நிழல் பாரங்கள்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

ஸ்ரீமங்கை


என்னிலும் வெளிப்பட்டு,
சூனியங்களில் எதிரொளித்து…
என்னோக்கியே நீழும் நிழலே..

வெளியேற்ற எத்தனிக்கிறேன்..
உனது பாரங்களில்
நான் குனிந்து முனகுவது
பிரசவமென அறியாது
பரிகசிப்பவரைப்
புறக்கணித்தபடி..

முன்பொருநாள் ஓர் ஞானி
என் வேர்களில் புலம்பினான்.
‘என்னுள் புதைந்த குற்ற உணர்வே!
உறைந்த உப்புக்கட்டியாய் கரித்து
குமட்டிய உன்னை,
உறக்கமில்லாத இரவுகளின்
கறுமையில் ,யாருமறியாதே
காடியில் உன்னைக்
கரைத்துக் கரைத்து
கண்களினின்று வெளியேற்ற
எத்தனித்து தோற்றேனென
எனது அலுப்புகளை
எங்கே இறக்கிவைக்கட்டும் ? ‘

எனது நிழல்கள்கூட அக்குரலின் பாரத்தில்
வளைந்தனவென நான் விம்மியது
எவருக்கும் கேட்கவில்லை.

என் தண்டுத் தோல்களில் பாலுண்ணிகளாய்
இச் சாறுண்ணி நாய்க்குடைகள்…
அழகென அயலார் அதிசயிக்க
எனது வலிகள் யாருக்குப் புரியும் ?

நஞ்சூறிய நாய்க்குடையே!
மலராவாயென உனை மொட்டாகத் தரித்த
என் முட்டாள்தனங்களில்..

மகரந்தங்களென மயங்கிய
பூச்சிகளைச் சுவைத்து
இரத்தத் தேனை
தண்டுகளருந்த அனுப்பிவைக்கும்
உன் குரூரங்களில் கூசியபடி,
அருவெறுக்கிறேன்,நான் எனையே..

இறந்துவிடு!
உனது மலர்வுகளில், இதுகாறும்
நான் காத்து வைத்த
மலட்டுத்தனங்களூம் மடிந்தனவென்ற
இழிசொல் எனக்குவேண்டாம்.

ஓ ..வெளியேறிவிடு
ஏதோவொரு வகையில்..
உதடுகள் கோணிக்கொள்ளூம்
சிறு துடிப்பாய்,
நாசிகளின் விரிவாய்,
சூடாக ஒரு சொட்டு விழிநீராய்..
விரல்களின் நடுக்கமாய்…
எப்படியாவது..
என்றாவது…
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை