நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

விஸ்வாமித்ரா


சமீபத்தில் வெளியான ‘ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘ என்ற

புத்தகத்தை சென்ற வாரம் சென்னையில் வாங்கிப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.

அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது.

ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர்.

‘இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர்

கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற

எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் ‘

என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்

பட்டிருக்கின்றன.

தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே

பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

‘நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக்

கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்

3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப்

படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள

புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.

அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம்,

ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர்,

கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம்

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக்

காட்டியிருப்பதையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி

எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ – அந்தக் கருத்துக்கு

– அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார்

என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள்

அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடி

மறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின்

கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று

கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக

மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால்

அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும். ‘

மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் –

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு,

இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள்,

ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை,

சொல்லும் செயலும் முரணானவையே,

வரலாற்றுத் திரிபுகள்,

தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா ?,

வைக்கம் போராட்டம் – ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும்,

ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம்,

தேசப்பற்றி இல்லாத ஈவேரா,

பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும்,

சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும்

என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார்

ஆசிரியர் வெங்கடேசன்.

பிற்சேர்க்கையாய் ‘ஈவேராவைப் பற்றி இவர்கள் ‘ என்று முத்துராமலிங்கத்தேவர்,

பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம்

ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு ‘ என்ற முதல் அத்தியாயத்தில்

இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.

‘ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால்

கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை

அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு

சொல்லிக் கொண்டவர். – (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில்

பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது. ‘

ஈவேரா தமிழரா ?

‘ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர்

என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு

தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்ஹ்தோற்றத்தைத் தமிழகத்திலே

உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் ‘தமிழர்

தலைவர் ‘ என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே –

அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா ?

‘கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர் ‘ (பெரியார்

ஈவேரா சிந்தனைகள் – முதல் தொகுதி) என்றும், ‘நான் கர்நாடக பலிஜவார்

வகுப்பைச் சேர்ந்தவன் ‘ (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்

படுத்திக் கொள்கிறார். ‘

‘நான் கன்னடியன் ‘ என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக்

கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக்

கொண்டிருக்கின்றனர். ‘நான் கன்னடியன் ‘ என்று சொல்லிக் கொண்டே

ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது

கொஞ்சநஞ்சமல்ல.

‘தமிழும் தமிழரும் ‘ என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

‘ ‘இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள்

அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன்,

3.கம்பன். இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக

செய்துவிட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு

கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும்

முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர்

படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய்

பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும்

தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்.

தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்

பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி

விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக்

கொண்டவர் ஆவார்கள். ‘

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:

‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும்,

மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத

சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப்

பரக்கக் காணலாம். ‘

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை.

தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த

இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும்

துரோகிதானே ?

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர்

பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின்

பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி

21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார்.

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ என்று

கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்

அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல்

அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,

அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, ‘வட

இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ‘ என்று

பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா

பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல்

ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று

போடுகிறார்கள்.

அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால்

அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட

இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில்

நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

In what way Jinnah is not a North Indian ? How is the

names Jinnah and Robinson so sweet to you Sir ? How is

the name of poor Tilak so bitter to you Sir ? I am not

able to understand.

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில்

ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர்

பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த

நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்

அல்லவா ?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த

கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக்

காட்டுகிறது ? அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை

சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க

வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள்.

மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச்

சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம்

பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப்

பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்

‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன்

கேட்பானா ?

ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு

இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக்

கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற

வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.

ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை

மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து

கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு

யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை

அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள்

பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது

சொல்லலாம்.

வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது

வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு

அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு

கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய

ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம்

படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள்

அல்ல.

‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி

எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என

ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது

சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று

பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை

எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ்

என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற

பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய

போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று

சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள்

அனுமதிக்க மாட்டோம்.

‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர்

அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி

இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி

கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை

எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான்

அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.

அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?

இதுவா தமிழ் நாகரீகம் ?

சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக

விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய

கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக்

கொள்கிறேன்.

****உரை முடிந்தது

இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ‘.

கிடைக்குமிடம்:

ம.வெங்கடேசன்,

3, வி. ஆர். பிள்ளைத் தெரு,

அனுமந்தபுரம், திருவல்லிக்கேணி,

சென்னை 600005.

விலை – ரூ.40.00

முதல்பதிப்பு – நவம்பர் 2004.


viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா