நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

கரு. ஆறுமுகத்தமிழன்


நெய்தல்பற்றிய பதிவுகள் அண்மைக்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. ஏறத்தாழ இல்லை என்றும்கூடச் சொல்லலாம்.

நெய்தல்பற்றி மட்டும்தான் இப்படி என்றில்லை. குறிஞ்சி, முல்லை ஆகியவற்றுக்கும் இதுதான் நிலை. புதினங்கள் எல்லாம் நகரங்களைப் புலமாகக் கொண்டும் மேட்டிமையாளர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டும் அமையும் நிலையில் இப்படித்தான் நிகழமுடியும். நகரமயமாதல் தமிழ்நிலத்தின் பண்டைய ஐவகைப் பாகுபாடுகளைத் தேய்த்துவிட்டது. நகரங்களைப் பாலை வகைப்பாட்டில் சேர்க்கலாம் என்றால் தற்க ாலப் புதினங்களில் பெருவாரியானவை பாலையைப் புலமாகக் கொண்டவைதாம். நகரம் சாராத, சிற்றூர் சார்ந்த சில புதினங்கள் வழியாக மருதம் இன்னும் உயிர்த்துக் கொண்டிருக்கிறது.

நிலப் பாகுபாட்டின் அடிப்படையிலான பண்டைய இலக்கியப் பதிவுகளும்கூட அவ்வந் நிலவாழ்நர்களால் செய்யப்பட்டவையன்று. பெரும்பாலும் அவற்றைப் பிறநிலப் புலவர்களே பதிவு செய்திருக்கிறார்கள். குற்றமில்லை. வேறு வழியுமில்லை. எழுதவும் படிக்கவும் வாய்ப்புப் பெற்றவன் எவனோ அவனே பதிவில் ஏறும் இலக்கியங்களை ஆக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்; அவனே இலக்கியத்தின்மீது ஆதிக்கம் செலுட் 2தும் வாய்ப்பையும் பெறுகிறான். பிழையில்லை. அறிவு எத்திசையிலிருந்து வந்தாலும் வரவேற்க வாசல் திறக்கவேண்டியதுதான்.

ஆனால், இலக்கியத்தை ஆக்குகிறவர்களாக ஒரு குழுவினர் ஏற்கப்பட்டுவிடும்போது இலக்கியம் என்பது அவர்களுடைய பார்வை வரம்புகளுக்கு மட்டுமே உட்பட்டதாக ஆக்கப்பட்டுவிடுகிறது. அறவியல், மெய்யியல் ஆகிய நிலைகளில் தாங்கள் ஏற்கனவே கொண்டிருக்கிற பார்வைகளுக்கொப்பவே தாங்கள் இயற்றும் இலக்கியத்தின் பாடுபொருளை அவர்கள் அமைத்துக்கொள்வார்கள். தங்களுக்குப் புறம்பான நிலங்கள்,

‘abவற்றில் வாழ்வோரின் உள்மனக் கூறுகள், அவர்களின் ஒழுகலாறுகள், அவற்றுக்கான நியாயப்பாடுகள் ஆகியவற்றைப்பற்றி இந்த அயல்நில இலக்கியக்காரர்களுக்குத் தெள்ளிய புரிந்துணர்வு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அவர்கள் எந்தச் சமூகத்தைத் தங்கள் ஆக்கத்தில் பதிவு செய்தார்களோ அந்தச் சமூகத்தை உண்மையாகவே பதிவு செய்திருக்கிறார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மாறாக, அட் 3நில வாழ்நர்வழியாகவே இலக்கியத்தில் இடம்பெறுகிற பதிவுகள் பிறரால் செய்யப்படுகின்றவற்றைவிட உண்மையாகவும் உறைப்பாகவும் இருக்கும் என்பது உள்ளது.

நெய்தல்பற்றிய இலக்கிய ஆக்கங்கள் மிகப்பெரும்பகுதியும் மேற்சொன்னவாறு அயல்நிலத்தாராலேயே ஆக்கப்பட்டிருக்கும் நிலையில் உண்மையாகவும் உறைப்பாகவும் அதுபற்றி ஓர் இலக்கியம் ஆக்குகிற அகநிலத்தானின் முயற்சியாக வந்திருப்பது ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகு. ‘ ‘

நெய்தல்பற்றிய அண்மைக்கால இலக்கிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மற்றொன்று வண்ணநிலவனின் ‘ ‘கடல்புரத்தில். ‘ ‘ ஆனால் இந்நூலில் நெய்தற்புறத்தின் பரப்பை, கடலின் ஆழத்தை, கால்பாவ முடியாமல் நீரிலும் நிலத்திலுமாகக் பரிதவிக்கிற பரதவர்களின் வலியை வெளிக்கொண்டுவருகிற முயற்சியை, பின்புலத்தைப் படம்பிடித்துக் காட்டுகிற வண்ணனைகளைக் காணமுடியாது. கடலோசை கேட்கிற ஒரு நெய்தற்புறச் சிற்றூரின் பின்னணியில் பரதவர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்டு ஒரு கதையைச் சொல்ல முயல்கிறது ‘ ‘கடல்புரத்தில்; ‘ ‘ அவ்வளவுதான். இந்நூலில் சொல்லப்படும் கதை வேறு ஒரு பின்னணியிலும் சொல்லப்படலாம்; வேறு மாந்தர்களைக் கொண்டும் சொல்லப்படலாம். பின்னணி மாற்றமோ, மாந்தர்களின் மாற்றமோ கதையில் தொனி மாற்றத்தை உண்டாக்காது. மேட்டிமைக் களங்களிலிருந்து கதைகள் வேறு களங்களுக்கு இடம்பெயர்வதைக் குறிக்கிற வரலாற்றுச் சங்கிலியில் ஓர் இன்றியமையாத கண்ணி ‘ ‘கடல்புரத்தில் ‘ ‘ என்ற அளவோடு அதன் முதன்மையைக் கட்டுறுத்த வேண்டியிருக்கிறது.

மாறாக, ‘ ‘ஆழிசூழ் உலகின் ‘ ‘ கதை நெய்தற்புறம் அல்லாத வேறு எந்தக் களத்திலும் நிகழ முடியாது. ஏதோ ஒரு பின்புலத்தில் ஏதோ ஒரு கதை சொல்வது என்பதும் கதைச் சிறப்பைக் கொண்டு பின்புல விவரங்களை மழுங்கடித்துவிடுவது என்பதும் இதில் கிடையாது. ஏதோ ஒரு மனித நாடகத்துக்கு ஏதோ ஓர் எழினி என்ற அடிப்படையிலான, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி அற்ற இலக்கிய ஆக்கத்தைத் தாண்டி, இந்த மனித நாடகத்துக்கான எழினி இதுதான் அல்லது இந்த எழினிக்கான மனித நாடகம் இதுதான் என்று தீர்மானமாகக் கொண்டுவிட்டதுதான் இதன் சிறப்பு.

இத்தகைய சிறப்பைப் பெறும் மற்றொரு புதினம் ஜெயமோகனின் ‘ ‘காடு. ‘ ‘ குறிஞ்சியைப் பின்புலமாகக் கொண்டு சொல்லப்படும் அந்தப் புதினம் குறிஞ்சி அல்லாத வேறு எந்தப் பின்புலத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தன் தொனிப்பொருளை இழந்து வெறும் சொற்களின் பிண்டமாகவே எஞ்சியிருக்கும்.

‘ ‘ஆழிசூழ் உலகு, ‘ ‘ ‘ ‘காடு ‘ ‘ என்ற இந்த இரண்டு புதினங்களும் தேர்ந்துகொண்ட பாடுபொருள்களுக்கான தொனிகளை அவை சரியாகத் தேர்ந்து கொண்ட இந்தப் பின்புலங்கள் மட்டுமே அளிக்கக்கூடும்.

நெய்தலின் அழகையும் பயங்கரத்தையும், நிலைமையையும் நிலையாமையையும், விரிவான விவரங்களோடு ‘ ‘ஆழிசூழ் உலகைப் ‘ ‘ போலப் பதிவு செய்திருக்கிற புதின இலக்கிய முயற்சி வேறு எதுவுமே கிடையாது என்பது அதன் மற்றொரு சிறப்பு. இந்தச் சிறப்பை அதற்கு வழங்குவது அதன் ஆசிரியர் ஜோ டி குரூஸ் நெய்தல் நிலப் பரதவர் என்பது.

‘ ‘மரணத்தின் முன் வாழ்வின் பெறுமதி என்ன ? ‘ ‘ என்ற கேள்வியே ஆழிசூழ் உலகு என்ற பெரும்புதினத்தைப் பின்னின்று இயக்கும் கேள்வியாக அடையாளம் காணப்படுகிறது.

