நூல் விமர்சனம் – நகரம் – 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

கல்பனா சோழன்


அரசியல், மத கலவரங்கள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போடும் கலவரத்தைக் கண்முன் காட்டுவதில் கை தேர்ந்தவர் சுப்ரபாரதிமணியன். அதற்கு ‘நகரம் – 90 ‘ இன்னொரு சான்று. ஹூசேன் சாகர் ஏரி பழைய, புதிய நகரங்களை பரபரப்பிலும், சாவிலும் பிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தருணங்களில் ஒன்றை சித்தரிக்கிறது நகரம்-90. வேறு வேலைகள் அற்று புரளிகளும் பயமுமே ஆக்ரமித்த கர்ஃப்யூ காலத்து வாழ்க்கையின் பயங்கரத்தை மிக துல்லியமாக உணர்த்துகிறது.

‘அரசியல்வாதியோட உயிர் வாழ்க்கையோட சுகபோகங்களையெல்லாம் அனுபவிக்கப் பொறந்தது. சாமான்ய ஜனங்களோட உயிர் அவங்களோட பீடங்களுக்குப் படிக்கட்டுகள் ‘ என்ற நிதர்சனத்தை, அழுத்தந்திருத்தமாய், உரத்துச் சொல்கிறது நகரம்-90.

குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற இந்தக் குறு நாவலோடு, கொசுறாய் சில சிறுகதைகளும் நகரம் – 90 என்ற இந்தத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.

விதவிதமான ஹேர்ஸ்டைலில் வழுக்கையை மறைக்கும் மனிதன் மனைவியின் மனதைப் புரிந்து கொண்டபின் ‘விக் ‘கை விட்டு விடும் ‘தோற்றங்கள் ‘, ஒற்றை ஆளாகக் குடும்பத்தை சுமக்கும் குடும்பத் தலைவி யார் கண்ணுக்கும் படாமல் போய் விடத் தவிக்கும் ‘தொலைதல் ‘ போன்ற சிறுகதைகள் இவற்றில் உண்டு.

மத்திய தர மக்களது போராட்ட வாழ்க்கை மற்றும் மனப்போராட்டங்களை, எளிய நடையில், இயல்பாய் விவரிக்கும் சுப்ரபாரதி மணியனின் ஆற்றலுக்கு நகரம்-90 ஒரு சான்று. 108 பக்கங்கள் கொண்ட இந்த தொகுப்பு நூல் குமரிப் பதிப்பக வெளியீடு.

***

Series Navigation

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)