நூறு நிலவுகள்

This entry is part [part not set] of 16 in the series 20010505_Issue

ருத்ரா


நீருக்குள் இருந்து
கவிதையில்
புலம்பினேன்
சூாியன் நனைந்தது என்று !

பட்டாம்பூச்சி சிறகுகளை
காதல் பசியில்
பிய்த்துத் தின்றுவிட்டு
நிறங்களுக்கும்
ருசியுண்டு என்று
நிரூபிக்க முயன்றேன்.

காற்றில்
தலை சிலுப்பும்
பனைமரங்கள் கூட
காதலுக்கு
‘பாிபாடல் ‘ பாடுவதாய்
ஒரு பாவனையை
‘பட்டையில் ‘ ஊற்றி
பதினி குடித்தேன்.

ஆயிரக்கணக்காய்
பொன்வண்டுகளை
இமைமுகட்டில்
மொய்க்கவிட்டு
படுத்துக் கிடந்தேன்.

ரோஜாப்பூக்களின்
அருவியில் அமிழ்ந்து
காதலின்
மகரந்த சுவாசங்கள்
என் நுரையீரலுக்குள்
பிருந்தாவனங்கள் கட்டுவதாய்
கண்புதைத்துக் கிடந்தேன்.

நீலமும் சிவப்புமாய்
சிறகடித்து
நீர்ப்படலத்தை
குத்திக் குத்திக்
காயப்படுத்தும்
‘மீன்கொத்தியாய் ‘
அவள் பார்வை.

கந்தலாகிப்போன என்
கிழிசல் இதயத்தின்
சல்லடைக்கண்கள் வழியே
அவள் முகத்தின்
‘கலைடோஸ்கோப் ‘
சித்திரங்கள்.

அவள்
பார்வைத்தேன்
ஊறும்
நூறு நிலவுகள்
பெய்த
காதல் மழை இது.

அந்தக்
குளிர்ச்சியில்
குறிஞ்சிப்பூக்கள்
குசலம் விசாாித்தன.

கவலைகள்
நெருடும்
நெருஞ்சிக்காடுகள்
தொலைந்து போயின.

ஆம்.
இப்போது
புாிந்து கொண்டிருப்பீர்கள்..
நான்
வயதுக்கு
வந்துவிட்டேன் !

வயதுக்கு வருவதற்கு
வயதுகள் தேவையில்லை.
மீசை அரும்பும்போதே
மின்னலைப்
பிடித்துக்கொண்டால் போதும்.

காற்று அடிக்கும்போதே
‘தூற்றிக்கொள்வதை ‘ப் போல ‘
காதல் வீசும்போதே
வாழ்க்கையைப்
பற்றிக்கொண்டால் போதும்.

பம்பரமும் கோலியும்
பட்டமும் கிட்டிப்புள்ளும்
வெகுதூரம் சென்றுவிட்டன.
விளையாடு மைதானம்
இப்போதெல்லாம்
வெறிச்சிட்ட
சஹாரா பாலைவனங்கள்.

‘க்ளுக் ‘ என்ற
அவள் சிாிப்பின்
கிளுகிளுப்புகளில்
நான் வீழ்ந்த போது
இனிக்கும்
‘காஷ்மீர் பள்ளத்தாக்குகள் ‘ அவை.

வானவில்லைக்
கொஞ்சம் வளைத்து
சோம்பல் முறித்துக் கொள்ளுங்கள்.

உற்சாகம் கொப்புளிக்கும்
‘கங்கோத்ாி ‘ அல்லவா
காதல் !.

துயரங்கள் மண்டிய
கூவங்களின்
அகழி தாண்டுவது அல்லவா
காதல் !

பயமுறுத்தும்
கோடுகளும் வட்டங்களும்
வாழ்க்கையல்ல.
சாதி மதங்களின்
சப்பாத்திக்கள்ளிகளைச்
சுற்றி சுற்றி ஓடும்
வட்டத்தை
உடைத்து விடுங்கள்.

உங்கள் உதவிக்கு
வருவது
காதல் எனும்
கண்ணுக்குத் தொியாத
அந்த சம்மட்டி தான்.

அன்னத்தூவியாய்
அணிவகுத்து வந்தாலும்
காதல் பட்டு
சுக்கு நூறாகிய
‘சம்பிரதாயங்களின் ‘
எஃகுக் கோட்டைகள்
எத்தனை ?எத்தனை ?

நான்கு வர்ணத்துள்ளும்
நிறப்பிாிகையாய்
நாற்பதாயிரம் வர்ணங்கள்
நிறங்காட்டியபோதும்
காதலின் நிறம் ஒன்றேதான்.

உப்பாிகை வர்க்கத்தின்
மொத்தக் குத்தகை அல்ல
காதல்.

உப்புக் காிக்கும்
வேர்வை வர்க்கத்தின்
உழைப்புக்குள்ளும்
உயிர் பாய்ச்சுவது
காதல்.

மானுட வெளிச்சம்
கசிய
முதன் முதலாய்
கிழித்து வைக்கப்படும்
தீக்குச்சி..
காதல்.

மறைந்து போய்விடும்
மத்தாப்பூ வனம் அல்ல
காதல்.

வெறும்
சலவைக்கல் எலும்புக்கூடு
எனும்
தாஜ்மகால் மட்டும் அல்ல
காதல்.

சவப்பெட்டிக்குள்
சேர்த்துவைத்துக்கொண்டு
மண்புழுக்களோடு
கணக்கு தீர்த்துக்கொள்ளும்
சோகங்கள் அல்ல
காதல்.

காதல் வழியாய்
வாழ்ந்து பாருங்கள்.
சாதல் வழியல்ல
காதல் வழி.

வாழ்க்கையை
காதலிக்குமுன்
காதலை
வாழ்ந்து பாருங்கள்.

Series Navigation

ருத்ரா

ருத்ரா