நாகரத்தினம் கிருஷ்ணா
ஊன் பொதிந்தகாயம் உளைந்த புழுக் கூட்டைத்
தான் சுமந்ததல்லால்நீ சற்குருவைப் போற்றாமல்
தான் பரந்தவெள்ளம் கரைபுரளக் கண்டேகி
மீன் பரந்தாற்போலே விசாரமுற்றாய் நெஞ்சமே
– பட்டினத்தார்
—-
நண்பனே! ஆத்மஞானத்தின் அவசியத்தினை என்றாவது உணர்ந்திருக்கின்றாயா ? ‘நான் ‘ யார் என்ற ஆன்ம விசாரணைக்காவது உட்பட்டிருக்கிறாயா ? அஞ்ஞானமென்கிற மாயக்கூட்டை உரித்து இறகுமுளைத்துப் பறக்க வேண்டுமென்கிற உத்தேசமேதுமில்லையா ? என் இன்பராச்சியம், உனதுமுயற்சியால்தானே எழுப்பப்படவேண்டுமே. அவ்வின்ப ராச்சியத்தின், கோட்டை கொத்தளங்கள், அகழி, படைகள், பட்டமகிஷி, மந்திரிமார், தளபதி, குரு, கல்விமான்கள், குடிகள், ராஜசூய யாகம், தீ, காற்று, மழை, ஆகாயம், பூமியென எல்லாமான பரம்பொருட்தன்மை என்னுள்வேண்டுமே. வீணாய் நில்லாதனவற்றை நிலையின என்று பிறழ உணர்ந்து, என்னைபிறவிச் சுழலில் சிக்க விடாதே!
—-
இருபதாம் நூற்றாண்டு….
தினசரிகள், சஞ்சிகைகள் விற்பனையாளர் கடையைச் சாத்திக்கொண்டு, நடைபாதையில் விற்பனை செய்த தமிழ் தினசரிகளில்: ‘புதுவையில் பெண் கற்பழிப்பு, கொலை – முழு அடைப்பு, பஸ்கள் ஓடவில்லை – கடைகள் மூடல் – பள்ளிகளுக்கு விடுமுறை ‘, ‘செல்போனில் விபசாரத்திற்கு அழைத்த துணைநடிகை உள்பட 17 அழகிகள் கைது ‘ ஆகிய அதிமூக்கியம் வாய்ந்தச் செய்திகளுக்குக்கீழே ‘கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர் அப்துல்சத்தாருக்குப் பொதுமக்கள் கண்ணீர்அஞ்சலி ‘. டாக்கடையொன்றில் மும்முரமாய் வியாபாரம் ஆவிக்கிடையில் நடக்கிறது. கிளி ஜோசியரொருவர், இடம்பார்த்துத் துண்டை விரித்து உட்காருகிறார். வெற்றிலைபோட்ட கையோடு மூக்கைச் சிந்தியவர், முதல்போணிக்கு ஆள்தேடுகிறார். முழுஅடைப்பில் கலந்துகொள்ள விருப்பமில்லாத மாடுகளும், அசம்பாவிதங்களில் ஆர்வம்கொண்ட மனிதர்களும், சாயந்திர சாராயத்திற்காக ஒருசில ரிக்ஷாவண்டிக்காரர்களும், இவர்களுக்கிடையே பயணிகளுமாக அலைந்துகொண்டிருக்க, மற்றமனிதர்கள் அடைந்துகிடக்கிறார்கள்.
பந்தோபஸ்து பணியிலிருந்த ஜீப்பொன்று, மூடியிருந்தக் கடையைத் திறக்க செய்து, கடைகாரனிடமிருந்து பழுத்த மலைப்பழத் தாரொன்றை, அதிகாரமாய்க் கேட்கிறது. பின்னரதனை ஜீப்பிலேற்றப் பார்த்திருந்த பெட்டிக்கடைகாரன், அவசரமாய் ஓடிவந்து ஜீப்பருகே மூத்திரம்போகிறான். மக்கள்காவலர்கள், இவனை முறைத்துவிட்டு, ஜீப்பிலேறி சிரத்தையுடன் ரோந்து போகிறார்கள்.
புதுச்சேரியில் ‘பந்த் ‘ அறிவித்திருந்தார்கள். ஒரு வைரவியாபாரியின் மனைவியை, அவனது சகோதரன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொலைசெய்துவிட்டதாகச் செய்தி.
மாதத்திற்கு ஒன்றிரண்டு முழு அடைப்புகளைத் தவறாமல் நடத்துகின்ற அரசியல் கட்சிகளுக்கு இந்த மாதத்திற்கான காரணம் கிடைத்துவிட்டது. மக்கள் ( ?) போராட்டகுழு அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்யவேண்டுமென்று அறிக்கைவிட்டவர்கள், மறுநாள் பஸ், ஆட்டோ, டெம்போ ஓடாமல் பார்த்துக்கொண்டனர்.
சென்னைக்குச் செல்லப் புறப்பட்டு, புதுச்சேரிப் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த ரிஷாருடன், நிலைமையறிந்து துணைக்குப் பெர்னாரும், வேலுவும் வந்திருந்தார்கள். இருபது முப்பதுபேர்கொண்ட கும்பலொன்று பஸ்களை மறிக்க ஆரம்பிக்க, ஏறியிருந்த பயணிகள் இறங்க வேண்டியதாகிவிட்டது. உள்ளூர்ப் பயணிகள் சலித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்ப, வெளியூர்ப் பயணிகள் அவதிப்பட்டார்கள். ரிஷார் தன் பயணத்தைத் தள்ளிப்போட விருப்பமில்லாதிருந்தான். விழுப்புரம் போனால் சென்னைக்குப் பஸ் கிடைக்கும் என்கிறார்கள். வேலு வாடகைக்கு, ஒரு அம்பாஸடர் கார் பிடித்தான். காரோட்டி வழக்கதிற்கு மாறாக இருமடங்கு கட்டணத்திற்குத் தமிழ்நாட்டு எல்லைவரை( ?) வருவதற்கு இணங்கினான். வளவனூர்வரை காரிற் சென்று விழுப்புரத்திற்கு ரிஷாரை பஸ்ஸில் அனுப்பிவிட்டுத் திரும்ப, பகல் மூன்றுமணியாகி இருந்தது.
மணி, கோழி இறைச்சி சேர்த்த நூடில்ஸ் சமைத்திருந்தான். நண்பர்களிருவரும் உண்டுமுடித்து, மூன்றாவது ஒலைச்சுவடிகள் கட்டினைப் பிரித்து வாசிக்க உட்கார மணி நான்கு ஆகியிருந்தது.
ஓலை1: பிரத்தியேகமான மாறன் தினப்படி சேதிகுறிப்பு: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆடிமாதம் 19ந்தேதி (சூலை மாதம் 31ந்தேதி)புதன்கிழமை:
‘நேற்றைய ராத்திரி நடந்த சம்பவம் பாரமாய் மனதில் கனக்கிறது. உடன்பிறந்தாள் கல்யாணச் செலவுக்கென்று பெர்னார் குளோதனையண்டி, தயவுபண்ணென்று சொல்லப்போகிறச்சே, இப்படி ஆயுப்போச்சுது. குவர்னர் மனைவியிடம் கும்பெனி ஒஃபிசியே ஒருவன் முறைகேடாக நடந்துகொண்டானாமே என்பதாக இரண்டொருவர் முனகினாலும், புதுச்சேரித் தமிழர்களில் பெரியமனுஷர்களாகப்பட்டவர்கள் நடந்த வயணத்தை வெளிமனுஷர்களிடம் பிரஸ்தாபிப்பதில்லை எனத் தீர்மானித்திருக்கவேணும். தண்ணிவென்னியில்லாமல் அலைந்ததுதான் மிச்சம். ‘பறங்கியர் விவகாரம், தமிழர், நாம் தலையிட என்ன இருக்கிறது ‘, என்பதாய்ப் பதில் சொல்லிப்போட்டார்கள். உண்மையில் என்ன நடந்திருக்கும். பெர்னார் குளோதன் அப்படியானவன் இல்லையே. சத்தியவான் அவன்பேரிலே அபாண்டம் சுமத்தவேணுமென்று ராட்சசி நினைக்கிறாளோ ? ‘
ஓலை: -2: பிரத்தியேகமான மாறன் தினப்படி சேதிகுறிப்பு: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆடிமாதம் 19ந்தேதி (சூலை மாதம் 31ந்தேதி)புதன்கிழமை:
‘அவள் உள் மனசில் இருப்பதென்ன. பிரான்சுவாரெமிக்குக் பெர்னார்குளோதன் மீதான துவேஷம் நாமறிந்ததுதானே. இவன் குவர்னர் பெண்ஜாதியின் உள்மனசென்றும் கதைக்கிறார்கள். பெர்னார் குளோதனை கோட்டையில், கிடங்கிலே போட்டிருப்பார்களோ ? கோன்செல் கூடி பறங்கியன் என்பதால் தண்டனையின்றி எச்சரித்துப்போட்டு விடுவார்களோ ? எப்படியானாலும், பிரெஞ்சுதீவு குவர்னரின் சம்மதியில்லாமல் இவனை தண்டிக்க மாட்டார்கள் என்பதாகச் சொல்லுகிறார்கள். நேற்று, அவனைப் பார்க்கின்றபோது சுரணையில்லாமல் கிடந்தான். உண்மையில் ஏதேனும் சுகவீனமோ ? இந்த நேரத்தில் துபாஷ்வேறு ஊரில் இல்லாமல் போனாரே. பெர்னார் குளோதனுக்கு வேண்டபட்டவனான கப்பித்தேன் தெலாமரைப் பார்க்கலாமென்றால், நேற்றைக்கு மாயே போனகப்பலில் புறப்பட்டுப்போனதாய்ச் சொல்கிறார்கள். சன்னாசியைப் பார்க்கமுடிஞ்சாலும் ஏதாகிலும் யோசனை கிட்டும். இது நிமித்தியம், குவர்னரண்டை பிராது பண்ணலாமோ ? அந்த மனுஷர் கிருபை பண்ணுவாரோ ? இப்படியாக யோசனைபண்ணிக்கொண்டு, இரவு கஸ்தியுடனே நித்திரைபோனேன். ‘
மூன்றாவது ஓலை நறுக்கை எடுத்த வேலு, வாசிக்காமலிருக்க காத்திருந்த பெர்னார், ‘ என்ன யோசனை ? நீ வாசிக்கத் தயங்குவதைப் பார்த்தால், ஒலையில் ஏதேனும் குறைஞ்சிருக்கா ? அல்லது இவ்வோலையிலுள்ள எழுத்துகள் ஒருவேளை தெளிவில்லையா ? ‘ எனக் கேட்கிறான்.
‘இக்கட்டிலுள்ள ஓலைநறுக்குகளுக்கிடையே, கால இடைவெளிகள் இருக்ணும்னு நினைக்கிறேன். உதாரணமா..இரு மத்த ஓலை நறுக்குகளையும் ஒரு முறை பார்த்துக்கிறேன்.. ஆமாம் நான் நினைப்பது சரி ஒவ்வொரு ஓலைநறுக்கிற்கும் மற்றதுக்கு நிறைய நாள்கள் வித்தியாசம் இருக்குது. ‘
‘பரவாயில்லை, அதனாலென்ன, கிடைச்சவரைக்கும் என்ன சொல்லுதுண்ணு பார்ப்போமே. இருக்கிறதை தேதிவாரியா படி ‘
ஓலை -3: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் ஆடிமாதம் 23ந்தேதி (ஆகஸ்டுமாதம் மாதம் 4ந்தேதி)ஞாயிற்றுக்கிழமை
‘சாயங்காலம் மூன்று மணிக்குமேலே முருங்கப்பாக்கம்போய் பலராம்பிள்ளையுடனான சந்திப்பு. பெர்னார் குளோதனுக்கு நேர்ந்தவயணத்தை தெரிவிக்கிறேன். சகல சங்கதிகளும் அறிந்திருப்பதாச் சொன்னார். அந்தப்பிள்ளையாண்டானுக்குச் சனன காலம் சரியில்லையென்பதால் இவ்வாறு நடந்திருக்கவேணும். குதிரையில் போறச்சே, துலுக்கர்கள் தாக்ககுதலுக்கு ஆளாகி, உயிர் பிழைத்ததும், வீட்டிலிருக்கச்சே, கல் வந்து விழுந்ததும், தண்ணீர் வெந்நீராகக் கொதித்து, சரீரத்துக்குக் கேடுபண்ணியதும் துரையின் கஷ்டகாலத்துக்கு ஆரம்பமென்று நான் நினைத்ததுண்டு என்கிறார். பின்னையும் அவர் ரங்கப்பிள்ளையிடம் பேசியதாகவும், அவர் ஸ்ரீ குவர்னர் துரை அவர்களைத் தனிமையாகக் கண்டு பேசவேணுமென்றும், இது அவர் பாரியாள் விவகாரமென்பதால் ரொம்பப் பிரயாசையாயிருக்குமென்றும் வருந்திக்கொண்டு சொன்னார். ‘
ஓலை -4: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் மார்கழி மாதம் 18ந்தேதி (டிசம்பர் மாதம்29ந்தேதி) ஞாயிற்றுக்கிழமைக்கிழமை:
‘இற்றைக்கும், இந்தத் தேசத்துக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டாற்போலே விடாமற் மழைபெய்கிறது. காய்ந்து கெடுத்தது பத்தாதென்று இப்போது பெய்து கெடுக்கிறது. ஏற்கனவே ஏழைசனங்கள் படுகின்ற கஷ்டம் சொல்லி மாளாது. உசுட்டேரியும், பாகூர் ஏரியும் உடைப்பெடுத்துக்கொண்டு, சுத்துப்பட்டுக்கிராமங்களில் வெள்ளம் பாய்ந்திருக்கிறது. பயிர்பச்சைகள் மரம்மட்டுகள் மூழ்கிப்போனதோடு, ஏராளமான ஆடுமாடுகளும், குடியானவர்களும் வெள்ளத்திலே அடித்துக்கொண்டுபோனதால் ரொம்பவும் உயிச்சேதமென்று சொல்லுகிறார்கள். புதுச்சேரி கடலிலும், சீமைக் கப்பலொன்றும், பத்துப்பன்னிரண்டு சலங்குகளும் புயல்காரணமாக மூழ்கிப்போச்சுதாம். சனங்கள் ரொம்பவும் கெட்டு நொந்து உடமைகளைத் தோற்று கட்டத்துணியும் குடிக்கக் கஞ்சியுமில்லாமல் ஒருத்தர் போனவழி ஒருத்தர் போகாமல் முகமிட்டவாக்கிலே அலைஞ்சுகிடக்கிறார்கள். இதெதனாலென்றால் பத்து நாளைக்குமுன்னாலே பட்டபகலில், நடுவானில் பூசனிக்காய் பருமனில் நட்சத்திரமொன்று எரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதமென்பதாகச் சகல சனங்களும் சொல்லிக்கொண்டார்கள். ‘
ஓலை -5: ருத்ரோத்காரி(1743ம்) வருடம் மார்கழி மாதம் 18ந்தேதி (டிசம்பர் மாதம்29ந்தேதி) ஞாயிற்றுக்கிழமைக்கிழமை:
‘சாயங்காலம், வீட்டிற் தகப்பனார் தடுத்தும் கேளாமல் மழையில் குதிரைபோட்டுக்கொண்டு துபாஷ் பலராம்பிள்ளை வளவிற்குச் சென்றேன். பெர்னார் குளோதனைப் பற்றிய சங்கதிகள் ஏதேனும் தெரியுமாவென்று கேட்கவும் அவர் தெரிவித்த வயணம் கோன்சேல்காரர்கள் உள்விசாரணை செய்து கிடங்கில் போட்டிருப்பதாகக் கேள்வி மற்றபடி அவனது சரீரர சுகத்துக்கு பங்கமேதுமில்லையென்று சொல்கிறார்கள். எல்லாம் பூடகமாயிருக்கிறது. பிரெஞ்சு தீவுக்கு இங்கு நடந்த சேதிகள் தெரிந்திருக்குமா ? இதுநிமித்தியம் மஸ்கரேஜ்ன் குவர்னர் லாபூர்தொனேயின் சமிக்ஞை என்னவென்பதும் அறிந்தோமில்லை. இந்த மதாம் துய்ப்ளெக்ஸ் ரொம்பவும் ராசகாரியம் பண்ணுகிறவள், நாம் சற்றே சாக்கிரதையாய் இருந்து சாதிக்கவேணுமென்கிறார். நான் நல்லதென்று சொன்னேன். பலராம்பிள்ளை வீட்டிலிருந்து புறப்படச்சே மேற்கே பெரிதாய் நீண்ட வால்முளைத்த நட்சத்திரத்தினைக் கண்ட மாத்திரத்தில் அது என்னவென்று விசாரிக்கிறேன். அதை அவர் தூமகேதுவென்று சொன்னார். இது நல்ல நாளைக்குக் காணாதாம். இதுவரைக்கும் பத்துபதினைந்து நாளாய்ப் பட்டபகலில் நட்ஷத்திரம் கண்டுகொண்டுவந்தது, என்ன காலக்கேடோ தெரியாதென்று மிகவும் வியாகூலத்துடனே தெரிவித்தார். ‘
ஓலை -6: ரக்தாட்ஷி (1744)வருடம் வைகாசி மாதம்21ந்தேதி( மே மாதம் 30ந்தேதி) சனிக்கிழமை:
‘காலமே 8மணிக்கு துபாஷ் பலராம்பிள்ளை அனுப்புவிச்ச உளவு சன்னாசி சொன்ன சந்தோஷக்கபுறு: சுகவீனமாகவிருந்த பெர்னார் குளோதனை காவல் விடுதலை பண்ணி இனிமேல் சாக்கிரதையாய் நடந்துகொள்ளுமென்று உத்தாரங்கொடுத்து, மிஸியே லெகு துரை வீட்டில் வைத்து அங்கிருந்து குவர்னர்துரையின் சம்மதிபேரிலே, கப்பித்தேன் தெலாமரின் சிநேகிதன் மிஸியே தெக்குபிலாம்(M.Deccublan) என்பவனுடன் தேவனாம்பட்டணம் போய்தங்கி மறுநாள் காலமே காரைக்கால் பட்டணத்துக்கு இருவரும் புறப்பட்டுப்போனார்களென்றும், உடல் சொஸ்தமாகின்றவரை காரைக்காலில் தங்கவைத்து பின்னர் பெர்னார்குளோதனை பிரெஞ்சுத் தீவுக்குக் அனுப்பிவைப்பது அவர்களின் திட்டமென்பதாய்ச் சொன்னாரென்றான். ‘
ஓலை -7: ரக்தாட்ஷி (1744)வருடம் வைகாசி மாதம்21ந்தேதி( மே மாதம் 30ந்தேதி) சனிக்கிழமை:
‘ஆனாலும் பெர்னார் குளோதன், எதிர்வரும் வைகாசிமாதம் 28ந் தேதி வைத்தீஸ்வரன்கோவில் சென்று சிதம்பரம் குருக்களைச் சந்திக்கத் தீர்மானம் பண்ணியிருக்கிறான். அதன் பேரிலே, துபாஷ் என்னையும் அந்தத் தினம் வைத்தீஸ்வரன்கோவில் குருக்களிடத்திலே வரச்சொல்லியிருக்கிறார். மத்தியானம் பதினைந்து நாழிகை அளவில் சபாபதிப்படையாட்சியை கண்டுபேசி, வாணியையும் பார்த்துவருவோமென்று போனேன், அவ்விடம் அறிந்தவயணம் என்னவென்றால் சீனுவாச நாயக்கர், காமாட்சியம்மாள், தேவயானி மூவரும் பிரெஞ்சுத்தீவிலிருந்து புறப்பட்டு வந்து, தற்போது திருச்சினாபள்ளியில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் காணவேணுமென்றே வாணியானவள் தன் தாயார் குமுதவல்லியுடன் திருச்சினாபள்ளிக்கு ஏற்கனவே புறப்பட்டுப் போயிருக்கிறாள். பின்னை, என்னையும் அவ்விடம் வரவேணுமென்கிறார். அதின் பிற்பாடு இருவரும் நாளைய தினம் காலமே திருச்சினாபள்ளிக்குப் பயணமாவதெனத் தீர்மானிக்கிறோம். தெய்வானை திருச்சினாப்பள்ளியிலிருக்கிற சந்தோஷ கபுறை பெர்னார்குளோதனுக்குத் தெரிவிக்கவேணுமே. அதுவன்றி வாணியும் அல்லவா அங்கிருக்கிறாள். ‘
வேலு கடைசி ஓலை நறுக்கினைப் படித்து முடிக்கவும், பணியாள் மணி சூடாக தேநீர்க் கோப்பைகளை நீட்டினான். அடுத்த சில நொடிகளில் தேநீருக்குத் துணையாக மரி பிஸ்கட்டுகளை ஒரு தட்டில் கொண்டுவந்து மேசைமேல் வத்தான். இருவரும் சில நிமிடங்களை பிஸ்கட்டுக்கும், தேநீருக்குமாக நிதானமாகச் செலவிட்டார்கள். வேலு அவசரத்திற்காக ஒதுங்கி மீண்டிருந்தான்.
எழுந்து சென்று, பெர்னார் சன்னல் திரையை ஒதுக்கினான். சிகரெட் பாக்கெட்டைத் தேடிக் கண்டுபிடித்து, வேலுவுக்கு நீட்ட, அவன் ‘ நன்றி, வேண்டாமென்றான் ‘. இவன் மாத்திரம் ஒன்றைப் பற்றவைத்து, நிதானமாக புகையை இழுத்து விட்டான். சிகரெட் பிடிப்பதென்பது, பெர்னார் பதட்டப்படுகின்றபோது – அவனுக்குள் ஏற்படும் அவதிக்கு விடைகாணாதபோது, அறிவுக்கு இணங்காமல் செய்யுங்காரியம். கடந்த ஒருவருடமாக, தன் பிரெஞ்சு நண்பனை நன்றாகப் படித்தவன் என்பதால் வேலு, அவனது எண்ணங்கைளைக் கலைக்காமல் காத்திருந்தான்.