தால்சுதோயின் ‘ ‘போரும் வாழ்வும் ‘ ‘ போன்ற பெரும்புதினங்களுக்கு வித்திட்ட கேள்வி இது.

மகாபாரதம் போன்ற இதிகாசங்களுக்கு வித்திட்ட கேள்வி இது. மகாபாரதத்தில் வென்றவனும் செத்தான்; தோற்றவனும் செத்தான். மரணத்தின்முன் எல்லா வெற்றிகளும் தோல்விகளே.

மெய்யியல் கொள்கைகளுக்கு வித்திட்ட கேள்வியும் இதுதான். மரணத்தை வெல்லக்கூடுமா ? கூடாதென்றால் மரணத்தைத் தவிர்க்கும் வழிகள் யாவை ? ‘பிறந்தவை எல்லாம் இறக்கும்; பிறப்பைத் தவிர்ப்பதே இறப்பைத் தவிர்க்கும் வழி ‘ என்று சில மெய்யியற் கொள்கைகள் பேச, ‘பிறப்பும் அதன் பின்சாரும் இறப்பும் நம் விருப்பத் தேர்வுகளுக்கு அப்பாற்பட்டவை, ஆகையால் தவிர்க்க இயலாதவை; இறப்புக்கு அப்பால் ஏதும் இருக்கிறதா என்று தெரியாத நிலையில், வாழும் கடைசி நாள்வரை துய்க்க வேண்டிய இன்பங்களைத் துய்த்துத் தீர்த்துவிடுவது ‘ என்று வேறு சில மெய்யியற் கொள்கைகள் பேசின.

தமிழ்ச் சமூகத்திலும் இந்தக் கேள்வியும் இதற்கான விடைமாதிரிகளும் இலக்கியத்தால் பல்லாண்டு காலமாக முயன்று பார்க்கப்பட்டே வந்திருக்கின்றன. சங்க காலந்தொட்டு இதற்குப் பதிவுகள் உண்டு. புறநானூற்றில் கோப்பெருஞ்சோழன் கேட்டு விடை சொன்ன கேள்விதான் இது: நல்வினை செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி தெளிவில்லாதவர்களுக்கே விளையும். நல்வினை செய்வதின் பயன் என்ன என்று கேட்டால், அப்பாலை உலகு ஒன்று உண்டாகும் நிலையில் அங்கே இன்பம் பெறக்கூடும். அப்பாலை உலகும் அதில் பெறும் இன்பமும் இல்லையாகும் நிலையில் மறுபடியும் பிறக்காமல் வீடுபேறு கிடைக்கக்கூடும். வீடுபேறு என்று ஒன்று இல்லையானபோதும் இமயமலை அளவுக்கு உயரமாகத் தன் புகழை நட்டு, குற்றமற்ற உடம்பொடு சாதல் கூடும்.

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே

ஐயம் அறாஅர் கசடாண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்

தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்

மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்

கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்

தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே.

(புறம். 214).

இந்தக் கேள்வியும் இதற்கான விடைமாதிரிகளும் தமிழ்ச் சமூகத்தின் தொகுப்பு நனவிலியில் (collective unconcious) இடம்பெற்றுவிட்டனவாகத் தெரிகின்றன. ஜோ டி குரூசின் வழியாக இந்தத் தொகுப்பு நனவிலிக் குறிப்பு மற்றொருமுறை உயிர்த்திருக்கிறது. ‘ ‘ஆழிசூழ் உலகு ‘ ‘ என்ற புதினம் செம்புதினமாக உருமலர இந்த அடிப்படைக் கேள்வியே காரணம்.

இந்தக் கேள்வி யாருக்கு எழமுடியும் ? பரதவனுக்கு எழவே வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ஐந்திணை மாந்தரில் வாழிடம் சார்ந்து சாவை நாளும் எதிர்கொள்கிற கட்டாயம் நெய்தல் நிலப் பரதவர்களுக்கே உண்டு.

முல்லை நிலத்து ஆயனுக்கும் மருத நிலத்து உழவனுக்கும் வாழிடம் சார்ந்து சாவை எதிர்கொள்கிற அச்சுறுத்தல்கள் எவையும் இல. மலை சார்ந்து வாழ்கிற குறவர்கள் மலையை முதல் முறை அறியும்போது ஒருவேளை இத்தகைய அச்சுறுத்தல் உண்டாகலாம். ஆனால் தான் வாழும் மலையை ஒரு முறை அறிந்துவிட்டால் பிறகு பழுதில்லை. ஏனென்றால் மலை அசையாப் பொருள். அசலம். அதில் கால்பாவி நிற்கலாம். நிலைமை என் பது அதன் மெய்ம்மை. அது நாளும் ஒரு கோலம் கொள்வதென்பது கிடையாது. ஆனால் கடல் அப்படியன்று. அது அசையும் பொருள். சலம் (சலசலப்பது சலம்; சலசலவாதது அசலம்). இன்றைக்கிருப்பதுபோல நாளைக்கு இருக்காது. நிலையாமை என்பது அதன் மெய்ம்மை. மிதக்கவும் வைக்கும்; மூழ்கடிக்கவும் செய்யும். நிலையாமையை உவமிப்பதாக நீரே அமைகிறது. நீர்க்கரை வாழ்வும் நீர்க்கோல வாழ்வாகவே நிலையாமையின் வசப்படுகிறது.

பரதவர்களைப் போலவே மறவர்களும் சாவை எதிர்கொள்ளும் வாய்ப்ப்பைப் பெற்றவர்கள்தாம். பரதவர்கள் நீர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்களானால் மறவர்கள் போர்க்களத்தில் சாவை எதிர்கொள்பவர்கள். ஆனால் மறவர்கள் எதிர்கொள்ளும் சாவும்கூட வாழிடம் சார்ந்து அவர்கள்மீது திணிக்கப்பட்டதன்று; நாளும் நிகழ்வதுமன்று.

எனவே மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்ற கேள்வியை அலசுகிற புதினத்தின் கதைக்களமாக அமையத்தக்கது நெய்தல் நிலம் மட்டுமே. நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். இரங்கலுக்குரிய பறையான சாப்பறையே நெய்தலுக்குரிய பறை. அந்தப் பறைக்கே நெய்தல் என்று பெயர் (ஓரில் நெய்தல் கறங்க…புறம். 194).

நிலையாமை என்கிற அடிக்கருத்தைப் புலப்படுத்துவதாகவே ‘ ‘ஆழிசூழ் உலகின் ‘ ‘ தொடக்கப்பகுதிகள் அமைகின்றன. எடுத்த எடுப்பிலேயே ஆவேச அலைகளால் அடியுண்டு கட்டுமரம் கவிழ்ந்து சிதைகிறது. கடலால், அதாவது நீரோட்டத்தால், கடலை அலைக்கழிக்கிற காற்றால், கடலில் உலவுகிற மீன்களால் என்று நிலையாமை எப்போதும் பல்லிளித்து முன்நிற்பது அருமையாகச் சித்திரிக்கப்படுகிறது.

கடல் வாழ்வின் நிலையாமை புரியாவிட்டால் பரதவனைப் புரியாது. அவன் கடல் மாதிரி; எப்போது சீறுவான் எப்போது ஆறுவான் என்பது யாருக்கும் பிடிபடாத மந்தணம். பரதவனை மிகத் தெளிவாக நான்கைந்து வரிகளில் விளக்கிவிடுகிறார் ஜோ டி குரூஸ்:

‘ ‘…சரியான மிலேச்சப் பயலுவ… றால் சீசன் ஒண்ண வரும் பாத்துக்கிடுங்க, அப்ப ஒரு பயலையுங் கையில புடிக்க முடியாது. நூறு ரூபா நோட்ட காதுல சொருகி வெச்சிகிட்டு அலைவானுவ. பஸ்சுல ஏறுனா நோட்ட குடுத்திற்று சில்லற கேக்குறதே இல்ல…கையில காசு வந்திற்றா…! திசயவெள தியேட்டர்ல படம் பாக்க மாட்டான்வ. இங்கயிருந்தே டக்கர் புடிச்சிகிட்டு திருநவேலி நாரோயில்தாம். துணிக்கடையள் ள போயி வெல கூடுன துணி போடுலன்னுதாம் கேப்பானுவ. ‘ ‘

‘நாளை பிழைத்துக் கிடப்போமா என்று தெரியாது. இன்று இருக்கிறோம். ஆகவே துய்த்து விடுவோம் ‘ என்ற ‘உறுதியின்மை ‘ உளவியலே பரதவர்களை இத்தகைய நிலைகளுக்கு உந்தித் தள்ளுகிறது. எந்த ஒன்றையும் நாளைக்கு என்று ஆற வைக்க அவர்களுக்கு வசதி வாய்ப்பில்லை. அது துய்ப்பானாலும் சரி; பழி வாங்குவதானாலும் சரி.

