நீர்வலை – (15)

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


எங்கோ, கடல் அடியில் ஏற்பட்ட பூகம்பம்…. நிலப்பகுதியில் நிகழ்ந்திருந்தால் நிலைமை மேலும் கொடூரமாய் ஆகியிருக்கும் போலிருக்கிறது. இத்தனைதூரம் தள்ளி, நம்ம ஊரிலேயே ஒரு ஆட்டம் ஆடிட்டதுன்னா பெரிய அதிர்ச்சிதான், என நினைத்தான்.
சிவாஜிக்கு பயமாயும் சுவாரஸ்யமாயும் இருந்தது.
அவன் போகும் வழியாவிலும் ஜனங்கள் பூகம்பம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். நம்ம நாட்டிலேயே இதற்குமுன் வந்த பூகம்பம் பற்றி – எதோ லட்டூராமே – எங்கருக்கோ?… பேரைப் பார்த்தால் திருப்பதி பக்கம் போலிருந்தது – அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது லட்டுக்கணக்கான – ச்சீ, லட்சக்கணக்கான ஆட்கள் செத்துப் போனார்களாம்.
பொதுவாக ஊர் ஆபத்தின் சாயலே இல்லாமல்தான் இருந்தது. வெயில் உக்கிரப்பட்டு சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் அடங்கியிருந்தார்கள். சிலர், வந்தமா, தேவாலயத்தைப் பார்த்தமா, என்று கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். அவர்கள் வெறிபிடித்தாப்போல ஒரேநாளைக்கு டஜன்சாமி பார்ப்பது என்று பஸ் கட்டிக்கொண்டு டூரில் வந்தவர்கள். நிறைய பேர் இந்துக்கள். பார்க்கிறது வேடிக்கை. எந்த சாமின்னா என்ன… போற வழிதானே, ஆண்டவரையும் ஒருபார்வை பார்த்துருவம்… என வந்து போனார்கள்.
அவர்கள்… கிளம்பிப் போய்விட்டார்கள். டஜனில் எந்த சாமியின் பார்வைக் கரிசனம் விழுந்ததோ… அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
ஊர் அமைதியாய் இருந்தது. தேவனே சமாதானத் தூதுவன். அவரது தேவாலய வளாகத்து உத்திரங்களில் பக் பக் என்று மாடப்புறாக்கள் தொண்டையை விக்கிக் கொண்டு ஃபேஷன் ஷோ நடை நடந்தன. கடல்கரைமணல் கொதித்தது. பிச்சைக்காரர்கள் கொட்டாவி விட்டார்கள்.
அல்போன்ஸ் ஐயா அடுத்த நோட்டிஸ் எழுத ஆரம்பித்து விட்டாரா, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாரா தெரியவில்லை. அருமையான மனிதர் அவர். மிகப் பிரியமாக அவனுடன் பேசுவார். தேவாலய ஊழியர்களுக்கென்று அருகிலேயே குடியிருப்புகள் இருந்தன. ஐயாவின் அறை பெரியது. ஜன்னல் கதவைத் திறந்தால் காற்று, சுதந்திரமான பூனைபோல உள்ளே, சுழித்து வளைய வரும். அவரே ஒரு பூனையும் வளர்க்கிறார். பூனைகள் முதுகை வான்பார்க்க சட்டென உயரே தூக்கினாற்போல வயிற்றைப் பதுக்கிச் சோம்பல் முறிக்கின்றன.
அந்தப் பூனை மியாவ், என அழைப்பது, மீனவர்கள் ஐயாவை சாமியோவ், என அழைப்பதுபோல் இருக்கிறது.
உண்மையில் இந்த தேவாலயப் பகுதி சுற்றுலாப் பயணிகள் வருகைக்காக சுத்தப்படுத்தப் பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது… சற்றுதள்ளி மீனாங்குப்பம். படகுத்துறை. நீளப்படகுகள் காயப்போட்ட தாவணிபோல, தண்ணியில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஓட்டைப் படகுகள் கரையிலேயே ஏற்றப் பட்டிருக்கும். பெரிதோ பெரிதான வலைகள் விரித்துக் காயப் போட்டிருப்பார்கள்.
அதைப் பார்த்துவிட்டு, ஒரு குழந்தை சொல்கிறது – அங்க பாருங்க டாடி, கடல்ல இல்ல, மணல்லியே வலைவிரிச்சி மீன் பிடிக்கறாங்க!
வெயிலுக்காக மீனவர்கள் அணியும் தொப்பி விநோதமானது… கூம்புவடிவத் தொப்பிகள். பிராமண வீட்டுக் கல்யாணப் பருப்புத் தேங்காய் போல!
ஏன் அப்பிடி ஒரு வடிவம்? ஓ காத்துக்கு, வெயிலுக்குத் தூக்காதில்ல?…
அதிகாலையிலேயே மீனவர்கள் மீன் பிடிக்க என கடலுக்குள் போகிறார்கள். வெளிச்சம் உட்புகா இரவுகளிலேயே, அந்த வளாகத்தில் மீனவர்கள், கடல் மணலில் மண்டியிட்டுத் தொழுது கிளம்புவதைப் பார்க்கலாம். வெயில் ஏறுமுன் அவர்கள் தண்ணீரில் இறங்கி கடலுக்குள் வெகுதொலைவு போய் மீன் பிடிக்கிறார்கள். அதிகாலையிலேயே அந்த வட்டாரம் பரபரப்பாக இருக்கும். சிறிதுகழிந்து சுற்றுலாப் பயணிகள் சூர்ய உதயம், என்று வேடிக்கை பார்க்க வந்து விடுவார்கள். அவர்கள் சூர்ய உதயம் பார்த்தபின் திரும்பவும் தூங்கப் போய்விடலாம்!
கடலின் உட்பகுதி ஆழங்களில் வெயில் நேரத்தை விட அதிகாலையில், அந்த அமைதியில், மேல்குளிர்ச்சியில் மீன்கள் அதிக சுதந்திரமாய் உணர்ந்தன. மீனவர்களுக்குத் தோதான நேரம் அதிகாலைதான். தவிரவும் வெயிலில் வேர்க்க விறுவிறுக்கப் போவது சீக்கிரம் உடம்பை அயர்த்திவிடும். அந்த அதிகாலையிலேயே அவர்கள் உடம்பே வியர்வையில் குளிக்கிற அளவில் உழைக்கத்தான் செய்கிறார்கள்.
என்றாவது மீனவர்களுடன் படகில் கடலுக்குள்போக ஆசைப் பட்டிருந்தான் சிவாஜி. அல்போன்ஸ் ஐயாவிடம் தன் விருப்பத்தை ஒரு வெட்கத்துடன் ஒருநாள் தெரிவித்தான். ஏற்பாடு செய்வதாக ஒரு புன்னகையுடன் அவன் தலையை வருடிக் கொடுத்தார்.
அப்போதுகூட உலகம் நன்றாய்த்தான் இருந்தது. தேவாலயத்தெருப் பக்கம் திரும்புகிறான் சிவாஜி. சைக்கிளில் இறங்கி அந்தப் புதைமணல் வெளியில் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடக்கிறான். தற்செயலாகக் கடலைப் பார்த்தான்…
உள்மனம் எதோ படபடத்தது. ஏன், எப்படி, தெரியாது. கடல் அவனுக்குப் பிடிக்கும். ஓய்வற்றது கடல். நீலப் பெருவெளி கடல். மேல்நுரைகள் வெள்ளிச் சிரிப்பு சிரிப்பது, கடல் பல் தேய்க்கிறாப் போல இருக்கும்.
கடலைப் பார்த்தான். கடலில் என்னவோ மாற்றம். என்ன? என்ன?…. என உணருமுன் அடடா, கடல், ஒரு பாம்புபோல, ஆவேசமாய் எழுந்து கொண்டிருந்தது. அவனுக்கு பயமாய்க் கூட இல்லை. அதற்குக்கூட நேரம் இல்லை.
பாம்பென்றால், நினைத்துப் பார்க்க முடியாத, பெரிய பாம்பு. தலைதூக்கிக் காணவேண்டிய உயரமோ உயரம். கண் கிட்டத்தில்கூட அல்ல. எங்கோ தூரத்தில். பதற வேண்டிய அளவில் அது கலவரப்படுத்தவும் இல்லை… ஒருதலை கூட அல்ல. ஐந்து தலைநாகம்… பத்துதலை ராவணன், என்பார்களே அதேபோல அகல எடுப்புடன் அலை… ஆவேசமாய் உசுப்பிவிடப் பட்டாப் போலிருந்தது. சில ஆட்கள் பேசிட்டே யிருப்பான். திடீர்னு கோபம் உக்கிரப்பட்டு, கெட்ட கெட்ட வார்த் தைச்சொரிவுடன் சண்டை ஆரம்பிச்சிருவான். அதைப்போல… பேன் பாத்தாப்ல இருக்கும் குரங்கு. திடீர்னு காதைக் கடிச்சிரும்… அதைப்போல.
அவன் அடைந்தது ஆச்சரியமா திகைப்பா தெரியாது…
ஆனால் நினைவின் வேகத்தைவிட வேகமாய் அந்த மாபெரும் அலை அவனைநோக்கி பல்லைக் காட்டினாப் போலச் சீறி, கடல் அவனை இழுத்துக்கொண்டது. சுவீகரித்துக் கொண்டது. கவர்ந்து கொண்டது… அந்த வளாகம் அளவு பெரிய நீளப் படுதா அது. அதையும் தாண்டிய படுதா…
பிற்பாடு வந்த செய்திகளின்படி, அது தமிழ்நாட்டின் எல்லை பூராவும் விரிந்த பெரும் படுதா. தென்னை மரங்களையே சிறிதாக்கிவிட்ட உயரம். வந்த வேகமோ காலக் கணக்குக்கும் அப்பாற் பட்டது.
சு னா மி, என பிற்பாடு அறியப் பட்டது அது.
அந்த வளாகத்தையே அந்த தேவாலயத்தையே முழுங்கிக் கொண்டது அலை.
எப்படி அப்படி உயர்ந்து சீற முடிந்தது அதனால்… அல்போன்ஸ் ஐயாவின் பூனைபோல, முதுகு உயர்த்தி, வயிற்றைச் சுருக்கி?…
>>>
அந்த ஊர் டூரிஸ்டு கைடுகளே கற்பனை செய்யமுடியாத, ஆனால் உண்மையில் நிகழ்ந்த சரித்திரம்.
வைகறைவாசல் மரணவாசலானது.
கடல் கொந்தளித்த உயரத்திற்கு, ஊர் முக்கியஎல்லைவரை, ஒரு கிலோமீட்டர் வரை எட்டி, தொட்டு, மீண்டிருந்தது. கபடி கபடி கபடி… தப்பிக்க நினைக்கவே முடியாத நிலை. யாரும் யூகிக்கவே முடியாத நிலை.
யார் என்னவேலை செய்து கொண்டிருந்தாலும் கொள்ளைக் கும்பல் போல சர்வ அலட்சியமாய் கடல் உள்ளே நுழைகிறது. சுருட்டி இழுத்து வெளியே கொண்டு வந்தது. மொட்டைமாடியில் துணி காயப்போட எனப் போனவர்களே தாக்குப்பிடிக்க முடியவில்லை. வீட்டுக்குள் படுத்திருந்தவர்களே எதிர்க்க முடியவில்லை. கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. ஆனால் என்ன, பிய்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தது கடல். கதவு கதவாக மிதந்து போனது கடல் அலைகளில். மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு மிதக்கின்றன எதுதான் மிதக்கவில்லை. கடல்கரைப் படகுகள், டூரிஸ்டு பஸ்கள், ஊருக்குள் எறியப் பட்டிருக்கின்றன.
சாப்பிட்டு விட்டு எறியப்பட்ட வாழைப்பழத் தோல்கள் போல…
வீட்டுக்குள் இருந்தவர்களில் கடலால் இழுத்து சுவர்களில் அறையப் பட்டவர்கள் அநேகம். காயம் பட்டவர்கள் அநேகம். தப்பிக்கப் போராடினார்கள் என்பதல்ல… கடலின் உள்வாங்கலின் போது அவர்கள் எங்கெங்கோ மாட்டி, செருகி, சிக்கிக் கொண்டிருந்தார்கள். கடல் அவர்களை இழுக்க இழுக்க அவர்கள் சிக்கிக் கொண்டிருந்தார்கள். சதை கிழிந்து, உடைகள் கிழிந்து, கைகால்கள் உடைந்து, உறுப்புகள் நசுங்கி, அவயவங்கள் இடிபாடுகளில் சிதிலங்களில் மாட்டிக் கொண்டு, என்று நிறையப் பேர் தப்பித்திருந்தார்கள். உயிர் பிழைத்திருந்தார்கள்.
இறந்து போயிருந்தால் எத்தனையோ உத்தமம், என அவர்கள் நினைத்தார்கள்…
தேவாலயத்தை மையப்படுத்தி வளர்ந்த ஊர். தேவாலயம் கடல்கரையில் அமைந்திருந்தது. ஆக கிட்டத்தட்ட ஊரின் பெரும்பகுதியைக் கடல் அழித்திருந்தது. அந்தக்கால ராஜா தண்டனைதந்த மாதிரி… பட்டத்து யானைபோல் அலை, ஏறி, காலை உயர்த்தி, மிதித்திருந்தது. பூமிக்கோளமே வெடித்து விட்டதா? திருஷ்டிப் பூசணி.
ஊரின் பள்ளமான பகுதிகளில் கடல்நீர் நிரம்பித் தேங்கி நின்றது, திரும்பிப் போகாமல். மனிதப் பிணங்கள், ஏராளமான பிணங்கள் அந்த நீர்க்குட்டைகளில் செருகப் பட்டிருந்தன. அவற்றில் குழந்தைகள் அதிகம். சுற்றுலாப் பயணிகள் அதிகம். மொட்டைகள் அதிகம். குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள் எல்லாம் பிய்த்தெறியப் பட்டிருந்தன.
சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவன் கார்மேல் செத்துக் கிடந்தான். டூரிஸ்ட் வண்டியில் பெட்டிகளுடன் அவன் அறையப் பட்டிருந்தான். சைக்கிள் வேறெங்கோ இழுத்துச் செல்லப் பட்டிருந்தது. எங்கும் எங்கெங்கும் மரணத்தின் கோரத் தாண்டவம்.
திருவிழா சீசனை உத்தேசித்து அங்கே ஒரு சர்க்கஸ் கம்பெனி டேரா போட்டிருந்தது… கூண்டுக்குள் மிருகங்கள். வெளியே வரமுடியாமல் இறந்து போயின. அந்தப் பெட்டிகளை தாயம் விளையாட்டில் ‘டைஸ்’ உருட்டுவதைப் போல… உருட்டி.க் கவிழ்த்திருந்தது பேரலை.
ஆ – இறந்து கிடக்கிறது சர்க்கஸ் யானை. மனிதர்கள் எம் மாத்திரம்.
ஊருக்குள் தெருவெங்கும் மீன்கள், கடல் ஜீவராசிகள் சிதறிக் கிடக்கின்றன. கடல் அலை இழுத்து வந்த மீன்கள். இந்த மனிதப் பிணங்களின் நடுவே, எதோ புதுவீட்டில் கட்டிய திருஷ்டிபொம்மை. முழு ஆள் அளவு – அதுவும் கிடக்கிறது.