‘வேலு இந்த ஓலைகள் திக்குத் தெரியாத காட்டில நம்மை நிறுத்தி இருப்பதாக நீ நினைக்கிறயா ? ‘
‘எனக்கு அப்படித்தான் தோணுது. இல்லண்ணா இப்படி புதிரைபோட்டுட்டு ஒதுங்கிக்கிற மாதிரி, மற்ற ஓலைகள் நமக்குக் கிடைக்காமற்போகணுமா ?
‘இல்லை நான் அப்படி நினைக்கில. எனது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறிப்பொன்று இதன் மூலம் கிடைச்சிருக்கு, என்னைச்சுற்றியுள்ள மாயத்திரை மெல்ல விலகறமாதிரி இருக்குது. எனது பூட்டனுக்கு மட்டுமல்ல, எனக்கும் வைத்தீஸ்வரன்கோவில் போனா விடை கிடைக்கும்னு நினைக்கிறேன். இங்கிருந்து வைத்தீஸ்வரன்கோவில் எவ்வளவு தூரம் ? ‘
‘சிதம்பரம் பக்கதுல இருக்குது, காருல போனா ஒரு மணிநேரத்துல போயிடலாம். ‘
‘போயிட்டு வந்துடுவோம். ‘
‘எதற்கு ? உன்னுடையப் பூட்டன் பெர்னார் குளோதன் என்ன ஆனார்னு தெரிச்சுக்கவா ? ‘
‘அப்படியும் வச்சுக்கலாம். ஆனால் உண்மையில், நான் யாருண்ணு தெரிஞ்சுக்கணும், எனக்கேற்படும் கனவுகளின் கருத்தரிப்பற்கு கர்த்தாக்கள் யாரென்று அறிஞ்சாகணும். கேலிபேசும் அறிவை, கொஞ்ச நாைளைக்கு ஒதுக்கிவிட்டு, உள்மனதின் கட்டளைக்கு விசுவாசமாக இருக்கப்போகிறேன். நான் வந்தவழியைத் திரும்பிப்பார்க்கணும், முடியுமானால் அதில் நடந்து போகணும். வைத்தீஸ்வரன்கோவில் அதற்கான நுழைவாயிலாக இருக்கலாம். எனது மொழி ஆய்வகத்தில், விடுப்புக் கேட்டு பெறணும், அதுவரை நீ புதுச்சேரியிலேயே இரு. வேம்புலி நாயக்கர் மருமகள் கூப்பிட்டாளென்று எங்கேயும் புறப்பட்டு போய்விடாதே! ‘
/தொடரும்/
- கடிதம் நவம்பர் 11,2004
- வேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்
- அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்
- தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு
- மெய்மையின் மயக்கம்-25
- மனுஷ்ய வித்யா
- தீபங்களின்….விழா…. தீபாவளித் திருவிழா!
- உரை நடையா ? குறை நடையா ? – மா. நன்னன் : நூல் அறிமுகம்
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 8
- மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9
- ஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்
- எங்கே செல்கிறோம் ?
- ந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)
- வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை
- ஆன்லைன் தீபாவளி
- அருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004
- கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்
- ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி
- கடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே
- கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு
- மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு
- கடிதம் நவம்பர் 11,2004
- கடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்
- கடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை
- கடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்
- ‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:
- கடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் ?
- அவளோட ராவுகள் -2
- பெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 45
- ரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))
- மீள்வதில் என்ன இருக்கிறது ?
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது!
- கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்
- கவிக்கட்டு 34-தீராத வலி
- நடை
- கீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை!: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )
- கவிதைகள்
- உயிரை குடிக்கும் காதல்
- லட்சியமானவன்
- அணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)
- புகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )
- ஏன்
- செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்
- அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்
- நர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)
- கவர்ச்சி, அடக்கம் X மரியாதை!
- இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்
- நாடகம் நடக்குது நாட்டிலே!
- வாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்
- பாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி
- மக்கள் மெய் தீண்டல்
- இந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்