்தகு நெருக்கமும் ஆர்வமும் ‘தலைப்பாரம் ‘ என்னும் முதல் கவிதையிலேயே தொடங்கிவிடுகிறது. இக்கவிதை ஈருருவியால் ( எங்கள் பக்கத்தில் இதை ஈர்க்கொல்லி என்பார்கள் ) தலைமுடியில் சிக்கெடுத்து உட்கார்ந்திருக்கும் ஒரு கிழவியின் சித்திரத்தைக் காண்கிறோம். தலைமுடியில் குடிபுகுந்துவிடுகிற ஈரையும் பேனையும் ஈருருளியால் உருவி இறக்கிவிடலாம். பேன்கடியால் பெருகும் தலைப்பாரத்தையும் தவிர்த்துவிடலாம். ஆனால் மனத்துக்குள் அடர்ந்து சதாகாலமும் கடித்தபடி இருக்கும் ஈரையும் பேனையும் உருவி வீசும் ஈருருளியை எங்கிருந்து கண்டுபிடிப்பது ? இப்புதிருடன் அழகான ஒரு கதையைப்போலத் தொடங்குகிறது கவிதை. பிறரது நாக்குகள் சுட்ட வடுக்கள் எல்லாருடைய நெஞ்சங்களிலும் நிறைந்திருப்பதைப்போலவே கிழவியின் நெஞ்சிலும் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தென்னம்பாளையை முன்னிட்டு உருவான வார்த்தை மோதல்கள் ஆறாத வடுக்களாகப் பதிந்திருக்கின்றன. அதையெல்லாம் அசைபோட்டபடிதான் பேனெடுத்தவண்ணம் இருக்கிறாள் கிழவி. அப்போதுதான் பேத்தி பெரிய மனுஷியான செய்தி வருகிறது. சடங்கில் கலந்துகொள்கிற சாக்கிலாவது மனப்பாரத்தைக் கரைத்துவிடவேண்டும் என்று எண்ணுகிறாள் கிழவி. சுடுவதும் மனமே. சுடப்பட்ட வடுவை மறக்காமல் இருப்பதும் மனமே. பிழை மறக்கத் துாண்டுவதும் மனமே. மனத்தின் விசித்திரக் கோலங்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. வாழ்க்கைப் பயணத்தில் பாரம் தவிர்க்கவியலாதது. பாரத்தால் கழுத்து இறுகும்போது தலையிலிருந்து தோளுக்கும் தோளிலிருந்து பிறகு தலைக்குமாக மாற்றிமாற்றி போய்க்கொண்டே இருக்கும்போதுதான் பயணம் சாத்தியப்படும். கவிதை இதைக்கண்டடையும் விதம் முக்கியமான ஒரு தருணம்.

‘நம் சந்திப்பு நிகழாமல் போனது நாம் சந்தித்த அன்று ‘ என்ற வேதனையை முன்வைக்கிற துணைத்தலைப்பு தொகுப்பின் இன்னொரு நல்ல கவிதை. கலையத் தவிக்கிற எறும்புகள், சமநிலை குலைந்த பூச்சிகள் ஆகிய நுட்பமான குறிப்புகளுடன் பேசத் தயாராக இல்லாத மனநிலையுடன் புத்தகத்தின் பக்கமொன்றில் அடையாளமாக விரல்வைத்த கோலத்தையும் கவிதை இணைக்கிறது. அகத்தின் கோலத்தைப் புறத்தின் குறிப்புகளிலிருந்து திரட்டிச் சுட்டிக்காட்டும் முயற்சி கவிதையை மனத்தில் பதியும்படி வைக்கிறது.

‘ருசி ‘ மனத்தில் பதிந்துவிடும் மற்றொரு நல்ல கவிதை. இக்கவிதையில் இரு காட்சிகள் அடுத்தடுத்து முன்வைக்கப்படுகின்றன. வெட்டியான் கையில் இருக்கிற தீக்கோலைப்பற்றிய தன் கண்டறிதலை முன்வைப்பதைப்போலத் தோற்றமளிக்கிற கவிதை சட்டென ஒரு புள்ளியில் தளமாற்றம் பெற்றுவிடுகிறது. மயான தகரக்கூரையில் செருகி வைக்கப்பட்டிருக்கிற சில சுட்ட பனம்பழங்களைப்பற்றிய குறிப்பு கவிதையில் இடம்பெறுகிறது. யாரோ சுட்டுச் சாப்பிட்ட கிழங்குகள். வெட்டியானாகவும் இருக்கலாம். மற்றவர்களாலும் இருக்கலாம். எரியும் சிதையிலேயே சுடப்பட்டதாகவும் இருக்கலாம். மொத்தத்தில் பனங்கிழங்கு சுடப்பட்டு யாரோ ஒருவருடைய பசியை ஆற்றுகிறது. அருகில்தான் பனங்கிழங்கு விற்ற கிழவியின் உடல் சுடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது யாருடைய அல்லது எதனுடைய பசியை ஆற்றுவதற்காக என்கிற கேள்வி நம்மை அழைத்துச் செல்லும் விசார உலகம் மிக விரிவானது. நம் பசியை ஆற்ற ஒன்று இருக்கிறது. பிறகு நாமே மற்றவர்கள் பசிக்கு இரையாகிறோம். பசயோறும் சுழற்சிதான் காலம் காலமாக இந்த உலகைச் சுழலவைத்தபடி இருக்கிறது.