கடல்ஜீவராசிகளைக் கரைகளில் எறிந்தும், மனுஷர்களைக் கடலுக்குள் இழுத்தும்… என்ன உக்கிர உன்மத்த வெறித் தாண்டவம்.
பாதிஉயிர் போய் ஊசலாட்டத்தில் பேரலறல் அலறும் மனிதர்கள். கைதிருகப் பட்டவர்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல… சொந்தக்காரர்கள் யாரும், ஒருவர் அருகில் ஒருவர், என இருந்தால்தானே? எத்தனை பேர் பிழைத்தார்கள், யார் யார் இறந்து பட்டார்கள்… எத்தனை பேரைக் கடல் உள்ளே சுருட்டிச் சென்றது தெரியாது. எங்கிருந்தோ மனிதர்களை இங்கேகொண்டு போட்டிருக்கிறது கடல்… பிணமாக. அவரை அடையாளங்காண இனி ஏற்பாடுகள் தனி. இந்தப் பகுதி மக்கள் எங் கெல்லாம் கிடக்கிறார்களோ.
கடல் ஊருக்குள் வந்ததும் திரும்பிப் போனதுமான நிகழ்வுகள் துரிதமானவை. யாரும் என்ன நடக்கிறது என்றே சுதாரிக்க முடியாத கணங்கள். அதிகபட்சம் இரண்டு மூன்று நிமிடங்கள் என இருக்கலாம். ஆழிப் பேரலை. ஊழிப் பேரலை.
கடல் ஊருக்குள் நுழைந்த வேகத்தில் தப்பித்தவர்கள், கூட கடல் திரும்பி வந்தபோது, மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். போன வேகம் அதிகம், என்றால், திடீரென மனசு மாறி, உட்சுருண்டு, திரும்பிய வேகம், அதனினும் அதிகம். தவிரவும், எதிர்பாராதது இரண்டுமே. மனிதனால் முடிவெடுக்க முடியாத நிலை.
போனவேகம் கோபம், என்றால் திரும்பியவேகம் பயம் என்கிறாப் போல. கடலுக்கு யார்மேல் கோபம். அட இந்த உக்கிரத்துக்குப் பிறகு எதற்கு பயம்? நியதிகளை மீறியதில் நடுக்கமா, பதட்டமா அதற்கு?
மனம்மாறித் திரும்பி விட்டதா?
கடல்கரை வளாக நெடுகிலும் சடலங்கள். காங்கிரஸ் தொப்பிபோல் கிடந்த உடைந்த படகுகளில் சில கடலில் வீசப் பட்டிருக்கின்றன. கரைமேல் புரட்டி இழுக்கப்பட்ட படகுக்குழிகளில், மணலும், நீரும், பிணங்களும்.
எங்கெங்கும் குழந்தைகள் பிணங்கள் அதிகம். தப்பிக்க வழிவகை தெரியாத சிறார்கள்… குழந்தைகள்… மழலைகள்…
கும்பகோணத்தில் தீ. கொடும் தீ. குழந்தைகளைச் சாப்பிட, இயற்கை ருசி கண்டுவிட்டதா? முன்னர் தீ. இப்போது தண்ணீர்.
ஆட்கொல்லிப்புலி போல, ஆட்கொல்லி இயற்கை…
மீனாங்குப்பம் போல பாதிக்கப்பட்ட இடம் வேறெதுவும் இல்லை. குடிசை எதுவுமே மிஞ்சவில்லை. நெடுக ஒரு கிலோமீட்டர் அளவு நீண்ட குடிசைகள் வரிசை. உட்பக்கத்துச் சிறுசந்துகள் அமைந்த வளாகம். முந்நூறு நானூறு குடிசைகள்… தரையோடு தரையாகக் கிடந்தன எல்லாம். கதவுகளில் இருந்து பெட்டிபடுக்கை அத்தியாவசியப் பொருட்கள்… அம்மிகளையே கூட காணவில் லை.