பரதவர்களின் இந்த ‘உறுதியின்மை உளவியலின் ‘ புறவெடிப்பாக வெளிப்படுகிற கண்மண் தெரியாத முரட்டுத்தனத்தைக் காட்சிப்படுத்துகிற இடங்களும் புதினத்தில் ஏராளம். அந்த முரட்டுத்தனம் ஆண்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் பெண்களுக்கானதாகவும் இருப்பது வசந்தா, கலிஸ்டா, மயிலாடியாள் ஆகியோர் வழியாகப் புலப்படுத்தப்படுகிறது.

சாவு தன்னை வெடிகுண்டின் வழியாகச் சுவை பார்க்க வருகிறது என்று தெரிந்தும் பின்வாங்காமல், புறமுதுகு காட்டாமல், நெஞ்சில் குண்டை வாங்கிச் சாவுக்குத் தன்னை உண்ணக் கொடுக்கிற ஜஸ்டினின் வீரம்; எத்தனை கடும்பகையிலும் ஒரு துறைக்கும் மற்றொரு துறைக்குமான கடல் மோதல்கள் கரைக்கு இடம்பெயர்ந்துவிடாமல் கவனித்துக்கொள்கிற ஒழுங்கு; பெண்களை, குழந்தைகளைக் குறி வைக்காத ஆண்மை; பகையாட்களானாலும் தஞ்சமடைந்தவர்களைக் காக்கும் அறம்–என்று பழந்தமிழ் மரபில் சொல்லியும் பேணியும் வரப்பட்ட புறமரபுகள் அனைத்தும் இன்னும் பரதவர்கள் நடுவில் உயிர்த்துக் கிடப்பதைப் புதினத்தின் வழியாக அறியமுடிகிறது.

1933-இல் தொடங்கி 1985வரையிலான அரைநூற்றாண்டுக் காலத்தையும் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று தலைமுறையினரையும் இந்தப் புதினம் மையம் கொண்டிருக்கிறது. கோத்ராப் பிள்ளை மூத்த தலைமுறையின் படியாள்; சூசை நடுத் தலைமுறையின் படியாள்; சிலுவை இளைய தலைமுறையின் படியாள்.

கதையின் மையக் கதைமாந்தர்களாக ஆண்களில் கோத்ரா, சூசை, ஜஸ்டின் ஆகியோரும், பெண்களில் தோக்களத்தாள், மேரி, வசந்தா, அமல்டா ஆகியோரும் இவர்களையன்றிக் காகு என்ற பாதிரியாரும். ஏனைய கதைமாந்தர்கள் அனைவரும் இந்தக் கடற்புறத்துச் சேலையின் கரைக்கும் முன்றானைக்கும் வண்ணம் சேர்ப்பவர்கள் மட்டுமே.

புதினம் நெடுகிலும் யாருடைய பிறப்பைப்பற்றியும் ஒரு சிறுகுறிப்பும் கிடையாது. தன்னுடைய முன்னுரையில் புதின ஆசிரியர் சொல்வதுபோல, ‘ ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சனன வழி ஒன்றுதானே! ‘ ‘ அதில் விதந்தோத என்ன இருக்கிறது ?

ஆனால் மரணவழிகள்தான் எத்தனையெத்தனை ? மரணத்தின்முன் வாழ்வின் பெறுமதி என்ன என்று பேச விழைகிற இப்புதினத்தில் ஏராளமான சாவுகள் நிகழ்கின்றன. கடலில் கவிழ்ந்து செத்தவன், வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும் செத்தவன், இயற்கையாகச் செத்தவன், நோய்வாய்ப்பட்டுச் செத்தவன், வாழ விருப்பமின்றிச் செத்தவன், பிறர்வாழத் தான் முன்வந்து செத்தவன்…

மிக்கேல் பர்னாந்து, வியாகுலப் பிள்ளை, இருட்டியார், சுயம்பு, தொம்மந்திரை, ஊமையன், காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை என்று பல கதைமாந்தர்கள் சாகிறார்கள். இவர்களில் கடைசி நான்குபேர் தவிர்த்த ஏனையோரின் சாவுகள் பெரிய அசைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காகு, ஜஸ்டின், கோத்ரா, சூசை ஆகியோரின் சாவுகள் உலுக்குகின்றன.