‘தடம் ‘ என்னும் கவிதையில் அபூர்வமான ஒரு தொன்மக்குறிப்பு இடம்பெறுகிறது. நெல்லையப்பர் உலாவரும் பெரிய தேரின் வருகைக்கு முன்னர் தடம்சரிபார்க்கச் சண்டிகேசுவரர் தேர் வந்து போகிறது. அதற்குப்பின் நெல்லையப்பர் தேரும் வருகிறது. ஏதோ ஒரு தெருவின் முனை திரும்பும்போது நெல்லையப்பர் தேர் சற்றே தயங்கி நிற்கிறது. அந்த இடத்தில் பார்வையைப் பதித்துவிட்டுத் தொடர்ந்து செல்கிறது. தள்ளிவைக்கப்பட்ட அவருடைய முதல்மனைவி புட்டாரத்தி அம்மன் குடியேறியிருக்கும் இடம் அது. பிரசவ வலியால் வேதனைப்பட்ட தாழ்ந்த சாதிப் பெண்ணொருத்திக்குத் துணையாக பீடத்தைவிட்டு இறங்கிச் சென்றதுதான் அவள் தள்ளிவைக்கபட்ட காரணம். தந்தையான தட்சன் நடத்தும் யாகத்துக்குச் சென்ற மனைவியுடன் சேர மறுத்த சிவனுடைய சீற்றம் நினைவில் வந்துபோகிறது. ஊரில் தேரிழுக்கும்போதெல்லாம் இக்கதையைத் தவறாமல் சொல்பவள் ஆச்சி. இன்று ஆச்சியும் இல்லை. ஆனித்திருவிழாவும் இல்லை. ஆனால் தள்ளிவைத்த கதை மட்டும் நினைவில் இருக்கிறது. இப்படி நீள்கிறது கவிதை. சாதியுணர்வுக்குக் கட்டுப்பட்டு மனைவியைத் தள்ளிவைக்கிற கடவுளைப் படிமமாக்குகிறது வாசகமனம். புறக்கணித்த பிறகு காலமெல்லாம் பெருமூச்சு. கடவுளும் அதற்கு விதிவிலக்கில்லை போலும்.

மேற்குமலை, கதை ஆகியவை தொகுப்பின் மற்ற சிறந்த கவிதைகள். ஒரு முழுக்கவிதை அல்லது கவிதையின் ஒரு பகுதி மற்றொரு கவிதையின் பகுதியாகவும் மாறியிருக்கிறது. இவை அடுத்தடுத்து அச்சாகியிருப்பதால் பிசகு துாக்கலாகத் தெரிகிறது. ‘தெருவிளக்கு ‘ என்னும் முழுக்கவிதை ‘வீதிவிளக்குகள் ‘ என்னும் கவிதையின் ஒரு பகுதியாகவும் உள்ளது. ‘தொடர்பிலி ‘ என்னும் கவிதைக்கும் ‘முக வரி ‘ என்னும் கவிதைக்கும் பொதுவான ஒரு பகுதி இடம்பெற்றிருக்கிறது. சற்றே கவனமுடன் இருந்திருந்தால் மெய்ப்புத் திருத்தும் கட்டத்திலாவது இதைத் தவிர்த்திருக்கக்கூடும்.

ஒரு வாசகனாக நின்று கலாப்ரியாவின் கவிதைகளில் தோய்ந்த அனுபவத்தை அழகான முன்னுரையாக எழுதி இத்தொகுப்புக்கு மெருகு கூட்டியிருப்பவர் சுகுமாரன். கவிதையை அசைபோடும் மனங்கள் இந்த முன்னுரையின் மூலம் இன்னும் கொஞ்சம் வெளிச்சத்தைக் கண்டடையலாம்.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்