கடலுக்குள் போன மீனவர்கள் கதி என்ன தெரியவில்லை! அது தனிக் கதை…
ஒருவேளை கடல்கொந்தளித்து உயர்கையில், அவர்களில் சிலர் படகைத் திறம்படச் செலுத்தி, அலைகளோடு பயணம் செய்து ஓட்டி, தப்பித்திருக்கவும் கூடும்…
ஆனால் அவர்கள் வீடுதிரும்பி, தம் உறவினர்களைத் தேடவேண்டி வரும்… அவர்கள் நிலைபற்றிப் பதற வேண்டி வரும்.
உலகத்தின் காட்சிகள் மாறிவிட்டன…. நிமிடங்களில்.
நாடகத்தில் புதிய படுதா இறக்கினாப் போல…
மாலையில் பெருங்கூட்டம் வரும், என அல்போன்ஸ் ஐயா எதிர்பார்த்திருந்தார். அந்த சமயம் இந்த அலைக் கொந்தளிப்பு நிகழ்ந்திருந்தால், கூட்ட மொத்தமும் அலைப் பிரவாகத்தில் மாட்டிக் கொண்டிருக்கும். ஆஸ்பத்திரியில், உடைந்தகைக்குக் கட்டு போட்டார்கள் அவருக்கு. எழுதுகிற வலது கை. பாவம்.
கேள்விப் பட்டவரை, தமிழ்நாட்டின் கிழக்கு எல்லைக் கடல் கிராமங்கள் அனைத்திலுமே, கடல் ஓர் ஆவேசஎடுப்பு எடுத்திருந்தது…
அதிலும் சில கிராமங்கள் தப்பித்திருந்தன. ஆச்சரியம்… சிறுகீறல் கூட இல்லாமல் தப்பித்திருந்தன!
அந்தச் சிலைடங்களில் கடல் ஊருக்குள் வரவில்லை… உள்சுருக்கிக் கொண்டது உடலை. அல்போன்ஸ் ஐயாவின் பூனை வயிற்றை உள்ளிழுத்துக் கொள்வது போல… கடல் இருந்த பகுதிகள் விறுவிறுவென்று தரை தெரிந்தன. புது மண்மேடுகள் உருவாயின. கடல், கடலுக்குள் போவதை, அவர்கள் ஆச்சர்யமாய்ப் பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோமீட்டர் அளவுகூட இருக்கலாம் என்கிறார்கள். சிறிது நேரந்தான் அதுவும்… ஐந்தாறு நிமிடங்களில் கடல், திரும்ப தளும்பித் தளும்பி பழைய அளவுக்கு வந்து சேர்ந்து விட்டது. சில அரசியல்வாதிகள் ராஜினாமா செய்து விட்டு, மெல்ல வாபஸ் பெற்றுக் கொள்வார்கள். அதைப் போல. கோபித்த மனைவி படுக்கையில் அருகில் வந்தாப் போல. சமாதானம். சமாதானம்.
அப்போது அவர்கள். பக்கத்து கிராமத்து தமது மீனவச் சகோதர சகோதரிகள் இத்தகைய பேரழிவில் சிக்கிக் கொண்டிருப்பார்கள், என நினைத்திருக்கவும் வாய்ப்பில்லை.
வந்திறங்கியது செய்தி – இடிபோல. மரணித்த பக்கத்துகிராம மனுசர்களுக்காக அழுவதா, தாம் தற்செயலாகப் பிழைத்ததற்கு ஆனந்திப்பதா எனவே அவர்கள், மூச்சுத் திணறித் திக்குமுக்காடிப் போனார்கள்.
பிழைத்தவர்கள் பல்லாண்டு வாழ்க!
நல்வாழ்த்துக்கள்!
(தொ ட ர் கி ற து)


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்