ஜஸ்டின் என்ற சண்டியர் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிய நிலையில் சாவை எதிர்கொள்கிறான். அவ்வாறே சூசை என்ற உல்லாசியும் தன்னுடைய பிழைகளுக்காக வருந்தி மனம் திரும்பிச் சாவைத் தழுவுகிறான்.

ஜஸ்டின் மனம் திரும்பியது வாழ்வை விரும்பி. தன் மகனுக்காக வாழ வேண்டும் என்ற ஆவல் உந்த மனம் திரும்பினான். ஆனால் வாழமுடியாமல் கொலையுண்டான். ஆனால் சூசையின் மனத் திருப்பமோ சாவை நோக்கி அவனை உந்தித் தள்ளியது. தன்னுடைய உல்லாச விழைவினால் அழிந்துபோன ஒரு குடும்பத்தின் கடைசிப் படியாளாகிய பிறன் மகன் ஒருவனைக் காப்பாற்றத் தன்னைத் துறந்துகொண்டான்.

காகு என்ற பாதிரியார் ஆமந்துறை என்ற அந்த நெய்தற்புறச் சிற்றூரின் வாழ்வுக்கு விளக்கேற்றியவர். தான் பணியாற்றுகிற பங்குகளின் மக்களுக்காக வாழ்வதைத் தவிர அவருக்குத் தனியாக வாழ்வொன்றும் இல்லை. அவர் மூத்து இயற்கையாகச் சாகிறார். ஊரே இடம்பெயர்ந்து அவருடைய சாவுக்குப் போகிறது. அவருடைய சாப்பெட்டியைச் சுமக்கும் உரிமையை அவர்மேலான அன்பினால் தனக்குக் கோருகிறது.

காகு பாதிரியார் சாமியாராக இருந்து பிறருக்காக வாழ்ந்தவர்; கோத்ரா இல்லறத்தானாக இருந்து பிறருக்காக வாழ்ந்தவன்; பிறருக்காகத் தானே முன்வந்து செத்தவன். சூசை தன் வாழ்வைப் பிறன் மகனுக்காகத் தியாகம் செய்வதற்குக் கோத்ராவே வழிகாட்டி. சூசையாவது தன்னுடைய பிழைக்குக் கழுவாயாகத் தன் உயிரைத் தந்தான். கோத்ராவோ யாருக்கும் எந்தக் கடப்பாடும் இல்லாத நிலையிலும், எந்த எதிர்பார்ப்பும் பற்றுதலுமின்றி உயிர் துறந்த, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். மனுமகனாகத் தன் வாழ்வின் பெறுமதியை மரணத்தில் நிறுவிய கிறித்து சாவதற்குரிய சாவைச் செத்தவன்.

கோத்ராவின் சாக்காடு புரந்தார் கண் நீர்மல்கச் செத்த சாக்காடு. இரந்தேனும் கொள்ளத்தக்க சாக்காடு.

காமம் சான்ற கடைக்கோட் காலை

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

-என்று வாழ்வின் பெறுமதி கற்பிக்கிற தொல்காப்பியப் பொருளிலக்கணத்துக்கு இலக்கியப்பொருள் கோத்ரா.

நில்லா இயல்புடையவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவாண்மையைத் தாண்டிக் கடந்தவன் கோத்ரா.

தன்னலம் மறுத்தல், தன்னையே துறத்தல் இவற்றின் வழியாக நிலையாமையை வெற்றிகொண்டு நிலைபேறு கோருகிறான் கோத்ரா.

நெய்தல் மெய்யியலின் அடியோசை நிலையாமை. சரியானதோர் அடிக்கருத்து விதையாக விழுந்து பாரியதொரு புதினமாக விரிந்திருக்கிறது.

இலக்கை நோக்கி நடத்த விழைகிறது ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகம் ‘ ‘ என்ற நெய்தல் இலக்கியம்.

—-

arumugatamilan@yahoo.com

Series Navigation

கரு. ஆறுமுகத்தமிழன்

கரு. ஆறுமுகத்தமிழன்