நீ சொல்லு

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

மாலதி


காதல் அற்பம்தான்
சூழலின் சவாலும்
மீறலின் விசையும்
எரிக்கும்போது
அற்பமே தான்.

உடன் பேசும் நம்
மெளனங்களின்
அர்த்தங்களால்
நீ சொல்லு
உன்னைக் காதலிப்பதா
வேண்டாமா என்று.

சுவையற்று நமர்க்கும்
நாவரும்புகளில்
நீ சூடாவதையோ
இடமற்று நான் மிதக்கும்
வெறுமைகளில் வெளிகளை
நீ சுரப்பதையோ
நான் அலட்சியப்படுத்தத்
தயார்.

சத்தியங்களை முன்வைத்துப்
பொய் சொல்லு
ஒரே ஒரு தரம்
என் தேவையில்லை என்று.

தோழமைகள் மாறினதும்
உறவுகள் கெட்டிப்பட்டு உலர்ந்து
கழன்று வெடித்துச் சிதறினதும்
தளங்கள் பலமுறை
கால் நழுவிக் காணாமல் போனதும்
முதல் நினைவின் முதல் இதமாய்
உன் நானும் என் நீயும்
கிடைத்து வருகிறோம்
ஒருவருக்கொருவர்
என்பது தவிர
எதுவுமில்லை.

காதல் அற்பம் தான்
நீ சொல்லு
உன்னைக் காதலிப்பதா
வேண்டாமா என்று.

மாலதி 12-8-04

====
Malathi

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி